Thendral Audio Advertise About us
New User? | Forgot Password? | Email: Password: Login
Current Issue | Previous Issues | Author Index | Category Index | Organization Index | E-Magazine | Classifieds | Digital Downloads
By Category:
சின்னக்கதை | சமயம் | சினிமா சினிமா | இளந்தென்றல் | கதிரவனை கேளுங்கள் | ஹரிமொழி | நிகழ்வுகள் | மேலோர் வாழ்வில் | மேலும்
March 2020 Issue
தென்றல் பேசுகிறது | நேர்காணல் | மாயாபஜார் | சினிமா சினிமா | சின்னக்கதை | அன்புள்ள சிநேகிதியே | முன்னோடி | சமயம் | சிறப்புப் பார்வை
எழுத்தாளர் | இளந்தென்றல் | நிகழ்வுகள் | கதிரவனை கேளுங்கள் | Events Calendar | ஹரிமொழி | சாதனையாளர் | வாசகர்கடிதம் | மேலோர் வாழ்வில்
Tamil Unicode / English Search
சமயம்
கொனார்க் சூரியனார் கோவில்
- சீதா துரைராஜ்|மார்ச் 2020|
Share:
கொனார்க் சூரியனார் கோவில் இந்தியாவில், ஒடிசா கடற்கரையில் பூரி நகரிலிருந்து 35 கி.மீ. வடகிழக்கில் உள்ளது. புவனேஸ்வரத்தின் தென்கிழக்கில், வங்கக் கடற்கரையில் உள்ளது. புவனேஸ்வரத்தில் விமான நிலையம் உள்ளது. பூரி, புவனேஸ்வரம் ஆகிய இடங்களிலிருந்து கொனார்க் செல்ல ரயில், சாலை உண்டு.

கொனார்க் சூரியன் கோவில் 13ம் நூற்றாண்டில் கீழைக்கங்க வம்சத்தைச் சேர்ந்த மன்னர் முதல் நரசிம்ம தேவரால் ஸ்தாபிக்கப்பட்டது. பின்னர் பிஷு மஹாராணா என்ற தலைமைச்சிற்பிக்குக் கோவில் கட்டும் பொறுப்பு தரப்பட்டது. சூரிய தேவாலயம் என அழைக்கப்படும் இக்கோவில் ஒடிஸாவைச் சேர்ந்த கட்டட, சிற்பக்கலை வேலைப்பாடுகள் நிறைந்தது. கோவில் சந்திரபாகா நதிக்கரையில் கட்டப்பட்டுள்ளது.

மிகப்பெரிய அளவில் ஏழு குதிரைகள் கொண்ட தேர் வடிவில் கோவில் அமைந்திருக்கிறது. வேதங்களில் வர்ணித்துள்ளபடி சூரியன் கிழக்கில் உதித்து வானில் சென்று ஏழு குதிரைகள் கொண்ட தேரில் இரு கையிலும் தாமரை மலருடன் நிற்க, அருணன் தேரைச் செலுத்துகிறான். ஏழு குதிரைகளுக்கும் காயத்ரி, பிரஹதி, உஷினி, ஜகதி, த்ரிஷ்டுபா, அனுஷ்டுபா, பங்க்தி எனப் பெயர். சூரியனுக்கு உஷா, ப்ரத்யுஷா என இரு மனைவிகள். இருவரும் இருட்டை நோக்கி அம்பெய்து விரட்டுவதைப் போலச் சிற்பம் காணப்படுகிறது.

கொனார்க்கின் எழில்மிகு சிற்பங்கள்



தேரின் 12 ஜோடிச் சக்கரங்களும் இந்து பஞ்சாங்கப்படி 12 மாதங்களைக் குறிக்கும். மாதத்தின் சுக்ல, கிருஷ்ண பக்ஷங்களைக் குறிக்கும் வகையில் இரண்டு சக்கரங்களும் உள்ளன. கோவில் கோபுரம் கறுப்பு நிறமாக காணப்பட்டதால் 'கருநிறப் பகோடா' (Black Pagoda) என்றும், பூரி ஜகந்நாதர் கோவில் 'வெண்ணிறப் பகோடா' என்றும் அழைக்கப்பட்டன. ஐரோப்பிய மாலுமிகளுக்கு இந்தக் கோவில் வங்கக் கடலில் தாம் எங்கிருக்கிறோம் என்பதை அறிய உதவியாக இருந்தது.

பிரதான கோவில் 229 அடி உயரம் கொண்டகோவிலின் முக்கிய விமானம் 1837ம் வருடம் விழுந்துவிட்டது. மண்டபத்தில் 'ஜகன்மோஹனா' எனப்படும் தரிசன அரங்கம் (128 அடி உயரம் கொண்டது), 'நடமந்திரா' எனப்படும் நாட்டிய மண்டபம், 'போக மண்டபா' எனப்படும் உண்ணும் மண்டபம் ஆகியவை இன்றும் உள்ளன. கோவிலின் மேல்கூரை, கீழ் மட்டத்தில் உள்ளதை விட, கலையம்சம் பொருந்தி உள்ளது.

இங்கே துர்க்கை, மகிஷாசுரமர்த்தினி இருவரும் அசுரரை வதம் செய்யும் கோலத்திலும், விஷ்ணு, ஜகந்நாதர் உருவத்திலும், சிவன் சிதிலமடைந்த லிங்க உருவிலும் உள்ளனர். மற்ற தெய்வ உருவங்களும் கோவிலில் செதுக்கப்பட்டுள்ளன. விஷ்ணு, சிவன், கஜலட்சுமி, பார்வதி, கிருஷ்ணன், நரசிம்மர் மற்றைய தெய்வச் சிற்பங்களும் ஜகன்மோகனாவில் இந்திரன், அக்னி, குபேரன், வருணன், ஆதித்யன் ஆகிய வேத வழிபாட்டுத் தெய்வங்களும் உள்ளன. பிரதான கோவிலை ஒட்டிச் சிறியனவாக மாயாதேவி, வைஷ்ணவிதேவி கோவில்கள் உள்ளன.

கற்கோவில்கள் மூன்றுவித கற்களினால் கட்டப்பட்டுள்ளன. 'கோண்டலைட்' வகைக் கற்களினால் கட்டப்பட்டு கற்கள் ஒன்றோடொன்று சேர்க்கப்பட்ட விதம் தெரியாமல் இருப்பது கட்டடக்கலையின் நுணுக்கத்தைக் காண்பிக்கிறது.



கோவில் சுவர்களில் விதவிதமான சிற்பங்கள் செதுக்கப்பட்டுள்ளன. சூரியனின் தேரோட்டி அருணனுக்காக கற்றூண் உள்ளது. ஒற்றைக் குளோரைட் கல்லில் செதுக்கப்பட்ட இந்தத் தூண் 33 அடி 8 அங்குலம் உயரமுள்ளது. கிழக்கில் பூரி ஜெகந்நாதர் கோவில்முன் இருந்தது. பதினெட்டாம் நூற்றாண்டில் இந்த அருண ஸ்தம்பம், கொனார்க் கோவில் நுழைவாயிலிலிருந்து எடுத்து, பூரி ஜெகந்நாதர் கோவில் சிங்க நுழைவாயிலில் மராத்திய பிரம்மச்சாரி 'கோஸ்வாமி' அவர்களால் வைக்கப்பட்டது.
கொனார்க் கோயில் கலிங்க தேசத்துச் சிற்பக்கலை பாணியில் கட்டப்பட்டுள்ளது. 1906ம் வருடம் மணற் காற்றினால் ஏற்படும் அரிப்பைத் தடுக்கப் பயிர்கள் நடப்பட்டன. 1909ம் வருடம் மணல் குவியலைத் தோண்டியபோது மாயாதேவி கோவில் கண்டுபிடிக்கப்பட்டது. கோவில் ஒடிய சில்ப சாரிணியில் உள்ளபடி, சதுர வடிவ விமானத்துடன் கட்டப்பட்டுள்ளது. சூரியனது ரதத்தில் 24 சக்கரங்கள், ஒவ்வொன்றும் 9 அடி 9 அங்குல ஆரம் கொண்டவை; அவை 8 ஆரைகளைக் கொண்டுள்ளன.

ஜகமோகனா ஹால் மிகவும் உயரமாக இருப்பதால் அதில் எந்தப் பாதிப்புமில்லை. ஆண்டுதோறும் பிப்ரவரி மாதத்தில் நடைபெறும் சந்திரபாகா மேளாவுக்கு பக்தர்கள் வந்து குவிகின்றனர். ஒடிய சுற்றுலாத்துறை ஆண்டுதோறும் இந்தக் கோவிலை பின்னணியாக வைத்து நடத்தும் 'கொனார்க் இசை, நடன விழா' மிகப் பிரபலம். கொனார்க் கோவில், பூரி ஜகந்நாதர் கோவில், புவனேஸ்வர் லிங்கராஜா கோவில் ஆகிய மூன்றும் 'தங்க முக்கோணம்' எனப் போற்றப்படுகிறது.

1984ம் வருடம் யுனெஸ்கோவின் உலகப் பாரம்பரியச் சின்னமாக கொனார்க் சூரியன் கோவில் அங்கீகரிக்கப்பட்டது. தமிழ்நாட்டில் ஒரு சூரியனார் கோவிலும், வட இந்தியாவின் ஒடிசாவில் ஒரு கொனார்க் கோவிலும் அமைந்துள்ளது சிறப்பாகும். உலகின் பல மதங்களில் சூரிய வழிபாடு உள்ளது. நான்கு வேதங்களும் சூரியனை வழிபடுகின்றன. "செங்கதிர்த் தேவன் சிறந்த ஒளியினைத் தொழுகிறோம்" என்கிறார் மகாகவி பாரதி.

சீதா துரைராஜ்,
சான் ஹோஸே, கலிஃபோர்னியா
Share: 




© Copyright 2020 Tamilonline