ஊடகங்களும், சுனாமியும் புதுப்பட்டினத்தில் புதிய நம்பிக்கை சுனாமி என்றால்...
|
|
சுனாமியும், அதற்குப் பின்னும் |
|
- மதுரபாரதி|பிப்ரவரி 2005| |
|
|
|
தென்கிழக்கு ஆசிய நாடுகளின் கடலோரப் பகுதிகளை சுனாமி சூறையாடியதில் உயிரிழந்தவர்களின் எண்ணிக்கை இரண்டு லட்சத்தைத் தாண்டிவிட்டது என்று புள்ளிவிவரங்கள் கூறுகின்றன. இறுதி எண்ணிக்கையை யாராலும் சரியாக கணிக்க முடியாது என்றே தோன்றுகிறது.
சுனாமியால் பாதிக்கப்பட்ட 12 நாடுகளில் (இந்தியா, இந்தோனேசியா, இலங்கை, தாய்லாந்து, சோமாலியா, பர்மா, மாலத்தீவு, மலேசியா, தான்சானியா, சீஷெல்ஸ், வங்கதேசம், கென்யா) சுமார் 10 லட்சம் மக்கள் வீடுகளை இழந்து தற்காலிக முகாம்களில் தங்க வைக்கப்பட்டுள்ளனர்.
இந்தியாவைப் பொறுத்தவரை அந்தமான் - நிக்கோபார் தீவுகளுக்குப் பிறகு சுனாமியால் அதிகம் பாதிக்கப்பட்டது தமிழகம்தான். தமிழகத்தில் உயிரிழந்தவர்களின் எண்ணிக்கை எட்டாயிரத்தைத் தாண்டி விட்டது. நாகப்பட்டினம், கன்னியாகுமரி, கடலூர் மாவட்டங்களில் அதிக உயிரிழப்பு களும், சேதமும் ஏற்பட்டுள்ளது. குறிப்பாக நாகப்பட்டினத்தில் மட்டும் சுமார் 6,000க்கும் மேற்பட்டோர் உயிரிழந்தனர். 1,922 பேர் படுகாயமடைந்தனர். 73 கிராமங்களில் 1,96,184 பேர் பாதிக்கப்பட்டுள்ளனர். 36,860 வீடுகள் மற்றும் குடிசைகள் சேதத்திற்குள்ளாகியுள்ளன.
தமிழக அரசு வெளியிட்டுள்ள புள்ளி விவரப்படி மாநிலத்தில் சுமார் 8 ஆயிரத்திற்கும் மேற்பட்டோர் இறந்து இருக்கிறார்கள், மூவாயிரத்திற்கும் மேற்பட்டோர் படுகாயமடைந்ததாகவும், 8,96,781 பேர் பாதிக்கப்பட்டுள்ளதாகவும், 345 கிராமங்கள் மிகவும் மோசமான நிலையில் பாதிக்கப்பட்டுள்ளதாகவும் தெரிவிக்கிறது.
சுமார் 95 சதவீகித பிணங்கள் அடையாளம் கண்டறியப்பட்டு அவரவர் உறவினர்களிடம் ஒப்படைத்தும், சில இடங்களில் மொத்தமாகவும் அடக்கம் செய்யப்பட்டன. கிட்டத்தட்ட 28 உதவி மையங்களில் சுமார் 23 ஆயிரம் மக்கள் தங்க வைக்கப்பட்டனர். மாநிலத்தில் பல்வேறு பகுதிகளிலிருந்து சுமார் 500 மருத்துவர்கள் பல்வேறு மருத்துவ நிவாரண முகாம்களில் தங்கி பாதிக்கப்பட்ட பகுதி மக்களுக்கு தேவையான உடனடி மருத்துவ சிகிச்சைகள் அளித்தனர்.
அரசு மட்டுமல்லாது எண்ணற்ற தன்னார்வத் தொண்டு நிறுவனங்கள், செஞ்சிலுவைச் சங்கம், பல மத அமைப்புகளும் மீட்புப் பணியில் உடனடியாக ஈடுபட்டது மட்டுமல்லாமல், பல கிராமங்களை தத்தெடுக்கவும் முன்வந்துள்ளன. முன்னெப்போதும் காணாத அளவுக்குப் பொதுமக்கள் நிதியைப் பெருமளவில் வழங்குகிறார்கள்.
தமிழக அரசு பாதிக்கப்பட்ட ஒவ்வொரு குடும்பத்துக்கும் உடனடியாக ரூ. 4,912, பாத்திரம், ஸ்டவ் ஆகியவற்றை வழங்கியது. பாதிக்கப்பட்ட மீனவர்களுக்கு ரூ. 6.5 கோடி சிறப்பு நிதி ஒதுக்கீடு செய்துள்ளது. சுனாமியில் உயிரிழந்த ஒவ்வொருவருக்கும் ரூ. 1 லட்சம் என்ற விகிதத்தில் இழந்த குடும்பங் களுக்கு நிதி உதவி அறிவித்துள்ளது.
பாதிக்கப்பட்ட மக்களில் பெரும்பான்மையானோர் ஏழைகள் அல்லர். அவர்கள் தங்களுக்குக் கிடைத்த பழைய துணி மணிகளை வேண்டாம் என்று நிராகரித்ததும் காணமுடிந்தது. ''கட்டிய துணியோடு நாங்கள் ஓடிவந்தோம். மக்கள் கொடுக்கும் துணிகளில் எங்களுக்குத் தேவையான அளவு எடுத்துக் கொண்டோம்'' என்று முகாம்களில் உள்ள மக்கள் கூறுவதிலும் நியாயம் இருக்கிறது. |
|
கடலூரில் வேகமாக மீட்புப்பணிகளும், நிவாரணப் பணிகளும் நடைபெறுவதற்கு முக்கியக் காரணமாக மாவட்ட ஆட்சியர் ககன்தீப்சிங் பேடியைக் கட்சி வித்தியாசமின்றி அனைவரும் பாராட்டுகின்றனர். கடலூரில் ஆட்சியருக்கு அடுத்து அதிகம் பேசப்படுபவர் பிரபல இந்தி நடிகர் விவேக் ஓபராய் தான். ஆம்! இவர் தேவனாம்பட்டினம் கிராமத்தை தத்தெடுத்திருக்கிறார்.
இவர் சுனாமி தாக்குதலுக்கு அடுத்த மூன்று நாட்களுக்குள் தமிழகம் விரைந்து வந்து பாதிக்கப்பட்ட பகுதிகளிலேயே தங்கி, அங்குள்ள மக்களுக்குத் தேவையான நிவாரணப் பணிகளை மேற்கொண்டது மட்டுமல்லாமல், அவர்களுக்கு ஆலோசனைகளையும், தேவையான வசதிகளையும் செய்துகொண்டு வருவது குறிப்பிடத்தக்கது.
மாதா அமிர்தானந்தமயி அவர்கள் 100 கோடி ரூபாய்க்கான திட்டங்களை அறிவித்தார். பாதிக்கப்பட்ட மாநிலங்களில் வீடுகள் கட்டித்தருவதாகக் கூறியுள்ளதோடு, உடனடி நிவாரணத் தொகையாக குடும்பமொன்றுக்கு 1000 ரூபாய் கொடுக்கிறார். பிரபல 'உதவும் கரங்கள்' அமைப்பும் பல நல்ல திட்டங்களை வகுத்துச் செயல்படுகிறது.
வாஷிங்டனைத் தலைமையகமாகக் கொண்டு இயங்கும் எய்ம்ஸ் இந்தியா ·பவுண்டேஷன் நாகப்பட்டினத்தின் தெற்கே 26 கிலோ மீட்டர் தொலைவில் உள்ள வெள்ளைப்பள்ளம், வானமாதேவி, புஷ்பவனம் என்கின்ற மூன்று கிராமங்களைத் தேர்வு செய்து அங்கு நிவாரணப் பணிகளை மேற்கொண்டுள்ளது.
எய்ம்ஸ் இந்தியா ·பவுண்டேஷனைச் சேர்ந்த விஜய்ஆனந்த் கூறுகையில், ''பாதிப்பு ஏற்பட்ட முதல் ஓரிரு வாரங்களுக்குப் பின் மக்களிடம் எழுச்சி, படிப்படியாகக் குறைந்து விடுகிறது என்பது உண்மை. சாதாரணமாக நாம் மாதத்தில் ஒருநாள் சினிமா, கோயில் என்று போகிறோம். அடுத்த ஒரு வருடத்திற்கு நாம் பாதிக்கப்பட்ட பகுதிகளைக் கோயில்களாக நினைத்துப் போய் பார்க்க வேண்டும். அந்த மக்களுக்குத் தங்களால் ஆன உதவிகளைச் செய்ய வேண்டும் என்பதே எங்கள் வேண்டுகோள்'' என்று கூறுகிறார்.
கணக்கில்லாத பத்திரிகைகளும், டி.வி. சேனல்களும் பிற நிறுவனங்களும் மற்றும் தனி நபர்களும் ஏராளமாக நிதி சேகரிக்கிறார்கள். பணத்தைக் கொடுப்பதோடு நமது பணி முடிந்துவிடவில்லை. சேகரிக்கப்படும் நிதி உரிய பணிக்காகவே செலவிடப்படுகிறதா எனக் கண்காணிப்பதும் நமது பொறுப்புதான். இதையும் மறந்துவிடக் கூடாது.
மதுரபாரதி, கேடிஸ்ரீ |
|
|
More
ஊடகங்களும், சுனாமியும் புதுப்பட்டினத்தில் புதிய நம்பிக்கை சுனாமி என்றால்...
|
|
|
|
|
|
|