|
|
|
தேச விடுதலை, சமூக விடுதலை, பெண் விடுதலை இவற்றை எல்லாம் ஒருங்கே சிந்தித்துத் தனது படைப்புகளில் வலுவாக வெளிப்படுத்திய எழுத்தாளர்கள் பலர். அவர்களுள் குறிப்பிடத் தகுந்தவர் விந்தியா. இயற்பெயர் 'இந்தியா தேவி'. இவர், ஒரிஸாவில் உள்ள பெர்ஹாம்பூரில் 1927ல் கே.என். சுந்தரேசன்-தையல்நாயகி இணையருக்கு மகளாகப் பிறந்தார். தந்தை பன்மொழி அறிஞர். தமிழ், தெலுங்கு, ஆங்கிலம், சம்ஸ்கிருதம், ஹிந்தி மொழிகள் அறிந்தவர். சிறந்த கவிஞர், மொழிபெயர்ப்பாளர். பெர்ஹாம்பூரில் உள்ள காளிகோட் கல்லூரியில் கணித விரிவுரையாளராகப் பணியாற்றி வந்தார். காந்தியக் கொள்கைகளில் ஈடுபாடும், மிகுந்த தேசப்பற்றும் கொண்டிருந்த அவர், தன் மூத்த மகளுக்கு அதைப் பிரதிபலிக்கும் வகையில் 'இந்தியா தேவி' என்று பெயரிட்டார்.
உள்ளூர்ப் பள்ளியில் சேர்க்கப்பட்டார் இந்தியா தேவி. அங்கு தெலுங்கு பாடமொழி. அதனால் வீட்டில் தன் குழந்தைகளுக்குத் தனியாகத் தமிழ் கற்பித்தார் தந்தை. சகோதர, சகோதரிகளுடன் விருப்பத்துடன் தமிழ் பயின்றார் இந்தியா தேவி. தந்தை சுதேசமித்திரன், கலைமகள், ஆனந்தவிகடன், கல்கி போன்ற இதழ்களைத் தமிழ்நாட்டிலிருந்து வரவழைப்பார். அவற்றை வாசித்துத் தமிழறிவை மேலும் வளர்த்துக்கொண்டார் இந்தியா தேவி. தவிர, வாய்ப்பாட்டு, வயலின் ஆகியவையும் கற்றார். பள்ளியிறுதி வகுப்பில் தேர்ச்சி பெற்ற அவருக்கு, அக்கால வழக்கப்படி, 1942ல், அவரது பதினைந்தாம் வயதில் திருமணம் நடந்தது.
கணவர் வி. சுப்பிரமணியன் கட்டாக்கில் பொருளாதாரப் பேராசிரியர். கணவருடன் கட்டாக் சென்று தனது இல்லற வாழ்வைத் தொடங்கினார் இந்தியா தேவி. மனைவியின் வாசிப்பார்வம் அறிந்த கணவர் கலைமகள், கல்கி, காவேரி போன்ற இதழ்களைத் தருவித்து வாசிப்பார்வத்தை ஊக்கப்படுத்தினார். வாசிக்க வாசிக்க எழுத்தின் சூட்சுமம் பிடிபட்டது. ஆர்வம் உந்த, கதை எழுத ஆரம்பித்தார். 'விந்தியா', 'விந்தியா தேவி' என்ற புனைபெயர்களைச் சூட்டிக் கொண்டார்.
முதல் சிறுகதை 'ஏடுகள் சொல்வதுண்டோ?', மார்ச் 1947ல் 'காவேரி' இலக்கிய இதழில் வெளியானது. அப்போது விந்தியாவுக்கு வயது 20. கத்திமேல் நடக்கக்கூடிய ஒரு கருவை அதில் கையாண்டிருந்தார் அவர். சந்தர்ப்ப சூழ்நிலைகளால், காதல் நிறைவேறாமல், பல காதலர்கள் தங்கள் காதலிகளுக்கு 'அண்ணா' ஆகின்றனர். ஆனால், ஒரு பெண்ணுக்கு, அவள் குழந்தையாக இருந்தபோது 'அண்ணா' என்று சொல்லப்பட்ட ஓர் ஆணின்மீது, பருவ வயதில் காதல் வந்தால் என்ன ஆகும்? அதைத்தான் கதையில் பிரமிப்பூட்டும் வகையில் காட்சிப்படுத்தியிருந்தார் விந்தியா. இப்போதும் எழுத்தாளர்கள் எடுத்துக்கொள்ளத் தயங்கும் ஒரு கருவை, தன் முதல் கதையிலேயே எடுத்துக்கொண்டு, மிகச் சிறப்பாகக் கையாண்டு வெற்றி பெற்றார் விந்தியா.
தொடர்ந்து 'கலைமகள்' இதழுக்குக் கதைகள் எழுதி அனுப்பினார். 'பார்வதி' என்னும் விந்தியாவின் இரண்டாவது சிறுகதை, கலைமகளின் சுதந்திரதின இதழில் (ஆகஸ்ட் 15, 1947) வெளியானது. பால்ய விவாகம் சகஜமாக இருந்த அந்தக் காலத்தில், ஒரு பெண் வயதுக்கு வந்ததை மறைத்தால், அப்படியே மறைத்துத் திருமணமும் செய்தால், என்ன ஆகும் என்பதை மிகவும் பரபரப்பாக அதில் சொல்லியிருந்தார் விந்தியா. கதையைப் படித்துப் பார்த்து வியந்த ஆசிரியர் கி.வா.ஜ., தொடர்ந்து கலைமகளுக்குக் கதைகள் எழுதும்படி விந்தியாவுக்குக் கடிதம் எழுதினார். தொடர்ந்து விந்தியாவின் கதைகளைக் கலைமகளில் வெளியிட்டார். சுதேசமித்திரன், கலைமகள், காவேரி, பாரிஜாதம், வெள்ளிமணி, கல்கி போன்ற இதழ்களில் தொடர்ந்து விந்தியாவின் சிறுகதைகள் வெளியாகின. பிற்காலத்தில் ஆனந்தவிகடன், குமுதம், தினமணிகதிரிலும் வெளிவந்தன.
1951ல், அமெரிக்க நாளிதழான 'நியூயார்க் ஹெரால்ட் ட்ரிப்யூன்' உலகளாவிய சிறுகதைப் போட்டி ஒன்றை அறிவித்தது. இந்தியாவில் 'ஹிந்துஸ்தான் டைம்ஸ்' இதழ் அதனை முன்னெடுத்தது. உலகெங்கிலுமிருந்து எழுத்தாளர்கள் கலந்து கொள்ளலாம் என்பதை 'கல்கி' இதழ்மூலம் அறிந்த விந்தியா, அப்போட்டியில் பங்கேற்றார். அவர் எழுதிய 'காதல் இதயம்' என்ற சிறுகதை எழுத்தாளர் கல்கியால் சிறந்த கதையாகப் பிரசுரத்திற்குத் தேர்ந்தெடுக்கப்பட்டது. இது பின்னர் கல்கி இதழில் அதே தலைப்பில் வெளியானது. தமிழில் தேர்ந்தெடுக்கப்பட்ட நான்கு சிறுகதைகளில் விந்தியாவின் இந்தச் சிறுகதைக்கு இரண்டாமிடம் கிடைத்தது.
மனித உணர்வுகளை, மானுட மாண்புகளை, விழுமியங்களை உயிர்ப்புடன் படம்பிடித்துக் காட்டும் வகையில் விந்தியாவின் பல சிறுகதைகள் அமைந்திருக்கின்றன. குழந்தைகளின் கள்ளமற்ற உள்ளப்பாங்கை வெளிப்படுத்துவதாக 'கண்ணனின் மாமா', 'ஏடுகள் சொல்வதுண்டோ', 'அன்பு மனம்', 'குழந்தை உள்ளம்' போன்ற சிறுகதைகள் அமைந்திருக்கின்றன. வாழ்க்கையில் சிக்கல்களும் ஏற்றத்தாழ்வுகளும் பிரச்சனைகளும் இருக்கத்தான் செய்யும்; நாம் அவற்றை உணர்ந்து எவ்வாறு அணுகுகிறோமோ அதைப் பொறுத்தே அவற்றின் விளைவுகள் ஏற்படுகின்றன என்பதை 'ஒரு சொல்', 'மாதம் பிறந்தது' போன்றவை காட்டுகின்றன. தான் கண்டவை, கேட்டவை மற்றும் தனது வாழ்க்கை அனுபவங்களை, கற்பனை கலந்து பல சிறுகதைகளை எழுதியிருக்கிறார். மத்தியதர வரக்கத்தின், குறிப்பாகப் பெண்களின், உளப்பாங்கை மிகையில்லாமல் காட்டுகின்றன இவரது சிறுகதைகள். அதே சமயம், கதைகள் அனைத்தும் பெண்களை மையமாகக் கொண்டவை அல்ல என்பதும் கவனிக்கத்தக்கது. சில சிறுகதைகள் குழந்தைத் தொழிலாளரின் நிலைமை, இரண்டு திருமணம் செய்து கொண்டவரின் உளச்சிக்கல்கள், துயரத்தில் வாழ்பவரின் நேர்மை என மாறுபட்ட சிந்தனைப் போக்குகளை முன் வைக்கின்றன. |
|
விந்தியாவின் படைப்புகள் சிறுகதைகள்: ஏடுகள் சொல்வதுண்டோ?, பார்வதி, கண்ணனின் மாமா, ஒரு சொல், குற்றமுள்ள நெஞ்சு, கற்பனை உள்ளம், பெயர் மாற்றம், அந்த நாளிலே, ஞானம் வேண்டாம், அமைதியின் எதிரொலி, அனுபவ வார்த்தை, போகும்பொழுதும், நல்ல மனது, கிடைத்தது மாற்று, அன்பு மனம், மாசு, கிறுக்கு, நிலைக்கண்ணாடி, மறந்தநிலை, புதுவாழ்வு, கூப்பிய கை, விழியின் வெம்மை, காதல் இதயம் மற்றும் பல.
சிறுகதைத் தொகுப்பு: Cupids's Alarms (ஆங்கில மொழிபெயர்ப்பு: பேராசிரியர் ஆனந்தரங்கன் (Andy Sundaresan)
நாவல்: சுதந்திரப் போர், Rajeswari (ஆங்கில மொழிபெயர்ப்பு : பேராசிரியர் ஆனந்தரங்கன் (Andy Sundaresan)
கட்டுரை: அம்மன் விழா, தேர்தல் அரசாங்கம், விலைவாசி ஏற்றம் மற்றும் பல
நாடகம்: தாத்தாவின் பீதி
விந்தியாவின் சிறுகதைகள் பற்றி, 'Cupids's Alarms' சிறுகதைத் தொகுப்பின் முன்னுரையில் ராஜம் கிருஷ்ணன், "விந்தியாவின் அனைத்துச் சிறுகதைகளுமே சுதந்திரப் போராட்டம் முடிந்து இரண்டாம் உலகப் போர் தோற்றுவித்த சிதைவுகளில் இருந்து நம்பிக்கையுடன் முன்னேறும் காலகட்டத்தில் எழுதப்பட்டவை. புதிய ஊக்கத்துடன் மறுமலர்ச்சியை எதிர்நோக்கி இந்திய சமுதாயம் முன்னேறத் தொடங்கி இருந்த காலத்தை, அனைத்துச் சிறுகதைகளும் 'சிலும்புகள்' ஆழ்ந்து விடாத அமைதியுடன் பிரதிபலிக்கின்றன. பெண்ணின் மாண்பை விரிக்கும் இச்சொல்லோவியங்கள் அவளாலேயே ஆண் ஏற்றம் பெறுகிறான் என்ற கருத்தைப் பதிக்கவும் தவறவில்லை. படைப்புக் கலையில் என்றும் அழியாச் சிறு நட்சத்திரங்களாக இச்சிறுகதைகள் தமிழுக்குப் பெருமை சேர்க்கின்றன" என்கிறார். பிரபல எழுத்தாளர் நரசய்யா, விந்தியாவின் படைப்புகள் குறித்து, "இவ்வளவு சிறப்பாக அக்காலத்திலேயே கதைகள் எழுதப்பட்டுள்ளன. அதிலும் அவை முறையாகத் தமிழைப் பயிலாத, புலம்பெயர்ந்த ஒரு பெண்மணியால் எழுதப்பட்டுள்ளது போற்றுதலுக்குரிய செயல்பாடு" என்று மதிப்பிடுகிறார்.
நூற்றுக்கும் மேற்பட்ட சிறுகதைகளை எழுதியிருக்கிறார் விந்தியா. அவற்றுக்காகப் பல்வேறு பரிசுகளையும் பெற்றிருக்கிறார். குறிப்பாக, கலைமகள் இதழ் நடத்திய சிறுகதைப் போட்டிகளில் இவரது கதைகள் பரிசு வென்றுள்ளன. 'அன்பு மனம்' சிறுகதை கலைமகள் நடத்திய சிறுகதைப் போட்டியில் முதல் பரிசு பெற்றது. சுதேசமித்திரனில் விலைவாசி, தேர்தல், ஜனநாயகம் குறித்தெல்லாம் பல கட்டுரைகள் எழுதியிருக்கிறார். சுதேசமித்திரன் நடத்திய கட்டுரைப் போட்டியில் இவரது 'அம்மன் திருவிழா' கட்டுரை, சிறந்த கட்டுரைக்கான பரிசைப் பெற்றுள்ளது. கலைமகள் நாராயணசாமி ஐயர் நினைவு நாவல் போட்டிக்காக விந்தியா எழுதியது 'சுதந்திரப் போர்'. பிரபல எழுத்தாளரும், மொழிபெயர்ப்பாளருமான, பேராசிரியர் ஆனந்தரங்கன் (Andy Sundaresan) விந்தியாவின் இளைய சகோதரர். இவர், ஜெயகாந்தன் உள்ளிட்ட பலரது நாவல்களை ஆங்கிலத்தில் மொழிபெயர்த்தவர். இவர், விந்தியாவின் தேர்ந்தெடுத்த சிறுகதைகளை 'Cupids's Alarms' என்ற தலைப்பில் ஆங்கிலத்தில் மொழிபெயர்த்துள்ளார். விந்தியாவின் 'சுதந்திரப் போர்' நாவலை 'Rajeswari' என்ற தலைப்பில் ஆங்கிலத்தில் தந்துள்ளார். இவற்றை அமெரிக்காவில் உள்ள 'குறிஞ்சி பதிப்பகம்' வெளியிட்டுள்ளது. விந்தியா எழுதிய 'சுதந்திரப் போர்' நாவலை இங்கே வாசிக்கலாம். அவரது தேர்ந்தெடுத்த சில சிறுகதைகள் தெலுங்கில், எழுத்தாளர் திரு. சேஷராவ் அவர்களால் மொழிபெயக்கப்பட்டுள்ளன.
1947 தொடங்கி 1960 வரை மிகவும் வெற்றிகரமான எழுத்தாளராக விளங்கி வந்த விந்தியா, 1960க்குப் பின் அதிகம் எழுதவில்லை. ஆன்மீகம் மற்றும் ஆன்மீகம் சார்ந்த பணிகள், பயணங்களில் அவரது மனம் ஈடுபட்டதால் பத்திரிகைகளுக்கு எழுதுவதை நிறுத்திக் கொண்டார். கதைகள் எழுதுவதை நிறுத்தி விட்டாலும் விந்தியா தினந்தோறும் நாட்குறிப்புக்களாக, தனது சிந்தனைகளை ஒரு டயரியில் தன் வாழ்நாளின் இறுதிவரை எழுதிவந்தார். அவை அவரது குடும்பத்தாரால் பாதுகாப்படுகின்றன. அவை அச்சேறினால் விந்தியாவின் சிந்தனைகளை மட்டுமல்லாமல் 1950, 60களில் பெண்களின் வாழ்க்கையைப் பற்றியும் நாம் அறிந்துகொள்ள முடியும். அக்டோபர் 7, 1999ல் விந்தியா காலமானார்.
தமிழின் அக்காலத்துப் பெண் படைப்பாளிகளுள் விந்தியாவுக்குச் சிறந்ததோர் இடமுண்டு.
(தகவல் உதவி: www.vindhiya.com)
தொகுப்பு: அரவிந்த் |
|
|
|
|
|
|
|
|