இண்டியாஸ்போரா: 10வது ஆண்டு விழா
|
|
சிருஷ்டி நாட்டியப் பள்ளி: சம்பாவனா நாட்டியத் திருவிழா |
|
- கலாரசிகன்|நவம்பர் 2022| |
|
|
|
|
இர்வைன் நகரில் இயங்கி வரும் சிருஷ்டி நாட்டியப் பள்ளி தொடர்ந்து ஏழு ஆண்டுகளாக சம்பாவனா நாட்டிய விழாவை நடத்தி வருகிறது. இந்த ஆண்டு இவ்விழா அக்டோபர் 9, 2022 அன்று நார்த்வுட் பள்ளி அரங்கில் நடைபெற்றது. 'சம்பாவனா' என்பது நாட்டிய முன்னோர்களுக்கு நாட்டியத்தின் மூலம் மரியாதை செலுத்துவதாகும். இந்த ஆண்டு நடனமாடியவர்கள் குரு சாருலதா ஜெயராமன் மற்றும் அவரது மாணவிகள் செல்வி ஸ்ரீநிதி சிவா மற்றும் செல்வி நக்ஷத்திரா சீனிவாசன் ஆகியோர்.
முதலில் நடனமாடினார் ஸ்ரீநிதி சிவா. 'அறுபடை வீடு' என்ற தலைப்பில் திருச்செந்தூர் சூரசம்ஹாரம், தந்தைக்குப் பிரணவப் பொருள் சொன்ன சுவாமிமலை, கனிக்காக ஆண்டியாக நின்ற பழனி ஆகியவற்றுக்குப் பின், ஔவையாருக்குச் சுட்ட பழம் வேண்டுமா, சுடாத பழம் வேண்டுமா என்ற சுவையான கேள்வி வந்தபோது அரங்கத்தில் கரவொலி எழுந்தது.
பின்னர், செல்வி நக்ஷத்திரா சீனிவாசன் 'சிவோஹம்' என்ற தலைப்பில் நடன நிகழ்ச்சியை வழங்கினார். 'மந்திரபுஷ்பம்' என்ற ஸ்லோகத்துக்கு நடனம் விறுவிறுப்பாக இருந்தது. தஞ்சை நால்வரால் இயற்றப்பட்ட, 'மனவி சேகொளரா' என்ற தெலுங்கில் அமைந்த வர்ணம் (சங்கராபரணம், ஆதி தாளம்) அனல் பறக்கும் பாரம்பரிய ஜதிகள், ரசிகர்களிடையே நல்ல வரவேற்பைப் பெற்றன. இந்த வர்ணம் தஞ்சை பிரகதீஸ்வரர் மேல் அமையப்பெற்றது.
நிகழ்ச்சிக்கு இந்தியாவிலிருந்து வந்திருந்த குரலிசை: போழக்குடி ஜி.ஆர். ப்ரவீண், மிருதங்கம்; மாயவரம் டி. விஸ்வநாதன், வயலின்; துரை சீனிவாசன், குழலிசை; தஞ்சை வசந்தகுமார் ஆகியோர் நிகழ்ச்சியின் வெற்றிக்கு முக்கியப் பங்களித்தனர்.
சங்கீத நாடக அகாடமி விருது பெற்ற, மறைந்த கலைமாமணி இந்திரா ராஜன் நினைவாக, குரு கலைமாமணி சாருலதா ஜெயராமனின் நாட்டிய நிகழ்ச்சி இறுதியில் அமைந்திருந்தது. நிகழ்ச்சி, அவையோரை வணங்கும் புஷ்பாஞ்சலியுடன், அகிலமே புகழும் மகா பெரியவா புகழ் பாடும் விருத்தத்துடன் தொடங்கியது. தொடர்ந்து புறநானூற்றில் ஒரு வீரத் தமிழ்த்தாய் வீரத்தை எப்படிப் போற்றினார் எனக் காண்பவர் அனைவரும் மனதில் இருந்து நீங்காக் காட்சியாகத் திருமதி சாருலதா ஜெயராமன் நாட்டியம் அமைந்திருந்தது. அடுத்து கன்னடத்தில் அமைந்த கிராமியப் பாடல் அனைவரையும் தாளமிடச் செய்தது. நிகழ்ச்சியின் நிறைவாக 'நின்றந்த மயில்' எனத் தொடங்கும் ஊத்துக்காடு வேங்கடகவியின் பாடலில், 'ஆழ்ந்து பார் உன் உள்ளே, பிருந்தாவனமே' என பக்தி மணம் அரங்கை நிரப்பியது.
முற்றிலும் வித்தியாசமான, அருமையான நாட்டிய நிகழ்வாக குரு சாருலதா ஜெயராமன் வழங்கிய நாட்டிய நிகழ்ச்சி இருந்தது என்றால் மிகையல்ல. |
|
கலாரசிகன், இர்வைன், கலிஃபோர்னியா |
|
|
More
இண்டியாஸ்போரா: 10வது ஆண்டு விழா
|
|
|
|
|
|
|