Thendral Audio Advertise About us
New User? | Forgot Password? | Email: Password: Login
Current Issue | Previous Issues | Author Index | Category Index | Organization Index | E-Magazine | Classifieds | Digital Downloads
By Category:
சின்னக்கதை | சமயம் | சினிமா சினிமா | இளந்தென்றல் | கதிரவனை கேளுங்கள் | ஹரிமொழி | நிகழ்வுகள் | மேலோர் வாழ்வில் | மேலும்
December 2018 Issue
தென்றல் பேசுகிறது | நேர்காணல் | மாயாபஜார் | சினிமா சினிமா | சின்னக்கதை | ஹரிமொழி | பொது | சாதனையாளர் | சமயம் | சிறுகதை
எழுத்தாளர் | இளந்தென்றல் | நிகழ்வுகள் | சூர்யா துப்பறிகிறார் | Events Calendar | அன்புள்ள சிநேகிதியே | சிறப்புப் பார்வை | அஞ்சலி
Tamil Unicode / English Search
சிறுகதை
அஸிஸியின் அற்புத ஞானி
ஆன்மிகம், ஆண்டவன், ஆண்டிராய்டு
பேச்சு!
பெயரன்
- பானுமதி பார்த்தசாரதி|டிசம்பர் 2018|
Share:
மெதுவாகக் கால்களை விந்தி விந்தி நடந்து சமையலறை முழுவதையும் சுத்தமாகத் துடைத்தார் ராமச்சந்திரன். மகன் ராஜேஷ் ஏதோ கல்லூரிப் பாடத்துக்கு நோட்ஸ் எடுத்துக்கொண்டிருந்தான். சிறிது நேரத்தில் சாப்பிட வந்துவிடுவான். அந்த ஒற்றைப் படுக்கையறை அடுக்கு மாடிக் குடியிருப்பில் தனி உணவறை கிடையாது. சமையலறையிலே ஒரு சிறிய மேஜையும், முக்காலியும் போட்டு உணவறையாக மாற்றியிருந்தார் ராமச்சந்திரன்.

ராஜேஷ் எங்கே சிறிது அழுக்கு இருந்தாலும் இப்போதெல்லாம் சாப்பிடாமல் எழுந்து போய் விடுகின்றான். எதுவும் பேசுவதில்லை. ஏதாவது கேட்டாலும் ஒரே வார்த்தையில் பதில்.

ராமச்சந்திரன் ஒரு கடமை தவறாத இடைநிலைப் பள்ளி ஆசிரியர். ராஜேஷ் பிறந்தவுடனே மனைவியைப் பறிகொடுத்தவர். மனைவி இறக்குமுன், பேசமுடியாமல் அவரது கைகளைப் பிடித்துக்கொண்டு கண்ணீர் வடித்தாள். அதில் பல அர்த்தங்களைக் கண்டார். அப்போது அவருக்கு முப்பது வயதுதான். இருபத்தெட்டு வயதில் திருமணம். முப்பது வயதில் மனைவியை இழந்தார். அன்றுமுதல் இன்றுவரை தாய்க்குத் தாயாக தந்தைக்குத் தந்தையாகக் கண்ணும் கருத்துமாய் வளர்த்து வருகிறார். அருகிலுள்ள அவரது ஒன்றுவிட்ட அக்கா பக்கத்து கிராமத்தில் இருக்கிறாள். அவசரத்துக்குஅவளை அழைத்துக் கொள்வார்.

உறவினர்களும் நண்பர்களும், ராமச்சந்திரனை இரண்டாவது திருமணம் செய்துகொள்ள வற்புறுத்தினர். அவரோ, "என் குழந்தைக்கு நான் எந்தவொரு துன்பமும் தரமாட்டேன்" என்று உறுதியாக மறுத்துவிட்டார்.

மற்ற வேலைகளுக்கும், குழந்தையைப் பார்த்துக்கொள்ளவும் பாட்டி ஒருத்தியை சில வருடங்கள் வீட்டோடு வைத்திருந்தார். வேலையிலிருந்து, கிடைக்கும் சம்பளம், ராஜேஷ் படிப்புக்கும், காலில் எப்போதோ ஏற்பட்ட சிறிய எலும்பு முறிவு வைத்தியத்துக்குமே கண்டும் காணாமல் இருந்தது.

சிக்கனத்தை முன்னிட்டும் ராஜேஷ் பெரியவனாகி விட்டதாலும் பாட்டியை வேலையைவிட்டு நீக்கிவிட்டார். ராஜேஷ் இடைநிலைப் பள்ளி படிக்கும் வரை எல்லாக் குழந்தைகளையும் போல் பாசமாக ஒட்டிக்கொண்டுதான் இருந்தான். ஹைஸ்கூல் வந்த பிறகுதான் மாறிவிட்டான். அந்த மாற்றம் ராமச்சந்திரனுக்கும் நன்கு தெரிந்தது. ஆண் குழந்தை, நண்பர்கள் பழக்கம், பாடங்களின் சுமை அதனால் அப்படியிருக்கலாம் என்று நினைத்தார்.

ராஜேஷ் வகுப்பில் முதல் மாணவனாகவே இருந்து, பள்ளியிறுதி வகுப்பிலும், நுழைவுத் தேர்விலும் முதலாவதாகத் தேறிச் சென்னை ஐ.ஐ.டி.யில் உதவித்தொகையோடு இடம் பிடித்துவிட்டான். ராமச்சந்திரனும் அந்த சந்தோஷத்தில் தன் மகன் தன்னிடமிருந்து சிறிது சிறிதாக விலகுவதைக் கவனிக்கத் தவறிவிட்டார்.

பலவித குழப்பமான பழைய நினைவுளில் இருந்தவர் கடிகாரம் பார்த்து ராஜேஷுக்கு கல்லூரிக்கு நேரமாகிவிட்டதை உணர்ந்து நிஜ உலகிற்கு வந்தார். டிஃபனை மத்தியானத்துக்குக் கட்டினார். சாதம், சாம்பார், பொரியல், ரசம் என்று எல்லாவற்றையும் அந்தச் சிறிய மேஜைமேல் எடுத்து வைத்துவிட்டு வெளிக்கூடத்தில் வந்து உட்கார்ந்துகொண்டார். இவர் போட்டால் சாப்பிடுவதைவிட அவனே சாப்பிட்டால் நன்றாகச் சாப்பிடுகிறான் என்பதும் இவர் தெரிந்துகொண்ட உண்மை! ஏன் இப்படி நடக்கிறான்? புரியவில்லை.

இப்போதெல்லாம் ராஜேஷைப் பார்த்தால் அவருக்கே பிரமிப்பாக இருந்தது. அவனுடைய அம்மாவைப் போல நல்ல உயரமாகவும். சுருண்ட தலைமுடியுடனும், நல்ல நிறமாகவும் இருந்தான். அப்பாவும் பிள்ளையும் ஒன்றாகச் சென்றால் சம்பந்தமே இல்லாதவர்கள் போல் இருக்கும். போதும் போதாததற்கு அவர் ஒரு விபத்திற்குப் பிறகு ஒரு காலை வேறு தாங்கித் தாங்கி நடக்கிறார்.

எல்லோரும் அவரை நொண்டி வாத்தியார் என்றே அழைக்கத் தொடங்கிவிட்டார்கள். அவர் வேலை செய்யும் பள்ளியிலும், இன்னொரு ராமச்சந்திரனிடமிருந்து வித்தியாசப்படுத்திக் காட்டுவதற்காக இவரை நொண்டி ராமச்சந்திரன் என்பார்கள். ஆனால் இதெல்லாம் ஒன்றும் அவருக்குப் பெரியதாகத் தெரியவில்லை. உருவத்தில் என்ன இருக்கிறது? மனம் சுத்தமாக இருந்தால் அதுவே போதும் என்றுதான் அவர் நினைத்தார். ஆனால் இந்த காலத்தில் உருவத்திற்கும், உடைக்கும் அளிக்கும் மதிப்பு நல்ல உள்ளத்திற்கும், உண்மைக்கும் கிடைக்காதென்பது அவருக்குத் தெரியவில்லை. பாவம் பள்ளிக்கூட வாத்தியார்தானே!

ராஜேஷ் ஐ.ஐ.டி.யில் படிப்பை முடித்துவிட்டான். அன்று பட்டமளிப்பு விழா. ஏதோ பெரியமனது பண்ணி தந்தையை வரச் சொல்லிவிட்டான். அவனது பணக்கார, உதவாக்கரை நண்பர்கள் அவன் தந்தையின் தோற்றத்தை மறைவில் நையாண்டி செய்தார்கள். அவன் மனம் இன்னும் இறுகியது.

அமெரிக்காவில் எம்.எஸ். படிக்க நல்ல பல்கலைக்கழகத்தில் உதவித்தொகையுடன் இடம் கிடைத்தது. ராமச்சந்திரன் தன்னிடம் இருந்த சேமிப்புத் தொகை முழுவதையும் மகனுடைய கணக்கில் சேர்த்துவிட்டார். ராஜேஷ் அமெரிக்கா போய்ப் படிக்கத் தொடங்கிவிட்டான்.

ஒருநாள் திடீரென்று ராஜேஷிடமிருந்து ஃபோன் வந்தது. தன்னுடன் படிக்கும் நிஷாவைத் தன் நண்பர்களை வைத்துத் திருமணம் செய்துகொண்டதாகத் தெரிவித்தான்.

"எனக்கு விசா எடுத்து அனுப்பியிருந்தால் என் ஒரே மகனின் கல்யாணத்தை நானும் சந்தோஷமாகப் பார்த்திருப்பேனே" என்றார் ராமச்சந்திரன் துக்கம் தொண்டையை அடைக்க.

"நீங்கள் நான் ஐ.ஐ.டி.யில் பட்டம் வாங்கியதைப் பார்த்துச் சந்தோஷப்பட்டதே போதும் .உங்களால் எனக்குத்தான் அவமானம்" என்றவன் அவர் வளைந்து ஒரு கால் ஊனமாக நடப்பதையும், உருவ அமைப்பில்கூடத் தனக்கும் அவருக்கும் எந்தச் சம்பந்தமும் இல்லாமல் இருப்பதையும், தன்னை மிக வசதியானவன் என்று நினைத்துக்கொண்டிருக்கும் நண்பர்கள் மத்தியில் அவமானப்பட முடியாது என்றும் சீறினான்.

ராமச்சந்திரன் இந்த உதாசீனப் பேச்சைச் சத்தியமாக மகனிடமிருந்து எதிர்பார்க்கவில்லை.

அவனுக்காகத் தான் பட்ட கஷ்டங்களை மனதில் நினைக்காமல், உருவத்தை இகழ்கிறானே, என்று வேதனைப் பட்டார். முதன்முதலாகத் தனது மகனின் குணத்தில் வெறுப்படைந்தார். இவனிடம் காட்டிய அன்பை ஒரு நாயிடம் காட்டியிருந்தாலும் நன்றியோடு கூடவே இருந்திருக்கும் என்று கோபப்பட்டார். தனிமை பொறுக்கமுடியாமல், கிராமத்திலிருந்த அக்காவை அழைத்துக்கொண்டார்.

"நான்கு வயதில் வேலைக்காரப் பாட்டியை ஏமாற்றிவிட்டு, தெருவிற்கு ஓடினாய். அப்போது வேகமாக வந்த ஆட்டோவிலிருந்து உன்னைக் காப்பாற்றப் போய்தான் எனக்கு இந்த நிலை என்று சொல்ல வேண்டியதுதானே?" பொருமினாள் அக்கா.

"என் மகனை நான் காப்பாற்றினேன். நான் தியாகமா செய்தேன் சொல்லிக் காட்டுவதற்கு?" என்று முடித்தார்.

அதன்பிறகு அவர் வாழ்க்கை அமைதியாகவே ஓடியது. அக்கா சமைத்து வைத்த சாப்பாடு, நல்ல ஓய்வு. விடுமுறை நாட்களில் அக்காவுடன் புண்ணிய க்ஷேத்திரங்களுக்குப் பயணம். இப்படியே நாட்கள் ஓடின.

காலம் யாருக்காகவும் காத்திருப்பதில்லை. வருடங்கள் ஓடின. ராமச்சந்திரனும் பணியிலிருந்து ஓய்வு பெற்றார்.

அரசல் புரசலாகப் பல விஷயங்கள் கேட்காமலே காதில் வந்து விழுந்தன. அமெரிக்காவில் ராஜேஷ் நல்ல வசதிகளோடு இருக்கின்றான் என்றும் மனைவி மிக நல்லவள் என்றும், ஒரு ஆண் குழந்தைகூடப் பிறந்திருக்கிறது என்றும் கேள்விப்பட்டார்கள். இப்போது அமெரிக்கா பக்கத்து ஊர்மாதிரி ஆகிவிட்டதே. ஆனால் மனம் எதற்கும் ஆசைப்படவில்லை. 'முடவன் கொம்புத் தேனுக்கு ஆசைப்பட்டாற் போல்' என்று மனதுக்குள் சொல்லிக்கொண்டு தன் காலையும் பார்த்துக்கொள்வார்.

ஒருநாள் காலையில் திடீரென்று ஃபோன். ராஜேஷ்தான். அவனுடைய அத்தைதான் போனை எடுத்தாள்.

"அத்தை, நான் ராஜேஷ் பேசுகிறேன். அப்பாவுடன் பேசவேண்டும்."

ராமச்சந்திரன் ஃபோனை எடுத்தார். "சொல்லப்பா, என்ன விஷயம்?"
"அப்பா, நான் என் மனைவி, குழந்தையுடன் சென்னை வரப்போகிறேன். நான் நடந்துகொண்டதற்கு உங்களிடம் மன்னிப்புக் கேட்கவேண்டும்" என்றான்.

"இந்த வீட்டை விற்று ஏதேனும் பணம் வேண்டுமா?" என்றார்.

"அப்பா" என்றான் அதிர்ச்சியோடு.

"ஆதாயமில்லாமல் நீ வரமாட்டாயே. அதனால் கேட்டேன். எப்படி இருந்தாலும், நீங்கள் சென்னைக்கு வருவது நல்ல விஷயம். வாருங்கள்" என்று கூறி ஃபோனை வைத்துவிட்டார்.

ஒரு மாதத்தில் ராஜேஷ், தன் மனைவி, குழந்தையுடன் சென்னை வந்தடைந்தான்.

குழந்தையைப் பார்த்த ராமச்சந்திரனும் அவர் அக்காவும் திகைத்தனர். ராஜேஷ்போல் மஞ்சள் நிறமோ, நிஷாவைப் போல் ரோஜா நிறமோ இல்லை. தாத்தா ராமச்சந்திரனைப் போல் மாநிறத்திற்கும் சற்றே குறைவான நிறம்தான். முகமும், உடல் வாகும் அப்படியே தாத்தாதான். ராஜேஷின் அத்தைக்கு ஒரே சந்தோஷம்.

நிஷாவின் முகத்தை இரு கைகளாலும் வழித்து திருஷ்டி கழித்தாள். "என் ராசாத்தி, என் தம்பியைக் குழந்தையாக்கிவிட்டாயே" என்று வாய்நிறையச் சிரித்தாள்.

"அதுமட்டும் இல்லை அத்தை. இந்த குட்டிப் பயலால்தான் என் மமதையும், போலி கௌரவமும் போயின. என்னை என் அப்பாவுடனும், அத்தையுடனும் சேர்த்தவன் இவனே" என்று மகனை ஆசைதீர உச்சி முகர்ந்தான்.

ராமச்சந்திரன் ஆச்சர்யத்துடன் பார்த்தார். நிஷா கூறினாள். "ஆமாம் மாமா, இவர் நண்பர் ரகுவின் பெற்றோர் அமெரிக்கா வந்திருந்தனர்."

"யார்? எனக்கு நினைவுக்கு வரவில்லையே?" என்றார் ராமச்சந்திரன் நெற்றியைச் சுருக்கி யோசனை செய்தவாறு. நிஷாவிடம் பேசுவது ராமச்சந்திரனுக்கு மிகவும் பிடிக்கும். குழந்தைபோல் பேசுவாள். நிஜத்தைப் பேசுவாள். அவளைப் பார்க்கும்போது "இவளைப்போல் நமக்கு ஒரு பெண் இருந்தால்..." என்று மனம் ஏங்கும்.

அமெரிக்காவிலிருந்து வந்த ஒரு வாரத்தில் நிஷா மாமனாரிடமும் அத்தையிடமும் மிகப் பிரியமாகப் பழகத் தொடங்கிவிட்டாள். அப்போது ராமச்சந்திரன் மனம் திறந்து "உன்னைப்போல் எனக்கு ஒரு மகள் இருந்திருந்தால் ரொம்ப நன்றாக இருந்திருக்கும்" என்றார். "நான்தான் இருக்கிறேனே அப்பா" என்றாள் நிஷா. அன்றிலிருந்து இருவரும் மிகச் சுவாதீனமாகப் பேச ஆரம்பித்துவிட்டார்கள். அப்போதுதான் ரகுவைப்பற்றிப் பேச்சு வந்தது.

"நீங்கள் வேலை பார்த்த அதே நேரத்தில் ஹைஸ்கூலில் கோபால் மாஸ்டர் என்று ஒரு சயன்ஸ் டீச்சர் இருந்தார் இல்லையா அப்பா, அவர் மகன்தான் ரகு" என்றான் ராஜேஷ்.

"அவன் ரொம்ப சுமாராத்தானே படிப்பான். இஞ்ஜினியரிங் டிகிரிகூட இல்லையே, அவன் எப்படி அமெரிக்காவில்?" என்று ஆச்சர்யத்துடன் கேட்டார்.

"நிறைய கம்ப்யூட்டர் கோர்சஸ் படித்து வந்துவிட்டான். அது மட்டுமல்ல. அவனே சொந்தமாக ஒரு கம்பெனியும் நடத்துகிறான்" என்றான் ராஜேஷ்.

"அந்த ரகுவின் பெற்றோர்தான் இந்த செல்லக்குட்டி தாத்தாவைப் போலவே இருப்பதாகக் கூறினார்கள்" என்றாள் நிஷா.

"அதைமட்டும் சொல்லவில்லை. நான் செய்த எல்லா அட்டகாசங்களையும் நிஷாவிடம் கூறிவிட்டார்கள். எல்லாவற்றையும் அமைதியாகக் கேட்டுக் கொண்டாள். அடுத்த நாள் இந்தியாவுக்குப் போகணும் என்று தொடங்கிவிட்டாள்" என்றான் ராஜேஷ்.

"இவர் என்னிடம் நம் திருமணம் பிடிக்காததால்தான் என் அப்பா பேசுவதில்லை என்று பொய் சொல்லியிருந்தார். ரகுவின் பெற்றோர் கூறிய பிறகுதான் எனக்கு ராஜேஷின் ஆடம்பரத்தை விரும்பும் குணமும், பொய்யான ஒன்றை மெய் என்று நம்பும் முட்டாள்தனமும் புரிந்தது. மாமாவின் தியாக குணமும் நல்ல உள்ளமும் புரிந்தது. வேறு யாராவதாக இருந்தால் பெண்டாட்டி இறந்தவுடன் புதுமாப்பிள்ளை ஆகியிருப்பார்கள். இவ்வளவு நல்ல எண்ணம் கொண்ட ஒரு தந்தையை உதறித் தள்ளியிருக்கிறாரே! எனக்கு ஏதாவது ஒன்று நேர்ந்தால் எனக்கும் அதே நிலைமைதானே என்று கேட்டேன். அது தப்பா அப்பா?" என்றாள் கள்ளம் கபடமற்று.

ராமச்சந்திரனும் அக்காவும் ஒன்றும் பேசவில்லை.

"அப்பா, இப்போது நாங்கள் செய்த தவறுக்குப் பிராயச்சித்தமாக நீங்களும் எங்களுடன் வரவேண்டும்" என்று முடித்தாள் நிஷா.

"நீங்கள் எங்களிடம் இவ்வளவு அன்பாக இருப்பதும், இருவரும் எங்களைப் புரிந்துகொண்டதுமே போதும் அம்மா. உங்களால் முடியும்போது இந்தக் குட்டிப்பயலை மட்டும் கொண்டுவந்து எங்களிடம் காட்டிவிட்டுப் போங்கள். என் அக்காதான் என் கஷ்டங்களில் கை கொடுக்கிறாள். இனிமேல் இந்த வாழ்க்கை இந்த மண்ணில்தான். என்னுடைய அக்காவுடன்தான்" என்றார் ராமச்சந்திரன்.

கி. பானுமதி பார்த்தசாரதி,
சான் ரமோன்
More

அஸிஸியின் அற்புத ஞானி
ஆன்மிகம், ஆண்டவன், ஆண்டிராய்டு
பேச்சு!
Share: