Thendral Audio Advertise About us
New User? | Forgot Password? | Email: Password: Login
Current Issue | Previous Issues | Author Index | Category Index | Organization Index | E-Magazine | Classifieds | Digital Downloads
By Category:
சின்னக்கதை | சமயம் | சினிமா சினிமா | இளந்தென்றல் | கதிரவனை கேளுங்கள் | ஹரிமொழி | நிகழ்வுகள் | மேலோர் வாழ்வில் | மேலும்
May 2022 Issue
தென்றல் பேசுகிறது | நேர்காணல் | முன்னோடி | மேலோர் வாழ்வில் | சின்னக்கதை | சமயம் | கதிரவனை கேளுங்கள் | சிறுகதை | பொது | அலமாரி
எழுத்தாளர் | இளந்தென்றல் | நிகழ்வுகள் | Events Calendar | ஹரிமொழி
சிறுகதை
Tamil Unicode / English Search
எழுத்தாளர் - சிறுகதை
ஆயிஷா ஸுல்த்தானா
- மஹதி|மே 2022|
Share:
பொழுது சாய்ந்ததும், சக்ரவர்த்தி ஷாஜஹானின் இளைய குமாரி ரோஷனாராவின் அரண்மனை ஒளிபெற்று விளங்கிற்று. அன்று நவ்ரோஸ் விழா. மொகலாய அரச குடும்பத்தினர் அனைவரும் விருந்துக்காக வந்து குழுமியிருந்தனர். அந்தப்புரம் ஒரே கோலாகலமாயிருந்தது.

தோட்டத்தில் இளம்பெண்கள் கூடி மத்தாப்புகளைக் கொளுத்திக் கொண்டிருந்தார்கள், அந்த அழகியருள், நட்சத்திரங்களினூடே தோன்றும் பூரண நிலவைப் போன்று, ஷாஜஹானின் இரண்டாவது குமாரர் ஷுஜாவின் குமாரி ஆயிஷா ஸுல்த்தானாவும் காணப்பட்டாள். அவளுடைய அழகிய முகம், மத்தாப்புகளின் பல வர்ண ஒளிபட்டு மேலும் எழில்பெற்று விளங்கிற்று.

அந்தக் கண்கொள்ளாக் காட்சியை அருகிலேயே செடி மறைவிலிருந்து, அவுரங்கஜேபின் மூத்த குமாரனான முஹம்மத் பார்த்து ரசித்துக் கொண்டிருந்தான். திடீரென பெண்களிடையே பரபரப்பு ஏற்பட்டது. ஸுல்த்தானா அலறினாள். அவளுடைய ஆடையில் அகஸ்மாத்தாய் மத்தாப்பு விழுந்து தீப்பிடித்துக் கொண்டது.

ஆபத்தை உணர்ந்ததும், செடி மறைவிலிருந்த முஹம்மத் பாய்ந்து வந்தான். இதர பெண்கள் விலகிக் கொண்டனர். முஹம்மத் ஸுல்த்தானாவின் ஆடைகளைக்
கைகளால் கசக்கித் தீயை அணைத்தான். நல்லவேளையாக அவள் உயிர் தப்பினாள்; ஆனால் முஹம்மதின் கைகளில் தீக்காயங்கள் பட்டன.

சிறிது நேரத்தில் அவர்களுடைய அத்தை ரோஷனாரா வந்து இருவரையும் உள்ளே அழைத்துச் சென்றாள்.

அன்றிரவு வெகுநேரம் கழித்தே அனைவரும் படுக்கைக்குச் சென்றனர். முஹம்மத் கையில் கட்டுகளுடன் படுக்கையில் புரண்டுகொண்டு கிடந்தான். அவனுக்குத் தூக்கம் வரவில்லை. திரை விலகியது. ஸுல்த்தானா உள்ளே நுழைந்தாள். அவள் வருவதைக் கண்டதும் முஹம்மத் எழுந்து உட்கார்ந்தான்.

படுக்கையருகே வந்ததும் ஸுல்த்தானா வெட்கத்தால் தலைகுனிந்த வண்ணம், "தற்போது வலி எப்படி இருக்கிறது?" என்று கேட்டாள். முஹம்மத் மிகவும் உற்சாகத்தோடு "வலியா? அது அப்போதே மறைந்து விட்டதே! இத்தகைய அநுதாபமுள்ள வைத்தியர் அருகில் இருக்கும்போது, வலி போகாமல் இருக்க, அதற்கென்ன அவ்வளவு துணிச்சல்?" என்றான் முகத்தில் புன்சிரிப்புத் தவழ.

"போதும்! நிம்மதியாகத் தூங்குங்கள். காலையில் கட்டை அவிழ்த்து வேறு மருந்து போடுகிறேன்"

"நான் எப்படி நிம்மதியாகத் தூங்க முடியும்?"

"ஏன்?"

"கைக்காயத்துக்கு மருந்து போட்டாய்; ஆனால் நெஞ்சுக் காயத்துக்கோ....?"

இதைக் கேட்டதும் ஸுல்த்தானாவின் கன்னங்கள் 'குப்'பென்று சிவந்தன. "நீங்கள் குறும்புக்காரர்" என்று கூறிவிட்டு விறுவிறுவென்று அவ்விடத்தை விட்டுப் போய்விட்டாள்.

முஹம்மத் அவள் நடந்துபோகும் அழகை ரசித்துக் கொண்டே படுக்கையில் சாய்ந்தான்.

★★★★★


சில தினங்களுக்குப் பின் முஹம்மதும், ஆயிஷா ஸுல்த்தானாவும் தோட்டத்திலுள்ள செடிகளின் மறைவில் உரையாடிக்கொண்டிருந்தார்கள். எப்போதும் தூர நின்றே பேசும் ஸுல்த்தானா, அன்று முஹம்மதின் பரந்த மார்பில் முகத்தைப் புதைத்து விம்மி விம்மி அழுது கொண்டிருந்தாள்.

"என் உயிருக்குயிரே! வீரப்பெண்கள் அழுவது வீரத்துக்கே இழுக்காகும். நம்மை எந்தச் சக்தியும் பிரிக்கமுடியாது. என் உயிருக்கே ஆபத்து வரினும் என் காதலை இழக்க விரும்பமாட்டேன். காதலும் கடமையும் மோதும்போது, நிச்சயமாய்க் காதலைத்தான் ஆதரிப்பேன். உன்னை ஒருபோதும் கைவிடமாட்டேன். இது சத்தியம்" என்று அவளுடைய கையில் அடித்துக் கொடுத்தான் முஹம்மத். இவ்வுரையைக் கேட்டதும் ஆயிஷா ஸுல்த்தானா புளகாங்கிதமடைந்தாள். "இதே நம்பிக்கையைத்தான் தங்களிடம் வைத்திருக்கிறேன்" என்றாள் ஆயிஷா. முஹம்மத் அவள் கண்ணீரைத் துடைத்து விட்டான்.

"அன்பே! நீ கொஞ்ச நாள் உன் தந்தையிடம் வங்காளத்திற்குப் போயிருக்கத்தான் வேண்டும். இங்கு குழப்பம் தலைகாட்டும் போல் தோன்றுகிறது. உன் தந்தையை விட்டுப் பிரிந்திருப்பது தற்போது நல்லதல்ல. கொஞ்சகாலமே நாம் இருவரும் பிரிந்திருப்போம். வெகு சீக்கிரமே நான் உன்னை வந்து சந்திப்பேன்" என்று முஹம்மத் கூறினான்.

அடுத்த நாளே வங்காளத்தின் கவர்னராயிருந்த தன் தந்தை ஷுஜாவிடம் ஆயிஷா ஸுல்த்தானா போய்ச் சேர்ந்தாள்.

ஷாஜஹானின் புத்திரர்களிடையே போர் மூண்டது. அவுரங்கஜேப் ஆட்சியைக் கைப்பற்றினார். வங்காளத்திலிருந்த ஷுஜாவும், அவுரங்கஜேபுக்கு விரோதமாகக் கிளம்பவே, அவரை அடக்கப் பெரும்படை ஒன்றை அவுரங்கஜேப் அனுப்பினார். அப்படைக்குத் தலைமை வகித்துச் செல்லும்படி தம் குமாரன் முஹம்மதுக்கு ஆணை பிறப்பித்தார்.

முஹம்மதின் தலைமையில் வங்காளத்தை நோக்கிப் படை புறப்பட்டது. இதைக் கேள்விப்பட்ட ஷுஜா தமது சின்னஞ்சிறு சேனையுடன் முஹம்மதை எதிர்க்க ஆயத்தமானார். இளநங்கை ஆயிஷா ஸுல்த்தானா தந்தையுடன் ஒத்துழைக்கத் தன்னைத் தயார்படுத்திக் கொண்டாள்.

இரவு பன்னிரண்டு மணியிருக்கும். பூரணச்சந்திரன் பிரகாசித்துக் கொண்டிருந்தான். ஆற்றோரத்தில் ஷுஜாவின் படை பாசறையில் தங்கியிருந்தது. தந்தையுடனிருந்த ஸுல்த்தானாவுக்குத் தூக்கம் வரவில்லை. அவள் நெஞ்சு எண்ணாத எண்ணமெல்லாம் எண்ணி எண்ணி வேதனைப் பட்டுக்கொண்டிருந்தது. "காதலும் கடமையும் மோதும்போது, நிச்சயமாய்க் காதலையே ஆதரிப்பேன்" என்று சத்தியம் செய்து கொடுத்தானே அந்த முஹம்மத்! சத்தியம் செய்வது ஆண்களுக்கு பிரியாணி சாப்பிடுவது போல இருக்குமோ? ஆண்கள் வாக்குச்சுத்தம் இல்லாதவர்கள் - வேஷதாரிகள் என்று சபித்துக்கொண்டிருந்தது, அவளுடைய இளநெஞ்சம்.

படுக்கையிலிருந்து எழுந்தாள். உடைவாளை எடுத்துச் சொருகிக்கொண்டு கூடாரத்தை விட்டு வெளியே வந்தாள். அவள் தோழி ரஹமத் அவளைப் பின்தொடர்ந்தாள் ஆற்றோரம் இருவரும் மணலில் உட்கார்ந்தனர்.

"என்ன சிந்திக்கிறீர்கள் இளவரசி? பெரும் படையுடன் தந்தையை எதிர்க்கவரும் காதலரோடு எப்படிப் போரிடுவது என்றா?" என்று கேட்டாள் ரஹமத்,

"அவருக்குத் தம் கடமையே பெரிதானால் என் கடமையே எனக்கும் பெரிது. தம் வாக்குறுதியை மீறி என்னை எதிர்க்கவரும் அவர், தற்போது என் எதிரியே. என் தந்தையை எதிர்த்தால் என்ன? என்னை எதிர்த்தால் என்ன? நான் போரிட்டே தீருவேன்." என்றாள் ஸுல்த்தானா.

"அவர் என்ன செய்வார்? தந்தையின் ஆணையை வேறு வழியின்றி நிறைவேற்ற வேண்டியவராகத்தானே இருக்கிறார். எய்தவனிருக்க அம்பை நொந்து என்ன பயன்?" என்றாள் ரஹமத்.

இச்சமயத்தில் ஆற்றின் நடுவே ஏதோ சலசலப்புக் கேட்டது. இருவரும் கூர்ந்து கவனித்தார்கள். யாரோ அவர்கள் இருப்பிடத்தை நோக்கி நீந்தி வருவதைப் போல் பட்டது.

"யாராவது எதிரியின் உளவாளியாயிருக்கலாம் ரஹமத்! நீ பின்னால் நில்!" என்று ஸுல்த்தானா தன் உடைவாளை உருவிக்கொண்டு எழுந்தாள்.

"பேகம் சாஹிபா! தாங்கள் தனியே ஒரு ஆணை எதிர்ப்பது நல்லதல்ல. வாருங்கள் ஓடிப்போய் படை வீரருக்கு எச்சரிக்கை செய்து விடுவோம்" என்றாள் ரஹமத்.

இதற்குள் நீந்தி வருபவன் வெகு சமீபத்தில் வந்துவிடவே, ரஹமத் ஓடிவிட்டாள். ஸுல்த்தானா நெஞ்சைத் திடப்படுத்திக்கொண்டு அவ்விடமே நின்றாள்.

பூரணச் சந்திரனை மேகம் மறைத்தது. ஒருவர் முகம் ஒருவருக்குப் புலப்படவில்லை. நீந்தி வந்தவன் கரையேற முயன்றான். அவனுக்குக் கொஞ்சமும் சந்தர்ப்பம் கொடுக்காமல் அவன்மீது பாய்ந்தாள் ஸுல்த்தானா. அவனும் விரைந்து வாளை உருவி வீசினான். ஆற்றில் எழுந்த அலை அவ்வீரனைக் கொஞ்சம் குலுக்கிற்று. அந்தத் தடுமாற்றத்தில் இருக்கும்போது ஸுல்த்தானா ஓங்கி வாளை வீசினாள். அது அவ்வீரனின் கையில் பட்டது. அவனுடைய வாள் தூரப்போய் விழுந்தது. அவ்வாளை அவன் மீண்டும் எடுத்துக் கொள்ளா வண்ணம் ஸுல்த்தானா ஓடிப்போய் அதைக் காலால் மிதிக்கப் போனாள். அச்சமயம் அவ்வீரன் ஸுல்த்தானாவின் கரத்தைப் பிடித்துக் கொண்டான். அவள் திமிறினாள்; அவள் கையிலிருந்து வாள் பிடுங்கப்பட்டது. அவ்வீரனின் கையிலிருந்த தன் கையை விடுவித்துக் கொள்ள அவளால் முடியவில்லை. "நீ யார்?" என்று மிரட்டினாள் ஸுல்த்தானா.

"ஸுல்த்தானா சாஹிபாவா?" என்றான் அவ்வீரன்,

"யார்? முஹம்மதா?" என்றாள் ஸுல்த்தானா.

"ஆம்! உன் அருமைக் காதலன்தான்!" என்றான் முஹம்மத்

"தூர நில்! கிட்ட வராதே! உன் வாளை நான் எடுத்துக்கொள்கிறேன். என் வாளை நீ வைத்துக்கொள். வீரனைப்போல சண்டை செய்! காதலைக் காட்டி என்னைச் சிறைப் பிடித்துவிட முடியாது!" என்றாள் ஸுல்த்தானா.

"அப்படியானால் இதோ! கழுத்து தயார்" என்றான் முஹம்மத்.

"நான் செத்த பாம்பை அடிக்க விரும்பவில்லை. அது என் வீரத்துக்கே இழுக்காகும். எடு வாளை! நடக்கட்டும் போர்!" என்று கர்ஜித்தாள் ஸுல்த்தானா.

"யார், யாருடன் போர் செய்வது? நமது ஈருயிரும் ஓருயிராயிற்றே!"

"வீண் வார்த்தைகளால் பசப்ப வேண்டாம். என் காதலைக் கருவியாகக் கொண்டு, என் தந்தையைக் கைப்பற்றிவிட முடியாது. இந்தச் சடலம் வீழ்ந்த பின்தான் ஓர் அடியேனும் இவ்விடத்தை விட்டு மேலே வைக்க முடியும். உம்! எடு வாளை!..." ஸுல்த்தானா சீறினாள்.

"வாளைப் பிடிக்கவே முடியாவண்ணம் என் கையை வெட்டி விட்டாய். நான் எப்படி வாளை எடுத்துப் போரிட முடியும்? அன்று தீக்காயங்களுக்கு அனுதாபத்தோடு மருந்து பூசிக் கட்டுப்போட்ட அதே கரம், இன்று என் கையையே வெட்டிவிடத் தீர்மானித்து விட்டது ஏனோ? அன்று என் மார்புமீது முகத்தைப் புதைத்து விம்மி விம்மி அழுதது யாவும் பொய்தானா?" என்றான் முஹம்மத் குமுறிக்கொண்டு.

"காதலும், கடமையும் மோதும்போது, நிச்சயமாய்க் காதலைத்தான் ஆதரிப்பேன் என்று செய்து கொடுத்த சத்தியம் பொய்யாகும் போது, இதென்ன பிரமாதம்?" ஸுல்த்தானா மீண்டும் சீறினாள்.

"அன்பே! என்னை மன்னித்துவிடு! என் சத்தியத்தைக் காப்பாற்றவே படையுடன் புறப்பட்டு வந்தேன். நான் படையுடன் புறப்படத் தயங்கியிருந்தால், என் தந்தை என்னைச் சிறைப்பிடித்தோ, கொன்றோ இருப்பார். நான் வந்ததினால்தான் உன்னைச் சந்திக்க நேர்ந்தது. வேறு யாரேனும் வந்தால் நிச்சயம் உன்னையும், உன் தந்தையையும் கொன்றே தீர்ப்பார்கள். அவ்வித நிலைமையிலிருந்து உன்னைக் காப்பாற்றவே நான் இந்த பயங்கர உத்தரவுக்குப் பணிந்தேன். நான் படையிலிருந்து யாருக்கும் தெரியாவண்ணம் தப்பி ஓடிவந்து விட்டேன். இனி உங்களுடனேயே இருப்பேன். ஆண்டவன் சாட்சியாக நான் உதவியாளனாக வந்திருக்கிறேனே யொழிய, எதிரியாகவோ, எதிரியின் உளவாளியாகவோ வரவில்லை. என்னை நம்பு ஸுல்த்தானா!" என்று கெஞ்சத் தொடங்கினான் முஹம்மத்.

அவனுடைய வார்த்தைகளில் உண்மை தொனித்தது. ஸுல்த்தானாவின் மனம் நெகிழ்ந்தது. இதற்குள் முஹம்மத் வெட்டுப்பட்ட தன் கையை மறுகையால் பிடித்துக்கொண்டு உட்கார்ந்து விட்டான்.

மேகத்திலிருந்து சந்திரன் வெளிவந்தான். முஹம்மதின் கரத்திலிருந்து இரத்தம் கசிவதை ஸுல்த்தானா கண்டாள். அவள் மனம் உருகிப் போய்விட்டது. இதற்குள் ரஹமத் ஒரு பெரும் படையைத் திரட்டிக்கொண்டு வந்துவிட்டாள். அவர்கள் முஹம்மதைக் கைது செய்து பாசறைக்கு அழைத்துச் சென்றனர்: ஸுல்த்தானா அவனை விட்டுவிடும்படிக் கதறிக்கொண்டே அவர்களைப் பின் தொடர்ந்தாள்.

உண்மையை அறிந்த ஷுஜா, முஹம்மதை விடுவித்ததுமன்றி, தன் மகள் ஸுல்த்தானாவை அவனுக்கு அடுத்த நாளே வெகு எளிய முறையில் நிக்காஹ் செய்து கொடுத்தார். ஸுல்த்தானா முஹம்மதின் காயம்பட்ட கைக்குத் தொடர்ந்து சிகிச்சை செய்து வந்தாள்.

படைக்குத் தலைமை வகித்துச் சென்ற மூத்த குமாரன் முஹம்மத், ஷுஜாவுடன் சேர்ந்துவிட்டதாக அறிந்ததும் அவுரங்கஜேப் அவ்விருவரையும் கைது செய்து வரும்படி வேறு ஒரு படையை அனுப்பி வைத்தார். அப்பெரும் படையை எதிர்த்து நிற்கச் சக்தியற்றவர்களாகிய ஷுஜாவும், முஹம்மதுவும் அருகில் இருந்த அரக்கான் மன்னனுக்குக் கடிதம் எழுதினார்கள். அந்த மன்னன், அவர்கள் தன்னிடம் வந்துவிட்டால் அடைக்கலம் தருவதாக மறுமொழி அனுப்பினான். ஷுஜாவும், ஸுல்த்தானாவும், முஹம்மதுவும் அரக்கான் சென்றனர்.

அரக்கான் எல்லைக்குள் நுழைந்ததும், அந்த மன்னன் தங்களைக் கைது செய்யப் படையுடன் வருவதை அறிந்து திடுக்கிட்டு மோசம்போனதை உணர்ந்தனர். ஸுல்த்தானாவைக் கூடாரத்தில் விட்டுவிட்டு ஷுஜாவும், முஹம்மதும் அப்படையை எதிர்க்கத் தயாராயினர். இருவரும் வீராவேசத்தோடு சண்டை செய்தனர். யுத்தம் நடந்துகொண்டிருக்கும் போது, ஓர் இளைஞன் குதிரைமீது ஓடிவந்தான். அருகில் வந்ததும் வாளை உருவி அரக்கான் மன்னனை எதிர்க்கத் தொடங்கினான். அரக்கான் மன்னனின் வாள்வீச்சு முஹம்மதின்மீது விழ இருந்த சமயத்தில் அவ்விளைஞன் ஊடே வரவே, அவனுடைய தலை துண்டிக்கப்பட்டுக் கீழே உருண்டது. உருண்டபோதே தலையிலிருந்த அழகிய தலைப்பாகை கலைந்து, நீண்ட கருங்கூந்தல் தரையில் புரண்டது.

"ஆ! ஸுல்த்தானா!.... நீயா? ஆண்வேடம் பூண்டு எங்களைக் காப்பாற்றவா வந்தாய்?" என்றான் முஹம்மத்.

முஹம்மதும், ஷுஜாவும் கைதிகள் ஆயினர்.

இருவரும் ஒளரங்கஜேபிடம் ஒப்பிக்கப்பட்டனர். முஹம்மத் ஆயுள் முழுதும் சிறையில் அடைக்கப்பட்டான். ஷுஜா வழியில் மாயமாய் மறைந்தார். என்ன ஆனார் என்று இதுவரை தெரியாது.

முஹம்மத் காதலுக்காகப் பட்டத்தை இழந்தான். ஆயிஷா ஸுல்த்தானா காதலுக்காக உயிரை இழந்தாள்,
மஹதி
Share: 




© Copyright 2020 Tamilonline