|
|
|
அலுவலகத்திலிருந்து திரும்பி வந்து புவனா உள்ளே நுழைந்தாள். அம்மா கேட்டாள், "நாளைக்கு வர்றியா புவனா,மாமா படுத்த படுக்கையாய் இருக்கானாம் .காஞ்சிபுரம் போய் பார்த்துட்டு வந்துடலாம். சண்டே உனக்கும் லீவுதானே!"
"அம்மா, உனக்கென்ன பைத்தியமா? போன வருஷம் பாட்டி படுத்த படுக்கையாய்க் கிடந்தபோது எட்டிக்கூட பார்க்காமல் உன்னிடத்தில் பாட்டியை விட்டுட்டு வேடிக்கை பார்த்தார் மாமா. பாவம் நீ, தாத்தா பாட்டியையும் பார்த்துண்டு உன் அம்மாவுக்கும் எல்லாம் செய்தே. இப்போ அந்த மனுஷனைப் போய்ப் பார்க்கலேன்னா தப்பில்லே. எல்லாம் கடவுள் மேலேர்ந்து பார்க்கிறார். இல்லேன்னா இப்போ மாமாவுக்கு இப்படிப் படுத்த படுக்கையாய் இருக்கும்படி பக்கவாதம் வந்திருக்குமா?" பொரிந்து தள்ளியவளைச் சமாதானம் செய்யக்கூட தோன்றவில்லை.
கோபத்தில் திட்டினாலும் மறுநாள் அம்மாவை அழைத்துச் சென்றாள் புவனா. மாமாவால் பேசக்கூட முடியவில்லை. அம்மாவைப் பார்த்ததும் கண்ணீர் வழிந்தோடியது அவர் கண்களில். அம்மா அவர் கைகளைப் பிடித்தபடியே இருந்தாள்.
அவரது பிள்ளைகள் ராமுவும் ராஜாவும் மாறி மாறி அவருக்குப் பணிவிடை செய்வதைப் பார்த்த புவனாவுக்கு ஒரே ஆச்சரியம். போதாததற்கு மாமி வேறு "அவர் படுத்ததிலிருந்து ராமுவும் ராஜாவும்தான் குளிப்பாட்டி, டயபர் மாத்தி, மருந்து மாத்திரை வேளா வேளைக்குக் கொடுத்து கவனிக்கறா. நான் ஆகாரம் தரதோட சரி" என்று பெருமைப்பட்டுக் கொண்டாள். |
|
விடைபெற்று வெளியில் வந்ததுமே கொதித்தாள் புவனா. "என்னம்மா இது அநியாயம்! சொந்த அம்மாவை மரணப் படுக்கையில் தவிக்க விட்டவருக்கு இப்படித் தங்கமான குழந்தைகளைக் கொடுத்து, அவரைக் கவனிக்கவிட்ட கடவுள் ரொம்ப நல்லவராம்மா?" கேட்டவளை நிமிர்ந்து பார்த்துப் புன்னகைத்தாள் அம்மா. "இப்படி யோசி புவனா. அம்மாவுக்குத் தான் செய்யத் தவறியதை, தன் பிள்ளைகள் தனக்குச் செய்யும்போது பார்த்துக் கொண்டிருப்பதே அவனுக்குப் பெரிய தண்டனைதான். அதை உணர்ந்ததால்தான் வாய் பேசமுடியாத நிலையிலும், கண்களால் என்னிடம் தான் உணர்ந்துவிட்டதைக் கண்ணீராய் வெளிப்படுத்தினான். இதைவிட அவனுக்கு தண்டனை தனியாய் வேறு கடவுள் தரவேண்டுமா?"
அம்மாவின் வாதம் நியாமானதாகவே தோன்றியது புவனாவுக்கு. கடவுளின் தராசு ஒருதலையாய்ச் சாய்வதில்லை!
பத்மா சபேசன், நியூ ஜெர்சி |
|
|
|
|
|
|
|