Thendral Audio Advertise About us
New User? | Forgot Password? | Email: Password: Login
Current Issue | Previous Issues | Author Index | Category Index | Organization Index | E-Magazine | Classifieds | Digital Downloads
By Category:
சின்னக்கதை | சமயம் | சினிமா சினிமா | இளந்தென்றல் | கதிரவனை கேளுங்கள் | ஹரிமொழி | நிகழ்வுகள் | மேலோர் வாழ்வில் | மேலும்
April 2005 Issue
ஆசிரியர் பக்கம் | நேர்காணல் | மாயாபஜார் | இலக்கியம் | முன்னோடி | அன்புள்ள சிநேகிதியே | நலம்வாழ | நூல் அறிமுகம் | அஞ்சலி
குறுக்கெழுத்துப்புதிர் | சூர்யா துப்பறிகிறார் | சிறுகதை | புதிரா? புரியுமா? | சமயம் | வார்த்தை சிறகினிலே | பொது | சினிமா சினிமா | Events Calendar
எழுத்தாளர் | இளந்தென்றல் | நிகழ்வுகள் | வாசகர் கடிதம் | தமிழக அரசியல் | புழக்கடைப்பக்கம்
Tamil Unicode / English Search
சிறுகதை
இரண்டு கடிதங்கள்
பரிசு
- அம்புஜவல்லி தேசிகாச்சாரி|ஏப்ரல் 2005|
Share:
Click Here Enlarge"அம்மா, சிந்துக் குட்டிக்கு இந்த டிரஸ் ரொம்பப் பொருத்தமாயிருக்கும். இந்த வாட்ச் அப்பாவுக்கு; மன்னிக்குப் பவழமாலை ஒண்ணும், அண்ணாவுக்கு 2 டீ ஷர்ட்டும் வாங்கியிருக்கேன். கார்னிங் செட்டும் வாங்கியிருக்கேன். நன்றாகத் துணிகளுக்கிடையே வைத்துப் பாக் செய்துகொள்" என்றபடி நீண்ட நேர அலைச்சலின் அலுப்புடன் உள்ளே நுழைந்தாள் சுநயனா. தொடர்ச்சியாக, "பாகி சித்திக்கு பாதம் பருப்பு, வால்நட், முந்திரியும், அவள் பேரன்களுக்கு சாக்லட்டும் ·ப்ரிஜ்ஜில் வைத்திருக்கேன். மறக்காமல் எடுத்து வைத்துக்கொள். இன்னும் ஏதாவது வேணுமானால் சொல்லு, சாயங்காலம் மாலுக்குப் போய் வாங்கி வருகிறேன். என்னமோ போ, இன்னும் இரண்டு மூணு மாதம் இரு என்றால் பிடிவாதமாகக் கிளம்புகிறாய். அங்கே என்ன கைக்குழந்தையையா விட்டு வந்திருக்கே?" என்று அங்கலாய்த்தபடி இந்தியா கிளம்ப மூட்டை முடிச்சுகளுடன் மன்றாடிக் கொண்டிருந்த தாய்க்குத் தானும் உதவினாள்.

வெளிநாட்டில் வாழ்க்கைப்பட்டோ, வேலை பார்த்தோ வாழும் குழந்தைகளுடன் தங்கவரும் பெற்றோர் ஊர் திரும்பும்பொழுது மேற்கண்ட உரையாடல், சிறுசிறு மாற்றங்களுடன், நிகழ்வது சகஜம்தானே. அதிலும் சுநயனாவின் தாய் சுமதி முதல் முறையாக வந்து திரும்புகிறாள். உறவினர் ஒவ்வொரு வரையும் நினைவில் வைத்துக்கொண்டு அவரவர்களுக்குரிய பரிசுப் பொருள்களை வாங்கிச் சேகரிப்பதே பெரிய யாகம் செய்ததுபோல் ஆகிவிட்டது தாய்க்கும் மகளுக்கும்.

மகள் சுநயனாவின் பிரசவத்துக்காக அமெரிக்காவில் அடியெடுத்து வைத்த நாள் முதலே தான் செல்லும் ஒவ்வொரு இடத்திலும் கிடைக்கும் ஒவ்வொரு பொருளும் யார் யாருக்குப் பயன்படுமென்று யோசித்து யோசித்து வாங்கிச் சேர்க்க ஆரம்பித்தாள் சுமதி. நாலாவதோ, மூணாவதோ படிக்கும் பணிப்பெண்ணின் மகளுக்குப் பென்சில் செட், விதவிதமான சோப்புகள், சென்ட் பாட்டில்கள், கைப்பைகள், அலங்காரப் பொருள்கள், வயதான தன் தமையனுக்கு ஸ்வெட்டர், மன்னிக்கு ரத்த அழுத்தம் பார்க்கும் கருவி என்று ஏகப்பட்டது வாங்கியாகி விட்டது. அறையில் கால் வைக்க இடமில்லை. இத்தனையையும் எப்படித்தான் இரண்டு பெட்டிகள், ஒரு தோள் பைக்குள் அடக்கப் போகிறோமோ என்று மலைப்பாக இருந்தது.

ஒரு விதமாகப் போராட்டம் ஓய்ந்து, விமான நிலையம் சென்றாகிவிட்டது. அதிகப்படி எடைக்காகச் சில டாலர்கள் கொடுக்க வேண்டியிருந்தது. "பாதி பென்சில்வேனியா மாகாணமே போகிறதே. இது கூட ஆகாதா என்ன?" என்று வாரினான் சுநயனாவின் கணவன்.

வீடு வந்து சேர்ந்து பயணக் களைப்பாறிய பின் பரிசுப் பொருள்களைப் பங்கீடு செய்யும் வேலை ஆரம்பித்தது சுமதிக்கு. "அம்மா தராங்க இல்லே, வாங்கு புள்ளே", என்று பணிப்பெண் மங்கா சிபாரிசு செய்யப் பென்சில் செட்டை வாங்கிய அவள் பெண், "நல்லாயிருக்கு, இதே மாதிரி எங்க சித்தப்பா கூட இங்கே அஞ்சுகம் மார்க்கெட்டில் வாங்கித் தந்திருக்கார்" என்றாளே பார்க்கலாம்! சுமதிக்குச் சப்பென்றாகி விட்டது. "ஏம்மா, போலோ டீ ஷர்ட் இங்கேயே விதம் விதமாகக் கிடைக்கிறதே. மாப்பிள்ளையை ஏன் சிரமப்படுத்தி இதை வாங்கி வந்தாய்?" என்றான் மகன்.

"சிந்து டிரெஸ் கூடத்தான் நாயுடு ஹாலிலேயே கிடைக்கிறது. ஏதோ அவள் ஆசைக்கு வாங்கி அனுப்பியிருக்கிறாள். அதை மதித்து அணிந்து கொள்ள வேண்டியது தானே?" என்று மாமியார் மனம் சங்கடப்படாமல் கணவனுக்கு அறிவுறுத்தினாள் மருமகள். பாவம் சுமதிக்குக் கடுப்படித்தது.
நல்ல வேளை தங்கை பாகீரதி ஒன்றும் சொல்லாமல் சாக்லேட்களையும், பருப்பு வகைகளையும் வாங்கி வைத்துக் கொண்டாள். இப்படியே அவள் அளித்த பரிசுப் பொருட்களைப் பெற்றுக் கொண்ட ஒவ்வொருவரும் 'இந்தப் பொருளைப் போய் பெரிதாகக் கொடுத்து விட்டாயாக்கும்' என்ற மனப்பான்மையுடனே வாங்கிக்கொண்டது போலத்தான் தோன்றிற்று.

"அம்மா, நீ முதன்முதலாக வெளிநாடு போய் வந்திருக்கிறாய்; நினைவுக்காக ஏதாவது கொடுக்க எண்ணினாய். உன் திருப்திக்குக் கொடுத்தாய். மற்றபடி இங்கேயே எல்லாம் கிடைக்கிறது; பலருக்கும் வாங்கும் வசதியும் இருக்கிறது; அதனால் உன் பரிசுகளுக்குப் பிரத்தியேக வரவேற்பு ஏதும் இருக்குமென்று எதிர்பார்க்கக் கூடாது. என்ன, அந்தச் சின்னப் பெண் வெகுளியாகச் சொல்லி விட்டாள். மற்றவர்கள் மனதில் நினைத்துக் கொண்டிருப்பார்கள்" என்று மகன் நிதர்சனத்தைப் புரிய வைத்தான்.

இரண்டு நாட்கள் சென்ற பின், அண்ணனைப் பார்க்கச் சென்றிருந்தாள் சுமதி. அவருக்கும், அவர் மனைவிக்குமான பொருள்களைக் கொடுத்தாள். "சந்தோஷம் அம்மா. நம் அம்மாவுக்கு இன்னொரு கொள்ளுப் பேத்தி பிறந்ததில் பெருமை பிடிபடவில்லை" என்றார் அண்ணா. அப்பொழுதுதான் 'அட, அம்மாவுக்கென்று ஒன்றுமே கொண்டு வரவில்லையே. என்ன பெண் நான்?' என்று சுமதிக்குப் பொறி தட்டியது.

உள் அறையிலிருந்து பகல் தூக்கம் முடித்து "யாரது, சுமதி குரலாட்டம் இருக்கே" என்று கண்களைக் கையால் மறைப்புக் கட்டிப் பார்த்தவாறே தள்ளாடித் தள்ளாடி வந்த, எண்பதைக் கடந்த, அம்மாவைப் பார்த்ததும் விழுந்து வணங்கிவிட்டு, "எப்படி அம்மா இருக்கே? நல்லபடியாகப் போன வேலையை முடித்துக்கொண்டு வந்து விட்டேன். எல்லாம் உன் ஆசிர்வாதம்தான். உனக்குத்தான் ஏதும் வாங்கி வரவில்லை" என்று குற்றவுணர்வுடன் கூறினாள். "எனக்கென்னம்மா வேணும்? குழந்தையின் படம் கொண்டு வந்திருந்தால் காட்டு பார்க்கலாம். அவள் குழந்தையுடன் இந்த ஊர் வரும்பொழுது நான் இருப்பேனோ மாட்டேனோ" என்றார் அந்த மூதாட்டி.

தன் கைப்பையிலிருந்த பேத்தியின் சில புகைப்படங்களை எடுத்தாள் சுமதி. அவற்றை ஆவலுடன் வாங்கி "குழந்தை யார் மாதிரி இருக்கு? நான் பார்க்கப் பிறந்தவள் உன் பெண், அவளுக்கு இப்போது ஒரு குழந்தை!" என்று மகிழ்ச்சியுடன் கூறியவாறே அந்தப் புகைப்படங்களைத் தடவித் தடவிப் பார்த்து "கண்ணே போயிடுத்து. ஏதோ மொத்தாகாரமாத் தெரியறது" என்று மாய்ந்து மாய்ந்து கூறியபடி, கண்களில் நீர் மல்க, சந்தோஷத்தின் மொத்த உருவமாகக் காணப்பட்ட தன் தாயைப் பார்த்ததும், விலை மதிப்பற்ற பரிசு ஒன்றைக் கொடுத்த மனத் திருப்தியடைந்தாள் சுமதி.

அம்புஜவல்லி தேசிகாச்சாரி
More

இரண்டு கடிதங்கள்
Share: 




© Copyright 2020 Tamilonline