Thendral Audio Advertise About us
New User? | Forgot Password? | Email: Password: Login
Current Issue | Previous Issues | Author Index | Category Index | Organization Index | E-Magazine | Classifieds | Digital Downloads
By Category:
சின்னக்கதை | சமயம் | சினிமா சினிமா | இளந்தென்றல் | கதிரவனை கேளுங்கள் | ஹரிமொழி | நிகழ்வுகள் | மேலோர் வாழ்வில் | மேலும்
August 2020 Issue
தென்றல் பேசுகிறது | நேர்காணல் | மாயாபஜார் | சினிமா சினிமா | சின்னக்கதை | கவிதை பந்தல் | சமயம் | மேலோர் வாழ்வில் | ஹரிமொழி | அஞ்சலி
எழுத்தாளர் | இளந்தென்றல் | நிகழ்வுகள் | கதிரவனை கேளுங்கள் | சிறுகதை | வாசகர்கடிதம் | அன்புள்ள சிநேகிதியே
Tamil Unicode / English Search
நேர்காணல்
மரச்சிற்பி சாமிநாதன்
- அரவிந்த்|ஆகஸ்டு 2020||(1 Comment)
Share:
உள்ளங்கைக்குள் அடங்கி விடுகிறது அந்தக் குழந்தையின் சிற்பம்; இரண்டே அங்குலம்தான் இருக்கிறது அந்தப் பெண்ணின் முகம்; மீசைக்காரன் நம்மைப் பார்த்துப் புன்னகைக்கிறான்; சிங்கத்தின் வாய்க்குள் உருளும் பந்து வியப்பை உண்டாக்குகிறது என்றால், பிரம்மாண்ட விநாயகர் சிலையோ பிரமிக்க வைக்கிறது. அன்னத்தின் முகம் பெண்ணின் உடல் கொண்ட சிற்பம் மிக ஆச்சரியம். இன்னும் சரஸ்வதி, லக்ஷ்மி, அம்மன், விநாயகர், சிவன், நரசிம்மர் என்று சிறிதும் பெரிதுமாக தெய்வ உருவங்கள்! இவற்றையெல்லாம் படைத்த இளைஞர் சாமிநாதனோ பணிவாகக் கைகளைக் கட்டிக்கொண்டு புன்னகைக்கிறார். இதோ, பேசலாம் வாருங்கள் அவரோடு....

★★★★★


வழிவழியாக வந்த கலை
நான் பாரம்பரியமான சிற்பக் குடும்பத்தைச் சேர்ந்தவன். அப்பா சுப்பிரமணியன், தாத்தா சின்னசாமி அனைவருக்கும் இதுதான் வாழ்வாதாரம். அப்பா, 2018ம் ஆண்டின் சிறந்த சிற்பக் கலைஞருக்கான விருதைப் பெற்றவர். எனது மாமா சிற்பி N. துரைராஜ் மரச்சிற்பங்களுக்காக அன்றைய குடியரசுத் தலைவர் பிரதீபா பாட்டீலிடம் தேசிய விருது பெற்றவர். எனது அத்தை மகனான சிற்பி C. நடராஜன், முதல்வர் ஜெ. ஜெயலலிதாவிடம் மாநில விருது பெற்றவர். பெரம்பலூர் மாவட்டத்தில் உள்ள, சிற்பக் கலைக்குப் பெயர்பெற்ற அரும்பாவூர் எனது சொந்த ஊர். சிற்பக் கலைஞர்கள் நிரம்பிய ஊர். எங்கெங்கும் உளிச்சத்தம் கேட்கும். சிறு வயதிலேயே எனக்கு இந்த ஆர்வம் வந்துவிட்டது.

தந்தை சுப்பிரமணியன் சிறந்த சிற்பி விருது பெறுகிறார் (2018)ஆரம்பத்தில், அப்பா சிற்பத் தொழிலில் பெரிதாக வருமானம் ஈட்டவில்லை. வறுமையான சூழல். அம்மா அஞ்சலை மரச் சிற்பங்களைப் பாலீஷ் போடுவார். அதிலும் பெரிய வருமானம் வராது. அண்ணன் கோபிநாதன், அக்கா பாலாம்பிகை நான் எல்லோரும் ஒழுகும் கூரைகொண்ட ஓட்டு வீட்டில் வசித்தோம். அண்ணன் 9ம் வகுப்போடு நிறுத்திவிட்டு அப்பாவுக்கு உதவியாகச் சிற்ப வேலைக்குச் செல்ல ஆரம்பித்தார். நான் விடுமுறை நாட்களில் பட்டறைக்குச் சென்று முடிந்த வேலைகளைச் செய்வேன். அவர்கள் செய்வதைக் கூர்ந்து கவனிப்பேன்.

நான் நன்றாகப் படிப்பேன். பத்தாம் வகுப்பில் 419 மார்க் வாங்கினேன். +2வில் 920. ஆனால் தொடர்ந்து படிக்க முடியாத வறுமை. அப்பாவுக்கு உதவியாக நானும் தொழிலில் இறங்கினேன்.

குருநாதரின் அன்பும் கடுமையும்
நான் இன்றைக்கு ஒரு மரச்சிற்பி எனப் பெயர்பெற்று இருக்கிறேன் என்றால் அதற்கு மிக முக்கியக் காரணம் எனது குருநாதர்கள்தாம். குருநாதர் தர்மலிங்கம் அவர்கள் வீரன், ரதி, மன்மதன், நாட்டியச் சிற்பங்கள் உருவாக்குவதில் வல்லவர். மற்றொரு குருநாதர் முனியப்பன், தன் மகன்போல் என்மீது அன்பு பாராட்டி இந்தத் தொழிலின் நுட்பங்களை எனக்குச் சொல்லிக் கொடுத்தவர். விருதுகளை விரும்பாமல் தனது தொழிலை உண்மையாக நேசித்துச் செய்கிறவர் அவர். அவரிடம் வேலை பார்க்கும் அத்தனை பேர் மீதும் அன்பும் அக்கறையும் கொண்டவர். மிகவும் கண்டிப்பானவரும் கூட. வேலையில் சிறு தவறு வந்தால்கூடப் பொறுக்கமாட்டார். கோபம் வந்துவிடும். அந்தச் சிற்பத்தைத் தூக்கிப் போட்டுவிட்டுப் புதிதாகச் செய்யச் சொல்வார். தவறின்றி வேலை செய்யவேண்டும் என்ற எண்ணத்தையும், சிற்பம் செய்யும்போது கூடுதல் கவனத்தோடு மனம் குவித்துச் செய்யண்டும் என்ற எண்ணத்தையும் எனக்குள் உருவாக்கினார். அதே சமயம் நன்றாகச் செய்தால் மனமுவந்து பாராட்டுவார்.

பல இடங்களுக்கு அவருடன் சென்று வேலை செய்திருக்கிறேன். குருநாதர் ஏற்கனவே ஒரு சிற்பத்தை உருவாக்கியிருப்பார். மாணவர்கள் அதனைச் செதுக்கி, பாலிஷ் செய்து, ஆபரண வேலை செய்வோம். இரவு நேரத்தில் ஓவியம் வரைவோம். குருநாதர் திருத்தங்கள் சொல்வார். ஒருநாள், "நீ ஓவியங்களை வரையக் கற்றுக்கொண்டது போதும்; இந்த ஓவியத்தில் உள்ளதைச் சிற்பமாகக் கொண்டு வா" என்று சொல்லி, மரக்கட்டை ஒன்றைக் கொடுத்து அவரே அதில் ஓவியம் வரைந்து தந்தார். நானும் அதைச் செய்து அவரிடம் பாராட்டைப் பெற்றேன்.
சிற்பி சாமிநாதன்


குருகுலத்தில் கலைக்கல்வி
மரச்சிற்பக் கலையை ஆழ்ந்து கற்க விரும்பினேன். கோபிச்செட்டிப்பாளையத்தை அடுத்த கவுந்தப்பாடியில் வசிக்கும் திரு முனியப்பன் அவர்களிடம் மாணவனாகச் சேர்ந்தேன். அவர் எனக்குச் சித்தப்பா உறவுமுறை. நான் இன்றைக்குப் பலரும் பாராட்டும் படியான சிற்பங்களைச் செய்கின்றேன் என்றால் அதற்கு எனது குருநாதர்களான சிற்பி K. முனியப்பன், அவரது மூத்த சகோதரர் சிற்பி K. தர்மலிங்கம் ஆகிய இருவரும்தான் காரணம். மூன்று வருடங்கள் அவர்களுடன் தங்கிக் கலையைக் கற்றுக் கொண்டேன். பின்னர் இலங்கை யாழ்ப்பாணத்தில் உள்ள திருநெல்வேலிக்கு அம்மனின் தேர்ச்சிற்பங்கள் செய்வதற்காகச் சென்று அங்கு பத்து மாதம்வரை இருந்து பணி செய்தேன். அதன் பின்னர் கேரளத்தில் பெரிய வீடு ஒன்றை நானும் அண்ணன் கோபிநாதனும் இணைந்து வடிவமைத்தோம். யாளி, சிங்கம் எல்லாம் செய்தோம். ரோஸ்வுட், தேக்குமரம் என்று நிறைய உள்-அலங்கார வேலை செய்தோம். அது கிட்டத்தட்ட ஒரு வருட வேலை.

எனக்கு மரச்சிற்பக் கலையைக் கல்லூரியில் படிக்க ஆசை இருந்தது. குறிப்பாக, மகாபலிபுரத்தில். "அங்கெல்லாம் சீட் கிடைக்காது; அதிகம் செலவாகும்" என்றெல்லாம் சொன்னதால் நான் அங்கு சேர முயலவில்லை. அதன் பின்னர் பாண்டிச்சேரியில் இருக்கும் பாரதியார் பல்கலைக்கூடம் பற்றி அறிந்தேன். எனது அண்ணனும் "நீ பட்டம் படிக்கவேண்டும்" என்று வலியுறுத்தினார். முதலாமாண்டு கல்லூரிக் கட்டணம் முழுவதும் அவரே கட்டினார். கல்லூரி முடிக்கும்வரை எஞ்சிய ஆண்டுகளில் நான் பகுதி நேரமாகச் சிற்பக்கலை தொடர்பான பணிகளைச் செய்து சம்பாதித்தேன். அதிலிருந்து கட்டணங்களைக் கட்டியதுடன், குடும்பத்திற்கும் உதவினேன்.சிற்பக்கலைக் கல்லூரியில்...
பாரதியார் பல்கலைக் கல்லூரிக்குள் கலையறிந்த சிற்பியாகத்தான் நுழைந்தேன். ஆனால், பாரம்பரிய மரச்சிற்பக் கலை பற்றிய பாடத்திட்டம் அந்தக் கல்லூரியில் இல்லை. ரியலிஸ்டிக், மாடர்ன் மற்றும் வெஸ்டர்ன் தான் இருந்தன. தத்ரூபச் சிற்பங்கள் பற்றி முறையாக அறிந்தேன். உலோகத் தகட்டுச் சிற்பங்கள், களிமண் மாடலிங், மெழுகுச் சிற்பங்களை உலோகத்தில் வார்த்தெடுப்பது எல்லாம் கற்றுக் கொண்டேன். நவீன பாணிச் சிற்பங்கள், வெவ்வேறு கோணங்களில் ஒரு சிற்பத்தை உருவாக்குவது, பாரம்பரியம் தாண்டி மாறுபட்ட கோணத்தில் அணுகுவது என்பதையெல்லாம் கல்லூரி எனக்குக் கற்பித்தது. அங்கிருந்த பேராசிரியர்கள் அனைவருமே எனது திறமையறிந்து என்னை ஊக்குவித்தனர். எனக்குப் பணி வாய்ப்புகளையும் ஏற்படுத்தித் தந்தனர். கல்லூரி என்னை நவீன காலத்திற்கேற்பப் பட்டை தீட்டியது.

பரிசு வென்ற 'அன்னக் குமரி'
நான் கல்லூரியில் படித்த காலத்தில், அரும்பாவூரில், தமிழக அரசின் நிறுவனமான பூம்புகார், 'அடுத்த தலைமுறைக்கான சிற்பிகள்' என்ற இளம் கைவினைஞர்களுக்கான போட்டி ஒன்றை நடத்தியது. 30-40 பேர் பங்கேற்றோம். எங்களுக்கு வழங்கப்பட்ட நேரம் காலை 10.00 மணிமுதல் மதியம் 2.00 மணிவரை. அந்த நேரத்திற்குள் சிற்பத்தை உருவாக்குவதுடன், நமது தனித்தன்மையையும் அதில் காட்டவேண்டும். நான் 'அன்னக் குமரி' என்ற கருத்தாக்கத்தில் ஒரு சிற்பம் செதுக்கினேன். அன்னத்தின் தலையும், இளம்பெண் உடலும் கொண்ட சிற்பம் அது. ஒரு புடைப்புச் சிற்பமாகத்தான் செய்திருந்தேன். அதாவது சிற்பத்தின் முன்பகுதி மட்டும் தெரிவதாக அமைந்த சிற்பம். கொடுத்த நேரத்தில் அதைத்தான் செய்ய முடிந்தது. அந்தச் சிற்பத்திற்கு எனக்கு முதல் பரிசு கிடைத்தது. அந்தப் பரிசு முதன்முதலாக எனக்குப் பரவலான அங்கீகாரத்தை ஏற்படுத்தித் தந்தது,

உள்ளங்கையில் ஒரு குழந்தைபரிசு வென்ற சிற்பங்கள்
கல்லூரியில் நான்காமாண்டு படித்துக் கொண்டிருந்தபோது, நான் செய்த சிவன் சிற்பத்திற்கு கோவை கஸ்தூரி சீனிவாசன் அறக்கட்டளை வழங்கிய முதல் பரிசு கிடைத்தது. பலரும் என்னை அறிய அது காரணமானது. அதுபோல உருட்டு மரத்தில் பல விஷயங்களைக் காட்டும் சிற்பம் ஒன்றைச் செதுக்கியிருந்தேன். ஒரே சிற்பத்தில் அமைதி, கோபம், அரக்ககுணம், விஷத்தன்மை போன்றவை கொண்டதாக - அமைதிக்குப் பாதி புத்தரின் முகம், அரக்க குணத்திற்குச் சிதைந்த அசுரனின் முகம், கோபத்திற்கு சிங்கம், விஷத்தன்மைக்குப் பாம்பு போன்றவை கொண்டதாக - அதை வடித்திருந்தேன். சிங்கத்தின் வாயினுள் ஓர் உருளும் பந்தை வைத்திருந்தேன். மரத்திற்குள்ளேயே அந்தப் பந்தைக் குடைந்து செய்திருந்தேன். பத்திரிகைகளிலும் இந்தச் சிற்பம் குறித்த செய்திகள் வெளியாகி வெகுவாகப் பாராட்டுப்பெற்றது. மீசைக்காரன், புத்தர் எனப் பல மரச்சிற்பங்களைக் கல்லூரி நாட்களில் செய்தேன். அமர்ந்தநிலை சிவனுக்கு பூம்புகார், பெரம்பலூர் மாவட்டத்தின் 'சிறந்த சிற்பி' விருது கொடுத்தது. லக்ஷ்மி சிற்பத்திற்குத் தமிழ்நாடு அரசு கலை பண்பாட்டுத் துறையின் இளங்கலைஞர்களுக்கான மாநில விருது கிடைத்தது. தமிழ்நாடு அரசின் தொழில் துறை அமைச்சராக இருந்த மாஃபா பாண்டியராஜன் அந்தப் பரிசை வழங்கினர். தஞ்சாவூரின் தென்னகக் கலை பண்பாட்டு மையம் வழங்கிய சிறந்த கைவினைக் கலைஞருக்கான விருதும் பெற்றேன். பூம்புகாரிடம் விருது பெற்ற கலைஞர்களை, சென்னையில் இயங்கி வரும் விஸ்வகர்மா வேத நிறுவனம் கௌரவித்த போது நானும் கௌரவிக்கப்பட்டேன்.

ஒரு சிங்கம் உருவாகிறது
சிங்கத்தின் தலையை குருநாதர் முனியப்பன் செய்வார். உடம்பு எப்படி அமைய வேண்டும் என்று சொல்வார். நாங்கள் செய்வோம். கால்களை எப்படி அமைக்க வேண்டும் என்று சொல்வார். ஒரு காலைச் செய்து காண்பிப்பார். மற்றவற்றை நாங்கள் செய்வோம். இப்படி, படிப்படியாக, குருகுலவாசமாகக் கற்றுக்கொண்டேன்.

அதில் முக்கியமானது சிங்க உருளை. சிங்கத்தின் வாய்க்குள் அந்த உருளையை எப்படி அமைப்பது என்பதை என் குருநாதரிடம் கற்றேன். சிங்கத்தின் வாயில், மேற்பல் மற்றும் கீழ்ப்பல்லுக்கு இடையே இடைவெளி விட்டு, அதன் மையத்தில் இருந்து உள்ளே சதுரமாக அமைத்துச் செதுக்கி, மேல் கீழாகவும், பக்கவாட்டிலும், இடவலமாகவும் உருட்டி உருட்டிச் செதுக்கி, உளியால் குடைய, அது ஒருபுறத்தில் கூம்புபோல் வரும். இதற்கே இரண்டு நாள்கூட ஆகும். பிறகு கூம்பான பகுதியைச் சிங்கத்தின் வாய்க்குள்ளேயே வெட்டி எடுத்து, மேலும் செதுக்கி உருண்டையாக்க வேண்டும். (பார்க்க படங்கள் : சிங்கமும் உருளைப் பந்தும்)
சிற்பி சாமிநாதன்


குறுஞ்சிற்பங்கள்
கல்லூரி முடித்தபின் தனியாகவும், அண்ணன் மற்றும் நண்பர்களுடனும் இணைந்தும் சிற்பப் பணிகளைச் செய்தேன். புதுமையான சிற்பங்களைச் செய்யும் ஆர்வம் எனக்கு இருந்தது. என் குருநாதர் முனியப்பன் அவர்கள், தமிழ்நாட்டில் இருக்கும் ஓர் ஆசிரமத்திற்காக, இங்கிருக்கும் எல்லா இன மாடுகளையும் 3-4 அங்குல அளவில் சிற்பங்களாகச் செய்திருக்கிறார். அதேபோல மினியேச்சர் சிற்பங்களை நாமும் செய்தால் என்ன என்று தோன்றியது. முதலில் 3-4 செ.மீ. உயரத்தில் ஒரு முனிவரின் சிற்பம் செய்தேன். அதற்குக் கிடைத்த பாராட்டு அதேபோலப் பல சிற்பங்களைச் செய்யும் உத்வேகத்தைத் தந்தது. 4, 5 அங்குலத்தில் விநாயகர், அம்மன், பகவதி, லக்ஷ்மி, முறுக்கு மீசைக்காரன், சிறு பெண்ணின் தலை என்று விதவிதமாக குறுஞ்சிற்பங்களைச் செய்தேன்.

இவற்றுக்கு உழைப்பு மிக அதிகம். செய்ய ஐந்து, ஆறு நாட்கள் ஆகும். வேலைப்பாடும் அதிகம். ஆனால், உழைப்புக்கேற்ற விலை கிடைக்காது. ஆனால் ஃபேஸ்புக் எனக்கொரு வரப்பிரசாதமாய் அமைந்தது. எனது முகநூல் பக்கம் மூலம் இச்சிற்பங்கள் பரந்த கவனத்தைப் பெற்றன. இவற்றின் சிறப்பு, பின்னால் உள்ள உழைப்பு, நேர்த்தி பற்றி அறிந்த கலைப்பிரியர்கள் இவற்றை நியாய விலைக்கு வாங்கினர்.

அமைச்சர் கையால் மாநில விருதுமேற்கண்ட சிற்பங்களில் இந்த மாதிரிச் சிற்பம், இன்ன அளவில், இந்த டிசைனில் வேண்டும் என்று கேட்டாலும் நான் செய்து தருவதுண்டு. நான்கு இஞ்சில் ஒரு குழந்தை சிற்பம் செய்தேன். அதற்கு மிக நல்ல வரவேற்பு என்பதால் அடுத்து ஐந்து இஞ்சில் ஒன்றைச் செய்தேன். அதற்கும் நல்ல வரவேற்பு. 6 செ.மீ.க்குள் ஒரு பெண்ணின் தலை செய்தேன். அதுபோலச் சிறிய சிவலிங்கம் ஒன்றைச் செய்தேன். இன்னமும் பலவிதச் சிற்பங்களைச் செய்யும் ஆவல் இருக்கிறது. ஆனால், எல்லாமே பணத்திற்காகச் செய்கிறேன் என்பதல்ல; பணத்தைவிட இவற்றைச் சவாலாக, ஆத்ம திருப்திக்காகச் செய்கிறேன்.
சவாலான சிற்பங்கள்
கேரளாவில் நான்கு சிங்கங்களைச செய்யவேண்டி இருந்தது. ஒரு சிங்கத்தை எனது அண்ணன் செய்தார். அதை மாதிரியாக வைத்து மற்றவற்றை நான் செய்தேன். அதைச் செய்துமுடித்த பிறகு சிங்கத்தின் வாய்க்குள் பந்து சுழலுமாறு அமைக்க வேண்டும். அதுதான் சவால். அதுபோல ஒருவர் தன் காதலியைச் சிற்பமாக வடிக்கச் சொல்லிப் படம் அனுப்பினார். அவர் அனுப்பியது ஒரே ஒரு கோணம்தான். அதை வைத்தே நான் சிற்பம் செய்து அனுப்பினேன். அதில் அவர்களுக்கு அவ்வளவு மகிழ்ச்சி. இதுபோன்ற சிற்பங்களைச் செய்யும் சவால் எனக்குப் பிடித்திருக்கிறது.

ஆனால், ஒருவரை மார்பளவுச் சிற்பமாக வடிக்க வேண்டும் என்றால் அவருடைய முன்பக்கத் தோற்றம். பக்கவாட்டுத் தோற்றம், பின்பக்கத் தோற்றம், 1/3 தோற்றம் எல்லாம் கிடைத்தால், சிற்பம், முழுமையானதாக, நேர்த்தியாக அமையும். அதே சமயம் செல்லரித்த படங்களை வைத்துச் சிற்பங்கள் செய்வதும் சவாலான ஒன்றுதான்.பயிற்சி கொடுக்கிறேன்
மரச் சிற்பக்கலை பயில ஆர்வமுள்ளவர்களுக்கு நான் பகுதி நேரமாகச் சொல்லிக் கொடுக்கிறேன். சமீபத்தில்கூடக் கோவை பி.எஸ்.ஜி. கல்லூரியைச் சேர்ந்த மாணவர்கள் ப்ராஜெக்ட் செய்ய வந்திருந்தனர். பத்து நாட்கள் இங்கே தங்கி இந்தக் கலையின் அடிப்படைகளை அறிந்துகொண்டு போனார்கள். இதுபோன்று ஆர்வத்துடன் வருபவர்களுக்குப் பகுதி நேரமாக காலை, மாலை நேரங்களில் சொல்லிக் கொடுக்கிறேன். இந்தச் சிற்பக் கலையை அடுத்த தலைமுறைக்குக் கொண்டு செல்லவேண்டும்.

புவிசார் குறியீடு கிடைத்தது
நாட்டின் பாரம்பரியத் தயாரிப்புகளுக்கு, அவற்றின் தனித்துவம் மற்றும் வரலாற்றுச் சிறப்பின் அடிப்படையில், உலக அளவில் அங்கீகாரம் கிடைப்பதற்காக இந்திய அரசால் புவிசார் குறியீடு வழங்கப்படுகிறது. தமிழகத்தில் காஞ்சிபுரம் பட்டு, தஞ்சாவூர் கலைத்தட்டு, நாச்சியார் கோவில் குத்துவிளக்கு, கோவில்பட்டி கடலை மிட்டாய் உள்ளிட்ட பாரம்பரியப் பொருட்களுக்குப் புவிசார் குறியீடு கிடைத்திருக்கிறது. அந்த வகையில், அரும்பாவூர் சிற்பக் கலைஞர்கள் அனைவரும் உறுப்பினராக உள்ள, அரும்பாவூர் மரச்சிற்பங்கள் செய்வோர் கைவினைத் தொழில் கூட்டுறவுச் சங்கத்தின் மூலம், தமிழக அரசின் பூம்புகாரை (தமிழ்நாடு கைவினைப்பொருட்கள் மேம்பாட்டுக் கழக நிறுவனம்) அணுகி புவிசார் குறியீடு கேட்டு வேண்டுகோள் வைத்தோம். 2013ல் எங்கள் வேண்டுகோள் மத்திய அரசின் கவனத்திற்குப் போனது. சுமார் ஏழு ஆண்டுகளுக்குப் பிறகு அரசு நன்கு பரிசீலித்து, சமீபத்தில் எங்களுக்கு புவிசார் குறியீட்டை வழங்கியுள்ளது. இதனால் அரும்பாவூர் சிற்பங்களுக்கு ஒரு தனித்துவம் கிடைத்திருக்கிறது. இதனால் எங்கள் தொழில் மேம்படும் என்று நம்புகிறோம். இதற்காக மத்திய, மாநில அரசுகளுக்கும், அதிகாரிகளுக்கும் அனைத்து மரச்சிற்பிகள் சார்பாக எங்களது நன்றியைத் தெரிவித்துக் கொள்கிறேன்.

மரம் ஒன்று சிலை ஆகும்போது!
ஒரு உருவத்தை மரத்தில் வரைந்து, பின்னர் செதுக்கி அதனைச் சிற்பமாக்குகிறான் சிற்பி. முகம் களையாக இருக்க வேண்டும்; உடலமைப்பு பொருத்தமாக இருக்க வேண்டும். ஒரு சிற்பத்தில் எதை முதலில் அமைப்பது என்பது முக்கியம். அமர்ந்த நிலை விநாயகர் சிற்பம் என்றால், லக்ஷ்மி சிற்பம் என்றால் கை முன்னால் வரவேண்டுமா, கால் முன்னால் வரவேண்டுமா, முகம் வரவேண்டுமா என்பதற்கெல்லாம் கணக்கு இருக்கிறது. ஒரு சூரன் நடனமாடுகிறான் என்றால், கை முன்னாடி வரும், முகம் முன்னாடி வரும், தொடைப்பகுதி அமுங்கி இருக்கும். இதையெல்லாம் அனுபவத்தில்தான் கற்கமுடியும். சிற்பங்கள் செய்வதற்கு உதாரணமாக நம்மை நாமே அமர்ந்து, நின்று, குனிந்து, திரும்பி என்று பல்வேறு கோணங்களில் பார்த்துப் பழகினால் ஒரு புரிதல் கிடைக்கும். நண்பர்களை மாடலாக வைத்தும் செய்வதுண்டு.

என் குருநாதர் முகத்தை மூன்றாகப் பிரிப்பார். தலைமுடி முதல் நெற்றிவரை ஒரு பாகம். நெற்றியிலிருந்து மூக்கு முடிவதுவரை இரண்டாவது பாகம். மீதி மூன்றாவது பாகம். நெற்றி மட்டமும், மேல் உதட்டின் மட்டமும் ஒரே சீராக, ஒரே மட்டத்தில் இருந்தால்தான் மூக்கு எடுப்பாக அமையும். மூன்றாவது பாகத்தையும் இரண்டாகப் பிரித்து கீழ் உதட்டில் முடித்துவிட வேண்டும். அதில் பாதி மேல் உதடு. இப்படி நுணுக்கமான அளவு முறைகள் உண்டு.

நின்ற நிலையில் தேவி சிலை என்றால் முகம் ஒரு பாகம்; கிரீடம் ஒன்றரைப் பாகம்; கழுத்து, கால் பாகம்; கழுத்தின் கால் பாகத்தில் ஆரம்பித்து மார்புப் புள்ளியில் முடிவது இரண்டாவது பாகம். அங்கு ஆரம்பித்து தொப்புளில் முடிவது மூன்றாவது பாகம். நான்காவது பாகம் இடுப்பின் அடிப்பகுதி வரை. ஐந்தாவது பாகம் தொடை. ஆறாவது பாகம் முட்டி. ஏழாவது பாகம் கெண்டைக்கால். எட்டாவது பாகம் கெண்டைக்கால் முடியும் பகுதி. அதற்குப் பிறகு இன்னும் ஒரு கால் பாயிண்ட் வைக்க வேண்டும். இவ்வாறாக எட்டே முக்கால் பாகமாகப் பிரித்துச் சிற்பங்களை நாங்கள் செய்வோம்.

அகத்தியர், பூத கணங்கள், விநாயகர் சிற்பங்களெல்லாம் உயரம் குறைவு எனவே பாகங்களும் அளவில் குறைவாக இருக்கும். ஐந்து பாக அளவில் அமைக்க வேண்டும். இது எனது குருநாதர் சொல்லிக் கொடுத்த பாணி.
சிற்பி சாமிநாதன்


எந்த மரத்தில் எது செய்யலாம்?
சிற்பங்கள் அதிகம் செய்வது வாகை மரத்தில்தான். அதனாலேயே அதைச் 'சிலை வாகை' என்பார்கள். ஒரு மரத்தை அறுத்தபின் அதன் நரம்புகள், கணுக்கள் சுற்றிச் சுற்றி இருந்தால் வேலை செய்யக் கடினமாக இருக்கும். நரம்புகள் நேர்கோடாக இருந்தால்தான் சிற்பம் செய்ய ஏதுவாக இருக்கும். அந்த நரம்புகள் பாயும் விதத்திற்கு ஏற்றவாறு சில மரங்களின் அடியில் கர்ப்ப ஓட்டம் இருக்கும். அந்த ஓட்டத்திலேயே அறுத்து நான்காகப் பிளந்து வேலை செய்ய வேண்டும். இல்லாவிட்டால் வெடிப்பு அதிகமாகும். இப்படி மரத்தைப் பார்த்துத் தான் தேர்ந்தெடுக்க வேண்டும்.

இசை மற்றும் கவின்கலைப் பல்கலைக்கழகப் பரிசுதேக்கு மரம், ரோஸ்வுட் (நூக்க மரம்) போன்றவற்றில் சிற்பங்கள் செய்ய மிக அதிக முதலீடு தேவைப்படும். விற்பனை விலையும் அதிகம். அதிக விலை கொடுத்து வாங்க யோசிப்பர். வாகைமரச் சிற்பம் அனைவரும் வாங்கும் விலையில் இருக்கும். வேலைப்பாடுகளும் அதில் சிறப்பாக அமையும். மாவிலங்கை, பூவரசமரம், அத்திமரம் போன்றவற்றை கோயில் வாகனங்கள் போன்றவற்றைச் செய்யப் பயன்டுத்துவர். வசதியுள்ளவர்கள் வீட்டு வாசக்கால், நிலை போன்றவற்றிற்கு பர்மா தேக்கு, நைஜீரியா தேக்கு, சூடான் தேக்கு, ரோஸ்வுட் போன்ற மரங்களைப் பயன்படுத்துவர்.

பூஜையறைக்கும் கோவிலுக்கும்...
பூஜையறைச் சிற்பங்களை ஓரடிக்கும் குறைவாக, அதாவது 11 அங்குலத்தில், செய்வார்கள். அத்தி, வேம்பு, தேக்கு, வில்வம், கருங்காலி, சந்தன மரம் போன்றவற்றில் செய்வார்கள். வேம்பில் சிறிய சிற்பங்கள் செய்தால் வெடிக்கும். வெள்ளெருக்கில் விநாயகர் செய்வார்கள். கோயில் கதவுகளை, ராஜகோபுரக் கதவுகளை தெய்வீகமான வேங்கை மரத்தில் செய்வார்கள். தூண்களையும் அதில் செய்வார்கள். தேக்கு மரத்திலும் செய்வதுண்டு. பூஜை அறைகளைக் கருங்காலி மரத்தில் செய்வார்கள். இம்மரம் இடி, மின்னல் போன்றவற்றைத் தாங்கும். கடினமான மரம் என்றால் அது நூக்கமரம் என்னும் ரோஸ்வுட். இலுப்பை மரம் ஈரமாக இருக்கும்போதே வேலை செய்தால் எளிதாக இருக்கும். காய்ந்தால் கடினமாக இருக்கும். கோயில் தேர்ச் சிற்பங்களை அதிகம் இலுப்பை மரத்தில் செய்வார்கள். கோவிலுக்குத் தகுந்தபடி, அதன் வரலாற்றுக்குத் தகுந்தபடி தேர்ச் சிற்பங்கள் அமையும். மா, பலா போன்றவையும் சிற்பம் செய்யப் பயன்படும். இன்ன மரத்தில் இன்ன சிற்பங்களைச் செய்யலாம் என சாஸ்திரம் இருக்கிறது.

சாமிநாதன்-மனைவி சூரியாலாக்டவுன் நாட்கள்
இந்த நாட்கள் மிகவும் சிரமமானவை. ஏற்கனவே கிடைத்த ஆர்டர்களை ஒவ்வொன்றாகச் செய்து வருகிறோம். பலரும் நேரில் வந்து பார்த்து, பேசி, விசாரித்து, பூர்ண திருப்தியான பின்புதான் முன்பணம் கொடுத்துச் செல்வார்கள். தற்போது கொரோனா பிரச்சனையால் யாரும் வெளி ஊர், மாநிலத்திலிருந்து வர இயலாத சூழல். அதனால் புதிய ஆர்டர்கள் கிடைப்பதில்லை. இயல்புநிலை திரும்பினால்தான் எங்களைப் போன்ற கலைஞர்களின் வாழ்வாதாரம் உயிர்பெறும். இது கஷ்டப்படும் எல்லா மக்களுக்குமே பொருந்தும்.

விருதுகளில் சில...
தமிழ்நாடு இசை மற்றும் கவின்கலைப் பல்கலைக்கழகம் - முதல் பரிசு
கஸ்தூரி சீனிவாசன் அறக்கட்டளை, கோவை - கவின் கலைக்கான முதல் பரிசு
பூம்புகார் 'அடுத்த தலைமுறை சிற்பிகள்' போட்டி - முதல் பரிசு
பூம்புகார் - பெரம்பலூர் மாவட்டத்தின் 'சிறந்த சிற்பி' விருது
தமிழக அரசின் கலை பண்பாட்டுத் துறை - இளங்கலைஞர்க்கான மாநில விருது
தஞ்சாவூர் தென்னகக் கலை பண்பாட்டு மையம் - 'சிறந்த கைவினைக் கலைஞர்' விருது


என்னைச் செதுக்கியவர்கள்....
எனது வெற்றிகளுக்குப் பின்னால் பலர் இருக்கின்றனர். அன்பும் அக்கறையும் காட்டி வளர்த்த பெற்றோர், என்னை ஆளாக்கிய குருநாதர்கள், என்னைப் பட்டம் படிக்க ஊக்குவித்த, தமிழ்நாடு அரசிடம் இருந்து இரு விருதுகளைப் பெற்றுள்ள எனது அண்ணன் கோபிநாதன், பள்ளிப் பருவத்தில் எனக்கு ஓவியக்கலையில் ஆர்வம் ஏற்படுத்திய சித்தப்பா செல்வபாண்டியன், கல்லூரியில் என்னை ஊக்குவித்த பேராசிரியர்கள், எப்போதும் என்னை ஊக்குவித்து வரும் எனது நண்பர்கள் என்று பலர் இதில் அடக்கம். மகாபலிபுரம் சிற்பக் கல்லூரிப் பேராசிரியராக இருந்த திருஞானம் அவர்களின் புத்தகங்கள் மிகவும் பயன் தருவனவாக இருந்தன. தேசிய விருது பெற்ற சுடுமண் சிற்பக் கலைஞர் கலைமாமணி, பத்மஸ்ரீ திரு முனுசாமி அவர்களின் சிற்பங்கள் எனக்குப் பலவிதங்களில் உத்வேகம் தந்தன. எனது வாழ்வின் சரிபாதியாக இருந்து, நான் செய்யும் சிற்பம் சிறந்ததாக அமைய வேண்டுமென்றும், எனது படைப்பு உலகளவில் பேசப்பட வேண்டுமென்றும் என்னை ஊக்குவித்து வரும் எனது மனைவி சூரியாவின் உறுதுணை எனக்கு மிகப்பெரிய பலம்.இன்னும் செய்யவேண்டும்
மரச்சிற்பக் கலையை இன்னும் மேலே எடுத்துச் செல்லவேண்டும். இன்னும் பலவித மினியேச்சர் சிற்பங்களை உருவாக்க வேண்டும். பெரிய, பிரமிக்கத்தக்க சிற்பங்களைச் செய்ய வேண்டும் என்கிற ஆசைகள் உள்ளன. இந்த மரச்சிற்பக் கலையை கலை, அறிவியல், தொழில்நுட்பம் பயில்வோரும் பாடமாகக் கற்கவேண்டும் என்பது என் விருப்பம். ஆர்வம் உள்ளவர்களுக்கு சொல்லித்தரத் தயாராக இருக்கிறேன். தெய்வச் சிற்பங்கள் நிறையச் செய்திருக்கிறேன். புத்தர், இயேசு எல்லாம் செய்திருக்கிறேன். ஆனால் ரமணர், அரவிந்தர், விவேகானந்தர் போன்ற மகான்களைச் செய்ததில்லை. அது ஒரு குறையாகவே மனதில் இருக்கிறது. அதுபோல சுதந்திரப் போராட்டத் தலைவர்கள், சமுதாய உயர்வுக்குப் பாடுபட்ட தலைவர்களைச் செய்ததில்லை. என்னுடைய தனிப்பட்ட ஆர்வம் மற்றும் சேகரிப்புக்காக ஆண்டுக்கு ஒன்றாவது செய்யத் திட்டமிட்டிருக்கிறேன். சமுதாயத்திற்குப் பயனுள்ள, விழிப்புணர்வு ஏற்படுத்தும் சிற்பங்களைச் செய்யும் எண்ணம் உள்ளது. இலக்கிய, புராண, வரலாற்றுச் சிற்பங்களைச் செய்யவும் ஆர்வம் இருக்கிறது.

கொப்பளிக்கும் ஆர்வத்தோடு பேசுகிறார் சாமிநாதன். "நவீன தொழில்நுட்பம், குறிப்பாக இணையமும் செல்ஃபோனும் மிக பயனுள்ளவை. பழங்காலச் சிற்பங்களை இணையத் தேடலில் பார்க்கமுடிகிறது. படைப்பாற்றலை அது தூண்டுகிறது. முக்கியமாக, ஃபேஸ்புக். அதன்மூலம் எனக்கு சக-கலைஞர்கள் பலரின் அறிமுகம் கிடைத்தது. உலகம் முழுக்க எனது படைப்புகளைக் கொண்டுசெல்ல முடிகிறது. எனது சிற்பங்களை விற்கவும் உதவுகிறது. இந்த நேர்காணலுக்கும் அதுதான் காரணம்" என்கிறார் சிற்பி சாமிநாதன். நாமும் புன்னகையோடு வாழ்த்துக் கூறி விடை கொடுக்கிறோம்.

உரையாடல்: அரவிந்த்
Share: 
© Copyright 2020 Tamilonline