புனிதமான புரட்டாசி
|
|
|
தெய்வத்தை 'சர்வ வியாபி' என்கிறோம். அதாவது எங்கும் நிறைந்திருப்பவன் என்பது பொருள். இதைத்தான் தூணிலும் இருப்பார் துரும்பிலும் இருப்பார் என்றான் பிரகலாதன். அந்த தெய்வம் தன் கருணையின் பிரதிநிதியாய்த் தாயைப் படைத்ததாகக் கூறுவர். எனவே தெய்வத்திற்கு நிகரான கருணை உள்ளம் படைத்தவள் தாய் என்பது தெளிவாகிறது. "பால் நினைந்தூட்டும் தாயினும் சாலப் பரிந்து", "தாயினும் மேலான தயாபரனே", "தாயிற்சிறந்த கோயிலும் இல்லை" - என்றெல்லாம் ஆன்றோரும் சான்றோரும் தம் அருட் பாக்களில் தாயைப் புகழ்ந்து புகழ்ந்து வியந்திருக்கின்றார்கள். தன் பேறு காலத்தில் வலியின் வேதனையில் ஒரு பெண்ணின் வாய் "அம்மா, அம்மா" என்றுதான் அழைக்கும். தாயின் அரவணைப்பையும் ஆதரவையுந்தான் எதிர்நோக்கும். இதை எண்ணிப் பார்த்த ஈசுவரனுக்கு விநோதமான ஓர் ஆசை பிறந்தது. பேறு காலத்தின் போது அம்மா என்றழைக்கும் ஒரு பெண்ணின் அருகில் அவள் அம்மாவாக உடனிருந்து அவள் அன்புக்குப் பாத்திரமாக வேண்டும் என்ற ஆசைதான் அது. இந்த ஆசையை திருச்சியில் கோயில் கொண்டுள்ள செவ்வந்திநாதர் எப்படி நிறைவேற்றிக் கொண்டார் என்ற வரலாற்றைப் பார்ப்போம்.
ஆழ்வார்களால் கங்கையினும் புனிதமான தென்று போற்றப்பட்ட காவிரி ஆற்றின் தென்கரையில் உள்ளது திருச்சி எனப்படும் திருசிரமலை. இது தட்சிண கைலாசம் என்று சிறப்பித்துப் பேசப்படும் தலமாகும். தட்சிண கைலாசம் என்ற பெயர்க் காரணமும் சுவையானது. ஒருமுறை கைலாயத்தில் சிவபெருமானை வணங்க வந்தவர்களுள் ஆதிசேஷனும் வாயுபகவானும் இருந்தனர். ஆதிசேஷன் வருகையைப் பலரும் புகழ்ந்து கொண்டாடியதைக் கண்டு வாயுவுக்குப் பொறாமை ஏற்பட்டது. வாயு ஆதிசேஷனை எதிர்க்க, இருவருக்கும் ஏற்பட்ட மோதலில் ஆதிசேஷன் கைலாய மலையைத் தன் உடலால் இறுக்க, அதைத் தகர்ப்பதற்காக வாயுதேவன் பலத்த காற்றை வீச கைலாயம் அதிர்ந்தது. அதிலிருந்து மூன்று துண்டுகள் புறப்பட்டு திருக்காளத்தி, திருச்சி, இலங்கையில் உள்ள திரிகோணம் எனும் மூன்று இடங்களில் வீழ்ந்தன. இப்படித்தான் திருசிரமலை தட்சிண கைலாசம் என்ற பெயர் பெற்றது.
சோழநாட்டில் புகார் என்றழைக்கப்படும் காவிரிப் பூம்பட்டினத்தில் வாழ்ந்த இரத்தின குப்தன் என்ற வணிகன் தன் மகள் இரத்தினாவதியை திருச்சியில் வாழ்ந்து வந்த தனகுப்தன் என்பவனுக்குத் திருமணம் முடித்து இருவரையும் திருச்சிக்கு அனுப்பி வைத்தான். இரத்தினாவதி காவிரிப்பூம்பட்டினத்தில் கோயில் கொண்டிருக்கும் செவ்வந்திநாதப் பெருமானை நாள் தவறாமல் வழிபட்டு வந்தாள். பின்னாளில் அவள் கருவுற்றாள். அவளுக்குப் பேறுகாலம் நெருங்கியபோது தாயும் தன் மகளுக்கு உதவிட, தேவையான பொருட்களுடன் புறப்பட்டாள். திடீரென்று காவிரி ஆற்றில் வெள்ளப் பெருக்கு ஏற்பட்டது. தாயின் பயணமும் தடைப்பட்டது. தாயின் வருகையை நாள்தோறும் எதிர்பார்த்துக் காத்திருந்த மகள் முடிவில் தான் தினமும் வழிபடும் செவ்வந்திநாதரைக் கூவி அழைத்தாள். இதற்காகவே காத்திருந்த சிவபெருமானும் குறித்த நேரத்தில் அவளது தாயின் உருவிலே அவளிடம் வந்தார். உற்ற நேரத்தில் உதவிக்கு வந்த இறைவனைத் தன் தாயெனவே நம்பினாள் இரத்தினாவதி. அழகிய ஆண்குழந்தை பிறந்தது. கொஞ்சம் கொஞ்சமாக வெள்ளம் வடிந்து ஆறு அமைதியாயிற்று. அவளைப் பெற்றெடுத்த தாய் ஆற்றைக் கடந்து மகளின் வீடு வந்து சேர்ந்தாள். அவளைக்கண்ட இரத்தினாவதிக்கு வியப்பு மேலிட உண்மைத்தாய் யாரெனத் திகைத்து நின்றாள். தாயாக வந்து அதுவரை அவளையும் குழந்தையையும் கவனித்துக் கொண்ட பரமேசுவரன் சட்டென மறைந்தார். ஆகாய வீதியிலே ரிஷப வாகனராய் அவர்களுக்குப் பரமேசுவரன் காட்சியளித்தார். இதுதான் திருச்சி செவ்வந்திநாதர் 'தாயுமானவர்' ஆன வரலாறு.
இக்கோயில் சுவாமி சன்னிதி வரையில் மேல்தளம் மூடப்பட்ட படிவழிகளைக் கொண்டது. இதனால் கோயிலுக்குச் செல்லும் அன்பர்களை மழையும் வெய்யிலும் பாதிக்காது. சுவாமியின் கோயிலும் மாடிக்கட்டிடமாய் உள்ளது. இக்கோயிலின் இன்னொரு சிறப்பம்சம் பங்குனி மாதந்தோறும் 23, 24, 25 தேதிகளில் கதிரவனுடைய மாலை நேரத்து மஞ்சள் ஒளிக்கற்றைகள் இலிங்கத்தின் மீது பொன்னிறமாகப் படிவது கண்கொள்ளாக் காட்சியாகும். இத்¢திருத்தலம் இந்துசமய அறநிலயத் துறையின் கீழ் நிர்வகிக்கப்பட்டு வருகின்றது. இக்கோயிலில் ஆடிப்பூர விழா, நவராத்திரி விழா, தேர்த்திருவிழா, தெப்பத்திருவிழா என்று எந்த விழாவாக இருந்தாலும் பத்துநாள் விழாவாகத்தான் கொண்டாடப்படுகின்றது. காரணம் இக்கோயில் மிகவும் பணக்காரக் கோயில். ஏகப்பட்ட சொத்துக்களும் வருமானமும் கொண்டது.
தல மஹிமை:
உமா தேவியார் சிவபெருமானை வழிபடவும் திருமணம் செய்து கொள்ளவும் விரும்பினார். இத்தலத்தில் தாமரை மலரில் ஒரு குழந்தையாய்த் தோன்றி கார்த்தியாயனர் என்ற முனிவரால் கண்டெடுக்கப்பட்டு வளர்க்கப்பட்டு வந்தாள். இயல்பாகவே இவள் தன் கூந்தலுக்கு நல்ல மணம் இருந்த காரணத்தால் 'மட்டுவார் குழலி' என்று அழைக்கப்பட்டாள். இங்கு சுயம்புவாய்த் தோன்றிய இலிங்கத்தை வழிபட்டுத் தவமேற்கொண்டு முடிவில் தான் விரும்பியபடியே இறைவனை மணந்து கொண்டாள். மட்டுவார்குழலியால் வழிபடப் பெற்ற இலிங்கம் நாகநாதசுவாமி கோயில் என்றழைக்கப்படுகின்றது. |
|
தாயுமான அடிகள்:
நாயக்க மன்னர்கள் ஆட்சியில் அரசுக் கணக்கர் பிரிவில் பணிபுரிந்த கேடிலியப்பப்பிள்ளை திருச்சி தாயுமான சுவாமியை வழிபட்டு அந்த இறைவன் அருளால் ஓர் ஆண் மகவைப் பெற்றார். அக்குழந்தைக்கு அந்த இறைவனின் பெயரையே சூட்டினார். அவருக்குப் பின் அவர் வகித்த அதே பொறுப்பை அவர் மகன் தாயுமானவர் ஏற்றுக்கொண்ட போதும் அவர் மனம் இறைவனின் அருளையே நினைந்து ஞானா சிரியனைத் தேடிக் கொண்டிருந்தது. அப்போது தான் திருமூலர் பரம்பரையில் வந்த மௌனகுரு சுவாமிகளை இக்கோயிலில் தரிசித்து அவரிடம் ஞானோபதேசம் பெற்றார். இந்தத் தாயுமான அடிகள் பாடிய பாடல்களே சமரச நோக்க முடைய 'தாயுமானவர் பாடல்' என்று புகழ்ந்து பேசப்படும் ஒப்பற்ற இலக்கியமாகும். "அங்கிங்கெனாதபடி எங்கும் பிரகாசமாய்..." என்று தொடங்கும் பாடலில் அந்த மாதியும் அளப்பருஞ் சோதியே ஆதியே அடியார்தம் சிந்தை மேவிய தாயுமானவன் எனும் சிரகிரிப் பெருமாளே" என்று இத்தலத்து இறைவனைப் போற்றியுள்ளார் தாயுமான அடிகள்.
அம்மானைப் பாடல் என்பது ஒருவகை சுவையான இலக்கியவகையாகும். பெண்கள் காய்களை வைத்துக் கொண்டு பாடியபடி விளையாடும் இதில் இடம்பெறும் பாடலின் கருத்துக்கள் சுவையாக இருக்கும். விளையாடியபடியே ஒருத்தி கேள்வி கேட்பாள்; எதிரிலிருப்பவள் விளையாடியபடி அதற்கான விடை தருவாள். உதாரணத்திகொரு பாட்டு
"சிரிபுர மாவீசர் செட்டிமகட் காவேடம் தரித்து மருத்துவம் செய்தாரானார் அம்மானை தரித்து மருத்துவம் செய்தாராயின் மருந்தெண்ணெய்ச்சிகள் இன்றிமணமிவர்க்கே தம்மானை மட்டுவார் குழலியிருக்க மணமரிதோ அம்மானை"
டாக்டர் அலர்மேலு ரிஷி |
|
|
More
புனிதமான புரட்டாசி
|
|
|
|
|
|
|