Thendral Audio Advertise About us
New User? | Forgot Password? | Email: Password: Login
Current Issue | Previous Issues | Author Index | Category Index | Organization Index | E-Magazine | Classifieds | Digital Downloads
By Category:
சின்னக்கதை | சமயம் | சினிமா சினிமா | இளந்தென்றல் | கதிரவனை கேளுங்கள் | ஹரிமொழி | நிகழ்வுகள் | மேலோர் வாழ்வில் | மேலும்
November 2021 Issue
தென்றல் பேசுகிறது | நேர்காணல் | மாயாபஜார் | சினிமா சினிமா | சின்னக்கதை | சமயம் | மேலோர் வாழ்வில் | அஞ்சலி | சிறுகதை | பொது
எழுத்தாளர் | இளந்தென்றல் | நிகழ்வுகள் | கதிரவனை கேளுங்கள் | வாசகர்கடிதம் | ஹரிமொழி | சாதனையாளர்
Tamil Unicode / English Search
நேர்காணல்
ஜெயராமன் ரகுநாதன்
- அரவிந்த்|நவம்பர் 2021|
Share:
வாசகனைக் கட்டிப் போடுகிற நடையிலான சிறுகதைகளின் ஆசிரியராக ஜெ. ரகுநாதனை தென்றல் வாசகர்கள் அறிவர். இவர் பட்டயக் கணக்காளர் (சார்ட்டர்டு அக்கவுண்டண்ட்). ஹிந்துஸ்தான் லீவர், டி.வி.எஸ். போன்ற நிறுவனங்களில் மேலாளர், பொதுமேலாளர், துணைத்தலைவர் என உயர் பதவிகளை வகித்தவர். மார்கெட்டிங், விற்பனை, மேலாண்மை, மென்பொருள் ஆலோசனை போன்ற துறைகளில் விற்பன்னர். இரண்டு மென்பொருள் தயாரிப்பு நிறுவனங்களைத் தொடங்கி நடத்திய அனுபவம் கொண்டவர். தற்போது மூன்றாவதாக ஒரு மென்பொருள் நிறுவனத்தைத் தொடங்கி அதன் இயக்குநராக இருக்கிறார். நூற்றுக்கும் மேற்பட்ட சிறுகதைகள், ஏழு நாவல்கள், தொழில்நுட்பக் கட்டுரைகள், பொருளாதாரம், ஆன்மீகம், சுயமுன்னேற்றம், பயணம் என இவர் எழுதிக் குவித்தவை ஏராளம். இவரது கதா பாத்திரங்களான டாக்டர் வைகுந்தம், வசுந்தரா இருவருக்கும் உலகெங்கிலும் ரசிகர் பட்டாளம் உண்டு. சிறந்த தொழில்முனைவோர் விருதும், மைலாப்பூர் அகாடமியின் சிறந்த நாடகாசிரியர் விருதும் பெற்றவர். இதோ, ரகுநாதன் பேசுகிறார். கேட்போமா?

★★★★★


பாலகுமாரனுடன்



கே: இளமைப் பருவம் இனிய பருவம், அதிலிருந்தே தொடங்கலாமா?
ப: அறுபதுகளின் அடையாறில், இன்னும் கிராமவாசம் போகாத அருமையான சூழலில் வளர்ந்தேன். அப்பா, அம்மா, நான், ஒன்பது வருடங்களுக்குப் பிறகு பிறந்த என் தங்கை பவானி என்று ஒரு சிறிய, இனிய, அழகான குடும்பம். அடையாறு ராணி மெய்யம்மை பள்ளியில் SSLC முடித்தேன். மாநில அளவில் ஒன்பதாவது ரேங்க். லயோலா கல்லூரியில் பி,காம். Fraser & Ross (இன்று Deloitte) பாரம்பரிய நிறுவனத்தில் சார்ட்டர்டு அக்கவுண்டண்ட் பயிற்சி. தொடர்ந்து பட்டயக் கணக்கர் (CA) தேர்வில் அகில இந்திய ரேங்க்குடன் தேர்ச்சி பெற்றேன். அம்மாவின் அரவணைப்பிலும் கண்டிப்பிலும் கழிந்தது என் இளமைப்பருவம்.

என்மீது தனிப்பட்ட அன்பும் அக்கறையும் செலுத்தி என்னைச் செதுக்கிய பள்ளி ஆசிரிய, ஆசிரியைகளும், இன்றும் தொடர்பில் விடாது இருக்கும் பள்ளிக்கால நண்பர்களும் என்று அடையாறு என்னில் இரண்டறக் கலந்த ஒரு பகுதி. இன்றோடு கிட்டத்தட்ட ஐம்பத்தி ஏழு வருடங்கள் இந்த அடையாறில் வாழ்ந்துவிட்டேன். மஞ்சள் ஏறிய வெள்ளை சட்டையின் கீழ் பட்டன் பிய்ந்திருந்த காலத்திலிருந்து, காக்கி பேண்ட்டை இடுப்புக்கு மேல் இழுத்துவிட்டுக்கொண்டு விளையாட ஓடிய காலத்திலிருந்து, ஏற்றுக்கொள்ள முடியாத மனபாரத்தோடு என் ஆதர்ச அம்மாவையும் அப்பாவையும் இடுகாட்டுக்கு வழியனுப்பிய நாளையும் கடந்து, இதோ முதன்முதலாக மூன்றாவது ஜெனெரேஷன் வாரிசுகளாக இடுங்கிய கண்களோடு என்னைப் பார்த்து மோகனச் சிரிப்புடன் வீட்டுக்குள் நுழையும் என் பேரன் பேத்திகளைப் பார்ப்பதுவரை அடையாறும் இளமைக்கால நினைவுகளும் என் ரத்த நாளத்தில் ஊறியிருக்கின்றன. அதன் வெளிப்பாடுதான் 'என் அடையாறின் விழுதுகள்' என்னும் கட்டுரைத்தொகுப்பும் அதுபோன்ற பிற கட்டுரைகளும்!



கே: எழுத்தார்வம் வரக் காரணம்?
ப: அம்மாவைத்தான் காரணம் காட்ட வேண்டும். பள்ளி இறுதிவரை மட்டுமே படித்திருந்தாலும் அம்மா அக்காலத்திலேயே தமிழ், ஆங்கில நாவல்களைத் தேடித்தேடிப் படிப்பார். அதையே எனக்கும் பழக்கமாக்கி, ஒரு சமயத்தில் நானும் அம்மாவும் ஒரே லைப்ரரி புத்தகத்துக்காக போட்டிச் சண்டை போட்டதுண்டு. பள்ளியில் படிக்கும்போதே, எனிட் பிளைட்டனில் தொடங்கி பெர்ரி மேசன், ஜான் க்ரீஸி, ஜேம்ஸ் ஹாட்லி சேஸ், அலிஸ்டர் மெக்ளீன் என்று ஆங்கில எழுத்தாளர்களையும் வாண்டுமாமா, தமிழ்வாணன், கல்கி, தேவன், ரா.கி.ரங்கராஜன், எஸ்.ஏ.பி., நா.பா., அகிலன், ஜெகசிற்பியன், தி.சா. ராஜு, கமலா சடகோபன், எல்லார்வி, ஜெயகாந்தன், தி ஜானகிராமன் என்று தமிழ் எழுத்தாளர்களையும் அறிமுகப்படுத்தி என்னைப் படிக்கத் தூண்டியது அம்மாதான். வீட்டில் விகடன், குமுதம், கல்கி, கல்கண்டு, கலைமகள், கண்ணன், அம்புலிமாமா, ஏன், பொம்மை, பேசும்படம் கூட வரும்.

தினமணி கதிரில் நான் முதன்முதலில் படித்த ரங்கராஜன் என்னும் ஸ்ரீரங்கத்து ஆசாமி ஒருத்தர் எழுதின 'ஒரு அரேபிய இரவு' என்னும் சிறுகதை என்னை ஆட்கொண்டதுதான் என் எழுத்தார்வத்தின் முதல் விதை என்று சொல்லுவேன். அந்தக் கதையைப் படித்த கையோடு அந்த ஆசாமிக்கு (வேறு யார் 'சுஜாதா'தான்!) நான் கடிதம் எழுதி, ஆச்சரியமாகப் பதிலும் பெற்றேன். அப்போது நான் ஒன்பதாவது படித்துக்கொண்டிருந்தேன். கல்லூரிக் காலத்தில் எப்போதாவது ஆசிரியருக்குக் கடிதம் அளவில்தான் என் எழுத்து இருந்தது. எண்பதுகளில் சில புதுக்கவிதைகள் எழுதி கணையாழியில் கௌரவ ஆசிரியராக இருந்த சுஜாதாவின் ஆதரவில் அவை வெளிவந்தன. 'அத்தை' என்ற எனது புதுக்கவிதைக்கு சுஜாதா மற்றும் கி. கஸ்தூரிரங்கனின் பாராட்டுக் கிடைத்ததை இன்றும் நெஞ்சில் பத்திரமாகப் பாதுகாத்து வைத்திருக்கிறேன். மற்றபடி நான் தீவிரமாக எழுதத் தொடங்கியது 2012க்குப் பின்னர்தான்!

அதற்குக் காரணம் ஃபேஸ்புக் என்ற முகநூல் தந்த சௌகரியம்தான்; பிரசுரம் ஆகுமா ஆகாதா என்ற கிலேசங்கள் இல்லாமல் சுதந்திரமாக எல்லா விஷயங்களையும் என்னை எழுத வைத்தது.

மெரீனா நாடகக் குழுவினருடன்



கே: உங்கள் முதல் சிறுகதை எது?
ப: கிழக்கிந்தியக் கும்பெனி கால தென்னிந்தியா என்னை மிகவும் கவர்ந்தது. அதுபற்றி நிறையப் படித்தேன். எஸ். முத்தையா, வி. ஸ்ரீராம், வெங்கடேஷ் ராமகிருஷ்ணன், ரங்கரத்தினம் கோபு போன்றவர்களின் கட்டுரைகளும் அவர்களின் சொற்பொழிவுகளும் என்னை ஈர்த்தன. அந்த ஆர்வத் தூண்டுதலில் நான் எழுதிய முதல் சிறுகதை 'அரங்கனும் ஆர்லோவ் வைரமும்'. இன்று மாஸ்கோ ம்யூசியத்தில் இருக்கும் ஆர்லோவ் வைரம், ஒருகாலத்தில் நம் ஸ்ரீரங்கம் ரங்கநாதரின் கண்ணாக இருந்த பொக்கிஷம் என்னும் சரித்திரக் குறிப்பின் மூலம் உந்தப்பட்டு நான் எழுதின அந்தக் கதையை, நண்பர் அஷோக் சுப்பிரமணியனின் தூண்டுதலில் தென்றல் இதழுக்கு அனுப்பி வைக்க, அது ஓவியரின் கைவண்ணத்தோடு மிக நேர்த்தியாகப் பிரசுரமானது. நண்பர்களிடமிருந்து சிறந்த வரவேற்பும் கிடைத்தது. அதுதான் அச்சில் வந்த எனது முதல் சிறுகதை. அது பின்னர் நாடகமாகவும் அரங்கேறியது.

ரகுநாதன் - லதா ரகுநாதன்



கே: அருமை. தென்றலுக்கும் இதில் மகிழ்ச்சிதான். உங்கள் நாடகங்கள் குறித்துச் சொல்லுங்கள்...
ப: எழுத்தாளர் சுஜாதாவுடனும் அவரது குடும்பத்துடனும் எனக்கு ஏற்பட்ட நாற்பதாண்டு காலத் தொடர்பினால் திருமதி சுஜாதாவின் அனுமதியோடு சுஜாதாவின் இரண்டு சிறுகதைகளை நாடகமாக்கினேன். 'அம்மோனியம் பாஸ்ஃபேட்', 'வாசல்' என்னும் அந்த இரு நாடகங்கள் மேடையில் பிரமாதமாக முழங்க, எனக்குத் தைரியம் வந்து 'அபயரங்கதிலகா' என்னும் முழு நாடகத்தை எழுதினேன். சரித்திரமும் ஃபாண்டஸியும் கலந்த அந்த டைம் டிராவல் கதையை தியேட்டர் மெரினா குழுவினர் அற்புதமாய் மேடையேற்றினார்கள். அதன் அபார வெற்றிதான் என்னை 'திருஅரங்கண்', 'குறிஞ்சி' நாடகங்களை எழுத வைத்தது.

'அரங்கனும் ஆர்லோவ் வைரமும்' என்னும் எனது சிறுகதையைத்தான் 'திருஅரங்கண்' என்ற தலைப்பில் நாடகமாக்கினேன். தியேட்டர் மெரீனாவால் அரங்கேற்றப்பட்ட அந்த நாடகம், ஐம்பது முறைக்குமேல் மேடையேறியது. எனக்கு மைலாப்பூர் அகாடமியின் 'சிறந்த நாடக ஆசிரியர்' விருதையும் பெற்றுக்கொடுத்தது. கோடை நாடக விழாவில் அரங்கேறிய 'குறிஞ்சி' நாடகம் இரண்டாம் பரிசைப் பெற்றது. இரு நாடகங்களுமே புதுமையான கதை, அபார மேடை அலங்காரம், சிறந்த நடிப்பு, டைரக்‌ஷன் ஆகியவற்றுக்காகப் பெரிதும் பாரட்டப்பட்டன.

'நேற்று இன்று+2, நாளை' என்று மேலும் மூன்று சுஜாதாவின் சிறுகதைகளும் என்னுடைய கதை ஒன்றும் தியேட்டர் மெரினாவால் அரங்கேற்றம் கண்டன.

'மலையங்குளத்து நினைவுகள்', 'சித்தன் போக்கு' என்று இரண்டு ஒலி நாடகங்களும் எழுதி, இந்த கோவிட் காலத்தில் வெளிவந்திருக்கின்றன.



என் இனிய வசுந்தரா
எழுதிக்கொண்டே இருக்க வேண்டும். சுஜாதாபோல வர்ஜ்யா வர்ஜ்யமில்லாமல் எல்லா சப்ஜெக்டுகளிலும் ஒழுங்காய்ப் படித்து, பாலகுமாரன் சொல்வது போல நேர்மையாக எழுத வேண்டும். முக்கியமாக என் கதாநாயகி வசுந்தராவை இன்னொரு லெவலுக்குக் கொண்டு போகவேண்டும் என்பது என் குறிக்கோள். ஏனோ தமிழ்நாட்டில் சினிமாவும் அரசியல்வாதிகளும் கார்ப்பரேட் என்பதை மக்களின் விரோதிகள் போலச் சித்தரித்திருக்கிறார்கள். இது முழுக்க முழுக்க உண்மைக்குப் புறம்பானது. ஒரு நாட்டின் பொருளாதாரத்தில் கார்ப்பரேட்டுகள் வகிக்கும் பங்கு மிக முக்கியமான முதல் மூன்றில் ஒன்று என்பதை ஸ்திரமாக நம்புகிறவன் நான்.

கார்ப்பரேட் நிர்வாகத்தில் நாற்பது வருஷங்கள் ஊறித் திளைத்த எனக்கு அதன் நுணுக்கங்களை வைத்துத் தமிழில் எழுத ஆசைப்பட்டதன் விளைவே வசுந்தரா. வெறுமனே நிர்வாக இயல்களை மட்டுமே எழுதினால் சுவாரஸ்யம் அடி வாங்கும் என்பதால் எமோஷனல் சமாச்சாரங்களைக் கோர்த்து வசுந்தரா என்னும் விரும்பத்தக்க பெண்ணின் பிம்பமாக அமைத்து எழுதி வருகிறேன். இது ஆங்கிலத்தில் மொழிபெயர்க்கப்பட்டு, பாடமாக இல்லாவிட்டாலும் ஒரு துணைப்பாடமாகவாவது கல்லூரிகளில் வைக்கப்பட வேண்டும் என்பது என் ஆசை.

- ஜெ. ரகுநாதன்


கே: உங்களைக் கவர்ந்த எழுத்தாளர்கள் யார், யார்?
ப: பட்டியலிட ஆரம்பித்தால் இந்தத் தென்றல் இதழ் பக்கங்களே போதாதே! இருந்தாலும் சுருக்கமாகச் சொல்ல முயல்கிறேன். தமிழில் முதல் இடம் சுஜாதாவுக்குத்தான். அவரின் ஒவ்வொரு வரியையும் பலமுறை ரசித்து ரசித்துப் படித்தவன் என்ற அனுபவத்தில் சொல்கிறேன். அவர் எத்தனையோ சாதாரண கதைகளும் நாவல்களும் எழுதியிருக்கிறார் தான். ஆனாலும் எழுத்தில் அவர் தொட்ட சிகரங்களை இன்னும் தமிழில் யாரும் தொடவில்லை என்பது என் கருத்து, கவனிக்க என் கருத்து முற்றுப்புள்ளி. முரண்படுபவர்களோடு எனக்கு விவாதம் இல்லை. அடுத்து என் ஆதர்ஸம் பாலகுமாரன். நடுத்தரக் குடும்பத்தின் ஆசாபாசங்களையும் ஏக்கங்களையும் அவற்றை உடைத்து வெளியே வந்த பெண்களின் மன ஓட்டத்தையும் பாலகுமாரனைப்போல சிறப்பாக எழுதியவர்கள் வெகு சிலரே.

"இந்த இருவரோடும் நெருங்கிப்பழகிய காரணத்தால் சொல்லுகிறாய்" என்று என்மீது குற்றச்சாட்டு வைத்தால் என் பதில், "அவர்களின் எழுத்து எனக்கு மிகவும் பிடித்திருந்ததால் தான் நான் அவர்களுடன் நெருக்கத்தை ஏற்படுத்திக்கொண்டேன்!"

என்னைக் கவர்ந்த பிற எழுத்தாளர்கள்: தி ஜானகிராமன் (எல்லாம்), கல்கி (சரித்திரம்), தேவன் (எல்லாம்), எஸ்.வி.வி. (எல்லாம்), நா.பா. (குறிஞ்சி மலர், மங்கியதோர் நிலவினிலே...), உ.வே.சா. (என் சரித்திரம்), பிரபஞ்சன் (மானுடம் வெல்லும், வானம் வசப்படும்) மாலன் (கல்லிற்குக்கீழும் பூக்கள், ஜனகனமண), இரா. முருகன் (இரட்டைத்தெரு, விஸ்வரூபம், ட்யூப்ளே வீதி), சுபா (பல), ரா.கி.ரங்கராஜன், (அடிமையின் காதல், 23ஆவது படி, ஒளிவதற்கு இடமில்லை, மறுபடியும் தேவகி) எஸ்.ஏ.பி (காதலென்னும் தீவினிலே), இந்துமதி (தரையில் இறங்கும் விமானங்கள்), உஷா சுப்பிரமணியன் (மனிதன் தீவல்ல, சிறுகதைகள்), டபிள்யூ.ஆர். ஸ்வர்ணலதா (நாளை வந்தே தீரும்), கா.ஸ்ரீ.ஸ்ரீ.யின் படைப்புகள், மணியன் (பயணக்கதைகள்), சேவற்கொடியோன் என்னும் ஆனந்தவிகடன் பாலசுப்பிரமணியம், மற்றும் சாவி (விசிறி வாழை, வாஷிங்டனில் திருமணம்).

ஜெயகாந்தன் – ம்ஹும், எனக்குப் பிடித்தவர்களில் அவர் இல்லை, அசோகமித்திரன் - ம்ஹும் இல்லை!

ஆங்கிலத்தில் ஃப்ரெடெரிக் ஃபார்ஸித், ஜெஃப்ரி ஆர்ச்சர், இர்விங் வாலஸ், ஆர்தர் ஹெய்லி, ஜார்ஜ் ஆர்வெல், ஆல்டஸ் ஹக்ஸ்லி, பி.ஜி. வோட்ஹவுஸ், ஜேம்ஸ் ஹாட்லி சேஸ்! சமீபத்தில் என் பட்டியலில் இணைந்தவர் வில்லியம் டால்ரிம்பிள்! 



கே: சுஜாதா, பாலகுமாரன் உள்ளிட்ட பல எழுத்தாளர்களிடம் பழகியிருக்கிறீர்கள். அவர்களிடம் நீங்கள் கற்றதும், பெற்றதும் என்ன?
ப: சுஜாதா ஒரு ஸ்பெஷலிஸ்ட்! எழுத்தை craft ஆகக் கையாண்டவர். மாலன் ஒருமுறை சொன்னதுபோல 'சுஜாதா தமிழைப் புதிதாக்கினார்' என்பதில் எனக்கு முழு உடன்பாடு உண்டு! வாக்கிய அமைப்பில், சொல்லும் விஷயங்களில், பயன்படுத்திய வார்த்தைகளில் சுஜாதாவின் தனித்தன்மை இன்றுவரை தாண்டப்படாமலேயே இருக்கிறது. Brevity என்பதன் முழு அர்த்தம் தமிழ் எழுத்தில் உ.வே.சா.வுக்குப் பிறகு சுஜாதாதான் என்பது என் கருத்து. அவர்மூலம் நான் கற்றதும் பெற்றதும் ஏராளம். படிக்க வேண்டிய புத்தகங்கள், கற்றுக்கொள்ள வேண்டிய விஷயங்கள், எழுத்திலும் பேச்சிலும் பல புதிய வார்த்தைகள் எல்லாம் அவரைப் படித்ததிலிருந்தும், அவருடன் பேசினதிலிருந்தும் கற்றுக்கொண்டேன். ஜே.டி.சாலிஞ்சர், கார்ல் சகன், எரிக்கா யாங் போன்றவர்களின் எழுத்து அறிமுகம் சுஜாதாவிடமிருந்து பெற்றதுதான்.

பாலகுமாரனின் நேர்மை
பாலகுமாரனிடம் நான் கற்றுக்கொண்ட முக்கிய விஷயம் எழுத்தில் கடைப்பிடிக்க வேண்டிய நேர்மை. இதுபற்றிய என் அனுபவம் ஒன்றை அவசியம் சொல்லியாக வேண்டும்.

பாலகுமாரனுக்கு லேசான மூச்சுத்திணறல் ஏற்பட்டு காவேரி ஆஸ்பிடலுக்குப் போய்வந்ததாகச் செய்தி வந்தது. அவரைத் தொந்தரவு செய்யவேண்டாம் என்று அவரது உதவியாளரிடம் பேசினேன். இப்போது தேவலை என்றார்கள். மூன்றாம் நாள் அவரிடமிருந்தே ஃபோன் வந்தது. குரலில் ஒரே உற்சாகம்.

"அந்தப் பெட்டி என்னமா இருக்கு தெரியுமா? ஏழடி நீளம்! ரெண்டு பக்கமும் இரும்பால வளையம் போட்டு ரிவெட் அடிச்சு…..!"

"சார்! என்ன பெட்டி? எதைச் சொல்றீங்கன்னு புரியலையே!"

"நீதானே உன்னோட சிறுகதையில எழுதியிருக்க! கும்பினி துரையும் குமாஸ்தாவும் மெட்ராசிலேர்ந்து கூடலூருக்குப் போகும்போது பெரிய பெட்டியில ஃபைலெல்லாம் எடுத்துண்டு போறாங்கன்னு! அந்தப்பெட்டிதான்!"

"அத எங்க பாத்தீங்க சார்?"

"நேத்துதான் கோட்டை மியூசியத்துல போய்ப்பார்த்தேன்!"

"சார் உங்களுக்கு இப்பதான் உடம்பு சரியாகி இருக்கு. இப்ப ஏன் அலையறீங்க?"

"அது இருக்கட்டும் ரகு! பொட்டிய நேர்ல பாக்காம எப்படி விவரிக்கறது, சொல்லு! அதோட வயநாட்டுக்கும் ஒரு டிரிப் போணும்!"

தொபக்கென்று மொபைல் ஃபோனைக் கீழே தவறவிட்டேன்.

முடிந்தவரை இந்த நேர்மையை என் எழுத்தில் கடைபிடிக்க நான் முயலுகிறேன்.

- ஜெ. ரகுநாதன்


எழுத்து மூலமாக மட்டுமன்றித் தனிப்பட்ட வகையில் 25 ஆண்டுகளுக்கும் மேலான தொடர்பில் அவர் எனக்கு சொல்லித் தந்தது ஒரு அப்பா மகனுக்குப்போல என்று சொல்லிவிடலாம். நான் தொடங்கி, நடத்தி, விற்ற இரண்டு மென்பொருள் கம்பெனிகளின் நிர்வாகத்தில்கூட எனக்கு சுஜாதாவின் அறிவுரைகள் பயன்பட்டன!

சுஜாதா தகப்பனார்போல என்றால் பாலகுமாரன் என்னைப் பொறுத்தவரை எனக்கு மாமனார்! ஆம், என் மனைவி லதாவை அவளின் சிறுவயதிலிருந்தே அறிவார் என்பதால் எப்போது வீட்டுக்கு வந்தாலும் ஏதேனும் பரிசுகளுடன் வருவார். ஆட்சேபித்தால் "உம்ம மாமனார் வீட்டுச்சீர்! வாங்கிப்பீரா மாட்டீரா" என்று என் வாயை அடைத்துவிடுவார்! பாலகுமாரன் என்றால் நான் முதலில் சொல்லுவது அவர் என்மீது வைத்திருந்த அதீத அன்பு. 'ரகூ!' என்று நெடிலுடன் அழைத்துக்கொண்டே வீட்டுக்கு வந்து பேசிவிட்டுப் போவார். 2012க்குப்பிறகு அவர் தன் கையெழுத்துப் பிரதியை என்னிடம் படிக்கச்சொல்லி கருத்துக்கேட்டு வந்தார். எத்தனையோ முறை நான் அவர் வீட்டுக்குப் போயிருக்கிறேன். பிரதியை அப்போதெல்லாம் தரமாட்டார். அவரே என் வீட்டுக்கு வந்து கொடுப்பார். அவரே வந்துதான் வாங்கிக்கொண்டும் போவார். அவர் கடைப்பிடித்த அன்பு மிக மிக டிஸிப்ளினான அன்பு. நேர்மையான அன்பு. அதை நான் அவரிடம் கற்றுக்கொண்டேன். எழுத்தில் அவர் கற்றுக்கொடுத்ததும் அதிகம்தான். என்னுடைய 'அபயரங்கதிலகா' நாடக வசனங்களைத் திரையுலகத்தைச் சேர்ந்த சிலர் செந்தமிழாகவும் அதே சமயம் எளிமையாகவும் இருப்பதாகப் பாராட்டினதற்கு முழுக்காரணம், அதில் நான் பாலகுமாரனின் எழுத்து நடையைப் பின்பற்றியிருந்ததுதான்.



கே: எழுத்து தவிர்த்து உங்களுக்கு ஆர்வமான பிற துறைகள், பணிகள் குறித்து..
ப: அடிப்படையில் நான் சார்ட்டர்ட் அக்கவுன்டன்ட் என்றாலும் முப்பது வருடங்களுக்கு முன்பே ஐ.டி. துறைக்கு மாறிவிட்டேன். தென்னிந்தியாவின் மிகப்பெரிய குழுமம் ஒன்றில் துணைத்தலைவராகப் பணியாறியபோது, அந்த நிறுவனத்தின் கிளைகளை உலகமெங்கும் விரிவாக்கும் முயற்சியில் ஈடுபட்டேன். 2008ல் நானும் சில நண்பர்களும் சேர்ந்து தொடங்கிய ERP மென்பொருள் ஆலோசனை நிறுவனத்தை, நான்கே ஆண்டுகளில் மிக வெற்றிகரமாக்கிப் பின்னர் நிறுவனத்தின் வளர்ச்சிக்காகவே இன்னொரு பெரிய நிறுவனத்திற்கு விற்றோம். இப்போதும் அதேபோன்ற ஒரு மென்பொருள் கம்பெனியில் இயக்குநராகப் பணிபுரிகிறேன். Microsoft மற்றும் IBM கம்பெனிகளின் பங்குதாரரான இந்நிறுவனத்தின் மூலம் வாடிக்கையாளர்களுக்கு ஆலோசனைகள், மென்பொருள் நிறுவுவதில் உதவி போன்ற பணிகளைச் செய்து வருகிறேன்.

படித்து முடித்த இளைஞர்களுக்கு வேலை வாய்ப்புத்திறனை அதிகரிக்கும் பயிற்சிகள் கொடுப்பதற்கான நிறுவனம் ஒன்றையும் நடத்தி வருகிறேன். Knowledge Capital Investment Group (KCIG) என்னும் அந்த நிறுவனம் முழுக்க முழுக்க சேவையை மைய நோக்கமாகக் கொண்டது என்பதால் அந்தப் பயிற்சிகளை இலவசமாகவே செய்துவருகிறேன். இது தவிர 185 வருடப் பாரம்பரியம் கொண்ட Madras Chamber of Commerce and Industries (MCCI) நிறுவனத்தின் ஐ.டி. துறை மற்றும் கல்வித்துறைக்கான Expert கமிட்டிகளில் கௌரவ உறுப்பினராக இருக்கிறேன். இன்னொரு உலகப்புகழ் பெற்ற சேவை நோக்கம் கொண்ட என்.ஜி.ஓ.விலும் டிரஸ்டியாக இருக்கிறேன்.

தவிரவும் எம்.ஓ.பி. வைஷ்ணவா கல்லூரி, எதிராஜ் கல்லூரி, காஞ்சி பல்கலைக்கழகம், இந்தோ-ஜெர்மானிய வர்த்தகத் தொழிற் பயிற்சி மையம், ஆசான் கல்லூரிக் குழுமம் என சென்னையின் பல கல்லூரிகளுக்கு அழைக்கப்படும் பேச்சாளராகச் சென்று மாணவர்களுக்கு ஊக்கமும் தன்னம்பிக்கையும் தரும் வகையில் சொற்பொழிவுகள் ஆற்றி வருகிறேன். பல கல்லூரிகளில் பாடத்திட்டக்குழுவின் உறுப்பினராக இருந்து, காலத்திற்கேற்பப் பாடத்திட்டங்களை மாற்றியமைக்க வேண்டிய ஆலோசனை தருகிறேன். சில ஆண்டுகள் ரோட்டரி கிளப்பிலும் இயக்குநராகப் பணி புரிந்திருக்கிறேன்

குடும்பத்தினருடன்



கே: இதுவரை வெளியான, இனி வெளிவர இருக்கிற உங்கள் நூல்கள் பற்றிச் சில வார்த்தைகள்...
ப: முதன்முதலில் வெளியான 'டாக்டர் வைகுண்டம் கதைகள்', கிழக்கு பதிப்பகம் வெளியிட்டது. அடுத்து 'தொட்டுக்கொள்ளவா தொடர்ந்து செல்லவா' என்னும் நாவல் வானதி பதிப்பகத்தால் வெளியிடப்பட்டது. மிகச் சமீபத்தில் ஸீரோ டிகிரி பதிப்பகத்தாரால் வெளியான புத்தகங்கள்: திரைபொரு கடல்சூழ் மெட்ராஸ், என் அடையாரின் விழுதுகள், டாக்டர் வைகுண்டம் கதைகள் இரண்டாம் பாகம், நெடுமர நிழல் கதைகள்

108 திவ்ய தேசங்கள், அணுவைத்துளைத்தேழ், தங்க சாகசம், நான் கடந்து போனவை - இவை நான்கும் தயாரிப்பில் இருக்கின்றன.

வைகுண்டம் என்னும் வடிகால்
அதே போல டாக்டர் வைகுண்டம் கதைகளும் தொடர்ந்து எழுதி பாசிடிவ் எண்ண அலைகளைச் சமூகத்தில் எழுப்ப விழைகிறேன். நம் உடல் உபாதையின் மூல காரணத்தைச் சரியாகக் கண்டுபிடித்து, சரியான மருந்து கொடுத்து சொஸ்தமாக்கிவிட மாட்டாரா, அதற்கு சல்லிசாக காசு வாங்கிப் போதும் என்று சொல்லிவிட மாட்டாரா, இல்லை காசு செலவழியட்டும், ஆனா குணப்படுத்திவிட்டால் போதும் என்று டாக்டர்கள் குறித்த ஏக்கம் நம்மிடையே விரவிக்கிடப்பது கண்கூடு. என் குடும்பத்தில் ஆறு பேருக்கு மேல் கேன்சரில் மடிந்ததால். இதையெல்லாம் பார்த்து, வலித்து, அலுத்துவிட்ட எனக்குமே உள்ள இந்த ஏக்கத்தைத் தீர்க்கும் வடிகாலாக டாக்டர் வைகுண்டம் என்னும் ஒரு கற்பனை ஆசாமியைப் படைத்து எழுத ஆரம்பித்தேன்.

எனக்கு வந்த பின்னூட்டங்களில் இப்படி ஒரு டாக்டர் உடனடித் தேவை என்னும் ஏக்கமும் எதிர்பார்ப்பும் பரவலாக உயிர்ப்புடன் இருப்பதை உணர முடிந்தது. எனவே டாக்டர் வைகுண்டம் கதைகளைத் தொடர்ந்து எழுத ஆர்வமாயிருக்கிறேன்.

- ஜெ. ரகுநாதன்


கே: டாக்டர் வைகுண்டம், வசுந்தரா இவர்கள் எல்லாம் கற்பனையா அல்லது உண்மை நபர்களா?
ப: உண்மையும் கற்பனையும் கலந்ததுதான் எந்த எழுத்துமே என்பதை ஆணித்தரமாக நம்புபவன் நான்! என் கதை கட்டுரைகளைப் படித்துவிட்டு பலர் இந்தக் கதைகளில் வரும் நிகழ்ச்சிகளும் பாத்திரங்களும் உண்மையா, கற்பனையா என்று கேட்கிறார்கள்.

ஒரு எழுத்தாளனால் முழுக்க முழுக்க உண்மையை மட்டுமே எழுதிவிட முடியாது. "நேத்து நுங்கம்பாக்கம் ஹை ரோடுல மோட்டார் சைக்கிள் ஒண்ணு படுவேகமாக…" என்று நேற்று தெருவில் பார்த்த விபத்தை விவரிக்கும்போதே அதில் கற்பனை சேர்ந்துவிடுவதைத் தவிர்க்க முடியாது. கற்பனையே இல்லாமல் எழுதப்பட்டது என்றால் இப்போது வழக்கொழிந்து போய்விட்ட டெலிஃபோன் டைரக்டரி அல்லது டெத் சர்ட்டிஃபிக்கேட் மட்டும்தான். ஆனாலும் கதைகளில் உண்மையும் நிஜவாழ்வின் அனுபவமும் இல்லாமல் இருக்கமுடியாது.

டாக்டர் வைகுண்டமும் வசுந்தராவும் அதேபோல உண்மையும் கற்பனையும் கலந்த, நான் சந்தித்த, கேள்விப்பட்ட பல பேர்களின் கலவை பிம்பங்கள்தாம். எது கற்பனை, எது நிஜம் என்பதுதான் சுவாரஸ்யமும், அதே சமயம் ஒரு எழுத்தாளனுக்கே உரிய தனிப்பட்ட ரகசியமும்!

மைலாப்பூர் அகாடமியில் 'சிறந்த நாடகாசிரியர்' விருது



கே: உங்கள் குடும்பம் பற்றி..
ப: பொத்திப் பொத்தி வளர்த்த அம்மாவும் அப்பாவும் காலமாகி விட்ட இந்நாளில் எங்களின் சிறிய குடும்பம் இந்தியா, ஜெர்மனி, டெல்லி என்று மூன்று இடங்களில் பிரிந்து கிடக்கின்றது. நான் காதலித்து எந்தவித சாகசங்களும் செய்யாமலேயே மணந்த லதாவும் சார்ட்டர்ட் அக்கவுன்டன்ட்தான். எனக்குப் போட்டி எழுத்தாளரும் கூட! இரு மகன்கள். பிள்ளைகள் மற்றும் மருமகப் பெண்ணுமே எஞ்சினியரிங் மற்றும் வெளிநாட்டில் எம்.எஸ். படித்தவர்கள். பெரிய மகன் ம்ருத்யுஞ்சய், அவன் மனைவி நிரஞ்சனா, ஏழு வயதுப் பேரன் ப்ரஜ்வல், இரண்டு வயதுப் பேத்தி தாரா என்று ஜெர்மனி ம்யூனிக்கிலும் (Munich) இளையமகன் திக்விஜய் கடந்த ஆறு வருடங்களாக அமெரிக்காவில் வாழ்ந்துவிட்டு, இப்போது சில மாதங்களாக ம்யூனிக்குக்கு அறுநூறு மைல் தள்ளி உள்ள டார்ட்மண்ட் (Dortmund) என்ற ஊரிலும் இருக்க, காலியான பறவைகளின் கூடாய் இங்கே அடையாறில் நானும் லதாவும். கலாக்ஷேத்ரா நாட்டியத் தாரகையான என் ஒரே தங்கை பவானி கணவர் அனந்தராமன் குழந்தைகளுடன் டெல்லியில் வசிக்கிறார்.

சின்னச் சின்ன ஆசை
நான் கடந்து வந்த பாதையைத் திரும்பிப் பார்க்கும் நோஸ்டால்ஜியா எனக்கு மிகவும் பிடித்த உணர்ச்சி. அதைக்கொண்டே நான் கடந்துபோனவை, என்னைக் கடந்து போனவர்கள் என்று இன்னும் இன்னும் பல விஷயங்களை எழுத வேண்டும் என்ற ஆவல் எனக்குண்டு. அதேபோல தொழில்நுட்ப சமாச்சாரங்கள், முக்கியமாக Artificial Intelligence எனப்படும் செயற்கை அறிவுத்திறன் பற்றியும் அதன் ஒரு அங்கமாகிய Robotic Process Automation பற்றியும் தமிழில் எழுத ஆசை.

- ஜெ. ரகுநாதன்


கே: பதிப்புலகில் நவீன தொழில்நுட்பத்தின் பயன்பாடுகள் குறித்து உங்கள் கருத்தென்ன?
ப: எல்லாத் துறைகளும் தொழில்நுட்ப மயமாகி வருவதுபோல தமிழ் எழுத்தும் இலக்கியமும் கூடத் தொழில்நுட்பத்திலிருந்து தப்பிக்க முடியாது என்பதே என் கருத்து. கொரியாவில் போன மாதம் 'பிரம்புங்' என்னும் பெயருடைய ஆர்டிஃபிஷியல் இன்டெலிஜென்ஸ் மென்பொருள் எழுதிய நாவல் – 560 பக்கங்கள் – வெளியாகியிருக்கிறதாம். நான் அந்த அளவுக்குப் போகவில்லை. புத்தகங்கள் கிண்டில் போன்ற டிஜிட்டல் வடிவிலும் ஒலிப்புத்தகமாகவும் வருவதையே நான் தொழில்நுட்பம் என்கிறேன். கதைகள் இப்போது வாசிக்கப்படுவதோடு கேட்கவும் படுகிறது. Spotify போல StoryTel, தமிழ் ஆடியோ (Tamil Audio) என்றெல்லாம் வந்து, நூற்றுக் கணக்கான தமிழ் எழுத்தாளர்களின் புத்தகங்கள் ஒலி வடிவில் கிடைக்கின்றன. அதேபோல அச்சு எழுத்தும் வழக்கொழிந்து போய்விடுமோ என்னும் அச்சம் பலருக்கு இருக்கிறது. கிண்டில் போன்ற டிஜிட்டல் ஊடகங்களில் மக்கள் சுலபமாகத் தத்தம் மொபைல் ஃபோனிலேயே படிக்க ஆரம்பித்து விட்டனர்.

ரகுநாதனும் க்ரேசி மோகனும்



"என்னதான் சொல்லும் ஓய், பேப்பர் பக்கத்தை திருப்பி படிக்கறா மாதிரி வருமா?" என்னும் இவ்வித கிருதக்குப் பேச்செல்லாம் வியாபாரம், லாப நஷ்டம், சந்தைப் பங்கு என்னும் நிதி நிதரிசனங்களால் தகர்க்கப் பட்டுவிடக் கூடும். ஆகவே எழுத்தாளர்களும் பதிப்பகத்தாரும் தொழில்நுட்ப வளர்ச்சியைப் புரிந்துகொண்டு தங்கள் வியாபார யுக்திகளை மாற்றியமைத்துக் கொள்ளத் தயாராக இருக்கவேண்டும்.

வெப் சீரீஸ் மற்றும் சிறு, குறும்படம் எடுப்பதற்காக ஒரு பெரிய கோஷ்டி சுற்றிக் கொண்டிருக்கிறது. அவர்களுக்கு இப்போது பெரும் சவால் நல்ல கதைகள் தான். எனவே தமிழ் எழுத்தாளர்களுக்கு நல்ல வாய்ப்பு இருக்கிறது என்றாலும், இந்த காப்பிரைட் சமாச்சாரம் இன்னும் பிரிட்டிஷ் காலத்திய ட்ரிச்சினாப்போலி வரைபடம் மாதிரி கொசகொசவென மங்கலாக இருக்கிறது. அதனைச் சரிசெய்தே ஆகவேண்டும்.

"நான் கடவுளால் ஆசிர்வதிக்கப்பட்டவன் என்று நம்புகிறேன். அதனாலேயே இந்த அறுபத்தி நாலு வயதில் உடல், மன ஆரோக்கியம் தவிர எனக்குத் தேவைகளோ ஆசைகளோ அதிகமில்லை. எழுத்தின் மூலம் எனக்கு வரும் வருவாயை அப்படியே தர்ம காரியங்களுக்கு அளித்துவிடுகிறேன். மற்றபடி விருது, பரிசு என்பதில் எல்லாம் நாட்டமில்லை. எழுத வேண்டும், அவ்வளவுதான்!" என்கிறார் ரகுநாதன். ஆழ்ந்த அனுபவமும் அறிவார்ந்த மேதைமையும் பேச்சில் வெளிப்படுகின்றன. நன்றி கூறி விடைபெறுகிறோம்.

ஜெ. ரகுநாதன்
முகநூல் பக்கம் | கிண்டில் பக்கம் | புத்தகங்களை வாங்க

நாடகங்கள்: அபயரங்கதிலகா | சித்தன் போக்கு | மலையங்குளத்து நினைவுகள்
உரையாடல்: அரவிந்த்
Share: 




© Copyright 2020 Tamilonline