Thendral Audio Advertise About us
New User? | Forgot Password? | Email: Password: Login
Current Issue | Previous Issues | Author Index | Category Index | Organization Index | E-Magazine | Classifieds | Digital Downloads
By Category:
சின்னக்கதை | சமயம் | சினிமா சினிமா | இளந்தென்றல் | கதிரவனை கேளுங்கள் | ஹரிமொழி | நிகழ்வுகள் | மேலோர் வாழ்வில் | மேலும்
February 2005 Issue
ஆசிரியர் பக்கம் | நேர்காணல் | மாயாபஜார் | இலக்கியம் | முன்னோடி | அன்புள்ள சிநேகிதியே | நலம்வாழ | நூல் அறிமுகம் | சிறப்புப் பார்வை
குறுக்கெழுத்துப்புதிர் | சூர்யா துப்பறிகிறார் | சிறுகதை | புதிரா? புரியுமா? | சமயம் | வார்த்தை சிறகினிலே | பொது | சினிமா சினிமா | Events Calendar
எழுத்தாளர் | இளந்தென்றல் | நிகழ்வுகள் | வாசகர் கடிதம் | தமிழக அரசியல் | புழக்கடைப்பக்கம் | கவிதைப்பந்தல்
Tamil Unicode / English Search
இலக்கியம்
தாய்ச்சிறுமியின் ஒப்பந்தம் சுமந்த பத்தினி!
- பெரியண்ணன் சந்திரசேகரன்|பிப்ரவரி 2005|
Share:
பூம்புகார் பத்தினிப் பெண்கள் எழுவர்

[சிலப்பதிகாரத்தின் வஞ்சினமாலை என்னும் படலத்தில் கண்ணகி கீழே வீழ்ந்திருந்த பாண்டிமாதேவியைப் பார்த்துத் தான் பிறந்த பூம்புகார் நகரின் பத்தினிப் பெண்களில் அதிசயமான எழுவரைப் பற்றிச் சொல்வதைக் காண்கிறோம். சென்ற தவணையில் அயலான் ஒருவன் தன்னை நீண்டநேரம் பார்ப்பதைப் பொறாமல் தன் மதிமுகத்தைக் குரங்கு முகமாகக் கோரிக் கணவன் வரப் பழைய முகத்தைப் பெற்ற பத்தினியைப் பார்த்தோம். இப்பொழுது ஏழாவது பத்தினியைப் பார்ப்போம்.]

கண்ணகி அடுத்துப் பூம்புகார் நகரில் பிறந்த ஏழாவது அதிசயப் பத்தினியைப் பற்றிக் கூறுகிறாள். இந்தப் பத்தினியின் பெயரும் கிடைக்கவில்லை. இந்தப் பத்தினியைப் பற்றிச் சொல்ல மற்ற அறுவரைவிட அதிகமாகச் சொற்களையும் சொல்கிறாள் கண்ணகி:

.... .... .... விழுமிய

பெண்ணறிவு என்பது பேதைமைத்தே என்றுரைத்த
நுண்ணறிவி னோர்நோக்கம் நோக்காதே எண்ணிலேன்
வண்டல் அயர்வுஇடத்து யானோர் மகள்பெற்றால்
ஒண்தொடி நீயோர் மகன்பெறில் கொண்ட
கொழுநன் அவளுக்குஎன்று யானுரைத்த மாற்றம்
கெழுமி யவள்உரைப்பக் கேட்ட விழுமத்தால்
சிந்தைநோய் கூரும் திருவிலேற்கு என்றெடுத்துத்
தந்தைக்குத் தாயுரைப்பக் கேட்டாளாய் முந்தியோர்
கோடிக் கலிங்கம் உடுத்திக் குழல்கட்டி
நீடித் தலையை வணங்கித் தலைசுமந்த
ஆடகப்பூம் பாவையவள் .... ....

(சிலப்பதிகாரம்: வஞ்சினமாலை:23-34)

தந்தை தாய் உரையாடல்:

பூம்புகாரிலே ஒருநாள் திருமண வயதாகி இருந்த கன்னி ஒருத்தியின் பெற்றோர் தம்முள் பேசிக்கொண்டிருந்தனர்.

பேதை நான் செய்த செயல்!

தந்தை: "ஏன் நீ பெருத்த கவலையோடு இருக்கிறாய்? என்ன நடந்தது?"
தாய்: "ஆமாம். பெண்ணறிவு என்பது சிறிது அறியாமை உடையது என்று சிறந்த நுண்ணறிவினோர் கண்டதை நான் பார்க்காமல், ஆராயாமல் செய்த செயல்தான் காரணம்!"

[விழுமிய பெண்ணறிவு என்பது பேதைமைத்தே என்றுரைத்த நுண்ணறிவி னோர்நோக்கம் நோக்காதே எண்ணிலேன்
[விழுமிய = சிறந்த; பேதைமைத்து = பேதைமை உடையது; நோக்கம் = காட்சி, தெளிந்த முடிவு; எண்ணிலேன் = எண்ணுதல் இல்லேன்]

பேச்சுத் தொடர்கிறது...

மணல் விளையாட்டில் சிறுமிகள் செய்த ஒப்பந்தம்!

தந்தை: "எப்பொழுது அந்தச் செயல் செய்தாய்? நம் மணவாழ்வில் அப்படி நீ நடப்பதைக் கண்டதில்லையே?!"

தாய்: "அது நடந்தது நான் சிறுமியாய் இருந்தபொழுது! நான் மணலில் என் தோழியுடன் விளையாடும்பொழுது செய்த செயல்..."

தந்தை: "அந்தச் சிறுவயதில் வண்டல்மணல் விளையாட்டில் செய்தது இத்தனை ஆண்டுகள் கழித்து எப்படித் துயரந்தந்து உன்னைப் பாதிக்கும்?"

தாய்: "அந்த மணல் விளையாட்டின் பொழுது தோன்றிய நட்புணர்ச்சியில் நான் அந்தத் தோழியிடம் ஓர் ஒப்பந்தம் செய்தேன்..அவளிடம் சொல்லினேன்: ‘ஒளிவீசும்வளையல் அணிந்தவளே! நான் ஒரு மகள் பெற்றால் நீ ஒரு மகன் பெற்றால் என் மகளுக்குக் கணவன் அவன்தான்!’ என்று!"

வண்டல் அயர்வுஇடத்து யானோர் மகள்பெற்றால்
ஒண்தொடி நீயோர் மகன்பெறில் கொண்ட
கொழுநன் அவளுக்கு!" என்று

[வண்டல் = ஆற்று மணல்; அயர்வு = விளையாட்டு; ஒண்தொடி = ஒளிவளையல்; கொழுநன் = தலைவன், கணவன்]

இப்பொழுது தோழி அதைச் சொல்லிக் கேட்கிறாள்!

தந்தை: "சரி... அது எப்படி இன்றைக்குத் தலையெடுத்தது?"

தாய்: "ஆமாம் அவ்வாறு நான் உரைத்த சொல்லைச் சுட்டி என் தோழி என்னிடம் உரைக்கிறாள். அதைக் கேட்ட துயரத்தால் பாக்கியமில்லாத எனக்குக் கவலை நோய் கூடுகின்றது!"

... என்று யான் உரைத்த மாற்றம்

கெழுமியவள் உரைப்பக் கேட்ட விழுமத்தால்
சிந்தைநோய் கூரும் திருவிலேற்கு என்று

[மாற்றம் = சொல்; கெழுமு = நெருங்கு; கெழுமியவள் = தோழி; விழுமம் = துயரம்; சிந்தை = கவலை; கூரும் = கூடும்; திருவிலேற்கு = திரு இலேனுக்கு]

வெளிப்பட்டாள் மகள்! புறப்பட்டாள் கோடியோடு

அவ்வாறு தந்தைக்குத் தாய் விளக்கியுரைத்த அனைத்தையும் கேட்டுக் கொண்டிருந்தாள் அவர்களின் கன்னிமகள்...
பெற்றோர் ஆராய்ந்து முடிவு செய்து திருமண நடவடிக்கை தொடங்கு முன்னரே ஒரு புதிய கோடிப் புடைவையை எடுத்து உடுத்தித் தன் கூந்தலைக் கல்யாணப் பெண்போலே கட்டிமுடிந்து நெடுநேரம் தலையை வணங்கித் தாய் பேசியிருந்த ஆடவனின் தலைமையைச் சுமந்தாள் அந்தப் பொன்போல் ஒளிரும் பாவை...

.... என்றெடுத்துத்

தந்தைக்குத் தாயுரைப்பக் கேட்டாளாய் முந்தி, ஓர்
கோடிக் கலிங்கம் உடுத்திக் குழல்கட்டி
நீடித் தலையை வணங்கித் தலைசுமந்த
ஆடகப்பூம் பாவை ....

[எடுத்து = விளக்கி; முந்தி = முந்திக்கொண்டு; கோடி = துணி, ஒருவகைக் கல்யாணப் புடைவை; கலிங்கம் = துணி; கோடிக் கலிங்கம் = கல்யாணப் புடைவை; தலைசுமந்த = தலைமையைச் சுமந்த; ஆடகம் = பொன்; பூ = ஒளி, அழகு]

பெற்றோர் சொல் கேட்டதா இவள் பத்தினிப் பெருமை?

மேற்கண்டதைக் கேட்போர் சிலர் இந்தப் பெண்ணின் பெருமை தாய் சொல்லைத் தட்டாமல் தாய் கண்ட ஆடவனை எதிர்ப்பேதும் இன்றி, கேள்வி ஏதுமின்றி முந்திக் கொண்டு ஏற்றது என்று எண்ணலாம்.

ஆனால் அங்கேதான் நுணுக்கமே இருக்கிறது. இங்கே பெற்றோர் சொல்லைக் கேட்பது பத்தினிக்கு அழகென்பது கருத்தல்ல.

மாறாகத் தன்னோடு ஏற்கனவே ஓர் ஆடவனைத் தன் கணவனாக இணைத்துள்ளதை அறிந்ததும், வேறொருவனோடு தன் பெயர் இனிமேல் இணைவதை அவள் மாசாகக் கருதியதுதான் ஆகும். அவள் கற்பு அந்த அளவிற்குக் கூட ஒன்றுக்கு மேற்பட்ட ஆணைத் தன்னோடு இணையப் பொறுக்கவில்லை! அதுதான் இங்கே அவள் சிறப்பாகும்.

இப்பத்தினியின் உள்ளத்தைக் கண்ணகி சொல்லிய இரண்டாம் அதிசயப் பத்தினியோடு ஒப்பிடலாம். அந்தப் பத்தினி தான் இழைத்த மணற்பொம்மையைத் தோழிகள் "நின் கணவனடி அது!" என்று சொல்லினதால் வேறெந்த ஆடவனும் தன்னோடு இணைவதைப் பொறாமல் உள்ளம் கசிந்து அந்த மணற்பாவையையே கட்டிப் பிடித்து வெள்ளம் அதைக் கரையாமல் காத்துக் கிடந்தாள். அங்கே தோழி சொல்லே தலைசிறந்தது என்று பத்தினி நினைத்தாள் என்று சொல்வது எப்படிப் பொருந்தாதோ அப்படியே இங்கேயும் பெற்றோர் சொல்லே பெரிதென்று நினைத்தாள் இந்தப் பத்தினி என்பதுவும் பொருந்தாது.

பெற்றோரினும் கற்பே பெரிது

சங்க இலக்கியத்தில், அதிலும் குறிப்பாக அகப்பொருட் கவிதைகளில், ஓரிடத்திலும் பெற்றோர் சொல்லே தலைசிறந்தது என்று கண்மூடித்தனமாக எல்லாச் சூழ்நிலைகளிலும் நடப்பதைக் காணமுடியாது.

பாலைத்திணையின் முக்கியமான துறைகளில் (சூழல்களில்) ஒன்று உடன்போக்கு. அதில் பிறரறியாமல் களவில் காதலிக்கும் தலைவி தன் பெற்றோர் அக்காதலை அறியாமல் வேறொருவனுக்கு மணமுடிக்க முயலும்பொழுது பெற்றோருக்குச் சொல்லாமல் வீட்டைவிட்டுத் தலைவனுடன் போகித் திருமணம் செய்து கொள்வதாகும். இங்கே பெற்றோர் செயலே ஆணை என்று தலைவி எதிர்நோக்கி இருப்பதை அழகாகக் கருதவில்லை. கற்பே தலையானதென்று அதைக் காப்பதற்கான செயலில் இறங்குவதே தலைவிக்கு அறமாகச் சங்க இலக்கியச் சான்றோர் கருதி அந்தத் துறையைப் போற்றினர். மேலும் அகப்பொருட் கவிதைகளில் பெற்றோரும் தெரிந்தே தலைவி காதலிப்பவனை விட்டு வேறொருவனுக்கு மணமுடிக்க முயல்வதாகவும் இல்லை.

மற்ற அறங்களுக்கு இடர் வாராதவரையில் பெற்றோர் சொல்லை மதிப்பது மேலானது என்பதே தமிழ்நெறி. அதைத் திருக்குறளில்

ஈன்றாள் பசிகாண்பான் ஆயினும் செய்யற்க
சான்றோர் பழிக்கும் வினை
(திருக்குறள்: வினைத்தூய்மை: 656)

அதாவது "தன்னை ஈன்றவள் பசியைக் காண்பவனாக இருக்கும் நிலையில் உள்ளவனாக ஒருவன் ஆனாலும், சான்றோர் அறமன்று எனப் பழிக்கும் செயலை ஒருவன் செய்யற்க" என்று வள்ளுவன் பெற்றோர்க்கும் அறத்திற்கும் இழுபறி நேரும்பொழுது எப்படி அதைத் தீர்ப்பதென்று தெளிவாகச் சொல்லியுள்ளான்.


பெரியண்ணன் சந்திரசேகரன்,
அட்லாண்டா
Share: 




© Copyright 2020 Tamilonline