Thendral Audio Advertise About us
New User? | Forgot Password? | Email: Password: Login
Current Issue | Previous Issues | Author Index | Category Index | Organization Index | E-Magazine | Classifieds | Digital Downloads
By Category:
சின்னக்கதை | சமயம் | சினிமா சினிமா | இளந்தென்றல் | கதிரவனை கேளுங்கள் | ஹரிமொழி | நிகழ்வுகள் | மேலோர் வாழ்வில் | மேலும்
May 2005 Issue
ஆசிரியர் பக்கம் | நேர்காணல் | மாயாபஜார் | சாதனையாளர் | இலக்கியம் | முன்னோடி | அன்புள்ள சிநேகிதியே | நலம்வாழ | நூல் அறிமுகம் | பயணம்
குறுக்கெழுத்துப்புதிர் | சூர்யா துப்பறிகிறார் | சிறுகதை | புதிரா? புரியுமா? | சமயம் | வார்த்தை சிறகினிலே | பொது | சினிமா சினிமா | Events Calendar
எழுத்தாளர் | இளந்தென்றல் | நிகழ்வுகள் | தமிழக அரசியல் | புழக்கடைப்பக்கம்
Tamil Unicode / English Search
சிறுகதை
வந்தவள்
மருமகள்
- தண்மதி|மே 2005|
Share:
Click Here Enlargeநான் ரொம்ப பிசியாக இருந்த நேரமாகப் பார்த்து, இண்டர்காமில் அழைத்தார் நாராயணன் சார். “என்னப்பா தம்பி, இன்னைக்குச் சாயந்திரம் முக்கியமான வேலை ஏதும் இருக்கா?” என்றார். வேலை இருந்தது. ஆனால் இல்லை என்று சொன்னேன். “கொஞ்சம் ஷாப்பிங் போகணும், வரயா?” என்றார். சரியென்று சொல்லி போனை வைத்தேன்.

ஏன் ஒத்துக்கொண்டேன்? நிச்சயம் ரமாவிடம் திட்டு வாங்கப் போகிறேன். "உங்க நெத்தியிலெ எழுதி ஒட்டி இருக்கா என்ன? கூப்பிடறவங்களுக்கெல்லாம் ஓடி ஓடிப்போய் உபகாரம் பண்றீங்களே?" என்பாள். இன்றைக்கு எப்படியும் மணி பத்தாகி விடும் வீட்டுக்குப் போக. “என்ன நாஞ்சொல்றது, என்ன நாஞ்சொல்றது..” என்று பத்துத் தடவை சொல்லி, சின்ன விஷயத்தைப் பின்னிப் பின்னி பேசிக் கொண்டிருப்பார் நாராயணன் சார்.

அதனால்தான் ஒரு பயல்கூட அவர் கூப்பிட்டால் நிற்காமல் ஒடுகிறான்கள். பின்னே நான் ஏன் ஒத்துக்கொண்டேன்? அவர்மேல் உள்ள மரியாதையாலா? அல்லது அவர்மேல் உள்ள பரிதாபத்தாலா? பின்னே, ஏறக்குறைய மூவாயிரம் பேர் வேலை செய்யும் இவ்வளவு பெரிய மத்திய அரசு நிறுவனத்தில் நிர்வாகி அவர். அவரை இங்கே ஒரு பயலாவது மதிக்க வேண்டாமா? குறைந்தபட்சம் அவர் கீழே வேலை செய்யும் தடியன்களாவது? ஊஹ¥ம். அவரைப் பத்திக் கேட்டாலே சிரிக்கிறான்கள். இத்தனைக்கும் அவர் வம்பு தும்புக்கெல்லாம் போக மாட்டார். என்ன... ஒரு மாதிரி ரம்பம், அரைக்கிறுக்கு, சோம்பேறி, சாது.

மேனேஜர் என்றால் விளம்பரப் படத்தில் வருவது போல மிடுக்கான மேனேஜர் இல்லை. ஏறக்குறைய ஓய்வுபெறும் வயசு. அந்த காலத்திலேயே வேலைக்குச் சேர்ந்ததனால் படிப்படியாக முன்னேறி இப்பொழுது மேனேஜர் ஆகியிருக்கிறார். ஒரு பாடாவதியான டிபார்ட்மெண்ட்டில், ஒதுக்குப் புறமாய், பேருக்கு மேனேஜர் என்ற பதவி கொடுத்து உட்கார வைத்து இருந்தார்கள் அவரை. அதனால்தானோ என்னவோ அவர் எப்பொழுது கூப்பிட்டாலும் நான் சென்று உதவி செய்வது. அவரும் நானும் வேறு வேறு துறைகள் ஆனதால் எங்கள் உறவு சுமுகமாகவே இருந்தது. ஒருவிதத்தில் அவருக்கு ஜூனியர் நான். சீக்கிரமே அவரைத் தாண்டிக்கொண்டு போய் உயர் பதவி அடைந்துவிடும் நிலையில் உள்ள துடிப்பான முப்பத்தைந்து வயது இளைஞன் நான்.

மாலையில் அவர் வந்ததும் வராததுமாக, "தம்பி, நீ உன் குழந்தைக்கு என்ன பேபி ·புட் வாங்கிக்கொடுக்கற? அத வாங்கித்தா” என்றார்.

குழந்தை உணவா! சாரின் வீட்டில், எப்போதும் பூஜை அறையிலேயே வசிக்கும் அவர் மனைவி இருக்கிறார், தெரியும்; கல்யாண வயசில் ஒரு மகள் இருக்கிறாள், தெரியும்.

"அமெரிக்காலேர்ந்து என் மருமகளும் பேத்தியும் வர்றாப்பா!” என்றார் குதூகலமாய். நான் ஆச்சரியத்தின் விளிம்பைத் தொட்டேன்.

அட.. ஆமாம். நாராயணன் சாரின் மூத்த மகன் அமெரிக்காவுக்குப் படிக்கப் போனதும், நல்ல வேலை கிடைத்ததும், அங்கேயே கல்யாணம் நடந்ததும், சமீபத்தில் குழந்தை பிறந்ததும் ஞாபகத்துக்கு வந்தன. பையன் நல்ல படிப்பு படித்துவிட்டு, நல்ல நிறுவனத்தில், வால்மார்ட்டோ என்னவோ, ·பினான்ஷியல் கண்டிரோலராக இருக்கிறான். அவனோடு படித்து, பின் காதலித்து அவனைக் கைப்பிடித்த அவன் மனைவியும் அமெரிக்காவின் பிரபல வங்கி ஒன்றில் நிர்வாகி. பூஜை அறையை விட்டு வெளியே வராத நாராயணன் சார் மனைவி, குழந்தைப்பேற்றுக்கு அமெரிக்காவுக்குப் பறந்து சென்று உதவி விட்டு வந்ததை ஆபீசில் பேசிச் சிரித்தார்கள்.

நான் ஆச்சரியத்தின் விளிம்பைத் தொட்டதின் காரணம் அதுவல்ல. நாராயணன் சாரின் அமெரிக்க மருமகள் நிஜமாகவே அமெரிக்கப் பெண். அதாவது, வெள்ளைக்காரி. அவர் மகன் ஒரு வெள்ளைக்காரியைத்தான் காதலித்துக் கைப்பிடித்து இருந்தான். அவனோ சுத்த ஸ்ரீவைஷ்ணவன். அதனால்தான் ஆபீசில் அத்தனை பேச்சும் சிரிப்பும்.

“சார், அமெரிக்காலேர்ந்து வர்றவங்க குழந்தைக்குத் தேவையான உணவு, டயபர் எல்லாம் எடுத்து வருவாங்க. அவங்களுக்கு நம்ம தண்ணிகூட ஒத்துக்கிறதில்லே சார்" என்றேன். எங்கே நான் சொன்னது அவர் காதில் விழுந்தால் தானே? நகரத்திலேயே பெரிய சூப்பர்மார்க்கெட்கள் நாலைந்தில் ஏறி இறங்கி, ரகத்துக்கு ரெண்டாக பால் பவுடர் டப்பாக்களைக் காரில் அடுக்கிக் கொண்டார். குழந்தைப் பாசம் ஒரு ஆளை எப்படிப் பைத்தியமாக அடிக்கிறது என்று வியந்து போனேன். இத்தனைக்கும் அவர் மருமகளை நேரில் பார்ப்பது இதுதான் முதல் தடவையாம். கல்யாணம், குழந்தைப்பேறு முதற்கொண்டு எல்லாமே இ-மெயில், போட்டோ, போன் வழியாகத்தானாம். "·போன்ல அவ பேசற இங்கிலீஷ் எனக்கொண்ணும் மனசிலாகிறதில்லே” என்றார்.

ரமாவிடம் சொன்னபோது அவளுக்குச் சிரிப்பு பொத்துக்கொண்டு வந்தது. “அந்தம்மா பேத்திகிட்டே 'ஆனை, ஆனை, அழகர் ஆனை'ன்னு எப்படிப் பாடுவாங்க? எலி·பண்ட், எலி·பண்ட், அழகர் எலி·பண்ட்ன்னா?” என்று கிண்டல் செய்தாள். "ஆனாலும் அவங்களுக்குப் பொறுமை ஜாஸ்தி. வெள்ளைக்கார மருமகளுக்குச் சிசுருஷை பண்ணிட்டு வந்திருக்காங்களே” என்று சான்றிதழ் வேறு.

அடுத்த வாரத்தில் ஒரு நாள் மீண்டும் என்னை போனில் அழைத்தார் நாராயணன் சார். என்னுடைய காரில் அவரை வீட்டில் விட முடியுமா என்றார். "உங்க காருக்கு என்னாச்சு சார்" என்றேன் பயந்து போய். "ஒண்ணுமில்லேப்பா, மருமக வர்றா இல்லயா, அதான் கார் கழுவக் கொடுத்தேன்” என்றார். எனக்குச் சிரிப்பு வந்தது. பல மாதங்களாகத் தண்ணீரையே பார்த்திராத கார் அவருடையது. “பாமா விஜயமா?” என்று நக்கலடித்தாள் ரமா.

ரமாவின் கிண்டலுக்குக் காரணம் இருந்தது. ரமாவின் ஒரே தம்பியும் அமெரிக்காவில்தான் இருக்கிறான். அமெரிக்காவில் ஒழுங்காக எம்.எஸ். படித்து முடித்து, சன் மைக்ரோவில் சா·ப்ட்வேர் இஞ்சினியராக இருக்கிறான். போன வருடம்தான் திருமணம் முடிந்தது. அக்கா பார்க்கிற பெண்ணைத்தான் கட்டுவேனென்று பிடிவாதமாகச் சொல்லிவிட்டான். இவள் என்னவோ சைக்காலஜியில் பிஹெச்டி முடித்தவளாட்டம் “ஒரு தடவை பார்த்தாலே சொல்லிடுவேன், அவங்க நல்ல மனுஷங்க தானான்னு” என்று பீற்றிக்கொண்டாள். தம்பிக்கு அமெரிக்காவிலேயே வேலை செய்யும் பெண்ணைப் பார்க்கிறேன் பேர்வழி என்று ரமாவும் என் மகன் ஆதித்யாவும் அமெரிக்கா போய்வந்த கூத்தெல்லாம் கூட நடந்தது. இன்னும் அந்தப் பயணத்தின் பெருமையே எங்கள் வீட்டில் பேசி மாயவில்லை.

“அங்கல்லாம் இது ரொம்ப சகஜம்ங்க. இப்படித்தான் என் தம்பியின் ·பிரெண்டு ஒருத்தன் ஒரு சீனாக்காரிகூட வாழ்ந்துட்டு இருந்தான். 'லிவிங் டுகெதெர்'னு. அடுத்த வருஷம் கல்யாணம் பண்ணிக்கலாம்னு இருந்தாங்க. அதுக்குள்ள அவங்களுக்குள்ள என்னவோ பிரச்னை வந்து அவ அவனை விட்டுட்டுப் போயிட்டா. இவந்தான் ரொம்ப மனசொடிஞ்சு போயிட்டான். ஒருநாள் வீட்டுக்குக் கூப்பிட்டு சாப்பாடு போட்டேன். எங்கே தற்கொலை பண்ணிக்கப் போறானோன்னுட்டு பயமாவே இருந்தது. உனக் கென்னடா தலையெழுத்து? உனக்குப் பொண்ணு கொடுக்க நம்மூர்ல நூறு பவுன் போட்டு, கார் வாங்கிக் கொடுத்து, சினிமாக்காரி கணக்கா பொண்ணுங்க காத்திருப்பாங்களேன்னு நெனச்சுக்கிட்டேன்” என்றாள்.

பின்னர் அவளே, “என் ·பிரெண்டு ஒருத்திகூட ஒரு ரஷ்ஷியனை சீரியஸா லவ் பண்ணிக்கிட்டு இருந்தா. அப்புறம் என்ன ஆச்சோ பிரிஞ்சிட்டாங்க. எனக்கென்னவோ இப்படி நாடு மாறி, மதம், மொழி, கலாச்சாரம் மாறி லவ் பண்றதெல்லாம் ரொம்ப நாளுக்கு ஒத்து வராதுன்னு தோணுது. என்னதான் தூய்மையான அன்பு, பரஸ்பரம் விட்டுக்கொடுத்தல்னு இவங்கள்ளாம் சொன்னாலும், ரெண்டுபேர் நடுவில வித்தியாசங்கள் ஜாஸ்தி இருக்கும் போது சகிப்புத்தன்மை சீக்கிரம் கரைஞ்சிடுதுன்னுதான் தோணுது” என்றாள்.

“எல்லாம் தெரிந்த ஏகாம்பரம் மாதிரி இவ்ளோ கதை அளக்கிறேன். என் பையன் எந்த ஜப்பான்காரியை கூட்டிட்டு வந்து நிக்கப்போறானோ” என்று வேறு சொல்லிச் சிரித்தாள்.
அடுத்த வாரம் நான் அலுவலக வேலையாக டில்லி சென்று விட்டேன். சனிக்கிழமை காலையில்தான் திரும்ப முடிந்தது. மாலை குடும்பத்தோடு ஓட்டலில் சாப்பிட்டுவிட்டுத் திரும்பிக்கொண்டிருந்த போது நாராயணன் ·போன் செய்தார். “கொஞ்சம் இப்பவே வரயா?” என்றார். ரமாவைச் சமாதானப் படுத்திவிட்டு, அவளையும் குழந்தையையும் காரிலேயே உட்கார்ந்திருக்கச் சொல்லி விட்டு நான் லி·ப்ட் ஏறி நான்காவது மாடியில் மணி அழுத்தினேன். கதவைத் திறந்தவள் ஒரு வெள்ளைக்காரி! ஓ! மறந்தே போய்விட்டேன். பின்னால் இருந்து வந்த நாராயணன் சார் என்னை அப்படியே கவர்ந்து கொண்டு உள்ளே சென்றார்.

அவருடைய பிரச்சினை இதுதான். மருமகளையும் குழந்தையையும் விதவிதமாகப் படம் பிடித்து இருந்தாராம் அவருடைய டிஜிட்டல் காமிராவில். அதை கம்ப்யூட்டரில் டவுன்லோடு செய்யும் போது ஏதோ சிக்கலாகி, படம் வர மாட்டேங்குதாம். கம்ப்யூட்டரில் நான் உட்கார்ந்து அவர் பண்ணி வைத்த சொதப்பலைக் கண்டு பிடிக்க முயற்சிக்கும்போது லிண்டா (அதுதான் அவள் பெயர்) என் முதுகில் தட்டி, தன் கையில் இருந்த இத்தனூண்டு காமிராவைக் காட்டினாள். அவளும் வந்த நாளிலிருந்து ஒன்று விடாமல் படமெடுத்து வந்தாளாம். ஏறக்குறைய முந்நூறு படங்கள் இருக்கின்றனவாம் அவள் காமிராவில். ஒரு போட்டோக்கடையைக் காட்டுங்கள், எல்லாவற்றையும் பிரிண்ட் போட்டுக் கையில் கொடுத்துவிடுகிறேன் என்றாள். அமெரிக்காவில் என்றால் அவள் சுலபமாகச் செய்துவிடுவாளாம். இங்கே அந்த சாப்ட்வேர் இல்லையாம். போட்டோக்கடையில் இருக்குமாம். ஒரு கடையை மட்டும் காட்டுங்கள் என்றாள். இதை அவள் பல முறை சொல்லி இருப்பாள் போலிருக்கிறது. சார் அவளை நம்பாதவர் போல் முகத்தை வைத்துக்கொண்டு என்னையே பார்த்துக் கொண்டிருந்தார்.

அவள் கையிலிருந்த காமிராவை வாங்கிப் பார்த்தேன். வாவ்! டிஜிட்டல் காமிரா வரிசையில் லேட்டஸ்ட் அது. எத்தனை வசதிகள்! என்னிடம் இருந்த காமிரா இதன் முன்னால் ஜூஜூபி. சாரின் காமிராவோ ‘சலங்கை ஒலி’ படத்தில் வருவது போல் வெறும் டப்பா.

சாரிடம் பலமுறை எடுத்துச் சொன்ன பிறகே அரைமனதாக நம்பினார். சாரின் முதுகுக்குப் பின்னால் இருந்து கொண்டு என்னைப் பார்த்துச் சிரித்தாள் அவள். “நீங்களே சொல்லுங்கள் இவரிடம்” என்பது போல் இருந்தது அந்தச் சிரிப்பு. கிளம்பும் போது, “குழந்தைக்கு இங்கே விளையாடப் பசங்களே இல்லே. கஷ்டப்படறா. நாளைக்கு உன் பையனையும் வொய்·பையும் கூட்டிக் கொண்டு வா, மெரினாவுக்குப் போகலாம்” என்றார்.

ரமாவிடம் சொன்னதும் உற்சாகமாகி விட்டாள். காலையிலேயே எழுந்து, அலமாரியில் பலகாலமாகத் தூங்கிக் கொண்டு இருந்த அவள் ஜீன்ஸைத் தூசி தட்டி எடுத்துப்போட்டுக்கொண்டு சீக்கிரமே ரெடியாகி விட்டாள். பையனுக்கு அவள் தன் கையால் எம்பிராய்டரி செய்த டி சர்ட்டை மாட்டிவிட்டாள். “ரொம்ப குண்டாத் தெரியறனா” என்று அடிக்கடி கவலைப்பட்டாள். கத்தரிக்காய்க்குக் கையும் காலும் முளைத்தாற்போல இருக்கிறது என்று சொல்ல வந்து பேசாமல் இருந்துவிட்டேன். காரில் போகும்போது, “ஜிமிக்கியை மாத்த மறந்துட்டேன், பேசாம கழட்டி வச்சுடறேன். வெறும் காதோட இருப்பதுகூட பேஷன் தான்” என்றாள். அவளுடைய படபடப்பைப் பார்த்து எனக்குச் சிரிப்புத்தான் வந்தது.

பீச் மணலைப்பார்த்ததும் சாருடைய பேத்தி குஷியாகி விளையாட ஆரம்பித்துவிட்டாள். லிண்டா, “அஞ்ழொலி, அஞ்ழொலி” என்று அழைத்துக்கொண்டு அவளைப் பட மெடுத்துக்கொண்டிருந்தாள். அஞ்சலி ஆதித்யாவையோ மற்றப் பெரியவர்களையோ சட்டையே பண்ணாமல் மணலில் கைகளை விட்டு அளைந்து விளையாடினாள். தனியாகக் கிடைத்த ஒரு சந்தர்ப்பத்தில் லிண்டாவிடம், “ஹவ் டூ யூ லைக் அவர் கன்ட்ரீ ?” என்றேன். “இட்ஸ் வெரி நைஸ்ஸ்...” என்று அழுத்திச் சொன்னாள். “கணவர் இல்லாமல் புது நாட்டுக்கு வருவது சிரமம்தான் இல்லையா?” என்றேன். “இல்லை, ரெண்டு வருஷமாக கேட்டுக் கொண்டு இருக்கிறேன். அவருக்கு லீவு கிடைத்தால் எனக்குக் கிடைப்பதில்லை. எனக்கு கிடைத்தால் அவருக்கு கிடைக்கவில்லை. பார்த்தேன். அவருக்குக் கிடைக்காவிட்டால் பரவாயில்லை என்று அஞ்சலியை கூட்டிக்கொண்டு வந்து விட்டேன். அஞ்சலிக்கு ஒரு வயது முடிந்து விட்டது. தன் தாத்தா, பாட்டி, அத்தை யாரென்றே தெரியாமல் ஒரு குழந்தை வளர்வது வருத்தமான விஷயமில்லையா?” என்றாள்.

“குழந்தைக்கு எங்கள் உணவு ஒத்துக் கொள்கிறதா? ரொம்ப ஸ்பைசியாச்சே” என்றேன். “அஞ்சலிக்கு அமெரிக்காவிலேயே இட்லி கொடுப்பேன். என் கணவருக்குப் பிடித்தமான உணவு அது. அம்மாவிடம் (மாமியாரிடம்) செய்முறையை கற்றுக் கொண்டேன். அதனால் இட்லி சாப்பிடுகிறாள். ஆனால் புது இடம், புது மனிதர்கள் என்று மிரட்சியில் இருக்கிறாள்” என்றாள்.

அவள் அந்தப் பக்கம் நகர்ந்ததும் ரமா வந்து என் காதோடு கிசுகிசுத்தாள், “எவ்ளோ ஒல்லியா இருக்கா பார்த்தீங்களா? குழந்தை பெற்றவள் மாதிரியா இருக்கா? வயிறே தெரியலே. நாந்தான் யானைக்குட்டி மாதிரி இருக்கேன். அவள் போட்டிருப்பது டி.எல்.ஜே. டேஞ்சரஸ்லி லோ ஜீன்ஸ். பாருங்க தொப்புளுக்குக் கீழேயிருந்துதான் ஆரம்பிக்குது” என்றாள். உண்மைதான். தொப்புளுக்கு கீழேயிருந்துதான் ஆரம்பித்தது.

ஆனால் இத்தனை நேரம் அது எங்களுக்கு தெரியவில்லை. அவள் போட்டிருந்த சிக்கனமான குட்டைக்கை டி சர்ட். அதை மூடியும் மூடாமலும் இருந்தது. விரசமாக இல்லை. ஆனால் அதே சமயம் இழுத்துப் போர்த்துக்கொண்டும் இல்லை. அவள் பாட்டுக்குத் தன்னைப் பற்றிய சுய பிரக்ஞை இல்லாமல் இயல்பாக இருந்தாள்.

அவ்வப்போது, “டேடி, டேடி” என்று நாராயணன் சார் தோளைத்தொட்டுத் தான் எடுத்திருந்த போட்டோவைக் காட்டிக் கொண்டிருந்தாள். சாரும் இப்போது கூச்சம் மறந்து அவளுடன் வாஞ்சையுடன் பழக ஆரம்பித்து இருந்தார்.

ஆதித்யா தண்ணீரில் கால்வைக்க வேண்டும் என்று கேட்டதால் அவனை அழைத்துக்கொண்டு போனேன். அங்கிருந்து பார்க்கும்போது ரமாவும் லிண்டாவும் ரொம்ப நேரமாகப் பேசிக்கொண்டு இருந்தார்கள். ரொம்ப அன்னியோன்னியமாக, சிரித்துக்கொண்டு, கைகளை ஆட்டிப் பேசுவது தெரிந்தது. இந்தி நடிகையைப் போல உடையணிந்து வந்திருந்த நாராயணன் சாரின் மகள், மணலில் ஸ்டைலாக உட்கார்ந்துக்கொண்டு “அஞ்சலி, அஞ்சலி” என்று குழந்தையை அழைத்துக்கொண்டு இருந்தாள். குழந்தை சட்டை பண்ணினால் தானே? சாரின் மனைவி வரவே இல்லை.

விடை பெற்றுக்கொண்டு காரில் திரும்பும் போது “ரொம்ப நேரமாகப் பேசிக் கொண்டிருந்தீங்களே, என்ன பேசிக் கொண்டிருந்தீங்க?” என்று ரமாவின் வாயைக் கிண்டினேன். “அது ஒண்ணுமில்லே. நானும் அமெரிக்காவுக்கு வந்திருக்கேன்னு அவளுக்குச் சொல்லிக்கிட்டு இருந்தேன்” என்றாள். ரமாவா கொக்கா?

மேலும் தொடர்ந்தாள், “அஞ்சலியை சர்ச்சுக்கெல்லாம் அழைத்துக்கொண்டு போக ஆரம்பிச்சாச்சான்னு கேட்டேன். ஒரு சண்டே சர்ச்சுக்கு, ஒரு சண்டே கோயிலுக்குன்னு அழைத்துக்கொண்டு போறாளாம். சிரமமாயில்லையான்னேன். என்ன பண்றது? என்னாலே முடிஞ்ச அளவுக்குப் பண்றேன். ரெண்டு பக்கத்து கலாச்சாரமும் அவளுக்கு சமமா கிடைக்கணும்னு நினைக்கிறேன். அவ பெரியவளானதும் என்ன முடிவு பண்றாளோ அது அவ இஷ்டம்னு சொன்னாள்” என்றாள். எனக்கு ஆச்சரியமாய் இருந்தது. ஒரு பத்து நிமிஷம் கிடைத்தால், பெண்கள்தான் என்ன வெல்லாம் பேசி விடுகிறார்கள்!

ரமா சொன்னாள், "இந்த காலத்துப் பெண்கள், கணவன் மட்டும் ஏதோ வானத்துலேர்ந்து குதிச்சு வந்தவனாட்டம், அவர் நல்லவர்தான், ஆனா அவர் அப்பா அம்மா தான் ரொம்ப மோசம்னு கூசாம சொல்றாங்க. அப்படிப் பாக்கப்போனா, மாமியார் மாமனாரைப்பார்க்க, புள்ளையைத் தூக்கிட்டு பல ஆயிரம் மைல் தாண்டி வந்திருக்காளே, நிஜமாவே கிரேட்தான். எப்படிப் பாத்தாலும் இந்த அமெரிக்க மருமகள், சராசரி இந்திய மருமகளை விடப் பல மடங்கு உசத்திதான்!” என்றாள் சூடாக. நான் ஆச்சரியத்தின் எல்லையைத் தொட்டேன். ரமா வாயார ஒருத்தரைப் புகழ்ந்தால், அது வசிஷ்டர் வாயால் பிரம்மரிஷி பட்டம் வாங்கியது போல்தான். ஆனால் ரமா சொன்னது உண்மை என்றுதான் எனக்கும் பட்டது.

ஆமாம், ஜப்பானியர்கள் ரொம்ப மரியாதை தெரிந்தவர்களாமே உண்மையா?

தண்மதி
More

வந்தவள்
Share: 
© Copyright 2020 Tamilonline