Thendral Audio Advertise About us
New User? | Forgot Password? | Email: Password: Login
Current Issue | Previous Issues | Author Index | Category Index | Organization Index | E-Magazine | Classifieds | Digital Downloads
By Category:
சின்னக்கதை | சமயம் | சினிமா சினிமா | இளந்தென்றல் | கதிரவனை கேளுங்கள் | ஹரிமொழி | நிகழ்வுகள் | மேலோர் வாழ்வில் | மேலும்
May 2022 Issue
தென்றல் பேசுகிறது | நேர்காணல் | முன்னோடி | மேலோர் வாழ்வில் | சின்னக்கதை | சமயம் | கதிரவனை கேளுங்கள் | சிறுகதை | பொது | அலமாரி
எழுத்தாளர் | இளந்தென்றல் | நிகழ்வுகள் | Events Calendar | ஹரிமொழி
சிறுகதை
Tamil Unicode / English Search
எழுத்தாளர்
மஹதி
- அரவிந்த்|மே 2022|
Share:
கவிஞர், எழுத்தாளர், கட்டுரையாளர், பத்திரிகை ஆசிரியர் போன்ற களங்களில் இயங்கியவர் மஹதி. இயற்பெயர் எஸ். ஸய்யித் அஹமத். இவர், மே 4, 1907ல், மதுரை முனிச்சாலை கரீம்சா பள்ளிவாசல் சந்தில் பிறந்தார். தந்தை ஸையத் அஷ்ரப் மார்க்க அறிஞர். தமிழ், பாரசீகம், உருது மொழிகளில் தேர்ந்தவர். சிறந்த கவிஞரும்கூட. நாவல் ஒன்றும் எழுதியிருக்கிறார். தாய் அஸீஸா பேகம் ஆர்க்காடு நவாப் பரம்பரையில் வந்தவர். அரபி, பாரசீகம், உருது மொழிகளில் தேர்ந்தவர். பெற்றோர் வழி மஹதியும் தமிழ், அரபி, உருது, பாரசீக மொழிகளைக் கற்றுத் தேர்ந்தார். பள்ளி இறுதி வகுப்பை முடித்தவர், போடிநாயக்கனூர் உயர்நிலைப் பள்ளியில் உருது கற்பிக்கும் ஆசிரியராகப் பணியில் சேர்ந்தார். இஸ்லாமியர்கள் மட்டுமல்லாது ஆர்வமுள்ள இந்துக்கள் சிலரும் அவரிடம் உருது பயின்றனர். அவர்களுள் ஒருவரான சி.எம். வேணுகோபால், மஹதியின் நெருங்கிய நண்பரானார். மஹதியின் பன்மொழித் திறமைகளை அறிந்த இவர் மஹதியை எழுத ஊக்குவித்தார். ஓய்வுநேரத்தில் பல உருதுக் கவிதைகளை எழுதினார் மஹதி. அவை அக்காலத்தில் டெல்லியிலிருந்து வெளிவந்த 'தீன் துனியா', 'ஜமீன்தார்' போன்ற புகழ்பெற்ற உருது இலக்கிய இதழ்களில் வெளியாகின. அக்கவிதைகள் மூலம் அக்காலத்தின் புகழ்பெற்ற கவிஞர்களான 'ஜிகா', 'ஸீமாப்' ஆகியோரின் நட்பு வாய்க்கப்பெற்றார் மஹதி.



நண்பர் தேவாரம் நாராயணசாமியின் தூண்டுதலால் தமிழ் இதழ்களுக்கு எழுதத் தலைப்பட்டார். முதல் கதை 1930ல், அக்காலத்தின் புகழ்பெற்ற 'ஆனந்தபோதினி' இதழில் வெளியானது. தொடர்ந்து நாராயணசாமி நடத்திய 'பாரதி' இதழில் கதை, கவிதை, கட்டுரைகளை எழுதினார். அதனைத் தொடர்ந்து மஹதியின் படைப்புகள் கலைமகள், கல்வி, ஆனந்தவிகடன், தாருல் இஸ்லாம் போன்ற இதழ்களில் வெளியாகின. கலைமகளில் 'முன்ஷி' என்ற புனைபெயரில் எழுதினார். எஸ்.ஏ. ஸய்யித் அஹமத் என்ற தனது இயற்பெயரிலும், 'எஸ்.எஸ்.ஏ.', 'அஹ்மத்', 'மதுரையார்', 'நக்கீரர்' போன்ற பல புனைபெயர்களிலும் எழுதினார். என்றாலும் நாளடைவில் 'மஹதி' என்ற பெயரையே அதிகம் பயன்படுத்தினார். 'மஹதி' என்னும் தனது புனைபெயருக்கான காரணம் குறித்து, “என் உண்மைப் பெயர் எஸ். ஸய்யித் அஹமத். வீட்டுக்கு ஓர் அஹ்மத் இருக்கிறார். ஆகையால் புதிய புனைபெயரைத் தேடினேன். கியாமத்துக்கு முன் தோன்றப் போகும் சீர்திருத்தப் பெரியார் 'மஹதி'யின் ஞாபகம் வந்தது. அவர் பெயரைப் புனைந்து கொண்டேன்” என்கிறார்.



1933ல், 'வெடிகுண்டு' என்ற வார இதழைத் தொடங்கினார் மஹதி. அதில் இஸ்லாமிய சமூகத்தில் இருந்துவந்த மூடநம்பிக்கைகளைச் சாடி எழுதினார். அதனால் மார்க்க அறிஞர்கள் உள்படப் பலரது எதிர்ப்புக்கு உள்ளானார். இறுதியில் தந்தையே இவரைத் தீவிரமாகக் கண்டிக்கவும் தண்டிக்கவும் முற்பட்டதால், தந்தைக்கு உறுதிமொழி அளித்து அப்பத்திரிகையை நிறுத்தினார். என்றாலும் இதழ் நடத்தும் ஆர்வம் குன்றவில்லை. தனது நண்பரான வேணுகோபாலுடன் இணைந்து 'சிட்டி கெஜட்' என்ற மாவட்டச் செய்தி இதழ் ஒன்றைத் தொடங்கினார். ஓராண்டு வரை வெளிவந்த இந்த இதழ் பொருளாதாரச் சிக்கல்களால் நின்றுபோனது. அக்காலக்கட்டத்தில் 'எஸ்.சையது அஹமது' என்னும் தனது இயற்பெயரில் 'ருஷியப்புரட்சி' என்ற நூலை எழுதி வெளியிட்டார். அது பரவலான வரவேற்பைப் பெற்றது. தொடர்ந்து நண்பர் நவாப்ஜானின் ஆதரவுடன் 'நவயுக வெளியீடு' என்னும் ஓர் விளம்பர இதழைத் தொடங்கி நடத்தினார். ஆரம்பத்தில் இலவச இதழாக வெளிவந்த இது பின்னர் ஓரணா மற்றும் இரண்டணாவிற்கு விற்கப்பட்டது. பொருளாதார நெருக்கடியால் இவ்விதழும் நின்றுபோனது.



தனது இளமைக்காலத்தில் முற்போக்குச் சிந்தனையாளராக இருந்தார் மஹதி. ப. ஜீவானந்தம், பாரதிதாசன் போன்றோர் இவரது நண்பர்களாக இருந்தனர். பிற்காலத்தில் திராவிட இயக்கம் இவரை ஈர்த்தது. பெரியார் ஈ.வெ.ரா., அண்ணா ஆகியோரது மதிப்பைப் பெற்றார். பத்திரிகை ஆசிரியர் உள்பட பல்வேறு பணிகளில் ஈடுபட்டிருந்த மஹதி, குடும்பநிலைமை கருதி, மதுரையில் Lotus என்னும் புகைப்பட அட்டை தயாரிக்கும் நிறுவனத்தின் பயண முகவராகப் பொறுப்பேற்றுக் கொண்டார். அது குறைந்த ஊதியம் தரும் பணியாக இருந்தாலும், அதன்மூலம் இந்தியா முழுமையும் பயணப்படும் வாய்ப்பு அமைந்ததால் விரும்பி அப்பணியை ஏற்றார். அதன்மூலம் பரந்துபட்ட அனுபவம் பெற்றார். மலையாளம், தெலுங்கு, ஹிந்தி, பஞ்சாபி, மராத்தி, வங்காளம் எனப் பல மொழிகளைக் கற்கும் வாய்ப்பும் அப்பணியால் அமைந்தது. மஹதியின் துணைவியார் ஜைனப் பேகம். கணவரது பணிகளுக்கு மிகவும் உறுதுணையாக இருந்தார். இவர்களுக்கு அப்துல் ரகுமான் (கவிக்கோ), அப்துல் கரீம், அஸீஸா பேகம், அப்துல் ரஷீத் என நான்கு மகவுகள். தனது வறுமையான சூழலிலும் அவர்களை நன்கு படிக்கவைத்து உயர்த்தினார்.



கிடைத்த ஓய்வுநேரத்தில் இதழ்களுக்கு எழுதினார். இஸ்லாமிய இதழ்களான 'முஸ்லிம் முரசு', 'மணிவிளக்கு', 'பிறை', 'ஷாஜஹான்', 'குர் ஆனின் குரல்' போன்றவற்றில் நிறைய கதை, கட்டுரை, மொழிபெயர்ப்புகளைத் தந்துள்ளார். 'நாம் ஆண்ட தென்னகம்', 'பெருமானாரின் பிரியத் தோழர்கள்', 'முதல் சுதந்திர வீரர் மதுரை கான்சாஹிப்' போன்ற கட்டுரைத் தொடர்களை அவ்விதழ்களில் எழுதினார். 'மணி விளக்கு' இதழில் இவர் எழுதிய 'தங்கநிலா' முக்கியமான வரலாற்றுத் தொடராகும். பாமினி சுல்தான்கள் மற்றும் விஜயநகரப் பேரரசை மையமாக வைத்து அந்த நாவல் தொடரை எழுதியிருந்தார். மஹதியின் சிறுகதைகளும் முக்கியமானவை. சமூகக் கதைகள் மட்டுமல்லாமல் வரலாற்றுச் சிறுகதைகளும் நிறைய எழுதியிருக்கிறார். உண்மைச் சம்பவங்களை அடிப்படையாக வைத்து வரலாற்றுக் கதைகள் எழுதுவதில் இவருக்கு மிகுந்த ஆர்வமிருந்தது.

'டாக்டர் நடித்த நாடகம்', 'வியாபாரி', 'ஜஹாங்கீரின் தீர்ப்பு', 'ஆயிஷா ஸுல்தானா', 'சந்தாபாய்', 'அனார்க்கலியின் தங்கை', 'நல்ல முடிவு', வைரமோதிரம்', 'பிர்தவ்ஸியின் மகள்', 'பகுதாது வீரன்', 'ருஸ்தும்-ஸொஹராப்', 'மனநிறைவு', 'மன்னிப்பு', போன்றவை இவரது குறிப்பிடத்தகுந்த சிறுகதைகளாகும். 'பிறை தந்த செய்தி', 'முஸ்லிம் மன்னர்களும் தமிழ் மன்னர்களும்', 'இஸ்லாமியச் சிறுகதைகள் எழுதுவது எப்படி?' போன்றவை இவரது குறிப்பிடத்தகுந்த கட்டுரைகள்.

மஹதியின் நூல்கள்

சிறுகதைத் தொகுப்பு: இமயத்தின் சிரிப்பு.

நாவல்: தங்க நிலா (நூலாக்கம் பெறவில்லை)

கட்டுரை நூல்கள்: ருஷியப் புரட்சி, மாவீரர் கான்சாஹிப், முதல் சுதந்திரப் போர்வீரர் குஞ்சாலி மரைக்காயர், இஸ்லாமிய மார்க்க மேதைகள், ஹலரத் முஹம்மது (ஸல்-அம்)

மொழிபெயர்ப்பு நூல்கள்: (மூலம்: மௌலானா ஸையித் அபுல் அஃலா மௌ தூதி) - இதுதான் இஸ்லாம், இருளும் ஒளியும், மனித இனத்தின் ஆக்கமும் அழிவும், ஒழுக்கம் பேண ஒரே வழி, மறை காட்டும் இறைதூதர், முஸ்லிமின் அடிப்படைக் கடமை, அறப்போர்; கதைக்குள் கதை (மூலம்: மாயில் கைராபாதி); தேன் துளிகள் (மூலம்: மௌலானா அஃப்ஸல் ஹுஸைன்) மற்றும் பல.


மஹதி பல்வேறு இதழ்களில் எழுதிய சிறுகதைகள் தொகுக்கப்பட்டு, 1957ல், 'இமயத்தின் சிரிப்பு' என்ற தலைப்பில் நூலாக வெளியானது. அதன் முன்னுரையில் மஹதி, “தமிழில் முஸ்லிம்களின் வாழ்க்கையையும், உணர்ச்சிகளையும் படம்பிடித்துக்காட்டும் கதைகள் அதிகமாக வரவில்லை. ஆகவே நான் இதில் அதிகக் கவனம் செலுத்தியிருகிக்றேன். என் கதைகளில் பிரசாரம் இருப்பதாகக் கூறலாம். மக்களின் வாழ்க்கை, வளமாகவும் சிக்கல்கள் இல்லாமலும் இருந்தால் கலை, கலைக்காகவே இருந்துவிட்டுப் போகலாம். கலை மக்களிடையே பிரசாரம் செய்ய வேண்டிய அவசியம் நேரும்போது, செய்வதில் தவறு ஒன்றும் இல்லை என்பதே என் கட்சி” என்கிறார். பாரதிதாசனின் 'அழகின் சிரிப்பு' என்னும் தலைப்பால் கவரப்பட்டு, இந்த நூலுக்கு 'இமயத்தின் சிரிப்பு' என்ற பெயரைச் சூட்டியவர், மஹதியின் மகனான 'கவிக்கோ' அப்துல் ரகுமான்.



பரந்துபட்ட பார்வை உடையவர் மஹதி. இந்து-முஸ்லிம் ஒற்றுமையைத் தனது படைப்புகளில் வலியுறுத்தியவர். 'செய்குத் தம்பி முழக்கம்' என்ற நூலின் பொறுப்பாசிரியராகப் பணிபுரிந்த அனுபவமும் இவருக்கு உண்டு. கே. சையத் அப்துல் கபூருடன் இணைந்து 'முஸ்லிம் சமுதாயம்' என்ற இதழையும் நடத்தியிருக்கிறார். 'இஸ்லாமியச் சோலை' என்ற இதழையும் சிலகாலம் நடத்தியுள்ளார். 1960ல், சென்னையில் தொடங்கப்பெற்ற முஸ்லிம் தமிழ் எழுத்தாளர் சங்கத்தின் தலைவராகவும் பொறுப்பு வகித்திருக்கிறார். இவரது எழுத்துலகச் சாதனைகளுக்காக 1974ல், சென்னை புதுக்கல்லூரியில் நிகழ்ந்த இஸ்லாமியத் தமிழாராய்ச்சி மாநாட்டில் பொற்கிழி வழங்கிச் சிறப்பிக்கப்பட்டிருக்கிறார்.

தமிழின் மூத்த மற்றும் முன்னோடி இஸ்லாமியப் படைப்பாளியாக மதிப்பிடப்படும் மஹதி ஆகஸ்ட் 2, 1974ல் காலமானார்.
அரவிந்த்
Share: 




© Copyright 2020 Tamilonline