Thendral Audio Advertise About us
New User? | Forgot Password? | Email: Password: Login
Current Issue | Previous Issues | Author Index | Category Index | Organization Index | E-Magazine | Classifieds | Digital Downloads
By Category:
சின்னக்கதை | சமயம் | சினிமா சினிமா | இளந்தென்றல் | கதிரவனை கேளுங்கள் | ஹரிமொழி | நிகழ்வுகள் | மேலோர் வாழ்வில் | மேலும்
February 2020 Issue
தென்றல் பேசுகிறது | நேர்காணல் | மாயாபஜார் | சினிமா சினிமா | சின்னக்கதை | அன்புள்ள சிநேகிதியே | நூல் அறிமுகம் | பொது | சிறப்புப் பார்வை
எழுத்தாளர் | இளந்தென்றல் | நிகழ்வுகள் | கதிரவனை கேளுங்கள் | Events Calendar | ஹரிமொழி | சிறுகதை | சமயம் | வாசகர்கடிதம் | மேலோர் வாழ்வில்
Tamil Unicode / English Search
நேர்காணல்
முனைவர் அண்ணா கண்ணன்
- அரவிந்த் சுவாமிநாதன்|பிப்ரவரி 2020||(1 Comment)
Share:
கவிஞர், எழுத்தாளர், பேச்சாளர், ஆய்வாளர், இதழாளர், மொழிபெயர்ப்பாளர் என பல திறக்குகளில் இயங்கிக் கொண்டிருப்பவர் முனைவர் அண்ணா கண்ணன். யாஹூ, வெப்துனியா, தமிழ் சிஃபி, சென்னை ஆன்லைன், அமுதசுரபி போன்ற இணைய மற்றும் இதழ்களின் ஆசிரியராகத் திறம்படப் பணியாற்றியவர் இண்டஸ், பிளிப்கார்ட், கூகுள் நிறுவனங்களில் பணிபுரிந்திருக்கிறார். 'வல்லமை' இணைய இதழின் நிறுவனர். "தமிழில் இணைய இதழ்கள்" என்ற தலைப்பில் ஆய்வு செய்து இளமுனைவர் (M.phil) பட்டம் பெற்றிருக்கிறார். 'தமிழில் மின்னாளுகை' என்பது இவரது 'முனைவர்' பட்ட ஆய்வு. இவரது இரு கவிதைகள், 32 மொழிகளில் மொழிபெயர்க்கப்பட்டுள்ளன. பல்கலைக்கழகம் மற்றும் கல்லூரிக் கருத்தரங்குகளில் கணினியில் தமிழ்ப் பயன்பாடுகள் குறித்தும், இணையத்தில் தமிழ் வளர்ச்சி குறித்தும் உரையாற்றி வருகிறார். அவருடனான உரையாடலிலிருந்து...

கே: 'எழுத்து' உங்களை ஈர்த்தது எப்போது, எப்படி?
ப: இன்றைய அரியலூர் மாவட்டத்தில் உள்ள கோடாலி கருப்பூர் என்ற கிராமத்தில் நான் பிறந்தேன். வளர்ந்தது சென்னையிலும் திருவாரூரிலும். அப்பா குப்புசாமி தமிழாசிரியர், வீட்டிலிருந்த நூல்களைப் படித்தேன். சென்னை அயன்புரத்தில் நூலகத்திலிருந்து புத்தகங்கள் எடுத்துப் படித்தேன். அப்போது நான் ஐந்தாம் வகுப்பு மாணவன். எட்டாம் வகுப்பு முதல் பன்னிரண்டாம் வகுப்புவரை திருவாரூரில் படித்தேன். அங்கிருந்த வ.சோ. ஆண்கள் பள்ளியிலும் அதனுடன் இணைந்த விடுதியிலும் என்னைச் சேர்த்தார்கள். பள்ளித் தாளாளர் ஜானகியம்மாள், விடுதி மாணவர் ஒவ்வொருவரும் நூலகத்திலிருந்து புத்தகம் எடுத்துப் படித்து, அதில் என்ன பிடித்தது என்று ஒரு குறிப்பேட்டில் எழுதி வரச் சொல்வார். நான் தொடர்ந்து எழுதினேன்.

தஞ்சை மாவட்டம் வேப்பத்தூரில் என் அத்தை கணவர், நூலகராகப் பணியாற்றினார். அங்கே விடுமுறைக்குச் செல்லும்போதெல்லாம் தினமும் ஒரு புத்தகத்தை எடுத்துப் போய், அன்றைக்கே படித்துவிடுவேன். பெரிய சரித்திர நாவலை ஒரே நாளில் படித்ததெல்லாம் உண்டு. என் அம்மா சௌந்திரவல்லி, நான் உலகம் போற்றும் பெரிய ஆளாக வரவேண்டும் என எப்போதும் சொல்லிக்கொண்டே இருப்பார். செய்தித்தாள்கள், வார, மாத இதழ்கள், பொட்டலம் மடித்து வந்த காகிதம் என எதிலாவது பொது அறிவுச் செய்தி, பொன்மொழி, துணுக்கு, வெற்றிக் கதை வந்திருந்தால், அதைக் கத்தரித்து வைத்து, எனக்குப் படிக்கக் கொடுப்பார். இப்படியாக வாசிப்பு தொடர்ந்தது.

பள்ளியில் கட்டுரை, பேச்சு, கவிதை எனப் பல போட்டிகளில் வெற்றிகள் பெற்றேன். இவை எனக்குப் பெரும் உற்சாகத்தைத் தந்தன. படிப்பின் சுவையும் தமிழ்ச் சொற்களில், வரிகளில், வாக்கியங்களில் உள்ள இசையின்பமும் என்னைப் பெரிதும் ஈர்த்தன. பாரதியார், பாரதிதாசன், ஆண்டாள் பாடல்கள் பலவற்றில் இந்த இசையின்பத்தை உணர்ந்து படிப்பேன். உரைநடையிலும் இந்த இசையின்பம் இருக்கக் கண்டேன். அடுத்து, அண்ணாகண்ணன் என்ற பெயரிலேயே ஓர் இசையின்பம் உள்ளதை உணர்ந்தேன். இந்தப் பெயரைப் பல விதங்களில் சொல்லிப் பார்த்து மகிழ்ந்ததுண்டு.

இனிய குடும்பத்தினருடன்



கே: ஒரு கவிஞராக நீங்கள் உங்களை அடையாளம் கண்டுகொண்டது எப்போது?
ப: திருவாரூர் வ.சோ. விடுதியில் எட்டாம் வகுப்பு மாணவனாக இருந்தபோது எனக்கு வயது 13. அங்கே மரத்தூண்களுடன் கூடிய ஒரு தாழ்வாரம் உண்டு. தூண்களில் சாய்ந்து படிப்போம். ஒரு விடுமுறை நாளில், ஒரு தூணை நோக்கிப் புத்தகத்துடன் சென்றேன். பின்னாலிருந்து வந்த இரண்டு மாணவர்கள், வேகமாகச் சென்று அந்தத் தூணைப் பிடித்துக்கொண்டனர். "அதோ அந்தத் தூணுக்குப் போ" என இருவரும் மாற்றி மாற்றி என்னைத் தள்ளினார்கள். இதுகூட எனக்குக் கிடைக்கவில்லையே என்ற வருத்தத்தில் 'கண்ணீர்க் கதை' என்ற தலைப்பில் சில வரிகள் எழுதினேன். இது, சிறுகதையா, தொடர்கதையா என அது முடிந்தது. பக்கத்தில் இருந்த மாணவர் அதைப் படித்துவிட்டு, "நீ கவிதை எழுதியிருக்கிறாய்" என்றார்.

பதினோராம் வகுப்பு படிக்கும்போது நீடாமங்கலம் இலக்கிய வளர்ச்சிக் கழகம் நடத்திய கவிதைப் போட்டியில் முதல்பரிசு கிடைத்தது. பன்னிரண்டாம் வகுப்பில் என் வகுப்பாசிரியர் கவிக்கோ ஞானச்செல்வன் மாணவர்கள் பங்குபெறும் கவிதைப் பட்டிமன்றம் நடத்தினார். அதில் என்னை நடுவராக அமர்த்தினார். அதில் கவிஞர் ஹாஜா கனி (ஆரூர் புதியவன்) ஓரணிக்குத் தலைவர். அது எனக்கு மிகுந்த ஊக்கமாக அமைந்தது. திருவாரூர் அருகில் காட்டூர் சென்றபோது ஒரு பட்டிமன்றத்துக்கு நான் நடுவராக இருந்தேன். அந்த ஊர் நூலகத்தில் கி.வா.ஜ. எழுதிய 'கவி பாடலாம்' என்ற நூலைக் கண்டேன். அந்த நூலை வெளியிட்ட பதிப்பகத்தின் முகவரியைக் குறித்துக்கொண்டேன். யாப்பு இலக்கணம் கற்க விரும்பினேன்.

பன்னிரண்டாம் வகுப்பு இறுதித் தேர்வு முடிந்தபின், சிதம்பரம் மெய்யப்பன் பதிப்பகத்தில் 'கவி பாடலாம்' புத்தகத்தை வாங்கி வந்தேன். எல்லா வகை யாப்பு முறைகளையும் கற்றேன். வெண்பா எனக்கு மிக எளிதாக வந்தது. அதற்குப் பிறகு என் கவிதைப் பயணம் வேகம் எடுத்தது. நானும் ஹாஜா கனியும் குறள் வெண்பாக்களில் கடிதம் பரிமாறிக்கொண்டோம். 12ம் வகுப்புக்குப் பிறகு நான் சென்னை திரும்பினேன்.

கே: சென்னையில் இலக்கிய வாழ்வு குறித்துச் சொல்லுங்கள்...
ப: சென்னையில்இலக்கியக் கூட்டங்களில் பங்கேற்றேன். 300க்கும் மேற்பட்ட கவியரங்குகளில் கவிதை வாசித்தேன். போட்டிகளில் வெற்றி பெற்றேன். வானொலி, தொலைக்காட்சி நிகழ்வுகளில் பங்கேற்றேன். என் இரு கவிதைகளை 32 மொழிகளில் மொழிபெயர்த்தேன்.

பரிசு பெறும் இளம் அண்ணா கண்ணன்



என் மன எழுச்சி, உச்சத்தில் இருந்தது. வள்ளுவரும் பாரதியாரும் பாரதிதாசனும் ஆண்டாளும் வள்ளலாரும் என் சக கவிஞர்கள் என்று கருதினேன். உங்களையும்விடச் சிறப்பாக எழுதுவேன் என உள்ளுக்குள் சவால் விட்டுக்கொண்டு அவர்களுடன் மோதினேன். சித்திரக்கவிதைகளைப் படிக்கும்போது, இதைவிட எளிமையாக எழுத முடியும் என்று கூறி, எழுதிக் காட்டினேன். யாப்பு வரிசையில் சாதனை செய்ய முயன்றேன். அதிக நீளமுள்ள ஆசிரியப்பா, உதடு ஒட்டாத பாடல், ஒட்டிய பாடல் என்றெல்லாம் முயன்றேன். வெண்பாவில் மாலைமாற்று எழுதினேன்.

பாரதியாரின் 'மலரின் மேவு திருவே' என்ற மெட்டில் மயங்கி, 'தூறல் வீழும் துறையில் நானோர் தோகை ஏந்தி வருவேன்' என்ற பாடலை எழுதினேன். பாரதிதாசனின் 'கனியிடை ஊறிய சுளையும் முற்றல் கழையிடை ஏறிய சாறும்' என்ற பாடலின் தாக்கத்தில் ஒரு பாடலை எழுதினேன். ஆண்டாளின் திருப்பாவைத் தாக்கத்தில் 'விழிப்பாவை' எழுதினேன். இப்படியாகத் தாக்கத்தில் எழுதியவை மிகச் சிலவே. இந்த முயற்சிகளில் நான் அவர்களை வெல்லவில்லை. ஆனால், மிக விரைவில், ஒரே பாய்ச்சலில் என் கவிதைகள் செவ்வியல் தன்மையை அடைந்துவிட்டன. இந்தச் 'சக கவிஞர்' என்ற மனநிலை எனக்கு மிகவும் பிடித்திருந்ததால், அப்படியே தக்கவைத்துக்கொண்டேன். இதனால் குரு-சீடன், முதியவர்-இளையவர் என்ற பாகுபாடுகளை உதறி, கால வேறுபாடுகளைக் கடந்து, அனைவரும் என் சகாக்கள் என்ற உணர்வைப் பெற முடிந்தது.

கே: முதல் கவிதை, முதல் கவிதைத் தொகுப்பு குறித்துச் சில வார்த்தைகள்...
ப: எனது கவிதைகள் முதலில், 'தமிழ்ப்பணி' இதழிலும் பிறகு 'கவிதை உறவு' இதழிலும் வெளிவந்ததாக நினைவு. 1996ல் என் 21 வயதில் 'பூபாளம்' என்ற தலைப்பில் என் முதல் கவிதைத் தொகுப்பினைச் சொந்தச் செலவில் வெளியிட்டேன். வைரமுத்து அணிந்துரை வழங்கியிருந்தார். அதற்கு நூலக ஆணை கிடைத்தது. அடுத்த ஆண்டே 'உச்சம் அடம் ஞானம் உயிர்ப்பு' என்ற தலைப்பில் அடுத்த நூலை வெளியிட்டேன். அதற்கு நூலக ஆணை கிடைக்கவில்லை. அதன் பிறகு சொந்தமாக நூல் வெளியிடும் முயற்சிகளை நிறுத்திக்கொண்டேன்.

கே: உங்களைக் கவர்ந்த கவிஞர்கள், எழுத்தாளர்கள் யார், யார்?
ப: வள்ளுவர், பாரதியார், ஆண்டாள் ஆகியோரை எனக்கு மிகவும் பிடிக்கும். வள்ளலாரைத் தனிக் கவிஞராக மட்டுமின்றி, ஓர் இயக்கத்தைத் தோற்றுவித்தவராக நேசிக்கிறேன். சங்க இலக்கியம், பக்தி இலக்கியம் தொடங்கி இக்கால இலக்கியம்வரை தமிழின் பெருமைகளாக நாம் சொல்லும் அனைத்தும் கவிஞர்களாலும் எழுத்தாளர்களாலும் சாத்தியமானவை. எழுதியவர் யார் என்பதைவிட, என்ன எழுதியுள்ளார் என்றே நான் பார்ப்பது வழக்கம். ஒரே படைப்பாளியிடமிருந்து மிகச்சிறந்த படைப்புகளும் சாதாரணப் படைப்புகளும் தோன்றலாம். ஒரே படைப்புக்குள்ளும் இன்னும் கேட்டால் ஒரே பாடலுக்குள்ளும் இப்படி நுணுக்கமாக நான் பார்ப்பதுண்டு. எனவே, குறிப்பிட்ட படைப்பாளரைப் பிடிக்கும் என்பதைவிட, அவரது படைப்புச் சார்ந்தே அணுகி வருகிறேன். சொல்லின் அல்லது ஒரு பாடலின் அதிர்வு எத்தகையது என்பதை நான் சுண்டிப் பார்ப்பதுண்டு. இக்காலப் படைப்பாளிகள் பலரும் என் நண்பர்கள். இவர்களுள் ஒருவரைச் சொல்லி, மற்றவர்களை விடுவது சரியாக இருக்காது. மேலும், எனக்கு மறதி மிகுதி. என் படைப்பு உள்படப் பலவும் என் நினைவில் தங்குவதில்லை.

மறவன்புலவு சச்சிதானந்தம் அவர்களுடன்



கே: தமிழ் மொழிப் பிரிவில் நீங்கள் கூகுள் போன்ற நிறுவனங்களில் பணியாற்றியிருக்கிறீர்கள். அவற்றில் உங்களுக்குச் சவாலாக இருந்தவை எவை, நீங்கள் சாதித்தவை எவை?
ப: இதழியலில் இருந்து சற்றே விலகி, மொழிபெயர்ப்புத் துறையில் நுழைந்தேன். இலக்கிய மொழிபெயர்ப்பு அல்ல, தொழில்நுட்ப மொழிபெயர்ப்பு. செல்பேசி, கணினி, இணையம், செயலி எனப் பலவற்றையும் அந்தந்த வட்டாரத்திற்கு ஏற்ப மொழி மாற்றியமைக்கும் பணியில் ஈடுபட்டேன். இண்டஸ் ஓ.எஸ்., ஃபிளிப்கார்ட் நிறுவனத்தின் போன்பே, கூகுள் போன்றவற்றில் வட்டாரமயமாக்கல் குழுவின் தலைவராகப் பல மொழிகளுக்கும் சேர்த்துத் தலைமை தாங்கினேன்.

கூகுளைப் பொறுத்தவரை, மூன்றாம் தரப்பு நிறுவனத்தின் ஊழியராக, கூகுள் அலுவலகத்தில் பணிபுரிந்தேன். மொழிபெயர்ப்புகளைச் சரிபார்ப்பது, திருத்துவது எனது பணி. புதிய சொற்களை உருவாக்குவது, இருக்கும் சொற்களை மேம்படுத்துவது சற்றே சவாலான பணி. சில சொற்களை மொழிபெயர்ப்பது கடினமாக இருக்கும். அப்படியே மொழிபெயர்த்தாலும் புரிந்துகொள்ள இயலாது. அவற்றை ஒலிபெயர்த்து எழுதுவோம். இந்த அனுபவத்தில் பல புதிய சொற்களை உருவாக்கியிருக்கிறேன் (Gated Community - அரண்சூழ் குடியிருப்பு; Opinion Maker – கருத்தாளுமை; Power point presentation - திரை உரை; pattern-matching - ஒத்தமைப்புப் பொருத்தம்; anonymization - பெயரின்மையாக்கல்; anonymize - பெயரில்லாமல் ஆக்கு).

கே: தமிழில் பல இணைய இதழ்கள் வெளிவருகின்றன. நீங்கள் நிறுவிய 'வல்லமை' இணைய இதழின் சிறப்பு, தனித்தன்மை என்று எதைச் சொல்வீர்கள்?
ப: தமிழில் ஆய்வுக் கட்டுரைகளை வெளியிடும் ஆய்விதழ்களில், சக ஆய்வாளர்கள் மதிப்பாய்வு செய்து, அவர்களின் கருத்துகளுடன் வெளிவரும் முதல் இதழ், வல்லமையே (First Peer Reviewed Journal in Tamil). பல்கலைக்கழக மானியக் குழுவின் அங்கீகாரத்தை இரண்டு ஆண்டுகள் தொடர்ந்து பெற்ற இதழ். ஆய்வாளர்களிடம் தொகை கேட்காமல், ஆய்வுக் கட்டுரையின் தரத்தை மட்டுமே கருதி, கட்டுரைகளை வெளியிட்டு வருகிறோம். வாரந்தோறும் ஒருவரைத் தேர்ந்தெடுத்து, வல்லமையாளர் என்ற விருதினை வழங்கி வருகிறோம். இவ்வகையில் 300 பேர்களைக் கௌரவித்துள்ளோம். சிறுகதைப் போட்டி, கட்டுரைப் போட்டி, கவிதைப் போட்டி, நூல் விமர்சனப் போட்டி, கடித இலக்கியப் போட்டி எனப் பலவற்றை நடத்தியுள்ளோம். 2010ஆம் ஆண்டு வல்லமையைத் தொடங்கினேன். ஓராண்டுக்குப் பிறகு இதை ஈரோட்டைச் சேர்ந்த எழுத்தாளர் பவளசங்கரியிடம் ஒப்படைத்தேன். அவர் ஏழு ஆண்டுகள், இதைச் சிறப்புற நடத்தினார். கடந்த இரண்டு ஆண்டுகளாக நான் நடத்தி வருகிறேன். இப்போது வல்லமை கல்வி, ஆராய்ச்சி அறக்கட்டளையாக முன்னெடுத்து வருகிறோம். இதற்கு நன்கொடைகளை வரவேற்கிறோம்.

எனது ஆய்வு
முனைவர் பட்டத்துக்காகத் 'தமிழில் மின்னாளுகை' என்ற தலைப்பில் ஆராய்ந்தேன். அரசுகளின் இணையத்தளங்கள், செயலிகள், அரசுகள் காகிதங்களைச் சார்ந்திருக்கும் நடைமுறை, மின்னஞ்சல், டெலி கான்ஃபரன்ஸ், வீடியோ கான்ஃபரன்ஸ் போன்றவற்றின் பயன்பாடு, மின்னாளுகையை ஏற்பதில் அரசு ஊழியர்களின் தயக்கம், பயோ மெட்ரிக் முறை, மானியத் தொகையை நேரடியாக வங்கிக் கணக்கில் செலுத்துவது, அரசு அலுவலங்களில் கணினியும் சர்வரும் செயல்படாத போது நேரும் தாமதங்கள் என மின்னாளுகையின் அத்தனை பரிமாணங்களையும் இந்த ஆய்வில் பதிவு செய்துள்ளேன்.

தமிழக அரசு, புதுச்சேரி அரசு, மத்திய அரசு ஆகியவற்றின் இணையத்தளங்கள், இலங்கை, சிங்கப்பூர், அமெரிக்கா, நியூசிலாந்து உள்ளிட்ட பல நாட்டு அரசுகளின் இணையத்தளங்களை ஆராய்ந்தேன். அவற்றின் சிக்கல்களை, சிறப்புகளை எடுத்துரைத்தேன். தமிழக அரசின் 436 இணையத்தளங்களுள் 6 சதவிகிதம் மட்டுமே தமிழில் உள்ளன என்பதைச் சுட்டினேன். தமிழக அரசுத் தளம் உள்பட பலவும் வெவ்வேறு எழுத்துருக்களையும் எழுத்து முறைகளையும் பின்பற்றின. யுனிகோடு என்ற ஒருங்குறிக்கு மாறுவதற்கு மத்திய அரசு அறிவிப்பு வெளியிட்டுள்ளதை எடுத்துக் காட்டினேன். அதை அடிப்படையாக வைத்தே தமிழக அரசும் அரசாணை வெளியிட்டது.

எனது முனைவர் பட்ட ஆய்வு, இன்னும் நூலாக வெளிவரவில்லை. மின்னூலாகவேனும் வெளியிட எண்ணியுள்ளேன்.முனைவர் அண்ணா கண்ணன்.


கே: முகநூலில் நீங்கள் தொடர்ந்து எழுதி வந்த 'அகமொழி' பலரையும் சிந்திக்க வைத்த ஒன்று. அதற்குப் பின்புலம் ஏதேனும் உள்ளதா, அது நூலாக வெளிவந்துள்ளதா?
ப: பள்ளிச் சிறுவனாக இருந்தபோது என் அம்மா கத்தரித்துத் தந்த ஏடுகளின் மூலைகளில் வெளிநாட்டு அறிஞர் பொன்மொழிகள் காணக் கிடைக்கும். படிக்க ஆச்சரியமாக இருக்கும். இதேமாதிரி நாமும் யோசித்திருக்கிறோமே என நினைப்பேன். ஆனால், அப்போது என் சிந்தனைகளை எழுதி வைக்கவில்லை. 2010 காலக்கட்டத்தில் அண்ணாகண்ணன் மொழி என்பதன் சுருக்கமாக அகமொழியை வரிசையிட்டு எழுதத் தொடங்கினேன். இன்று 1200க்கும் மேல் அது தொடர்கிறது.

நாம் உடலால் வாழ்வது, சிறிய பகுதியே. ஆனால், மனத்தால், சிந்தனைகளால் இன்னும் பல மடங்கு வாழ்கிறோம். தோன்றும் சிந்தனைகளை உலக நன்மைக்காகப் பதிந்து வைக்கிறேன். அகமொழி நல்லதிர்வுகளைத் தருவதை உணர்ந்திருக்கிறேன். எத்தகைய சிந்தனைகள் நம்மிடமிருந்து வெளிவந்திருக்கின்றன என நினைத்துப் பெருமிதம் கொள்வேன். இதை இனிமேல்தான் நூலாக்க வேண்டும்.

முத்து நெடுமாறன் அவர்களுடன்



கே: கிரந்த வார்த்தைகளைப் பயன்படுத்தித் தமிழில் எழுதுவது, அதற்குப் பதிலாக வேறு தமிழ் எழுத்துக்களைப் பயன்படுத்தித் தனித்தமிழில் எழுதுவது என்பது குறித்து உங்கள் கருத்து என்ன?
ப: கிரந்த எழுத்துகளைத் தவிர்ப்பது குறித்து விரிவாக என் கருத்துகளை நோக்கரில் எழுதியுள்ளேன். இக்காலத்தில் எட்டுத் திக்கிலிருந்தும் தமிழுக்குள் புதிய சொற்களும் ஒலிகளும் புகுந்து வருகின்றன. ஷா, ஷாஜஹான், ஹஜ் ஆகியவற்றை எப்படி எழுதுவது? ராஜாஜி, காமராஜர், எம்.ஜி. ராமச்சந்திரன், ஜானகி, ஜெயலலிதா உள்ளிட்ட தமிழக முதலமைச்சர்களின் பெயர்களிலேயே கிரந்த எழுத்துகள் உள்ளன. எதிர்க்கட்சித் தலைவர் ஸ்டாலின். முந்தைய எதிர்க்கட்சித் தலைவர், விஜயகாந்த். ரஜினி, கமல்ஹாசன், விஜய், அஜீத், தனுஷ், திரிஷா… எனத் திரை நட்சத்திரங்கள் பலரின் பெயர்களில் கிரந்தம் உள்ளது. ஊர்ப்பெயர்கள் பலவற்றிலும் இதே நிலை. நாம் பயன்படுத்தும் பொருள்கள் பலவற்றின் பெயர்களும் இதே நிலை. உலகமயத்தின் விளைவாக எண்ணற்ற சொற்கள் புகுந்த வண்ணம் உள்ளன. இவ்வளவு ஆழமாகக் கிரந்தப் பயன்பாடு உள்ள நிலையில் இதைத் தவிர்க்க வேண்டும் என நினைப்போர், பயனரிடம் செல்வதற்கு முன்பாக, அரசிடம் செல்ல வேண்டும். அரசு இதை ஏற்க முன்வந்தால், அடுத்து இதர மக்களிடம் செல்லலாம். ஆனால், கிரந்தத்தைப் பயன்படுத்துவதால் ஒருவரைத் தமிழுக்கு எதிரி என நினைக்கக்கூடாது. இந்தச் சில்லறைச் சண்டைகளால், தமிழில் முக்கியமான விவாதங்களுக்கு இடம் இருப்பதில்லை. முதன்மையான பணிகளில் நாம் கவனம் செலுத்துவதில்லை. தமிழின் வளர்ச்சி, இதனால் தடைப்படுகிறது.

கே: பல்வேறு பிழைகளுடன் இன்றைக்குப் பல படைப்புகள் வருகின்றன. இதனைத் தவிர்க்க என்ன செய்யலாம்?
ப: செம்மையாக்கம் செய்வதே இதற்குச் சரியான தீர்வு. தாங்களாகச் செய்ய இயலாதோர், கட்டணம் செலுத்தி இந்தச் சேவையைப் பெறலாம். செலவு செய்ய இயலாதோர், மீண்டும் மீண்டும் படித்துக் கற்கலாம். ஒவ்வொரு நாளிதழும் பதிப்பகமும் பிழை திருத்துபவரைக் கொண்டிருப்பது போதாது. அவர்களுக்குத் தேவை, மதிப்பாய்வாளர் (Reviewer). படைப்பினை முதலில் மதிப்பாய்வு செய்த பிறகு அச்சுக்குச் சென்றால், பெரும்பாலான சிக்கல்கள் தீ்ர்ந்துவிடும். ஆனால், அப்படி ஒரு பிரிவே தமிழில் உருவாகவில்லை.

சுவரொட்டி, பதாகை போன்றவற்றில் வரும் பிழைகளைத் தவிர்க்க, என்னிடம் திட்டம் உண்டு. முதலில் அவற்றை அச்சிடும் அச்சகங்களைப் பிடிக்கவேண்டும். ஒவ்வோர் அச்சகமும் உள்ளடக்கத்தைச் சரிபார்த்த பிறகே அச்சிடுவோம் என்ற முறையைக் கடைப்பிடித்தால், பிழைகளை முதலிலேயே தடுத்துவிடலாம். அச்சகங்கள், நோக்கரை அணுகினால், உடனுக்குடன் சரிபார்த்துத் தருவோம்.

கே: நீங்கள் எழுதிய நூல்கள் குறித்து, பெற்ற விருதுகள் குறித்துச் சில வார்த்தைகள்...
ப: கவிதைகள், சிறுவர் நூல்கள், வரலாறு, ஆய்வு, இதழியல், மொழிபெயர்ப்பு ஆகிய பிரிவுகளில் 20 நூல்கள் வெளிவந்துள்ளன. பள்ளி, கல்லூரிக் காலத்தில் பரிசுகள் பெற்றுள்ளேன். நடுவராகப் பொறுப்பேற்ற பிறகு, போட்டிகளில் கலந்துகொள்வதில்லை. உங்களால் பயன்பெற்றேன் என யாரேனும் சொன்னால், அதுவே எனக்கு விருது.

வெங்கட் சாமிநாதனுடன்



கே: இப்போது ஏன் அதிகம் கவிதைகள் எழுதுவதில்லை?
ப: ஏன் எழுதுகிறோம் என்ற கேள்வி ஒருநாள் எழுந்தது. இந்த எழுத்தினால் பயன் ஏதும் இல்லை என மனத்தின் ஒரு பக்கம் சொன்னது. புத்தகம் விற்பதில்லை. படிப்பவர்களும் குறைவு. அப்படியே படித்தாலும் அவரிடத்தில், அவர் வாழ்க்கையில் இந்தக் கவிதை ஏதும் மாற்றத்தை உண்டாக்குகிறதா என்றால் இல்லை. கவிதை, பொழுதுபோக்காகப் படிக்கிறார்கள். நன்றாக இருக்கிறது என்போரும் அதற்குமேல் எதுவும் செய்வதில்லை. ஒருவரின் மனத்திற்குள் புகுந்து, ஆழமாகச் சென்று தாக்கம் செலுத்துவது அரிதாகவே நிகழ்கிறது. அதுவும் நிலையாக இல்லாமல், குறுகியகாலத் தாக்கமாகவே உள்ளது. என் கவிதையால், எழுத்தால் பணம் ஈட்ட இயலவில்லை. வேலைக்கு வேறு எங்கோ ஓடவேண்டியிருக்கிறது. இதனால் என்ன மதிப்பை நீ பெற்றாய்? இது உனக்கும் உதவவில்லை, பிறருக்கும் உதவவில்லை. நீ எதற்காக எழுதவேண்டும் என்ற குரல், எனக்குள் கேட்டது. எழுதியது எல்லாம் போதும் என்று என்னைச் சுருக்கிக்கொண்டேன். அதற்குப் பிறகு யாராவது கேட்டால் மட்டுமே, அதுவும் அவசியம் என்றால் மட்டுமே எழுதுவது என்று வைத்துக்கொண்டேன்.

ஆனால், எழுத்தைக் குறைத்துக்கொண்டாலும் செயலைக் குறைத்துக்கொள்ளவில்லை. நான் வேலையிழந்த ஒவ்வொரு முறையும் புதிதாக ஒன்றைத் தொடங்கினேன். இப்படித்தான் வல்லமை மின்னிதழைத் தொடங்கினேன், அகமொழிகளை எழுதத் தொடங்கினேன், நோக்கரைத் தொடங்கினேன். இந்தச் சமுதாயம் எனக்கு உரியதைக் கொடுக்காவிட்டாலும் நான் இந்தச் சமுதாயத்துக்குக் கொடுப்பேன். தெய்வமே, அண்ட சராசரமே, என்னைக் கொடுக்கும் நிலையில் எப்போதும் வைத்திரு என்று கேட்டுக்கொள்வேன்.

கே: வலம்புரி ஜான் தொடங்கி மறவன்புலவு சச்சிதானந்தம்வரை பலருடன் நெருங்கிப் பழகியிருக்கிறீர்கள். அவர்களிடமிருந்து நீங்கள் கற்றதும், பெற்றதும் என்ன?
ப: வலம்புரி ஜானிடம் என் இரண்டாவது கவிதை நூலுக்கு அணிந்துரை கேட்டுச் சென்றேன். அணிந்துரை தந்த பிறகு, நான் சொல்லச் சொல்ல எழுத எனக்கு உதவியாளர் தேவை, வருகிறீர்களா எனக் கேட்டார். இசைந்தேன். ஓரிரு மாதங்கள் அவருடன் இருந்தேன். இது எனக்கு ஏற்ற பணியில்லை எனப் பின்னர் விலகினேன். மறவன்புலவு சச்சிதானந்தன் அவர்களுடன் கால் நூற்றாண்டாக நட்பு தொடர்கிறது. எனக்குப் பல நேரங்களில் வழிகாட்டுபவர் அவர். உரியவர்களை அறிமுகப்படுத்துபவர், உற்சாகம் ஊட்டும் நண்பர். வெங்கட் சாமிநாதன் உள்படப் பெரியவர்கள் பலருடன் எனக்கு நட்பு இருந்தது. நான் அனைவரையும் என் நண்பர்களாகவே கருதுகிறேன். முன்னர் இருந்தது போலவே இப்போதும் இருக்கிறேன். இவர்களிடமிருந்து பெரிதாக எதையும் கற்றதாக நினைக்கவில்லை. ஆசிகளைப் பெற்றதாக வேண்டுமானால் கொள்ளலாம்.

இதழியல் அனுபவங்கள்
27 வயதில் அமுதசுரபிக்கு ஆசிரியரானேன். என்மீது நம்பிக்கை வைத்து, பதிப்பாளர் ஏ.வி.எஸ். ராஜா இந்த நல்வாய்ப்பினை வழங்கினார். அதுவரை கையால் படங்களை வெட்டி, ஒட்டிப் பக்க வடிவமைப்பு செய்துகொண்டிருந்தார்கள். அதைக் கணினி வழி வடிவமைப்புக்கு மாற்றினேன். அமுதசுரபிக்கு மின்னஞ்சல் முகவரி தொடங்கி, அதை இணையத்திலும் வெளியிட்டேன். வார சுரபி, சித்திர சுரபி எனப் புதிய பகுதிகளை தொடங்கினேன். கடிதம் எழுதும் வாசகர்களுக்கு அஞ்சல் அட்டையை இலவசமாக அனுப்பினேன். தெளிவாக எழுதும் மருத்துவர்களைக் கண்டறிந்து ஊக்குவிக்கக் கையெழுத்துப் போட்டியை முதல் முறையாக நடத்தினேன். இதில் நோயாளிகளே மருந்துச் சீட்டைப் படமெடுத்து அனுப்பினார்கள். ஒவ்வோர் இதழையும் சிறப்பிதழாகத் தயாரித்தேன். தீபாவளி மலர்களைத் தயாரித்ததோடு, அமுதசுரபி பதிப்பகத்தின் வாயிலாகப் புதிய நூல்களை வெளியிட்டோம். அதற்காக எழுத்தாளர்களோடு ஒப்பந்தம் மேற்கொண்டு, கையொப்பமிடும் வழக்கத்தைக் கொண்டுவந்தேன். இந்தப் பெருமை அனைத்தும் எனக்கு முழுச் சுதந்திரம் அளித்த ஏ.வி.எஸ். ராஜாவையே சேரும்.

அமுதசுரபியிலிருந்து சிஃபிக்குச் சென்றேன். இங்கும் 100க்கும் மேலான சிறப்பிதழ்களைத் தயாரித்தேன். எழுத்தில் தொடர்கள் வெளியிட்டது போக, பல்லூடகப் பத்திகளை அறிமுகப்படுத்தினேன். கனடாவிலிருந்து ஆர்.எஸ். மணி ஒரே இடுகையில் எழுத்து, ஓவியம், புகைப்படம், வீடியோ ஆகியவற்றை உருவாக்கி அனுப்ப, அவற்றை ஒரே பக்கத்தில் வெளியிட்டோம். 'நாடுகள்தோறும் தமிழ்' என்ற சிறப்பிதழில் 16 நாடுகளைச் சார்ந்தோரிடமிருந்து கட்டுரைகளைப் பெற்று வெளியிட்டேன். தமிழ் சிஃபியின் வாசகர் எண்ணிக்கையை மும்மடங்கு உயர்த்தினேன். 2005ம் ஆண்டின் சிறந்த இணைய இதழாகத் தமிழ் சிஃபியை எழுத்தாளர் சுஜாதா தேர்ந்தெடுத்தார்.

சென்னை ஆன்லைனில் பணியாற்றிபோது, மின் அரட்டை, குரல் அரட்டை வழியே பேட்டி எடுத்தேன். உரையாடலை அப்படியே பதிவுசெய்து வெளியிட்டேன். இணையவழிக் கல்வியின் வளர்ச்சியாக, இரு பள்ளிகளில் அரங்கில் பெரிய திரையமைத்து, ஓரிடத்தில் பாடம் நடத்துவதை இன்னோர் இடத்தில் இருக்கும் மாணவர்கள் பார்த்து, கேட்டு, கேள்வி எழுப்பும் முறையை அறிமுகப்படுத்தினேன். வெப்துனியா, யாஹூ ஆகியவற்றிலும் ஆசிரியராகப் பணியாற்றியிருக்கிறேன். முனைவர் அண்ணா கண்ணன்.


கே: உங்கள் குடும்பம் குறித்து, உங்களுக்கு உறுதுணையாக இருப்பவர்கள் குறித்துச் சில வார்த்தைகள்...
ப: என் அம்மா சௌந்திரவல்லி, என் வழிகாட்டி. கடுசிக்கனம். அவரிடமிருந்தே எளிமையைக் கற்றேன். என் குடும்பத்தினருக்கு என் பணிகள் குறித்து முழுவதும் தெரியாது. ஆனால், முழுச் சுதந்திரத்துடன் என் போக்கில் விட்டுவிட்டார்கள். என் மனைவி ஹேமமாலினி, என்னைப் புரிந்துகொண்டவர். ஆதரவாக இருக்கிறார். புதிய யோசனைகளை அவரிடம் சொல்வேன். சொன்னால் போதாது. செய்து காட்டுங்கள் எனத் தூண்டுவார். எனக்குப் பல நேரங்களில் பலரும் உறுதுணை புரிந்திருக்கிறார்கள். ஏ.வி.எஸ்.ராஜா என் மீது நம்பிக்கை வைத்து, ஆசிரியப் பொறுப்பினை அளித்தார். யாஹூவிலிருந்து என்னைத் தேடிப் பணி வாய்ப்பு வந்தது. நிறைவான குடும்பம் அமைந்தது. ஏதேனும் வாய்ப்புகள் வந்தவண்ணம் உள்ளன. என் அனைத்துப் பணிகளும் என்னைச் சுற்றியுள்ள பலரின் ஒத்துழைப்பினாலேயே நிறைவேறியுள்ளன. என் வாழ்வில் பல நேரங்களில் எனக்குத் தேவையான உதவிகள் தாமாகவே கிடைத்துள்ளன. நினைத்தது யார் மூலமாகவாவது நிறைவேறுகின்றது. இவற்றைப் பார்க்கும்போது, தனியாக நாம் மட்டும் செய்வதாகத் தெரியவில்லை. பணிகளை நிறைவேற்றுவதில் நாமும் ஒரு கருவியாக இருக்கிறோம் என்பதே உண்மை. எனவே, இறைவன் திருமுன் நின்றால், எல்லோரும் நன்றாக இருக்க வேண்டும் என்பதே என் வேண்டுதல்.

அன்னை சௌந்திரவல்லியுடன்



கே: தற்போது நீங்கள் செய்துவரும் பணிகள், ஆய்வுகள் குறித்துச் சொல்லுங்களேன்...
ப: கட்டற்ற மனநிலையில் இருக்கிறேன். என் படைப்பாற்றலை எழுத்தோடும் கவிதையோடும் மட்டும் நிறுத்த விரும்பவில்லை. என் படைப்பூக்கம், எல்லாத் துறைகளிலும் பாய்கின்றது. புதிய புதிய சிந்தனைகள், யோசனைகள் பெருகிய வண்ணம் உள்ளன. சிக்கல்களுக்கு நல்ல தீர்வுகள் தோன்றிய வண்ணம் உள்ளன. புதிய கண்டுபிடிப்புகளுக்கான கருக்கள் எழுந்தவண்ணம் உள்ளன. சமுதாயத்திற்குத் தேவையான பற்பல திட்டங்கள் கைவசம் உள்ளன. ஒரு சிலவற்றை அகமொழி என்றோ, அண்ணாகண்ணன் யோசனைகள் (Annakannan Ideas) என்றோ எழுதி வருகிறேன். மேலும் பலவற்றை எழுத, பதிவுசெய்ய, இவற்றை நிறைவேற்றப் போதிய நேரம் கிடைக்கவில்லை. இதற்கிடையே நான் பொருளீட்ட வேண்டிய தேவையும் உள்ளது. அதற்காக அவ்வப்போது மொழிபெயர்ப்புப் பணிகளையும் மொழியியல் பணிகளையும் மேற்கொண்டு வருகிறேன்.

நோக்கர்
தமிழில் பிழைகள் எல்லையில்லாமல் பெருகி வருகின்றன. இவற்றை ஆங்காங்கே சுட்டிக் காட்டினாலும் உரியவர்களுக்குச் சென்று சேர்வதில்லை. ஒரேவகைப் பிழைகள் ஆண்டுக் கணக்காகத் தொடர்கின்றன. இவற்றைத் திருத்திச் செம்மைப்படுத்தவும் சிறந்தவற்றைப் பாராட்டவும் 'நோக்கர்' என்ற முகநூல் குழுவைத் தொடங்கி, நடத்தி வருகிறேன். அச்சிதழ்கள், இணைய இதழ்கள், செயலிகள், வானொலி, தொலைக்காட்சிகள், சுவரொட்டிகள், பதாகைகள், பெயர்ப் பலகைகள், விளம்பரங்கள், நூல்கள், பாட நூல்கள் என நம்மைச் சுற்றிலும் உள்ள அனைத்திலும் காணும் பிழைகளை இந்தக் குழுவில் சுட்டிக் காட்டித் திருத்துகிறோம். சிறப்பான சொல்லாக்கங்களைப் பாராட்டுகிறோம். சுட்டிக் காட்டிய பிறகு பலரும் தங்கள் பிழைகளைத் திருத்தியிருக்கிறார்கள்.

அடுத்த கட்டமாக, நோக்கர்.காம் என்ற வலைத்தளத்தை உருவாக்கி வருகிறோம். முகநூலில் இல்லாதவர்களும் இந்தப் பக்கத்தை அணுகலாம். திருத்தங்கள், விளக்கங்கள் எல்லாவற்றையும் வலைத்தளத்தில் ஆவணப்படுத்தி வருகிறோம். நோக்கர் சார்ந்து மொழியியல் கருவிகள் பலவற்றை உருவாக்கத் திட்டம் உண்டு. தமிழை அடுத்து, ஆங்கிலத்திலும் இன்னும் சில மொழிகளிலும் நோக்கரை விரிவுபடுத்தி வருகிறோம். முனைவர் அண்ணா கண்ணன்.


கே: உங்கள் எதிர்காலத் திட்டங்கள் என்ன?
ப: வல்லமை புத்தாக்க நடுவம் (Vallamai Innovation Center) ஒன்றை உருவாக்க வேண்டும். பள்ளி, கல்லூரிகளுக்குச் செல்லவேண்டும். அறிவியல், தொழில்நுட்பம், சமூகவியல் என அனைத்துத் துறைகளிலும் புதிய யோசனைகளை வரவேற்க வேண்டும். தகுந்தவற்றுக்குக் காப்புரிமை பெற முயலவேண்டும். வணிகத் திட்டங்களைத் தனியே முன்னெடுக்க வேண்டும். இந்த உலகின் சிக்கல்கள் அனைத்தையும் தீர்க்கவேண்டும் என்ற பேராவல் உள்ளது. நிகழ்காலத்திலும் எதிர்காலத்திலும் கோடிக்கணக்கானோர் மீது தாக்கம் செலுத்தக்கூடிய அற்புதத் தீர்வுகளைப் படைக்க வேண்டும். இந்தக் கண்டுபிடிப்புகள், ஒரு பேரலையாக உலகம் முழுவதையும் தழுவ வேண்டும். மின்சாரத்தைப் போல, இணையத்தைப் போல, தவிர்க்க முடியாத சக்தியாக நாம் உருவெடுக்க வேண்டும். இதற்கு நல்லோர், வல்லோர் அனைவரின் ஒத்துழைப்பையும் வேண்டுகிறேன். என்னை annakannan@gmail.com என்ற மின்னஞ்சல் முகவரியில் தொடர்புகொள்ளலாம்.
மின் உரையாடல்: அரவிந்த் சுவாமிநாதன்
Share: 




© Copyright 2020 Tamilonline