|
வாரியார் என்னும் வாரிதி |
|
- |மார்ச் 2022| |
|
|
|
|
கங்கைப் பெருக்கு நான் மாதந்தோறும் மதுரையில் விரிவுரை புரிவது வழக்கம். மதுரையில் முனிசிபல் மேனேஜரும் என் நண்பருமாகிய வி.எஸ். லோகநாதப் பிள்ளை அவர்களின் இல்லத்தில் தங்குவேன். மதுரையில் நீதிபதி ஏ.எஸ்.பி. ஐயர். (இவர் மலையாளம்) பேச்சில் வல்லவர். மதுரையில் நடைபெறும் 'கல்ச்சர் லீக்' என்ற சபையில் என்னை அழைத்து விரிவுரை செய்விக்குமாறு லோகநாதப் பிள்ளையைக் கேட்டுக்கொண்டார்கள். அப்பொழுது அந்த நீதிபதி, லோகநாதப் பிள்ளையைப் பார்த்து "வாரியாரின் விரிவுரை நாற்பத்தைந்து நிமிடத்திற்கு மேல் இருக்கக்கூடாது" என்றார். லோகநாதப் பிள்ளை அவரைப் பார்த்து "வாரியார் சிறந்த பேச்சாளர். இன்னும் சிறிது நேரம் அதிகமாக இருந்தால் நன்றாக இருக்கும்" என்றார். நீதிபதி, "எத்தனை பெரிய அறிஞராயினும் நேரம் அதிகம் எடுத்துக்கொள்ளக் கூடாது" என்று கண்டிப்பாகக் கூறினார்.
அன்று ஞாயிறு. லோகநாதப் பிள்ளை என்னைக் காரில் அழைத்துக்கொண்டு போகும்பொழுது, நீதிபதிக்கும் தனக்கும் இடையில் நிகழ்ந்த உரையாடலைக் கூறி, "ஐயா! நீதிபதி வாயால் 'இன்னும் அரை மணி நேரம் பேசுங்கள்' என்று சொல்ல வேண்டும். அப்படி அவர் சொல்லுகின்ற அளவிற்கு உங்கள் பேச்சின் திறம் இருக்க வேண்டும். அப்படிச் பேசினால்தான் தங்களை நான் சிறப்பாகக் கருதுவேன்" என்றார்.
நீதிபதி தலைமையில் விரிவுரை தொடங்கியது. நான் 'பக்தி' என்னும் பொருள்பற்றிப் பேசினேன். அங்கிருந்தோர் அனைவரும் அறிஞர்கள். அதனால் பேச்சு மிகவும் உயர்வாக அமைந்திருந்தது. நாற்பத்தைந்து நிமிடம் முடிந்தவுடன் என் பேச்சு முடிவு பெற்றது. நீதிபதி எழுந்து என்னைப் பார்த்து, "இன்னும் அரை மணி நேரம் பேசவேண்டும்" என்று கேட்டுக் கொண்டார். நான் லோகநாதபிள்ளையைப் பார்த்து கண் இமைத்தேன். அவர் என்னைப் பார்த்துப் புன்முறுவல் பூத்தார். பிறகு அரைமணி நேரம் பேசினேன். நீதிபதி, தன் பின்னுரையில் "வாரியார் வாக்கு கங்கா ஜலம் போலப் பெருக்கெடுத்து ஓடுகின்றது. மிக உயர்ந்த தத்துவ முத்துக்கள் அவர் வாக்கிலிருந்து உதிர்கின்றன" என்று பாராட்டிப் பேசினார்.
பகுத்தறிவாளரின் பாராட்டு வேலூரில் என்னுடைய தொடர் விரிவுரை நடைபெற்றுக் கொண்டிருந்தது. முனிசிபல் மண்டபத்தில் புரட்சிக்கவிஞர் பாரதிதாசன் அவர்கள் தலைமையில் தமிழர் முன்னேற்றக் கூட்டம் நடைபெற இருந்தது. சில அன்பர்கள் அந்த நிகழ்ச்சியில் என்னைப் பேச அழைத்துச் சென்றார்கள். நான் ஒருவன்தான் திருநீறு பூசிக்கொண்டும், உருத்திராட்ச மாலை அணிந்து கொண்டும் சென்றேன். பாரதிதாசன் என்னைக் கண்டு, 'இவர் புராணப் பிரசங்கியாயிற்றே! இவருக்கு ஆழ்ந்த கருத்து என்ன தெரியும்?' என்று அலட்சியமாகக் கருதினார் அவர் முன்னுரை கூறி, என்னை அரை மணி நேரத்துக்கு மேல் ஒரு நிமிடமும் பேசக்கூடாது. இன்னும் பலர் பேச இருக்கின்றார்கள். ஆதலால், பேச்சு சுருக்கமாக இருக்க வேண்டுமென்று கூறினார்.
நான் கடியாரத்தைக் கையில் வைத்துக்கொண்டு 'செந்தமிழ்' என்னும் தலைப்பில் பேசத் தொடங்கினேன். 'செம்' என்னும் சிறப்பு அடைமொழி தமிழ்மொழி ஒன்றுக்குத்தான் உண்டு. பிற எந்த மொழிக்கும் இல்லை என்று ஆராய்ச்சி பூர்வமாகவும், ஆதார பூர்வமாகவும் அணி அணியான நுட்பக் கருத்துக்களைச் சொல்மாரியாகப் பொழிந்தேன். சபையோர் மகிழ்ச்சியில் பலமுறை கரகோஷம் கொடுத்து ஆரவாரம் செய்தார்கள். தலைமை பூண்டிருந்த பாரதிதாசன் வாயைப் பிளந்துகொண்டு என்னைப் பார்த்துப் பெரிதும் ரசித்துக்கொண்டிருந்தார்.
நான், "தலைவர் எனக்குக் கொடுத்த நேரம் முப்பது நிமிடம். இப்பொழுது இருபத்தெட்டு நிமிடங்கள் ஆகி விட்டன. இன்னும் இரண்டு நிமிடத்தில் முடித்துக் கொள்வேன்" என்றேன்.
உடனே, தலைவர் எழுந்து என்னை ஆலிங்கனம் செய்துகொண்டு, "இன்னும் அரை மணி நேரம் பேசவேண்டும். இதுவரையில் 'செம்' என்னும் பதத்திற்குத்தான் உரை நிகழ்த்தினீர்கள். 'தமிழ்' என்பது பற்றிப் பேசுங்கள். நாங்கள் தெரிந்துகொள்ள வேண்டிய கருத்துக்கள் பல தங்களிடம் இருக்கின்றன" என்று கூறினார்.
பின்னர் நான் அரை மணி நேரம் தமிழின் சிறப்பை எடுத்துப் பேசினேன். தலைவர் முடிவுரையில் "இவரை நான் புராணப் பிரசங்கியாயிற்றே! வெறும் புராணக் கதைகளைத் தான் பேசுவார் என்று எண்ணி ஏமாந்தேன். நுண்மாண் தமிழ்க் களஞ்சிய நூலறிஞர் என்பதை இப்பொழுது கண்டு வியந்தேன்" என்று பாராட்டி முடிவுரை கூறினார். |
|
நன்றி: 'கிருபானந்த வாரியாரின் வாழ்க்கை வரலாறு', குகஸ்ரீ வாரியார் பதிப்பகம்) |
|
|
|
|
|
|
|