தம்மை நாடி வந்தவர்க்குக் கருணை உள்ளத்தோடு அருள்புரியும் மகான் ஸ்ரீ ராகவேந்திர சுவாமிகள். இவர் தமிழ்நாட்டில், சிதம்பரத்துக்கு அருகில் உள்ள புவனகிரியில், பொ.யு. 1595-ல், திம்மண்ணா பட்டர் - கோபிகாம்பாள் தம்பதியினருக்கு மூன்றாவது மகனாகப் பிறந்தார். திம்மண்ணா பட்டர் விஜயநகரப் பேரரசின் ஆஸ்தான பண்டிதராக இருந்தார். தலைக்கோட்டைப் போரைத் தொடர்ந்து ஏற்பட்ட பாதிப்புகளால் திம்மண்ணா பட்டர் புவனகிரிக்கு வந்து வசித்தார். கும்பகோணத்திலிருந்த ஸ்ரீ மத்வாச்சாரியாரின் மடத்தைச் சேர்ந்த ஸ்ரீ சுசீந்திர தீர்த்தர் திம்மண்ண பட்டரை ஆதரித்தார்.
இளமைப்பருவம் ஸ்ரீ ராகவேந்திரர் இளவயதிலேயே தந்தையை இழந்தார். குடும்பப் பொறுப்பை மூத்த சகோதரர் குருராஜன் ஏற்றுக்கொண்டார். ராகவேந்திரரின் அக்கா வேங்கடாம்பாள் கணவருடன் மதுரையில் வாழ்ந்து வந்தார். ராகவேந்திரர் கல்வி பயில்வதற்காக அங்கு அனுப்பி வைக்கப்பட்டார். அக்கா கணவரான லட்சுமி நரசிம்மர் ராகவேந்திரருக்கு ஆரம்பக் கல்வி போதித்தார். வேதம், சாஸ்திரம், புராணம், துவைத சித்தாந்தம் ஆகியவற்றைக் கற்றார் ராகவேந்திரர். அடுத்து மேற்படிப்பான குருகுலக் கல்விக்குத் தயாரானார்.
ஸ்ரீ ராகவேந்திரர் கும்பகோணத்தில் உள்ள ஸ்ரீ மத்வ மடத்தில் மேற்கல்விக்காகச் சேர்க்கப்பட்டார். அம்மடத்தின் குருவாகத் திகழ்ந்தவர் ஸ்ரீ சுசீந்திரர். சாஸ்திரங்களிலும், துவைத சித்தாந்தத்திலும் அளவற்ற புலமையுடையவர். அக்கால மேதைகளுள் ஒருவர். அவரிடம் குருகுலவாசமாக த்வைத சித்தாந்தத்தை விரிவாகக் கற்றார் ராகவேந்திரர். வேதம், உபநிடதம், புராணங்களுக்கு விளக்கம் சொல்லுமளவுக்கு உயர்ந்தார். மாணவராக இருக்கும்போதே 'நியாய சுதா' எனும் நூலுக்கு உரை எழுதி விளக்கமளித்தார். அதனால் குரு சுசீந்திரரால் 'சுதா பரிமளாச்சார்யர்' எனும் பட்டமளித்துச் சிறப்பிக்கப்பட்டார்.
வாத, விவாதங்கள் ஸ்ரீ ராகவேந்திரர், அத்வைத சந்நியாசி ஒருவரை எதிர்த்து வாதாடி த்வைத மார்க்கத்தை நிரூபித்ததனால் 'மஹாபாஷ்ய வேங்கடநாதாச்சார்யர்' என்று போற்றப்பட்டார். அத்வைதச் சார்புடைய யக்ஞ நாராயாணன் எனும் தஞ்சை அரண்மனைப் பண்டிதருடன் வாதாடி, த்வைதத்தை நிரூபித்து ஏற்றுக்கொள்ளச் செய்ததால் 'பட்டாச்சார்யார்' என்னும் பட்டம் அளிக்கப்பட்டுச் சிறப்பிக்கப்பட்டார்.
தனது அறிவாற்றலாலும், மேதைமையாலும் தனது குருவிற்கும், மடத்திற்கும், மத்வ சமயத்திற்கும் பெருமை சேர்த்து வந்தார் ராகவேந்திரர்.
திருமணம் ராகவேந்திரருக்கு சரஸ்வதி என்னும் பெண்ணுடன் திருமணம் நிகழ்ந்தது. ஓர் ஆண் குழந்தையும் பிறந்தது. அக்குழந்தைக்கு லட்சுமி நாராயணன் என்று பெயரிட்டு வளர்த்தனர்.
குருகுலம் ஸ்ரீ ராகவேந்திரர் மாணவர்களுக்குக் கல்வி போதிக்கும் ஆசானாக இருந்தார். சமரச மனப்பான்மை கொண்டிருந்த ராகவேந்திரரின் குருகுலத்துக் கல்வியை, ஆடு, மாடு மேய்க்கும் இடையர் இனத்தைச் சேர்ந்த மாணவர் ஒருவரும் மறைந்திருந்து கற்று வந்தார்.
ஒரு சமயம் ராகவேந்திரர் தான் நடத்திய பாடத்திலிருந்து எழுப்பிய கேள்விக்கு பிற மாணவர்களால் பதில் கூற முடியாதபோது, மறைந்திருந்து கேட்டுக் கொண்டிருந்த மாணவன் பதில் கூறினான். வியப்புற்ற ராகவேந்திரர், நடந்ததை அறிந்தார். அன்று முதல் அவன் நேரடியாகப் பிற மாணவர்களுடன் அமர்ந்து கற்கலாம் என ஆசிர்வதித்தார். ஆனால், இதனை அறிந்த பிற சிறுவர்களின் பெற்றோர் தங்கள் பிள்ளைகளைக் கற்க அனுப்ப மறுத்தனர். இத்தகைய வாழ்வியல் சிக்கல்களை ராகவேந்திரர் எதிர்கொண்டார்.
நாளடைவில் ராகவேந்திரரின் குடும்பத்தை வறுமை சூழ்ந்தது. உண்ண உணவு இல்லாத சூழல் வந்ததால் ராகவேந்திரர் குடும்பத்துடன் கும்பகோணம் மத்வ மடத்திற்குச் சென்றார். குரு அவரை வரவேற்று அருகில் உள்ள இல்லத்தில் தங்கவைத்து ஆதரித்தார்.
துறவு சுதீந்திரர் தனக்குப் பிறகு மடாதிபதியாகும் தகுதி ராகவேந்திரர் ஒருவருக்கே உரியது என்று கருதினார். ஆனால், அவர இல்லறத்தாராக இருந்ததால் வலியுறுத்தாமல் இருந்தார். ஆனாலும் மனதுக்குள் அது குறித்து எப்போதும் எண்ணி வந்தார். நாளடைவில் ராகவேந்திரர் துறவறம் ஏற்று மடாதிபதியாவது என்பது தன்னுடைய விருப்பம் மட்டுமல்ல, அது இறைவனின் விருப்பமும் என்பதை ஸ்ரீ சுதீந்திரர் உணர்ந்தார். அதனால் தன்னுடைய எண்ணத்தை ஒருநாள் ஸ்ரீ ராகவேந்திரரிடம் வெளியிட்டார்.
ஆனால், ராகவேந்திரரோ மனைவி குழந்தையுடன் உள்ள தான் எவ்வாறு மடாதிபதியாகப் பொறுப்பேற்க முடியும் என எண்ணினார். அதனால் குழப்பத்தில் ஆழ்ந்தார்.
இந்நிலையில் ஒருநாள் ஸ்ரீ ராகவேந்திரரின் கனவில் தோன்றிய அன்னை கலைவாணி, "உன்னைப் பூரண ஞானியாக்கினேன். நீ ஞானச் சக்கரவர்த்தியாய், ஞானிகளுக்கெல்லாம் தலைவனாக நீ விளங்குவாய்" என்று கூறி, அவரைத் துறவறம் ஏற்க ஆசிர்வதித்தார்.
குருவின் விருப்பமும், தெய்வத்தின் கட்டளையும் ஒரே மாதிரியாக அமைந்ததால் ஸ்ரீராகவேந்திரர் துறவு மேற்கொள்ள முடிவு செய்தார். மகன் லட்சுமி நாராயணனுக்கு உபநயனம் செய்து வைத்தார். பின் தன் மகனையும், மனைவியையும் அண்ணன் குருராஜன் பொறுப்பில் ஒப்படைத்துவிட்டுத் துறவுக்குத் தயாரானார்
இந்நிலையில், ஸ்ரீ ராகவேந்திரர் இல்லறத்தைத் துறக்கப் போவதை அறிந்த அவரது மனைவி சரஸ்வதி மனம் பொறுக்காமல் தற்கொலை செய்து கொண்டார். இதனால் சரஸ்வதியின் ஆன்மா ஆவியாக அலைந்தது. ஸ்ரீ ராகவேந்திரர் சரஸ்வதியின் ஆன்மாவிற்கு நற்கதி அளித்தார்.
குருவின் ஆக்ஞைப்படி நல்லதொரு நாளில் ஸ்ரீ ராகவேந்திரர், அனைத்தையும் துறந்த துறவி ஆனார். தஞ்சாவூரில் 'ரகுநாத பூபாலர்' அரசாண்டபோது ஸ்ரீ ராகவேந்திரர் மத்வ மடப் பீடாதிபதி பொறுப்பை ஏற்றார். அதுவரை ஸ்ரீ ராகவேந்திரருக்கு 'வேங்கடநாதன்' என்பதே இயற்பெயராக இருந்தது. அவர் துறவு பூண்டபோது சூட்டப்பட்ட பெயர்தான் 'ஸ்ரீ ராகவேந்திரர்' என்பது.
தல யாத்திரை சிறிது காலம் கும்பகோணத்தில் தங்கி மடாதிபதியாக இருந்த ஸ்ரீ ராகவேந்திரர் பின் தல யாத்திரை மேற்கொள்ள விரும்பினார். தமிழ்நாடு, ஆந்திரா, கர்நாடகாவில் உள்ள பல திருத்தலங்களுக்குச் சென்றார். மக்களிடம் பக்தி மார்க்கத்தைப் பரப்பினார். பிற சமயத்தினரிடம் தர்க்கம் செய்து த்வைதத்தை நிலைநாட்டினார்.
அற்புதங்கள் ஸ்ரீ ராகவேந்திரர் பல்வேறு அற்புதங்களைச் செய்தார். ஒரு சமயம் ஸ்ரீராகவேந்திரர் சீடர்களுடன் காட்டு வழியாகச் சென்று கொண்டிருந்தார். அப்போது ஒரு சீடரைக் கருநாகம் தீண்டிவிட்டது. இதனால் அச்சீடர் இறந்தார். உடன் ஸ்ரீ ராகவேந்திரர் கருட மந்திரத்தை ஜபித்துக் கொடிய விஷத்தை இறக்கினார். சீடர் உயிர் பிழைத்தார்.
★★★★★
ஸ்ரீ ராகவேந்திரர் யாத்திரை மேற்கொண்ட சமயத்தில் கிரீடகிரி எனும் ஊருக்கு வந்தார். அந்த ஊரின் கிராம அதிகாரி வேங்கட தேசாய். வேங்கட தேசாய்க்கு ஒரு மகன் இருந்தான். அவ்வூருக்கு ஸ்ரீ ராகவேந்திரர் வந்ததை அறிந்த வேங்கடதேசாய் அவரைத் தன் வீட்டிற்கு விருந்து கொடுப்பதற்காக அழைத்திருந்தார்.
குறிப்பிட்ட நாளில் ஸ்ரீ ராகவேந்திரருக்கும் மற்ற சீடர்களுக்கும் விருந்து கொடுப்பதற்காக உணவு தயாரிக்கப்பட்டது. அவர்களுக்குப் பரிமாறுவதற்காக மாம்பழச் சாறு பெரியதொரு பாத்திரத்தில் வைக்கப்பட்டிருந்தது. வேங்கடதேசாய் மகன் கவனக்குறைவால் மாம்பழச் சாறு இருந்த பாத்திரத்தில் விழுந்து விட்டான். யாரும் கவனிக்காததால் சிறிது நேரத்தில் இறந்து விட்டான். அதனை வெகு நேரம் கழித்தே அறிந்தார் வேங்கட தேசாய்.
சாஸ்திரப்படி இறந்த வீட்டில் இறையடியவர்களுக்கு விருந்து கொடுத்தல் கூடாது. ஆனால் வேங்கடதேசாய் ஸ்ரீராகவேந்திரர் மேலிருந்த பற்றுதலால் தன் மகன் இறந்ததைப் பொருட்படுத்தாமல் விருந்துக்கு ஏற்பாடு செய்தார். மகன் இறந்த செய்தியை விருந்து முடிந்ததும் கூறலாம் என எண்ணினார். ஆனால் இல்லத்தில் நுழையும்போதே முக்காலமும் உணர்ந்த ஸ்ரீ ராகவேந்திரர் வேங்கட தேசாய் மகன் இறந்ததை உணர்ந்தார். வேங்கட தேசாயிடம் இறந்த சிறுவனின் உடலைத் தன்முன் கொண்டு வரும்படி பணித்தார்.
உடல் கிடத்தப்பட்டதும் ஸ்ரீ ராகவேந்திரர் ஸ்ரீமூலராமரை தியானித்தார். பின் தீர்த்தம் எடுத்து வேங்கட தேசாயின் குழந்தைமீது தெளித்தார். குழந்தை உயிர் பெற்றது. அனைவரும் வியந்தனர். மகிழ்ந்தனர். வேங்கடதேசாய் தன் கிராமத்தை ஸ்ரீ ராகவேந்திரர் மடத்துக்கு மானியமாக வழங்கினார்.
ஜீவ சமாதி இவ்வாறு வாழ்வாங்கு வாழ்ந்து மக்களுக்குப் பல நன்மைகளைச் செய்த ஸ்ரீ ராகவேந்திர சுவாமிகள், விரோதிகிருது வருடத்தில், பொ.யு. 1671ம் ஆண்டில், ஆவணி மாதத்துக் கிருஷ்ணபட்ச த்விதியை திதியில் வியாழக்கிழமை அன்று மாஞ்சாலி கிராமத்தில் உள்ள மந்த்ராலயம் தலத்தில், ஜீவ சமாதி அடைந்தார். அவரது உடல் பக்தர்களால் சமாதி செய்விக்கப்பட்டது. சமாதிக்கு முன் ஸ்ரீ ராகவேந்திரர் பக்தர்களிடம், "என் உடல் அடக்கம் செய்யப்பட்ட பின்னரும் எனது சமாதி உயிர்ப்புடன் விளங்கும்; தேவையானவருக்கு, தேவையான சமயத்தில் தக்க வழி காட்டும்" என்று கூறியருளினார்.
மந்த்ராலயத்தின் காவல் தெய்வமாக மாஞ்சாலம்மன் இருக்கிறார். அவரைத் தரிசனம் செய்தபின்பே மந்த்ராலய மகான் ஸ்ரீ ராகவேந்திரரைத் தரிசிக்க வேண்டும் என்பது ஐதீகம். ஆந்திராவில் துங்கபத்திரா நதிக்கரையில் மந்த்ராலயம் அமைந்துள்ளது. அது பூர்வ காலத்தில் பிரஹலாதன் யாகம் செய்த இடம். அதனால் அந்த இடத்தைத் தனது சமாதிக்குத் தேர்ந்தெடுத்தார் ஸ்ரீ ராகவேந்திரர்.
அவதாரப் பெருமை வாழும் காலத்தில் மக்களால் மகான்களாகப் போற்றப்பட்டவர்கள் இறைவனின் அம்சங்களாகவும், இறை அடியார்களின் அம்சங்களாகவும் மக்களால் வழிபடப்பட்டனர். அந்த வகையில் ஸ்ரீ ராகவேந்திரர் கிருத யுகத்தில் பிரஹலாதனாகவும், கலியுகத்தில் ஸ்ரீ வியாஸராஜராகவும் அவதரித்ததாகக் கூறப்படுகிறது.
ஜீவசமாதி ஆன பின்னரும் மகான் ராகவேந்திரர் பலரது வாழ்வில் பல்வேறு அற்புதங்களைச் செய்தார். அவற்றுள் ஒன்று குறிப்பிடத்தகுந்தது. மகான் மறைந்து 140 வருடங்களுக்குப் பிறகு, கி.பி. 1812ம் ஆண்டு. பிரிட்டிஷ் அரசு ஒரு சட்டம் இயற்றியது. அந்தச் சட்டத்தின் மூலம் கோயில் இடத்திற்கான வாரிசுகள் யாரும் இல்லை என்றால் அந்த இடத்தை அரசாங்கமே எடுத்துக் கொள்ளலாம் என்று அறிவித்தது. அந்தச் சட்டத்தின் மூலம் பிருந்தாவனத்துக்கு தானமாகக் கொடுக்கப்பட்டிருந்த நிலமானியம் முடிவுக்கு வரும் நிலை ஏற்பட்டது. ஆனால் பொதுமக்கள் அதற்கு எதிர்ப்புத் தெரிவித்தனர். பல ஆண்டுகளுக்கு முன்னால் அப்பகுதியை ஆண்ட சுல்தான், ஸ்ரீ ராகவேந்திரருக்கு தானமாக வழங்கிய இவ்விடத்தை அரசு கையகப்படுத்தக் கூடாது என்று அவர்கள் எதிர்த்தனர். அதனால் பிரிட்டிஷ் அரசு அப்போது பெல்லாரி மாவட்ட ஆட்சியாளராக இருந்த சர் தாமஸ் மன்றோ தலைமையில் ஒரு குழுவை நியமித்து நிலைமையைச் சரிசெய்யச் சொல்லி உத்தரவிட்டது.
மன்றோ தனது குழுவினருடன் ஆலயத்துக்கு விரைந்தார். ஆலயத்தின் நுழைவாயிலில் ஷூவையும், தொப்பியையும் கழற்றிவிட்டு பிருந்தாவனத்தை நோக்கிச் சென்றார். ஜீவசமாதி அருகே சென்ற மன்றோ யாரோ அங்கு இருப்பது போல் வணக்கம் செலுத்தினார். பின் சத்தமாக உரையாட ஆரம்பித்தார்.
அவருடன் வந்திருந்த குழுவினருக்கு ஒன்றுமே புரியவில்லை. காரணம், அங்கே மன்றோவைத் தவிர எதிரே யாருமே இல்லை. ஆனால் மன்றோவோ யாரோ எதிரில் நின்று கொண்டு பேசிக் கொண்டிருப்பது போலச் சரளமாக ஆங்கிலத்தில் பேசிக் கொண்டிருந்தார். ஆலயம் பற்றி, அதை தானமாக அளித்தது பற்றி, ஆங்கிலேய அரசு வெளியிட்டிருக்கும் அறிவிப்பு பற்றி எல்லாம் அவர் யாரிடமோ விரிவாக விளக்கிக் கொண்டிருந்தார்.
அவர் யாரிடம் பேசுகிறார், எதற்குப் பேசுகிறார், ஒருவேளை திடீர் சித்தப்பிரமை ஏதும் ஏற்பட்டு விட்டதா என்றெல்லாம் என்ணிய குழுவினர் ஒன்றுமே புரியாமல் திகைத்துப் போய் நின்று கொண்டிருந்தனர்.
வெகு நேரம் கழித்து தனது உரையாடலை முடித்துக் கொண்டு தங்கள் ஆங்கிலேயப் பாணியில் அந்த பிருந்தாவனத்துக்கு ஒரு சல்யூட் வைத்து விட்டு வெளியே வந்தார் மன்றோ.
அதுவரை திகைத்துப் போயிருந்த குழுவினர், அவரிடம் யாரிடம் பேசிக் கொண்டிருந்தீர்கள் எனக் கேட்டனர்.
அதற்கு மன்றோ, "பிருந்தாவனத்தின் அருகே காவி உடை அணிந்து ஒளி வீசும் கண்களுடன் உயரமாக ஒருவர் நின்று கொண்டிருந்தார். அவருக்கு நான் அரசு மான்யம் பற்றி சில விளக்கங்களை அளித்தேன். அவரும் என்னிடம் அது குறித்து உரையாடி மடத்தின் சொத்து பற்றிய சரியான விளக்கத்தைத் தந்துவிட்டார். இந்த இடம் மடத்துக்குத்தான் சொந்தம் என்பதில் எந்த ஐயமுமில்லை" என்றார். மேலும் அந்த மனிதரது ஒளி வீசும் கண்கள் பற்றியும், அவரது கம்பீரக் குரல் பற்றியும் செழுமையான ஆங்கில உச்சரிப்புப் பற்றியும் வியந்து கூறியவர், "ஏன், நீங்கள் அவரைக் காணவில்லையா?" என்று கேட்டார் குழுவினரைப் பார்த்து.
தங்கள் கண்களுக்கு அங்கு யாருமே தெரியவில்லை என்று கூறிய அவர்கள், மன்றோவுடன் உரையாடியது சாட்சாத் ஸ்ரீ ராகவேந்திரர்தான் என்பதை அவருக்கு உணர்த்தினர்.
கடந்த நூற்றாண்டில் காலமான மகான் தன்முன் நேரில் தோன்றி அதுவும் தன் மொழியான ஆங்கிலத்திலேயே பேசிப் பிரச்சனையைத் தீர்த்த விதம் கண்டு பிரமித்தார் சர் தாமஸ் மன்றோ. தனக்குக் கிடைத்த பாக்கியத்தை எண்ணி மகிழ்ந்தார். அரசுக்கும் ஆளுநருக்கும் அந்த இடம் மடத்துக்குச் சட்டப்படி உரிமை உள்ள நிலம் என்று தகவல் அனுப்பியதுடன் அன்று முதல் ஸ்ரீ ராகவேந்திரரின் பக்தராகவும் ஆகிப் போனார்.
விரைவிலேயே மன்றோ தாற்காலிக ஆளுநராகப் பொறுப்பேற்கும் நிலை வர, அவர் கையெழுத்திட்ட முதல் கோப்பு, மடத்துக்கு நிலம் அளிப்பது தொடர்பானதுதான். இந்தச் சம்பவங்கள் அப்போதைய சென்னை மாகாண கெஜட்டிலும் (அரசு ஆவணக் குறிப்பு) வெளியாகியுள்ளது என்பது குறிப்பிடத்தக்கது.
நூல்கள் மனிதர்களிடையே பக்தி பெருகவும், சிந்தனை மேன்மையடையவும், மனப்பூர்வமாக இறைவனை உணரவும் பல நூல்களை இயற்றினார். ஸ்ரீமத்வாச்சார்யார், விஜயேந்திரர்,ஸ்ரீசுசீந்திரர் ஆகியோரின் மூலநூல்களுக்கு உரைகளாகவும், விளக்கத்திற்கு விளக்கமாகவும் அவரது நூல்கள் அமைந்தன.
பிரம்ம சூத்ரம்: தந்த்த தீபிகா, நியாய முக்தாவளி, தத்வ மஞ்சரி, தத்வ ப்ரகாசிகா பாவதீப, தாத்பர்ய சந்த்ரிகா ப்ரகாச, ந்யாய ஸுதா பரிமள கீதை: கீதா பாஷ்ய ப்ரமேய தீபிகா, கீதா தாத்பர்ய தீபிகா, கீதா விவ்ருதி உபநிடதங்கள்: ஈசாவாஸ்ய உபநிஷத், கேன உபநிஷத், முண்டக உபநிஷத், மாண்டூக்ய உபநிஷத், காடக உபநிஷத், ஐதரேய உபநிஷத், தைத்ரீய உபநிஷத், சாந்தோக்ய உபநிஷத், ப்ருஹதாரண்யக உபநிஷத் , ப்ரச்ன உபநிஷத் தத்வ ஸங்க்யானம், தத்வோத்போதம், விஷ்ணு தத்வ நிர்ணயம், கதா லக்ஷணம், ப்ரமாண லக்ஷணம், கர்ம நிர்ணயம், டிப்பணி ப்ரமாண பத்ததி வ்யாக்யானம், வாதாவளி வ்யாக்யானம், தர்க்க தாண்டவ ந்யாய தீப பொதுவான நூல்கள்: மஹாபாரத தாத்பர்ய நிர்ணயம், பாவ ஸங்க்ரஹ, கூட-பாவ-ப்ராகசிகா, பாட்ட ஸங்க்ரஹ, ராம சாரித்ர மஞ்சரி, கிருஷ்ண சாரித்ர மஞ்சரி, ப்ராத ஸங்கல்ப கத்யம் ஸ்ரீ ராகவேந்திரர் துதி: பூஜ்யாய ராகவேந்த்ராய, ஸத்ய தர்ம ரதாயச, பஜதாம் கல்ப வ்ருக்ஷாய, நமதாம் காமதேனவே |