Thendral Audio Advertise About us
New User? | Forgot Password? | Email: Password: Login
Current Issue | Previous Issues | Author Index | Category Index | Organization Index | E-Magazine | Classifieds | Digital Downloads
By Category:
சின்னக்கதை | சமயம் | சினிமா சினிமா | இளந்தென்றல் | கதிரவனை கேளுங்கள் | ஹரிமொழி | நிகழ்வுகள் | மேலோர் வாழ்வில் | மேலும்
August 2021 Issue
தென்றல் பேசுகிறது | நேர்காணல் | மாயாபஜார் | சினிமா சினிமா | சின்னக்கதை | சமயம் | அன்புள்ள சிநேகிதியே | அஞ்சலி | சிறப்புப் பார்வை | சிறுகதை
எழுத்தாளர் | இளந்தென்றல் | நிகழ்வுகள் | கதிரவனை கேளுங்கள் | முன்னோடி | வாசகர்கடிதம்
சிறுகதை
Tamil Unicode / English Search
எழுத்தாளர்
சின்ன அண்ணாமலை
- அரவிந்த்|ஆகஸ்டு 2021|
Share:
"நாட்டுக்கு நமது சின்ன அண்ணாமலை செய்திருக்கும் சேவை மகத்தானது. அவருடைய பேச்சைக் கேட்டுப் பல இளைஞர்கள் சுதந்திரப் போராட்டத்தில் ஈடுபட்டது எனக்குத் தெரியும். சின்ன அண்ணாமலையின் தலைக்கு விலை வைத்தது ஆங்கில அரசாங்கம். ஒரு மாதம் வெள்ளைக்கார அரசாங்கத்தை ஸ்தம்பிக்க வைத்தவர் சின்ன அண்ணாமலை," இப்படிப் பாராட்டியவர் காமராஜர். "எனக்கு மிகவும் பிடித்தமானவர்களில் சின்ன அண்ணாமலை முக்கியமானவர். தெய்வபக்தியும், தேசபக்தியும், தமிழ் பக்தியும் நிறைந்தவர். இவருடைய வாழ்க்கை வீரம் நிறைந்தது. காந்திய வழியில் தொண்டு செய்யும் உள்ளம் கொண்டவர்" இப்படிப் பாராட்டினார் ராஜாஜி. இவ்வாறு தேச விடுதலைப் போராட்டத்தில் ஈடுபட்ட பல தலைவர்களால் பாராட்டப்பட்ட சின்ன அண்ணாமலை எழுத்தாளர், பேச்சாளர், பதிப்பாளர், சினிமா கதாசிரியர், தயாரிப்பாளர் எனக் கலையுலகின் பல தளங்களிலும் முத்திரை பதித்தவர். மிகச்சிறந்த சுதந்திரப் போராட்ட வீரர்.

இவர், ஜூன் 18, 1920ல், காரைக்குடியை அடுத்துள்ள ஓ.சிறுவயலில், நாச்சியப்ப செட்டியார் - மீனாட்சி ஆச்சி இணையருக்கு மகனாகப் பிறந்தார். இயற்பெயர் நாகப்பன். தொடக்கக் கல்வி காரைக்குடியில். சிறந்த இலக்கியப் பேச்சாளரும், 'கம்பன் கழகம்' நிறுவனருமான கம்பன் அடிப்பொடி சா. கணேசன் இவரது உறவினர். அவர்மூலம் காங்கிரஸ் இயக்கம் பற்றியும், தேச விடுதலை பற்றியும் அறிந்தார். காரைக்குடிக்கு வருகை தந்திருந்த மகாத்மா காந்தியின் தரிசனமும் கிட்டியது. அது அந்த இளவயதிலேயே தேச விடுதலை மீதான ஆர்வத்தை வளர்த்தது.



தேவகோட்டையைச் சேர்ந்த பிரபல வணிகரான நாச்சியப்ப செட்டியார் - மீனாட்சி ஆச்சி இணையருக்கு அண்ணாமலை தத்துக் கொடுக்கப்பட்டார். உயர்நிலைக் கல்வியை தேவகோட்டையில் உள்ள நகரத்தார் உயர்நிலைப்பள்ளியில் பயின்றார். அக்காலகட்டத்தில் கமலா நேரு காலமானார். மாணவர் தலைவராக இருந்த அண்ணாமலை, தலைமை ஆசிரியரைச் சந்தித்து, கமலா நேருவுக்கு அஞ்சலி செலுத்தும் வகையில் பள்ளிக்கு விடுமுறை அளிக்கும்படிக் கேட்டுக் கொண்டார். ஆசிரியர் மறுத்தார். வாதம், விவாதமாக வளர்ந்து இறுதியில் மாணவர்களின் போராட்டமாக மாறியது. அதனால் பள்ளியிலிருந்து நீக்கப்பட்டார் அண்ணாமலை. கல்வி தடைப்பட்டது. சுதந்திர தாகம் வளர்ந்தது. இலக்கிய தாகமும் அதிகரித்தது. இலக்கிய நூல்களைத் தேடித்தேடி வாசிக்கத் துவங்கினார். 'கல்கி' இதழ் இவரை வெகுவாகக் கவர்ந்தது. கல்கிபோல் எழுதவும், சா. கணேசன்போல் பேசவும் ஆர்வம் கொண்டார். அதற்கான பயிற்சிகளில் ஈடுபட்டார். நாளடைவில் சிறு சிறு கூட்டங்களில் பேச ஆரம்பித்தார்.

தந்தை நாச்சியப்பச் செட்டியார் தன் மகன் முறையாகக் கல்வி கற்க வேண்டுமென விரும்பினார். அதனால் தனக்குத் தெரிந்தவர்கள் மூலம் கோபிச்செட்டிபாளையத்தில் உள்ள டைமண்ட் ஜூபிலி மேல்நிலைப் பள்ளியில் மகனைச் சேர்த்தார். பள்ளியில் மாணவர் சங்கத்தின் செயலாளராக இருந்த அண்ணாமலை, கோபிக்கு வருகை தந்திருந்த காங்கிரஸ் தலைவர் தீரர் சத்தியமூர்த்தியைச் சந்தித்தார். தனது பள்ளிக்கு வந்து மாணவர்களிடையே எழுச்சி உரையாற்ற வேண்டிக் கொண்டார். தீரரும் ஒப்புக்கொண்டு பேசினார். நிகழ்ச்சியின் இறுதியில் மாணவர் அண்ணாமலையும் பேசினார். அந்தப் பேச்சால் ஈர்க்கப்பட்ட சத்தியமூர்த்தி அங்கேயே அவரைப் பாராட்டி வாழ்த்தியதுடன், கோபியில் நடந்த காங்கிரஸ் மாநாட்டிலும் அண்ணாமலைக்குப் பேச வாய்ப்பளித்தார். இளம்பேச்சாளராகக் காங்கிரஸ் தலைவர்களுக்கு அறிமுகமானார் அண்ணாமலை. தீரர் சத்தியமூர்த்தியின் வேண்டுகோளுக்கிணங்கி அதுமுதல் கதர் அணிவதை வழக்கமாக்கிக் கொண்டார். தொடர்ந்து தமிழகமெங்கும் சென்று காங்கிரஸ் கூட்டங்களில் பேசத் தொடங்கினார். எழுச்சிமிகு பேச்சால் இளைஞர்கள் பலரைச் சுதந்திரப் போராட்டக் களத்திற்கு ஈர்த்தார். அந்த இளவயதிலேயே அவருக்கு உமையாளுடன் திருமணம் நிகழ்ந்தது. குடும்பப் பொறுப்புகளும் அதிகரித்தன. ஆனாலும் சுதந்திரப் போராட்டப் பணிகளைத் தொடர்ந்தார்.

மகனின் போக்கைக் கண்டு வருந்திய தந்தை, மலேசியாவில் தனக்குச் சொந்தமான தொழில்களைப் பார்த்துக்கொள்ள அண்ணாமலையை அனுப்பி வைத்தார். ஆனால், அங்கு சென்றும் அண்ணாமலை சும்மா இருக்கவில்லை. ஏழைத் தொழிலாளர்கள் தங்கள் தினப்படி ஊதியத்தை மதுவுக்குச் செலவழித்துவிட்டு வெறுங்கையுடன் வீடு திரும்புவதைக் கண்டு மனம் கொதித்தார். இதற்கு உடனடியாகத் தீர்வு காண விரும்பியவர், தீவிரமாக மதுவிலக்குப் பிரச்சாரத்தில் ஈடுபட்டார். அவரது எழுச்சி உரையால் ஈர்க்கப்பட்ட பலரும் அவர்பின் திரண்டனர். பாதிக்கப்பட்ட பெண்கள் உள்படப் பலரும் ஊர்வலமாகச் சென்றனர். ஊர்வலத்தின் இறுதியில் கள்ளுக்கடைகள் அனைத்தும் தீ வைத்து எரிக்கப்பட்டன. இதற்குக் காரணம் இளைஞரான அண்ணாமலைதான் என்பதை அறிந்த கவர்னர் அண்ணாமலையை உடனே நாட்டை விட்டு வெளியேற உத்தரவிட்டார்.



அண்ணாமலை தமிழகம் திரும்பினார். வழக்கம்போல் தேச விடுதலைப் பணிகளில் ஈடுபட்டார். மகாத்மா காந்திமீது மிகுந்த அன்பும் மதிப்பும் கொண்டிருந்த அவர், காந்திய இயக்கத்துக்கு ஆதரவாக யுத்த எதிர்ப்புப் போராட்டத்தில் கலந்து கொண்டார். அதனால் கைது செய்யப்பட்டு சிறையிலடைக்கப்பட்டார். ஆறுமாத காலம் சிறையிலிருந்தார். சிறையிலிருந்து இவர் வெளிவரவும், காந்தி 'வெள்ளையனே வெளியேறு' போராட்டத்தை ஆரம்பிக்கவும் சரியாக இருந்தது. உடனே இளைஞர்களையும், நண்பர்களையும் திரட்டி ஊர் ஊராகச் சென்று போராட்டத்தில் ஈடுபட்டார். இவரது பேச்சுக்குப் பெருந்திரளாகக் கூடி மக்கள் ஆதரவளித்தனர். அதனைக் கண்டு அஞ்சியது பிரிட்டிஷ் அரசு.

அவரைக் கைது செய்யத் தகுந்த நேரம் பார்த்து வந்தது. அண்ணாமலை தேவகோட்டையில் போராட்டத்தில் பங்கேற்கச் சென்றபோது நள்ளிரவில் அவரைக் கைது செய்தது. உள்ளூர் சிறையில் அடைத்தால் கலவரம் வருமோ என்று அஞ்சிய பிரிட்டிஷ் அரசு, அருகிலுள்ள திருவாடானை சிறையில் அவரை அடைத்தது. இதனை அறிந்த மக்கள் கொதித்தனர். ஆயிரக்கணக்கானோர் திரண்டு, சிறையை நோக்கி ஊர்வலமாகச் சென்றனர். அதன் பிறகு நடந்தது அதுவரை பிரிட்டிஷ் இந்தியாவில் நிகழாத ஒன்று.

மக்கள் சேர்ந்து தாங்கள் கையோடு கொண்டு சென்றிருந்த ஈட்டி, கோடரி போன்ற ஆயுதங்களால் சிறைச்சாலையைத் தாக்கி, சிறைக்கதவை உடைத்து அண்ணாமலையை விடுவித்தனர். பின்னர் அவரை ஊர்வலமாக அழைத்துச் சென்றனர். இது குறித்துச் சின்ன அண்ணாமலை, தனது 'சொன்னால் நம்பமாட்டீர்கள்' நூலில், "பட்டப்பகல் 12 மணிக்குப் பல ஆயிரக்கணக்கான மக்கள் சூரியன் அஸ்தமிக்காத பிரிட்டிஷ் சாம்ராஜ்யத்தின் சிறைக்கதவை உடைத்து ஒரு அரசியல் கைதியை விடுதலை செய்தது, சரித்திரத்தில் அதுதான் முதல் தடவை. அந்தச் சரித்திரச் சம்பவத்துக்கு நான் காரணமாக இருந்தேன் என்று நினைக்கும்போது இன்றும் நான் பெருமைப்படுகிறேன். இந்தியாவில் வேறு யாருக்கும் கிடைக்காத பெருமை எளியேனுக்குக் கிடைத்தது" என்கிறார். அதனைத் தொடர்ந்து நடந்த கலவரங்களாலும், துப்பாக்கிச் சூடு மற்றும் உயிர்ப் பலிகளாலும் அண்ணாமலை தலைமறைவாக இருக்க நேர்ந்தது. ஆனால், பிரிட்டிஷார் அவரது தந்தையை பிணைக்கைதியாகப் பிடித்து வைத்ததால் அண்ணாமலை காவல் துறையினரிடம் சரணடைந்தார். அவருக்கு ஆயுள் தண்டனை விதிக்கப்பட்டது. மேல்முறையீட்டில் அது எட்டு மாதமாகக் குறைக்கப்பட்டது. சிறையிலிருந்து வெளியே வந்து மீண்டும் தேச விடுதலைப்பணியைத் தொடர்ந்தார் அண்ணாமலை.



அக்கால கட்டத்தில் கல்கி, ராஜாஜி, சத்தியமூர்த்தி இவர்களோடு நாமக்கல் கவிஞர் வெ. ராமலிங்கம் பிள்ளை, டி.கே. சிதம்பரநாத முதலியார், பேராசிரியர் அ. சீநிவாச ராகவன், ஏ.கே. செட்டியார் உள்ளிட்ட பலரது அறிமுகமும் நட்பும் அண்ணாமலைக்குக் கிடைத்தது. ஏ.கே. செட்டியார் 'குமரிமலர்' என்ற இதழை வெற்றிகரமாக நடத்தி வந்தார். அவர் அண்ணாமலையைச் சென்னைக்கு அழைத்து வந்தார். அவரது தூண்டுதலாலும், கல்கி, ராஜாஜி போன்றோரது ஆலோசனையின் பேரிலும் 'தமிழ்ப் பண்ணை' என்னும் புத்தக வெளியீட்டு நிறுவனத்தை ஆரம்பித்தார் அண்ணாமலை. அது அவரது வாழ்வின் திருப்புமுனையானது. தமிழ்ப் பண்ணையின் முதல் வெளியீடாக 'தமிழன் இதயம்' என்ற நாமக்கல் கவிஞரின் நூல் வெளிவந்தது. அந்நூல் நாமக்கல் கவிஞரின் பாடல்களைப் பட்டிதொட்டி எல்லாம் பரவச் செய்தது. வண்ண அட்டை, தெளிவான அச்சு, சிறப்பான தயாரிப்பில், மலிவு விலையில் தமிழ்ப் பண்ணையின் நூல்கள் வெளியாகின. மக்களிடையே அவற்றுக்கு நல்ல வரவேற்புக் கிடைத்தது.

ராஜாஜி மது விலக்கை எதிர்த்து 'விமோசனம்' என்ற இதழை ஆரம்பித்து நடத்தினார். கல்கி அதன் ஆசிரியர். ராஜாஜி, கல்கி இருவருமே மதுவின் தீமைகளை விளக்கிப் பல கட்டுரை, சிறுகதைகளை அவ்விதழில் எழுதினர். கல்கி எழுதிய சிறுகதைகளைத் தொகுத்து 'தமிழ்ப் பண்ணை' வெளியீடாகக் கொண்டு வந்தார் அண்ணாமலை. ராஜாஜியின் 'திண்ணை ரசாயனம்', 'வியாசர் விருந்து', வ.ரா.வின் 'தமிழ்ப் பெரியார்கள்', டி.கே.சி,, வெ. சாமிநாத சர்மா, தி.சு. அவினாசிலிங்கம், ம.பொ. சிவஞானம், கண்ணதாசன், டி.எஸ். சொக்கலிங்கம், பொ. திருகூடசுந்தரம் பிள்ளை, தி.ஜ. ரங்கநாதன், துமிலன் எனப் பலரது நூல்கள் தொடர்ந்து தமிழ்ப் பண்ணை வெளியீடுகளாக வந்தன.

சின்ன அண்ணாமலை எழுதிய நூல்கள்
சீனத்துச் சிங்காரி, கண்டறியாதன கண்டேன், காணக் கண்கோடி வேண்டும், சிரிப்புக் கதைகள், தியாகச் சுடர், சிந்திக்க வைக்கும் சிரிப்புக் கதைகள், சொன்னால் நம்ப மாட்டீர்கள், சர்க்கரைப் பந்தல், வசந்தம் வந்தது மற்றும் பல.

தமிழ்ப் பண்ணை' மூலம் வெளியிட்ட நூல்கள்
நாமக்கல் கவிஞர் - தமிழன் இதயம், அவளும் அவனும், மலைக்கள்ளன், என் கதை, ஆரியராவது திராவிடராவது, சங்கொலி, இசைத்தமிழ், கவிஞர் களஞ்சியம்; கல்கி - சங்கீத யோகம், வீணை பவானி, பார்த்திபன் கனவு, ஏட்டிக்குப் போட்டி, ராஜாஜி - திண்ணை ரசாயனம், போட்டி, வியாசர் விருந்து, சிறையில் தவம், அச்சமில்லை; வ.ரா. - தமிழ்ப் பெரியார்கள், ஜப்பான் வருவானா?; தீரர் எஸ்.சத்தியமூர்த்தி - அருமைப் புதல்விக்கு, சத்தியமூர்த்தி பேசுகிறார்; கிருபானந்த வாரியார் - அமுதவாக்கு, அருள்வாக்கு; குன்றக்குடி அடிகளார் : சொல்லமுதம், அப்பர் விருந்து, அமுத மொழிகள்; துமிலன் - சம்ஸார சாகரம், எல்லைப்புறச் சண்டை; கண்ணதாசன் - ஐங்குறுங் காப்பியங்கள், மலர்க் குவியல்; பொ. திருகூட சுந்தரம் பிள்ளை - அவன் வருவானா, கேள்வியும் பதிலும்; டி.கே. சிதம்பர முதலியார் - இதய ஒலி; ஏ.கே.செட்டியார் - திரையும் வாழ்வும்; ஆர்.கே. சண்முகம் செட்டியார் - வாழ்க்கைத் துணை நூல்; தி.சு. அவினாசிலிங்கம் - நான் கண்ட மகாத்மா; வெ. சாமிநாத சர்மா - சுதந்திர முழக்கம்; ம.பொ. சிவஞானம் - கப்பலோட்டிய தமிழன் வ.உ. சிதம்பரம் பிள்ளை வாழ்க்கை வரலாறு; சாவி - வங்காளப் பஞ்சம்; டி.எஸ். சொக்கலிங்கம் - அன்ன விசாரம்; லெ. ராமநாதன் - கர்னல் பாஸ்கர்; ந. ராமரத்னம் - பூட்டை உடையுங்கள்; ராமு (ராஜாஜியின் புதல்வர்) - துன்பத்தில் இன்பம்; கு.சா. கிருஷ்ணமூர்த்தி - கலைவாணன்; பெரியாமி தூரன் - இளந்தமிழா; நாச்சியப்பன் - அழைக்கிறது அன்னை பூமி; ராஜாஜி முத்துக் குவியல், ராஜாஜி உவமைகள், சுவை நானூறு, தலையெழுத்து மற்றும் பல நூல்கள்.


நாமக்கல் கவிஞர் மீது அண்ணாமலைக்கு அன்பு அதிகம். தேசியக் கவிஞரான அவருக்கு ஒரு பாராட்டு விழாவை ஏற்பாடு செய்து அதனை மிகச்சிறப்புற நடத்தினார். விழாவில் கலந்துகொண்ட ராஜாஜி, அண்ணாமலையின் சேவைகளைப் பாராட்டிப் பேசும்போது அண்ணாமலையை 'சின்ன அண்ணாமலை' என்று குறிப்பிட்டார். காரணம், அவ்விழாவுக்கு ராஜா சர். அண்ணாமலை செட்டியாரும் வந்திருந்தார். ஆகவே, இந்த அண்ணாமலையைத் தனித்துக் குறிப்பிட வேண்டி அவ்வாறு சொன்னார் ராஜாஜி. நாளடைவில் அந்தப் பெயரே நிலைத்தது.

பதிப்பாளராக மட்டுமல்லாமல் எழுத்தாளராகவும் முத்திரை பதித்தார் சின்ன அண்ணாமலை. கல்கியில் சில கட்டுரைகளையும் கதைகளையும் எழுதினார். 'சீனத்துச் சிங்காரி' சின்ன அண்ணாமலை எழுதிய முதல் சிறுகதை. அவரது சிறுகதைகள் பின்னர் தொகுக்கப்பட்டு அதே தலைப்பில் நூலாகவும் வெளிவந்தது. 1946ல் வெள்ளிமணி வார இதழைத் தொடங்கினார் சின்ன அண்ணாமலை. சாவி அதன் ஆசிரியராக இருந்தார். அதில் 'சங்கரபதிக் கோட்டை' என்ற தொடரை எழுதினார் அண்ணாமலை. கல்கியுடன் இணைந்து இந்தியா முழுக்கப் பயணம் செய்து அந்த அனுபவங்களை 'காணக் கண்கோடி வேண்டும்' என்ற தலைப்பில் எழுதினார். சின்ன அண்ணாமலை பற்றி கல்கி, "ஸ்ரீ சின்ன அண்ணாமலை அபூர்வமான பல ஆற்றல்கள் படைத்தவர். பதினாயிரம் இருபதினாயிரம் ஜனங்கள் அடங்கிய சபையில் மணிக்கணக்கில் பிரசங்க மாரி பொழியக் கூடியவர். ஆவேசமாகப் பேசுவார்; அழ வைக்கும்படிப் பேசுவார்; சிரித்து வயிறு புண்ணாகும்படியும் பேசுவார். பேசும் ஆற்றலைப்போல் எழுதும் ஆற்றல் படைத்தவர் ஸ்ரீ சின்ன அண்ணாமலை. அழகிய சிறுகதைகள் எழுதியிருக்கிறார். சிறந்த நாவல்கள் எழுதியிருக்கிறார். ரஸமான பிரயாணக் கட்டுரைகள் எழுதியிருக்கிறார். அவருடைய நண்பர் என்று சொல்லிக் கொள்வதில் நான் பெருமை அடைகிறேன்" என்று பாராட்டியிருக்கிறார்.



மகாத்மா காந்தி 'ஹரிஜன்' என்ற ஆங்கில இதழை நிறுவி நடத்தி வந்தார். அதில் காந்தியின் கட்டுரைகள் தொடர்ந்து வெளியாகின. அதை அறிந்த சின்ன அண்ணாமலை, காந்தியை நேரடியாகச் சந்தித்து அந்த இதழைத் தமிழில் நடத்த அனுமதி பெற்றார். அதுகுறித்து காந்தி, "ஹரிஜன் பத்திரிகையைத் தமிழில் நடத்துவதற்கு ஒரு இளைஞரை ராஜாஜி அவர்கள் சென்னை இந்தி பிரசார சபையில் எனக்கு அறிமுகப்படுத்தி வைத்தார். அந்த இளைஞர் பெயர் ஸ்ரீ அண்ணாமலை என்று ராஜாஜி சொன்னார். அதன்பின் சின்ன அண்ணாமலையைப் பற்றிப் பல விஷயங்களைத் தெரிந்துகொண்டேன். சுதந்திரப் போராட்டத்தில் பலமுறை சிறை சென்றவரென்றும், குறிப்பாக 1942 ஆகஸ்ட் போராட்டத்தில் இவர் இருந்த திருவாடானை சிறையை உடைத்து மக்கள் இவரை விடுதலை செய்தனர் என்றும் அறிந்து ஆச்சரியமடைந்தேன். அந்தப் போராட்டத்தில் பலபேர் உயிர் இழந்தனரென்றும் ஸ்ரீ சின்ன அண்ணாமலை கையில் குண்டு பாய்ந்து உயிர் தப்பியவர் என்றும் கேள்விப்பட்டேன். இப்படிப்பட்ட இளைஞர்களை நினைத்துப் பெருமை அடைகிறேன்" என்று குறிப்பிட்டிருக்கிறார். ஆங்கிலத்தில் வெளியான 'ஹரிஜன்', தமிழில் 'தமிழ் ஹரிஜன்' என்ற பெயரில் வெளியானது. நாமக்கல் கவிஞர் மற்றும் பொ. திருகூட சுந்தரம்பிள்ளை இருவரும் அதன் ஆசிரியராக இருந்தனர். 'சங்கப்பலகை' என்ற இதழையும் நடத்தி வந்தார் அண்ணாமலை.

சின்ன அண்ணாமலை பாரதி பக்தரும்கூட. கல்கியுடன் இணைந்து பாரதியாருக்கு எட்டயபுரத்தில் மணிமண்டபம் கட்டுவதற்கான பணிகளில் ஈடுபட்டார். நிதி திரட்டினார். ஒவ்வொரு வருடமும் பாரதி விழாவை எட்டயபுரத்தில் சிறப்பாக நடத்தினார். தனது தேசிய மற்றும் இலக்கியப் பணிகளுக்காக 'தேசியச் செல்வர்', 'தியாகச் செம்மல்', 'தமிழ்த் தொண்டர்', 'தமிழ்ப் பதிப்பியக்கப் பிதாமகர்' எனப் பல பட்டங்கள் பெற்றிருக்கிறார். திரைப்படங்களிலும் இவரது கவனம் சென்றது. 'தங்கமலை ரகசியம்', 'நான் யார் தெரியுமா?' போன்ற படங்களின் கதை சின்ன அண்ணாமலையினுடயது தான். 'பிரசிடெண்ட் பஞ்சாட்சரம்', 'ஆயிரம் ரூபாய்', 'கடவுளின் குழந்தை' போன்ற படங்களைத் தயாரித்தார். வரலாற்றுத் திரைப்படங்களில் நடித்து வந்த புரட்சி நடிகர் எம்.ஜி. ராமச்சந்திரன், சமூகப் படங்களில் நடிக்க உந்துசக்தியாக விளங்கியவர் சின்ன அண்ணாமலை. நடிகர் சிவாஜி கணேசன் இவருக்கு மிக நெருங்கிய நண்பர். 'வீரபாண்டிய கட்டபொம்மன்', 'கப்பலோட்டிய தமிழன்' போன்ற படங்களில் சிவாஜி நடிக்க உந்துசக்தியாக இருந்து ஊக்கமளித்தவர் சின்ன அண்ணாமலை. அகில இந்திய சிவாஜி ரசிகர் மன்றத்தை உருவாக்கி ஒருங்கிணைத்தவரும் இவரே! சிவாஜியின் ரசிகர்களுக்காக 'சிவாஜி ரசிகன்' என்ற இதழை ஆரம்பித்து நடத்தினார். சின்ன அண்ணாமலையின் நோக்கம், சிவாஜி ரசிகர்களை, சிவாஜி உறுப்பினராக இருந்த காங்கிரஸ் இயக்கத்தோடு ஒருங்கிணைப்பதே! அதற்காகவே அந்த இதழை ஆரம்பித்து நடத்தினார்.

1980ம் ஆண்டு ஜூன் 18ம் தேதி சின்ன அண்ணாமலையின் பிறந்தநாள். அது அவரது மணிவிழா நாளும் கூட. விழாவில் புனிதகலச நீர் அவருக்கு அபிஷேகம் செய்யப்பட்டுக் கொண்டிருக்கும் போது, அதீதக் குருதிக் கொதிப்பினால் மாரடைப்பு ஏற்பட்டுக் காலமானார். அவரது மறைவிற்குப் பின் தமிழக அரசு அவரது நூல்களை நாட்டுடைமை ஆக்கியது. சின்ன அண்ணாமலை எழுதிய மிகச் சுவையான 'சொன்னால் நம்ப மாட்டீர்கள்' நூலை தமிழ் இணையப் பல்கலையின் மின் நூலகத்தில் வாசிக்கலாம்.

சின்ன அண்ணாமலைமீது மிகுந்த மதிப்பும் அன்பும் கொண்டவர் நல்லி குப்புசாமி செட்டியார். இவர், சின்ன அண்ணாமலையின் மகன் கருணாநிதியுடன் ஒன்றாகப் படித்தவர். சின்ன அண்ணாமலையின் ஒரே பேரன் திலக் என்கிற மீனாட்சி சுந்தரத்துடன் இணைந்து சின்ன அண்ணாமலை குறித்த நூற்றாண்டுத் தகவல் களஞ்சியம் ஒன்றை உருவாக்கி வருகிறார். இது சின்ன அண்ணாமலையின் 101ம் ஆண்டு.
அரவிந்த்
Share: 




© Copyright 2020 Tamilonline