Thendral Audio Advertise About us
New User? | Forgot Password? | Email: Password: Login
Current Issue | Previous Issues | Author Index | Category Index | Organization Index | E-Magazine | Classifieds | Digital Downloads
By Category:
சின்னக்கதை | சமயம் | சினிமா சினிமா | இளந்தென்றல் | கதிரவனை கேளுங்கள் | ஹரிமொழி | நிகழ்வுகள் | மேலோர் வாழ்வில் | மேலும்
April 2021 Issue
தென்றல் பேசுகிறது | நேர்காணல் | மாயாபஜார் | சினிமா சினிமா | சின்னக்கதை | சமயம் | மேலோர் வாழ்வில் | ஹரிமொழி | பொது | சிறுகதை
எழுத்தாளர் | இளந்தென்றல் | நிகழ்வுகள் | கதிரவனை கேளுங்கள் | அன்புள்ள சிநேகிதியே | வாசகர்கடிதம் | முன்னோடி
Tamil Unicode / English Search
அன்புள்ள சிநேகிதியே
சுதந்திர மனமென்னும் தீப்பொறி
- சித்ரா வைத்தீஸ்வரன்|ஏப்ரல் 2021|
Share:
அன்புள்ள சிநேகிதியே,
நான் ஓர் ஆண். ஆறு வருடங்களுக்கு முன்பு மனைவியை இழந்தேன். வயது 67. ஒரே பெண், திருமணம் ஆகவில்லை. வயது 38. தற்சமயம் என்னுடன் இருக்கிறாள். சொல்லப் போனால் 20 வருடங்களுக்குப் பிறகு இத்தனை மாதம் சேர்ந்து ஒரே வீட்டில் இருக்கிறோம். எங்களுக்குள் கருத்து மோதல்கள் நிறைய ஏற்படுகிறது. நான் வேலையிலிருந்து ரிடையர் ஆகவும், கோவிட் வருவதற்கும் சரியாக இருந்தது. தனிமை கொன்றது. என் மனைவியின் இழப்பை மிகவும் உணர்ந்தேன். போன ஜூனில், என் பெண் வந்து தங்கும்போது ரொம்ப சந்தோஷமாக இருந்தது. ஆனால், அவளுடையது மிகவும் stressful job. என்னுடன் அதிகம் பேச நேரம் இருப்பதில்லை.

சமையல் செய்வதிலும் அவளுக்கு அவ்வளவு ஈடுபாடு இல்லை. இங்கே பிறந்து வளர்ந்தவள். எதை வேண்டுமானாலும் ஆர்டர் செய்து கொள்வாள். திடீரென்று டயட்டில் போவாள். Vegan என்று சொல்வாள். Pantry முழுக்க ஏதேதோ high protein, low carb என்று விதவிதமாக இருக்கிறது. நானோ சாம்பார், ரசம், கறி மனிதன். என் மனைவி இறந்ததிலிருந்து இந்தியாவுக்கு வருடா வருடம் போய்ப் பல மாதங்கள் இருந்துவிட்டு வருவேன். அங்கே என் அண்ணாவின் குடும்பம் இருந்தது. எங்கள் கம்பெனியின் கிளை இந்தியாவிலும் இருந்தது. அதனால் தனிமை தெரியவில்லை. கோவிட் வருவதற்கு முன்பு என் அண்ணா போய்விட்டான். எனக்குப் பெரிய அதிர்ச்சி.

எனக்கு உறவு என்று வேறு யாருமில்லை. என்னுடையது காதல் திருமணம். வேறு ஜாதி. ஆகவே, ஒட்டிக்கொள்ள வேறெந்த உறவும் வைத்துக்கொள்ளவில்லை. ரகசியமாக 40 வருடங்களுக்கு முன்பு இங்கே வந்து திருமணம் செய்துகொண்டோம். சடங்கு, சம்பிரதாயங்கள் பார்க்கும் குடும்பங்களையும் இங்கே தவிர்த்துவிட்டோம். நண்பர்கள் அதிகம் இல்லை.

2020 - என்னுடன் நானே உறவு வைத்துக்கொள்ள வேண்டிய நிலையில், நிறைய வாழ்க்கையைப் பற்றிச் சிந்தித்துக் கொண்டே இருக்கிறேன். குழப்பங்கள் அதிகமாகி விட்டது. எதற்கு இத்தனை மதங்கள், இவ்வளவு கடவுள்கள்? கிருஷ்ணர், ராமர் இவர்கள் எல்லோரும் கடவுள்களா? - என்பதுபோல ஆயிரம், ஆயிரம் பைத்தியக்காரத்தனமான எண்ணங்கள். ராமாயணம் படிக்க ஆரம்பித்தேன். மனம் லயிக்கவில்லை. இதேபோல விஷ்ணு சகஸ்ரநாமம், பகவத் கீதை, சுந்தரகாண்டம் என்பதுபோல எல்லாவற்றையும் பார்த்தேன். வயதானதாலா, இல்லை விட்டுப் போய்விட்டதா என்று புரியவில்லை. திருமணம் ஆகும்போது எனக்கும், என் மனைவிக்கும் ஓர் ஒப்பந்தம்: கடவுள் நிந்தனைக்கும் இல்லை; நிர்ப்பந்தத்துக்கும் இல்லை.

நாங்கள் இருவரும் sports lovers. வாழ்க்கை மிகவும் ரசிக்கும்படியாகத்தான் இருந்தது. அப்போது I did not miss God. இப்போது அந்தக் கடவுளுடன் நெருங்க வேண்டும் என்று ஓர் உணர்வு. ஆனால், ரூபத்திலும், அரூபத்திலும் அவரைக் கொணர முயன்று பார்த்தேன். விவேகானந்தர், ரமணர் என்று பல புத்தகங்கள் படித்தேன். எதுவும் பலனில்லை. சீரடி பாபா, சத்ய சாயிபாபா, ஜக்கி என்றெல்லாம் முனைந்து பார்த்தேன். வாழ்க்கைக்கு என்ன அர்த்தம் என்று புரியவில்லை. எல்லோரும் என்னைப்போல இருக்கிறார்களா? நான் பின்தங்கி விட்டேனா? எல்லோரையும் போலக் கோயில், பஜனை என்று இருந்தால் இந்த இறுக்கம் இருந்திருக்காதா? வயதின் கோளாறா? மரண பயமா? இருக்கும் ஒரே உறவு - என் பெண், அவள் எதிர்காலத்தைப் பற்றிக் கவலையா? எதுவும் தீர்மானிக்க முடியவில்லை. நானே பேசிக் கொண்டிருப்பேன். அதை உங்களிடம் பகிர்ந்து கொள்கிறேன். நன்றி. வணக்கம்.

இப்படிக்கு,
.................
அன்புள்ள சிநேகிதரே,
உங்கள் எண்ணங்களை அப்படியே, அப்பட்டமாக என்னுடன் பகிர்ந்து கொண்டதற்கு நன்றி. இந்தக் குழப்பங்களும், பய உணர்வும் எல்லோருக்குமே வயதான நிலையில் வருவது சகஜம்தான். நீங்கள் மட்டும் இதில் தனித்து நிற்கவில்லை. எண்ணங்களும் விசாரங்களும் வேறுபடும். ஒவ்வொரு தனி மனிதனுக்குள்ளே எப்போதும் ஒரு பாரதப் போர் நிகழ்ந்து கொண்டேதான் இருக்கும். கடல் அலைகளைப் போலத்தான் எண்ண அலைகளும். அந்த அலைகளில் நீந்தத் தெரிந்துவிட்டால் பிரச்சனை இல்லை. அந்த மஹாபாரதப் போரில் குறி வைத்து அம்பு தொடுத்தால், பிரச்சனை இல்லை. எதிர்பாராத சம்பவங்களுக்கும், எதிர்பார்க்கும் முதுமைக்கும் எவ்வளவுதான் நம்மைத் தயார்படுத்திக் கொண்டாலும் பயம், விரக்தி, தனிமை என்று எல்லாமே தாக்கும். அதற்காகத்தான் நான் ஒவ்வொரு முறையும் இந்தப் பகுதியில் சொல்கிறேன். அந்தந்த நாளை உங்கள் விருப்பப்படி அனுபவித்து விடுங்கள். நீங்கள் ரிடையர் ஆகிவிட்டீர்கள். பெண் உங்களை நம்பி இல்லை. மனைவியின் இழப்பு ஈடுசெய்ய முடியாததுதான். But this is reality.

நிறைய ஆன்மீகப் புத்தகங்கள் படிக்கிறீர்கள். இத்தனை வருடம் கோவில், பூஜை என்று போகாததற்கு வருத்தமே வேண்டாம். ஒவ்வொருவருக்குமே ஒரு நிலைப்பாடு. உங்கள் மனைவியுடன் (எத்தனை வருடங்கள் என்று தெரியவில்லை) பல வருடங்கள் அருமையாக, நிம்மதியாக வாழ்க்கை நடத்தி இருக்கிறீர்கள். இந்த ஊரில் பிறந்து வளர்ந்த பெண்ணுடன் கருத்து மோதல்கள் இருக்கத்தான் செய்யும். யார் சுதந்திரத்தில் யார் குறுக்கிடுகிறார்கள் என்று புரியவில்லை.

You are retired. You are free. அதேபோல எல்லா விதங்களிலும் you are free. நம்மில் பலருக்கு நமக்குள் இருக்கும் சுதந்திரத்தை இனம் கண்டுகொள்ளத் தெரியவில்லை. நம் எண்ணங்களால், செயல்களால் நாமே நம்மைக் கட்டிப்போட்டுக் கொள்கிறோம். அந்த அடிமைத் தனத்தை நாமே உண்டாக்கிக்கொண்டு புழங்கிக் கொள்கிறோம். பரமஹம்சரிலிருந்து பாபாவரை படித்திருப்பதாகச் சொல்கிறீர்கள். நிச்சயம் உங்கள் மனது பக்குவத்தையும், விவேகத்தையும் அடைந்துகொண்டே வருகிறது. ஒரு நாள் தீப்பொறி பறக்கும். அந்தத் தீப்பொறி உங்களை நிம்மதிப் பாதைக்கு அழைத்துச் செல்லும். நினைத்ததைச் செய்யுங்கள். உங்கள் எண்ண ஓட்டத்தைக் கட்டுப்படுத்த ஒரு quick tip. எல்லோரும் தியான வகுப்புகளில் சொல்வதுதான். எண்ண ஓட்டத்தைக் கட்டுப்படுத்தாதீர்கள். உங்கள் மனதிற்குச் சொல்லி விடுங்கள். "உனக்கு முழு சுதந்திரம் கொடுக்கிறேன். எதை வேண்டுமானாலும் எண்ணிக்கொள்" என்று. அந்தச் சுதந்திர மனதுதான் உங்களுக்கு விரைவில் கிடைக்க இருக்கும் தீப்பொறி.

வாழ்த்துக்கள்

டாக்டர் சித்ரா வைத்தீஸ்வரன்
Personal Queries: drcv.listens2u@gmail.com
Share: 




© Copyright 2020 Tamilonline