Thendral Audio Advertise About us
New User? | Forgot Password? | Email: Password: Login
Current Issue | Previous Issues | Author Index | Category Index | Organization Index | E-Magazine | Classifieds | Digital Downloads
By Category:
சின்னக்கதை | சமயம் | சினிமா சினிமா | இளந்தென்றல் | கதிரவனை கேளுங்கள் | ஹரிமொழி | நிகழ்வுகள் | மேலோர் வாழ்வில் | மேலும்
December 2019 Issue
தென்றல் பேசுகிறது | நேர்காணல் | மாயாபஜார் | சினிமா சினிமா | சின்னக்கதை | அன்புள்ள சிநேகிதியே | மேலோர் வாழ்வில் | பொது
சூர்யா துப்பறிகிறார் | Events Calendar | ஹரிமொழி | சிறுகதை | சமயம் | சாதனையாளர் | அஞ்சலி | விலங்கு உலகம் | வாசகர் கடிதம்
எழுத்தாளர் | இளந்தென்றல் | நிகழ்வுகள்
Tamil Unicode / English Search
ஹரிமொழி
இந்திரலோகத்தில் லோமச முனிவர்
- ஹரி கிருஷ்ணன்|டிசம்பர் 2019|
Share:
அர்ஜுனனை, 'பேடியாகக் கடவாய்' என்று ஊர்வசி சபிக்க, அதன் கால எல்லையை இந்திரன் ஓராண்டாகக் குறைத்தது மட்டுமல்லாமல், அந்த ஓராண்டுக் காலத்தையும், வனவாசத்தில் மறைந்து வாழவேண்டிய அக்ஞாதவாச காலமான பதின்மூன்றாம் ஆண்டில் பயன்படுத்திக்கொள்ளலாம் என்று இந்திரன் மாற்றித் தந்தார் எனப் பார்த்தோம். இது நடந்து சிறிதுகாலம் கழித்து எல்லா உலகங்களிலும் சஞ்சரிப்பவரான லோமசர் என்ற ரிஷி இந்திரலோகத்துக்கு வந்தார். அவர் தேவேந்திரனை வணங்கிய போது, அவனுடன் ஒரே ஆசனத்தில், அதன் மறுபாதியில் அர்ஜுனன் வீற்றிருக்கக் கண்டார். 'தேவேந்திரனுடைய ஆசனத்தில் அவனுக்குச் சமமாக, அதுவும் ஒரே ஆசனத்தின் ஒரு பாதியைப் பகிர்ந்துகொண்டு மனிதனான அர்ஜுனன் வீற்றிருப்பது எப்படி என்ற அவருக்கு ஆச்சரியம் உண்டானது. "க்ஷத்திரியனான அர்ஜுனன் இந்திராசனத்தை எவ்விதம் அடைந்தான்? இவனுடைய புண்ணிய கர்மம் என்ன? (இவனால்) எந்த லோகங்கள் ஜயிக்கப்பட்டன? தேவர்களால் நமஸ்கரிக்கப்பட்ட ஸ்தானத்தை அவன் இவ்விதம் அடைந்திருக்கின்றானே' என்று அவருக்கு எண்ணமுண்டாயிற்று" என்கிறது வியாச பாரதம். (வனபர்வம், இந்திரலோகாபிகமன பர்வம், அத். 45, பக். 174).

லோமச முனிவரின் எண்ண ஓட்டத்தை அறிந்துகொண்ட இந்திரன் புன்முறுவல் பூத்தான். "தேவரிஷியே! நீங்கள் அறிய விரும்புவதை என்னிடத்தில் கேட்கலாம். என்னருகில் அமர்ந்துள்ள இவன் க்ஷத்திரியத் தன்மையோடு பிறந்தவன் என்றாலும், குந்தியிடத்திலே எனக்குப் பிறந்த என் மகன். இவனை நீங்கள் தெரிந்துகொள்ளாதது ஆச்சரியமே. வேறொரு காரியத்துக்காக அஸ்திரங்களைப் பெறவேண்டும் என்று இங்கே வந்திருக்கிறான். என்னுடைய வேண்டுகோளின் பேரில் பூபாரத்தைத் தொலைக்க நர-நாராயணர்கள் உலகத்திலே அவதரித்தார்கள். கண்ணனே அந்த நாரணன். இந்த அர்ஜுனன்தான் அந்த நரன். விஷ்ணுவான கண்ணனும், ஜிஷ்ணுவான அர்ஜுனனும் கங்கை பெருகுகின்ற தலமான பதரியில் தவமியற்றியவர்கள்” என்றெல்லாம் அர்ஜுனனுடைய பெருமையை லோமசருக்குச் சொன்னான் இந்திரன். அர்ஜுனனை இந்திரலோகத்துக்கு வரவழைத்ததன் காரணத்தையும் சொன்னான்.

"பிரமன் முதலான தேவர்களிடமிருந்து அளவுக்கதிகமான வரங்களைப் பெற்ற இந்த நிவாதகவசர்கள் என்னும் அசுரர்களைக் கொல்ல தேவர்களாலும் முடியாது. நாராயணான கண்ணனாலோ அல்லது நரனான இந்த பார்த்தனாலோ மட்டும்தான் அவர்களை அழிக்க முடியும். அளவுகடந்த ஆற்றலுள்ள கண்ணனை அற்பமான காரியங்களுக்குப் பயன்படுத்துவது தகாது. நிவாதகவசர்களைக் கொல்லும் முயற்சியில் அவர் ஈடுபட்டால், அந்த முயற்சியாலே உலகமேகூட அழிந்துவிடும். எனவே இப்படிப்பட்ட சிறிய விஷயங்களில் அவரை ஈடுபடுத்துவது தகாது. எனவேதான் அவருக்கு ஈடான இந்தப் பார்த்தனை நிவாதகவசர்களை அழிப்பதில் ஈடுபடுத்துகிறேன். இவன் அவர்களைக் கொன்றபிறகு மனிதர்களின் உலகுக்குத் திரும்புவான்' என்று இந்திரன் லோமசரிடத்திலே சொன்னான்."

"லோமச ரிஷியே, நீங்கள் திரும்பிச் செல்லும்போது காம்யக வனத்தில் வசிக்கிற தர்மபுத்திரனைச் சந்திக்கவேண்டும். சந்தித்து, 'அர்ஜுனனைப் பற்றி எந்தக் கவலையும் கொள்ளவேண்டாம்' என்று அவரிடத்திலே சொல்லுங்கள். என்னதான் ஆற்றல் மிக்கவனானாலும் பீஷ்மர், துரோணர் போன்ற வீரர்களை எதிர்கொள்ள வேண்டுமானால் அர்ஜுனனுக்கு திவ்யாஸ்திரங்களும் அவற்றில் பயிற்சியும் வேண்டும். அர்ஜுனனுக்கு என்னென்ன அஸ்திரங்களெல்லாம் தேவைப்படுமோ அவையும், அவற்றில் பயிற்சியும் இங்கே தரப்பட்டன. இவற்றைப் பயின்ற அர்ஜுனன், பாரத யுத்தத்துக்கு ஒரு முன்னோட்டமாக நிவாதகவசர்களோடு போர் தொடுக்கப் போகிறான் என்பதையெல்லாம் யுதிஷ்டிரருக்குத் தெரிவியுங்கள். ஆயுதப் பயிற்சி மட்டுமல்லாமல் அர்ஜுனன் தேவலோகத்து ஆடல்-பாடல் கலைகளிலும் தேர்ச்சியடைந்திருக்கிறான் என்றும் சொல்லுங்கள். இப்போது பூவுலகில் வசிக்கும் மற்ற பாண்டவர்கள் நால்வரையும் தீர்த்த யாத்திரைக்குச் செல்லும்படி நான் சொன்னதாக அவரிடத்தில் கூறுங்கள்” என்றெல்லாம் இந்திரன் லோமசரிடத்திலே சொல்லியனுப்பினான். "Verily as the illustrious Hari had slain the Nagas in the great lake, he, by sight alone, is capable of slaying those Asuras called the Nivatakavachas, along with their followers. But the slayer of Madhu should not be urged when the task is insignificant. A mighty mass of energy that he is. It swelleth to increasing proportions, it may consume the whole universe. This Arjuna also is competent to encounter them all, and the hero having slain them in battle, will go back to the world of men." என்று இந்த இடத்தை கிஸாரி மோகன் கங்கூலி மொழிபெயர்க்கிறார்.
இந்திரனுடைய இந்தப் பேச்சில் குடாகேசன் என்று அர்ஜுனன் குறிப்பிடப்படுவான். அர்ஜுனன், ஃபல்குணன், ஜிஷ்ணு, கிரீடி, ஸ்வேதவாஹனன், பீபத்ஸு, விஜயன், கிருஷ்ணன், ஸவ்யஸாசி, தனஞ்செயன் என்று அர்ஜுனனுக்குரிய பத்துப் பெயர்களுக்குமேல் பாரதத்தில் காணப்படும். 'குடக் ஈஸன் என்று பிரிந்து, உறக்கத்தை வென்றவன் என்ற பொருளையும் குடகேசன் என்று பிரிந்து (குடம்போல) சுருண்ட கேசத்தை உடையவன் என்றும் பொருள் தரும் என்று சின்மயானந்தர் தன் பகவத்கீதை விளக்கத்தில் சொல்கிறார். விராட பர்வத்தில் உத்தர குமாரனிடத்திலே தன்னுடைய பத்துப் பெயர்களையும் சொல்லி, இந்தப் பெயர்களுக்கான காரணங்களையும் அர்ஜுனனே சொல்லப் போகிறான். இவற்றை அப்போது காண்போம். பின்னர் லோமசர் பூலோகத்துக்கு வந்து காம்யக வனத்தில் யுதிஷ்டிரரைச் சந்தித்து எல்லா விவரங்களையும் தெரிவித்தார்.

இதற்கிடையில் அர்ஜுனன் இந்திர லோகத்துக்குச் சென்றதையும் அங்கே ஆயுதங்களைப் பெற்று அவற்றில் பயிற்சியைப் பெற்றான் என்பதையும் வியாஸர் திருதராஷ்டிரனிடத்திலே வந்து சொன்னார். (கௌரவ நூற்றுவர் ஆயுதப் பயிற்சியை அடைந்தது துரோணரிடத்திலும் கிருபரிடத்திலும் அவ்வப்போது அஸ்வத்தாமனிடத்திலும் மட்டும்தான். அர்ஜுனனுக்குப் பயிற்சி அளித்தவர்கள், துரோணர், இந்திரன், குபேரன், யமன், வருணன், அக்னி, கிருபர், பரமேஸ்வரனான சிவன், கிருஷ்ணன், சில சமயங்களில் அஸ்வத்தாமன், பாண்டு இருந்த காலத்தில் காட்டில் இவர்களுக்குப் பயிற்றுவித்த சூரன் என்னும் வேடன் எனப் பத்துக்கும் மேற்பட்டவர்கள்.) அர்ஜுனன் இந்திரலோகம் சென்று அங்கே ஆயுதங்களையும் பயிற்சியையும் பெற்ற விவரங்களைத் தெரிந்துகொண்ட திருதராஷ்டிரன் கலங்கினான். "மலையின் தலையில் விழுந்த வஜ்ராயுதம் மிச்சம் வைக்கும். அர்ஜுனனால் போடப்பட்ட பாணங்கள் மிச்சமே வையா" என்று ஸஞ்சயனிடத்திலே புலம்பினான். தன்னுடைய புதல்வர்களுக்கு அழிவு நெருங்கிவிட்டது என்பதை உணர்ந்தான். 'போர் வராமல் ஒழியவேண்டுமென்றால், அது அர்ஜுனனுடைய மரணத்தால் மட்டுமே சாத்தியப்படும். ஆனால் அர்ஜுனனை வெல்பவர்கள் யாருமே இல்லை' என்றெல்லாம் பிதற்றினான்.

அழிவு நெருங்கிவிட்டது என்பதை இவ்வளவு தூரம் உணர்ந்தபின்னாலும் திருதராஷ்டிரன், துரியோதனனைத் தடுப்பதில் பெரிய அளவுக்கு முயற்சி எதையும் செய்யவில்லை. மிகப்பல சமயங்களில் துரியோதனனுக்கு புத்தி சொல்ல முயன்றாலும், இறுதியில் புத்திரபாசத்துக்கு வசப்பட்டு, துரியோதனன் எடுத்த முடிவுகளுக்குக் கட்டுப்பட்டு நடந்துகொள்பவனானான்.

(தொடரும்)

ஹரி கிருஷ்ணன்
Share: 




© Copyright 2020 Tamilonline