|
|
ஒட்டேன், அரசோடொழிப்பேன் மதுரையும்! (பாகம் 9)
[சிலப்பதிகாரத்தின் வஞ்சினமாலை என்னும் படலத்தில் கண்ணகி கீழே வீழ்ந்திருந்த பாண்டிமாதேவியைப் பார்த்துத் தான் பிறந்த பூம்புகார் நகரின் பத்தினிப் பெண்களில் அதிசயமான எழுவரைப் பற்றிச் சொல்வதைக் காண்கிறோம். இதுவரை அந்த ஏழு பத்தினிப் பெண்டிரைப் பற்றிக் கூறினதைப் பார்த்தோம். அதன் பிறகு கண்ணகி செய்த செயலைப் பார்ப்போம் இங்கே.]
அவர்கள் பிறந்த நகரில் நானும் பிறந்தேன்!
பூம்புகாரின் அதிசயப் பத்தினிகள் எழுவரை வெளிப் படையாகச் சொல்லியபின் கண்ணகி பாண்டிமாதேவியைப் பார்த்துச் சொல்கிறாள்:
...போல்வார் நீடிய மட்டார் குழலார் பிறந்த பதிப்பிறந்தேன்! (சிலப்பதிகாரம்: வஞ்சினமாலை:34-35)
[நீடிய = மிகுந்த, நிறைந்த, மட்டு = தேன்; ஆர் = நிறை; பதி = ஊர்]
"...அந்த ஏழு பத்தினிகள் போன்ற நீண்ட தேன் நிறைந்த பூங்கூந்தலுடைய பெண்கள் பிறந்த நகரத்தில் நானும் பிறந்தேன்!”
"என் குறும்பைப் பார்!”
மேலும் வெகுளியின் உச்சத்திற்கே சென்று வஞ்சினம் (சூள், சபதம்) சொல்கிறாள் கண்ணகி:
"பட்டாங்கு யானுமோர் பத்தினியே ஆமாகில் ஒட்டேன் அரசோடு ஒழிப்பேன் மதுரையும்!என் பட்டிமையும் காண்குறுவாய் நீ!” என்னா விட்டகலா... (சிலப்பதிகாரம்: வஞ்சினமாலை: 36-38)
[பட்டாங்கு = பட்டதுபோல், இருப்பதுபோல், உண்மையாக; ஒட்டேன் = ஒருப்படேன்; பட்டிமை = குறும்பு, கொடுமை; அகலா = அகன்று]
"உண்மையில் நானும் அவ்வூர்ப் பெண்கள் போல் ஒரு பத்தினிப் பெண்ணானால், இந்த முறைதவறலுக்கு இனிமையாக இருந்து ஒத்துப் போகமாட்டேன்! அரசோடு மதுரையையும் அழிப்பேன்! என் குறும்பையும் நீ பார்!” என்று வஞ்சினம் சொல்லி அரசவையை விட்டு அகன்றாள் கண்ணகி. என் சினம் குற்றமற்றது!
அடுத்து ஊரிலே நின்று "நான்மாடக் கூடல் மகளிரும் மைந்தரும் வானக் கடவுளரும் மாதவரும் கேட்டீமின்! யான்அமர் காதலன் தன்னைத் தவறிழைத்த கோநகர் சீறினேன்! குற்றமிலேன் யான்!”என்று (வஞ்சினமாலை: 39-42)
[நான்மாடக் கூடல் = மதுரையின் மற்றொரு பெயர்; மா தவர் = பெருந்தவத்தார்; கேட்டீமின் = கேளுங்கள்; அமர் = விரும்பு, காதலி; கோ = அரசன், தலைவன்]
"மதுரை நகரின் மகளிரும் ஆண்களும் வானத்துத் தெய்வங்களும் பெருந்தவம் செய்யும் முனிவர்களும் கேளுங்கள்! நான் விரும்பும் என் காதலனைத் தவறிழைத்த தலைநகரைச் சினந்தேன்! நான் குற்றமற்றவள்!” என்று உரக்க அறிவித்தாள்!
இடமுலை கையால் திருகி...
பிறகு விண்ணுலகும் மண்ணுலகும் திடுக்கிடும் செயலைச் செய்தாள் கண்ணகி: "இடமுலை கையால் திருகி மதுரை வலமுறை மும்முறை வாரா அலமந்து மட்டார் மறுகில் மணிமுலையை வட்டித்து விட்டாள் எறிந்தாள் விளங்கிழையாள்” (வஞ்சினமாலை: 43-46)
[வாரா = வந்து; அலமந்து = சுழன்று, மயங்கி; மறுகு = தெரு; மணி = ஒளி, அழகு; வட்டித்து = சுற்றி; இழை = நகை]
தன் இடது நகிலைக் கையால் திருகி மதுரையை வலஞ்சுழியாக மும்முறை வந்து மனம் மயங்கித் தேன் நிறைந்த வீதியிலே தன் ஒளிறும் நகிலைச் சபதம் செய்து விட்டெறிந்தாள் ஒளிவிளங்கும் நகையணிந்த கண்ணகியாள்!
தோன்றினான் அக்கினித் தேவன்!
அப்பொழுது அங்கி என்னும் தீக்கடவுள் தோன்றினான்:
.... .... .... வட்டித்த நீல நிறத்துத் திரிசெக்கர் வார்சடைப் பால்புரை வெள்ளெயிற்றுப் பார்ப்பனக் கோலத்து மாலை எரிஅங்கி வானவன் தான் தோன்றி (வஞ்சினமாலை: 46-49)
[வட்டி = தீட்டு; வார் = நீண்ட; புரை = போன்ற; எயிறு = பல்; மாலை = ஒழுங்கு, சீர்]
தீட்டினாற் போலும் நீல நிறத்தையும் திரித்த நீண்ட சடையும் பால்போலும் வெள்ளைப் பல்லையும் உடைய பார்ப்பனக் கோலத்துச் சீர்மை உடைய எரியாகிய அக்கினிக் கடவுள் தோன்றிக் கண்ணகியை ஏவல் கேட்டான்.
யார்யார் என் தீயிலிருந்து பிழைப்பார்கள்?
"மாபத்தினி நின்னை மாணப் பிழைத்தநாள் பாயெரி இந்தப் பதியூட்டப் பண்டைஓர் ஏவல் உடையேனால்! யார்பிழைப்பார் ஈங்கு?”என்ன... (வஞ்சினமாலை: 50-52)
[மாண = மிக; பாய் = பரவு] |
|
"பெரிய பத்தினியே! உன்னை மிகவும் தவறிழைத்த நாளிலே, பரவும் தீயை இந்தநகரிலே ஊட்ட, முன்னமே ஓர் ஏவல் எனக்குள்ளது. இங்கே யார் யார் என் தீயினின்று பிழைப்பார்கள்?” என்று வினவினான் அக்கினி.
தீத்திறத்தார் பக்கமே சேர்க! அதற்குக் கண்ணகி விடுத்தாள்: "பார்ப்போர் அறவோர் பசுபத்தினிப் பெண்டிர் மூத்தோர் குழவி எனுமிவரைக் கைவிட்டுத் தீத்திறத்தார் பக்கமே சேர்க!” என்று ... (வஞ்சினமாலை: 53-55)
[திறம் = தன்மை]
"அந்தணர், அறநெறியில் நிற்போர், பசுக்கள், கற்புடைய பெண்கள், முதியோர், குழந்தைகள் என்னும் இவர்களைக் கைவிட்டுத் தீயவர் பக்கமே சேர்!” என்று கண்ணகி ஏவினாள்!
மதுரையில் அழல் மண்டியது!
.... ... என்று காய்த்திய பொற்றொடி ஏவப் புகையழல் மண்டிற்றே நற்றேரான் கூடல் நகர். (வஞ்சினமாலை: 56-57)
[காய்த்திய = காய; பொற்றொடி = பொன்வளையல் அணிந்தவள்; மண்டு = எரி]
தீயவர்களையே காய்வதற்குப் பொன்வளையல் அணிந்த கண்ணகியாள் தீக்கடவுளை ஏவவும் செம்மையான தேரை வாகனமாகவுடைய பாண்டியனின் கூடல்நகரான மதுரையில் புகையழல் பற்றியெரிந்தது...!
வஞ்சினமாலையின் பெருமை
இதுவரை நாம் உலகின் தலைசிறந்த இலக்கியங்களில் ஒன்றானதும் நெஞ்சையள்ளுவதுமான சிலப்பதிகாரத்தின் உச்சக்கட்டக் காட்சியாகிய வஞ்சினமாலையைக் கண்டோம். அங்கே பூம்புகார்ப் பதியின் பத்தினிகளில் எழுவரின் அதிசயத்தைக் கண்டோம்; கண்ணகி மதுரையின் தீயவர்களை எரிப்பதையும் கண்டோம்.
இந்த வஞ்சினமாலையைப் பற்றிப் பெற்றோர்கள் தங்கள் குழந்தைகளுக்கு, அதிலும் பெண்குழந்தைகளுக்கு, எடுத்துக்கூற வேண்டும். மனப்பாடமாக நாள்தவறாமல் தாயும் மகளும் ஓதவேண்டும். வஞ்சினமாலை பெண்குழந்தைகளின் உள்ளத்தில் நம் முன்னோர் பற்றிய அழியாத பதிவை உண்டாக்கும்; உள்ளத்து உரத்தை வளர்க்கும்; பெண்மையின் தெளிவை அளிக்கும்; வீரம் நிறைந்த விடுதலைப் பெண்ணாக்கும். வெளிப்படையாகவோ மறைமுகவோ தீயவர்கள் குடும்பத்தை அணுகாமல் காக்கும்.
பெற்றோரும் அறக்கட்டளைகளும் இதைச் சிறுமிகள் கற்கவும் மனனம் செய்து ஓதவும் பரிசுகள் முதலியவற்றால் ஊக்கவேண்டும். இந்தப் படலம் மட்டுமே தனியாக மிடுக்கான தமிழிசையில் கண்ணகியின் பாத்திரமும் மற்றவரும் பாடி நடித்து இறுதியில் விண்ணும் மண்ணும் திடுக்கிடும் வண்ணம் மதுரையில் புகையழல் மண்டும் காட்சியோடு முற்றும் வியப்பான நாடகத்தை நடத்தவேண்டும்.
பெரியண்ணன் சந்திரசேகரன், அட்லாண்டா |
|
|
|
|
|
|
|