Thendral Audio Advertise About us
New User? | Forgot Password? | Email: Password: Login
Current Issue | Previous Issues | Author Index | Category Index | Organization Index | E-Magazine | Classifieds | Digital Downloads
By Category:
சின்னக்கதை | சமயம் | சினிமா சினிமா | இளந்தென்றல் | கதிரவனை கேளுங்கள் | ஹரிமொழி | நிகழ்வுகள் | மேலோர் வாழ்வில் | மேலும்
June 2021 Issue
தென்றல் பேசுகிறது | நேர்காணல் | மாயாபஜார் | சினிமா சினிமா | சின்னக்கதை | சமயம் | மேலோர் வாழ்வில் | ஹரிமொழி | முன்னோடி | சிறுகதை
எழுத்தாளர் | இளந்தென்றல் | நிகழ்வுகள் | கதிரவனை கேளுங்கள் | கவிதைப்பந்தல் | வாசகர் கடிதம் | அஞ்சலி
Tamil Unicode / English Search
சிறுகதை
பெருந்தன்மை
மனிதம் என்பது!
- அம்புஜவல்லி தேசிகாச்சாரி|ஜூன் 2021|
Share:
பொழுது விடிய இன்னும் இரண்டு மணிக்கூறு இருக்கலாம். எப்படியும் ஆறு மணிக்குள் சென்னை சேர்ந்துவிடுவோம். அங்கே பேருந்து பிடித்தால் இரண்டுமணி நேரத்தில் விக்கிரவாண்டி வந்துவிடும். வானில் எல்லா விண்மீன்களும் விடைபெற்றுக் கொண்டபின், 'நான்தான் நிலைத்திருக்கும் நட்சத்திர ராஜாவாக்கும்' என்று பெருமையுடன் மினுக்கிக் கொண்டிருந்தது துருவ நட்சத்திரம்.

விடிகாலைக் காற்று கண்ணைச் சொக்க, ஒருவர்மேல் ஒருவர் ஆடி விழுந்து கொண்டிருந்தனர். தூக்கத்தைவிடக் குடலையே சுருட்டித் தின்றுவிடும் பசியைச் சற்றாவது மறக்க மயங்கி விழுந்து கொண்டிருந்தனர் என்பதுதான் நிஜம். முந்தாநாள் விஜயவாடாவில் ஏதோ சில நல்ல மனசுகள் கொடுத்த நாலு சுக்கா ரொட்டியும், பழச்சாறும் போன இடமே தெரியவில்லை.

ஒரு மாதம் முன்பு இவர்களில் யாராவது இப்படி பஞ்சப் பராரியாக அறுபது பேராக ஒரு போக்கு லாரியில் அடைந்துகொண்டு ஊரைப் பார்க்கப் பயணம் செய்வோம் என்று நினைத்தாவது பார்த்திருப்பார்களா?

காண்ட்ராக்டர் கன்னையாவின் பேச்சில் தேனும், பாகும் கலந்தோட "வடக்கே இந்த பெரிய கட்டுமானத்தில் நல்ல காசு பார்க்கலாம், குறைந்தது ஏழெட்டு மாசம் வேலை நிச்சயம். நல்ல காசுக்காரவங்க, கூலிக்கு பிசுக மாட்டாங்க" என்றதில் எந்தத் தவறுமில்லை. இரண்டு மாதம் நன்றாகத்தான் போயிற்று. சோதனை நோய்த்தொற்று உருவில் வந்தது. வேலை நின்றது. அந்த முதலாளி ஆறு மாதமாவது கழித்துதான் வேலை ஆரம்பிக்கலாம், அதுவும் நிச்சயமில்லை என்றதுடன் கொஞ்சம் காசைக் கொடுத்து விலகிக்கொண்டு விட்டார். தங்கியிருந்த குச்சுக்குக்கூட வாடகை கொடுக்க முடியாமல், விட்டால் போதும் என்று கிளம்பி ஆயிற்று.

இந்த நாலைந்து மாதங்களில் நல்ல கூலி, அவனுடன் வேலைக்கு வந்த சிலருடன் கூட்டுக் குடியிருப்பில் இருநூறு ரூபாய் வாடகை, ஒருவேளை மட்டும் வண்டிக்காரரிடம் பழக்கமில்லாத சோள ரொட்டி, துருவிய வெங்காயம், பச்சை மிளகாய் என ஒரு சாப்பாடு, இன்னும் எப்படி எப்படியோ கட்டும் செட்டுமாக இருந்து சேமித்து வைத்தது. இரண்டு மூன்று மாதங்களில் வேலை முடிந்து ஊர் திரும்பி, குட்டிப்பொண்ணு பிச்சைக்கு ஊர் கூட்டிக் காதுகுத்து கொண்டாட வேண்டுமென்று சேர்த்ததை அப்படியே இந்த லாரிக்காரனிடம் கொடுத்து, இதோ, இரண்டு நாளாக லாரிப் பயணம், சாப்பாட்டுக்கும் குடிநீருக்கும் கூட யார் தருவார்களோ என்று தவிப்பு, என்ன விதியோ இது? சிவகலை தன் வாழ்வையே புரட்டிப் போட்டுவிட்ட இந்த மூன்று மாதங்களை நினைத்தபடியே, பசியில் சுருண்டு கிடந்தான்.

★★★★★


ஒரு பெரிய குலுக்கலுடன் லாரி நின்றதும் எல்லோரும் திடுக்கிட்டுக் கண் விழித்தனர். அப்பொழுதான் ஒரு மூலையில் முடங்கிக் கிடந்த அங்குசாமி ஒரே அலட்டலும், முனகலுமாக நிலை கொள்ளாமல் தவிப்பதையும், உடலெல்லாம் நடுங்குவதையும் கண்டார்கள். அடடா, அவருக்குக் கடும் காய்ச்சல்! அதற்குள் உடன் வந்தவர்களில் ஒருவன் தனக்குத் தெரிந்த ஓட்டை ஹிந்தியில், "இங்கே ஒருத்தருக்கு நல்ல காய்ச்சல் அடிக்குது; ஊரெல்லாம் தொற்றுன்னு கலவரமாயிருக்கு., அவரைக் கூட வெச்சிருந்தா எல்லாருக்கும் ஒட்டிக்கும். உடனே அவரை இறக்கிவிட்டு வண்டியை எடுங்க" என்று கத்தவே, மற்றவர்களும் அவனுக்கு ஒத்து ஊதினார்கள். அவ்வளவுதான், வண்டியை நிறுத்தி, சிறு மூட்டையுடன் நிற்கக்கூட முடியாமல் தடுமாறிய அவரைப் பிடித்துத் தள்ளாத குறையாக இறக்க முயன்றனர். பரிதாபமாக விழித்துக்கொண்டு நின்றிருந்தார் அங்குசாமி.

‘என்னைக் காப்பாற்ற யாருமே இல்லையா?' என்று கெஞ்சின அவரது விழிகள். அங்குசாமியும் சிவகலையின் ஊர்க்காரர்தான். வயதாகிவிட்டாலும், தன்னையே நம்பியிருக்கும் பேத்தியை நல்லபடி ஒருவன் கையில் பிடித்துக் கொடுக்க நாலுகாசு வேண்டியிருக்கிறதே என்று காண்ட்ராக்டரிடம் கெஞ்சிக் கேட்டுத்தான் இவர்களுடன் வந்திருந்தார். பாவம், இப்படி நட்டநடு வழியில் இறக்கி விட்டால், திக்குத்திசை தெரியாமல், அவர் என்ன செய்வாரோ என்று சிவகலைக்கு மனம் பதறியது. "டிரைவரண்ணே, இன்னும் அரை மணியில் பெரம்பூர் வந்திடும். அங்கேயாவது இறக்கி விடுங்கண்ணே. நானும் கூட இறங்கிக்கிறேன். வயசாளி, கொஞ்சம் மனசு வையுங்கண்ணே" என்று டிரைவரிடமும், மற்றப் பயணிகளிடமும் கெஞ்சினான். மஹாப்பெரிய கருணையுடன் அதற்கு சம்மதித்தார் அந்த ஓட்டுநர்; ஆனாலும் மற்றவர்கள் ஏதோ நெருப்பை மடியில் கட்டிக் கொண்டவர்கள் போல் பொறுமையின்றி, அவரை விலக்கி ஒரு ஓரமாக அமர வைத்துவிட்டு, பயமும், வெறுப்புமாகவே இருந்தனர். ஒரு வழியாகப் பெரம்பூர் அருகே அவரும், சிவகலையும் இறங்கிக்கொண்டனர்.

பாவம், காய்ச்சலில் நடுங்கிக்கொண்டிருந்த அங்குசாமிக்கு, ஒரு தேநீர், பிஸ்கெட் வாங்கிக்கொடுக்கலாமென்றால், சுத்துப்பட்டில் ஒரு பெட்டிக்கடைகூடக் காணவில்லை. நடுங்கும் பெரியவருடன், தானும் ஒடுங்கிப்போய் நின்றிருந்தான் சிவகலை.

★★★★★


"தாத்தாவுக்கு சதாபிஷேகம், போய்த்தான் ஆகணும்னு பிடிவாதம் பிடித்து, ஒருமாதிரி கிளம்பியாச்சு. எனக்கு நாளையே திரும்பியாகணும்; லீவும் இரண்டு நாளுக்குத்தான் எடுத்திருக்கேன். அங்கு போய் 'அம்மா சொன்னாங்க, தாத்தா ஆசைப்படுறார்' னு சீராட உட்கார்ந்துட வேண்டாம். குழந்தை ஷாலுவை அம்மாவிடம் விட்டு வரலாமென்றால் அதுக்கும் ஒத்துக்கலை. ஊர் இருக்கும் நிலையில் அவளை தொற்றிலிருந்து காப்பாற்றி நல்லபடியா ஊர் திரும்பணும். மனசிலே வெச்சிக்கோ" என்று நீண்ட உபதேசத்துடன் காரைச் செலுத்திக் கொண்டிருந்தார் கிரிதர்.

சாதாரணமாக இந்நேரத்துக்கு நெரிசலாக இருக்கும் பகுதிதான். ஆனால், ஊரடங்கு என்று தொழிற்சாலைகள், அலுவலகங்கள் மூடிக்கிடக்கின்றன. மிகத் தேவையானாலன்றி வெளியே மக்கள் நடமாட்டமில்லை. இந்தப்பகுதியில் பத்து கிலோமீட்டர் வேகத்தில்கூட வண்டி போகமுடியாது. ஆனால், காலை நேரம், சந்தடியே இல்லாததால், ஐம்பது, அறுபது என்று பறக்கிறது கார். குழந்தை ஷாலு, வெற்றுத் தெருவைக்கூட வேடிக்கை பார்த்துக் கூச்சலிடுவதில் அலாதி மகிழ்ச்சி கண்டாள்.

மூடிக்கிடந்த ஒரு கடை வாசலில் ஒடுங்கி அமர்ந்திருந்த அங்குசாமியைப் பார்த்த ஷாலு, "டாடீ, அங்க பாருங்களேன், தாத்தா ஒருத்தர் பாவம் பஸ் வராதுன்னு தெரியாம காத்திருக்காரு" என்று அவளிடம் அவர்களே கேட்டதைப் போல ஊகித்துக்கொண்டு கூறினாள். கிரிதர் அந்தத் திசையில் பார்வையைச் செலுத்தினார். "பாவம், யாரோ வெளியூர்க்காரர்கள் போலிருக்கு. வண்டி எதுவும் வராதென்று சொல்லுவோம்" என்று காரை நிறுத்த முயன்றார். "நாம் ஒன்பதுக்குள் விழுப்புரம் போயாகணும், இந்தச் சமயம் பார்த்து உங்க சமூக சேவையெல்லாம் இழுத்துப் போட்டுக்காதீங்க" என்று கண்டிப்புடன் கூறினாள் மனைவி வர்ஷினி.

"இதே வேகத்தில் போனால், எட்டரைக்குள்ளே போயிடலாம். ஒரு நிமிஷம் நிறுத்தினால் ஒன்றும் கெட்டுவிடாது" என்றபடி பதிலுக்குக் காத்திராமல் வண்டியைப் பின்னோக்கிச் செலுத்தி அவர்கள் இருக்குமிடம் வந்தார். அதற்காகவே காத்திருந்தது போல் சிவகலை, "ஐயா, நாங்க கோயம்பேடு போகணும். கிழவருக்கு ஒரு டீ வாங்கக்கூடக் கடை எதுவும் திறந்திருக்கலை. ஒண்ணுமே புரியாம நிக்குறோமுங்க" என்று தங்கள் நிலையை விவரித்தான்.

"நீங்க கோயம்பேடுக்குப் போக முடியாது; அப்படிப் போனாலும் அங்கே பஸ்ஸெல்லாம் ஓடாது" என்று பதிலிறுத்தவர், அருகில் நடுங்கியவாறு நின்ற அங்குசாமியைப் பார்த்ததுமே, "இவருக்கு உடம்பு சரியில்லை போலிருக்கே, தள்ளாடுறாரே" என்றபடி வண்டியை விட்டு இறங்கி வந்தவர், கிழவரின் நாடியைப் பிடித்துப் பார்த்தார்.

"ஊரெல்லாம் என்னென்னவோ நோவாயிருக்கு, நீங்க வந்து வண்டியிலே ஏறுங்க" என்று கட்டளையிடும் குரலில் கூறினாள் வர்ஷினி. "வர்ஷி, நான் ஒரு டாக்டர் என்பதை நீ அடிக்கடி மறந்துடுறே. இவருக்குத், தொற்று ஒன்றுமில்லை. சாதாரண குளிர் ஜுரம்தான். பின் சீட்டில் என் மருந்துப்பெட்டியிருக்கு; அதை எடுத்து வா. இவருக்கு ரெண்டு மாத்திரை கொடுக்கலாம்" என்றதுடன், "ஏம்பா, நீங்க எங்கே போகணும்? உள்ளூருலே யாராவது உறவு, தெரிஞ்சவங்க இருக்காங்களா?" என அக்கறையுடன் விசாரித்தார்.

"சார், நாங்க ஆந்திரா தாண்டி கூலி வேலை செஞ்சிட்டிருந்தோமுங்க. இந்தத் தொற்று வந்ததும் வேலை போயி, அங்க இருக்க முடியாம ஊர் திரும்புறோம். லாரியில் வந்தோமுங்க. நடுவிலே இறக்கி விட்டுட்டாங்க. விழுப்புரம் பக்கம் விக்கிரவாண்டிங்க எங்க ஊரு" என்று தங்கள் வரலாற்றைச் சுருக்கமாக விளக்கினான் சிவகலை.

இதற்குள் வண்டியிலிருந்த வர்ஷினி "உங்கப்பா இங்கேயே பிராக்டீஸ் ஆரம்பிச்சாச்சு. இனி நாம் ஊர் போனாற் போலத்தான்" என்று அலுப்புடன் சிடுசிடுத்தாள்.

"நாங்களும் விழுப்புரம்தான் போறோம். நானே உங்களை விக்கிரவாண்டியிலே விட்டுடுறேன்." என்றவர், "வர்ஷி, நம்ம சுமோவில் பின்பக்கம் இவங்க உட்காரட்டும். பாவம், உடம்பு முடியாதவர், எங்கே தங்குவாங்க?" என்னும் முன்பே குழந்தை ஷாலு, முந்திக்கொண்டு, "டாடி, பாவம் இந்தத் தாத்தா, உடம்பு முடியாதவர், பசியோட இருப்பார், நம்மகிட்டேதான் பிளாஸ்கில் காப்பி இருக்கே. அதைக் குடுப்போம்ப்பா" என்று தன் பங்குக்கு உதவிக்கரம் நீட்டியது. வர்ஷினியின் முணுமுணுப்பை யாரும் கவனிக்கவில்லை.

"உங்களுக்கு எதுக்கு சார் சிரமம்? மருந்து கொடுத்ததே பெரிய உதவிங்க. நாங்க எப்படியாவது ஊர் போகப் பார்க்கிறோமுங்க" என்று மறுத்த சிவகலையின் சொற்களைக் காதிலேயே வாங்காது வண்டியின் பின்சீட்டில் இருவரையும் அமரச் செய்ததுடன் இருவருக்கும் காப்பியும், பிஸ்கெட்டும் கொடுத்துவிட்டு வண்டியை எடுத்தார்.

இரண்டு மணி நேரத்தில் விக்கிரவாண்டியில் அவர்களை இறக்கி விட்டுவிட்டு வண்டி கிளம்பியது. ஊர் எல்லையில் கையில் பட்டாக்கத்தியுடன், குதிரைகளும், வீரர்களும் சூழ நின்ற எல்லைச்சாமியைப் பார்த்த சிவகலை, அங்கு மருத்துவர் கிரிதரின் முகத்தைக் கண்டு, சிரம் தாழ்த்தி வணங்கி நின்றான்.
அம்புஜவல்லி தேசிகாச்சாரி
More

பெருந்தன்மை
Share: 




© Copyright 2020 Tamilonline