Thendral Audio Advertise About us
New User? | Forgot Password? | Email: Password: Login
Current Issue | Previous Issues | Author Index | Category Index | Organization Index | E-Magazine | Classifieds | Digital Downloads
By Category:
சின்னக்கதை | சமயம் | சினிமா சினிமா | இளந்தென்றல் | கதிரவனை கேளுங்கள் | ஹரிமொழி | நிகழ்வுகள் | மேலோர் வாழ்வில் | மேலும்
December 2022 Issue
தென்றல் பேசுகிறது | நேர்காணல் | அஞ்சலி | மேலோர் வாழ்வில் | சின்னக்கதை | சமயம் | கதிரவனை கேளுங்கள் | சிறப்புப் பார்வை | அலமாரி
எழுத்தாளர் | இளந்தென்றல் | நிகழ்வுகள் | Events Calendar | சிறுகதை | வாசகர்கடிதம் | ஹரிமொழி
Tamil Unicode / English Search
சிறுகதை
காணப்படாத நிச்சயங்கள்!
இன்று புதிதாய்ப் பிறந்தோம்
- பானுமதி பார்த்தசாரதி|டிசம்பர் 2022|
Share:
கல்லூரியில் இருந்து வந்து கையில் ஒரு கப் காஃபியுடன் அமர்ந்து ஓய்வெடுத்துக் கொண்டிருந்தாள் சம்யுக்தா. மகளையே வைத்த கண் வாங்காமல் பெருமையுடன் பார்த்தவாறு தன் அறை வாசலில் நின்றிருந்தார் ராஜசேகர், அவள் தந்தை. யாரோ உற்றுப் பார்ப்பது போன்ற உள்ளுணர்வு உறுத்த திரும்பிப் பார்த்தாள் சம்யுக்தா.

"என்ன அப்பா அப்படிப் புதிதாகப் பார்ப்பதுபோல் பார்க்கிறீர்கள்?" என்றாள் வியப்புடன்.

"உன்னைப் பார்த்தவுடன் இன்று புதிதாய்ப் பிறந்தோம் என்ற பாரதியாரின் பாடல்தான் நினைவில் வருகிறது." என்று பெருமூச்செறிந்தவர் "கொஞ்சம் ஓய்வெடுத்துக் கொண்டு என் அறைக்கு வரமுடியுமா கண்ணம்மா? உன்னுடன் கொஞ்சம் பேச வேண்டும்." என்றார்.

"இதோ வந்து விட்டேன் அப்பா" என்றவள் காபிக் கோப்பையை லேசாக அலசி, பாத்திரம் கழுவும் எந்திரத்தில் போட்டுவிட்டு ராஜசேகர் அறைக்கு வந்து அவர் எதிரில் சௌகரியமாக அமர்ந்து கொண்டு அவரைப் பார்த்து லேசாகச் சிரித்தாள்.

"இப்போது சொல்லுங்கள் அப்பா" என்றாள்.

அப்பா தாடையைத் தேய்த்துக்கொண்டு யோசனையுடன் அவளையே உறுத்துப் பார்த்தார்.

"என்ன டாடி அப்படிப் பார்க்கிறீர்கள்?"

"எப்படிச் சொல்வது என்று தெரியவில்லை" ராஜசேகர்.

"என்னிடம் போய் என்ன தயக்கம்? மனதில் நினைப்பதைக் கேளுங்கள் அப்பா."

"உனக்குத் திருமணம் செய்துவிட வேண்டும் என்று நானும் உன் அம்மாவும் நினைக்கின்றோம். சம்மதமா?"

"நான் வேலையில் சேர்ந்து இன்னும் ஒரு வருடம்கூட முடியவில்லையே! அதற்குள் என்னஅவசரம்?"

"பரவாயில்லை அம்மா; நீயும் ஃபிஸிக்ஸில் மாஸ்டர்ஸ் படித்து, எம்ஃபில்லும் முடித்துத்தான் கல்லூரி ஆசிரியர் பணியில் சேர்ந்தாய். நீ உன் கடமையை முடித்துவிட்டாய். எங்கள் கடமையை நாங்கள் செய்ய வேண்டாமா?" என்றார் ராஜசேகர்.

"அப்பா, நான் பி.எச்டி. முடிக்கவேண்டும்."

"தாராளமாக. திருமணம் செய்துகொண்டு, வேலையில் இருந்துகொண்டு முடிக்கலாம்."

அப்போது அம்மா சமையலறையில் இருந்து ஈரக் கைகளை முந்தானையில் துடைத்தபடி வந்து அப்பா அருகில் அமர்ந்தாள். 'இருவரும் ஒரு முடிவோடுதான் பேச வந்திருக்கிறார்கள். நாம் இனி தப்பமுடியாது' என்று நினைத்து சம்யுக்தா புன்னகைத்தாள்.

"இங்கே பார் சம்யுக்தா, நான் என் பாஷையில் சொல்லுகிறேன். கோழியைக் கேட்டு யாரும் பிரியாணி செய்வதில்லை. வருகிற தை மாதத்தில் கட்டாயம் திருமணம் முடிக்கவேண்டும். நீ யாரையும் மனதில் நினைத்திருக்கிறாயா? அல்லது நாங்களே மாப்பிள்ளை பார்க்கட்டுமா என்பதுதான் கேள்வி" என்றாள் அம்மா லட்சுமி.

"நான் யாரையும் நினைக்கவில்லை." சம்யுக்தா.

"அப்படியானால் பார்க்கிற மாப்பிள்ளை என்ன வேலை செய்யவேண்டும்? டாக்டரா, இஞ்ஜினீயரா அல்லது உன்னைப்போல் கல்லூரிப் பேராசிரியரா?"கேட்டார் அப்பா.

"உங்கள் இருவருக்கும் பிடித்தவராக இருக்கவேண்டும். முக்கியமாக மனிதனாக இருக்க வேண்டும்."

"என்னம்மா சொல்கிறாய்?"

"ஆமாம் அப்பா; நான் வேலைக்குப் போகும்வரை எனக்கு எந்த வித்தியாசமும் தெரியவில்லை. ஆனால் மக்களோடு கலந்து பயணிக்கும்போது, பணி செய்யும்போது டாக்டர்கள், இஞ்ஜினீயர்கள் என்று எல்லா தொழில் செய்பவர்களையும் பார்க்கிறேன். ஆனால் உண்மையான மனிதனை மட்டும் பார்க்க முடியவில்லை."

"என்ன உளறுகின்றாய்?" என்றாள் அம்மா.

"ஆம் அம்மா. நான் சொல்வது சத்தியம். அப்பா, எனக்கு வரும் கணவர் மது அருந்தக் கூடாது, தேவையில்லாமல் பொய் பேசக்கூடாது. இது இரண்டும் தான் என் கண்டிஷன்" என்றாள் சம்யுக்தா.

"சரிதான். புத்தர் கடுகு வாங்கி வரச்சொன்ன கதைதான்" என்று கடுகடுத்தாள் அம்மா.

"என்ன உளறுகின்றாய்?" ராஜசேகர்.

"பின்ன என்னங்க? இவள் எந்தக் காலத்தில் இருக்கிறாள்? பொய் பேசாமல் கூட இருப்பார்கள்! இந்த காலத்து பசங்க தண்ணி அடிக்காமல் இருப்பார்களா? கஷ்டம்" என்று தலையில் அடித்துக்கொண்டு தன் அந்தப்புரத்துக்கு, அதாவது சமையல் அறைக்குள் சென்றுவிட்டாள்.

அன்றுமுதல் சம்யுக்தாவிற்கு சீரியஸாக வரன் பார்க்க ஆரம்பித்து விட்டார்கள். அவர்கள் ஜாதி சங்கத்தில் அவள் போட்டோவும் பெயரும் பதியப்பட்டது. தினம் ஒரு குடும்பம் பெண் பார்க்க வந்தது. அவர்களுக்காக அம்மா ஏற்பாடு செய்த ஸ்வீட்டும், காரமும் மட்டுமே சம்யுக்தாவிற்கு பிடித்தது. ஒரு மாப்பிள்ளையையும் பிடிக்கவில்லை.

ஒருநாள் திடீரென்று வாசலில் ஒரு பெரிய கார் வந்து நின்றது. அதிலிருந்து பட்டுப் புடவையும் பழத் தட்டுகளுமாக சில பெண்களும் ஜரிகை வேட்டியும் பட்டுச் சட்டையுமாக சில ஆண்களும் வந்தனர். அதில் ஒருவன் மட்டும் ஜீன்ஸ் பேண்ட்டும் டீ ஷர்ட்டுமாக கம்பீரமாக, அழகாக இருந்தான். அவன்தான் கதிர்.

அவர்களைப் பார்த்தவுடன் ராஜசேகருக்கு திக் என்று இருந்தது. அரசியல் செல்வாக்கு மிக்க குடும்பம். சில நூல் ஆலைகளுக்கும் திரையரங்குகளுக்கும் கூட உரிமையாளர். டாஸ்மாக் கடைகூட ஒன்று இருப்பதாகக் கேள்வி. தண்ணி அடிப்பவனே வரக்கூடாது என்று மகள் சட்டம் போடுகிறாள். ஆனால் தண்ணி லாரியே வந்திருக்கிறதே! கடவுளே, என்ன செய்யப் போகிறேன் என்று திகைத்தார் ராஜசேகர்.

அவர்களைப் பணிவோடு உபசரித்து, சம்யுக்தா போட்ட நிபந்தனைகளைக் கூறினார். ஆனால் பெண் பார்க்க வந்த கதிரோ, சம்யுக்தாவின் இரண்டு நிபந்தனைகளும் தனக்கு ஏற்புடையவைதாம் என்று கூறினான்.

"அதுவரை உள்ளேயிருந்த சம்யுக்தா, வெளியில் வந்து" டாஸ்மாக் கடை வைத்துப் பொதுமக்களின் உயிரையும், சந்தோஷத்தையும் கொள்ளையடித்துப் பிழைக்கிறீர்கள். நீங்கள் மட்டும் உத்தமராக இருந்து என்ன புண்ணியம்? வெரி ஸாரி" என்று முகத்தில் அடித்தாற்போல் கூறிவிட்டு உள்ளே போய்விட்டாள்.

கதிரின் பெற்றோர், அவர்கள் மகன் சம்யுக்தாவை உயிரினும் மேலாக நேசிப்பதாகவும், 'என்ன செய்வது எல்லாம் கடவுள் விட்ட வழி' என்று கூறிவிட்டு வருத்தத்துடன் சென்றனர்.

அப்போதுதான் அத்தை ஞானம், ராஜசேகரின் தங்கை, ஊரிலிருந்து வந்தாள்.

லட்சுமி தன் நாத்தனாரிடம் சம்யுக்தா போட்ட கண்டிஷனை விவரித்தார். ஞானம் அடக்க முடியாமல் சிரித்தாள். "என்னடி பைத்தியம் மாதிரி சிரிக்கிறாய்?" என்று கோபித்துக்கொண்டார் ராஜசேகர். லட்சுமியும் ஒன்றும் புரியாமல் விழித்தாள்.

"பின்னே என்ன அண்ணா? ஒரு மனிதன்தானே டாக்டராகவோ, இஞ்ஜினீயராகவோ ஆகிறான். 'மேன் ஈஸ் எ ரேஷனல் அனிமல்' என்று படிக்கவில்லையா? மனிதன் பாதி மிருகம் பாதி." என்று முடித்தாள் ஞானம்.

"முன்னெச்சரிக்கையாக இருப்பது நல்லதுதானே!" மகளுக்குப் பரிந்து பேசினார் ராஜசேகர்.

"திருமணம் ஆகும்வரை நல்லவனாக இருந்துவிட்டு, பின்னர் நண்பர்களால் வழி மாறினால் என்ன செய்யமுடியும்? விவாகரத்தா செய்யமுடியும்? மாற்றம் ஒன்றே மாறதது இல்லையா?"

"நானும் அதையேதான் சொல்கிறேன்." லட்சுமியும் சேர்ந்துகொண்டார்.

எல்லோருக்கும் கொஞ்சம் சாப்பிட வெண்ணெய் முறுக்கும் ஆரஞ்சுப் பழரசமும் கொண்டு வந்து வைத்தாள் சம்யுக்தா. அவள் கைகளைப் பிடித்து இழுத்துத் தன் அருகில் அமர்த்திக் கொண்டாள் ஞானம்.

"என் வாழ்க்கையைப்பற்றி உனக்குத் தெரியுமா சம்யுக்தா?"

"ஏன் உங்களுக்கு என்ன? அழகிலும், அறிவிலும் உங்களுக்கு நிகரான மாமா! எந்த கெட்ட பழக்கமும் இல்லாதவர். நீங்கள் எள் எனபதற்கு முன் எண்ணெயாக நிற்பவர்" என்றாள் சம்யுக்தா.

"அதெல்லாம் கடந்த சில வருடங்களாகத்தான்." பெருமூச்செறிந்தாள் ஞானம்.

"ஏன்? அதற்கு முன்பு?" சம்யுக்தா.

"என் திருமணத்திற்கு முன்பு உன் தாத்தா, அதாவது என் அப்பா, இப்படித்தான் நிறைய நிபந்தனைகள் போட்டார். உதாரணத்திற்கு மது அருந்தக் கூடாது, சீட்டு விளையாடக் கூடாது. உன் மாமாவும் அதற்கெல்லாம் சம்மதித்துத்தான் திருமணம் செய்துகொண்டார். அவருடைய உண்மையான உழைப்பினாலும், நன்னடத்தையாலும் அவருடைய நடுத்தரக் குடும்பம் பெரும் பணக்காரக் குடும்பமாக மாறியது. எங்களுக்கும் இரண்டு குழந்தைகள் பிறந்தன. பத்து ஆண்டுகள் ஓடின...

"அதுவரை எல்லா விஷயங்களிலும், என்னைக் கலந்து ஆலோசித்தவர் பணம் பெருகப் பெருக என்னை விட்டு விலக ஆரம்பித்தார். நண்பர்களின் ஆலோசனைப்படி தான் எல்லாம்! அப்போதுதான் என் கஷ்டகாலம் தொடங்கியது.

"நண்பர்கள் ஆலோசனைப்படி திரைப்படம் எடுக்க முடிவு செய்தார். இதனால் நடிகர்களும், நடிகைகளும் வீட்டுக்கு வர ஆரம்பித்தனர். திரைப்படம் ஒன்றும் வளரவில்லை. குடியும், கூத்துமாக வீடு இரண்டு பட்டது. வேண்டாத பெண்களின் சகவாசம் வேறு. கொஞ்சம் கொஞ்சமாக பணம், வீடு எல்லாம் கடனில் மூழ்கின. இவரது உடல்நலமும், மனோதைரியமும் குன்றின. என் மாமியாரும், மாமனாரும் கவலையிலும் அவமானத்திலும் காலமானார்கள்.

"நாங்கள் அந்தக் கஷ்டத்தில் இருந்து மீண்டுவர உன் அப்பாவும், என் நாத்தனார் கணவரும்தான் பணத்தாலும் பேச்சாலும் உதவினார்கள். இப்போது சொல், என் அப்பா கூடத்தான் எத்தனையோ நிபந்தனை போட்டு என் திருமணத்தை நடத்தி வைத்தார். கடைசியில் எல்லாம் விழலுக்கு இறைத்த நீராக்கத்தானே ஆனது. 'நான் போட்ட கணக்கொன்று அவன் போட்ட கணக்கொன்று இரண்டுமே தவறானது' என்ற கண்ணதாசன் பாடல்தான் எவ்வளவு பொருத்தமானது" என்றாள் ஞானம்.

"என்ன அத்தை சொல்கிறீர்கள்? என் எதிர்ப்பார்ப்பு தவறான?"

"தவறென்று சொல்லவில்லை. 'நாம் ஒன்று நினைக்க தெய்வம் ஒன்று நினைத்தது' என்று சொல்வதில்லையா? இப்போது உன் எதிர்ப்பார்ப்பின்படி இருந்துவிட்டு, விதி வசத்தால் நாளை மாறினால் என்ன செய்யமுடியும்? அதிகமான எதிர்பார்ப்பு, அதிகமான ஏமாற்றம் ஆகிவிடக் கூடாதில்லையா? அதற்காகத்தான் சொன்னேன். என்னடா, அத்தை இப்படி பிளேடு போடுகிறாளே என்று நினைக்கின்றாயா சம்யுக்தா?" என்றாள் ஞானம்.

"அதெல்லாம் இல்லை அத்தை. நீங்கள் என்னதான் சொல்ல வருகிறீர்கள்?"

"நான் என்ன சொல்கிறேன் என்றால் நீ நினைப்பதுபோல் மாப்பிள்ளை அமைந்தால் நல்லதுதான். ஒருவேளை அவன் சில ஆண்டுகளில் வேறு மாதிரி மாறினாலும் என்னைப்போல் இல்லாமல், தைரியமாகப் போராடி, அவனை நல்ல வழிக்குக் கொண்டுவர வேண்டும். தீபம் உன் கையில்தான் இருக்கிறது. அதில் விளக்கும் ஏற்றலாம். வீட்டிற்குத் தீயும் வைக்கலாம். என்ன நான் சொல்வது?" என்றாள் அத்தை.

அமைதியாகத் தலையாட்டினாள் சம்யுக்தா.

"ஒரு வாரம் வீடு அமைதியாக இருந்தது. அம்மா மட்டும் 'வரும் நல்ல வரன்களையெல்லாம் ஒதுக்கிவிட்டால் எந்தக் காலத்தில் கல்யாணம் நடக்கும்' என்று புலம்பிக் கொண்டிருந்தாள்.

நல்ல சம்பந்தத்தைக் கைநழுவ விட்டோமே என்று அப்பாவுக்கும் கொஞ்சம் ஏமாற்றம் போலும். அம்மா சொல்லும் போதெல்லாம் லேசாகத் தலையை ஆட்டிக்கொண்டு வீட்டில் முன்னும் பின்னுமாக நடந்து கொண்டிருந்தார்.

மீண்டும் ஒருநாள் எந்த முன்னறிவிப்பும் இன்றி அதே பெரிய கார் இவர்கள் வீட்டு வாசலில் வந்து நின்றது. அன்று போலவே இன்றும் ஆண்களும், பெண்களும் ஆடம்பரமாகப் பட்டும், ஜரிகையுமாக வந்திறங்கினர். ஆனால் இன்று பழத் தட்டுகளோ, பூத் தட்டுக்களோ இல்லை.

"வரலாமா" என்று கேட்டுக்கொண்டு உள்ளே வந்து அமர்ந்தனர்.

வந்தவர்களுக்குத் தண்ணீரும் காஃபியும் கொடுத்து ஞானமும், லட்சுமியும் உபசரித்தனர். ஆனால் அவர்கள் எதையும் தொடவில்லை. அதுவரை அங்கே நின்றிருந்த சம்யுக்தா உள்ளே போகத் திரும்பினாள்.

"அம்மாடி, நீயும் உட்காரம்மா" என்றார் கதிரின் தந்தை. சம்யுக்தாவும் அமைதியாகத் தந்தையின் பக்கத்தில் அமர்ந்தாள்.

பெரியவர்தான் பேசினார். "எங்கள் மகன் 'திருமணம் என்று ஒன்று நடந்தால் அது உங்கள் மகளோடுதான்' என்று பிடிவாதமாகக் கூறிவிட்டான். எங்கள் மகனின் சந்தோஷம்தான் எங்களுக்குப் பணத்தைவிடப் பெரியது. எங்களுக்கும் உங்கள் மகளை மிகவும் பிடித்துவிட்டது. அவள் பேசிய பேச்சும் வேதம்போல் இருந்தது. அதனால் தலைவரிடம் நேரில் சென்று நடந்ததைக் கூறி எங்கள் பேரில் உள்ள டாஸ்மாக் கடைகளை மாற்றச் சொல்லிவிட்டேன். இப்போது எங்கள் வீட்டுக்கு மருமகளாக வருவாயா அம்மா?" என்றார்.

சம்யுக்தாவின் அம்மாவும், அப்பாவும் ஆவலோடு அவள் முகத்தைப் பார்க்க, அத்தை கண்ணசைக்க, சம்யுக்தா ஒரு புன்னகையுடன் தலையசைத்து சம்மதம் தெரிவித்தாள்.
கி. பானுமதி பார்த்தசாரதி.
More

காணப்படாத நிச்சயங்கள்!
Share: 




© Copyright 2020 Tamilonline