|
விருத்தாசலம் விருத்தகிரீஸ்வரர் ஆலயம் |
|
- சீதா துரைராஜ்|ஏப்ரல் 2021| |
|
|
|
|
தமிழ்நாட்டின் கடலூர் மாவட்டத்தில் விருத்தாசலம் நகரில் அமைந்துள்ளது புகழ்பெற்ற விருத்தகிரீஸ்வரர் ஆலயம். சென்னையிலிருந்து செல்ல ரயில், பேருந்து, கார் வசதிகள் உள்ளன.
தலப்பெருமை இத்தலம் சைவ சமயக் குரவர்களால் பாடல் பெற்ற தலமாகும். 'விருத்தா' என்றால் 'முதிய', 'பழைய' என்று பொருள். 'அசலம்' என்றால் 'குன்று', 'மலை.' சைவ சமயக் குரவர்களான அப்பர், சுந்தரர், சம்பந்தர் மூலம் 'பழமலை', 'திருமுதுகுன்றம்' எனத் தமிழிலும், சம்ஸ்கிருத மொழியில் 'விருத்தாசலம்' என்றும் அறியப்பட்டது.
விபசித்து முனிவர் மணிமுத்தா நதியில் மூழ்கி, கோவிலைப் புனருத்தாரணம் செய்து, வேலையாட்களுக்குச் செய்த வேலைக்கேற்ப வன்னி மரத்தின் இலைகளை ஊதியமாக அளித்ததாகவும், அவை பின்னர் அவரவர் வேலை மதிப்பிற்கேற்பப் பொற்காசுகளாக மாறியதாகவும் கூறப்படுகிறது. குபேரன் மகள் தனது நகைகளை முனிவரிடம் கோவில் கட்டக் கொடுத்ததாகவும், அதை வைத்து முனிவர் கோவில் கட்டியதாகவும் கூறப்படுகிறது.
சைவ சமயக் குரவர்களில் ஒருவரான சுந்தரர், பங்குனி உத்தர விழாவின்போது திருவாரூரில் பக்தர்களுக்கு உணவளிக்கப் பணம் சேகரிக்கக் கோவிலைக் கடந்து செல்லும்போது இறைவனைப் பாடாமல் சென்றாராம். அவரை இறைவன் பாட வைத்தார். பின்னர் இறைவன் 12000 தங்கக் காசுகளை சுந்தரருக்குத் தந்தார். திருடர் பயத்தால் சுந்தரர் அக்காசுகளை மணிமுத்தா நதியில் இட்டு, திருவாரூர் குளத்தில் எடுத்துக்கொண்டார். நதியில் பணம் வைத்தால் குளத்தில் எடுக்க முடியாது. ஆனால், அது நடந்தது ஓர் அதிசயமே! சுந்தரர் தங்கக் காசுகள் இட்டது, விநாயகப் பெருமானின் சாட்சியுடன் நடந்ததால், விநாயகர், 'மாற்றுரைத்த விநாயகர்' என அழைக்கப்படுகிறார்.
இந்தத் தலத்தில் ஐந்தாம் எண்ணுக்கு ஓர் மகத்துவம் உள்ளது. விநாயகர், முருகன், சிவன், சக்தி, சண்டிகேஸ்வரர் என மூர்த்திகள் ஐந்து. விருத்தகிரீஸ்வரர், பழமலை நாதர், விருத்தாசலேஸ்வரர், முதுகுன்றீஸ்வரர், விருத்தகிரி என ஐந்து பெயர்கள் இத்தல இறைவனுக்கு உண்டு. விபசித்து, சோமேசர், குமரதேவர், நடசர்மா, அர்தவர்தினி என ஐந்து முனிவர்கள் இங்கு இறைவனைத் தரிசித்து அருள் பெற்றுள்ளனர். கோவில் ஐந்து கோபுரங்களைக் கொண்டிருக்கிறது. ஐந்து பிரகாரங்கள், ஐந்து கொடிமரங்கள், ஐந்து நந்தியுடன் கூடியதாக இவ்வாலயம் அமைந்துள்ளது. திருமுதுகுன்றம், விருத்தகாசி, விருத்தாசலம், நெற்குப்பை, முதுகிரி என இத்தலத்திற்கு ஐந்து பெயர்களுண்டு.
பிரம்மா பூமியைச் சிருஷ்டிக்க நினைத்தபோது தண்ணீரைச் சிருஷ்டித்தார். மகாவிஷ்ணு மது, கைடபர்களை வெட்டி அறுக்கும்போது உடல் துண்டுகளாகத் தண்ணீரில் மிதந்தது. பிரம்மா, சிவனிடம் பிரார்த்திக்க அவர் மலையாகத் தோற்றமளித்தார். பிரம்மா நிறைய மலைகளைத் தோற்றுவிக்க இடமில்லாமல் வருந்தி, சிவனைப் பிரார்த்திக்க அவர் பூமியுடன் உடற்துண்டுகள் கலந்து கடினமான உருவத்தில் மலையாக மாறினார். பிரம்மா அதில் வந்துவிட, மலையில் சிவனுக்கு பழமலை கடினமாக பூமியை அழுத்த மேலே சிவலிங்கம் தோன்றியது.
குரு நமசிவாயர் ஒருநாள் சிதம்பரம் செல்லும் வழியில் பசியினால் வாடி அம்மனைக் கிழவி எனக் கூப்பிட்டாராம். பெரியநாயகி வயதானவளாக வந்து உணவு கொண்டுவர இயலாது என்று கூற, குரு நமசிவாயர் அம்பாளின் இளமையைக் குறித்துப் பாட, அம்பாள் இளமைத் தோற்றத்துடன் உணவளிக்க வந்தாள். அந்த அம்பாள் 'பாலாம்பிகை' என்று போற்றப்பட்டாள்.
மாசிமகம் முக்கியமான திருவிழா. விபசித்து முனிவருக்கு நந்தி மூலம் தரிசனம், மாசிமகம் திருவிழா ஆறாவது திருநாளில் விருத்தகிரீஸ்வரர், அம்பிகையுடன் விபசித்து முனிவருக்கு தரிசனம் தருகிறார். கோவில் ஐந்து கோபுரங்களுடன் மதில் சுவருடன் காட்சி அளிக்கிறது. மண்டபம் தேர் வடிவில் செதுக்கப்பட்டுள்ளது. பழைய சோழர் காலத்தில் செம்பியன் மகாதேவியால் பராமரிக்கப்பட்டது.
உயிர் பிரிந்த ஜீவன்களுக்கு, அம்பாள், தன் மடியிலிட்டு, தன் புடவையால் விசிற, சிவன் 'நமசிவாய' என்னும் ஐந்தெழுத்தை உயிர் அவர்கள் காதில் சொல்வதாக ஐதீகம், எனவே இந்தத் தலம் 'விருத்த காசி' என்றும், 'காசியிலும் வீசம் அதிகம்' என்றும் சொல்லப்படுகிறது.
நெடியான் நான்முகனு மிரவியொடும் இந்திரனும் முடியால் வந்திறைஞ்ச முதுகுன்றம் அமர்ந்தவனே படியா ரும்மியலாள் பரவையிவள் தன்முகப்பே யடிகேள் தந்தருளீர் அடியேன்இட் டளங்கெடவே. - சுந்தரர் தேவாரம் |
|
சீதா துரைராஜ், சான் ஹோஸே, கலிஃபோர்னியா |
|
|
|
|
|
|
|