|
தமிழ் பதிப்பகங்களின் புத்தக வடிவமைப்பு |
|
- அசோகன் பி.|பிப்ரவரி 2004| |
|
|
|
என்னைச் சமீபத்தில் மிகவும் கவர்ந்த ஒன்று பல தமிழ் பதிப்பகங்களின் புத்தக வடிவமைப்பு - வெகுநேர்த்தியாக இருந்தன புத்தகங்கள். ஆம். சென்னையில் நடந்த புத்தகக் கண்காட்சிக்குச் சென்றிருந்தேன். நுழைந்தவுடன் வைரமுத்துவின் ஆளுயரச் சுவரொட்டியில் தொடங்கி பலவாறான வண்ணமயமான விளம்பரங்கள்; இவையும் அருமையான வடிவமைப்பில். சென்ற ஆண்டைவிட அதிகமான கடைகள் இருப்பதாகத் தோன்றியது. திருவிழாக் கூட்டம்தான்! புத்தக விற்பனையும் நன்றாகவே நடப்பதாகத் தோன்றியது. பல புதிய பதிப்பகங்களைப் பார்த்தேன். (பேரைச் சொல்லக் கூடாது என்றில்லை. இவை எனக்குப் புதிதாக இருந்தாலும், பல ஆண்டுகளாக நடப்பவையாக இருக்கலாம். நான் அவர்களைப் புதியவர்கள் என்று சொல்லப் போக, சுடச்சுட எதாவது என்னுடய அறிவின்மை பற்றிக் கடிதம் வரலாம்!)
சோம்ஸ்கி (Noam Chmosky) பற்றிய ஒரு புத்தகம் வாங்கினேன். அவர் எழுதிய புத்தகங்களைப் படிக்கவேண்டும் என்ற ஆவலைத் தூண்டும் வகையில் எழுதப்பட்டுள்ளது Chomsky for beginners என்ற அந்தப் புத்தகம். இலக்கிய வட்டங்களில் அடிபடும் தொடர்களான post-modernism, magical realism ஆகியவற்றைப் பற்றிப் புரிந்து கொள்ளப் புத்தகங்கள் வாங்க வேண்டும் என்று சொன்னபோது தென்றலின் வடிவமைப்புக்குப் பொறுப்பான ஜீவமணி இந்த for beginners தொடர் புத்தகங்களைப் பற்றிச் சொன்னார்.
பின் நவீனத்துவம் பற்றிய புத்தகம் கிடைக்கவில்லை - நன்றாக விற்பனையாகிறது என்று சொன்னார்கள்! பதிலாகத் திரைப்பட வரலாறு பற்றியும், மேற்சொன்ன சோம்ஸ்கி புத்தகமும் கிடைத்தன. அருமையான, உபயோகமான தொடர். Orient Longman நிறுவனத்தாருக்கு நன்றி.
இராக்கிடம் பேரழிவு ஆயுதங்கள் இல்லாமல் இருக்கலாம் என்ற தொனியில் அமைந்துள்ளது காலின் பவலது அறிக்கை. ஒரு படத்தில் நாகேஷ் "மோசமாயிருக்குன்னா ஏதோ சுமாரா. நல்லாயிருக்கு" என்று தன் முதலாளியின் பாட்டு பற்றிச் சொல்வார். திரைப்படத்தில் நகைச்சுவை சிரிக்கலாம். பலரை - இராக்கியர்களையும், அமெரிக்கர்களையும் - பலி வாங்கிய ஒரு யுத்தத்தின் ஆணிவேரான காரணத்தில் இப்படிச் சில மாதங்களில் 'பல்டி' அடிப்பது வல்லரசு நாட்டின் பெரும் பொறுப்பு வகிப்பவர். இதைப் பார்த்துத் துயரப்படுவதா இல்லை பயப்படுவதா? |
|
பொதுமக்களின் மறதி மற்றும் பெரும் ஊடகங்களின் ஆதிக்கம் ஆகியவற்றில் நம்பிக்கை வைத்து உலகைத் தன் சௌகரியத்துக்கு ஆட்டிப்படைக்கும் எண்ணம் வலுவடைவது கவலை தரும் ஒன்று. நிலை மாற வேண்டும்; நாம்தான் மாற்ற வேண்டும்.
இந்தியாவில் தேர்தல் வந்து விட்டது. கொள்கையைத் தவிர அனத்து எல்லாக் காரணங்களையும் கணக்கெடுத்து அமைக்கப்படும் வியூகங்கள். அவை எவ்வாறு தங்கள் கொள்கைகளைச் சார்ந்தவை என்று மிகுந்த படைப்புத் திறனுடன் விளக்கும் தலைவர்கள். இவை யாவும் வலம் வரத்தொடங்கி விட்டன.
'அரசியல் சாக்கடை' என்ற விமர்சனம் பற்றி என் கருத்து தென்றல் வாசகர்கள் நன்கு அறிந்த ஒன்று. இது நம் வீட்டில் ஓடும் சாக்கடை - சுத்தப்படுத்தியே ஆகவேண்டும்
தென்றல் வலைத்தள முயற்சிகள் நடந்துவருகின்றன. இன்னும் சில தமிழ்ப் பத்திரிக்கைகளுடன் பேசி வருகிறோம். தமிழ்ப் புத்தாண்டுக்குள் பெரிய அளவில் வரும் என நம்புகிறோம்.
அடுத்த மாதம் சந்திப்போம்.
மீண்டும் சந்திப்போம் பி. அசோகன் பிப்ரவரி 2004 |
|
|
|
|
|
|
|