Thendral Audio Advertise About us
New User? | Forgot Password? | Email: Password: Login
Current Issue | Previous Issues | Author Index | Category Index | Organization Index | E-Magazine | Classifieds | Digital Downloads
By Category:
சின்னக்கதை | சமயம் | சினிமா சினிமா | இளந்தென்றல் | கதிரவனை கேளுங்கள் | ஹரிமொழி | நிகழ்வுகள் | மேலோர் வாழ்வில் | மேலும்
February 2018 Issue
தென்றல் பேசுகிறது | நேர்காணல் | மாயாபஜார் | சினிமா சினிமா | சின்னக்கதை | ஹரிமொழி | பொது | அஞ்சலி | சிறப்புப் பார்வை | சமயம்
கதிரவனை கேளுங்கள் | சிறுகதை | Events Calendar | கவிதைப்பந்தல் | வாசகர் கடிதம் | பயணம் | மேலோர் வாழ்வில் | விலங்கு உலகம்
எழுத்தாளர் | இளந்தென்றல் | நிகழ்வுகள்
Tamil Unicode / English Search
சிறுகதை
சோப்புக்குமிழிகள்
- S.L.V. மூர்த்தி|பிப்ரவரி 2018||(1 Comment)
Share:
The Police
San Jose

I am committing suicide. My employer Amul Technologies has forced me to resign. This is the only reason for my suicide. No one else is responsible for my death.

- Kumar

இன்னும் சில மணிகள். மேஜைமேல் இருக்கும் தூக்க மாத்திரைகள் என் உடலில். என் உயிர் விண்வெளியில், காற்றோடு காற்றாய். முப்பத்தியிரண்டு வருட வாழ்க்கைக்கு முற்றுப்புள்ளி. சாவு எப்போது வரும் என்று யாருக்கும் தெரியாது. அதனால், எப்போதும் பயம். ஆனால், நாமே நம் மரணநேரத்தைத் தீர்மானிக்கும்போது, பயம் பறந்துவிடுகிறது. வெடித்த இலவம்பஞ்சாக மனம் நிம்மதியில், சந்தோஷத்தில் பறக்கிறது. வா மரணமே வா, இன்னும் சில மணிகளில் நான் உன்னுடன்.

மனைவி சீதா கொஞ்சநாள் அழுவாள். காரணம் தெரியாமல் குழந்தை அனுஷாவும் சேர்ந்து அழலாம். என் பாடியை எப்படி ஊருக்குக் கொண்டு வரலாம் என்று சொந்தக்காரர்கள் ஆளுக்கு ஆயிரம், ஆலோசனை சொல்லுவார்கள். சுசீந்திரம் ஊர் முழுக்க எங்கள் வீட்டு வாசலில்; பலர் ஆறுதல் சொல்ல, சிலர் என் தற்கொலைக்குக் காரணம், மனைவியோடு சண்டையா, வேறு யாராவது வெள்ளைக்காரியோடு காதலா என்று வம்பு பேச.

சுசீந்திரம் நான் பிறந்த மண். நாகர்கோவிலிலிருந்து கன்னியாகுமரி போகும் வழியில் இருக்கும் ஊர். எங்கள் பதினெட்டு அடி அனுமார் பற்றி உங்களுக்குத் தெரிந்திருக்கும். என் அம்மா லீலா பரமசாது. அவர் ஏமாற்றியிருப்பது இந்த அனுமாரை மட்டும்தான். "என் மகனுக்கு நல்லாப் படிப்பு வரட்டும். உனக்கு முழுநீள வடைமாலை போடறேன்", "என் மகனுக்குப் பத்தாவதில் நல்ல மார்க் வரட்டும். உனக்கு முழுநீள வடைமாலை போடறேன்", "என் மகன் ப்ளஸ் டூ-வில் மாவட்டத்திலேயே முதலா வரட்டும். முழுநீள வடைமாலை போடறேன்", "குமாருக்கு எஞ்சினீரிங் காலேஜிலே இடம் கிடைக்கட்டும். உனக்கு முழுநீள வடைமாலை போடறேன்" என்று என் வாழ்க்கையின் ஒவ்வொரு முக்கிய திருப்புமுனையிலும் மனமார வேண்டுதல்கள். அம்மா ஒரு தடவைகூட வடைமாலை போடவில்லை. வேண்டுதல் செய்ய மனசு வேண்டும். அதைப் பூர்த்தி செய்யப் பணம் வேண்டுமே? அம்மாவிடம் அத்தனை காசு இருந்ததில்லை. அனுமார் சாமிக்கு இது தெரியாதா? பகவத்கீதையில் கிருஷ்ண பரமாத்மா சொன்னதுபோல், பலனை எதிர்பாராமல் தன் கடமையைச் செய்துவிட்டார்.

அப்பா சுப்பையா கோர்ட்டில் பியூன். கோர்ட்டில் என்று சொல்வது தவறு. மாஜிஸ்ட்ரேட் வீட்டில் நிறைய நேரமும், கோர்ட்டில் கொஞ்ச நேரமும். பியூன் என்பது மரியாதையான இங்கிலீஷ் வார்த்தை. வீட்டு வேலைக்காரராக அவரை நடத்தினார்கள். காலை ஏழு மணிக்கு மாஜிஸ்ட்ரேட் பங்களாவுக்குப் போவார். அங்கே சமையல், துணி துவைப்பது, குழந்தைகளைக் குளிப்பாட்டுவது, அவர்களுக்கு டிரெஸ் பண்ணுவது, ஸ்கூலில் கொண்டுபோய் விடுவது, செடிகளுக்குத் தண்ணீர் ஊற்றுவது எல்லாமே அப்பாதான். ஆனால், அப்பா யாரையும் குறை சொல்லியே நான் கேட்டதில்லை. அத்தனை பொறுமை. அம்மா சொல்லுவாள், "இந்த மனுஷன் வாயில்லாப் பூச்சி. அதுதான் மாஜிஸ்ட்ரேட் வீட்டுச் சின்னப் புள்ளைகூட இவரை எட்டி மிதிக்குது."

நான் ப்ளஸ் டூ படிக்கறப்ப ஒருநாள். அதிசயமா அப்பா வீட்டில் இருக்காரு. ஏதோ ஆழமான ஆலோசனை. அடுக்களையில் அம்மாகிட்டே போய்க் கேக்கறேன்.

"உன் படிப்புக்குச் சிட் ஃபண்டிலே பணம் போட்டிருந்தாரு. அந்த ஆளு ஓடிப் போயிட்டானாம்."

தயங்கித் தயங்கி அப்பாகிட்டே போனேன்.

"அப்பா, கவலையா இருக்கீங்களா?"

"எனக்குக் கவலை கொஞ்சம்கூட இல்லேடா. அது உழைச்சுச் சேமிச்ச பணம். அனுமார் சாமி அதை நிச்சயமா மீட்டுக் குடுத்துடுவார். என் ஒரே ஆலோசனை, ஒருவேளை பணம் வரத் தாமதமாய்ட்டா, உன் படிப்புக்குத் தற்காலிகமா என்ன பண்றதுன்னுதான்."

தன் வியர்வையிலும், உழைப்பிலும், பைசா பைசாவாகச் சேர்த்த பணத்தை இழந்தபோதும், அவரிடம் இருந்த மனோதிடம் - பிரமித்துப் போனேன். அப்பா நம்பிக்கை பலித்தது. போலீஸ் சிட் ஃபண்ட் ஆசாமியைப் பிடித்தார்கள். எங்கள் பணம் திரும்பக் கிடைத்தது. நான் உள்ளுர்க் காலேஜில் எஞ்சினியரிங் படித்து முடித்தேன்.

அப்போது வீசியது அதிர்ஷ்டக் காற்று. எங்கள் தூரத்துச் சொந்தக்காரர் அருணாச்சலம் வீட்டுக்கு வந்திருந்தார். சென்னையில் AMUL Technologies என்னும் சாஃப்ட்வேர் கம்பெனி நடத்திக்கொண்டிருந்தார். அருணாச்சலம், முத்துராஜா, உமாநாத், லட்சுமணன் என்னும் நான்கு பேர் நடத்திய கம்பெனி. அமூல்யா என்றால் "விலை மதிப்பில்லாத" என்று அர்த்தமாம். இந்த இரண்டு காரணங்களால், அமுல் என்னும் பெயர். என்னை வேலைக்கு எடுத்துக்கொண்டார். சேதி கேட்டு வீடு முழுக்கக் கூட்டம். பாராட்டுக்கள், வாழ்த்துக்கள்.

என் மனம் நிறையக் கனவுகள். கண்ணாடியும், பளிங்கும் இழைத்த அலுவலகம், கைநிறையச் சம்பளம், அமெரிக்கா போகும் வாய்ப்பு. சென்னையில் வேலைக்குச் சேர்ந்தேன். ஆஃபீசுக்குள் அடியெடுத்து வைக்கும்போது இனம் புரியாத நடுக்கம். நான் நினைத்ததைவிட ஆடம்பரமாய், தமிழ் சினிமா வில்லன் பங்களாபோல் இருந்தது. ஆனால், சீக்கிரமே, என் கற்பனைக்கும் நிஜத்துக்குமிடையே இருந்த பரந்த இடைவெளியைப் புரிந்துகொள்ளத் தொடங்கினேன்.

முதல் சித்திரவதை ஆங்கிலம். நான் கம்ப்யூட்டரில் புலி. ஆனால், ஆங்கிலம் பேசுவதில் எலி. ஆபீசில் எல்லோரும் நுனிநாக்கில் தாட்பூட் இங்கிலீஷ் மட்டுமே பேசினார்கள். அருணாச்சலம் சார் ஒரு நாள் கூப்பிட்டார்.

"குமார், நீ கம்ப்யூட்டர் விஷயங்களில் கில்லாடி. ஆனால், உன் இங்கிலீஷ் ரொம்ப வீக். நம்ம க்ளயண்ட்ஸ் எல்லாம் அமெரிக்காவில் இருக்காங்க. உன் ஆங்கிலத்தைத் தேத்திக்கிட்டாத்தான் நம்ம கம்பெனியிலே மேலே வரமுடியும்."

கம்பெனி செலவில் என்னை ஆங்கிலப் பயிற்சிக்கு அனுப்பினார்கள். ஒரு ஆங்கிலோ இந்தியன் லேடிதான் பயிற்சியாளர்.

முதல் வாரம். போர்டில் இந்த வாக்கியத்தை எழுதினார்.

"A bottle of bottled water held thirty little turtles. It didn't matter that each turtle had to rattle a metal ladle in order to get a little bit of noodles, a total turtle delicacy. The problem was that there were many turtle battles for less than oodles of noodles."

படிக்கச் சொன்னார். தங்கிலீஷ் உச்சரிப்பில் தட்டுத் தடுமாறிப் படித்தேன். வகுப்பு முழுக்கச் சிரித்தது. பூமி என்னை விழுங்கிவிடக் கூடாதா என்று எனக்குள் அவமானம். ஓரளவு சரியாக வந்தது என்னும்போது வேகமாக, இன்னும் வேகமாகப் படிக்கச் சொன்னார். கவுண்டமணி - செந்தில் வாழைப்பழ ஜோக் பார்ப்பதுபோல் வகுப்பு அதிர்ந்தது. எனக்கும் இன்னொரு காரணத்துக்காகச் சிரிப்பு வந்தது. மேடம் கேட்டார்,

"Kumar, be serious. Why are you laughing?"

தமிழில் பதில் சொன்னேன்.
"மேடம். தமிழில் இரண்டு வாக்கியங்கள் உண்டு. யார் தெச்ச சட்டை தாத்தா தெச்ச சட்டை, ஏழைக் கிழவன் வியாழக்கிழமை வாழைப் பழத்தில் வழுக்கி விழுந்தான் என்கிற இந்த வாக்கியங்களை வேகமாகச் சொல்லவைத்து விளையாடுவோம். உங்க டிரெயினிங்லே அந்த ஆட்டம் நினைவுக்கு வருது."

மேடத்துக்குச் சிரிப்பதா, கோபப்படுவதா என்று தெரியவில்லை. இரண்டாவது ஒரு பாட்டு. முதலிலேயே எச்சரித்தார்,

"If you laugh, I will report to Mr. Arunachalam."

அந்தப் பாட்டு:
Betty Botter had some butter,
"But," she said, "this butter's bitter.
If I bake this bitter butter,
It would make my batter bitter.
But a bit of better butter--
That would make my batter better.
So she bought a bit of butter,
Better than her bitter butter,
And she baked it in her batter,
And the batter was not bitter.
So 'twas better Betty Botter
Bought a bit of better butter.

ஒரே வாரம். பரீட்சைக்கு நெட்டுருப் போடுவதுபோல் மனதுக்குள் இந்தப் பாட்டைத் திரும்பத் திரும்பச் சொல்லிக்கொண்டேன். பாட்டு வசப்பட்டது. மேடம் பிரமித்தார். என்னிடம் தனிக்கவனம் காட்டினார். ஆறே மாதங்கள் ஆங்கிலத்தில் பேசும் திறமை வந்தது. கண்ணாடி முன்னால் நின்று பேசிப் பார்ப்பேன். என் முன்னேற்றத்தில் எனக்கே ஆச்சரியம். என் சகாக்களோ பிரமித்துப் போனார்கள்.

என் திறமையையும், விடாமுயற்சியையும் பார்த்த நிர்வாகம் என்னை அமெரிக்காவின் க்ளயண்ட் ஆஃபீசுக்கு அனுப்ப முடிவெடுத்தார்கள். இரண்டு வருடங்கள் செல்லுபடியாகும் H1B விசா கிடைத்தது. அம்மாவும், அப்பாவும் சென்னை விமான நிலையத்துக்கு வந்து டாட்டா சொன்னார்கள். முகம் முழுக்கப் பெருமை. "இதற்குத்தானே ஆசைப்பட்டாய் குமாரு" என்று எனக்கும் அமோக திருப்தி.

ஃப்ரீமான்ட்டில் இருக்கும் க்ளயண்ட் ஆஃபீசில் நான். இப்போது இன்னொரு சித்திரவதை. என் இங்கிலீஷ் பேச்சு தமிழ் உச்சரிப்பாய் வரும். அமெரிக்காவில் இந்தச் சாயம் வெளுத்தது .

முதல் நாள். என்னோடு ப்ராஜெக்டில் இருந்த மகேஷ் கேட்டான்,

"நீ எங்கே தங்கியிருக்கிறாய்?"

"ஸான் ஜோசே."

மகேஷ் சிரித்தான். "ஏன் சிரிக்கிறீங்க?"

"குமார், அது ஸான் ஜோசே இல்லே. ஸான் ஹோசே."

"ஏங்க? San Jose தானே ஸ்பெல்லிங்?"

"ஆமாம். ஆனா, ஸான் ஹோசேதான் சொல்லணும்."

இன்னொரு அனுபவம். கேன்ட்டீனில் ரொட்டிக்குள் கட்லெட் வைத்த பர்ஜர் கேட்டேன். அனிதா சொன்னாள், "பர்கர் என்றுதான் சொல்லணும்." ஸ்பெல்லிங்குக்கும் உச்சரிப்புக்கும் சம்பந்தமே இல்லாமல் உயிரை வாங்குற என்ன அமெரிக்க இங்கிலீஷோ? நொந்து போனேன். முடிந்தவரை மெளன விரதமானேன்.

ஆபீசில் நாலுபேர் பார்க்கும் வேலைக்கு ஒரு ஆள். மானேஜர் ஒவ்வொரு நாளும் டார்கெட் வைப்பார். காலை எட்டு மணிக்கு ஆபீஸ் போனால், திரும்பி வரும்போது பதினொரு மணி. இப்படி மாடாய் உழைத்தாலும், எப்போதாவது சின்னத் தப்பு வரும்.

"உங்களையெல்லாம் எவன்டா அமெரிக்காவுக்கு அனுப்பினான்?" என்று அர்ச்சனை. நடுநடுவே என் குடும்பத்தையும் கெட்ட வார்த்தைகளால் வர்ணிப்பார். ரத்தம் கொதிக்கும். வாயை மூடிக்கொள்வேன். ஏதாவது பதில் சொன்னால், டாலர் சம்பளம் கோவிந்தா.

ஒருநாள். மேனேஜர் வரம்பு மீறிப் பேசிவிட்டார். நான் உணர்ச்சி வசப்படுவேன். வேலை போனாலும் பரவாயில்லை, அவரோடு சண்டை போடலாம் என்று தயாரானேன். நண்பன் மகேஷ் அட்வைஸ் பண்ணினான்.

"குமார், மேனேஜர் இடத்திலே உன்னை வெச்சி ஆலோசிடா. உன் டென்ஷன் ஒரு சதவிகிதமானால், அவர் டென்ஷன் பத்து சதவிகிதம். டைரக்டர் ஒரு ஓநாய். அவரைக் கடித்துக் குதறியிருப்பான்."

எனக்குப் புரிந்தது. மேனேஜர், டைரக்டர், வைஸ் பிரசிடெண்ட் எல்லோருமே கார்ப்பரேட் எந்திரத்தின் அடிமைகள். இந்த எந்திரத்துக்கு உணர்ச்சிகள் கிடையாது, இதயம் கிடையாது.

மகேஷ் ஒரு ஆராய்ச்சி அறிக்கையைக் காட்டினான். அதன்படி, சாஃப்ட்வேர் ஊழியர்களில் 33 சதவிகிதம் பேருக்குத் தூக்க இழப்பு, தலைவலி, கண்வலி, முதுகுவலி, காதுகேளாமை, ஜீரணக் கோளாறுகள், தாழ்வு மனப்பான்மை, கூட்டுக்குள் ஒதுங்கும் தனிமை உணர்வு; 20 சதவிகிதம் பேருக்குத் தற்கொலை எண்ணம்.

எனக்கு இப்போது புரிந்தது, சாஃப்ட்வேர் டாலர் மசால்வடையைக் காட்டி என்னைப் போன்ற எலிகளை மாட்டும் பொறி.

இரண்டு வருடங்களுக்குப் பின் விசாவைப் புதுப்பிக்க இந்தியா போனேன். அப்பாவுக்குச் சட்டைகள், அம்மாவுக்குச் சாக்லெட் வகைகள். அவர்கள் முகங்களில் ஜொலித்த பெருமிதம்….இந்த சந்தோஷத்துக்காக வேலையில் எந்தத் துன்பத்தையும் தாங்கிக்கொள்ளலாம்.

நாலு வருட விசா கிடைத்தது. இதற்கு நடுவே இரண்டு முறை சுசீந்திரம் வர வேண்டிய கட்டாயம். அம்மா மரணம். அப்பாவும் பின் தொடர்ந்தார். தங்கள் ஆசைகள் நிறைவேறிய திருப்தி இருவருக்கும். எனக்குத் திருமணம் ஆகவில்லையே என்னும் ஒரே ஆதங்கம்தான்.

ஆறு வருட விசா முடிந்தவுடன், ஒரு வருடக் கூலிங் பீரியட். இந்தியா வந்தேன். சுசீந்திரத்தில் மளிகைக் கடை வைத்திருந்த நாகராஜன் மகள் சீதாவோடு திருமணம். என் அம்மாவும், அப்பாவும் சொர்க்கத்திலிருந்து அட்சதையும், பூக்களும் தூவி ஆசீர்வதித்திருப்பார்கள். அடுத்த வருடம், செல்ல மகள் அனுஷா வந்தாள்.

இன்னொரு H1B விசா. அதே ஃப்ரீமான்ட். சீதாவையும், அனுஷாவையும் கூட்டிக்கொண்டு வந்தேன். உயிரைக் கொடுத்து உழைத்தேன். ஒவ்வொரு நாளும் திட்டு, நடுவே பாலைவனச் சோலையாய் மேனேஜர்களின், க்ளயண்ட்களின் பாராட்டுக்கள். கனவு காணத் தொடங்கினேன். சீக்கிரமே கிரீன் கார்ட் கிடைக்கும். அப்புறம், அமெரிக்க சிடிசன்ஷிப்.

என் கணிப்பில் அமெரிக்க அதிபர் டிரம்ப் இருக்கவில்லை. H1Bவிசா கட்டுப்பாடுகள். விசாவில் வரும் இந்தியர்களின் இடத்தில் மண்ணின் மைந்தர்களான அமெரிக்கர்களை அமர்த்தவேண்டும் என்னும் மறைமுகக் கைமுறுக்கல். அமுல் டெக்னாலஜியிலும் பல நூறு பேரின் சீட்டைக் கிழிக்கப்போகிறார்கள் என்று வதந்திகள். அதுவும், ஐந்து வருடத்துக்கும் அதிகமான அனுபவம் கொண்டவர்களை வீட்டுக்கு அனுப்பிவிட்டுப் புதியவர்களைக் குறைந்த சம்பளத்தில் அமர்த்தும் திட்டமாம். நேர்வழியோ, குறுக்கு வழியோ, லாபத்தை அதிகமாக்க வேண்டும். என் மனதில் இனம் புரியாத பயம். எனக்குச் சென்னையில் மூன்று மாத வேலை இருக்கிறது, நீங்கள் முதலில் புறப்படுங்கள், நான் அடுத்த வாரம் வருகிறேன் என்று சீதாவிடம் பொய் சொன்னேன். அவளும், அனுஷாவும் இப்போது சுசீந்திரத்தில்.

இன்று காலை. அலுவலகம் போனேன். கம்ப்யூட்டரில் login பண்ணமுடியவில்லை. HR அதிகாரி ராபர்ட் வந்தார். தோள்மேல் கை வைத்து என்னை அழைத்து/இழுத்து கொண்டு போனார். உட்காரச் சொன்னார். ஒரு காகிதத்தை நீட்டினார். கையெழுத்துப் போடச் சொன்னார். பேட்ஜைக் கழற்றித் தரச் சொன்னார். எனக்கு ஒன்றுமே புரியவில்லை. மந்திரித்த ஆடுபோல் அவர் சொன்னதையெல்லாம் செய்தேன். வெளியே கொண்டுவந்து விட்டார். "குட் பை" சொன்னார்.

எனக்கு இப்போதுதான் உறைத்தது, நான் நடுத்தெருவில். நான் அர்ப்பணிப்போடு உயிரைக் கொடுத்து உழைத்த அமுல் டெக்னாலஜீஸ் மார்பில் உதைத்து என்னை வெளியேற்றிவிட்டது. அர்ப்பணிப்புக்கு என்னய்யா அர்த்தம்?

ரூமுக்கு வந்தேன். இப்போதுள்ள அமெரிக்கச் சூழ்ந்லையில் இங்கே வேறு வேலை கிடைக்க வாய்ப்பே இல்லை. இந்தியா திரும்ப வேண்டியதுதான். அங்கேயும், சாஃப்ட்வேர் கம்பெனிகளில் 50,000 பேரை வேலை நீக்கம் செய்துவிட்டார்கள். இந்த வருடம் இன்னும் லட்சம் பேர் நீக்கப்படலாம் என்று நம்பத்தகுந்த வட்டாரங்கள் தரும் தகவல். அங்கேயும் வேலை கிடைக்காது. "அமெரிக்கா ரிடர்ன்ட் வர்றான் பாரு" என்று ஊரே கைகொட்டிச் சிரிக்கும். அந்த அவமானத்தை என்னால் தாங்கமுடியாது. அப்போதுதான் தற்கொலை முடிவெடுத்தேன். சீதாவுக்குச் சுசீந்திரத்தில் வீடு வாங்கியிருக்கிறேன். பாங்கில் நிறைய ஃபிக்சட் டெபாசிட் போட்டிருக்கிறேன். என் இழப்பைக் காலம் குணமாக்கிவிடும்.

தூக்க மாத்திரையை எடுக்க எழுந்திருக்கிறேன். எதிரே அம்மா, அப்பா படம். அப்பா கோபப்பட்டே நான் பார்த்தது கிடையாது. இப்போது முறைக்கிறார். "பைத்தியக்காரா, தற்கொலையாடா பண்ணிக்கப் போறே? உன்னை மாதிரிக் கோழையா இருந்திருந்தா, நான் எத்தனை வாட்டி உசிரை விட்டிருக்கணும் தெரியுமா?"

சிட் ஃபண்டில் மொத்தச் சேமிப்பையும் இழந்தபோது அவர் காட்டிய தன்னம்பிக்கை என் முன்னால் நிழலாடுகிறது.

"டிரம்ப்பையும், அமுல் டெக்னாலஜியையும், அமெரிக்காவையும் நம்பியாடா நீ பொறந்தே? சொந்தக் காலில் நில்லுடா."

பொளேர் என்று அவர் அறைந்ததுபோல் இருக்கிறது. எனக்குள் ஒரு வெளிச்சம். இந்தக் குமார் சொந்த முயற்சியால் முன்னேறியவன். சுசீந்திரம் போவேன். சாஃப்ட்வேர் வேலை கிடைத்தால் நல்லது. இல்லையா, கம்ப்யூட்டர், கணக்கு டியூஷன் எடுப்பேன். நான் துணிந்தவன். எனக்குத் துக்கமில்லை.

போலீசுக்கு எழுதின கடிதத்தைச் சுக்கல் நூறாகக் கிழிக்கிறேன். தூக்க மாத்திரைகளோடு சேர்த்து அதைக் குப்பைத்தொட்டியில் போடுகிறேன்.

S.L.V. மூர்த்தி,
மௌன்டன்வியூ, கலிஃபோர்னியா
Share: 


© Copyright 2020 Tamilonline