Thendral Audio Advertise About us
New User? | Forgot Password? | Email: Password: Login
Current Issue | Previous Issues | Author Index | Category Index | Organization Index | E-Magazine | Classifieds | Digital Downloads
By Category:
சின்னக்கதை | சமயம் | சினிமா சினிமா | இளந்தென்றல் | கதிரவனை கேளுங்கள் | ஹரிமொழி | நிகழ்வுகள் | மேலோர் வாழ்வில் | மேலும்
March 2021 Issue
தென்றல் பேசுகிறது | நேர்காணல் | மாயாபஜார் | சினிமா சினிமா | சின்னக்கதை | சமயம் | மேலோர் வாழ்வில் | ஹரிமொழி | அஞ்சலி | சிறுகதை
எழுத்தாளர் | இளந்தென்றல் | நிகழ்வுகள் | கதிரவனை கேளுங்கள் | அன்புள்ள சிநேகிதியே | சிறப்புப் பார்வை | முன்னோடி | பொது
Tamil Unicode / English Search
அன்புள்ள சிநேகிதியே
புன்னகை செய்யுங்கள், கவலை மறையட்டும்!
- சித்ரா வைத்தீஸ்வரன்|மார்ச் 2021|
Share:
அன்புள்ள சிநேகிதியே,
இப்போதெல்லாம் தென்றல் வெளியே கிடைப்பதில்லை. ஒவ்வொரு முறையும் என் பையனை வைத்து லாகின் செய்யச்சொல்ல வேண்டியிருக்கிறது. அது பெரிய குறை. புத்தகத்தைக் கையில் வைத்துப் படிப்பதுபோல் உள்ள நிறைவு இதில் கிடைப்பதில்லை. இதை முதலில் சொல்லிக்கொள்கிறேன்.

இந்த கோவிட் சமயத்தில் வாழ்க்கையை எப்படிச் சமாளிக்கலாம் என்றெல்லாம் சில மாதங்களுக்கு முன்பு எழுதியிருந்தீர்கள். ஒத்துக்கொள்கிறேன். ஆனால், எவ்வளவு நாள்தான் கூண்டில் அடைபட்டுக் கிடப்பது? எனக்கு 67 வயது ஆகிறது. ஒரு பையன். இரண்டு பெண்கள். எல்லோருக்கும் கல்யாணம் ஆகி ஒவ்வொரு நாட்டில் செட்டில் ஆகி இருக்கிறார்கள். பையன் இங்கே. ஒரு பெண் ஆஸ்திரேலியா. இன்னொரு பெண் ஜெர்மனி. நான் போன வருடம் மகன் வீட்டுக்கு வந்தேன். பேரக் குழந்தைகளுடன் இருந்துவிட்டு இந்தியா திரும்பிவிடலாம் என்ற எண்ணம் அப்போது. எனக்கென்று ஒரு சின்ன அப்பார்ட்மென்ட் இருக்கிறது. என் கணவர் போய் பத்து வருடங்களுக்குமேல் ஆகிவிட்டது. இந்த கோவிட் காரணத்தால் இங்கேயே இருந்துவிட்டேன். என் பையன் என்னைத் தனியாக அனுப்ப பயப்படுகிறான். எனக்கும் தடுப்பூசி போட்டு, அவனுக்கும் முடிந்து எப்போது திரும்பப் போகிறோம் என்று மன உளைச்சலாக இருக்கிறது.

விருந்தும் மருந்தும் மூன்று நாள் என்பார்கள். மூன்று மாதம் நான்கு மாதம் என்று தங்கியிருந்தபோது ஏதேனும் மருமகளிடம் மனஸ்தாபம் ஏற்பட்டால் அட்ஜஸ்ட் செய்துகொள்ள முடிந்தது. ரிடர்ன் ஜர்னி தேதி முடிவாகி இருந்ததே அப்போ எல்லாம். மருமகள் நல்லவள்தான். அவள் வடநாட்டைச் சேர்ந்தவள். நல்லவேளை வெஜிடேரியன் குடும்பம். அதனால் அட்ஜஸ்ட் செய்துகொள்ள முடிந்தது. முன்பெல்லாம் நான் வந்திருந்தபோது அவர்கள் இருவரும் வேலைக்குப் போய்விடுவார்கள். நான் சமைத்து விடுவேன். பேரன், பேத்திகள்கூட நேரம் செலவு செய்வேன். வார இறுதியில் எங்கேயாவது வெளியில் போவோம். நன்றாகவே இருந்தது. இரண்டு வருடங்களுக்கு முன்னால் என்னுடைய 65வது வயதில், இரண்டு பெண்களும் இங்கே வந்து தங்கி சர்ப்ரைஸ் பார்ட்டி கொடுத்தார்கள். அதெல்லாம் நன்றாகவே இருந்தது.

இப்போது இவர்கள் இருவரும் வீட்டிலேயே இருந்து வேலை செய்ய, குழந்தைகளும் ஆன்லைனில் படிப்பதால் எனக்கு நிறையச் சிரமங்கள். சமைக்கும்போது கிரைண்டர் போட முடிவதில்லை. குக்கர் வைக்க முடிவதில்லை. சரி, வேலை செய்யாமல் டி.வி. பார்க்கலாம் என்றால், அந்த சப்தமும் அவர்களைத் தொந்தரவு செய்கிறது. வேலை அழுத்தமா அல்லது குழந்தைகள் தொந்தரவா என்று தெரியவில்லை, என்னுடைய பிள்ளையும், மருமகளும் அடிக்கடி சண்டை போட்டுக் கொள்கிறார்கள். நான் ஏதாவது சத்தம் போடாமல் சமைத்துக் கொண்டிருந்தால், மருமகள் கிச்சன் பக்கம் வரும்போதெல்லாம் ஏதாவது சஜெஷன் சொல்கிறாள். எனக்கு அது சங்கடமாக இருக்கிறது.

ஒரு காலத்தில் பிள்ளை, மாட்டுப்பெண் என்று ஒன்றாக இருக்க மாட்டோமா என்று ஏங்கி இருந்த நிலை போய், எப்போது இந்தியா திரும்புவோம், எப்போது என்னுடைய நேரம், எனக்கென்று தனிமை கிடைக்கும் என்று ஏங்க ஆரம்பித்துவிட்டேன். என் பெண்களிடம் குறைப்பட்டுக்கொள்ள ஆரம்பித்தேன். அவர்கள் என் நிலையைப் புரிந்துகொண்ட மாதிரி தெரியவில்லை. டிப்ரெஷனில் கொண்டுபோய் விடுமோ என்று பயமாக இருக்கிறது. இன்னும் நான்கைந்து மாதங்கள் எப்படிச் சமாளிப்பது? மனசுக்கு இதமாக ஏதாவது சொல்லுங்கள், ப்ளீஸ்!

Thank you

இப்படிக்கு,
.................
அன்புள்ள சிநேகிதியே,
மனசுக்கு இதமாய்க் கேட்டிருக்கிறீர்கள். இதோ இதன் வழியே உங்களுக்கு அலை அலையாக அன்பை அனுப்புகிறேன். உடல் ஆரோக்கியமும் உணர்வு பூர்வமான உறவுகளுந்தான் நம்முடைய நிம்மதிக்கும், மகிழ்ச்சிக்கும் அளவுகோல் என நான் நினைக்கிறேன் உடம்பு கூண்டில் இருந்தால் என்ன? மனச்சிறகுகளை நாம் விரித்துக்கொள்ள முடியுமே! தொடர்புச் சாதனங்கள் மூலம் நாம் ஒருவரை ஒருவர் தொட முடியாவிட்டாலும் பேசிக்கொள்ள, பார்த்துக்கொள்ள முடிகிறதே! இந்தச் சமயத்தில் உங்கள் மகன், மருமகள் உங்கள் பாதுகாப்பை எண்ணி உங்களைத் தங்கச் செய்தால், அங்கே பாசத்தைத்தான் என்னால் பார்க்க முடிகிறது. நன்றாக உங்களை நடத்திய மருமகள், தன் இயலாமையில் சிறிது வார்த்தைகளை அள்ளி வீசினால், பெரியவராக நீங்கள் அவர்களைப் புரிந்தவராக இருப்பது நல்லது இல்லையா?

இந்தியா திரும்பி விட்டாலும், என்னதான் நண்பர்கள், மற்ற உறவினர்கள் என்று நமது எண்ணங்கள் அசை போட்டாலும், இப்போதிருக்கும் நிலையில் அங்கேயும் ஒரு கூண்டில்தானே மாட்டி இருப்பீர்கள்! ஒரு சில மணி நேரம் நாம் தனித்து இருந்தால், நாமே நம்மிடம் சண்டை போட்டுக் கொண்டிருப்போம் என்பதே நம்மில் பல பேருக்குப் புரியாது. அப்படி இருக்கும்போது கண்டிப்பாகக் கருத்து முரண்பாடுகள், வார்த்தை வெடிப்புகள் இருக்கத்தானே செய்யும். உங்களுடைய படிப்பு, தொழில், நீங்கள் உங்கள் கணவரை இழந்த பிறகு சந்தித்த போராட்டங்கள் என்று எதுவும் எனக்குத் தெரிவிக்கவில்லை. இருந்தாலும், கண்டிப்பாக மன முதிர்ச்சியுடன் இருக்கும் ஒரு தாய் என்று நான் உங்களை அடையாளம் கண்டு கொள்கிறேன்.

இன்னும் நான்கைந்து மாதங்கள் தானே! பாதுகாப்புடன் இருக்கிறீர்கள். பரவசத்துடன் இருங்கள். நிலைக்கண்ணாடியில் உங்களைப் பார்த்து நீங்கள் புன்னகை புரிந்துகொண்டால், முக அழகுடன் மன அழகும் பெருகுகிறது. Just a tip: இதுபோன்ற ஆலோசனையை நான் ஒருவருக்குச் சொல்லி (உங்கள் வயதுதான் அவருக்கும் என்று நினைக்கிறேன்) அதை அவர் பின்பற்றி, சிறிது முன்னேற்றம் ஏற்பட்டதாகச் சொன்னார். புன்னகை செய்யுங்கள். கவலை மறைந்தோடட்டும்.

வாழ்த்துக்கள்!
மீண்டும் சந்திப்போம்.

டாக்டர் சித்ரா வைத்தீஸ்வரன்
Personal Queries: drcv.listens2u@gmail.com
Share: 




© Copyright 2020 Tamilonline