1932ல் தொடங்கப்பட்ட கலைமகள் இதழுக்கு இது 90வது ஆண்டு. பத்திரிகை உலகில் 'கீழாம்பூர்' என்று அழைக்கப்படும் கீழாம்பூர் எஸ். சங்கர சுப்பிரமணியன், இதன் ஆசிரியர். எழுத்தாளர், இதழாளர், ஆய்வாளர், சொற்பொழிவாளர், சமூகசேவகர், ஆலோசகர் எனப் பல திறக்குகளில் இயங்கி வருபவர். மடை திறந்த வெள்ளமாய்ப் பலமணி நேரம் அடர்த்தி குன்றாமல் பேசும் ஆற்றல் மிக்கவர். சிறந்த நூல்கள் பலவற்றின் ஆசிரியர், தொகுப்பாளர். மலேசியப் பல்கலையின் தமிழ்ப் பேராய்வு ஆய்விதழ் ஆசிரியர் குழுவில் ஒருவர். சென்னைத் தொலைக்காட்சிக்காக நேதாஜி பற்றிய ஆவணப்படத் தயாரிப்பில் மும்முரமாக இருந்தவர், நமக்காக நேரம் ஒதுக்கி உரையாடினார். அதிலிருந்து...
கே: வணக்கம். தொடங்குவோமா? ப: வணக்கம். உலகம் முழுவதும் விரும்பிப் படிக்கக்கூடிய தென்றல் மாத இதழுக்குப் பேட்டி தருவதில் நான் மிகுந்த மகிழ்ச்சி அடைகிறேன். காரணம், இவ்வாண்டு கலைமகள் இதழுக்கு 90வது ஆண்டு தொடக்கம். எனக்கும் இது கலைமகளின் ஆசிரியராக வெள்ளிவிழா ஆண்டு. இதன் முதல் ஆசிரியர் 'தமிழ்த் தாத்தா' உ.வே. சாமிநாத ஐயர். அடுத்து 'வாகீச கலாநிதி' கி.வா. ஜகந்நாதன் ஆசிரியராக இருந்தார். அவருக்குப் பின்னர் நான் 25 ஆண்டுகளாக இவ்விதழின் ஆசிரியர் பொறுப்பில் இருக்கிறேன்.
கே: உங்கள் இளமைப் பருவத்தைப்பற்றிச் சொல்லுங்கள்... ப: கீழாம்பூர் திருநெல்வேலி மாவட்டத்தின் ஒரு சின்னஞ்சிறிய கிராமம். அதிலே நான் பாட்டி வளர்த்த பையனாக வளர்ந்தேன். காரணம், எனது தந்தையின் பணி நிமித்தம் என் பெற்றோர் சென்னையில் இருந்தனர். நான் அப்பாவின் அம்மாவான பொன்னம்மாள் பாட்டியிடம் வளர்ந்தேன். பாட்டி நிறையக் கதைகள் சொல்வார் அவற்றைக் கேட்டுக் கேட்டு வளர்ந்தவன் நான். சுமார் 60 ஆண்டுகளுக்கு முன்பு அந்த வீட்டில்தான் ஊரிலுள்ள பாட்டிமார் எல்லாரும் கூடுவார்கள். அகில இந்திய வானொலியில் ஒலிபரப்பாகும் உபன்யாசங்களைக் கேட்டு மகிழ்வார்கள். ரேடியோ ஆபரேட்டர் பெரும்பாலும் நான்தான். அவற்றையெல்லாம் கேட்டு என் மனதில் ஆழப் பதிந்துவிட்டன.
நீடாமங்கலம் கிருஷ்ணமூர்த்தி பாகவதர் அவர்கள் சொன்ன கதை ஒன்றைக் கேட்டு, ஒரு துணுக்காக எழுதி விகடனுக்கு அனுப்பினேன். அது விகடனில் பிரசுரமானது. வெளிவந்த இதழுடன், சன்மானமாக 15 ரூபாயும் அனுப்பி வைத்தார்கள். அந்த ஊரிலேயே முதன்முதலாக அப்படி வந்தது எனக்குத்தான். அது 1973 அல்லது 74 என்று நினைவு. அதுதான் என்னை எழுத்தாளனாகத் தூண்டியது என்றுகூடச் சொல்லலாம்.
குருபீடம் நான் வணிகவியல் பட்டதாரி. யாழ்ப்பாணம் பல்கலையைச் சேர்ந்த பேராசிரியர் லக்ஷ்மண ஐயர் சென்னைக்கு வந்து பெசன்ட் நகரில் தங்கியிருந்தார். அவரிடம் தமிழ் கற்கும் வாய்ப்பு எனக்குக் கிடைத்தது. அதுபோல ஏ.என். சிவராமன் அவர்களோடு கூடவே இருந்ததால் இலக்கண இலக்கியங்களை அறிந்துகொள்ளும் பாக்கியம் கிடைத்தது. அவர் எழுதும் விஷயங்களைப் பிரதி எடுக்கும் வாய்ப்புக் கிடைத்தது. இந்த அடிப்படையில்தான் கலைமகளில் எனது பயணத்தைத் தொடங்கினேன்.
ஆசிரியர் அறையில் கி.வா.ஜ. அவர்கள் அமர்ந்திருந்த நாற்காலியில் நான் அமர்வதில்லை. அதைத் தொட்டு பூஜிக்க முடியுமே தவிர, அவர் அமர்ந்த நாற்காலியில் அமரமுடியாது என்று பணியில் சேர்ந்த அன்றே முடிவு செய்துவிட்டேன். அது ஒரு குருபீடம். தினமும் அதற்குப் பூப்போட்டுத் தொழுதுவிட்டுத்தான், வேறொரு நாற்காலியில் அமர்ந்து நான் என் பணிகளைச் செய்கிறேன். கீழாம்பூர் எஸ். சங்கர சுப்பிரமணியன்
கல்லூரியில் படித்துக் கொண்டிருந்த காலத்தில் நான் ஒரு கையெழுத்துப் பத்திரிகை நடத்தினேன். அக்காலத்தில் வானொலியில் உரைகளைத் தயாரிக்கும் பொறுப்பும் எனக்குக் கிடைத்தது. பல கூட்டங்களில் பேசும் வாய்ப்புகள் வந்தன. நிறைய நாடகங்களை எழுதினேன். கிராமங்த்தில் அவற்றை எனது நண்பர்களுடன் சேர்ந்து அரங்கேற்றினேன்.
நான் பள்ளியில் படிக்கும்போது எனது ஆசிரியர் 'சீனி சார்' எனக்கு நாடக ஆர்வத்தை ஏற்படுத்தினார். என் இளமைக்காலத்தில் நான் மறக்கமுடியாத ஒருவர். அவர் கிராஃப்ட் ஆசிரியர். அவரும் சட்டநாத வாத்தியாரும்தான் ஆண்டுவிழாவின்போது மாணவர்களைத் தயார் செய்வார்கள். எனக்கு அவர்கள்மீது மிகப்பெரிய மரியாதை. சுமார் ஐந்து ஆண்டுகளுக்கு முன்பு ஆழ்வார்குறிச்சி திருவள்ளுவர் கழகத்தினர் என்னைச் சிறப்பு விருந்தினராக அழைத்திருந்தார்கள். என்னுடைய ஆசிரியரை அந்த நிகழ்வில் சந்தித்தபோது ஏற்பட்ட மகிழ்ச்சிக்கு இணையே இல்லை. அவருக்கு வயது 90. அவர் காலில் விழுந்து வணங்கி ஆசிபெற்றேன்.
கலைமகள் 90வது ஆண்டு முதல் இதழ் மற்றும் கலைமகள் தீபாவளி மலர்
கே: கலைமகள் இதழுக்கு முந்தைய உங்கள் இதழியல் பணிகளைப் பற்றிச் சொல்லுங்கள்... ப: நீண்டநாள் ஒரு நாளிதழின் ஆசிரியராக ஒருவர் இருந்திருக்கிறார் என்றால் அது பத்திரிகையுலகப் பிதாமகர் திரு ஏ.என். சிவராமன் அவர்கள்தான். 1932ல் தினமணியில் தொடங்கிய அவரது பயணம் 2001ல் அவரது மரணம்வரை தொடர்ந்தது. கடைசி 20 ஆண்டுகளில் அதன் ஆலோசகராகப் பணிபுரிந்தார். அவர் எனக்குத் தாத்தா உறவுமுறை. அவர் என் பாட்டியின் சகோதரர். அந்த ஈர்ப்பினால் பத்திரிகைத் துறையில் பணிபுரியும் எண்ணத்துடன் நான் சென்னைக்கு வந்தேன்.
சிங்கப்பூரில் இருந்து வெளியாகும் 'இந்தியன் மூவி நியூஸ்' என்ற பத்திரிகைக்கு, தமிழகத்தின் ரெசிடென்ட் எடிட்டராக எஸ்.எஸ். சர்மா என்பவர் என்னை நியமித்தார். அதற்குப் பிறகு ஸ்ரீராம் நிறுவனத்தின் சார்பில் 'சுபமங்களா' இதழை நானும், கொத்தமங்கலம் சுப்புவின் மருமகளான லக்ஷ்மி சீனிவாசனும் இணைந்து ஆரம்பித்தோம். அனுராதா ரமணன் ஆசிரியர், நான் இணை ஆசிரியர், லக்ஷ்மி சீனிவாசன் நிர்வாக ஆசிரியர்.
கலைமகளும் என் படமும் என் படங்கள் பிற இதழ்களில், பத்திரிகைகளில், இணையதளங்களில் நிறையவே இடம் பெற்றிருக்கிறது. புத்தக வெளியீடு, கருத்தரங்கம், விழா, விருது நிகழ்ச்சிகள் என்று. ஆனால், கலைமகள் இதழில், நான் ஆசிரியராகப் பொறுப்பேற்ற இந்த 25 வருடங்களில் ஒருமுறைகூட என் படம் வெளியானதில்லை. இனியும் வெளிவராது. நான் அதை ஒரு கொள்கையாகவே வைத்திருக்கிறேன். காரணம், என்னுடைய எழுத்தைத்தான் முன்னிலைப்படுத்தவேண்டுமே தவிர, என்னுடைய பிம்பத்தை அல்ல. கலைமகளில் என்னுடைய உருவத்தைக் காண்பிக்கக்கூடாது என்பதில் நான் மிகக் கவனமாக இருக்கிறேன். இதற்குக் காரணமும் எனது தாத்தா ஏ.என். சிவராமன்தான். தமிழ்நாட்டில் எஸ்.ஏ.பி.யின் படமும், ஏ.என். சிவராமனின் படமும் அவர்கள் சார்ந்த பத்திரிகைகளில் அவர்கள் காலமாகும்வரை இடம் பெற்றதே இல்லை. அதை அவர்கள் கொள்கையாகவே வைத்திருந்தனர். ஏ.என். சிவராமன் என்னிடம், "எதிர்காலத்தில் நீ பத்திரிகை ஆசிரியர் ஆனால் இப்படித்தான் நடக்கவேண்டும்" என்று உறுதிமொழி வாங்கிக்கொண்டார். அதன்படியே நான் நடந்துவருகிறேன். கீழாம்பூர் எஸ். சங்கர சுப்பிரமணியன்
பிறகு என் குருநாதர் சிருங்கேரி சங்கராச்சாரியார் ஸ்ரீ ஸ்ரீ ஸ்ரீ பாரதி தீர்த்த மகா சுவாமிகள், சிருங்கேரி மடத்தின் சார்பாகத் தமிழில் ஒரு பத்திரிகை கொண்டுவர விரும்பினார். 'அம்மன் தரிசனம்' என்னும் அப்பத்திரிகையின் ஆசிரியர் பொறுப்பை எனக்குக் கொடுத்தார் அதன் முதல் ஆசிரியர் நான்தான். என்ஃபீல்ட் நிறுவனர் விஸ்வநாதன் அவர்கள், அந்த இதழ் சிறப்பாக வெளிவர ஆரம்ப காலத்தில் மிகவும் உதவினார்.
ஒரு சமயம், 'கலைமகளுக்கு முழுநேர ஆசிரியர் தேவை, அதுவும் இளைஞராக இருக்க வேண்டும்' என்கிற தகவல் எனக்குத் தெரிய வந்தது. அதன்படி பாரம்பரியமிக்க கலைமகள் இதழின் ஆசிரியராக 1996ல் பொறுப்பேற்றேன்.
கவர்னர் வெளியிட்ட திருக்குறள் களஞ்சியம் (வலது கோடியில் கலைமகள் பதிப்பாளர்)
கே: கலைமகள் 90 ஆண்டுகள் கடந்து வந்திருப்பதைப் பற்றி... ப: கலைமகள் இதழை அதன் ஆரம்பகாலம் தொடங்கி, உ.வே.சா.வும், பின்னர் கி.வா.ஜ.வும் மிகச்சிறப்பாக நடத்தி வந்தார்கள். அரசியல், சினிமா இரண்டுமே இல்லாமல் கலைமகள் பயணித்தது. இன்றும், அதே பாதையில், இவ்விரண்டும் இல்லாமல்தான் நடத்திக்கொண்டு வருகிறோம். கலைமகளில் விளம்பரங்களில்கூட மது, புகை, ஆபாசம் போன்றவை இருக்காது. பெண்களைக் கிண்டல் செய்யும் விளம்பரங்களுக்கு இடமில்லை. எவ்வளவு பணம் கொடுத்தாலும் சமூக நலனுக்குக் கேடு விளைவிக்கும் எந்த விளம்பரத்தையும் நாங்கள் வெளியிடுவதில்லை.
ஆரம்ப காலத்தில், 'மெட்ராஸ் லா ஜர்னல்' இதழை நடத்தியவர்கள்தாம் கலைமகளை நடத்தினார்கள். நாராயணசாமி ஐயர், அவருடைய மகன் ராமரத்னம், பேரன் நாராயணசாமி ஆகியோர் ஆரம்பகாலப் பதிப்பாளர்கள். கடந்த நான்கு வருடங்களாக 'தேஜஸ்' பி.டி.டி. ராஜன் பதிப்பாளராக இருக்கிறார். தேசிய சிந்தனை உடைய இளைஞர். தரமான இலக்கியத்தை உலகத் தமிழர்களுக்குக் கொடுக்கவேண்டும் என்பது அவரது நோக்கம்.
தமிழ்நாட்டுத் தமிழர்கள் மட்டுமல்லாமல் யாழ்ப்பாணத் தமிழர்கள், இலங்கையில் இருந்து புலம்பெயர்ந்த தமிழர்கள் என்று பலரும் இன்றைக்கு ஆதரவுக்கரம் நீட்டிவருகிறார்கள் என்றால், அதற்குக் காரணம், தரத்தில் நாங்கள் எவ்வித சமரசமும் செய்து கொள்ளாததுதான். கலைமகளில் வரும் கதைகள், கட்டுரைகள் குறித்து அனைவருக்குமே மிக உயர்ந்த அபிப்பிராயம் இருக்கிறது. அது மாறிவிடக் கூடாது என்பதில் நான் கண்ணும் கருத்துமாக இருக்கிறேன்.
முதல்வர் கையால் 'கலைமாமணி' விருது
கே: உங்கள் பத்திரிகையுலக குருநாதர்கள் பற்றிச் சில வார்த்தைகள்... ப: முதல் குரு என் தாத்தா ஏ.என். சிவராமன் அவர்கள். என்னை "டேய் சிஷ்யா" என்றுதான் எப்போதும் கூப்பிடுவார். அதைப் பெரும் பாக்கியமாக நினைக்கிறேன். தினமணியில் அந்தக் காலத்தில் வி. ஸ்ரீநிவாசன் என்றொருவர் பணிபுரிந்தார். அவருக்கு ஏ.என்.எஸ்ஸை குருவாகப் பாவித்ததனால், 'சீடன்' என்ற பெயரில் தலையங்கப் பக்கக் கட்டுரைகள், 'அக்கறைக் கதம்பம்' எனப் பல விஷயங்களை எழுதி வந்தார். ஏ.என்.எஸ்ஸுக்கும் அவர்மீது மிகுந்த அன்புண்டு. என்னையும் சீடனாக அவர் ஏற்றுக் கொண்டதில் எனக்கு மிகுந்த மகிழ்ச்சி. இதழியல் துறையில் நுணுக்கமான பல விஷயங்களை ஏ.என்.எஸ். எனக்குச் சொல்லிக் கொடுத்தார். வாழ்க்கையில் மறக்க முடியாத நபர்களுள் அவர் ஒருவர்.
நான் 'தாய்' இதழில் சுதந்திரப் பத்திரிகையாளனாக நிறைய எழுதியிருக்கிறேன். வார்த்தைச் சித்தர் வலம்புரி ஜானும் நானும் ஒரே மாவட்டத்தைச் சேர்ந்தவர்கள். அவர் ஆங்கிலத்திலும், தமிழிலும் மிகச் சிறப்பாக உரையாடுவார். அவருடன் பல கூட்டங்களுக்குச் சென்றிருக்கிறேன். அவரும் என் பத்திரிகையுலக குருநாதர்களுள் ஒருவர்.
இன்னொருவரை நான் குறிப்பிட்டுச் சொல்ல வேண்டும். அவர் கே.ஆர். வாசுதேவன். தினமணி கதிரில் அவர் ஆசிரியர் பொறுப்பில் இருந்தார். குழந்தைகளுக்கான 'ரத்னபாலா' இதழின் ஆசிரியராக இருந்தவர். பாராளுமன்ற உறுப்பினராக இருந்த டாக்டர் வா. மைத்ரேயன் அவர்களின் தந்தை. வாசுதேவன் அவர்கள் புராணம், இதிகாசம் சார்ந்த பல கட்டுரைகளை எழுதியவர். ராதை, கிருஷ்ணன் பற்றியெல்லாம் மிக நுணுக்கமாக, இலக்கியத் தரத்துடன் எழுதியிருக்கிறார். அவரிடமிருந்து பல புதுமையான விஷயங்களை நான் தெரிந்துகொண்டேன்.
குறிப்பிட்டுச் சொல்லவேண்டிய மற்றொருவர் பி.சி. கணேசன். 'இந்து மதம் அழைக்கிறது' என்று ஒரு பத்திரிகை. அதற்கும், பி.சி. கணேசன் அவர்களுக்கு முழுக்க நான் உதவி செய்தேன். பி.சி. கணேசனிடம் இருந்துதான் எப்படி டிக்டேஷன் கொடுப்பது, எப்படி டிக்டேஷன் எடுப்பது, எப்படி வடிவமைப்பது, பத்திகளை எப்படிச் சின்னச் சின்னதாகப் பிரிப்பது என்றெல்லாம் கற்றுக்கொண்டேன்.
பத்திரிகையுலகப் பிதாமகர் ஏ.என். சிவராமன் ஏ.என். சிவராமன் அவர்களுக்கு 21 மொழிகள் பேச, எழுத, படிக்கத் தெரியும். எந்த நாட்டுக்குப் போவதாக இருந்தாலும் அந்நாட்டின் மொழியை பேச, எழுதப் படிக்கக் கற்றுக்கொண்டுதான் போவார். அப்போதுதான் அந்த நாட்டின் அடித்தள மக்களிடம் பேசி பல விஷயங்களைத் தெரிந்துகொள்ள முடியும் என்பார். 94வது வயதில் அவர் அரபுமொழி கற்றுக்கொண்டார். காரணம், குரானை அதன் மூலமொழியில் படித்துத் தெரிந்துகொள்ள வேண்டும் என்ற அவரது ஆர்வம்தான். ஹீப்ருவும் கற்றுக்கொண்டார்.
ஒரு கட்டுரையை, செய்தியை எழுதுகிறோம் என்றால் அதைப்பற்றி விரிவாகத் தெரிந்து கொண்டுதான் எழுத வேண்டும் என்பார். ஆங்கில வார்த்தைகளைப் பயன்படுத்த வேண்டி வந்தால் அதைத் தமிழில் சொல்லி, அடைப்புக்குறிக்குள் ஆங்கிலச்சொல்லைக் கொடுக்கவேண்டும் என்பார். சிக்கலான விஷயங்களைப் பற்றி எழுதும்போது, முன்பு அதுமாதிரி நிகழ்ந்திருக்கிறதா என்பதை அறிந்துகொண்டு எழுதச் சொல்வார்.
அவர் சில கட்டுரைகளை 'அரைகுறை வேதியன்' என்ற புனைபெயரில் எழுதினார். அவர் சம்ஸ்கிருதம் நன்கு அறிந்தவர்தான். ஆனால், அவருக்குப் பல் விழுந்துவிட்டதால் வேத மந்திரங்களைச் சரியாக உச்சரிக்க முடியாது என்பதால் அந்தப் பெயர். விவசாயம்பற்றி எழுதும்போது 'ஒண்ணேகால் ஏக்கர் பேர்வழி' என்ற பெயரில் எழுதியிருக்கிறார். காரணம், கிராமத்தில் அவருக்கு ஒன்றேகால் ஏக்கர் நிலம் இருந்தது. பொருளாதாரக் கட்டுரைகளை எழுதும்போது 'கணக்கன்'.
அப்போலோ விண்ணில் ஏவப்பட்ட காலத்தில், ஒரு ராக்கெட் எப்படித் தயாரிக்கப்படுகிறது, அதன் பாகங்கள், ராக்கெட் எப்படி மேலே செலுத்தப்படுகிறது, அது என்னவெல்லாம் செய்யும் என்பதைப் பற்றியெல்லாம் 160 பக்கங்களில் ஒரு நூல் எழுதியிருக்கிறார். தினமணி அக்காலத்தில் அதனை வெளியிட்டது. முதல் தலைமுறை கணினியைக் குறித்து இந்தியாவில் எதுவும் தெரியாத காலகட்டத்தில் அதுபற்றி எழுதினார். மேனாள் குடியரசுத் தலைவர் அப்துல் கலாம் அவர்களை நான் சந்திக்கும்போதெல்லாம் அந்தப் புத்தகத்தைப் பாராட்டிப் பேசுவார். "எனக்கு ராக்கெட் விஞ்ஞானத்தில் ஈடுபாடு வருவதற்கு அந்தப் புத்தகமும் ஒரு காரணம்" என்று என்னிடம் சொல்லியிருக்கிறார். ஏ.என். சிவராமன்மீது கலாம் அவர்களுக்கு மிகுந்த மதிப்புண்டு. கீழாம்பூர் எஸ். சங்கர சுப்பிரமணியன்
கே: சென்னைத் தொலைக்காட்சி உள்பட பல்வேறு அமைப்புகளுக்காகக் குறும்படங்களை இயக்கிய அனுபவம் உங்களுக்கு உண்டு. அதைப் பற்றி.. ப: எழுத்தாளர் 'ரகமி' அவர்களும் நானும் மிக நெருங்கிய நண்பர்கள். எனக்குப் பத்திரிகை வேலை குறைவாக இருக்கும் சமயங்களில் 'ரகமி' சார் இல்லத்தில்தான் நான் இருப்பேன். சென்னைத் தொலைக்காட்சிக்காக, நானும் அவரும் சேர்ந்து தயாரித்த முதல் குறும்படம் 'வாஞ்சிநாதன்'. பின்னர் தினமணி கதிரில் அதை ஒரு தொடராக எழுதினார். அந்தத் தொடரைப் படித்தபின்தான் வாஞ்சியின் சகோதரருக்குப் பென்ஷன் அளிக்க அப்போதைய முதல்வர் எம்.ஜி.ஆர். உத்தரவிட்டார்.
காங்கிரஸ் நூற்றாண்டு விழாவின் போது, சென்னைத் தொலைக்காட்சியினர், எங்கள் இருவரிடமும் சுதந்திரப் போராட்டத் தியாகிகள் குறித்து ஆய்வு செய்து அறிக்கை அளிக்கச் சொன்னார்கள். அதன்பின் அந்தத் தியாகிகளில் பலரைப் பேட்டி எடுக்கும் வாய்ப்பும் எனக்கு அளிக்கப்பட்டது. பின்னர், 'பெண் பார்க்கும் படலம் இது' என்ற தலைப்பில், பெண் பார்க்கும் சமயத்தில் நடக்கும் விஷயங்களை மையமாகக் கொண்டு ஒரு தொடரைக் கதை, வசனம், எழுதி இயக்க வாய்ப்புத் தந்தார், அப்போது இயக்குநராக இருந்த திரு நடராஜன். அது நல்ல வரவேற்பைப் பெற்றது. இதுவரை சுமார் 350 பேருக்கும் மேற்பட்டவர்களை நான் சிறப்பு விருந்தினராக அழைத்து தொலைக்காட்சிக்காகப் பேட்டி கண்டிருக்கிறேன். பல டாகுமென்டரிகளைச் செய்திருக்கிறேன்.
சிருங்கேரி ஆச்சாரியார் தரிசனம்
கே: நீங்கள் தொகுத்திருக்கும் 'திருக்குறள் களஞ்சியம்', அதன் ஆங்கில மொழியாக்கம் பற்றி... ப: எனக்குத் திருக்குறள் ஆர்வம் வரவும் திரு சிவராமன்தான் காரணம். அவர் நிறையக் கட்டுரைகளில் குறளை மேற்கோள் காட்டி எழுதுவார். உ.வே.சா. அவர்களும் திருக்குறள் பற்றி 'நினைவு மஞ்சரி'யில் நிறைய எழுதியிருக்கிறார். கி.வா.ஜ. அவர்கள், திருக்குறளுக்கு ஒரு என்சைக்ளோபீடியா என்று கருதுமளவுக்கு 'திருக்குறள் ஆராய்ச்சியுரை' எழுதியிருக்கிறார். அதனை கோவை ராமகிருஷ்ணா மடம் வெளியிட்டிருக்கிறது. அதற்கு முயற்சி எடுத்தவர் அவிநாசிலிங்கம் செட்டியார். அந்த நூல் ஒரு பெரிய பொக்கிஷம். இன்றைய இளைஞர்கள் அவசியம் வாசிக்கவேண்டிய நூல். இன்றும் அது விற்பனைக்குக் கிடைக்கிறது.
அந்த வழியில் எனக்கும் குறள் சார்பாக நல்ல விஷயங்களைச் செய்ய ஆர்வம் ஏற்பட்டது. அதன்படி ஏழுமணி நேரம் திருக்குறள் தொடர் சொற்பொழிவு ஒன்றைச் செய்தேன். சென்னை கோகலே சாஸ்திரி ஹாலில் நீதிமான்கள், பல பிரபல அறிஞர்கள், சான்றோர்கள், பத்திரிகையாளர்கள் முன்னிலையில் அது நடைபெற்றது. குறளுக்கு ஏழு சீர் என்பதால் ஏழு மணி நேரம் சொற்பொழிவு என்று முடிவு செய்தோம். எனது நண்பர்கள் திரு ராஜன், திரு ரமேஷ் போன்றவர்கள் அதற்கு ஒத்துழைத்தனர்.
முப்பால் கொண்டது குறள் என்பதால், இந்த ஏழுமணி நேரச் சொற்பொழிவை மூன்று இடங்களில் நடத்த நினைத்தேன். முதல் நிகழ்ச்சி சென்னையில் நடந்தது. எனது நெருங்கிய நண்பர் பேராசிரியர் கே. ஸ்ரீநிவாசன் திருச்சி தேசியக் கல்லூரியில் ஆங்கிலத்துறை பேராசிரியராக இருந்தார். அங்கு மாணவர்களுக்காக ஏழு வகுப்புகள் தொடர்ந்து குறள்பற்றிப் பேசினேன். அடுத்து, ஆழ்வார்குறிச்சியில் நான் படித்த ஸ்ரீ பரமகல்யாணி உயர்நிலைப் பள்ளியில் ஏழு மணி நேரம் குறள்பற்றித் தொடர்ந்து பேசினேன்.
ஜெர்மானிய ஜோடிக்குப் பால்கோவா ஒரு சமயம் பொதிகை எக்ஸ்பிரஸில் நானும், தாத்தா சிவராமனும் வந்து கொண்டிருந்தோம். முதல் வகுப்புப் பயணம். ஸ்ரீவில்லிபுத்தூர் தாண்டியவுடன், நாங்கள் வாங்கிய பால்கோவா பொட்டலத்தைப் பிரித்தோம். எங்களுக்கு எதிரே இளம் ஜெர்மானிய ஜோடி ஒன்று அமர்ந்திருந்தது. சிவராமனுக்கு நொறுக்குத்தீனி சாப்பிடப் பிடிக்கும். மிக்சர், வெள்ளரிப்பிஞ்சு என்று வாங்கி, உடன் இருப்பவர்களுக்கும் கொடுத்துச் சாப்பிட வேண்டுமென்பதைப் பழக்கமாக வைத்திருந்தார். அதன்படி எனக்கு இரண்டு ஸ்பூன் கொடுத்துவிட்டு எதிரே இருக்கும் ஜெர்மன் ஜோடிகளுக்கும் அவர் கொடுக்கப் போனார். ஆனால், அவர்கள் வாங்கிக்கொள்ளவில்லை. உடல் நலனுக்குத் தீங்கு விளைவிக்கக்கூடும் என்பது அவர்கள் எண்ணம்.
உடனே சிவராமன் அவர்களருகே சென்று அமர்ந்தார். பால்கோவா எப்படிச் செய்யப்படுகிறது, எந்தக் கொதிநிலையில் தயாரிக்கின்றனர், என்னென்ன சத்துக்கள் இருக்கின்றன என்பதை ஜெர்மன் மொழியில் விளக்கிச் சொன்னார். அவ்வளவுதான். அதன் பிறகு எங்கள் டப்பாவில் பால்கோவா மிஞ்சவில்லை.
எதற்குச் சொல்கிறேன் என்றால், அவரவர் தாய்மொழியில் சொன்னால் அது மனதில் பதியும் என்பதற்குத்தான். தாய்மொழியை ஒருவர் மதித்துப் போற்றவேண்டும் என்பதை இதன்மூலம் அவர் எனக்குப் புரிய வைத்தார். கீழாம்பூர் எஸ். சங்கர சுப்பிரமணியன்
இதற்காக நான் குறள்பற்றி சுமார் 600 புத்தகங்களை வாங்கினேன். சில மிகமிகப் பழையவை. பலரும் பார்த்தே இருக்க வாய்ப்பில்லாதவை. பிளாட்ஃபாரக் கடைகளில்கூட வாங்கினேன். நண்பர்கள் பலரும் தங்களது புத்தகங்களைக் கொடுத்தார்கள். அவற்றைப் படித்தபோது, நாம் திருக்குறளுக்கு உரை என்று எழுதாமல் புதுமையாக ஏதாவது செய்யலாமே என்று தோன்றியது. பலரும் என்ன சொல்லியிருக்கிறார்கள் என்பதை அப்புத்தக முன்னுரைகள் மூலம் அறிந்து கொண்டேன். அவற்றைத் தொகுத்து ஒரு நூலாக்கினால் என்ன என்று தோன்றியது. ஆதீனங்கள், சைவர்கள், பகுத்தறிவுவாதிகள், பௌத்தர்கள், சமணர்கள் என்று பலதரப்பட்டவரின் விளக்க நூல்கள் உள்ளன. எனது கருத்தைச் சொல்லாமல், அந்த முன்னுரைகளை மட்டுமே தொகுத்து ஒரு நூலாக்கினேன். அதுதான் 'திருக்குறள் களஞ்சியம்.'
சென்னை ஆளுநர் மாளிகையில் மேதகு தமிழக ஆளுநர் பன்வாரிலால் புரோஹித் அவர்கள் அந்த நூலை வெளியிட்டார்கள். அந்த நூலை வெளியிடும்போது அவர் இதேமாதிரி ஆங்கிலத்திலும் ஒரு தொகுப்பு கொண்டுவந்தால் நன்றாக இருக்கும் என்று சொன்னார். அதன்படி நான் திருக்குறள் குறித்த ஆங்கில நூல்களைத் தேட ஆரம்பித்தேன். 12 கட்டுரைகளைத் தயார்செய்தேன். அதனுடன், எனக்கு மிகவும் பிடித்த அப்துல் கலாம் அவர்களும், மகாத்மா காந்தியும் கூறியவற்றைச் சேர்த்து ஆங்கிலத்தில் ஒரு தொகுப்பு நூலாக்கினேன். அதனை இந்த கோவிட்-19 காலத்தில் கவர்னர் அவர்களிடம் கையளித்தேன். இதனையே வெளியீட்டு விழாவாக வைத்துக் கொள்ளலாம் என்று கவர்னர் சொல்லிவிட்டார். அதன்படி கலைமகள் பதிப்பாளர் திரு. பி.டி.டி. ராஜன் முன்னிலையில் கவர்னர் வெளியிட்டார்.
குறளைப்பற்றிப் பேச ஒருவருக்கு மூன்று தகுதிகள் இருக்க வேண்டும் என்பது எனது கருத்து. அது திருக்குறளிலேயே வரும் கருத்துகள்தாம். முதலாவது பிறன்மனை நோக்காப் பேராண்மை. இரண்டாவது, புலால் மறுத்தல். மூன்றாவது மதுவுண்ணாமை. இவற்றை நான் பின்பற்றுகிறேன். இன்றைக்குப் பலரும் குறள் வகுப்புகள் எடுக்கிறார்கள். அதில் மகிழ்ச்சிதான். முதன்முதலில் குறள் வகுப்பு எடுத்தவர் வள்ளலார். அவரது மாணவர் வடிவேலுச் செட்டியார். அவரது திருக்குறள் உரை அக்காலத்தில் மிகப் பிரசித்தமானது. அந்த நூல் எனக்குக் கிடைத்தது. திருவள்ளுவ நாயனார் என்ற பெயரில் அதில் வள்ளுவரின் படம் இருக்கிறது. இன்றைக்கு நாம் பார்க்கும் வள்ளுவர் அல்ல அவர். நெற்றியில் திருநீறு, கழுத்தில் உருத்திராட்சம், கையில் சுவடி, கமண்டலம் என ஒரு முனிவர் தோற்றத்தில் காட்சி அளிக்கிறார் அதில் வள்ளுவர்.
அப்துல்கலாம் அவர்களுடன் கீழாம்பூர் குடும்பம்
கே: அற்புதமான பல இலக்கியப் பொக்கிஷங்களை அந்தக் காலத்தில் கலைமகள் காரியாலயம் வெளியிட்டிருக்கிறது. அவை இந்தத் தலைமுறை வாசகர்களுக்காக மீள்மதிப்புக் காண வாய்ப்பு உள்ளதா? ப: அவற்றை டிஜிடல் ஆக்கிக் கொண்டுவரும் எண்ணம் உள்ளது. அதுபோல பழைய கலைமகள் இதழ்களையும் டிஜிடலில் கொண்டுவரும் எண்ணம் உள்ளது. பாரதியாரின் படைப்புகளை பெ. தூரன் தொகுத்ததில், கலைமகளுக்குப் பிரத்தியேகமாக வழங்கப்பட்டது என்ற குறிப்போடு பல கவிதைகள் கலைமகளில் வெளியாகியிருக்கின்றன. குமுதினி, அகிலன், ஜெயகாந்தன், கமலா சடகோபன் எனப் பல புகழ்பெற்ற இலக்கியவாதிகளின் படைப்புகள் கலைமகளில் பிரசுரம் ஆகியிருக்கின்றன. உ.வே.சா. தலைமையில் நீலகண்ட சாஸ்திரி, ராகவையங்கார், பெ.நா. அப்புசாமி போன்றோரெல்லாம் கலைமகள் ஆசிரியர் குழுவில் இருந்தனர். பலபேருடைய அரிய கட்டுரைகள் கலைமகளில் வெளியாகியிருக்கின்றன. அவையெல்லாம் பொக்கிஷங்கள். இந்த வருட தீபாவளி மலரில் ஒரு புது முயற்சியாக, கலைமகளின் நாற்பது பழைய படைப்புகளைத் தேர்ந்தெடுத்து வெளியிட்டோம். அதற்கு மிக நல்ல வரவேற்பு. வெளிநாட்டில் இருக்கும் பலருக்கு இதில் பெரிய மோகமே இருப்பது தெரியவந்தது. பிரதிகள் எல்லாம் விற்பனையாகி விட்டன. இன்னமும் வாசகர்கள் கேட்கிறார்கள். அதனால் இது மாதிரியான தொகுப்புகளைக் கொண்டு வரலாம் என்று நினைத்திருக்கிறோம்.
பழைய கலைமகள் இதழ்களிலிருந்து நான் 'கலைமகள் களஞ்சியம்' என்ற தலைப்பில் கலைஞன் பதிப்பகத்தின் மூலமாக இரண்டு தொகுப்புகளைக் கொண்டு வந்திருக்கிறேன். 1967ல் தி.மு.க. ஆட்சி அமைத்த பின்பு அப்போதைய முதல்வர் அண்ணாதுரை தொடங்கி, அமைச்சர்கள் பலரின் பேட்டிகள் கலைமகளில் வெளிவந்துள்ளன. ஈ.வெ.ரா.வின் பேட்டியும் அதில் உண்டு. டில்லியில் இருக்கும் பிரபலமானவர்களின் பேட்டியை கே. ஸ்ரீனிவாசன் என்பவர் செய்திருக்கிறார். அரசியல் சார்பற்ற இதழ் என்றாலும் பொறுப்பில் இருப்பவர்களின் பேட்டிகளை வெளியிட்டதுண்டு.
கமல்ஹாசன் 'ஹே ராம்' படம் எடுத்தபோது, படக்குழுவினர், கலைமகளின் 1940, 50 காலகட்டப் படங்களை பார்க்க விரும்பினர். அந்தக் கால ஆடை அலங்காரங்கள், நகைகள் ஆகியவற்றைப் பார்க்க விரும்பினர். நாங்கள் உதவினோம். கலைமகளில் பூர்ணம் விஸ்வநாதன், உமாசந்திரன் போன்றோரெல்லாம் நாடகங்கள் எழுதியுள்ளனர். மு.வ.வின் பல இலக்கியக் கட்டுரைகளுக்கு அடித்தளம் அமைத்துக் கொடுத்த 'செந்தமிழ்ச் செல்வி' போலவே, கலைமகளும் முக்கிய இடமளித்தது.
பழைய நூலொன்றில் திருவள்ளுவர்
கே: பவித்ரம், தேஜஸ் போன்ற அமைப்புகள் மூலம் சமூகப் பணிகளிலும் தீவிரமாக இயங்கி வருகிறீர்கள். அதுபற்றி… ப: ஒருபோதும் யாரிடமிருந்தும் பரிதாப உணர்ச்சியைப் பெறலாகாது என்பது நான் என் தாத்தாவிடமிருந்து கற்றுக்கொண்ட விஷயம். இருந்தாலும் இந்த விஷயத்தைச் சொல்லத்தான் வேண்டியிருக்கிறது.
எனக்கு ஒரு கண்ணில் பார்வை சுத்தமாகக் கிடையாது. இன்னொரு கண்ணிலும் பார்வை குறைவுதான். நான் பாட்டியிடம் வளர்ந்த காலத்தில் எனக்கு மாறுகண் இருந்தது. ஒரு கண்ணின் பவரை இன்னொரு கண் டாமினேட் செய்துவிட்டது. சிறுவன் என்பதால் எனக்கு அது தெரியவில்லை. பிற்காலத்தில் தெரிய வந்தபோது பலனில்லாமல் போய்விட்டது. ஒரு கண்ணில் பார்வையே இல்லாமல் ஆகிவிட்டது. இன்றளவும் குறைபாடுடைய அந்த ஒற்றைக் கண்ணோடுதான் எழுதி, பேசி, படித்துக்கொண்டு இருக்கிறேன்.
1999ல் தீபாவளி மலர் முடித்த சமயம். மலர் குறித்து மற்ற பத்திரிகைகளில் விமர்சனம் வரும். என்ன சொல்லியிருக்கிறார்கள் என்பதை அறியத் தீபாவளியன்று காலை நாளிதழ்களை வாசிக்க ஆரம்பித்தேன். என் ஒரே கண்ணின் பார்வையும் மங்கி எல்லாம் கறுப்பாகத் தெரிய ஆரம்பித்தது. எனக்குப் பயம் வந்துவிட்டது. சர்க்கரை, ரத்த அழுத்தம் என்று எதுவும் எனக்குக் கிடையாது. மருத்துவர்களைச் சந்தித்தேன். அறுவைசிகிச்சை என்பதில் ஆரம்பித்துப் பல கருத்துக்களைச் சொன்னார்கள்.
டாக்டர் ஜாய்ஸ் திலகம் அவர்களைப் போய்ப் பார்த்தேன். அவர் ஒரு ஹோமியோபதி டாக்டர். அவருடைய தந்தை குடும்ப நண்பர். ஜாய்ஸ் திலகம் என்னிடம், "நீங்கள் ஆறு மாதம் சில மருந்துகளைச் சாப்பிட வேண்டும். பின்பு பார்வை சரியாகிவிடும்" என்று சொன்னார். அவர் சொன்னதை ஏற்று அவரளித்த மருந்துகளைச் சாப்பிட்டேன். அவர் சொன்ன பயிற்சிகளைச் செய்தேன். அவர் அறிவுறுத்திய விஷயங்களைக் கடைப்பிடித்தேன். அதன் விளைவு, பழையபடி எனக்குப் பார்வை திரும்பக் கிடைத்தது.
என் தாயை எப்படி காலைத்தொட்டு வணங்குவேனோ அதுபோல அந்த டாக்டரை அனுதினமும் வணங்கிவிட்டுதான் நான் இன்றைக்கும் என் பணிகளைத் தொடங்குவேன். காரணம், எனக்குக் கண் கொடுத்தவர் அவர்தான்.
அவருக்குச் சமூக சேவையில் ஆர்வம் அதிகம். தாய்ப்பாலின் அவசியத்தைப் பொதுமக்களிடம் கொண்டு சேர்க்கவேண்டும், கிராமப்புற மக்களிடம் மருத்துவ விழிப்புணர்வை ஏற்படுத்த வேண்டும் என்றெல்லாம் அவர் நினைத்தார். அதற்காக ஆரம்பிக்கப்பட்ட அமைப்புதான் 'பவித்ரம்'. நானும் அவரோடு என்னால் முடிந்ததை ஓர் அணில்போலச் செய்துகொண்டிருக்கிறேன். அது 16 வருடங்களாக இயங்கி வருகிறது.
'தேஜஸ் ஃபவுண்டேஷன்', இப்போதைய கலைமகள் பதிப்பாளர் திரு பி.டி.டி. ராஜன் அவர்கள் கொண்டுவந்தது. அமைப்பின் முக்கிய நோக்கம் தமிழின் பக்தி இலக்கியங்களை ஆவணப்படுத்துவதும், தொல்லியல் ஆய்வில் புதிதாகக் கண்டறியப்படுவனவற்றை ஆவணப்படுத்துவதும். அந்த அமைப்பு வெளியிடும் 'ஆவணச் சுவடுகள்' இதழுக்கும் நான் ஆசிரியராக இருக்கிறேன். வருடத்திற்கு இரண்டு இதழ்களை நாங்கள் பதிப்பிக்கிறோம். அதுபோக இந்திய தேசத்தில் இருக்கும் புனித நதிகளைப் பற்றி ஆய்வுசெய்து, இரண்டு மாதத்திற்கு ஒருமுறை சொற்பொழிவாற்றி வருகிறேன். இதுவரை 12 நதிகளைப்பற்றிப் பேசியிருக்கிறேன். பின்னால் இவற்றைத் தொகுத்துப் புத்தகமாகக் கொண்டுவரும் எண்ணம் இருக்கிறது.
ஷண்மத மாநாடு, இராமர் இலக்கிய மகாநாடு (வால்மீகி, துளசிதாசர், கம்பர் கண்ட இராமன் பற்றியது) போன்ற மாநாடுகளையும் 'தேஜஸ் ஃபவுண்டேஷன்' வழியே நடத்தியிருக்கிறோம். பக்தியையும், இலக்கியத்தையும் முன்னிறுத்திய முயற்சிகள் இவை. பக்தி இலக்கியங்கள் மூலம்தான் மனிதர்களின் மனம் பண்படும் என்பது எங்கள் ஆழ்ந்த நம்பிக்கை. இவற்றை மக்களிடம் கொண்டுபோய்ச் சேர்க்கவே இவ்வகை முயற்சிகளைச் செய்து கொண்டிருக்கிறோம். இந்த வருடம் ஆகஸ்ட் மாதத்தில் 'உ.வே.சாமிநாத ஐயருடைய பன்முகப் பார்வை' என்ற தலைப்பில் ஒரு சர்வதேசக் கருத்தரங்கை நிகழ்த்தத் திட்டமிட்டு வருகிறோம்.
கே: சமகால இலக்கிய உலகம் எப்படி இருக்கிறது? ப: இலக்கியத்தை நான் இலக்கியமாகவே பார்க்கிறேன். இலக்கை நோக்கிப் போவது இலக்கியம். சமூகத்திற்குப் பயன்தரும் படைப்புக்கள் எல்லாமே இலக்கியம்தான். என்னைப் பொறுத்தவரை எழுத்து ஒரு சிலருக்காவது பயன் தரக்கூடியதாக இருக்கவேண்டும். அதன்மூலம் ஒரு விழிப்புணர்வு ஏற்பட வேண்டும். அதே சமயம் எதைச் சொன்னாலும், யார் மனதையும் புண்படுத்தாமல், பக்குவமாக, அதே சமயம் எளிமையாக, அனைவருக்கும் புரிகிறமாதிரிச் சொல்லவேண்டும். நான் பசும்பொன் முத்துராமலிங்கத் தேவர் குறித்து ஒரு நூல் எழுதியிருக்கிறேன். அவருடைய எண்ணம்தான் என் எண்ணமும். தேசம், தெய்வீகம் இரண்டுமே ஒருவருக்கு அவசியம். அப்படிச் செயல்பட்டால் அவரும் நன்றாக இருக்க முடியும், நாடும் நன்றாக இருக்கும். சமகால இலக்கிய உலகம் நன்றாகவே இருக்கிறது. இன்றைக்கு நல்ல இலக்கிய கர்த்தாக்கள் உருவாகி இருக்கிறார்கள் என்பதில் சந்தேகமில்லை.
கே: உங்கள் குடும்பம் பற்றி... ப: என்னுடைய மனைவி சரளா சங்கர சுப்பிரமணியன். இந்தியன் ஆயில் கார்ப்பரேஷனில் அதிகாரி. மிகுந்த இலக்கிய ஈடுபாடு உடையவர். திருமணத்திற்குமுன் அகில இந்திய வானொலியில் அறிவிப்பாளராக இருந்தார். அவர் ஏ.என். சிவராமனின் சகோதரர் பேத்தி. எனக்கு ஒரு மகன். பெயர் சாய் சிவசைலம். சிவசைலம் எங்கள் குலதெய்வம். எனது மனைவி பாபாவின் பக்தை என்பதால் 'சாய்' என்பதைச் சேர்த்து வைத்தோம்.
சில சமயம் பெயர்கள் கூட மிகப் பெரிய அற்புதங்களைச் செய்யும். 'சாய்' என்ற பெயரை வைத்ததால் நிகழ்ந்த ஓர் அற்புதமும் இருக்கிறது.
கீழாம்பூர் பெற்ற விருதுகள் தமிழக அரசின் 'கலைமாமணி' சேக்கிழார் ஆய்வு மையத்தின் சேக்கிழார் விருது சென்னை கம்பன் கழகத்தின் கி.வா.ஜ. விருது தென்காசி திருவள்ளுவர் கழகம் வழங்கிய 'திருவள்ளுவர்' விருது காஞ்சி மடத்தின் சார்பான 'சேவா ரத்னா' விருது டி.கே.எஸ். நினைவு விருது திருவாவடுதுறை ஆதினகர்த்தர் வழங்கிய சிறந்த பத்திரிகையாளருக்கான விருது இன்னும் பல....
கே: ம்... என்ன அது? ப: இலங்கை கம்பன் கழகத்தின் தலைவர் ஈஸ்வரன், பிரீஸ் ஹோட்டலில் தங்கியிருந்தார். அவர் அதன் சேர்மன். அவரைச் சந்தித்துப் பேட்டி எடுத்தேன். பேட்டி முடிந்தபின் பேசிக் கொண்டிருக்கும்போது என் குடும்பம்பற்றி விசாரித்தார். என் மகன் பெயர் 'சாய் சிவசைலம்' என்று சொன்னதும் அவருக்கு மிகுந்த மகிழ்ச்சி. காரணம், அவர் பகவான் சத்யசாயி பாபாவின் அத்யந்த பக்தர். உடனே என்னிடம் அவர், "மாலை என்னுடைய ஹோட்டலில் உங்களுக்கு விருந்து. குடும்பத்துடன் வந்துவிடுங்கள்" என்று சொன்னார்.
நான், என்னுடைய மனைவி, மகன் மூவரும் போனோம். அது அவருக்குச் சொந்தமான ஹோட்டல். அவர் இலங்கையில் மிகப்பெரிய தொழிலதிபர். இங்கே டாட்டா, பிர்லா மாதிரி. ஈஸ்வரன் பிரதர்ஸ் என்றால் இலங்கையில் மிகமிகப் பிரபலம். மிகப்பெரிய தேயிலை எஸ்டேட் அவர்களுடையது. அன்றுதான் அவர் எனக்கு அறிமுகமே. 'சாய்' என்ற பெயரால் ஈர்க்கப்பட்டு, அங்கிருந்த பரிமாறுவோர் எல்லாரையும் அனுப்பிவிட்டு, அவரே தன் கையால் அவனுக்கு உணவு பரிமாறினார். காரணம், 'சாய்' என்ற அந்த ஒரு சொல். அதன் மகத்துவம். அதன்மீதுள்ள பக்தி. 'சாய்' என்பது எப்படிப்பட்ட மகாமந்திரம், அது எப்படியெல்லாம் ஒருவரை ஈர்க்கிறது, பிணைக்கிறது என்பதை அன்று நான் நேரடியாக உணர்ந்து கொண்டேன். அன்றுமுதல் அவர் மட்டுமல்லாமல் அவர் மகன்கள் உள்பட அனைவருமே எனது குடும்ப நண்பர்கள் ஆகிவிட்டனர். நான் இலங்கைக்குப் பலமுறை சென்று வந்திருக்கிறேன் என்றால் அதற்கு முக்கியக் காரணம் ஈஸ்வரன் அவர்கள்தான். |