|
ஜலதோஷ மூலிகை (அத்தியாயம் 9) |
|
- ராஜேஷ், Anh Tran|ஜூலை 2018| |
|
|
|
|
அருண் டேவிட் ராப்ளேயைப் பார்த்தான். அவர் கையில் அந்த ஜலதோஷ மூலிகை! அவனால் அதற்குமேல் தேவாலயத்தினுள் இருக்கமுடியவில்லை. அம்மா அப்பாவிடம் கூடச் சொல்லிக் கொள்ளாமல் திருமணம் நடந்து கொண்டிருந்தபோதே அங்கிருந்து வெளியே சென்றான்.
"ஹலோ கீதா, உங்களுக்கும் அழைப்பு வந்திருக்கு போலிருக்கே" என்று ஒன்றுமே தெரியாதவர் போலக் கேட்டார் ராப்ளே. ஒன்றுமே சொல்லாமல் அவரை ஒரு முறை முறைத்துவிட்டு கீதா அருண் போன திசையில் ஓடினார்.
தேவாலயத்தின் வெளியே இருந்த தாழ்வாரத்தில் அருண் கோபத்தில் கை, காலை உதைத்துக்கொண்டு தனக்குள்ளேயே ஏதோ பேசிக் கொண்டிருந்தான். அவன் வெளியே வந்த சில நொடிகளில் அம்மா அவனைத் தேடிக்கொண்டு வந்தார். அருண் வானத்தைப் பார்த்து ஏதோ கத்தினான். தரையைக் காலால் எத்தினான். காற்றில் குஸ்தி செய்தான்.
"என்னாச்சு கண்ணா? ஏன் இப்படி கல்யாண சமயத்துல வெளியே ஓடி வந்த?" அருணை அணைத்துப் பரிவோடு கேட்டார் கீதா. அருண் பதில் சொல்லாமல் தனக்குள்ளேயே கோபத்தில் ஏதே பேசிக் கொண்டிருந்தான். கீதாவிற்கு மனதில் டேவிட் ராப்ளேதான் காரணமாக இருக்கக்கூடும் என்று தோன்றியது. அவர் அப்படி நினைத்ததுதான் தாமதம், திருமணம் முடிந்து தேவாலயத்திலிருந்து டேவிட் ராப்ளே வெளியே வந்தார். டேவிடைப் பார்த்தவுடன் அருண் தடதடவென்று அவரை நோக்கிக் கத்திக்கொண்டே ஓடினான்.
"ஹே மான்ஸ்டர்! என்ன பண்ணினீங்க ஹில்லரிய? என்ன பண்ணினீங்க அந்த கிராம மக்கள?" என்று கத்தினான். கீதாவிற்கு நெஞ்சு படபடவென்று அடித்துக்கொண்டது. வந்த இடத்தில் இப்படி மரியாதைக் குறைவாக நடந்து கொள்கிறானே என்று பயம் கூடியது.
"Mr. Robles, you the proud owner of Evil Corp, என்ன பண்ணினீங்க?" என்று அவரை அடிக்காத குறையாக, அவர் பக்கத்தில் போய்க் கேட்டான் அருண்.
டேவிட் மிகவும் நிதானமாக "தம்பி, என்னது இது, ஒரு பெரியவர்கிட்ட மரியாதை இல்லாம நடந்துக்கறீங்க? உங்க பள்ளிக்கூடத்தில மரியாதை சொல்லித் தரலியா?" என்றார். கீதா அங்கே வந்து அருணின் கையைப் பிடித்து சாந்தப்படுத்த முயற்சித்தார்.
"அம்மா, இவர் ஒரு ராட்சசர், நாகரிக உடை அணிந்த ராட்சசர்!” என்று டேவிடைப் பார்த்துக் கைகாட்டி மீண்டும் சொன்னான் அருண்.
"கீதா, என்னது இது? உங்க பையன் இவ்வளவு அநாகரிகமா நடந்துக்கறான். உங்களை மாதிரி ஒரு படிச்ச, மதிப்புக்குரிய பெண்மணி அவனுடைய தாயா இருக்கும்போது... வெட்கம். சே... என்னது இது?" என்று டேவிட் எரிச்சல் கலந்த தொனியில் பேசினார்.
திருமணம் முடிந்துவிட்டதால், ஜட்ஜ் குரோவ் அவசர அவசரமாக டேவிட், அருண், கீதா ஆகியோர் இருக்கும் இடம் நோக்கி வந்தார். ஒரு சின்ன கூட்டமே அங்கு கூடிவிட்டது.
"என்ன கீதா, ஏன் அருண் இப்படி உணர்ச்சி வசப்படறான்? என்னாச்சு டேவிட்? ஏன் இந்த ரகளை?" என்று ஜட்ஜ் குரோவ் கேட்டார்.
"ஜட்ஜ் ஐயா, இவரு Pueblo Del Indegna கிராமத்து மக்களைப் பயமுறுத்தி சந்தைக்கு வரவிடாம பண்ணிட்டாரு" என்று அருண் புகார் செய்தான்.
"என்ன முட்டாள்தனம் இது?” டேவிட் கோபத்தோடு பதில் அளித்தார். "ஜட்ஜ் சார், என்னது இது? இந்தப் பையன் ஏதோ உளர்றான்."
கீதா, ரமேஷுக்கு தர்ம சங்கடமாக இருந்தது. ஜட்ஜ் குரோவுக்கும் தன் மகன் ஸ்டீவனின் திருமணத்தில் இப்படி ஒரு குழப்பமா என்று சற்று ஆடிப்போனார். டேவிடை சாந்தமாக இருக்கச் சொல்லிவிட்டு அருணைத் தனியாக அழைத்துக்கொண்டு ஜட்ஜ் குரோவ் கொஞ்சம் ஒதுங்கினார்.
"அருண், என்னப்பா ஆச்சு? நீ இப்படி உணர்ச்சி வசப்பட்டு நான் பார்த்ததே இல்லையே?" என்று கேட்டார் ஜட்ஜ்.
அருண் தன் சந்தேகத்தை ஜட்ஜிடம் மெதுவாகச் சொல்லி அழுதான். ஜட்ஜிற்கு அருண் சொன்னது உண்மையாக இருக்குமோ என்று தோன்றியது. டேவிடை சைகையால் அழைத்தார். கீதாவும் ரமேஷும் கூட வர முயற்சித்தபோது வேண்டாம் என்று தடுத்தார். |
|
டேவிட் அருகில் வந்தார். அருணைப் பார்த்து புன்னகைத்தார். அருண் கோபத்தில் முகத்தை திருப்பிக்கொண்டான். "டேவிட், அருண் உங்க கையில ஏதோவொரு மூலிகை இருந்ததாச் சொல்றான். உண்மையா? மன்னிக்கவும், இப்படி உங்களைக் கேள்வி கேட்கறதுக்கு" என்றார் ஜட்ஜ்.
டேவிட் சிரித்துக்கொண்டே, தனது கைகளை விரித்து அருணிடம் காட்டி "முகர்ந்து பார் மகனே, என் கையை முகர்” என்று பணிவோடு சொன்னார். "அந்த மூலிகை என் கையில இருந்திருந்தா அதோட வாசம் இருக்கணும் இல்லையா?"
அருண் பட்டென்று டேவிடின் கையை முகர்ந்தான்.
"என்னப்பா, அருண், மூலிகை வாசம் வருதா?" என்று சிரித்துக்கொண்டே கேட்டார் டேவிட். அருணின் முகத்தில் ஏமாற்றம். "Designer Cologne. என் நண்பர் ஒருவர் எனக்கு பரிசா கொடுத்தது. எப்படி இருக்கு வாசனை?" என்று சிரித்துக்கொண்டே கேட்டார் டேவிட். அதோடு விடாமல், தனது கோட் பாக்கட்டையும் காலி செய்து காட்டினார்.
"ஜட்ஜ் சார், நான் கிளம்பட்டுமா? எனக்கு பசிக்குது. கல்யாண சாப்பாடு சாப்பிட வேண்டாமா?" என்று ஜோக் அடித்து அங்கிருந்து நகர்ந்தார் டேவிட். டேவிடின் தீய எண்ணத்தை அம்பலப் படுத்த முடியவில்லையே என்ற ஏமாற்றம் அருணுக்கு.
"அருண், கவலைப்படாதே. உன் பக்கம் உண்மை இருந்தால், அது எப்படியாவது வெளியே வரும். கவலைப்படாதே" என்று அவனுக்கு ஆறுதல் சொல்லி, அவனை அப்பா, அம்மோவோடு வீட்டிற்கு அனுப்பி வைத்தார் ஜட்ஜ்.
*****
வீட்டிற்குப் போகும் வழியில் ஒன்றுமே பேசாமல் உம்மென்று வந்தான் அருண். அப்பாவும், அம்மாவும் ஒன்றும் சொல்லாமல் இருந்தார்கள். வீட்டில் உள்ளே நுழைவதற்கு முன்னர், வெளிக்கதவை திறந்ததும் கதவின் கீழே ஒரு காகித உறை இருப்பதைப் பார்த்தான் அருண். கீழே குனிந்து, அதை எடுத்து அதன்மேல் என்ன எழுதி இருக்கிறது என்று பார்த்தான்.
"Dear Arun, It’s me. Open up.”
என்று எழுதி இருந்தது.
(தொடரும்)
கதை: ராஜேஷ் படம்: Anh Tran |
|
|
|
|
|
|
|