"பாரத தேசமென்று தோள் கொட்டுவோம்"
|
|
|
|
ராஹாப் சணல் தட்டைகளைத் தலையிலும் இடுப்பிலும் சுமந்தபடி வீட்டிற்கு விரைந்து கொண்டிருந்தாள். போகும் வழியில் தன் தம்பி ஒருவன் தெரு முக்கில் சகாவுடன் பேசிக்கொண்டிருந்ததைக் கண்டாள். வந்து உதவும்படிக் குரல் கொடுத்தபடி வீட்டினுள் நுழைந்தாள். தங்கைகள் பாற்கட்டிகளும், காய்கறிகளும் வாங்கிவரப் பக்கத்திலிருந்த உழவர் சந்தைக்குச் சென்றிருந்தார்கள். அம்மா தன் மெலிந்த கரங்களால் விடுதி வாடிக்கையாளர்களுக்காக ரொட்டி செய்ய மாவு பிசைந்து கொண்டிருந்தாள்.
அப்பாவை எங்கே காணவில்லை? சுற்றுமுற்றும் பார்த்தவள். சணல்தட்டைக் கட்டுகளைத் தாழ்வாரத்திலேயே பொத்தெனப் போட்டாள். சத்தம் கேட்டுச் சின்ன தம்பி மேல்மாடியிலிருந்து எட்டிப் பார்த்தான்.
"ஓ! நீ இங்கேதான் இருக்கியா! வா வந்து மேல்தளத்தில் தட்டைகளைப் பரப்பு. இன்னும் 2-3 வாரத்தில் நான் நெசவுக்கு நூல் எடுக்க வேண்டுமானால் இந்த வாரம், ஏன், இன்றைக்கே தட்டைகளைக் காயவைக்க வேண்டும்" என்றாள்.
அவன் சரசரவென இறங்கித் தட்டைகளை ஏற்றினான்.
அம்மா "ராஹாப், கைகாலைக் கழுவிவிட்டு வா. காலையிலிருந்து நீ சாப்பிடவில்லை பெண்ணே. இந்தா இரண்டு துண்டு ரொட்டியாவது சாப்பிடு" என வாஞ்சையோடு மகளை அழைத்தாள்.
அவள் ராஹாபை பெற்றபோது அந்த கிராமத்தில் உள்ளவரெல்லாம் வந்து கைக்குழந்தையை அப்படிக் கொஞ்சி மகிழ்ந்தார்கள். அத்தனை அகண்ட கண்களும் அதில் நீந்திய கரும்பச்சை விழிகளுமாக, பொக்கைவாய்ச் சிரிப்பில் அவளையும், அவள் கணவனையும் ஆனந்தக் கூத்தாட வைத்தாள் ராஹாப். அந்த அகண்ட பெரிய கண்களோடு, அளவில்லாத இன்பத்தைத் தந்ததால்தான் அவளை ராஹாப் (பெரிய) என்ற பெயரிட்டு அன்போடு அழைத்தார்கள்.
என்ன சொல்லி என்ன பிரயோஜனம்! சேராத இடம் சேர்ந்து கணவரும், அவன் சகோதரர்களும் காசையெல்லாம் வீணாக்கி. இந்த மகளின் வாழ்க்கையை வீணடித்தார்கள். ம்ஹ்ம்… அது பெரிய கதை. பெருமூச்செறிந்தாள் அந்த மூதாட்டி. ராஹாபுக்கு அகவை ஐம்பது என்றால் யாரும் நம்பமாட்டார்கள். முப்பது இருக்குமா? எனச் சந்தேகமாய்த்தான் யாரும் கேட்பார்கள்.
அவள் நிறமும், கருத்த புருவமும், வரைந்தாற் போன்ற செப்பு உதடுகளும், நெடுநெடுவென்ற உருவமும், விசுக் விசுக்கென வேலை செய்யும் லாவகமும் யாரையும் இன்னொருமுறை அவளைத் திரும்பிப் பார்க்கத் தூண்டும்.
மூதாட்டி எப்போதும்போல யோசித்தாள் "இன்னும் அவளுக்கு ஒரு நல்ல கணவன் வாய்க்கவில்லை. அவளுக்கென்று ஒரு வாழ்க்கை வேண்டாமா. வாழ்நாள் முழுதும் தாய், தந்தை, தம்பி தங்கைகள் என்று கழித்தால் எப்படி!"
விடுதிக்கு வரும் வாடிக்கையாளர்களின் கண்கள் தன் மகள்மீது அலை பாய்வதை அவள் காணாமல் இல்லை. அதன் காரணம் அவள் அறிவாள். அந்த நினைவுகள் நெஞ்சை யாரோ அம்மிக் கல்லைக் குறடுகொண்டு கொத்துவதுபோல வலிக்கும். என் மகளுக்கு ஒரு விடிவுகாலம் உண்டு என மனதார வேண்டிக் கொள்வாள்.
இப்படிச் சிந்தனையில் ஆழ்ந்திருந்தவளை ராஹாபின் குரல் நினைவுலகுக்கு அழைத்தது.
"அம்மா, இன்னும் கொஞ்சம் சணல் தட்டைக் கட்டுகள் இருக்கின்றன. அந்தத் திருமணத்திற்கான துணி முழுவதும் நெய்ய வேண்டுமே. பெரிய தம்பியுடன் எடுத்து வந்தபின் சாப்பிட்டுக் கொள்கிறேன்" என்றபடி பானையிலிருந்து தண்ணீரைக் குவளையில் முகர்ந்து குடித்தாள்.
அப்பப்பா… இந்த யோர்தான் நதியின் நீர்தான் எத்தனை சுவை! திராட்சை ரசம்தான் தோட்டங்களின் வாய்க்கால் வழியோடி நதியில் கலந்ததோ… இல்லை கரையோர மரங்களின் தேன் கூடுகளிலிருந்து நீரில் வழிந்த தேன்தான் தந்த சுவையோ என அத்தனை ருசி. எரிகோ வளமான நகரம். காடுகளும் கன்றுகளும், புல்வெளிகளும் என அத்தனை செழிப்பு.
ம்ம்ம்… இல்லையெனில் இப்படி இத்தனை பெரிதாக எரிகோ ஊரைச் சுற்றிலும் மதில் எழுப்பி இருப்பார்களா. 17 அடி உயரமும், 7 அடி அகலமும் ஆங்காங்கே 28 அடி உயரத்தில் கண்காணிக் கோபுரங்களும் எனக் கற்களால் ஆன மதில். அந்த மதிலைச் சுற்றிலும் 27 அடி அகலத்தில் அகழியும் அமைத்திருந்தார்கள். அந்தப் பெரிய மதில்களில் வீடுகளும், விடுதிகளும், கடைகளும்கூட உண்டு. இந்த வீடுகூட அவளுக்கு லைலா கொடுத்ததுதான். மூன்று அடுக்காய் அமைந்த இந்த வீட்டில் கீழ் இரண்டு அடுக்குகளை வாடகைக்கு விட்டு வாழ்ந்து வந்தாள்.
இன்றைக்கு அவள் சந்தைக்குச் செல்லும்போது, ஊர் முழுவதும் யோசுவாவின் வீரர்கள் இந்த எரிகோ நகரைக் கைப்பற்றப் போவதாகக் கிலியோடு குசுகுசுத்தார்கள். நிறையப் பயந்துபோய்க் கிடந்தார்கள். எரிகோ நகரத்துப் படைவீரர்கள் பகலில் கூட ரோந்து வந்ததைக் கண்டாள்.
மோசே, யோசுவாவை பற்றியும் அவர்கள் எகிப்திலிருந்து இஸ்ரவேலிய மக்களை அடிமை வாழ்விலிருந்து மீட்டுவந்த கதைகளைப் பற்றியும் லைலாவின் மாடத்தில் இருந்தபோதிலே கேட்டு வியந்திருந்தாள் ராஹாப்.
அவளும் தோழி நூராவும் அந்த வழிப்போக்கன் முற்றத்தில் உட்கார்ந்துகொண்டு சத்தமாக, கைகளை ஆட்டி ஆட்டி செங்கடல் பிளந்ததையும், எகிப்து மன்னனின் படைகள் ஆக்ரோஷத்துடன் விரட்டிவந்து கடலில் மூழ்கிப் போனதையும்,. இறைவன் மோசேயைக் கொண்டு கருணையோடு இஸ்ரவேல் மக்களை வழி நடத்தியதையும் சொல்லச் சொல்ல 'ஆ!' என மெய்மறந்து கேட்டிருக்கிறாள்.
ராஹாப் லைலாவின் மாடத்துக்கு வந்தபோது அவளுக்கு வயது பத்து. ராஹாபின் தந்தையும் அவர் குடும்பமும் பட்ட கடனை அடைக்க அடைமானம் வைக்கப்பட்டிருந்தாள். லைலா அந்த மாடத்தின் கண்காணி. மிக்க தாயன்போடுதான் அவளை நடத்தினாள். எத்தனை ஆண்டுகள்தான் அவளும் ஏதேதோ காரணம் சொல்லி ராஹாபையும், நூராவையும் காக்கமுடியும்?
ராஹாபிற்கு 15 வயதிருக்கும். கண்களெல்லாம் மை பூசிய கடன்காரன் ஒருவன் அங்கே வந்தான். மாடத்தில் உள்ள வேலையாட்களும் மற்றோரும் பயந்து நடுங்கி அவன்முன் வணங்கி. முற்றத்தில் பாய் விரித்து அவனுக்கு நல்ல நுரையில்லாத புளித்த திராட்சை ரசத்தைப் பெரிய ஜாடியில் ஊற்றி, வெண்ணெயும், இடித்த பூண்டும் கொண்டு சமைத்த கொழுத்த கறிகளைப் படைத்து, பேரீச்சை ரொட்டிகளைக் கொடுத்து உபசரித்தார்கள்.
அவன் எதற்கும் மசிந்தவனாய், யாரையும் மதித்தவனாய் தெரியவில்லை. அவனைச் சுற்றிலும் இரண்டு தடிதடியான அடியாட்கள் வேறு!
நேரடியாக வந்த விஷயத்தைப் பேசினான். "லைலா நீ செய்வது என்னவென நான் அறியாமல் இல்லை. நினைவில் கொள், இவள் எனக்கு எந்தவித வருமானமும் தராதவரை, அவள் வீட்டார் பட்ட கடன் தீரும்வரை அவளை நான் அனுப்ப இயலாது. முட்டாள்தனம் பண்ணாதே. நீயே இவள் இங்கே இருக்கும் காலத்தை 5 வருடங்கள் கூட்டிவிட்டாய். உனக்கு ஒரு வாரகால அவகாசம்தான். அதற்குள் இந்த இரண்டு பெண்களும் எனக்கு லாபம் ஈட்டித்தர நீ ஏற்பாடு செய்யவேண்டும். இல்லையேல், நான் என்ன செய்வேன் என உனக்குச் சொல்லத் தேவையில்லை. இந்த ராக்கால பூசைக்கு இன்னும் நான் பலி எற்பாடு செய்யவில்லை" என்று பூடகமாய் லைலாவை மிரட்டிவிட்டு அந்த இரண்டு அடியாட்களையும் அங்கேயே நோட்டம்விட விட்டுச் சென்றான். |
|
அன்றிரவு கொல்லையில் நிலவொளியில் அந்தக் கதைசொல்லும் வழிப்போக்கனிடம் லைலா கண்ணீர்விட்டு அழுததையும், அவன் தான் அவள் பதின்வயதுக் காதலன் என்பதும், அவளும் என்போல் வந்து இங்குக் கண்காணியாய் மாறியதையும் எல்லாம் அறிந்துகொண்டாள் ராஹாப்.
கானான் தேசத்தில் இயற்கை வளம் இருந்ததுபோல மனவளம் இல்லை. அங்குப் பயம்தான் கடவுள். உண்மை, நேர்மை, இரக்கம், நன்றி எல்லாம் ஒவ்வாத, ஒன்றுக்கும் உதவாத குணங்கள்.
தப்பு செய்தால் தண்டனையைக் குறைக்கக் காசு... இல்லை இல்லை... மாய மந்திரங்கள் செய்வது, நரபலி கொடுப்பதெனக் குலைநடுங்கச் செய்யும் காரியங்களை வாழ்வியலாகக் கொண்டிருந்தனர்.
அதனால்தானோ என்னவோ ராஹாபுக்கும், நூராவுக்கும் மக்களுக்காக இரங்கும் கருணைப் பெருங்கடலாய் இறைவன் இஸ்ரவேலவர்களுக்கு அமைந்திருந்தது மிக வினோதமாகவும், ஆச்சரியமாகவும் இருந்தது.
ஒரு சில இரவுகள் நூராவும், ராஹாபும் மொட்டை மாடியில் படுத்துக்கொண்டு நட்சத்திரங்களை அதிசயத்துடன் பார்த்தபடிக் கிடப்பார்கள்.
நூரா மெல்ல குசுகுசுப்பாள், "ஏன்க்கா, இந்த நட்சத்திரமெல்லாம் கடவுளா படைத்தார்? என்ன பேரு வைத்தார்? எப்படி நினைவில் வைச்சிருப்பார்?"
ராஹாபும் திகைப்புடன் பதிலளிப்பாள், "இத்தனை அழகா படைத்திருக்கிறாரே, அவர் மாய மந்திரக்காரர் இல்ல. கடவுள்தான் நூரா. பெரிய காரியங்களைப் பண்ணுவதால் அவருக்கு நினைவில் வைத்துக்கொள்வது ஒரு பொருட்டல்ல."
ராஹாப் அந்த வாழ்க்கையிலிருந்து விடுபட இருபது வருடங்கள் பிடித்தன. அதீத அழகியானபடியால் அவள் எல்லார் மத்தியிலும் ஒரு மாதிரியான பெயர் பெற்றவளாகவும் இருந்தாள். அந்தச் சமயத்தில்தான் லைலாவும் தன் முதிர்வயதில் ஒய்வு பெற்றுக்கொண்டாள். அப்போதுதான் அவள் அன்போடு இந்த வீட்டை ராஹாபிற்குத் தந்தாள். "மகளே! நல்லபடியாய், நிம்மதியாய் இனியாவது வாழ்! போ!" என்று சொல்லி அவள் சுகவீனப்பட்டுக் கிடந்த, அவளுக்காய் அத்துணைக் காலம் காத்திருந்த அந்த வழிப்போக்கனோடு மீதியுள்ள நாட்களைக் கழிக்கச் சென்றுவிட்டாள். நூராவும் எரிகோவின் ஒரு மூலையில் நிலம் வாங்கி உழுது பிழைத்துக் கொண்டிருந்தாள்.
ராஹாப் தன் புது வாழ்வில் சணலிலிருந்து நூல் நூற்று ஆடை நெய்யும் தொழிலைச் செய்தாலும் அவளுக்கு அமைந்த பெயர் மட்டும் மாறவில்லை. அவள் வாழ்ந்த பாவ வாழ்வின் நிழலாய் அது தொடர்ந்தது.
இப்படியான வேளையில் ஓர் இரவு, இரண்டு அன்னியர்கள் அவள் விடுதிக்குத் தங்கிச் செல்ல வந்தார்கள்.
அவர்களைக் கண்டவுடனேயே அவளுக்குத் தோன்றிற்று "ஓ! இந்த இஸ்ரவேல் ஒற்றர்கள். எரிகோவை எடுத்துக்கொள்ளப் போகிறார்கள். இன்றோ, நாளையோ அது நடக்கத்தான் போகிறது. பராக்கிரமங்கள் செய்யும் இறைவனைப் பெற்ற இவர்களுக்கு எல்லாம் கூடும்."
இப்படியாக அவள் எண்ணிக்கொண்டிருக்கும் போதே வாசலில் எரிகோ பட்டணத்தின் வீரர்கள் அவள் கதவைத் தட்டினார்கள்.
அவள் மிகத் துரிதமாக அந்த இஸ்ரவேல் ஒற்றர்களை வீட்டின் மாடியில் காயவைக்கப் பரப்பியிருந்த சணல் தட்டைகளிடையே ஒளிந்துகொள்ளச் சொன்னாள்.
பின்னர் வீரர்களிடம் போய் ராஹாப் "ஆமாம், அன்னியர்கள் இரண்டு பேர் வந்தது உண்மைதான், ஆனால் அவர்கள் வாசல் கதவடைக்கும் நேரத்தில் கிளம்பிச் சென்றார்களே!" என்று சொன்னாள்.
மேலும் ராஹாப் "அவர்கள் எங்கே போனார்களோ எனக்குத் தெரியாது; அவர்களைச் சீக்கிரமாய்ப் போய்த் தேடுங்கள்; நீங்கள் அவர்களைப் பிடித்துக்கொள்ளலாம்" என்று அவர்களைத் திசை திருப்பி விட்டாள்.
படையாட்களும் யோர்தான் நதித் துறைக்குத்தான் அவர்கள் தப்பிச் செல்ல எத்தனித்திருக்க வேண்டுமென்று எண்ணி அவர்களைப் பிடிக்க விரைந்தோடினார்கள்.
பின் ராஹாப் வீட்டின் மேற்பகுதிக்குச் சென்று ஒற்றர்களை நோக்கி "நீங்கள், இஸ்ரவேலர்கள் என்று நான் அறிவேன். உங்களுக்கு எகிப்திலிருந்து பாலைவனம் வரையில் நிகழ்ந்த அனேக ஆச்சரியமான வழி நடத்துதல்களைச் சிறு பிராயம் முதலே அறிந்திருக்கிறேன்.
செங்கடலை வற்றச் செய்த பராக்கிரமசாலியான கர்த்தர் உங்கள் பட்சமாய் இருப்பதையும், நீங்கள் யோர்தான் நதியின் அப்புறத்தில் உள்ள எமோரியரின் இரண்டு ராஜாக்களாகிய சீகோனையும் ஓகுக்கையும் சங்காரம் செய்ததையும் கேள்விப்பட்டோம்.
அது முதல் எங்கள் நாட்டவர் யாவரும் பயந்து குலைநடுங்கி தைரியமற்றுப்போய்க் கிடக்கிறார்கள்.
அதி நிச்சயமாகவே உங்கள் தேவனாகிய கர்த்தரே உயர வானத்திலும் கீழே பூமியிலும் தேவனாவார்.
நான் உங்களைத் தயவு காட்டியதால் நீங்களும் என் தகப்பனையும் என் தாயையும் என் சகோதரரையும் என் சகோதரிகளையும் அவர்களுக்கு உண்டான எல்லாவற்றையும் உயிரோடே வைத்து, சாவுக்குத் தப்புவிக்கும்படி, தயவுசெய்வோம் என்று கர்த்தர் பேரில் எனக்கு ஆணையிட்டுச் சொல்லுங்கள்" என்று வேண்டி நின்றாள்.
அதற்கு அந்த ஒற்றர்கள் "நீங்கள் எங்களுக்கு உதவி செய்ததால் கர்த்தர் எங்களுக்கு இந்த தேசத்தைக் கொடுக்கும்போது, நாங்கள் கட்டாயம் உனக்கு தயையும் சத்தியமும் பாராட்டுவோம்" என்றார்கள்.
அதற்கு ராஹாப் அவர்களுக்கு நன்றி பகர்ந்து "உங்களைத் தேடுகிறவர்கள் காணாதபடிக்கு, நீங்கள் மலையிலே போய், அவர்கள் திரும்பிவரு மட்டும் அங்கே மூன்று நாள் ஒளித்திருந்து, பின்பு உங்கள் வழியே போங்கள்" என்று அவர்களைக் கயிற்றினாலே ஜன்னல் வழியாக இறக்கிவிட்டாள்;
அவர்கள் ராஹாபை நோக்கி "இதோ பாரம்மா, நாங்கள் கானான் தேசத்துக்குள் பிரவேசிக்கும்போது, நீ இந்தச் சிவப்பு நூல் கயிற்றை எங்களை இறக்கிவிட்ட ஜன்னலிலே கட்டி, உன் தகப்பன் குடும்பத்தார் அனைவரையும் வீட்டிலே இருக்கச்சொல். அப்போதுதான் நாங்கள் சொன்னதுபோல் ஆணையை மெய்ப்பிக்க முடியும்" என்றார்கள்.
ராஹாப் அவர்கள் சொன்னது போலவே அந்தச் சிவப்புக் கயிற்றை ஜன்னலிலே கட்டிவைத்தாள்.
இப்படியாக அந்த இரண்டு ஒற்றர்களும் திரும்பி, மலையிலிருந்து இறங்கி, யோர்தான் ஆற்றைக்கடந்து, அவர்கள் தலைவரான யோசுவாவினிடத்தில் சென்று, தங்களுக்குச் சம்பவித்த யாவையும் தெரிவித்து; நிச்சயமாகவே இந்த தேசத்தைக் கடவுளின் கிருபையால் வெல்லலாம் என்று உளவு சொன்னார்கள்
யோசுவாவும் செய்தி யாவையும் பரிசீலித்து நல்யோசனையாலும், கிருபையாலும் படையோடு யோர்தானைக் கடந்து. எரிகோ கோட்டையை அடைந்தார்கள். அங்கு அவர்கள் கடவுளின் பெயரைத் துதித்து அந்த வலுவான எரிகோ கோட்டையைப் படைகளோடு 7 நாட்கள் சுற்றிவந்து, எக்காளங்களை ஊதுகையில், அதிர்ச்சியில் எரிகோ அலங்கம் இடிந்து விழுந்தது;
சொன்னது போலவே வேவுகாரரான அந்த வாலிபர்கள் உள்ளே போய், ராஹாபையும் அவள் தகப்பன், தாய், சகோதர சகோதரிகளையும் அவளுக்குள்ள மற்ற யாவரையும் அவள் குடும்பத்தார் அனைவரையும் வெளியே அழைத்துக்கொண்டுவந்து, அவர்களை இஸ்ரவேல் பாளையத்துக்குப் புறம்பே இருக்கும்படிப் பண்ணினார்கள்.
இப்படியாகக் கானான் நாட்டவளாகிய ராஹாப் கர்த்தர் மேலுள்ள தன்னுடைய மாறா விசுவாசத்தினால் இஸ்ரவேல் வம்சமானாள். அது மட்டுமா, அவளுடைய சந்ததி பல்கிப் பெருகி இஸ்ரவேலின் ராஜாவாகிய தாவீதும், சாலமோனும் அவள் வழியில் தோன்றவும் கர்த்தர் ஆசிர்வதித்தார்.
இவ்வுலகம் ராஹாப்பின் பாவ வாழ்க்கையைத்தான் நினைவில் கொண்டது ஆனால் எல்லாம்வல்ல இறைவனோ அவள் இருதயத்தில் இருக்கும் வாஞ்சையையும், கடவுளை அண்டிக்கொள்ளத் துடிக்கும் அன்பையும் கண்டார். இயேசு கிறிஸ்துவின் பிறப்பின் செய்தியும் அதுதான்! ஏனென்றால் ஆயிரம் ஆண்டுகளுக்குப் பின் உலக இரட்சகரான கருணாமூர்த்தி இயேசு கிறிஸ்து ராஹாபின் வம்சவழியில் பிறக்க அவள் ஆசிர்வதிக்கப்பட்டிருந்தாள் என்றால் அது என்னே பேறு! அனைவருக்கும் கிறிஸ்மஸ் தின வாழ்த்துகள்!
தேவி அருள்மொழி, சிகாகோ, இல்லினாய். |
|
|
More
"பாரத தேசமென்று தோள் கொட்டுவோம்"
|
|
|
|
|
|
|
|