தமிழ்மையத்தில் அருள்தந்தை ஜெகத் காஸ்பர்
|
|
|
இந்தியப் பிரதமர் மன்மோகன் சிங்கின் அமெரிக்கப் பயணத்தை யொட்டி அவருடன் வந்திருந்த முப்பது வணிகத் தலைவர்களுள் அப்போலோ மருத்துவமனைகளின் தலைவர் மரு. பி.சி. ரெட்டியும் ஒருவர். வாஷிங்டனில் அவர் தங்கியிருந்த விடுதியில் தொலைபேசி மூலம் அவரைப் பேட்டி கண்டோம்:
கே: இன்றைய இந்தியாவில் மருத்துவத்துறை எந்த அளவில் இருக்கிறது?
ப: கடந்த பதினைந்து வருடங்களில், குறிப்பாகச் சொன்னால் கடந்த ஐந்து ஆண்டுகளில் நாம் இந்திய மருத்துவத் துறையில் பெரும் சாதனைகள் புரிந்திருக்கிறோம். வளர்ந்த சமுதாயங்களுக்கு நிகராக மருத்துவத் தொழில்நுட்பங்கள் இந்தியாவில் பெரும்பான்மையான நகரங்களில் இப் பொழுது வந்துவிட்டன. உதாரணத்திற்கு, அப்போலோ மருத்துவமனைகளில் நாங்கள் கடந்த ஆண்டில் மட்டும் 55,000 க்கும் மேற்பட்ட இருதய அறுவை சிகிச்சைகளை (99.6% முழு வெற்றியுடன்) முடித்திருக்கிறோம். சிறுநீரக, கல்லீரல் மற்றும் இருதய மாற்று அறுவை சிகிச்சைகள் (transplant) இப்போது இந்தியாவில் உள்ள பெரிய மருத்துவமனைகளில் தலைசிறந்த நிபுணர்கள் தலைமையில் நடைபெறுகின்றன. எல்லாவற்றிற்கும் மேலாக, வளர்ந்த நாடுகளில் இந்த சிகிச்சைகளுக்கு ஆகும் செலவில் 15-30 சதவிகிதத்தில் இந்தியாவில் இது சாத்தியமாகிறது. குறைபாடுகள் என்னவென்றால், பணம் இல்லாதவர்களுக்கும் தொலைதூரத்து கிராமங்களில் உள்ளவர்களுக்கும் இந்த சிகிச்சைகளெல்லாம் எட்டாக் கனியாக இருப்பது தான். வளர்ந்த நாடுகள் போல் காப்பீட்டுத் திட்டங்கள் நம் நாட்டில் இருந்தால் இந்த வளர்ச்சிகள் சமுதாயத்தில் மிக நலிந்தவர் களையும் எளிதில் சென்று அடையும். மேலும் ஒரு குறை என்றால் இந்த வளர்ச்சி கள் பற்றி நம் நகரங்களில் வாழும் பல மக்களுக்கே விவரங்கள் தெரிவதில்லை.
கே: நகரங்களில், பெரிய மருத்துவ மனைகளில் கிடைக்கும் அதி நவீன மருத்துவ முறைகள் கிராம மக்களுக்கு கிட்ட வைப்பதில் அப்போலோ மருத்துவமனைகளின் பங்கு பற்றி...
ப: இன்றைய தேதியில் செயற்பாட்டில் உள்ள முப்பத்தி இரண்டு அப்போலோ மருத்துவமனைகளில் ஏழு மட்டுமே பெரு நகரம் சார்ந்த இடங்களில் உள்ளன. மற்றவை சிறு நகரங்களிலும் கிராமம் சார்ந்த இடங்களிலும் நிறுவப்பட்டுள்ளன. இவற்றில் பெருநகர மருத்துவமனைகளுடன் தொலை மருத்துவம் (Telemedicine) மூலம் தொடர்பு கொள்ளும் வசதிகள் இருக்கின்றன. நான் பிறந்து வளர்ந்த கிராமமான அரகொண்டாவில் (ஆந்திர பிரதேச சித்தூர் மாவட்டம்) ஐம்பது கட்டில்கள் கொண்ட மருத்துவமனை செவ்வனே செயல்படுகிறது. இது முன்னாள் அமெரிக்க அதிபர் பில் கிளின்டனால் திறந்து வைக்கப்பட்டு, இப்போது பன்னிரண்டு முழுநேர மருத்துவர்களால் நடத்தப்படுகிறது. சிடி ஸ்கேன் வரையில் எல்லா பரிசோதனைகளும் இங்கு கிடைக்கும். வளரும் நாடுகளில் உள்ளது போல் எங்கள் கிராமத்தில் உள்ள அனைவருக்கும் மருத்துவக் காப்பீட்டுத் திட்டங்கள் உள்ளன; இந்த வளர்ச்சிகள் இந்தியாவில் உள்ள எல்லா கிராமங்களுக்கும் பரவ வேண்டும் என்பதே என் கனவு. தென் கொரிய நாட்டில் அப்படிப்பட்ட வசதிகள் நடைமுறையில் வந்துவிட்டன. ·பிலிப்ஸ் நிறுவனத்தார் மருத்துவப் பரிசோதனைக் கூடம் மற்றும் எக்ஸ்ரே, இசிஜி வசதிகள் கொண்ட ஒரு ஊர்தியை எங்கள் நிறுவனத்திற்கு நன்கொடையாக அளித்தனர்; இந்த ஊர்தி, ஒரு முழு நேர மருத்துவரையும் கொண்டு மதுரைப் பகுதியில் உள்ள கிராமங்களுக்குச் சென்று நடமாடும் மருத்துவமனையாக செயல்படுகிறது. நீரிழிவு, இரத்த அழுத்தம், இருதய நோய் போன்ற பல நோய்களுக்கான தேடுதல்கள் (screening) இதில் மேற் கொள்ளப்படுகின்றன. இந்த ஊர்தியும் தொலை மருத்துவத்திற்கான வசதிகள் கொண்டதாகும்.
கே: மருத்துவம் சார்ந்த வேறு எந்தெந்த துறைகளில் இப்பொழுது நீங்கள் காலடி வைத்திருக்கிறீர்கள்?
ப: அப்போலோ மருத்துவமனைகள் நோய்களை குணப்படுத்துவதைத் தவிர பல்வேறு மருத்துவத் துறைகளில் முன்னோடியாக உள்ளன. செவிலியர் கல்லூரிகள் பலவற்றை நாங்கள் திறம்பட நடத்துகிறோம்; மருத்துவத் தகவல் தொழில்நுட்பவியல் (Health Information Technology) என்கிற வளரும் துறையில் பயிற்சி நிறுவனங்கள் ஏற்படுத்தி பலருக்கு வேலைவாய்ப்பு ஏற்படுத்துகிறோம். மருத்துவத் துறையைச் சார்ந்த வர்த்தக முறை வெளியெடுப்பில் (Medical Business Process Outsourcing) அப்போலோ இப்பொழுது காலடி எடுத்து வைத்துள்ளது. பென்சில்வேனியா பல்கலைக் கழகத்தின் எக்ஸ்ரே பிரிவு அவர்களின் மருத்துவக் குறியிடுதல் மற்றும் வரவு செலவு கணக்கு பராமரிப்புகளை (Billing and coding) எங்கள் நிறுவனத்திடம் ஒப்படைத்துள்ளது.
கே: வெளிநாட்டிலிருந்து வரும் நோயாளிகள் பற்றி...
ப: ஏறக்குறைய உலகில் உள்ள அனைத்து நாடுகளிலிருந்தும் நோயாளிகளை நான் அப்போலோவில் சந்திக்கிறேன். நீங்கள் பார்த்திருப்பீர்களே - இங்கே அமெரிக்காவில் சிபிஎஸ் வழங்கும் '60 minutes' நிகழ்ச்சியில் மருத்துவச் சுற்றுலா எனப்படும் 'Health tourism' பற்றி - அந்த நிகழ்ச்சி ஒளிபரப்பாகிய அடுத்த நாள் எனக்கு கிட்டத்தட்ட ஆயிரத்துக்கும் மேற்பட்ட மின்னஞ்சல்கள் குவிந்தன. எலும்பு மூட்டு அறுவை சிகிச்சைகள், இருதய அறுவை சிகிச்சைகள் போன்றவற்றிற்கு வெளிநாடுகளிலிருந்து வரும் நோயாளிகள் சிகிச்சை முடிந்த நான்காவது நாள் கடற்கரை ஓரமாக அமைந்துள்ள அழகான விடுதிகளுக்கு அனுப்பப்படுகிறார்கள். அங்கே அவர்களுக்கு பிசிகல் தெரபி ஆகிய சிகிச்சைகள் வழங்கப்படுகின்றன. நல்ல ஒரு விடுமுறையைக் கழித்தது போல அவர்கள் உணர்கிறார்கள். இவை அனைத்தும் சேர்த்தாலும் அவர்களுக்கு மேல் நாடுகளில் ஆகும் செலவில் நான்கில் ஒரு பங்கு தான் செலவாகிறது.
இன்றைய தேதியில் இந்தியாவில் உள்ள இந்த வசதிகள் பற்றி வெளிநாட்டில் வாழ் இந்தியர்கள் பலருக்கே தெரிவதில்லை. அமெரிக்காவிலிருந்து வரும் இந்தியர்களில் பெரும்பான்மையானவர்கள் அவசர சிகிச்சைக்கு மட்டுமே எங்கள் மருத்துவமனைக்கு வருகிறார்கள். என்னுடைய எண்ணம் என்னவென்றால், மருத்துவச் சிகிச்சை என்பது நோயாளியின் விருப்பத்திற்கு ஏற்ப இருக்க வேண்டும் என்பதே. அமெரிக்கர் ஒருவருக்கு இந்தியாவில் வந்து அறுவை சிகிச்சை செய்து கொண்டு உடல் தேர்ச்சி பெற விருப்பம் என்றால் அதற்கு அமெரிக்க மருத்துவக் காப்பீட்டு நிறுவனங்கள் ஒத்துழைக்க வேண்டும்; அவர்களுக்கு இங்கு ஆகும் செலவில் மூன்றில் ஒரு பங்கு ஆனால் கூட அவர்களுக்கு இலாபம் தானே? இதை அமெரிக்க நிறுவனங்களிடத்து வலியுறுத்துவதும் என்னுடைய இந்த பயணத்தின் ஒரு நோக்கமாகும். அமெரிக்காவில் 42 மிலியன் மக்களுக்கு மருத்துவக் காப்பீடு இல்லை என்பது பற்றி எல்லோரும் பேசுகிறார்கள். அமெரிக்க கீழ் நடுத்தர வர்க்கத்தை சார்ந்தவர்கள் அப்படிப்பட்ட பலர் இந்தியா வரை பயணம் மேற்கொள்ள இசைந்தால் போதும்; விலையுயர்ந்த சிகிச்சைகள் பலவற்றை நாங்கள் குறைந்த செலவில் வெற்றிகரமாக செய்து காட்டுவோம். மருத்துவ வசதிகளுக்கு எல்லை இருக்கக் கூடாது - healthcare should be borderless - என்பது என்னுடைய கருத்து. |
|
கே: ஜான் ஹாப்கின்ஸ் பல்கலைக் கழகத்தோடு நீங்கள் ஏற்படுத்தியிருக்கும் கூட்டமைப்பு பற்றி...
ப: இது ஒரு வரலாற்று புகழ் மிக்க, அனைவருக்கும் பயனுள்ளதாக அமைந்துள்ள கூட்டமைப்பு என்று நான் எண்ணுகிறேன். எங்கள் பல்வேறு மருத்துவப் பிரிவுகளும் சேர்ந்து பணிபுரியும். குறிப்பாக, வெள்ளைத்தோல் கொண்ட மக்களை விட தென் ஆசியர்களுக்கு மாரடைப்பு மற்றும் இருதய நோய் வருவதற்கான சாத்தியக் கூறுகள் பத்து முதல் பதினைந்து பட்சம் அதிகம். இதற்கான காரணங்கள் என்ன என்பது பற்றி அறிந்து கொள்ள அவர்கள் விரும்புகிறார்கள். மேல் நிலை ஆராய்ச்சி எனப்படும் hi-end research என்பது இந்த கூட்டமைப்பு மூலம் சிறப்பாக வளரும் என்று நான் நம்புகிறேன். பாஸ்டன் அருகிலுள்ள ·பிரேமிங்கம் நகரில் அறுபதுகளிலும் எழுபதுகளிலும் நடத்திய ஆராய்ச்சிகள் மூலம் தான் நாம் முதன்முதலில் மாரடைப்பு போன்ற இருதய நோய்க்கான காரணங் களைக் கண்டறிந்தோம். இந்த கூட்டமைப் பின் ஆராய்ச்சிகள் மூலம் அது போல சென்னை நகரை கிழக்கின் ·பிரேமிங்கம் 'Framingham of the East' ஆக்கிவிடுவோம். மருத்துவர்களுக்கான தொடர் கல்வி நிகழ்ச்சிகளும் (Continuing Medical Education) இந்த கூட்டமைப்பு மூலமாக புதிய தெம்பு பெறும்.
மென்பொருள் மற்றும் தகவல் சேகரிப்பு பிரிவுகளில் இந்தியர்கள் யாருக்கும் சளைத்தவர்கள் இல்லை. நோயாளிகளுக்கும் பற்றாக்குறை இல்லை. இவ்விரு பலங்களைக் கொண்டு நாம் புதிய மருந்துகள் வைத்து நடத்தும் சோதனைகளை (clinical trials) குறைந்த செலவிலும், வேகமாகவும் முடித்து விட்டால் அது மருந்து தயாரிக்கும் நிறுவனங்களுக்கும் நம் நோயாளிகளுக்கும் பயனுள்ளதாக அமையும். இதனால் மருந்து தயாரிப்பவர்கள் உல கெங்கும் மருந்து விலைகளைக் குறைத்தால் அது எல்லோருக்கும் உதவுமே!
கே: மேல் நாடுகளிலிருந்து இந்தியா திரும்ப விரும்பும் மருத்துவர்களுக்கு நீங்கள் என்ன சொல்ல விரும்புகிறீர்கள்?
ப: முப்பது வருடங்களுக்கு முன் நான் இந்தியா திரும்பிய போது அனாதையாகத் திரும்பினேன். அப்போது இந்தியாவில், மருத்துவத் துறையில் எந்தத் தொழில்நுட்ப வசதிகளும் அமெரிக்காவில் இருந்தது போல் எனக்கு இல்லை. இன்றோ நிலைமையே வேறு; தேவையான அடிப்படை வசதிகள் (infrastructure) அனைத்தும் அங்கே கிடைக்கிறது. திரும்ப விரும்பும் மருத்துவர்களிடத்து நான் கொண்டு வரச் சொல்வது இரண்டு பொருட்கள் தான்-ஒன்று அவர்களின் ஸ்டெதாஸ்கோப்; மற்றொன்று அவர்களின் திறமை! வேறு எதுவுமே வேண்டாம். என்னுடன் பணிபுரியும் மருத்துவர்களில் கிட்டத்தட்ட ஐம்பது சதவிகிதத்தினர் அமெரிக்கா, இங்கிலாந்து அல்லது ஆஸ்திரேலியாவில் பயிற்சி பெற்றவர்கள் தான். ஒரு சிலர், விடுமுறைக் காலங்களில் இந்தியா வந்து மூன்று அல்லது நான்கு வாரங்கள் எங்களுடன் பணி புரிகிறார்கள். அவர்கள் விரிவுரைகள் கொடுக்கவோ, மருத்துவத் தொடர் கல்வி நிகழ்ச்சிகள் நடத்தவோ, அறுவை சிகிச்சை கள் புரிவதற்கோ நாங்கள் எளிதில் வசதிகள் செய்கிறோம்.
கே: நவீன மருத்துவம் தவிர இந்தியா உலகத்திற்கு வேறு வகை மருத்துவம் எதுவும் தரும் நிலையில் உள்ளதா?
ப: நம் மூதாதையர்கள் மருத்துவத்தில் சிறந்து விளங்கியவர்கள். வேதங்களையும் புராணங்களையும் நிதானமாக அலசினால் முடக்கு வாதம், ஒற்றைத் தலைவலி போன்ற நீடித்த நோய்களுக்கெல்லாம் தீர்வு கண்டுபிடித்து வைத்திருக்கிறார்கள். இராமாயணத்தில் வரும் பாத்திரங்கள் எல்லாம் ஆயிரம் ஆண்டுகள் வாழ்ந்தார்கள் என்றால் அது வெறும் கதையாக மட்டும் இருக்காது என்பது என் கருத்து.
காதுக்கென்று ஒரு மருத்துவர், காலுக்கென்று ஒரு மருத்துவர் என்பதெல்லாம் கடந்த நூற்றாண்டில் வந்தவர்கள் தானே? காட்டில் வாழும் மனிதர்களும் விலங்குகளும் எப்படி இந்த மருத்துவர்களெல்லாம் இல்லாமல் நலமாக வாழ்கின்றன? ஒரு குறிப்பிட்ட இலையை நுகர்ந்தோ, கீரையையும் கிழங்கையும் உண்டோ இவர்கள் நோய் களைப் போக்கிவிடுகிறார்கள். கிழக்கிலும் மேற்கிலும் சிறந்தது நம்மிடம் இப்போது உள்ளது - மேற்கொண்டு ஆராய்ச்சிகள் தேவை என்பது மட்டும் நிச்சயம்.
எங்கள் மருத்துவமனையில் இந்திய மருத்துவத்திற்கென நாங்கள் ஒரு தளத்தையே ஒதுக்கியுள்ளோம் - யோகாசனம், இசைச் சிகிச்சை, ரெய்கி, பிராணிக் ஆறல் போன்ற அனைத்தும் நல்வாழ்வு ஏற்படுத்தும் இலட்சியத்துடன் நிறுவப்பட்டுள்ளன.
கே: சமூக சேவையில் அப்போலோவின் பங்கு என்ன?
ப: முன்னே கூறியது போல் சமூகத்தில் நோய்களைத் தேடிக்காணும் பரிசோதனைகளைப் புரிகிறோம். சமீபத்தில் ஏற்பட்ட சுனாமி கோரம் தாக்கிய ஒரு மணி நேரத்துக்குள் எங்கள் மருத்துவக் குழு பாதிக்கப் பட்ட இடத்தில் இருந்தது. அப்போலோ தொழிலாளர்கள் மட்டும் ஒன்றே முக்கால் கோடி ரூபாய் நிவாரண நிதி அளித்தார்கள். ஆறு கொள்கலன்களில் மருத்துவத் தேவைகளை நாங்கள் கொழும்புவிற்கு கப்பலில் அனுப்பினோம். தமிழகத்தில் பெரிதும் பாதிக்கப்பட்ட நாகப்பட்டினம் பகுதிக்கு அப்போலோவின் ஒன்பது ஆம்புலன்ஸ் ஊர்திகள் பணிபுரியச் சென்றன. உள்ளூரைச் சேர்ந்த மருத்துவர்களும் மருத்துவமனைகளும் எங்களுக்கு பெரிதும் துணையாக இருந்தனர். ஆனாலும் எனக்குள் ஒரு கேள்வி; மாநிலமெங்கும் மருத்துவர்களும் மருத்துவமனைகளும் மட்டுமே சேவை புரிய ஒரு எதிர் பார்ப்பு உள்ளது. சாராய வியாபாரத்தில் பெரும் பணம் புரட்டுபவர்கள், தொழிலதிபர்கள், திரையுலக நட்சத்திரங்கள் எல்லோரும் இந்த சமயங்களில் கூடி வந்து உதவினால் இன்னும் பல உயிர்களைப் பாதுகாக்கலாமே!
கே: இறுதியாக - இந்தியாவில் அடுத்த சில ஆண்டுகளில் சவாலாக இருக்கக் கூடிய மருத்துவ பிரச்சினைகள் எது?
ப: கட்டாயமாக நீரிழிவு நோய் மற்றும் அதைச் சார்ந்த நோய்கள் தான். வாழ்க்கை முறையினால் ஏற்படக்கூடிய நோய்கள் அமெரிக்கா, இந்தியா என்று வித்தியாசம் பார்ப்பதில்லை. அலுவல் முறைசாரா புள்ளி விவரங்களை அலசினாலே சென்னை போன்ற நகரங்களில் இன்றைய தேதியில், மக்கள் தொகையில் பதினைந்து சதவிகிதத் தினருக்கு நீரிழிவு நோய் இருப்பதாகத் தெரிகிறது. அதிகார பூர்வமாக கணக்கெடுத் தால் இது மேலும் அதிகரிக்கக் கூடும் (25% அளவிற்கு) என்று கூறுகிறார்கள். இதனால் இருதய நோய் மற்றும் இரத்தக் கொதிப்பு ஆகியவை பெருகும்.
மருத்துவக் காப்பீடு பெரும்பான்மை யினருக்கு இல்லாத பட்சத்தில் இது பெரும் சவாலாக இருக்கப் போகிறது. இந்தப் பயணத் தில் அமெரிக்க மருத்துவக் காப்பீட்டு நிறுவனங்களை இந்தியாவில் காப்பீட்டுத் திட்டங் களை விரிவுபடுத்த முறையிடப் போகிறேன்.
சந்திப்பு: மரு. நிரஞ்சன் சங்கரநாராயணன்
*****
அப்பொலோ - ஜான் ஹாப்கின்ஸ் மருத்துவமனை ஒப்பந்தம்
அமெரிக்காவில் உள்ள ஜான்ஸ் ஹாப்கின்ஸ் சர்வதேச மருத்துவமனை குழாமும் இந்தியாவில் உள்ள அப்பொலோ மருத்தவமனை குழாமும் ஜூலை 14, 2005ல் ஓர் ஒப்பந்த உடன்படிக்கையில் கையெழுத்து இட்டனர். இது இந்தியாவில் உடல்நலப் பாதுகாப்பு வழங்கும் பெரிய நிறுவனமான அப்போலோவுக்கும், அமெரிக்காவின் தலைசிறந்த மருத்துவமனைகளுள் முதலிடத்தை வகிக்கும் ஜான்ஸ் ஹாப்கின்ஸ் மருத்துவ மனைக்கும் இடையே உதிக்கும் உறவின் தொடக்கத்தினைக் குறிக்கிறது. தொடர் சுகாதாரக் கல்வி திட்டம், தொலைக் காட்சிவழி சுகாதாரம், புற்றுநோயியல், நரம்பியல், இதய இயல், செவிலியர் கல்வி, இரண்டாம் மருத்துவர் கருத்து, போன்ற துறைகளில் இந்த இரு நிறுவனங்களும் கூட்டாக செயல்பட இந்த ஒப்பந்தம் வழிவகுக்கிறது. இதன் மூலம் அப்பொலோ மருத்துவமனையினர் ஜான்ஸ் ஹாப்கின்ஸ் மருத்துவர்களைக் கலந்தாலோசிக்க முடிகிறது. ஜான் ஹாப்கின்ஸ் மருத்துவமனையுடன் கூட்டுச் சேர்வது என்பது, உலகத் தரத்தினை ஒத்த மருத்துவ பராமரிப்பு வசதிகளைக் குறைந்த செலவில் இந்தியா மற்றும் ஆசியாவிற்கு அப்போலோ தரும் முயற்சியில் எடுத்து வைக்கும் அடுத்த படியாகும்.
அமெரிக்காவிற்கு வருகை தந்திருக்கும் இந்தியப் பிரதமர் திரு. மன்மோகன் சிங் அவர்களுடன் விஜயம் செய்த குழுவில் உள்ள மரு. பிரதாப் ரெட்டி, அமெரிக்காவின் முன்னணி நிறுவனமான ஹாப்கின்ஸ் பன்னாட்டு மருத்துவமனை குழாம் தங்கள் அப்பொலோ மருத்துவமனையுடன் கூட்டாக செயல்பட தீர்மானித்தது பற்றி மகிழ்ச்சி தெரிவித்தார். இது இந்திய மக்களுக்கு மட்டுமல்லாமல், மருத்துவத் துறையில் உள்ளவர்களுக்கும் நன்மை அளிக்கும் என நம்பிக்கை தெரிவித்தார். ஹாப்கின்ஸ் மருத்துவ மனையுடன் கூட்டாக இந்தியாவின் முக்கிய நகரங்களின் ஒன்றில் குறைந்த வெட்டு அறுவைச் சிகிச்சை (Minimally Invasive Surgery) யில் முதன் முதலாக ஒரு சேவையை தொடங்கும் திட்டம் உள்ளது. இதனால் மருத்துவ நிலையத்தில் நோயாளிகள் அதிக நேரம் செலவிடுவதை தவிர்ப்பதுடன், சாதாரண நிலைக்கு சீக்கிரம் திரும்பவும் உதவி அளிக்கும் என்றார். மேலும் வளர்ந்து வரும் இந்தியா போன்ற நாடுகளில் அதிகமாக காணப்படும் சில குறிப்பிட்ட நோய்களைப் பற்றி ஆராயும் வாய்ப்பும் கூடும்.
1983ல் சென்னையில் நிறுவப்பட்ட அப்பொலோ மருத்துவமனை குழாம், ஒரு தனியார் அமைப்பு. அப்பொலோ மருத்துவமனைகள் இன்று இந்தியாவின் பல நகரங்களில் மட்டுமல்லாமல் வங்கதேசம், ஐக்கிய அரபுக் குடியரசு, நேபாளம், கானா, நைஜீரியா, பிரிட்டன், மற்றும் சவுதி அரேபியா ஆகிய நாடுகளிலும் உள்ளன. அப்பொலோ இன்று 6400 மருத்துவமனை படுக்கைகளை நிர்வாகிப்பதுடன் இந்தியாவிலும், வெளிநாடுகளிலுமாக 35 மருத்துவமனைகளைச் சொந்தமாகவோ அல்லது நிர்வகிப்பதிலோ ஈடுபட்டுள்ளது. இதன் சிறந்த நிர்வாகத் திறமை, தொழில் நுட்பங்கள், போன்றவற்றால் இது பன்னாட்டு அளவில் சிறந்ததாக அங்கீகரிக்கப்பட்டுள்ளது.
மேலும் விவரங்களுக்கு www.apollohospitals.co, www.amcarelabs.com, www.jhintl.net என்ற வலைத்தளங்களை அணுகவும். |
|
|
More
தமிழ்மையத்தில் அருள்தந்தை ஜெகத் காஸ்பர்
|
|
|
|
|
|
|