|
|
|
முன்கதை: ஷாலினியின் சக ஆராய்ச்சியாளரான என்ரிக்கே காஸ்ட்ரோ தன் செயற்கை மரபணு (Synthetic DNA) தொழில்நுட்ப நிறுவனம் பெரும் பிரச்சனையில் சிக்கிக் கொண்டதாகக் குறிப்பிடவே, ஷாலினி அவருக்கு சூர்யாவை அறிமுகம் செய்தாள். என்ரிக்கே மரபணுவின் ரெட்டைச் சுருள் வடிவம், மரபணுத் தொடர்கள் (chromosomes), இனப்பெருக்கத்தில் அவை இரண்டாகப் பிரிந்து தந்தை, தாயின் பாதிகள் சேர்ந்து குழந்தையின் குரோமசோமாக உருவாகின்றன என்பவற்றை விளக்கினார். எவ்வாறு இயற்கையிலும் மனிதர்களின் தேர்ச்சி இனப்பெருக்கத்தாலும் (selective breeding) மரபணு மாற்றங்கள் பரவுகின்றன என்பதை விளக்கினார். மேற்கொண்டு பார்ப்போம்!
*****
எதற்காக மரபணுக்களை வெட்டி ஒட்டி மாற்றவேண்டும் என்ற சூர்யாவின் வினாவுக்கு அடிப்படை விளக்கமாக, இயற்கையிலும், மனித இனத்தின் முயற்சியால் தேர்ச்சி இனப்பெருக்கத்தின் மூலம் மரபணு மாற்றங்கள் எவ்வாறு பரவுகின்றன என்று விளக்கினார். ஆனால் அவை இரண்டுமே செயற்கை மாற்றங்கள் அல்ல என்று என்ரிக்கே கூறவே, அதைப் புரிந்துகொண்ட சூர்யா, அப்படியானால் என்ரிக்கேவின் சொந்தத் துறையான செயற்கை மரபணு மாற்றம் பற்றி விவரிக்குமாறு என்ரிக்கேவைக் கேட்டார்.
என்ரிக்கே தொடர்ந்தார். "செயற்கையா எப்படி மரபணுக்களை நாங்க மாத்தறோங்கறதைப் பத்தி விளக்கறத்துக்கு முன்னாடி ஏன் மாத்தறோம். அதுனால என்னென்ன பலன்கள்னு தெரிஞ்சுக்கறது நல்லதுன்னு நினைக்கறேன்..."
சூர்யா "ஓ, அஃப்கோர்ஸ்! விவரமா சொல்லுங்க!" என்றார்.
என்ரிக்கே அபரிமிதமான உற்சாகத்துடன் விவரிக்க ஆரம்பித்தார். "மனித இனம் தன் தேவைகளுக்காக தேர்ச்சி இனப்பெருக்கம் செஞ்சாங்கன்னு பார்த்தோம். அதில் பலவகை முன்னேற்றங்கள் கண்டோம். பலவித காய்கறி மற்றும் பழவகை இனங்களை உருவாக்கி, பூச்சிகளால் எளிதில் பாதிக்கப்படாத வகைகளை உருவாக்கினாங்க. அதிக அளவில் தானியங்களைக் கொடுக்கும் தாவரங்களை உருவாக்கினாங்க. அதிகம் பால் கொடுக்கக்கூடிய பசுமாடு வகைகளை வளர்த்தாங்க. இந்த மாதிரிப் பலன்களை தேர்ச்சி இனப்பெருக்கம் குடுத்துச்சு.
ஆனா, அத்தகைய பலன்களைக் காண ரொம்பகாலம் எடுத்துக்க வேண்டியதாச்சு. மேலும், ஒரு சிலவிதமான பலன்களே கிடைச்சது."
சூர்யா "புரியுது. அத்தகைய பலன்களை இன்னும் துரிதமாப் பெறணும்; மேலும் இன்னும் அதிக விதமான பலன்களை உருவாக்கணும்னா செயற்கை மரபணு மாற்றங்கள் தேவைப்படுது, அதானே?" என்றார்.
என்ரிக்கே ஆமோதித்துவிட்டுத் தொடர்ந்தார். "அப்படியேதான்! இதுவரைக்கும் இயற்கை அளித்த மாற்றங்களைப் பரப்பக் கற்றுக்கொண்ட மனித இனம், தாம் வேண்டிய மாற்றங்களைத் தாமே உருவாக்க முயற்சி எடுக்க ஆரம்பித்தது. அதற்கு முதலில் ஒவ்வொரு உயிரினத்துக்கும் உள்ள மரபணுத்திரள் (genome) என்ன, அதில் இருக்கும் ஒவ்வொரு மரபணுவும் அந்த உயிரினத்தின் எந்த அம்சத்தைக் கட்டுப்படுத்துகிறது, எந்த மரபணுவின் எவ்வித மாற்றம் அந்த அம்சங்களை எப்படி மாற்றுகிறது என்று தீவிரமாக ஆராய்ச்சிகள் செய்து கண்டுபிடித்தனர். முதலில் அதற்கு மிக அதிக காலம் பிடித்தது. ஆனால் சில தொழில்நுட்ப முன்னேற்றங்களால் சமீப காலத்தில் மிக வேகமாக மரபணுக்களைப் பற்றியும் அவற்றின் மாற்றங்களின் விளைவுகளைப் பற்றியும் அறிந்துகொள்ள முடிகிறது."
கிரண் ஆரவாரித்தான். "ஓ யெஸ்! மனித மரபணுத் திரள் திட்டப்பணி (human genome project) பத்தி நான் கேள்விப் பட்டிருக்கேன். அதைத்தானே சொல்றீங்க?"
என்ரிக்கே தலையாட்டினார். "ஆமாம். ஆனா அதுக்கும் முன்னாடி, ஈ, கொசு, எலி போன்ற சில சிறிய, எளிய உயிரினங்களின் மரபணுத் திரள்களை விவரமாகக் கண்டறிஞ்சாங்க. ஒவ்வொரு மரபணுவின் நோக்கத்தைம், மாற்ற விளைவையும் புரிஞ்சிக்கிட்டாங்க. அடுத்தது, தங்களுக்கு வேண்டியபடி மாற்ற முற்பட்டாங்க. உதாரணமா, நீங்க மரபணு மாற்றிய உயிரினம் (genetically modified organism) அதாவது GMO பட்டம் பதிக்கப்பட்ட காய்கறி, பழங்கள், பால் வகைகளைப் பற்றிக் கேள்விப்பட்டிருப்பீங்களே?"
கிரண் முகத்தைச் சுளித்தான். "அய்யயே! அதெல்லாம் நான் வாங்கறது கிடையாது. சுத்த ஆர்கானிக் GMO இல்லாத வகைகளைத்தான் நான் பாத்து பாத்து வாங்கறேன்."
என்ரிக்கே முறுவலித்துத் மெல்லத் தலையசைத்தார். "உன்னை மாதிரி ரொம்ப நிறையப்பேர் இருக்காங்க. ஆனா அது சரியில்லை கிரண்! நாம முன்னாடியே சொன்னோம் இல்லையா, இயற்கையா ஏற்படற மாற்றத்தை தேர்ச்சி இனப்பெருக்கத்தின் மூலம் பரப்பறோம்னு. GMOவும் அப்படித்தான்னு வச்சுக்கலாம். எப்படிப்பட்ட மரபணு மாற்றம் செஞ்சா நமக்குத் தேவையான அம்சம் – உதாரணமா, சீக்கிரம் அழுகாத தக்காளி – கிடைக்கும்னு புரிஞ்சு அது பாதுகாப்பானதுன்னு உணவு மருந்து மேலாண்மையகத்துக்கு நிரூபிச்சப்புறந்தான் அது கடைக்கு வருது. அதை பயமில்லாம வாங்கி சாப்பிடலாம்."
கிரண் நம்பிக்கையின்றி "ஊம்..." என்றான்.
என்ரிக்கே பெருமூச்சுடன் தொடர்ந்தார். "அப்படிப்பட்ட நுணுக்கமான மரபணு மாற்றத்துறைக்கு மரபணுப் பொறியியல் (genetic engineering) என்ற பெயர் சூட்டினாங்க." |
|
கிரண் துள்ளிக் குதித்தான்! "ஓ ஜெனடிக் எஞ்சினீயரிங்கா? எனக்கே அதுபத்திக் கொஞ்சம் தெரியுமே? மருந்து நிறுவனங்கள் தங்கள் பங்குகளை பொதுச்சந்தையில விக்கறப்போ எப்படி அந்த மருந்துகளை மரபணுப்பொறியியல் வழிமுறையில செஞ்சோம்னு பீத்திப்பாங்களே அதானே!"
என்ரிக்கே வாய்விட்டுச் சிரித்தார்! "சரியாப் போச்சு போ! மருந்துகளைச் செய்யறது ஒருபக்கம் இருக்கட்டும். ஆனா மரபணுப் பொறியியல் அதுக்கு மட்டுமில்லை. பலதரப்பட்ட மரபணு மாற்றங்களை உருவாக்கும் வழிமுறைகளையும் பொதுவாகக் குறிப்பிடும் பட்டப்பெயர் அது. நாம் இப்ப பேசிக்கிட்டிருக்கற எல்லா உதாரணங்களையும் அதுல சேத்துக்கலாம். மருந்து, காய்கறி, பழம், அதிகமாக சுரக்கும் பால், சீக்கிரம் பாழாகாத சீஸ், விளைச்சலைப் பெருக்கும் தானிய விதைகள் போன்ற பலவற்றை அப்படிக் குறிப்பிடலாம்."
சூர்யா இடைபுகுந்தார். "ஆனா என்ரிக்கே, இந்த மரபணுப் பொறியியல் பல வருடங்களாவே பரவலான நடைமுறையில இருக்கு போலிருக்கே. ஆனா க்ரிஸ்பர்ங்கறது சமீபத்துலதான் கேள்விப்பட்டிருக்கேன். அது எப்படி?"
என்ரிக்கே முறுவலித்தார். "இது ரொம்ப நல்ல கேள்வி சூர்யா! நான் குறிப்பிட மறந்துட்டேன். மரபணுப் பொறியியல்ங்கறது பலவிதமான வழிமுறைகளை அடக்கியது. அதுல ரொம்பச் சமீபகால, பெரும் முன்னேற்றந்தான் க்ரிஸ்பர். அதுக்கு முன்னாலயும் விஞ்ஞானிகள் செயற்கையா மரபணு மாற்றங்களைச் செஞ்சிக்கிட்டுத்தான் இருந்தாங்க. ஆனா அவை ரொம்ப சிக்கலான, நேரம் எடுத்துக்கற வழிமுறைகள். க்ரிஸ்பர் மாதிரி மிக நுண்ணிய மாற்றங்களைச் செய்யறதும் கடினம். ஒரு கதையை மாத்தணும்னா அதை முற்கால முறையில் அச்சடிச்சு புதுசா பதிக்கறத்துக்கும், இப்போ கணினியில் எழுத்தை மட்டும் மாத்தி அனுப்பறதுக்கும் இருக்கும் பெரிய வித்தியாசம்!"
சூர்யா வியந்தார். "ஒ! வெரி இன்டரெஸ்டிங்! அப்படிப்பட்ட முந்தைய வழிமுறை என்ன? க்ரிஸ்பருக்கு உடனடியா முந்தி என்ன செஞ்சாங்க? அது இன்னும் பயன்படுத்தப்படுதுன்னு நினைக்கறேன், சரியா?"
என்ரிக்கே தலையசைத்து ஆமோதித்தார். "நல்ல கேள்வி சூர்யா! க்ரிஸ்பருக்கு முந்தி ஒரு மரபணுவை மாத்த, அதை மொத்தமா மாத்த வேண்டியிருந்தது. அதுவும் வைரஸ்களின் உள்ளமைப்பில் புதிய மரபணுக்களைப் பொருத்தி, மாற்ற வேண்டிய உயிரினத்தில் உள்ளே அந்த வைரஸ்களைப் புகுத்தி அவற்றை மாற்றவேண்டிய இடத்துக்கு அனுப்பி அந்த வைரஸ்கள் மரபணுத் தொடர்களைத் தாக்கி பழைய மரபணுக்களைத் தகர்த்தெறிந்து, புதிய மரபணுவைக் பொருத்தும்படிச் செய்ய வேண்டியிருந்தது. அதுவும் ஒவ்வொரு முறையும் சரியானபடி நடக்கும் என்கிற உத்தரவாதம் இல்லை! வைரஸைப் புகுத்திட்டு வேண்டிக்கணும்! சரியா நடந்தா புண்ணியம்! இல்லன்னா மீண்டும் முயற்சி! அப்படி இருந்தது."
கிரண் இடைமறித்தான். "ஸோ, க்ரிஸ்பர் வந்து க்ரிஸ்பா வெட்டு ஒண்ணு துண்டு ரெண்டுன்னு ஆக்கிடுச்சு, அதானே?"
என்ரிக்கே புன்னகைத்தார். "அப்படித்தான்னு வச்சுக்கயேன்! முந்தி சொன்னபடி, கதையை மாத்தறத்துக்கு, வேண்டிய வாக்கியத்துல வேண்டிய வார்த்தையை மட்டும் துல்லியமா மாத்தமுடியறா மாதிரி க்ரிஸ்பர் நுட்பத்தால முடியும்!"
சூர்யா ஆர்வம் அதிகரித்தது. "மரபணு மாற்றங்கள் ஏன் வேணுன்னும் க்ரிஸ்பருக்கு முன்னால என்ன மாதிரி தடங்கல்கள் இருந்ததுன்னும் நல்லாவே விளக்கிட்டீங்க என்ரிக்கே! ரொம்ப நன்றி. இப்ப அடுத்தது இந்த புதிய நுட்பம் எப்படி நுணுக்கமா வேலை செய்யுதுன்னு விளக்குங்க"
என்ரிக்கே க்ரிஸ்பர் வழிமுறையை விவரிக்கத் தொடங்கினார். மூவர் கண்களும் ஆச்சரியத்தில் விரிந்தன.
(தொடரும்)
கதிரவன் எழில்மன்னன் |
|
|
|
|
|
|
|