Thendral Audio Advertise About us
New User? | Forgot Password? | Email: Password: Login
Current Issue | Previous Issues | Author Index | Category Index | Organization Index | E-Magazine | Classifieds | Digital Downloads
By Category:
சின்னக்கதை | சமயம் | சினிமா சினிமா | இளந்தென்றல் | கதிரவனை கேளுங்கள் | ஹரிமொழி | நிகழ்வுகள் | மேலோர் வாழ்வில் | மேலும்
May 2024 Issue
எழுத்தாளர் | Events Calendar | நிகழ்வுகள் | சிறப்புப் பார்வை | முன்னோடி | கதிரவனை கேளுங்கள் | பொது | சிறுகதை | சின்னக்கதை
Tamil Unicode / English Search
முன்னோடி
மு.சித. பெத்தாச்சி செட்டியார்
- பா.சு. ரமணன்|மே 2024|
Share:
"எங்கள் சங்கத்தின் எழிற்புரவலனாய்
ஆயிரம் ஆயிரம் ஆயமாப் பொருளொடு
எண்ணில் அடங்கா தியல் நூலும்
பிறவும் அருளிய அறவுரு வாய
பெத்தாச்சி யாம் நற்றமிழ் வள்ளல்"


என்று கரந்தை தமிழ்ச் சங்கத்தால் பாராட்டப்பட்டவர் மு.சித. பெத்தாச்சி செட்டியார். முத்தையா சிதம்பரம் பெத்தாச்சி செட்டியார் பிப்ரவரி 08, 1889-ல், இன்றைய சிவகங்கை மாவட்டம் கானாடுகாத்தானில் பிறந்தார். தந்தை சா.ரா.மு. சிதம்பரம் செட்டியார்.

அறப்பணிகள்
பெத்தாச்சி செட்டியார் கரூரில் கல்வி பயின்றார். பரம்பரையாக தனக்குக் கிடைத்த செல்வத்தைக் கொண்டு பல்வேறு அறப்பணிகளைச் செய்தார். கரூருக்கு அருகில் விலைக்கு வந்த ஆண்டிப்பட்டி ஜமீனை வாங்கிய பெத்தாச்சி செட்டியார், அதனை நிர்வகிக்கக் கரூரில் ஒரு தோட்ட விடுதி ஒன்றை ஏற்படுத்தி அங்கேயே தங்கினார். கரூரிலுள்ள பசுபதீஸ்வரர் ஆலயம் சிதிலமடைந்திருந்ததைக் கண்டு மனம் வருந்தி, அதனைத் தன் செலவில் புதுப்பித்தார். சுற்றுச்சுவர்கள் எழுப்பி, ஆலயத்தைச் சீரமைத்துக் குடமுழுக்கு நிகழ்த்தினார். ஆலயப் பணியாளர் வசிப்பதற்காக மடவளாகத் தெருக்களை ஏற்படுத்தினார். அதுபோல வெண்ணைமலை பாலசுப்ரமணிய சுவாமி ஆலயத்திற்கும் திருப்பணிகள் செய்து உதவினார்.



ஆண்டிப்பட்டி ஜமீந்தாராக விளங்கிய பெத்தாச்சி செட்டியார் உதவி என்று கேட்டு வந்த ஏழை, எளியவர்களுக்குப் பல உதவிகளைச் செய்தார். கரூர் நகராட்சியின் முதல் தலைவராகப் பணியாற்றினார். கரூர் நகராட்சியில் ஏழைகளுக்கு வரிவிதிப்பில் விலக்களித்தார். அக்கால கட்டத்தில் கவர்னராக இருந்த வெலிங்டன் பிரபு மற்றும் அவர் மனைவி இருவரையும் கரூருக்கு அழைத்து நகராட்சி மூலம் சிறந்த வரவேற்பளித்தார். அவர்கள் வருகை நினைவாக ஞாபகார்த்த வளைவு (ஆர்ச்) ஒன்றையும் கட்டினார். அந்த வளைவானது, ஏப்ரல் 11, 1971 அன்று பெயர் மாற்றம் செய்யப்பட்டு இன்றுவரை பெத்தாச்சி செட்டியார் பெயராலேயே அழைக்கப்பட்டு வருகிறது.

தமிழ்ப் பணி
மிகுந்த தமிழ்ப் பற்றுக் கொண்டிருந்த பெத்தாச்சி செட்டியார், தமிழ்ப் புலவர்களுக்கும், தமிழ் வளர்ச்சிக்கும் நிறைய நிதி உதவினார். பாண்டித்துரைத் தேவர் நிறுவிய மதுரைத் தமிழ்ச் சங்கத்தின் துணைத் தலைவராக நான்காண்டுகள் பணியாற்றினார். அச்சங்கத்திற்குப் பல்லாயிரக் கணக்கான ரூபாய் பொருளுதவி செய்தார். தமிழ், சம்ஸ்கிருதம் எனப் பன்மொழி நூல்கள் அச்சாக நிதி உதவினார். பெத்தாச்சிச் செட்டியாரின் நிதிக் கொடையால் பல மாத இதழ்கள் வெளியாகின.

கரந்தை தமிழ்ச் சங்கத்திற்குப் பல விதங்களிலும் நிதி உதவி ஆதரித்தார். கரந்தை தமிழ்ச சங்கக் கட்டடம் கட்ட, நிலம் வாங்க பெத்தாச்சிச் செட்டியாரே பொருளுதவி செய்தார். தமது ஜமீன் புலவர் திருஞானசம்பந்தக் கவிராயரைத் தஞ்சையில் தங்கச் செய்து, கரந்தை தமிழ்ச் சங்கத்திற்கு வேண்டிய உதவிகளைச் செய்யுமாறு பணித்தார். அதற்கான அனைத்துச் செலவுகளையும் தாமே ஏற்றுக் கொண்டார். அச்சங்கத்திற்குப் பெருமளவில் தமிழ் நூல்களை நன்கொடையாக வழங்கினார். அதனால் தான் 'எங்கள் சங்கத்தின் எழிற்புரவலனாய்' என்று சங்கத்தாரால் பாரட்டப்பட்டார். நூலகத்திற்கும் பெத்தாச்சி செட்டியாரின் நினைவாக 'பெத்தாச்சி புகழ் நிலையம்' என்ற பெயர் சூட்டப்பட்டது.

இக்காரணங்களால் அவர் பெத்தாச்சி வள்ளல் என்று போற்றப்பட்டார். பாளையங்கோட்டை சைவ சபைக்குப் பெரும் பொருளுதவி அளித்தார். பெத்தாச்சி செட்டியார் இசைமீது மிகுந்த ஆர்வம் கொண்டவர். ஹரிகேச நல்லூர் முத்தையா பாகவதர் உள்ளிட்ட பலரை ஆதரித்தார். முத்தையா பாகவதரை கரூருக்கு வரவழைத்துப் பல கச்சேரிகள் நிகழ்த்த ஏற்பாடு செய்தார். பல இடங்களிலிருந்தும் பன்னீரை வரவழைத்து பாகவதரை புனித நீராட்டி மகிழ்ந்தார். மகாவித்துவான் மு. இராகவையங்கார், அரசஞ்சண்முகனாரின் மாணவர் ம. கோபாலகிருஷ்ண ஐயர் உள்ளிட்ட பல தமிழறிஞர்களுக்கு நிதிக்கொடை அளித்து அவர்களது தமிழ்ப் பணியை ஊக்குவித்தார்.



கல்விப் பணிகள்
பெத்தாச்சி செட்டியார் சிறந்த கல்வி வள்ளலாகத் திகழ்ந்தார். நூற்றுக்கும் மேற்பட்ட மாணவர்கள் கற்பதற்காக, தம் வாழ்நாள் இறுதிவரை நிதி உதவி அளித்தார். ஸ்ரீரங்கம் பள்ளிக்கு நிதிக்கொடை அளித்தார், திருச்சி தேசியக் கல்லூரிக்குப் பெருநிதி அளித்து அதன் தோற்றத்திற்கும் நிலை பேற்றிற்கும், வளர்ச்சிக்கும் உறுதுணையாக இருந்தார். சென்னை விவேகானந்தா கல்லூரிக்குப் பெருஞ் செல்வத்தைக் கொடையாகக் கொடுத்து ஆதரித்தார். பல்வேறு கல்வி நிறுவனங்களுக்கு, மாணவர்களுக்கு, ஆசிரியர்களுக்கு நிதி உதவிகள் அளித்து ஊக்குவித்தார்.

மறைவு
பெத்தாச்சி செட்டியார் கரூரையும், திருமாநிலையூரையும் இணைக்கும் விதத்தில் இடையில் ஒரு பாலம் அமைக்க ஏற்பாடுகள் செய்தார். அதற்குப் பெரும் பொருளுதவி செய்தார். ஆனால், 1919ல் தொடங்கப்பட்ட அந்தப் பாலம் கட்டி முடிக்கும் பணி நிறைவடையும் முன்பே, ஏப்ரல் 30, 1924-ல் தனது 35ம் வயதில் காலமானார். பெத்தாச்சி செட்டியாரின் மறைவுக்குப் பின், அவருடைய வழக்கறிஞர் சர். தேசிகாசாரியார், ஜில்லா போர்டின் தலைவராக இருந்தபோது, பாலம் கட்டி முடிக்கப்பட்டு மக்கள் பயன்பாட்டுக்கு வந்தது. இப்போது அப்பாலத்திற்கு நூற்றாண்டு.

தம் வாழ்நாள் முழுவதுமே பிறருக்கு நிதி உதவியும், அமைப்புகளை உருவாக்கியும், ஊக்குவித்தும் வாழ்ந்த பெத்தாச்சி செட்டியார் என்றும் நினைவில் வைக்கத்தக்க முன்னோடி.

(தகவல் உதவி: நகரத்தார் கலைக்களஞ்சியம், மெய்யப்பன் தமிழாய்வகம். வெளியீடு, பதிப்பாசிரியர்: ச. மெய்யப்பன்; இணை ஆசிரியர்கள்: கரு. முத்தய்யா, சபா. அருணாசலம். பதிப்பு: 2002.)
பா.சு. ரமணன்
Share: 




© Copyright 2020 Tamilonline