|
|
|
தமிழ் நாட்டின் தலைநகர் சென்னையில் உள்ள மிகப் பிரபலமான கோவில் வடபழனி ஆண்டவர் கோவில்.
கோவிலின் மூலவர் பழனி ஆண்டவர். தலவிருட்சம் அரசமரம். தீர்த்தம் கும்ப புஷ்கரணி. இது கோவிலின் எதிரே உள்ளது. சிவாகமப்படி பூஜைகள் நடைபெறுகின்றன. 1890ம் வருடத்திய தலபுராணத்தின்படி சிறிய கொட்டகைக்கு அடியில் முருகனின் சித்திரத்தை வைத்து வணங்கி வந்தார் அண்ணாமலை தம்பிரான் என்பவர். அப்போது அவரது உடலில் தெய்வசக்தி வருவதையும், சொல்வதெல்லாம் உண்மையானது என்பதையும் பின்னாளில் கண்டறிந்தனர். அண்ணாசாமித் தம்பிரான் நாக்கை அறுத்துப் பாவாடம் செய்தவர். திருத்தணி முருகனுக்குக் காணிக்கை செலுத்தி பழனியாண்டவர் படத்தை வைத்துப் பூஜை செய்தவர். இவரது தொண்டர் இரத்தினசாமித் தம்பிரான். இவரும் தனது நாக்கை அறுத்துப் பாவாடம் செய்தவர். இவரது காலத்தில் முருகப்பெருமான் சிலை பிரதிஷ்டை செய்யப்பட்டது. கருவறைப் பகுதி உள்ள இடத்தில் செங்கல், சுண்ணாம்புக் கட்டிடம் கட்டப்பட்டு அருள்வாக்குக் கூறிய மேடையை வடபழனி கோவில் என்று அழைக்க செய்தார்.
பாக்யலிங்கத் தம்பிரான் என்பவரும் தனது நாக்கை அறுத்து வடபழனி கோவிலுக்குப் பாவாடம் செய்தார். இவர் வடபழனி கோயிலின் கர்ப்பக்கிரகம் முதல் உட்பிரகாரம் வரை திருப்பணி செய்தவர். கோவிலில் அருள்வாக்கு மூலம் நோய்கள் குணமாக, வேலை கிடைக்க, திருமணம் நடக்க ஆலோசனைகள் கூறப்பட்டன. அண்ணாசாமித் தம்பிரான், இரத்தினசாமித் தம்பிரான், பாக்யலிங்கத் தம்பிரான் மூவருக்கும் சமாதிகள் வடபழனி கோவிலுக்கு வடமேற்கே ஒரு ஃபர்லாங் தூரத்தில் அமைந்துள்ளன. மூவருக்கும் நெற்குன்றம் பாதையில் தனிக்கோவில் கட்டப்பட்டு தினசரி பூஜை நடைபெற்று வருகிறது.
சாதுக்கள் பிரதிஷ்டை செய்த தலம் என்பதால் இத்தலத்து இறைவனைத் தொழுவது மிகவும் சிறப்பாகக் கருதப்படுகிறது. கோவிலினுள் வரசித்தி விநாயகர், சொக்கநாதர், மீனாட்சி அம்மன், காளி, பைரவர், வள்ளி தெய்வானையுடன் சண்முகர் சன்னிதிகள் அமைந்துள்ளன. கோயில் ராஜகோபுரம் 72 அடி உயரம் உள்ளது. நுழைவாயில் கோபுரத்தில் கந்த புராணத்தில் கூறப்பட்டுள்ள சிற்பங்கள் வடிக்கப்பட்டுள்ளன. உட்பிரகாரத்தில் தக்ஷிணாமூர்த்தி, சண்டிகேஸ்வரர், மகாலட்சுமி ஆகியோரைத் தரிசிக்கலாம். கோவிலில் வருடத்திற்கு 7000 கல்யாணங்கள், உபன்யாசங்கள் விஸ்தாரமான ஹாலில் நடைபெறுகின்றன. |
|
சுவாமி தாமரை பீடத்தின் மீது அமர்ந்திருப்பதும், வலது பாதத்தை முன் வைத்திருப்பதும் விசேஷம். கோவிலினுள் அங்காரகனுக்குத் தனிச் சன்னிதி உள்ளது முருகனுக்கு மிகவும் பிடித்தவர் அங்காரகன் (செவ்வாய்). முருகன் பாதரட்சையுடன் அருள் பாலிக்கிறார். பழனிக்குச் செல்ல முடியாதவர்கள் வடபழனி ஆண்டவரை வழிபட்டு அருள் பெறுகின்றனர். திருவிழாக்கள் தமிழ்ப் புத்தாண்டு, ஆங்கிலப் புத்தாண்டு, வைகாசி விசாகம், கந்தசஷ்டி, மாசிமகம், பங்குனி உத்திரம் மற்றும் எல்லா மாதங்களிலும் கிருத்திகை கொண்டாடப்படுகின்றது. முருகனுக்குத் தனியாகத் தங்கத்தேர் உள்ளது.
வடபழனி ஆண்டவரை புதிய தொழில் தொடங்க, வியாபாரம் விருத்தி அடைய, குடும்பத்தின் நிதி வசதி பெருக, கல்யாண வரம், குழந்தை வரம் வேண்டிப் பிரார்த்தித்துக் கொண்டு பக்தர்கள் பெருமளவில் வருகின்றனர். வடபழனி ஆண்டவர் சன்னிதியில் முடிகாணிக்கை, வேல் காணிக்கை ஆகியவையும் உண்டியலில் செலுத்தப்படுகின்றன.
கோவில் தினசரி காலை 5.00 மணிமுதல் 12.00 மணி வரையிலும், மாலை 4.00 மணி முதல் இரவு 9.00 மணி வரையிலும் திறந்திருக்கும். திருப்பள்ளி எழுச்சி, காலசந்தி, உச்சிக்காலம், சாயரட்சை, அர்த்தஜாமம் என பூஜைகள் நடைபெறுகின்றன. விழாக் காலங்களில் பூஜை நேரங்கள் சிறிது மாறுபடும்.
சீதா துரைராஜ், சான் ஹோஸே, கலிஃபோர்னியா |
|
|
|
|
|
|
|