Thendral Audio Advertise About us
New User? | Forgot Password? | Email: Password: Login
Current Issue | Previous Issues | Author Index | Category Index | Organization Index | E-Magazine | Classifieds | Digital Downloads
By Category:
சின்னக்கதை | சமயம் | சினிமா சினிமா | இளந்தென்றல் | கதிரவனை கேளுங்கள் | ஹரிமொழி | நிகழ்வுகள் | மேலோர் வாழ்வில் | மேலும்
Current Issue
தென்றல் பேசுகிறது | நேர்காணல் | சிறுகதை | சூர்யா துப்பறிகிறார் | அலமாரி | நூல் அறிமுகம் | சின்னக்கதை | மேலோர் வாழ்வில்
எழுத்தாளர் | Events Calendar | நிகழ்வுகள் | முன்னோடி | பொது
Tamil Unicode / English Search
மேலோர் வாழ்வில்
சிரவை ஆதீனம் கந்தசாமி சுவாமிகள்
- பா.சு. ரமணன்|ஜனவரி 2025|
Share:
மதுரை ஆதீனம், திருவாவடுதுறை ஆதீனம், குன்றக்குடி ஆதீனம், திருப்பனந்தாள் ஆதீனம், மயிலம் ஆதீனம் எனத் தமிழ்நாட்டில் புகழ்பெற்ற ஆதீனங்கள் பல உள்ளன. அவற்றுள் ஒன்று கௌமார மடாலயம் என வழங்கப்படும் சிரவை ஆதீனம். 1908ல் இதனைத் தோற்றுவித்தவர் ராமானந்த அடிகளார்.

குருமரபு
கௌமார மடாலயத்தின் குருமரபு முருகப் பெருமானிலிருந்து தொடங்குகிறது. அருணகிரிநாதர் இரண்டாம் குருநாதராகவும், வண்ணச்சரபம் தண்டபாணி சுவாமிகள் மூன்றாவது குருநாதராகவும் கருதப்படுகின்றனர். தண்டபாணி சுவாமிகளிடம் உபதேசம் பெற்றுச் சிரவை ஆதீனத்தை நிறுவியவர் ராமானந்த அடிகளார். அவரிடமிருந்தே சிரவை ஆதீன உபதேசப் பரம்பரை தொடங்குகிறது.

தோற்றம்
ராமானந்த அடிகளாரின் காலத்தில் அவரால் தீட்சை அளிக்கப்பட்டு மடாதிபதியாக நியமிக்கப்பட்டவர், கந்தசாமி சுவாமிகள். இவர், ராமானந்த அடிகளாரின் பூர்வாசிரம இளவல் வெங்கடசாமிக் கவுண்டர் – குட்டியம்மை இணையரின் மகன். ஏப்ரல் 18, 1892ல் பிறந்தார். குழந்தைக்குக் 'கந்தசாமி' என்று ராமானந்தரே பெயர் சூட்டினார்.

கல்வி
கந்தசாமி திண்ணைப் பள்ளிக்கூடத்தில் ஆரம்பக் கல்வி பயின்றார். இளவயதிலேயே பெற்றோரை இழந்தார். அதனால் ஏற்பட்ட சிந்தனைகளால் மன வைராக்கியமுற்றார். ஆன்மீகத்தின்பால் ஆர்வம் திரும்பியது. கல்வியை உதறிவிட்டு 12வது வயதில் மடாலயத்திற்கு வந்து ராமானந்தரைச் சரணடைந்தார்.

ஆன்மீக வாழ்க்கை
தொடக்கத்தில் கந்தசாமிக்கு மடாலயத்தில் உள்ள விநாயகர் ஆலய பூசைப் பணி தரப்பட்டது. பக்தியோடும், ஒழுங்கோடும் அதனைச் செய்துவந்தார். ஓய்வு நேரத்தில் மடாலயத்தில் உள்ள நந்தவனத்தைச் செப்பனிட்டு அதனை வளப்படுத்தினார். தனது குருநாதர் ராமானந்தரிடம் இருந்து இலக்கண, இலக்கியங்களைக் கற்றார். மடத்திற்கு அடிக்கடி வந்து செல்லும் வண்ணச்சரபம் தண்டபாணி சுவாமிகளின் மகனும், தமிழ்ப்புலவருமான செந்திநாயகம் அவர்களிடம் யாப்பிலக்கணம், சிற்றிலக்கிய வகைகளைக் அறிந்தார். பிற இலக்கண, இலக்கிய நுட்பங்களை முருகன் அருளால் ஓதாது உணர்ந்தார்.

வடமொழியையும், மலையாளத்தையும் தாமே முயற்சி செய்து சுயமாகக் கற்றுக் கொண்டார். தனக்குப் பரம்பரைச் சொத்தாக வந்த அனைத்து நிலபுலன்களையும் முறையாகப் பத்திரம் எழுதி திருமடத்திற்கு ஒப்படைத்தார். எளிய துறவிபோல் வாழ்ந்தார். பல்வேறு திருத்தலங்களுக்குச் சென்று இறை வழிபாடு செய்தார்.



தமிழ்ப் புலமை
கந்தசாமி, தமிழ், சமஸ்கிருதம், மலையாளம் ஆகிய மூன்று மொழிகளிலும் தேர்ந்தவரானார். தமிழில் செய்யுள் இயற்றும் புலமை பெற்றார். குருநாதரின் வேண்டுகோளுக்கிணங்க பல்வேறு இலக்கண, இலக்கியங்களை இயற்றினார். அவற்றில் தொடக்க காலத்தில் இயற்றப்பட்டவையாக சற்குரு சரித வண்ணக்கோவை, சூரிய மூர்த்தி சந்தப்பதிகம், சத்திமத் திருப்புகழ், வைணவச் சந்தப் பதிகம், கணேசர் யமகவந்தாதி, கணேசர் சந்தம், சிரவை யமகவந்தாதி போன்ற நூல்கள் அறியப்படுகின்றன.

குரு தீட்சை
ஜனவரி 29, 1923ல், ராமானந்த அடிகளார் பழனி திருத்தலத்தில் சீடரான கந்தசாமிக்குத் துறவு தீட்சை அளித்தார். சிரவை ஆதீனத்தின் ஆதீனகர்த்தராக அவரை நியமித்தார். அதுமுதல் இவர் 'கந்தசாமி சுவாமிகள்' என்று அழைக்கப்பட்டார்.

நூல்கள் இயற்றுதல்
ராமானந்தர், கந்தசாமி சுவாமிகளிடம் கௌமார மடத்தின் சிறப்புக்களை இனிய, எளிய நடையில், தாள, லய, இசை நயங்களுடன், பக்தர்கள் பாடும் வகையில் நூல் ஒன்றை இயற்றுமாறு ஆணையிட்டார். அதற்கிணங்கிக் கந்தசாமி சுவாமிகள் எழுதிய நூல், 'சிந்துத் திரட்டு' என்பது. இந்நூல் ஏப்ரல் 1926ல் பதிப்புக் கண்டது. இந்நூலில் 24 சிந்துப் பாடல்கள் அமைந்திருந்தன. தொடர்ந்து வண்ணச்சரபம் தண்டபாணி சுவாமிகள்மீது நூல் இயற்றுமாறு குருநாதர் ஆணையிடவே கந்தசாமி சுவாமிகள் வண்ணச்சரப தண்டபாணி சுவாமிகள் பற்றி, 'வண்ணச்சரபர் சரித்திர சார வண்ணம்', 'பூர்வ அவதாரக் குறிப்பு வண்ணம்', 'நற்றாய் இரங்கல் துறை வண்ணம்' என மூன்று வண்ணப் பாக்களைப் பாடினார்.

பக்த மான்மியம்
ராமானந்த அடிகளார் ஒருமுறை கேரளம் சென்றிருந்தபோது அங்கு 'பக்த மாலா' என்னும் மலையாள உரைநடை நூலைப் பார்க்க நேர்ந்தது. அது சந்திரதத்தரால் இயற்றப்பெற்ற வடமொழி நூலின் மொழிபெயர்ப்பு. அந்நூலில் திருமாலின் அடியவர்கள், தேவிதாசர்கள், சிவபக்தர்கள், வைணவ அடியார்கள் என நான்கு வகையினரைப் பற்றிய வரலாறுகள் இடம்பெற்றிருந்தன. இந்த நூலைத் தமிழில் ஒரு நல்ல காவியமாக மொழி பெயர்த்தால் அடியார்கள் பயன்பெறுவர் எனக் கருதிய ராமானந்தர், தமிழில் இக்காப்பியத்தை இயற்றுமாறு சீடர் கந்தசாமிக்குக் கட்டளையிட்டார்.

குருவின் கட்டளைக்கிணங்கக் கந்தசாமி சுவாமிகள் பக்த மாலாவைப் 'பக்த மான்மியம்' என்ற தலைப்பில் ஒரு காப்பியமாக இயற்றினார். அக்காப்பியத்தின் மொத்தச் செய்யுள் எண்ணிக்கை 7373. பக்த மான்மிய நூலின் அரங்கேற்றம் 24.5.1928முதல் 5.6.1928வரை பதின்மூன்று நாட்கள் நடந்தது. அரங்கேற்றச் சிறப்பைத் தி.செ. முருகதாசர், 'பக்த மான்மிய அரங்கேற்றல் வைபவம்' என்ற தலைப்பில், 153 செய்யுள்களைக் கொண்ட ஒரு குறுங்காப்பியமாக இயற்றினார்.

கந்தசாமி சுவாமிகள் எழுதிய நூல்கள்: பெருங்கருணாம்பிகை மாலை, பெருங்கருணாம்பிகை யமக அந்தாதி, பெருங்கருணாம்பிகை பதிகம், திருப்புகழ்ப் பஞ்சகம், அவிநாசியப்பர் பதிகம், விநாயகர், முருகர் திருப்புகழ், திருநாவுக்கரசர் மடம் விநாயகர் பதிகம், அப்பர், சம்பந்தர் திருப்புகழ், கருணாம்பிகை திருப்புகழ், அன்னியூர்த் தலபுராணம், மன்னீசர் பதிகம், திருப்புகழ், தபோதக சுந்தரி பதிகம், வரதராசப் பெருமாள் பதிகம், சண்முகக் கடவுள் திருப்புகழ், பிரசன்ன விநாயகர் மாலை, திருப்புகழ், அத்தனூரம்மை மாலை, கணபதி யமக அந்தாதி, ஆதிவிநாயகர் பதிகம், வாழி வேணுகோபாலசாமி பதிகம், வேணுகோபாலசாமி திருப்புகழ் பதிகம், பிரசன்ன விநாயகர் விடசுரத் தடைப்பதிகம், காமாட்சியம்மன் பஞ்சகம், பிரசன்ன விநாயகர் பஞ்சகம், நிருத்த கணபதி துதி, காட்சி விநாயகர் துதி, காரைமடைத் தலபுராணம், அரங்கநாத மாலை, ஆண்டாள் பதிகம், அரங்கநாதன் திருப்புகழ், வாழி அடைக்கலப் பதிகம், அகப்பொருட் கோவை, பச்சைநாயகி பிள்ளைத்தமிழ், திருப்பேரூர்க் கலம்பகம், தலபுராணசாரப் பட்டிநாயக மாலை, பச்சைநாயகி மாலை, பட்டீசர் யமக அந்தாதி, பிறவாநெறிச் சிலேடை வெண்பா, விநாயகர் பதிகம், சிவபிரான் பதிகங்கள், பக்த மான்மியம், குருபர அந்தாதி (திரிபு), வேற்கடவுள் மாலை, அறநெறி வெண்பா, மழைப் பதிகம், மகாலக்குமி பதிகம், மகாவித்வான் பிள்ளையவர்கள் பதிகம், கலைமகள் துதி, குருநாதன் வண்ணம், வண்ணச்சரபர் அவதாரக் குறிப்பு வண்ணம், வண்ணச்சரபர் நற்றாய் இரங்கல்துறை வண்ணம் மற்றும் பல.


தன்மையும் கொள்கையும்
கந்தசாமி சுவாமிகளின் பாடல்கள் செறிவானவை; பொருளாழம் மிக்கவை; இலக்கிய நயம் கொண்டவை. யமகம், திரிபு போன்ற மிறைக்கவிகளையும் வண்ணப்பாக்களையும் விரைவில் இயற்றும் ஆற்றல் கொண்டிருந்தார். 'கொங்கு நாட்டுக் கச்சியப்பர்' என்று போற்றப்பட்டார். உலகியல் நிகழ்வுகள் எதிலும் நாட்டமில்லாமல் வாழ்ந்தார். இரண்டு கொள்கைகளை மட்டுமே சுவாமிகள் முதன்மையாகக் கொண்டிருந்தார்: அனைவரும் புலால் உண்பதையும், அதன் பொருட்டு உயிர்களைக் கொல்வதையும் நீக்க வேண்டும்; வழிபாடு, மருத்துவம், உணவு என எக்காரணம் கொண்டும் கொலை செய்யக்கூடாது என்பதை வலியுறுத்தினார். மக்கள் அனைவரும் ஆலய வழிபாட்டைக் கைக்கொண்டு தொடர்ந்து செய்துவர வேண்டும் என்பது இரண்டாவது கொள்கை. இவற்றையே தமது அடியவர்களிடமும், தன்னை நாடி வந்த பக்தர்களிடமும் சுவாமிகள் வலியுறுத்தினார்.

கந்தசாமி சுவாமிகள் சிறந்த சமயச் சொற்பொழிவாளர். நூல் அரங்கேற்ற உரைகள், வெள்ளிக்கிழமை சொற்பொழிவுகள், பல கோவில் விழாக்களில் பேருரைகள் என ஏராளமான சமயச் சொற்பொழிவுகளை நிகழ்த்தினார். சிரவையாதீனம் மூன்றாம் பட்டம் கஜபூசைச் சுந்தர சுவாமிகள், பேரூராதீனம் தவத்திரு சாந்தலிங்க ராமசாமி அடிகளார், தம்பி சுவாமிகள் என வழங்கப்பட்ட சிரவை மருதாசல சுவாமிகள், கவியரசு கு. நடேச கவுண்டர் ஆகியோர் கந்தசாமி சுவாமிகளின் மாணவர்கள். அவரிடம் தமிழ் இலக்கண, இலக்கியம் பயின்றவர்கள்.

கந்தசாமி சுவாமிகள் தலபுராணங்கள், கோவை, கலம்பகம், மாலை, அந்தாதி என மொத்தம் 14,539 பாடல்களை இயற்றியுள்ளார். கொங்கு நாட்டுப் புலவர்களிலேயே அதிகமான எண்ணிக்கையில் பாடல்களைப் பாடியவராக இவர் அறியப்படுகிறார்.

மறைவு
கந்தசாமி சுவாமிகளுக்கு நாளடைவில் நீரிழிவு நோய் ஏற்பட்டது. வலது காலில் ஏற்பட்ட புண்ணால் துன்புற்றார். சுவாமிகளின் முழங்காலுக்குச் சற்று மேலே துண்டிப்பதைத் தவிர வேறு வழியே இல்லை என மருத்துவர்கள் முடிவு செய்தனர். டிசம்பர் 09, 1948 அன்று அறுவை சிகிச்சை செய்து வலது கால் எடுக்கப்பட்டது. சுவாமிகள் விரைவில் குணமடைந்து விடுவார் என அனைவரும் எதிர்பார்த்தனர். ஆனால், எதிர்பாராத விதமாக மறுநாள் டிசம்பர் 10, 1948 அன்று சுவாமிகள் இறைவனடி சேர்ந்தார்.

சுவாமிகளின் சமாதி
கௌமார சபைக் கட்டடத்தில் முன்பே அமைக்கப் பெற்றிருந்த குகையின் ஒருபக்கத்தில் சுவாமிகளின் உடல் சமாதி செய்விக்கப்பட்டது.

குருபூஜை
சிரவையாதீனம் கௌமார மடாலயத்தில் ஆண்டுதோறும் சித்திரை மாதப் பூராடத்தன்று கந்தசாமி சுவாமிகளின் அவதார விழாவும், கார்த்திகை ரேவதியன்று குருபூஜையும் பக்தர்களால் சிரத்தையுடன் கொண்டாடப்படுகின்றன.

வாழ்க்கை வரலாற்று நூல்கள்
கந்தசாமி சுவாமிகளைப் போற்றி வாழ்க்கை வரலாற்று வண்ணம் (சிரவையாதீனம் சுந்தரசுவாமிகள் இயற்றியது), தோத்திரப் பதிகம், திருப்புகழ் (திருவாமாத்தூர் தி.செ. முருகதாச ஐயா இயற்றியது), பிள்ளைத்தமிழ், திருப்பள்ளியெழுச்சி, தாலாட்டு, காட்சி வேட்கைப் பத்து (கவியரசு கு. நடேச கவுண்டர் இயற்றியது) ஆகிய பனுவல்கள் இயற்றப்பட்டுள்ளன.

தமிழுக்கும் சமயத்துக்கும் அருந்தொண்டாற்றியவர்களுள் மறக்கக்கூடாத ஒருவர் கந்தசாமி சுவாமிகள்.
பா.சு. ரமணன்
Share: 




© Copyright 2020 Tamilonline