Thendral Audio Advertise About us
New User? | Forgot Password? | Email: Password: Login
Current Issue | Previous Issues | Author Index | Category Index | Organization Index | E-Magazine | Classifieds | Digital Downloads
By Category:
சின்னக்கதை | சமயம் | சினிமா சினிமா | இளந்தென்றல் | கதிரவனை கேளுங்கள் | ஹரிமொழி | நிகழ்வுகள் | மேலோர் வாழ்வில் | மேலும்
December 2019 Issue
தென்றல் பேசுகிறது | நேர்காணல் | மாயாபஜார் | சினிமா சினிமா | சின்னக்கதை | அன்புள்ள சிநேகிதியே | மேலோர் வாழ்வில் | பொது
சூர்யா துப்பறிகிறார் | Events Calendar | ஹரிமொழி | சிறுகதை | சமயம் | சாதனையாளர் | அஞ்சலி | விலங்கு உலகம் | வாசகர் கடிதம்
எழுத்தாளர் | இளந்தென்றல் | நிகழ்வுகள்
சிறுகதை
Tamil Unicode / English Search
எழுத்தாளர்
ஆர்.எஸ். ஜேக்கப்
- அரவிந்த்|டிசம்பர் 2019|
Share:
பள்ளி ஆசிரியர், எழுத்தாளர், பத்திரிகை ஆசிரியர், பதிப்பாளர், சமூகசேவகர் எனப் பல திறக்குகளில் முத்திரை பதித்தவர் ஆர்.எஸ். ஜேக்கப். தூத்துக்குடியை அடுத்த ராஜாவின்கோவில் கிராமத்தில், நவம்பர் 19, 1926 அன்று, சந்தோஷம் நாடார், பொன்னம்மாள் இணையருக்கு மகனாகப் பிறந்தார். உடன்பிறந்தவர்கள் 11 பேர். தந்தை விவசாயி, பருத்தி வணிகமும் செய்தார். வணிகத்தின் பொருட்டு ஒவ்வொரு முறை வெளியூர் சென்று திரும்பும்போதும் தின்பண்டங்களோடு கூடவே நல்ல நூல்களையும் வாங்கிவருவார். தன் குழந்தைகளை வாசிக்க ஊக்குவித்தார். உள்ளூர் மிஷன் பள்ளியில் ஐந்தாம் வகுப்புவரை பயின்றார் ஜேக்கப். தந்தை வாங்கிக்கொடுத்த நூல்களோடு நூலகத்துக்குச் சென்று வாசிப்பதையும் வழக்கமாகக் கொண்டார். அருகிலுள்ள புதியம்புத்தூர் கிராமத்தில் உயர்நிலைக்கல்வி தொடர்ந்தது. எட்டாம் வகுப்பு படிக்கும்போது தாய் காலமானார். அது இவரது வாழ்வின் மிகப்பெரிய சோகமானது. பள்ளிப்படிப்பு தடைப்பட்டது. சகோதரிகளின் அரவணைப்பில் வளர்ந்தார். கற்கும் ஆர்வம் அதிகரிக்கவே திருநெல்வேலியில் அரசு போதனாமுறை பயிற்சிப் பள்ளியில் சேர்ந்து ஈராண்டுகள் பயின்றார். தொடர்ந்து சிறுவர் ஊழியராகப் பணிபுரிந்து கொண்டே திருநெல்வேலி சைவசித்தாந்தக் கழகத்தில் சேர்ந்து பயின்று தமிழில் வித்வான் பட்டம் பெற்றார்.

படிப்பை முடித்தவுடன் நைனாபுரம் கிராமத்தில் ஆசிரியப் பணி கிடைத்தது. "சமுதாயத்தைத் தனது நற்பணியால் முன்னேற்ற வேண்டும்" என்று கனவுகண்ட ஜேக்கபுக்கு, அப்பொறுப்பு மகிழ்வைத் தந்தது. அந்தக் கனவுகளுடன் அக்கிராமத்திற்குச் சென்றார். அங்கு அவருக்கு மிகப்பெரிய ஏமாற்றம் காத்துக் கொண்டிருந்தது. கிராமமே பணம்படைத்த பண்ணையார் ஒருவரின் ஆதிக்கத்துக்கு உட்பட்டிருந்தது. மாணவர்கள் கல்வி பயில்வதை முற்றிலுமாகத் தடை செய்த பண்ணையார், மாணவர்களையும், பெற்றோரையும் தன் பண்ணையில் வேலையாட்களாகக் கொத்தடிமைபோல் நடத்திவந்தார். அது கண்டு பொறுக்காத ஜேக்கப் பண்ணையாரை எதிர்த்தார். பண்ணையார் அதனை விரும்பவில்லை. மிகவும் செல்வாக்குப் படைத்திருந்த அவர் தனது அரசியல் தொடர்புகள் மூலம் ஜேக்கபுக்குப் பல்வேறு இடையூறுகளை ஏற்படுத்தினார். அதையெல்லாம் சமாளித்துப் பணிகளைத் தொடர்ந்தார் ஜேக்கப்.நூலகத்துக்குச் சென்று வாசிப்பதும் குறிப்புகள் எடுப்பதும் ஜேக்கபின் வழக்கம். வாசிப்பும் வாழ்க்கை அனுபங்களும் எழுதத் தூண்டின. இவர் எழுதிய முதல் சிறுகதையான 'பாஞ்சைப்புலிகள்', 1947ல் 'தினசரி மடல்' என்ற வார இதழில் வெளியானது. 'ஆர்.எஸ். கோபு' என்ற பெயரில் எழுதியிருந்தார். அதற்குக் கிடைத்த வரவேற்பு தொடர்ந்து எழுதக் காரணமானது. பல நாள், வார, மாத இதழ்களில் கதை, கட்டுரைகள் எழுதினார். தமிழ் மணி, சிற்பி, தாமரை, ஜனசக்தி, பிரசண்ட விகடன், நிருபம், சுடரொளி போன்ற இதழ்களில் இவரது சிறுகதைகள் வெளியாகின. முதல் சிறுகதைத் தொகுப்பு 'மோசம்போன மோதிரம்' 1949ல் வெளியானது. இரண்டாவது தொகுப்பு 'கிறிஸ்தவர்களும் ஜாதியும்' 1952ல் வெளியானது. தொடர்ந்து 'நூறு த்ருஷ்டாந்தக் கதைகள்', 'நூறு ஜீவனுள்ள கதைகள்', 'நூறு அருளுரைக் கதைகள்' எனப் பல தொகுப்புகள் வெளியாகின.

இந்நிலையில் நெல்லையில் நிகழ்ந்த ரயில் கவிழ்ப்புச் சம்பவத்தால் கம்யூனிஸ்ட் இயக்கம் தடை செய்யப்பட்டது. பொதுவுடைமைச் சித்தாந்தத்தில் ஈடுபாடு கொண்டிருந்தவர் ஜேக்கப். இயக்கம் சார்ந்த பலர் அவரது நண்பர்களாக இருந்தனர். தடை செய்யப்பட்டிருந்த அவ்வியக்கத்தினர் ரகசியக்கூட்டம் நடத்த பள்ளி வளாகத்தைப் பயன்படுத்திக் கொள்ள அனுமதித்தார் ஜேக்கப். நாளடைவில் அவரும் சதி வழக்கில் உடந்தை என்று குற்றம் சாட்டப்பட்டு கைது செய்யப்பட்டார். அதற்கு ஆதாரமாக ஜேக்கப் எழுதியிருந்த நாட்குறிப்பையும் காவல்துறையினர் கைப்பற்றினர். ஜேக்கப் சிறையில் அடைக்கப்பட்டார். பாளையங்கோட்டை கொக்கிரகுளம், மதுரை சிறைச்சாலைகளில் கடும் சித்திரவதைகளுக்கு ஆட்பட்டார். பிரபல வழக்கறிஞர் என்.டி. வானமாமலை சதி வழக்கில் கைது செய்யப் பட்டவர்களுக்காக வாதாடினார்.

வழக்கை மிகக் கூர்மையாக விசாரித்து வந்த நீதிபதி வி சுப்ரமணிய நாடார், தீர்ப்பு வழங்கும் முன் கோடை விடுமுறைக்காகக் கொடைக்கானல் செல்லும்போது ஜேக்கப் எழுதிய டைரிகள் அனைத்தையும் உடன் எடுத்துச் சென்றார். கிடைத்த நேரத்தில் ஜேக்கபின் டைரிக் குறிப்புகளை வாசித்தார். ஜேக்கப் அதில், கிராமத்தில் மக்கள் கொத்தடிமைகளாக இருந்ததையும், ஒடுக்கப்பட்ட சமூகத்துக் குழந்தைகளைப் பள்ளியில் சேர்க்கத் தான் எடுத்த முயற்சிகளையும், தீண்டாமைக் கொடுமைகளை எதிர்த்துப் போராடியதையும், இம்முயற்சிகளுக்குப் பண்ணையார் எதிராக இருந்ததையும், அதையும் மீறித் தான் அவர்களைப் பள்ளியில் சேர்த்துப் போதித்ததையும் பற்றி விரிவாக எழுதி இருந்தார். இறுதியில் இம்மாதிரியான பணிகளைச் செய்ய உதவிய கர்த்தருக்கு நன்றி என்றும் குறிப்பிட்டிருந்தார். இதைப் படித்ததும் மனம் நெகிழ்ந்தார் நீதிபதி. ஜேக்கப் தீவிரவாதியோ, குற்றவாளியோ, சதிகாரரோ அல்ல; இயேசுவின் வழி நின்று வறியவர்களுக்காக மனமிரங்கி உதவிய 'ஏழை பங்காளன்' என்பதாக உணர்ந்தார். விடுமுறை முடிந்து பணிக்குத் திரும்பியதும் ஜேக்கப் குற்றவாளியல்ல என்று அவரை விடுதலை செய்து தீர்ப்பளித்தார்.


1952ல் சிறையிலிருந்து வெளிவந்தார் ஜேக்கப். நெல்லை சதி வழக்கில் குற்றஞ்சாட்டப்பட்ட 95 பேரில் இருவர் மட்டுமே தற்போது உள்ளனர். ஒருவர் ஆர். நல்லகண்ணு. மற்றொருவர் ஆர்.எஸ். ஜேக்கப். சிறைவாசத்தால் அரசு ஆசிரியர் பணியை ஜேக்கப் இழந்தார். உள்ளத்தை இறைப்பணியில் செலுத்தி அந்த மன அழுத்ததிலிருந்து மீண்டார். சிலகாலம் கிறிஸ்தவ இறையியல் தொண்டராகப் பணியாற்றியவர், பின் மீண்டும் பள்ளி ஆசிரியர் வேலை கிடைத்துப் பணியைத் தொடர்ந்தார். 1956ல், வயலட் மேரி பிளாரன்சுடன் திருமணம் நிகழ்ந்தது. மனைவியும் ஆசிரியப் பணியாற்றினார்.

சதி வழக்கில் கைது செய்யப்படும்வரை உள்ள சம்பவங்களை, 'வாத்தியார்' நாவலிலும், சிறை சித்திரவதைகளைப் பற்றி 'மரண வாயிலில்' என்ற நாவலிலும் எழுதி இருக்கிறார். இவரது சிறுகதைளும் குறிப்பிடத் தக்கனவே. 'ஒலிக்கவில்லை', 'சொல்லும் செயலும்', 'பட்டுப் பாவாடை', 'வரவேற்கப்படாத விருந்தாளி', 'யானை மெழுகுவர்த்தி' போன்றவை வரவேற்பையும் விமர்சனத்தையும் ஒருங்கே பெற்ற சிறுகதைகளாகும். 'அக்கா வீட்டிற்குப் போனேன்', 'பட்டணப் பிரவேசம்', 'கிறுக்கன்' போன்ற சிறுகதைகள் பரவலாகப் பாராட்டப்பட்டவை ஆகும்.

எளிய மாந்தர்களே ஜேக்கப்பின் கதை மாந்தராக உலவுகின்றனர். தமது மதத்தின் தத்துவங்களை, நம்பிக்கைகளைத் தனது படைப்புகளில் முன்வைத்தவர் என்றும் ஜேக்கபை மதிப்பிடலாம். இவரது படைப்புகளில் கிறிஸ்தவத்தின் தாக்கம் மேலோங்கி இருப்பது பற்றிய கேள்விக்கு, "எழுத்தாளன் சமூகத்தைப் பிரதிபலிக்கும் ஒரு கண்ணாடி. அவன் வாழும் சமூகச் சூழலுக்கேற்ப உருவாகிறான். நான் பழகும் இடமும் மக்களும் பெரும்பாலும் கிறிஸ்தவச் சூழல்களே. அவர்கள் யாவரும் சமூகப் பிரஜைகள்தானே. அவர்களின் கலாச்சாரங்களையும் உணர்வுகளையும் பிரதிபலிப்பதும் சமூகச் சிறுகதைகள் தானே?" என்று பதில் கேள்வி எழுப்புகிறார் ஜேக்கப். கிறிஸ்தவ மதம் சார்பான சீர்திருத்தங்களையும் தன் படைப்பில் முன்வைத்திருக்கிறார். அதை விமர்சிக்கவும் தயங்கவில்லை. போலி சாட்சிகளை, போலிப் பிரசிங்கிகளைப் பற்றித் தன் கதைகளில் எழுதிச் சிந்திக்க வைத்திருக்கிறார்.கதீட்ரல், தூய யோவான் பள்ளிகளில் பணியாற்றிய ஜேக்கப், 1985ல் பணி ஓய்வு பெற்றார். அதன்பின் முழுக்க இறையியல் பணியாளராகவும், எழுத்தாளராகவும், இதழாளராகவும் பணிகளைத் தொடர்ந்தார். தமிழில் 18ம் நூற்றாண்டின் ஆரம்பத்தில் இருந்தே வெளிவரும் கிறிஸ்தவ சமய இதழான 'நற்போதகம்' இதழின் ஆசிரியராக பன்னிரண்டு ஆண்டுகள் பணியாற்றிய பெருமை இவருக்கு உண்டு. சிறுவர் சுடரொளி, பாலியர் நேசன், மனைமலர் போன்ற இதழ்களின் ஆசிரியராகவும் பணிபுரிந்திருக்கிறார்.

'நகைமொழிக் கதைகள் நானூறு' (நான்கு பாகங்கள்), 'ஆர்.எஸ். ஜேக்கப் சிறுகதைகள்' (பல பாகங்கள்), 'ஒரு வாத்தியாரின் டைரி', 'படைப்பாளியின் டைரி', 'சின்ன சின்ன கதைகள் பெரிய பெரிய உண்மைகள்', 'மணமும் குணமும்', 'பக்தியூட்டும் பல்சுவைக் கதைகள்', 'சான்றோரின் வாழ்வில் ஒரு நாள் நடந்த கதைகள்', 'அருமையான பிரசங்க ஆதாரக் கதைகள்', 'நெல்லைச் சரிதைக் கதைகள்', 'கரிசல்காட்டுக் கதைகள்', 'ஆர்வமூட்டும் அருட் கதைகள்', 'உயரிய உண்மைக் கதைகள்', 'உயிரூட்டும் உண்மைக் கதைகள்', 'சாட்சிக்கு ஒரு சாட்டை', 'சுவையான செய்திக் கதைகள் ஐநுாறு', 'உங்கள் குழந்தைகளுக்கு நல்ல நல்ல கதைகள்', 'இளம் தம்பதிகளுக்கு இனிக்கும் செய்திகள்', 'திருச்சபைத் தொண்டர்கள்', 'நெல்லை அப்போஸ்தலம் ரேனியஸ்' போன்றவை இவரது குறிப்பிடத்தகுந்த படைப்புகளில் சிலவாகும். இவரது படைப்புகளை ஆராய்ச்சி செய்து பலர் எம்.ஃபில், முனைவர் பட்டங்களைப் பெற்றுள்ளனர்.

ஜேக்கப், சிறந்த சொற்பொழிவாளரும் கூட. கேட்பவரைக் கட்டிப்போடும் பேச்சாற்றல் மிக்கவர். இலக்கிய வட்டத்தின் சார்பாக, 'இலக்கியச் செல்வர்', உலகக் கிறிஸ்தவத் தமிழர் பேரவை வழங்கிய 'அருட்கலைஞர்', கிறிஸ்துவக் கலைக்கழகம் வழங்கிய 'இலக்கியத் தென்றல்' உள்ளிட்ட பல சிறப்புப் பட்டங்களும் பதக்கங்களும் பெற்றவர். எழுபதாண்டுக்கும் மேலாக இலக்கிய உலகில் இயங்கி வரும் ஜேக்கப் தமிழ் இலக்கிய உலகின் மிகமூத்த படைப்பாளியாக மதிக்கத் தக்கவர்.

அரவிந்த்
Share: 
© Copyright 2020 Tamilonline