Thendral Audio Advertise About us
New User? | Forgot Password? | Email: Password: Login
Current Issue | Previous Issues | Author Index | Category Index | Organization Index | E-Magazine | Classifieds | Digital Downloads
By Category:
சின்னக்கதை | சமயம் | சினிமா சினிமா | இளந்தென்றல் | கதிரவனை கேளுங்கள் | ஹரிமொழி | நிகழ்வுகள் | மேலோர் வாழ்வில் | மேலும்
February 2004 Issue
ஆசிரியர் பக்கம் | நேர்காணல் | மாயாபஜார் | இலக்கியம் | முன்னோடி | அன்புள்ள சிநேகிதியே | கவிதைப்பந்தல் | நூல் அறிமுகம் | சாதனையாளர்
குறுக்கெழுத்துப்புதிர் | புழக்கடைப்பக்கம் | சிறுகதை | புதிரா? புரியுமா? | சமயம் | வார்த்தை சிறகினிலே | பொது | சினிமா சினிமா | Events Calendar
எழுத்தாளர் | இளந்தென்றல் | நிகழ்வுகள் | வாசகர் கடிதம் | தமிழக அரசியல் | ஜோக்ஸ்
Tamil Unicode / English Search
சிறுகதை
வழி மறந்தபோது
மூளைசெத்தவன்
புதிய பாதை
- தங்கம் ராமசாமி|பிப்ரவரி 2004|
Share:
தாசிவம் கட்டிலை விட்டு எழுந்தார். மணி ஏழு ஆகிவிட்டிருந்தது. பத்து நாட்களாய்ப் பனிமழை கொட்டி டொரான்டோ நகரமே வெண்மையாய்ப் பஞ்சுப் பொதிக்குள் மூழ்கிக் கிடந்தது. ''என்னடா இது ஊர்.. நாலு சுவற்றையும் பார்த்துக் கொண்டு... சே போராடிக்கிறது."

சதாசிவம் மகன் பிரகாஷ் வீட்டிற்கு வந்து ஒரு மாதமாகிறது. ''வெளியில் கன்னா பின்னாவென்று டிரா·பிக் அப்பா! குளிரும் அதிகமாயிருக்கு உங்களுக்கு இந்த ஊரும் வெதரும் பழகணும். வயசாச்சு. ஒங்க உடம்பைப் பார்த்துக்கணும். வெளியில எங்கேயும் போக வேண்டாம்'' இது மகனின் கட்டளை.

''வெதர் ரிப்போர்ட் தனியா ஒரு சானல்ல வருது. அதைப் பார்த்துவிட்டுக் காலாற நடந்து போக முடியுதா? பிள்ளையும் மருமகளும் பிலுபிலுவென்று பிடித்துக் கத்துறாங்களே.''

நேற்று இப்படித்தான் ''அப்பா ப்ளீஸ் நீங்க நம்ப கிராமத்தில இருந்த மாதிரி பட்டை பட்டையாய் விபூதியும், குங்குமுமாய், வேஷ்டி கட்டிக்கிட்டு வெளியில போகாதிங்க. இந்த அபார்ட்மென்டில சைனீஸ், கனேடியன்ஸ், அமெரிக்கன்ஸ்னு பல நாட்டுக்காரங்க இருக்காங்க. நம்மளை ஒரு மாதிரியாய்ப் பார்ப்பாங்க. அதோட உறைபனியில வழுக்கி விழுந்தீங்கன்னா, சின்ன வயது இல்லே, கைகால் ·பிராக்சர் ஆன ஒட்டக்கூட ஒட்டாது. கொஞ்சம் இந்த ஊருக்கு ஏத்த மாதிரி நடந்துக்கணும்.'' சற்றுக் கடுமையாய் மகன் பிரகாஷ் கூறினான்.

ஐயோ இன்னும் காதிலேயே ஒலிக்கிறது. என்ன கொழுப்பு இவனுக்கு? இப்பதான் மூணுவருஷமா கம்ப்யூட்டர் எஞ்ஜினியர் உத்தியோகம் பார்க்க இந்தக் கனடாவுக்கு வந்திருக்கே. நாம பொறந்து வளர்ந்த ஊருக்கு என்ன கொறைச்சல்? அயல்நாட்டு மோகத்தில நம்ம பழக்க வழங்கங்களை மறந்துடறதா? நாலு வருஷம் முன்னாடி வரை ஓடியாடி ஹெட்மாஸ்டரா வேலை பார்த்தவன்தானே நான். எனக்கு இவன் நடந்துக்க கத்துக் கொடுக்கறான் மடையன்! எனக்கும் நாகரிகம் தெரியும். வயசானா என்ன ஓரேயடியா முடங்கிக் கெடக்கணுமா? கை கால்களுக்கும் எக்ஸர்சைஸ் வேண்டாமா? இந்தக் காலத்துப் பசங்களுக்கே பெரியவங்களிடம் இங்கிதமா நடந்துக்கத் தெரியறதில்லை முட்டாள்.''

மனசுக்குள் திட்டிக் கொண்டார். எண்ணங்கள் அலைமோத பாத்ரூம் சென்றார். பல்துலக்கி, முகம் கழுவி, ஹாலுக்கு வரவும் மகன் பிரகாஷ¥ம் மருமகள் கமலாவும் ஆபிசிற்குக் கிளம்பிக் கொண்டிருந்தனர். ''மாமா ப்ரெட்லே சீஸ் போட்டு, காபியும் கலந்து டேபிள்ல வச்சிருக்கேன். ப்ரேக் ·பாஸ்ட் சாப்பிடுங்க. பகலுக்கு ·பிரிட்ஜ்ல நேற்றைய சாம்பார், ரசம் பொரியல் எல்லாம் இருக்கு. மைக்ரோவேவில சூடு பண்ணிக்கங்க. நாங்க வர ஈவினிங் ஆறு, ஆறரை ஆகும்'' இது கமலா.

''அப்பா ஆடியோ கேசட் நிறைய இருக்கு. கம்ப்யூட்டர்ல தினமலர், விகடன் எல்லாம் படியுங்க. எப்படின்னு நேற்று சொல்லிக் கொடுத்து இருக்கேன் இல்லே. நல்லா டைம் பாஸ் பண்ணுங்க. ஜாலியாக இருங்க. ஊரையே நினைச்சுகிட்டு உறங்காதீங்க. என்ன நான் சொல்றது? பீ சியர்·புல். நாங்க வந்த பிறகு வெளியில எங்கேயாவது போகலாம்'' பெரிய தோரணையாய்ப் பேசிவிட்டு இருவரும் காரில் ஏறிச் சென்று விட்டனர்.

கடவுளே! ஊர்ல வீட்டுத் தோட்டத்தில எவ்வளவு பச்சை பச்சையாய்க் காய்கறிகள் பறித்துக் கொண்டு கொடுப்பேன் உடனே என் வாய்க்கு வேணுங்கற மாதிரி என் மனைவி கெளரி சமைச்சுப் போடுவாளே. காலை வீசிக் கோயில் என்ன, பிரண்ட்ஸ் வீடுகள் என்னன்னு நாங்க போயிண்டு இருந்த நாட்கள் இனிமே வரவா போகிறது? ஹ¤ம்... புண்யவதி கெளரியும் ஒருநாள் தூக்கத்திலேயே சுமங்கலியாய்ப் போய்ச் சேர்ந்து விட்டாள். தனியா இந்தக் கிராமத்தில் எப்படி இருப்பே என்று ஒரே பிள்ளை பிரகாஷ¤ம் கத்தி ரகளை செய்து போன விலைக்குப் போகட்டும்னு ஒம்பது வேலி வீட்டையும் விற்றுவிட்டு என்னையும் டொரான்டோவிற்குக் கூட்டிக்கொண்டு வந்துவிட்டான். ஆயிற்று ஒரு மாசம் ஓடிவிட்டது.

இங்கு பிரகாஷின் வீடு முப்பது மாடிகள் கொண்ட அபார்ட்மென்ட்டில் எட்டாவது மாடியில் இரண்டு பெட்ரூம் கொண்ட வீடு. புறாக்கூடு என்றுதான் சொல்ல வேண்டும். பிரகாஷ் கமலாவுக்கு குழந்தை இல்லை. ஒரு ரூம் அப்பாவுக்குக் கொடுத்து இருந்தனர்.

சதாசிவம் ரூமில் ஒரு கட்டில், மேசை, நாற்காலி, அலமாரி, அருகிலேயே பாத்ரூம் எல்லாம் வசதிதான். என்ன இருந்தும்...

கிராமத்தில் பெரிய கூடம், தாழ்வாரம் பளீரென்று வெய்யில் வரும் முற்றம். கொல்லை நிறைய காய்த்துக் குலுங்கும் மரங்கள். முற்றத்தில் கட்டிலைப் போட்டுப் படுத்தால் ஆஹா, என்ன குளுகுளுவென்று வேப்பங்காற்று! அந்த நாளும் சுகமும் இனிமேல் எங்கே வரப்போகிறது! மனம் பழைய நினைவுகளிலேயே சுழன்றது. இங்கே நாலு சுவற்றையும் பார்த்துக் கொண்டு வெளியில் போகமுடியாமல் 'ஹவுஸ் அரெஸ்ட்' மாதிரி சே... ஒரு கசப்பு உடல் முழுவதும் பரவியது.

ஜன்னல் வழியே பார்த்தார். அதோ தெரிகிறதே இது இருநூறு அடி நடந்தால் ஒரு சைனீஸ் லேடி பழக்கடை வைத்திருக்கிறாள். என்ன போய்த்தான் பார்ப்போமே. ஒரு ஆசை எழும்ப, காலை ஆகாரத்தை முடித்துக் கொண்டு, பாண்ட், ஷர்ட், ஸ்வெட்டர் குல்லாய், சாக்ஸ், கோட்டு மாட்டிக் கொண்டு 'சீ சனியன் புடிச்ச ஷ¥வும் மண்ணாங்கட்டியும்' என்று முணுமுணுத்தவாறு கிளம்பி, லிப்ட்டில் இறங்கி கதவைத் திறந்து, ரோடு பக்கமாய் நடக்கக் காலை வைக்கும் போதே சிலீரென்று குளிர் ஊசி போல் முகத்தில் அறைய, நாலுஅடிகூட வைக்கவில்லை. பனிக்கட்டி சறுக்கி விழுந்தார். நல்லவேளை அபார்ட்மென்ட்டில் வேலை செய்யும் அட்டெண்டெண்ட் இத்தாலியர் வெளியில் ஸ்னோஷவல் செய்து கொண்டிருந்தவர் ஓடி வந்து சதாசிவத்தைத் தூக்கிவிட்டுப் பாண்ட் ஷர்ட்டில் ஒட்டிய பனித்துகளைத் தட்டிவிட்டார். ''ஓ காட் ப்ளீஸ் டோண்ட் கம் அவுட்ஸைட். இட்ஸ் வெரி கோல்ட். ஆர் யூ ஒகே? ·பைன்?'' என்று கைத்தாங்கலாய்ப் பிடித்து உள்ளே அழைத்து வந்து லாபியில் உட்கார வைத்தார். மனதில் பதட்டம். அந்த ஆளின் அனுதாபம் சிறிது எரிச்சலை மூட்டினாலும், நல்லவேளை அடி ஒன்றும்படவில்லை. பாவம் உதவி செய்தானே. 'ரொம்ப தேங்க்ஸ்' என்று அவனிடம் கூறிவிட்டு லிப்ட்டில் ஏறி வீட்டிற்குள் வந்துவிட்டார்.

நாமே அதிசயமாய் வெளியில் போனோம் இப்படியா ஆக வேண்டும்?

மாலையில் வீட்டிற்குள் வரும்போதே பிரகாஷ் ஒரே கூச்சல். ''ஏம்ப்பா வெளியில எதுக்குப் போனீங்க? ஸ்னோ வழுக்கி விழுந்தீங்களாமே. அந்த மெயின்டெனன்ஸ் ஆள் சொல்றான். ஒரு நாள் நீங்க என்னோட அப்பான்னு சொல்லிட்டிருந்தேன். தெரிஞ்சிகிட்டான். 'கீழே விழுந்துட்டார் இனிமே கேர்·புல்லா இருக்கச் சொல்லுங்க'ன்னு அவன் எனக்குச் சொல்றான். இதெல்லாம் அவசியமா? வீட்டில அடைஞ்சு கிடக்க வேண்டியது தானே. சரி, அடி ஒண்ணும்படலியே?'' என்று குதியாய்க் குதித்து எகிறினான். சதாசிவம் காதில் படாத மாதிரி உட்கார்ந்து இருந்தார்.

''அட போடா முட்டாள். உங்களையெல்லாம்விட நான் ஸ்டிராங்காத்தான் இருக்கேன்.'' என்று சொல்ல நாக்குத் துடிக்கும்; மனதுக்குள் அடக்கிக் கொண்டு பொறுமையாய் உட்கார்ந்து இருந்தார்.

அன்று ஞாயிற்றுக்கிழமை பிரகாஷ¤ம், கமலாவும் நண்பர் வீட்டில் பார்ட்டி என்று போயிருந்தார்கள். மாலை மணி ஐந்து இருக்கும் வெறிசென்று உட்கார்ந்திருக்கப் பிடிக்காமல் கிருத்திகையாயிருக்கு மூணு ஸ்டாப் தள்ளியிருக்கும் கோயிலுக்குப் போகலாமே என்று எண்ணினார் சதாசிவம். 'எப்படியும் பார்ட்டி முடிந்து அவர்கள் வரப் பத்துமணிக்கு மேலாகிவிடும். அதுவரையில் போரடிக்கும்' என்று மனதுக்குள் சொல்லியபடி கிளம்பினார். வாசலிலேயே பஸ் பிடித்து உட்கார்ந்தார். எதிர் சீட்டிலிருந்து ஒருவர் ''சார் நீங்களா எங்கேயிருக்கீங்க?'' குரலைக் கேட்டு நிமிர்ந்து பார்த்தார். ''அட சேதுராமன் இல்லே?''

''எஸ் சார். வணக்கம். நீங்க எம்பேரை ஞாபகம் வச்சிருக்கீங்களே'' என்று பக்கத்தில் வந்து உட்கார்ந்தான். ''சார் நீங்க எப்போ இங்கே, ஓ, பிள்ளையோட இருக்கீங்களா? ரொம்ப இளைச்சிட்டீங்க சார்.''

ஒரேயடியாய் இருவருக்கும் உற்சாகம் பீறிட்டது. ''சேது நீ கூட ரொம்ப மாறிட்டேப்பா. இங்கேதான் இருக்கியா? உன்னைப் பார்த்தவுடன் எனக்கு ஊர் ஞாபகம் வந்துட்டது'' சதாசிவத்தின் குரல் தழுதழுத்தது.

''ஆமா சார் இங்கேதான் வேலையாயிருக்கேன். நான் படிக்கற நாள்ல நீங்க செஞ்ச உதவியை மறக்கவே முடியாது சார். அப்போ என் அப்பா இறந்து போய்க் குடும்பம் தீராத வறுமையில் வாடியதும் நான் படிக்கறதுக்கும் எங்க குடும்பத்துக்கும் எவ்வளவு ரூபாய் கொடுத்து உதவி செஞ்சிருக்கீங்க. அப்புறம் நாங்க ஊரை விட்டு சென்னை வந்து கம்ப்யூட்டர் எஞ்ஜினியரிங் முடிச்சு கானாடாவில் வேலை கெடைச்சு வந்துட்டேன். என்னை வாழ வச்ச தெய்வம் சார் நீங்க'' கண்களில் நீர் மல்கப் பேசி முடித்தான் சேது.

''நல்லாயிருக்கியா? அது போதும் விடு''

"செளக்கியமா இருக்கேன் சார். இதுதான் என் வொய்·ப் சாந்தி'' என்று மனைவியை அறிமுகப்படுத்தினான். "எல்லாம் உங்க ஆசீர்வாதம்தான் சார்."
''சேது நீ எனக்கு ஒரு சின்ன ஹெல்ப் செய்யணுமே, பிள்ளையும், மருமகளும் வேலைக்குப் போயிடறாங்க. இந்த ஊரில எனக்குப் பொழுது போக மாட்டேங்கறது. வீட்டிலேயே அடைஞ்சு கிடக்கறேன். உனக்குத்தான் தெரியுமே நான் நம்ப ஊரிலேயே வேதம், ஸ்லோகம் எல்லாம் கிளாஸ் எடுத்திட்டிருந்தேனே. யாராவது தெரிஞ்சவங்க நாலு பேரைச் சேர்த்து விட்டால் நான் சொல்லிக் கொடுக்கறேன். டைம் பாஸ் பண்ணின மாதிரி இருக்கும் எனக்கும் நல்லா பொழுது போகும். பைத்தியம் புடிச்ச மாதிரி அல்லாடிக் கிட்டிருக்கேன்.''

''ஓ அதுக்கென்ன சார் பேஷாச் செய்யலாமே. என்னோட தெய்வமாச்சே நீங்க. உங்களுக்குச் செய்யாம வேற யாருக்கு சார் செய்யப் போறேன். போன் நம்பர் குடுங்க.'' உச்சி குளிர்ந்து போன சதாசிவம் ஒரு சிறு பேப்பரில் நம்பரை எழுதிக் கொடுத்தார். நிம்மதியுடன் கோயில் பஸ் ஸ்டாப்பில் இறங்கினார். பின்னாலேயே சேதுவும் அவன் மனைவியும் இறங்கினர்.

''கோயிலுக்கா சார்? நாங்க இங்கே ஒரு கடைக்குப் போயிட்டுக் கோயிலுக்கு வரோம்'' என்று கூறிவிட்டு நடக்க ஆரம்பித்தனர். சதாசிவம் சிறிது நடந்தவர் ''அடடா, சேதுவின் போன் நம்பர் வாங்கிக்கொள்ள மறந்துட்டேனே'' என்று நினைத்தவராகத் திரும்பி அவர்கள் பின்னாலேயே தொடர்ந்து போக ஆரம்பிக்க, சேதுவின் மனைவி "என்னங்க பெரியவர் கொடுத்தார்?'' என்று கேட்டாள். ''ஆமா பெரிசுக்கு வேற வேலை என்ன? வயசாச்சு பிள்ளை வீட்டில முடங்கிக் கிடக்காம வேதமாம், கிளாசாம் காசு ஆசை புடிச்சு அலையுது. அந்த போன் நம்பர் ரொம்ப முக்கியம் பாரு, அதான் கிழிச்சுப் போட்டேன்'' இவரைக் கவனிக்காமலேயே பேசிக் கொண்டு சென்றனர். திடுக்கிட்டு நின்றார்.

படாரென்று யாரோ மண்டையில் அடித்தாற் போல இருந்தது. சதாசிவம் வலியுடன் கோயிலுக்குத் திரும்பினார். நெஞ்சைப் பிளப்பது போன்று வருத்தம். சீ இவனும் ஒரு மனுஷனா? எவ்வளவு உதவி செய்திருப்பேன். நன்றி கெட்ட ஜன்மம்.

கோயிலில் நல்ல கூட்டம். சொந்த முயற்சியில் ஒருவர் கட்டிய அழகான கோயில். அம்மன் அலங்காரத்தில் ஜொலித்துக் கொண்டிருந்தாள். கோயிலின் சுத்தமும் தெய்வீக மணமும் மனதுக்கு ஆறுதல் அளித்தன. கணீரென்ற குரலில் ருத்ரமும், சுலோகங்களும் கண்களை மூடியவாறு சதாசிவம் சொல்ல ஆரம்பித்தார்.

மளமளவ¦ன்று பக்திப் பரவசத்துடன் பொங்கிப் பிரவாகமாய் வரும் அவருடைய தெய்வீகக் குரலால் கட்டுண்டு அங்குள்ள அனைவரும் ஆடாது அசங்காது நின்றிருந்தனர். முழுவதும் சொல்லி முடித்தவுடன் கோயிலின் மானேஜர் வந்து பக்கத்தில் நின்றார். ''ஐயா, நீங்க இவ்வளவு அழகாக ஸ்லோகங்களச் சொன்னீங்களே. கேட்க ஆனந்தமாக இருக்கு.''

"தினமும் நீங்க வாருங்கள். நிறைய பேருக்கு இங்கேயே கற்றுக் கொடுங்கள். உங்களைப் போல ஒருத்தரைத்தான் நாங்க தேடிக்கிட்டிருக்கோம். உங்க வீடு எங்கேயிருக்கு? அந்த அம்மனேதான் உங்களை இங்கே அனுப்பி வச்சிருக்காங்க போல இருக்கு ஐயா'' என்று வெகு பவ்யமாகவும் மனநெகிழ்ச்சியுடனும் இலங்கைத் தமிழில் அன்பொழுகக் கேட்கவும், சதாசிவத்திற்கு ஆயிரம் வாட் பிரகாசத்தில் முகம் மலர்ந்தது. தன் போன் நம்பரும், இடமும் கூறினார்.

''ஐயாவுக்கு எந்தவித சிரமும் இல்லையே? நாங்களே காரில் வந்து உங்களை அழைச்சிக்கிட்டு வந்து, கொண்டு விட்டுடறோம். வீட்ல யாரும் மறுப்புச் சொல்ல மாட்டாங்களே?''

''ஒரு சிரமமும் இல்லீங்க. நீங்க இவ்வளவு விரும்பிக் கேக்கறீங்களே அதுவே எனக்கும் பெருமகிழ்ச்சியாக இருக்கு. யார் என்ன சொல்லக் கிடக்கு. எல்லாம் அந்த அம்பாளின் அருள். கடவுளுக்குச் செய்யக் குடுத்து வச்சிருக்கணுமே அதுவே பெரிய பாக்கியம்'' சந்தோஷப் பெருக்கினால் கண்களில் நீர் மல்கக் கரம்கூப்பி சந்நிதியைப் பார்த்து வணங்கினார். ஆம், சதாசிவத்தின் அயல்நாட்டு வாழ்க்கையில் ஒரு புதுப்பாதை கிடைத்துவிட்டதே!

தங்கம் ராமசாமி
More

வழி மறந்தபோது
மூளைசெத்தவன்
Share: