|
நடக்க நினைத்த கல் |
|
- உமையவன்|நவம்பர் 2020| |
|
|
|
|
செம்மலை என்றால் கற்களுக்குத்தான் ஸ்பெஷல். அவ்வளவு கற்கள் இருக்கும். சிறிய, பெரிய கற்கள் என அந்த மலை முழுக்கக் கற்களின் குவியல்கள்தான்.தூரத்திலிருந்து பார்த்தால் யானையைப் போன்றும், முயல், மான் எனப் பல வடிவங்களிலும் அந்தக் கற்கள் காட்சியளிக்கும்.
அங்கிருந்த சின்னக் கல்லுக்கு நடக்கவேண்டும் என்று ஆசை. பல வருசமா ஒரே இடத்தில் இருந்து அதற்கு அலுத்துவிட்டது. மனிதர்களைப் போல, விலங்குகளைப் போல நடந்து செல்ல, அந்த மலையைச் சுற்றிப் பார்க்க என்று அதற்கு ரொம்ப நாளா ஆசை.
அப்பா கல்லுக்கிட்ட எவ்வளவு முறை கேட்டும் சின்னக் கல்லின் ஆசையை நிறைவேற்றி வைக்கவே இல்லை.
இந்த முறை விடுவதாக இல்லை. எப்படியாவது நடந்து செல்ல அப்பா கல்லிடம் உதவி கேட்கவேண்டும் என்று முடிவெடுத்து மெல்ல பேச்சைத் தொடங்கியது.
"அப்பா. அப்பா எனக்கு நடக்கணும்ப்பா" என்றது.
"உனக்கு எத்தனை தடவை சொல்றது, நம்ம எல்லாம் நடக்க முடியாது, எவ்வளவு வருசம் ஆனாலும் இதே இடத்துல இப்படியேதான் இருக்கணும்" என்றது அப்பா.
சின்னக் கல்லுக்கு ரொம்ப கஷ்டமாப் போயிருச்சு. முகம் வாடி சோகமாக இருந்துச்சு. ஆனால், தன் மனசுல எப்படியாவது தன்னால நடக்கமுடியும் என்கிற நம்பிக்கையை மட்டும் விடல.
அந்த மலையில் ஆடுகள் நிறைய மேயுறது வழக்கம். அன்று மாலையும் வழக்கம்போலச் சின்னக் கல்லுமேல நின்னு பக்கத்துல இருந்த செடியை மேய்ந்துகொண்டு இருந்தது ஆடு.
திடீரென்று ஆட்டின் கால் இடறி ஆடு அந்தப் பக்கம் குதிக்க, சின்னக் கல் தன் இடத்திலிருந்து உருண்டு சென்றது. அப்பா, அம்மா கல்லுக்கு ரொம்ப அதிர்ச்சியாக இருந்துச்சு. ஆனாலும் அவர்களால் சின்னக் கல் உருண்டு செல்வதைத் தடுக்க முடியவில்லை. ஏன்னா, அவர்களால்தான் நடக்கமுடியாதே.
அந்த மலை சறுக்கலாக இருந்ததால சின்னக் கல் வேகமாக உருண்டு வந்துகொண்டே இருந்தது. ஒருபுறம் சின்னக் கல்லுக்கு சந்தோசமாக இருந்தாலும், மறுபுறம் ரொம்பப் பயமாகவும் இருந்துச்சு. அதற்கு என்ன பண்றதுன்னே புரியவில்லை. அவ்வளவு வேகமாகக் கீழ்நோக்கி வந்துகொண்டிருந்தது.
அப்பொழுதுதான் அதற்கு இன்னொரு அதிர்ச்சியும் காத்துக் கொண்டிருந்தது. சின்னக் கல்லு போற திசையில் ஒரு பெரிய பள்ளம் இருந்துச்சு. சின்னக் கல்லுக்கு என்ன பண்றதுன்னே தெரியலை. அப்பா, அம்மாவ பிரிஞ்சு வந்துட்டமே, மறுபடியும் அவர்களிடம் எப்ப போறதுன்னு நெனச்சு ரொம்ப வருத்தப்பட்டுச்சு.
சின்னக் கல்லு எவ்வளவு முயன்றும் அதனால நிக்கவே முடியலை. அந்தப் பெரிய பள்ளத்துல விழுந்துவிட்டது. முன்பு வந்ததைவிட ரொம்ப வேகமாக மேலிருந்து கீழே விழுந்தது. சின்னக் கல்லுக்கு ரொம்ப பயமாப் போயிருச்சு. அதனால தன் கண்களை இறுக்கமாக மூடிருச்சு.
கொஞ்ச நேரத்துல பள்ளத்தின் கீழிருந்த தண்ணிக்குள்ள 'குபீரென்று' விழுந்தது. விழுந்த வேகத்தில் கொஞ்சநேரம் தன் சுயநினைவை இழந்துவிட்டது சின்னக் கல்.
சிறிது நேரத்திற்குப் பிறகு மெல்ல கண்களைத் திறந்து பார்த்தது. சுற்றிலும் தண்ணீராக இருந்தது. கடும் வெயிலில் இத்தனை நாட்கள் இருந்த கல்லுக்கு இந்தத் தண்ணீரின் குளுமை நல்லா இருந்துச்சு. ஆனா தன் வீட்டைவிட்டு வந்துவிட்டதை எண்ணி வருத்தப்பட்டது. மீண்டும் தன் இடத்திற்கு எப்படித் திரும்பப் போறதுன்னு நினைத்து ஏங்கிக் கொண்டிருந்தது.
அப்பொழுதுதான் எதிர்பாராத இன்பமாக அந்தக் குரல் ஒலித்தது. |
|
"டேய் சின்னக் கல்லு. எப்படி இருக்கற, இங்க எப்படி வந்த?" என்றது காட்டுத் தவளை.
சின்னக் கல்லுக்கு ரொம்ப சந்தோசம். காட்டுத் தவளையும் சின்னக் கல்லும் நல்ல நண்பர்கள். காட்டுக்குள்ள இருக்கும்போது சின்னக் கல்லுக்கு அடியில்தான் இரவு தங்கும் இந்தக் காட்டுத் தவளை.
இவ்வளவு பெரிய பிரிவுத் துன்பத்திற்கிடையில் காட்டுத் தவளையின் விசாரிப்பும், அன்பும் சின்னக் கல்லுக்கு ரொம்ப ஆறுதலாக இருந்தது.
தான் நடக்க ஆசைப்பட்டது முதல் இங்கு வந்து விழுந்தது வரை எல்லாவற்றையும் காட்டுத் தவளையிடம் சொன்னது.
காட்டுத் தவளைக்கும் என்ன பண்றதுன்னே தெரியவில்லை. சின்னக் கல்லை எப்படி வீட்டுக்குத் திரும்ப அனுப்பறதுன்னு தெரியாம யோசிச்சது.
தனது மீன் நண்பர்களிடம் உதவியும், யோசனையும் கேட்டது காட்டுத் தவளை. ஆனால் அவர்களுக்கும் அந்தச் சின்னக் கல் மீண்டும் அதன் வீட்டுக்குப் போக எந்த வழியும் தெரியவில்லை .
தனது அப்பா, அம்மாவை பார்க்க முடியாமல் சின்னக் கல் ரொம்ப வருத்தப்பட்டது. அப்பா எவ்வளவு சொல்லியும் கேட்காமல் நடக்க ஆசைப்பட்டது தப்புதான். அதனாலதான் இப்படியெல்லாம் நடக்குது என தன்னைத் தானே நொந்து கொண்டது.
ராஜா மீனின் யோசனைப்படி கொக்கிடம் உதவி கேட்டது தவளை. நடந்ததை எல்லாம் சொல்லி, நீதான் எப்படியாவது சின்னக் கல்லைக் கொண்டு சென்று அதன் வீட்டில் விடவேண்டும் என்று வேண்டிக் கேட்டுக்கொண்டது.
சரியென்று கொக்கும் உதவ முன்வந்தது. ஆனால் துரதிர்ஷ்டமாக சின்னக் கல்லை அந்தக் கொக்கால் தூக்க முடியவில்லை. பேருக்குத்தான் அது சின்னக் கல். ஆனால், அது கொக்கைவிடப் பெரியதாக இருந்தது. அவ்வளவு எடையை எந்தக் கொக்காலும் தூக்கமுடியாது.
காட்டுத் தவளையின் இந்த முயற்சியும் தோற்றுவிட்டது. இப்போது அதற்கு என்ன செய்வதென்றே தெரியவில்லை. மறுபுறம் சின்னக் கல்லும் ரொம்ப சோகத்தில் இருந்தது. எப்படியாவது தன் வீட்டிற்குப் போகவேண்டும் என்று சொல்லிக்கொண்டே இருந்தது.
என்ன குழந்தைகளே, சின்னக் கல்லு வீட்டுக்குப் போக உங்ககிட்ட எதாவது யோசனை இருந்தா உடனடியாகச் சொல்லுங்க. நீங்க சொல்லற யோசனையைக் கொண்டுதான் சின்னக் கல்லுனால வீட்டுக்குப் போகமுடியும்.
நல்லா யோசிங்க குழந்தைகளே, உங்க யோசனைக்குத்தான் சின்னக் கல்லு இன்னும் காத்துக்கொண்டிருக்கிறது.
உமையவன் |
|
|
|
|
|
|
|