|
|
|
சிவகங்கை மாவட்டத்தில் உள்ள வேம்பத்தூர் சங்க காலம் முதலே புகழ்பெற்ற ஊர். தமிழ்ப் புலவர்கள் பலர் வாழ்ந்த ஊர். அவ்வூரில் அ. முத்தையா பிள்ளை – மீனாட்சியம்மாள் இணையருக்கு, செப்டம்பர் 28, 1934ல், கிருஷ்ணன் பிறந்தார். தந்தை முத்தையா பிள்ளை பர்மாவில் பணி செய்ததால் வேம்பத்தூர் கிருஷ்ணனும் சிறு வயதிலேயே பர்மாவுக்குச் சென்றார். சுயமாகத் தாமே முயன்று கல்வி கற்றார். நகரத்தார் விடுதி நூலகத்தில் பாதுகாத்து வைக்கப்பட்டிருந்த நூல்களைப் படித்து இலக்கிய அறிவு பெற்றார். கிருஷ்ணனின் பெரியப்பா நேதாஜியின் இந்திய தேசியப் படையில் பணியாற்றினார். கிருஷ்ணனும் 'பாலசேனா' எனும் இளைஞர் பயிற்சிப் பாசறையில் சேர்ந்து பணியாற்றினார். இரண்டாம் உலகப் போருக்குப் பின் 1946ல் இந்தியா திரும்பினார்.
மதுரையில் உள்ள நியூ பர்மா ஸ்டோரில் சில காலம் பணியாற்றினார். அங்குள்ள 'சித்திரகலா ஸ்டூடியோ'வில் திரைப்பட படப்பிடிப்பை நேரில் பார்க்கும் வாய்ப்புக் கிடைத்தது. 1952ல் சென்னைக்குச் சென்றார். 1953ல் ஜெமினி ஸ்டூடியோவில் துணை நடிகரானார். திரைப்படங்களுக்குப் பாடல்கள் எழுதும் முயற்சியில் ஈடுபட்டார். இவர் எழுதிய 'விதியெனும் குழந்தை விளையாடுது...' என்னும் முதல் பாடல், 'குபேரத்தீவு' திரைப்படத்தில் வெளியானது. தொடர்ந்து உதவி இயக்குநர், விளம்பரப் பாடலாசிரியர், திரைக்கதை, வசன ஆசிரியர் என உயர்ந்தார். இயக்குநர் கே. சங்கரிடம் இணை இயக்குநராகப் பணியாற்றினார். தேவகி போஸ் இயக்கிய 'ரத்தின தீபம்' திரைப்படத்தின் தமிழ் வடிவத்திற்குப் பொறுப்பேற்றார். சுமார் 90 திரைப்படங்களில் பணிபுரிந்தார்.
வேம்பத்தூர் கிருஷ்ணன், 1966ல், கிருஷ்ணம்மாள் என்கிற பாப்பாவைத் திருமணம் செய்துகொண்டார். இவர்களுக்கு இரு மகன்கள், இரு மகள்கள். கிருஷ்ணன் இளவயதிலிருந்தே தமிழ்மீது தனித்த ஆர்வம் கொண்டிருந்தார். வள்ளியப்பச் செட்டியாரிடம் ஆத்திசூடி உள்ளிட்ட இலக்கியங்களைக் கற்றார். ஔவையின் ஆத்திசூடி, நல்வழி, மூதுரை போன்ற இலக்கியங்கள் அவரை வெகுவாகக் கவர்ந்தன. 1970-ல் சுடர்மணி பதிப்பகம் என்ற பதிப்பக நிறுவனத்தைத் தொடங்கினார். அதன் மூலம் பல நூல்களை வெளியிட்டார். ஒளவையின் மேல் கொண்ட ஈர்ப்பினால் ஔவை தமிழ்ச் சங்கத்தைத் தொடங்கினார். ஔவையின் நூல்களைத் தொகுத்து வெளியிட்டார். அவற்றுள் 'ஒளவை தமிழ்க் களஞ்சியம்' குறிப்பிடத்தகுந்த ஒன்று. 'தேசத்தை நேசிப்போம்', 'காந்தி யார்? கவனித்துப்பார்?', 'ஆலயங்களும் திருவிழாக்களும்' போன்றவை இவரது பிற நூல்கள். கிருஷ்ணன் 80க்கும் மேற்பட்ட நூல்களை எழுதியுள்ளார். தாகூரின் 'சியாமா' இசைநாடகத்தை தமிழாக்கம் செய்தார்.
கிருஷ்ணன் ஆன்மீகத்தின் மீது மிகுந்த பற்றுக்கொண்டவர். பக்தி பாடல்கள் அடங்கிய பல ஒலிநாடாக்களை, குறுந்தகடுகளை வெளியிட்டார். 'ஹிந்துமித்திரன்', 'சனாதன தர்மபீடம்' போன்ற இதழ்களின் ஆசிரியராகச் சில காலம் பணியாற்றினார். தினமணி கதிர், ஆனந்த விகடன், கல்கி உள்ளிட்ட பல இதழ்களில் ஆன்மீக, இலக்கியக் கட்டுரைகளை எழுதினார். 'திருவரங்க மகிமை', 'அகத்தியர் பெருமை' 'தியானம்' போன்ற சென்னைத் தொலைக்காட்சித் தொடர்களுக்குக் கதை, வசனம் எழுதினார். வேம்பத்தூர் கிருஷ்ணனின் திரைக்கதை, வசனம், பாடல்களில் 'காவிரியின் கதை' முதலான சில 13 வாரத் தொடர்கள் ஒளிபரப்பாகின.
வேம்பத்தூர் கிருஷ்ணனின் பல்துறைச் சேவையைப் பாராட்டி சுத்தானந்த பாரதி இவருக்குச் 'சுடர்மணிக் கவிஞர்' என்ற பட்டத்தை வழங்கினார். கார்த்திக் ஃபைன் ஆர்ட்ஸ் இவருக்கு சீர்காழி கோவிந்தராஜன் நினைவு விருதை வழங்கியது. அருட்சோதி காந்திய விருது பெற்றார். தமிழக அரசு இவருக்குத் தமிழ்ச் செம்மல் விருது வழங்கிச் சிறப்பித்தது.
வேம்பத்தூர் கிருஷ்ணனின் வாழ்க்கை வரலாற்றை, 'தமிழறிஞர் வேம்பத்தூர் கிருஷ்ணன்' என்ற தலைப்பில் கலைஞன் பதிப்பகம் வெளியிட்டுள்ளது. மு.மீனா அந்நூலை எழுதியுள்ளார் அந்நூலில், வேம்பத்தூர் கிருஷ்ணன், “என் வாழ்வில் மறக்க முடியாத நிகழ்வு 'ஆலயங்களும் திருவிழாக்களும்' எழுதியது தான். தமிழக அரசு முதன் முறையாகத் தமிழகக் கோயில் பற்றிய குறிப்புகள், வரலாறு மற்றும் அதன் சொத்து மதிப்பு முதலானவற்றை முறையாக ஆவணப்படுத்த எண்ணியது. அதற்காகத் தமிழகச் செய்தித் தொடர்புத் துறையும் தொலைக்காட்சி நிலையமும் சேர்ந்து ஒரு ஆவணப்படம் எடுக்கத் திட்டமிட்டது....மதுரை, ஸ்ரீரங்கம், பழனி, திருச்செந்தூர், ராமேஸ்வரம் இப்படி பல நம்முடைய முக்கியக் கோயில்களுக்கான வர்ணனை, அதன் வழிபாட்டு நேரம், சொத்து மதிப்பு முதலியன காட்சிக்கு வைக்கப்பட்டு, படமாக்கப்பட்டு ஆவணப்படுத்தப்பட்டன. அதனை அப்போதைய குடியரசுத்தலைவர் டாக்டர் ராதாகிருஷ்ணன் பார்த்து அந்தப் படத்திற்கு முன்னுரை பேசினார். அதில், 'வரிகளும் வர்ணனையும் பிரமாதம். அருமையான தமிழ் விளக்கவுரை' என்று பாராட்டிப் பேசியிருந்தார். அப்போதைய நாளேடுகள் அதைக் கொண்டாடிக் களித்தன. தமிழகக் கோயில்களில் உள்ள நகைகள், பணம், அதன் சொத்து விபரம் முதலியன கொண்ட முழுமையான வரலாற்றுப் பதிவு அது. நானும் பலமுறை கேட்டுப் பார்த்து விட்டேன். கிடைத்தபாடில்லை. அதன் அரிச்சுவடி கூட தற்போது இல்லை. அழிக்கப்பட்டதா அல்லது மறைக்கப்பட்டதா எனத் தெரியவில்லை.” என்று குறிப்பிட்டுள்ளார்.
வேம்பத்தூர் கிருஷ்ணன், டிசம்பர் 26, 2018 அன்று, தம் 84வது வயதில், வயது மூப்பின் காரணமாக, சென்னை சூளைமேட்டில் உள்ள தனது இல்லத்தில் காலமானார். இயல், இசை, நாடகம் (திரைப்படம்) என முத்தமிழுக்கும் பங்களித்த வேம்பத்தூர் எம். கிருஷ்ணன், தமிழர்கள் என்றும் நினைவில் நிறுத்த வேண்டிய முன்னோடி.
(தகவல் உதவி: தமிழறிஞர் வேம்பத்தூர் கிருஷ்ணன், மு. மீனா, கலைஞன் பதிப்பக வெளியீடு, முதல் பதிப்பு: 2015) |
|
பா.சு. ரமணன் |
|
|
|
|
|
|
|