அரு. சோமசுந்தரன் என்னும் அருணாசலம் சோமசுந்தரன், கவிஞர், எழுத்தாளர், மொழிபெயர்ப்பாளர், சொற்பொழிவாளர். இவர் ஆகஸ்ட் 14, 1936 அன்று, அன்றைய ராமநாதபுரம் மாவட்டம் (இன்றைய சிவகங்கை) புதுவயலில், முத்துராமன்–மீனாட்சி இணையருக்குப் பிறந்தார். அருணாசலம் – வள்ளியம்மை இணையருக்குத் தத்துக் கொடுக்கப்பட்டார். புதுவயலில் உள்ள ஸ்ரீ சரஸ்வதி வித்தியாசாலையில் ஆரம்பக் கல்வி பயின்றார். கண்டனூரில் உள்ள சிட்டாளாச்சி உயர்நிலைப் பள்ளியில் உயர்கல்வி கற்றார். கல்லூரிப் படிப்பைக் காரைக்குடி அழகப்பா கல்லூரியில் கற்றார். அதில் மாநில அளவில் முதலாவதாகத் தேறி 'ஜி.யு. போப் தங்கப்பதக்கம்' பெற்றார்.
சேலம் மாவட்டம் குமாரபாளையத்தில் உள்ள அரசினர் பயிற்சிக் கல்லூரியில் பயின்று கல்வியியலில் பி.டி. பட்டம் பெற்றார். தமிழில் முதுகலைப் பட்டமும் பெற்றார். 1958-ல், மதுரையில், 'பாங்க் ஆஃப் மதுரை' நிறுவனத்தில் எழுத்தராகப் பணியாற்றத் தொடங்கிய அரு. சோமசுந்தரன், பின்னர் சிலகாலம், திருவாரூரிலும், தேவகோட்டையிலும் பள்ளி ஆசிரியராகப் பணியாற்றினார். 1963-ல் உயர்நிலைப் பள்ளித் தலைமை ஆசிரியராகப் பணிபுரிந்தார். 1967 ஜூன் முதல் காரைக்குடியில் உள்ள 'செட்டிநாடு தனிப் பயிற்சிக் கல்லூரி'யில் முதல்வராகப் பணியாற்றினார்.
அரு. சோமசுந்தரன் இளவயது முதலே கவிதையார்வம் கொண்டு விளங்கினார். நூலகங்களில் வாசித்தும், கல்லூரி நூலகம் மூலம் இலக்கிய ஆர்வம் பெற்றார். முதல் கவிதை 1952-ல் வெளியானது. தொடர்ந்து இதழ்களிலும், மலர்களிலும் பல்வேறு கவிதைகளை எழுதினார். முதல் கவிதைத் தொகுப்பு 1962-ல் வெளியானது. தொடர்ந்து பல தொகுப்புகள் வெளிவந்தன.
மதுரை மீனாட்சி அம்மன் கோயிலில் தமிழக அரசின் சார்பில் நடத்தப்பட்ட பொற்கிழி காவியப் போட்டியில் 'பாண்டிமாதேவி' என்னும் காப்பிய நூலுக்காக, அரு. சோமசுந்தரன், அப்போதைய முதல்வர் மு. கருணாநிதியிடமிருந்து முதல் பரிசு பெற்றார். அதுமுதல் 'பொற்கிழிக் கவிஞர்' என்று போற்றப்பட்டார். 'அன்னை மீனாட்சி அந்தாதி', 'ஸ்ரீ குரு தட்சணாமூர்த்தி பிள்ளைத்தமிழ்', 'காசி-ராமேசுவரம் வெண்பா', 'காசி-ராமேசுவரம் அந்தாதி' போன்ற பல ஆன்மீகச் சிற்றிலக்கிய நூல்களை எழுதினார். தொடர்ந்து யாத்திரைப் பாடல்கள், அந்தாதி, பிள்ளைத்தமிழ், பக்திப் பாடல்கள் எனப் பதினைந்தாயிரத்திற்கும் மேற்பட்ட பாடல்களை எழுதிக் குவித்தார்.
அரு. சோமசுந்தரன் நீலாவை மணம் செய்துகொண்டார். பிள்ளைகள்: பொன்முடி, இளவெயினி, மங்கையர்க்கரசி மீனாட்சி. இவர் கவிதைகள் மட்டுமல்லாமல், சிறுகதைகள், நாவல்கள், நாடகங்கள் பலவற்றை எழுதினார். ஷேக்ஸ்பியரின் நூல்கள் பலவற்றைத் தமிழில் மொழிபெயர்த்தார். வெளிநாடுகள் பலவற்றுக்குப் பயணம் சென்று வந்தார். அவ்வாறு தான் சென்று வந்த 18 நாடுகள் பற்றிப் பயணக் கட்டுரை நூல்களை எழுதினார். அரு. சோமசுந்தரனின் 'உயர்கல்வி தந்த உத்தமர்கள்' நூல், தமிழ்நாட்டின் ஒன்பது மற்றும் பத்தாம் வகுப்பு மாணவர்களுக்குப் பாட நூலாக வைக்கப்பட்டது.
அரு. சோமசுந்தரன் நூல்களில் சில: அருசோ கவிதைகள் (ஆறு தொகுதிகள்), அருசோ வாழ்க்கைப் பயணம், இராமாயணம், மகாபாரதம், கந்தபுராணம், இரண்டாம் ரிச்சர்டு, மாக்பெத், அந்தோணியும் கிளியோபாட்ராவும், எண்ணிய எண்ணியாங்கு, பன்னிரண்டாம் இரவு, வெனிஸ் வியாபாரி, மன்னர் லியர், ஒதெல்லோ, ஜூலியஸ் சீசர், புயல், ஹாம்லெட் மற்றும் பல.
அரு. சோமசுந்தரன், இலக்கியத் திறனாய்வு, பயணக் கட்டுரை, ஆன்மீகம், வாழ்க்கை வரலாறு எனப் பலதுறைகளில் நூற்றுக்கும் மேற்பட்ட நூல்களை எழுதினார். பல கருத்தரங்குகளிலும், மாநாட்டு நிகழ்வுகளிலும், தமிழ்ச்சங்க நிகழ்வுகளிலும் கலந்துகொண்டு கவிதைகள் வாசித்தார். பொன்முடி பதிப்பகம் என்ற நிறுவனத்தைத் தொடங்கினார். அதன் மூலம் தனது நூல்கள் பலவற்றை வெளியிட்டார்.
மிகுந்த ஆன்மீக ஈடுபாடு கொண்டிருந்த அரு. சோமசுந்தரன், பல ஆன்மீக சுற்றுப்பயணங்களை ஒருங்கிணைத்து நடத்தினார். 1983-ல், பதிமூன்று பேர் கொண்ட குழுவினரைத் தன்னுடன் அழைத்துக் கொண்டு, பாரம்பரிய முறைப்படி காசிக்கு பாதயாத்திரை சென்றார். காசி விஸ்வநாதர் கோயிலில் உத்திரபிரதேச அரசு வழங்கும் 'காசிஸ்ரீ' பட்டம் பெற்றார். தொடர்ந்து அறுபடை வீடுகளுக்கும் காவடிகளுடன் பாதயாத்திரை சென்றார்.
இந்நிலையில் அரு. சோமசுந்தரனுக்கு கதாகாலட்சேபத்தின் மீது ஆர்வம் திரும்பியது. 1974 முதல் பாண்டிமாதேவி மங்கையர்க்கரசி, மதுரை மீனாட்சி, சிலப்பதிகாரம், இராமாயணம், மகாபாரதம், இலக்கியம், ஆன்மீகம் சார்ந்து பல கதாகாலட்சேப நிகழ்வுகளை நடத்திப் புகழ் பெற்றார்.
அரு. சோமசுந்தரன், தனது ஆன்மீக, இலக்கியப் பணிகளுக்காகப் பல்வேறு விருதுகளைப் பெற்றார். குன்றக்குடி அடிகளார் அளித்த 'பல்துறைச் செந்நாப் பாவலர்' பட்டம், குன்றக்குடி அடிகளார் வழங்கிய 'கவிக்கோ' பட்டம், தமிழக அரசு அளித்த பொற்கிழி, உத்திரப்பிரதேச அரசு வழங்கிய 'காசிஸ்ரீ' பட்டம், காரைக்குடி நாடகத் தமிழ் மன்றம் அளித்த கலையரசர் விருது உள்படப் பல்வேறு விருதுகள் அவற்றுள் குறிப்பிடத்தகுந்தவை.
தன் வாழ்நாள் இறுதிவரை ஆன்மீக, இலக்கியப் பணிகளை முன்னெடுத்து வந்த அரு. சோமசுந்தரன், டிசம்பர் 30, 2023 அன்று காலமானார்.
தமிழர்கள் நினைவில் நிறுத்த வேண்டிய முன்னோடிகளுள் ஒருவர் அரு. சோமசுந்தரன். |