Thendral Audio Advertise About us
New User? | Forgot Password? | Email: Password: Login
Current Issue | Previous Issues | Author Index | Category Index | Organization Index | E-Magazine | Classifieds | Digital Downloads
By Category:
சின்னக்கதை | சமயம் | சினிமா சினிமா | இளந்தென்றல் | கதிரவனை கேளுங்கள் | ஹரிமொழி | நிகழ்வுகள் | மேலோர் வாழ்வில் | மேலும்
January 2020 Issue
தென்றல் பேசுகிறது | நேர்காணல் | மாயாபஜார் | சினிமா சினிமா | சின்னக்கதை | அன்புள்ள சிநேகிதியே | நூல் அறிமுகம் | பொது | சாதனையாளர்
எழுத்தாளர் | இளந்தென்றல் | நிகழ்வுகள் | சூர்யா துப்பறிகிறார் | Events Calendar | ஹரிமொழி | சிறுகதை | சமயம் | அஞ்சலி | முன்னோடி
Tamil Unicode / English Search
ஹரிமொழி
தீர்த்தயாத்திரை கிளம்பினர்
- ஹரி கிருஷ்ணன்|ஜனவரி 2020|
Share:
அர்ஜுனன் ஆயுதங்களையும் ஆயுதப் பயிற்சியையும் அடைந்ததைக் கேட்டு திருதராஷ்டிரன் கலங்கியதாக வைசம்பாயனர் சொல்லிக்கொண்டு வரும்போது, தன் முன்னோர்களின் கதையைக் கேட்டுக் கொண்டிருந்தவரும் அர்ஜுனனின் கொள்ளுப் பேரனுமான ஜனமேஜயர் இடைமறித்துச் சொன்னார், "ஓ! முனிவரே! வீரர்களான பாண்டவர்களைக் காட்டுக்கு அனுப்பிவிட்டுத் திருதராஷ்டிர ராஜர் இவ்விதம் துக்கித்ததெல்லாம் பயனற்றது. மஹாரதர்களான பாண்டுபுத்திரர்களைக் கோபமூட்டுகிறவனும், அற்ப புத்தியுளவனும் ராஜபுத்திரனுமான அந்தத் துரியோதனனை எவ்விதம் உபேக்ஷிக்கலாம்? காட்டில் பாண்டுபுத்திரர்களுக்கு என்ன ஆகாரமிருந்தது? சொல்லவேண்டும். காட்டிலுள்ளதா? அல்லது உழுது விளைந்த தான்யமா? இதனை நீர் எனக்குச் சொல்லும்' என்று வினவ, வைசம்பாயனர் சொல்லலானார்" (வனபர்வம், இந்திரலோகாபிகமன பர்வம், அத். 47, பக்.180)

ஜனமேஜயருடைய இந்தக் கேள்விக்கு வைசம்பாயனர், பாண்டவர்கள் காட்டிலுள்ள காய் கனி முதலியவற்றையும் 'சுத்தமான பாணங்களால் கொல்லப்பட்ட மான்களையும்' உண்டனர் என்று விடை சொல்கிறார். காட்டில் பாண்டவர்கள் எதை உண்டார்கள் என்பதற்கான விடையின் ஒரு சிறிய பகுதிதான் இது என்றாலும் இந்தக் கேள்விகளுக்குள் பொதிந்து வைக்கப்பட்டுள்ள சிலவற்றைப் பற்றிச் சொல்லியாக வேண்டும்.

வேதவியாசர் எந்தப் பாத்திரத்தைப் பற்றியும் தனது கருத்தாக எதையும் சொல்லவில்லை என்றாலும், அவ்வப்போது ஜனமேஜயர் இடைமறித்துக் கேட்கும் கேள்விகளில் பாத்திரங்களின் தன்மையைப் பற்றிய அடையாளக் குறிப்புகளை வைப்பார். அப்படி ஓர் இடம் இது. சம்பவங்களையும் பாத்திரங்களையும் பற்றிய பொதுக்கருத்து ஜனமேஜயர் மூலமாக இங்கே வெளிப்படுகிறது. பாண்டவர்களைக் காட்டுக்கு அனுப்பியது திருதராஷ்டிரன்தான், அவ்வாறு அனுப்பிய பிறகும் அர்ஜுனன் அஸ்திரங்களையும் ஆயுதப் பயிற்சியையும் பெற்றதை எண்ணி அவன் வருந்தியது வீணானது, துரியோதனன் அற்ப புத்தியுள்ளவன், பாண்டவர்களைத் தேவையில்லாமல் கோபப்படுத்தினான் என்னும் உண்மைகளை, ஜனமேஜயரின் கேள்விகள் அடிக்கோடிட்டுக் காட்டப்படுகின்றன.

இந்தப் பகுதியில் மிகமுக்கியமான காலக்குறிப்பு ஒன்று கிடைக்கிறது. "ஒவ்வொரு நாளும் மாமிசத்துக்காகத் தர்மபுத்திரர் கிழக்குத் திக்கையும், பீமன் தெற்குத் திக்கையும், நகுலஸகதேவர்கள் மேற்குத் திக்கையும் வடக்குத் திக்கையும் வில்லைத் தரித்தவர்களாகி அடைந்து மான்களை அடித்தலைச் செய்தனர்" என்று சொல்லும் வைசம்பாயனர், அர்ஜுனன் இந்திரலோகத்துக்குச் சென்றிருந்த சமயத்தில் அவனில்லாமல் காம்யக வனத்தில் மற்ற நான்கு பாண்டவர்களும் எத்தனை காலம் வசித்தனர் என்ற காலக்குறிப்பைச் சொல்கிறார்: "அவ்விதம் காம்யகவனத்தில் வஸிக்கின்றவர்களும், அர்ஜுனன் இல்லாதவர்களும் (அவனைப் பார்க்க) ஆசையுள்ளவர்களும் அத்தியயனம் செய்கின்றவர்களும் ஜபிக்கின்றவர்களும் ஹோமம் செய்கின்றவர்களுமான அவர்களுக்கு (பாண்டவர்களுக்கு) ஐந்து ஆண்டுகள் கழிந்தன." (வனபர்வம், இந்திரலோகாபிகமன பர்வம், அத். 47, பக். 181) "And the king himself wending towards the east, and Bhima, towards the south, and the twins, towards the west and the north, daily killed with bow in hand the deer of the forest, for the sake of meat. And it was that the Pandavas lived for five years in the woods of Kamyaka, in anxiety at the absence of Arjuna, and engaged all the while in study and prayers and sacrifices." என்று இந்த இடத்தைக் கிஸாரி மோகன் கங்கூலி மொழிபெயர்க்கிறார். எனவே அர்ஜுனன் இந்திரலோகத்தில் ஐந்தாண்டுகளைக் கழித்தான் என்பது தெளிவாகிறது.

அர்ஜுனன் இந்திரலோகத்தில் வாழ்ந்த காலத்தில் பீமன் தர்மபுத்திரரை நோக்கி "நாம் காட்டில் வாழ்ந்தது போதும். உடனேயே நாடு திரும்புவோம். அந்த திருதராஷ்டிர புத்திரர்களைக் கொல்வோம். தர்மம், தர்மம் என்று கருதிக்கொண்டு முழு வனவாச, அக்ஞாதவாச காலமும் முடியவேண்டும் என்று காத்திருப்பதால் காலம்தான் வீணே கழியும்" என்றெல்லாம் சொல்லி, தருமபுத்திரர் சூதாடியதைப் பற்றிய மிகக் கடுமையான சொற்களைப் பேசினான். "திருதராஷ்டிர புத்திரர்களைக் கொல்ல இதுவே தருணம். நீங்கள் என்னுடன் வராவிட்டாலும் பரவாயில்லை. எனக்காவது விடை கொடுங்கள். நான் மட்டுமாவது நாடு திரும்பி அந்தத் துரியோதனைக் கொல்கிறேன். வஞ்சகர்களை வஞ்சகத்தால் கொல்வதே தர்மம்" என்றும் பேசினான். அக்ஞாதவாச காலத்தைக் கழிப்பது மிகவும் கடினம்; அந்த ஒருவருட காலத்தில் துரியோதனன் ஒற்றர்களை ஏவித் தாங்கள் இருக்கும் இடத்தைக் கண்டுபிடிப்பது நிச்சயம்; அவ்வாறு கண்டுபிடிக்கப்பட்டால் மீண்டும் பன்னிரண்டாண்டு வனவாசமும் ஓராண்டு அக்ஞாத வாசமும் தொடரும். ஒருவேளை நாம் அக்ஞாதவாச காலத்தையும் வெற்றிகரமாக முடித்துவிட்டாலும், நாம் நாடு திரும்பியதும் துரியோதனன் உங்களை மறுபடியும் சூதாடக் கூப்பிடுவான். சூதாட்டத்தில் சற்றும் பழக்கமில்லாத நீங்கள் மீண்டும் சூதாடுவீர்கள்; நாம் மீண்டும் காட்டுக்குத் துரத்தப்படுவோம் என்றான்.
பீமன் இவ்வாறு நிந்திப்பதைக் கேட்ட தருமபுத்திரர் அவனை இறுகத் தழுவிக்கொண்டு உச்சிமோந்தார். "தோள்வலி மிகுந்தவனே! துரியோதனனை வெல்ல உனக்குக் கபடமான வழிமுறைகள் தேவையே இல்லை. பதின்மூன்றாம் ஆண்டு முடிவில், நீ அர்ஜுனனுடன் சேர்ந்துகொண்டு துரியோதனனையும் அவனைச் சேர்ந்தவர்களையும் அழிக்கத்தான் போகிறாய். இதில் ஐயமே இல்லை" என்றெல்லாம் அவனைச் சமாதானப்படுத்தினார். இவர்கள் இவ்வாறு பேசிக்கொண்டிருந்த சமயத்தில் மஹரிஷியான ப்ருஹஸ்தஸ்வர் அங்கே வந்தார். அவரை வரவேற்று பூஜித்த தர்மபுத்திரர், "ஓ மகரிஷியே! சூதாடத் தெரியாதவனான என்னுடைய செல்வத்தையும் அரசையும், சூதிலும் வஞ்சகத்திலும் தேர்ந்தவர்களான சகுனியும் துரியோதனனும் மோசமான வழிமுறைகளில் பறித்துக்கொண்டு எங்களைக் காட்டுக்குத் துரத்திவிட்டார்கள். இந்த துக்கத்தைப் பொறுக்க முடியாதவனாக இருக்கிறேன். இந்திரலோகத்துக்குச் சென்றிருக்கிற அர்ஜுனனை எப்போது காண்பேன் என்று தவித்துக்கொண்டிருக்கிறேன். என்னைப்போல ஒரு துர்பாக்கியசாலி எங்காவது இருக்கிறானா" என்று வருந்தினார். அதற்கு மஹரிஷி "உன்னைக்காட்டிலும் பெருந்துன்பத்தையடைந்த ஒரு பேரரசனை நான் அறிவேன். உனக்காவது மனைவியும் சகோதரர்களும் நாட்டு மக்களும் அந்தணர்களும் கூட இருக்கிறார்கள். நீ இன்னமும் தேரேறித்தான் இந்த வனத்தில் உலவுகிறாய். அந்த அரசன் சூதில் நாட்டை இழந்து, மனைவியோடு காட்டுக்குப் போய், மனைவியைப் பிரிந்து, தனிமையில் வாடி, பாம்பால் கடிக்கப்பட்டுத் தன் வடிவத்தை இழந்து, உடல் கறுத்துத் திரிந்தான். ரிதுபர்ணன் என்ற மன்னனிடம் சமையற்காரனாய் வேலைக்குச் சேர்ந்தான். தன் மனைவிக்கு மறுசுயம்வரம் நடப்பதாய்க் கேள்விப்பட்ட ரிதுபர்ணன், தான் அந்தச் சுயம்வரத்தில் கலந்துகொள்ள விரும்ப, அவனுக்குத் தேரோட்டிச் சென்றான். இப்படிச் சொல்லவொண்ணாத் துயரங்களை அனுபவித்ததன் பிறகு, தன் மனைவி தமயந்திக்கு மறுசுயம்வரம் என்று சொல்லப்பட்டது ஒரு நாடகமே என்று அறிந்து, பிரிந்த மனைவியையும் மக்களையும் மீண்டும் அடைந்தான். தன்னை வஞ்சித்துச் சூதாடிய தம்பி புஷ்கரனோடு மறுசூது ஆடித் தன் நாட்டையும் வென்றெடுத்தான்" என்று தருமபுத்திரனுக்கு நளசரித்திரத்தைச் சொன்னார்.

நளோபாக்கியனம் முடிந்த சமயத்தில் நாரதர் காம்யக வனத்துக்கு வந்து, பாண்டவர் நால்வரையும் தீர்த்த யாத்திரைக்குப் போகச் சொன்னார். தீர்த்த யாத்திரைக்குப் போவதற்கேற்ற இடங்களைக் குறித்து முற்காலத்தில் பீஷ்மரிடம் புலஸ்தியர் சொன்ன மிகநீண்ட விவரங்களையெல்லாம் தருமபுத்திரனுக்கு நாரதர் சொன்னார். அவர் அவ்வாறு சொல்லிக்கொண்டிருந்த சமயத்தில் இந்திரலோகத்திலிருந்து இந்திரனும் அர்ஜுனனும் அனுப்பி வைத்திருந்த லோமசர் அங்கே வந்து, அர்ஜுனன் இந்திரலோகத்தில் இந்திரனுடைய ஆசனத்திலேயே அமர்ந்திருக்கும் சிறப்பையும் அவன் அஸ்திரங்களையும் ஆயுதப் பயிற்சியையும் பெற்றதையும் விரிவாக எடுத்துச் சொன்னார். சிவனிடத்தில் அர்ஜுனன் பாசுபதம் பெற்றதையும் மற்ற தேவர்களிடமிருந்து பலவிதமான ஆயுதங்களைப் பெற்றதையும் விவரித்தார். இந்திரலோகத்தில் தன்னைக் கண்ட அர்ஜுனனும் இந்திரனும் மற்ற நான்கு பாண்டவர்களையும் தீர்த்த யாத்திரைக்கு அழைத்துச் செல்லும்படி தன்னிடம் கேட்டுக்கொண்டதையும் அவர்களுக்குச் சொன்னார்.

பாண்டவர்கள் தங்கள் புரோகிதரான தௌம்யருடனும் லோமசருடனும் தீர்த்த யாத்திரைக்குப் புறப்பட்டனர். அதற்கு முன்னால் லோமசர் சொன்னதன்படி, தங்களை எப்போதும் சூழ்ந்திருக்கும் நாட்டு மக்களையும் அந்தணர்களையும் திருதராஷ்டிரனிடத்திலும் பாஞ்சாலியின் தந்தையான துருபத ராஜனிடத்திலும் அனுப்பி வைத்துவிட்டுக் கிளம்பினர். வழியில் எதிர்ப்பட்ட அந்தணர்கள், தாங்களும் பாண்டவர்களோடு வருவதற்கு விருப்பம் தெரிவித்ததால் அவர்களையும் உடன் அழைத்துக்கொண்டு சென்றனர்.

(தொடரும்)

ஹரி கிருஷ்ணன்
Share: 




© Copyright 2020 Tamilonline