Thendral Audio Advertise About us
New User? | Forgot Password? | Email: Password: Login
Current Issue | Previous Issues | Author Index | Category Index | Organization Index | E-Magazine | Classifieds | Digital Downloads
By Category:
சின்னக்கதை | சமயம் | சினிமா சினிமா | இளந்தென்றல் | கதிரவனை கேளுங்கள் | ஹரிமொழி | நிகழ்வுகள் | மேலோர் வாழ்வில் | மேலும்
September 2017 Issue
தென்றல் பேசுகிறது | நேர்காணல் | அன்புள்ள சிநேகிதியே | சினிமா சினிமா | சின்னக்கதை | ஹரிமொழி | மேலோர் வாழ்வில் | சிறப்புப் பார்வை
கதிரவனை கேளுங்கள் | மாயாபஜார் | சிறுகதை | Events Calendar | கவிதைப்பந்தல் | அஞ்சலி | சமயம் | முன்னோடி | வாசகர் கடிதம்
எழுத்தாளர் | இளந்தென்றல் | நிகழ்வுகள்
Tamil Unicode / English Search
சிறுகதை
இவர்களை நினைக்க!
பெரியமாடு
- சுரேஷ் செல்வராஜ் பழனியாண்டி|செப்டம்பர் 2017||(1 Comment)
Share:
"டேய் மல்லி பாப்பா, அங்க பாருடா. நிறைய மாடுங்க. அப்பா சொன்னேன்ல. லிவேர்மோர் கோவிலுக்கு போறப்ப காட்றேன்னு" என்றான் கணேசன் தன்னுடய மூன்றுவயது மகளிடம், அழகான குன்றுகளுக்கு நடுவே வாகனத்தை ஓட்டியபடியே.

"எங்க இருக்கு அப்பா? ஐ! ஆமா நிறைய இருக்குப்பா. குட்டிமாடு எங்கேப்பா? கிட்டப்போய் பார்க்கலாமா?" ஒரே குதூகலமாக மல்லி கேட்டாள்.

"கோயிலுக்கு போயிட்டு வரும்போது போக முடியுமான்னு பார்க்கலாமாங்க?" மஞ்சுளா கேட்டாள்.

"அவளுக்கு கன்னுக்குட்டிய பார்க்க அவ்ளோ புடிக்கும். இப்ப ஊருக்கு போனப்ப தெருவுல கன்னுக்குட்டி ஆட்டுக்குட்டி எல்லாத்து பின்னாடியும் ஓடுவா" என்று தொடர்ந்தாள் மஞ்சுளா.

"ஆமா எனக்கும் தெரியுமே. அதுங்கள காமிச்சிதான் மூணு மாசம் ஊர்ல சாப்பாடு ஊட்டுனன்னு சொல்லுவியே. எனக்கும் சின்னவயசுல கன்னுக்குட்டிங்க மேல கொள்ளப் பிரியம். அதுங்க பின்னாடிதான் நானும் சுத்துவேன். எனக்கு இந்த லிவேர்மோர் கோயிலுக்கு வரும்போதல்லாம் ஒரு மாட்டுப்பண்ணைக்கு போகணும்னு ரொம்ப ஆசை. கல்யாணம் ஆகறதுக்கு முன்னாடியே நினைச்சதுண்டு" என்று சொன்னான் கணேசன்.

"அப்படியா. பாப்பா வந்தே மூணு வருஷம் ஆயிட்டுது, இப்பவாவது போகலாம்ங்க. மல்லிக்குட்டி எப்படி எட்டி எட்டிப் பாக்குது பாருங்க" மஞ்சுளா சிரித்தவாறே சொன்னாள்.

"ம்... சரி போகலாம். பண்ணைக்குப் போக வழி தெரியல. நம்ம சுந்தரம்கிட்ட கூப்பிட்டுக் கேக்கிறேன் அவருக்குத் தெரியும்" என்ற கணேசனிடம் "ம். கேளுங்க. அவர் இப்ப இங்க கோயிலுக்கு பக்கத்துல குடி வந்துட்டாருதானே. இல்லையின்னாகூட அவருக்கு எல்லாமே தெரியுமே. செவ்வாய் கிரகத்துக்குப் போகக்கூட வழி சொல்லுவார்" என்றாள் புன்னகைத்தவாறே.

"மல்லிக்குட்டி, நாம இப்போ மாடு, கன்னுக்குட்டி பாக்கப்போறமே!" மஞ்சுளா சொன்னாள்.

அதுவரை எங்கே மாடு தெரிகிறது என்று பார்த்துக்கொண்டே வந்தவள், அம்மா சொன்னதைக் கேட்டவுடன் குதித்தவாறே "ஐ. அப்படியா! ஓல்ட் மெக்டோனல்ட் ஹேட் எ பார்ம்" எனப் பாட ஆரம்பித்துவிட்டாள். கணேசனும் மஞ்சுவும் கூடச்சேர்ந்து பாட, ஒரே குதுகலம் பொங்கியது குழந்தை முகத்தில்.

கோயிலில் சாமி கும்பிட்டுவிட்டுப் பிரசாதம் சாப்பிடும்போது சுந்தரத்திடம் பேசி அந்த மாட்டுப் பண்ணைக்கு போகும் வழியைத் தெரிந்துகொண்டான் கணேசன். லிவேர்மோர் கோயிலிலிருந்து அரைமணி நேரத்தில் பண்ணையைச் சென்று அடைந்தார்கள். அதுவரை தூங்கிக்கொண்டு வந்த மல்லியையும் மஞ்சுவையும் "இடம் வந்தாச்சு. எழுந்திருங்கடா ரெண்டு பேரும்" என்று எழுப்பினான் கணேசன்.

அங்கிருந்தவரிடம் கன்றுகள் இருக்குமிடத்தைக் காண்பிக்கச் சொன்னார்கள். ஒரு கொட்டகையில் பசுங்கன்றுகள் சிறியதும் பெரியதுமாய் பல நிறங்களில் இருந்தன. "அப்பா, நான் அந்த வெள்ளையாய் இருக்குற குட்டியை தடவிக் குடுக்கலாமா?" வாய் நிறையச் சிரிப்புடன் கேட்டாள் மல்லி.

"ம். வா, வா போகலாம்" என்று சொன்னவாறே மஞ்சுளாவும் மல்லியும் போய் அந்த அழகான கன்றைத் தடவிக் கொடுத்தார்கள்.

"மல்லி, இங்க பாருடா இந்த கன்னுக்குட்டிக்கு நெத்தியில நாமம் பாருடா!" மஞ்சுளா இன்னொரு கன்றைக் காட்டினாள்.

"ஐ, ஆமாம்மா. இங்க பாருங்க. என் கைய நக்குது. ஹி...ஹீ." எனச் சிரித்தவாறே அங்மிருந்த புல்லை எடுத்து அதற்குக் கொடுத்தாள் மல்லி.

ஒவ்வொரு கன்றுக்குட்டியாகத் தடவிக் கொடுத்து, புல் கொடுத்து பக்கத்திலேயே அமர்ந்து கைதட்டிச் சிரித்த மல்லியைப் பார்த்த கணேசனுக்கு தன்னயே சின்னவயதில் பார்த்தமாதிரி இருந்தது.

"என்னங்க இன்னும் அரைமணி நேரம் கழிச்சி கிளம்பலாமா?" என்று கேட்டவளிடம் "ஆமா, அவளுக்குத்தான் ரொம்ப புடிக்குது இல்ல, விளையாடிட்டு வரட்டும்" என்று சொல்லிவிட்டு மாடு கன்றுகளுடன் கழிந்த தன்னுடய இளமைப் பிராயத்தைப் பற்றி மஞ்சுவிடம் சொல்லத் தொடங்கினான்.

எனக்கு வினவு தெரிஞ்ச நாளிலிருந்து எப்பவுமே வீட்டுல ஆறு பசுக்களுக்குப் பஞ்சம் இல்லாம இருக்கும். பிறந்த கிராமத்தை விட்டு வேலை காரணமாக பக்கத்திலிருந்த பெரிய ஊருக்குக் குடிவந்தாரு அப்பா. அங்கே சொந்த வீடு வாங்கணும், பிள்ளைகள நல்லா படிக்க வைக்கணும். அப்படின்னு நிறைய கனவு. கூடவே அவரோட சின்னத்தம்பி படிக்கற டிப்ளோமா செலவு, தங்கச்சி கல்யாணத்துக்கு வாங்கன கடன், தாத்தா பாட்டியோட செலவுக்கு பணம்னு கடமைகள் வேற இருந்ததால, சம்பளம் தவிர வேறு வருமானம் அவசியமாச்சி. அப்படித்தான் இந்த மாடு வச்சி பால் கறந்து விக்கிற யோசனை வந்துச்சி.

எங்க வீட்டுக்கு மொதல்ல வாங்கிட்டு வந்த மாட்டுக்கு நாங்க வச்ச பேரு 'பெரியமாடு'.

எங்க வீட்டுல மாட்டுக்கெல்லாம் காரணப்பெயர்தான். பெரியமாடு கொஞ்சம் பெருசா இருக்கும். அதோட முதலில் வந்ததாலும்; நெத்திவெள்ளை, நெத்தில மட்டும் வெள்ளையா இருக்கும்; மிரளி, ரொம்ப பயப்படும். வெள்ளச்சி, வெள்ளயாக இருந்ததால்; வல்லம்படுகை, அது வாங்கன ஊரு பேரு; அப்புறம் கொஞ்சம் மாடுகளுக்கு யாரிடம் வளர்ந்ததோ அவங்க பேரு இருக்கும். சின்னதுரை மாடு, பெரியசாமி மாடு, கட்டயன் மாடு என்று.

பெரியமாடுதான் எங்க வீட்டு மகாலட்சுமி. அது வீட்டுக்கு வந்ததிலிருந்து நிறைய மாடுகள் பெருகிடிச்சுன்னு அதுமேல எல்லோருக்கும் ஒரு தனிப்பாசம். நல்லா பால் கறக்கும், முட்டாது, தடவிக் கொடுத்தா பாசமா நக்கும். வருடம் தவறாம பசுங்கன்றுகளை ஈன்றதால் அதன் வாரிசுகள் நிறைய இருந்தன. கொஞ்சம் மாடுகளை அப்பப்ப வித்துருக்கோம். இப்படியா பல வருடங்களுக்குப் பிறகு பெரியமாடு கொள்ளுப்பாட்டியா கூட ஆய்டுச்சி! அது போட்ட கன்றுகள் பெருசா வளர்ந்து அவற்றின் மகள்கள் ரெண்டாம் தலைமுறை கன்றுகளை ஈன்றன. பெரியமாட்ட வீட்டுல ஒரு மனுஷியாதான் பார்த்தோம்.

எங்க தாத்தா பெரிய மாட்டப் பார்த்து சொல்லுவாரு, நீதான் எங்க வீட்டு மூத்தமனுஷின்னு. சிலநேரம் பெரிய கிழவின்னு கூட கேலியா சொல்லுவாரு!

ஒரு மாடு வந்து ஒரு மாட்டுபண்ணை ஆன கதைன்னு. நாங்க பெருமிதத்துடன் கிண்டல் செய்வோம்.
ஒவ்வொரு மாட்டுப் பொங்கலுக்கும் அப்பா பெரியமாட்டு முன்னாடி உலக்கைய போட்டுட்டு விழுந்து கும்பிடும்போது, மாடுன்னா செல்வம்னு ஒரு அர்த்தம் இருக்குது. அதுக்குச் சரியான அர்த்தமே நீதாம்பாரு. எங்க வீட்டுல விவசாயம் பெருகக்கூட பெரிய காரணம் மாடுகள். சாணி எருவாகி நிலத்தை நல்ல வளமா வச்சிருக்கு, செழுமையான விளைச்சல். அதிலிருந்து வரும் களை, புல்லு, வைக்கோல், அப்புறமா காய்ஞ்சிபோன எள்ளுச்செடி, உளுந்துச்செடி, நிலக்கடலைச் செடி எல்லாம் சாப்பிட்டு மாடுங்க நல்லா ஆரோக்கியமா இருந்துதுங்க.

பசுமாடுகளோடு சேர்த்து ரெண்டு வண்டி மாடுகள், கன்றுகள், கோழிகள், வீட்டுக்கும் மாடுகளுக்கும் காவலுக்கு நாய், எலித் தொல்லைய ஒழிக்க பூனைன்னு.விலங்குகள் ஒரே கூட்டமா கலகலன்னு இருக்கும்.

வீட்டுல ஒரு வேலையாள் இருந்தாலும் எல்லாருக்கும் வேலை இருக்கும். என்னோட தின வேலைகள் என்னன்னா கன்னுகுட்டிகளுக்கு தண்ணி காட்றது, அக்கம் பக்கத்துல பால் கொண்டுபோயி குடுத்துட்டு வர்றது, அப்பறம் புண்ணாக்கு ஊற வைக்கறது. அதுல கன்னுக்குட்டிகள் கூடவே இருக்க ரொம்பப் புடிக்கும்! மாடுகளைக் கையில் பிடிச்சுகிட்டு அதெல்லாம் புல் மேயறதைப் பாக்க ஆசையா இருக்கும்.

சொந்த வீடு வாங்க, நிலத்துல போர் போட, மத்தக் கடமைகள எல்லாம் நிறைவேற்றன்னு மாடுகள் எங்க உழைப்புக்கு பக்கபலமா இருந்துதுக. ஆனா அண்ணன், அக்கா படிக்க வெளியூருக்கு போய்ட்டதால, மாடுகளை வச்சு பராமரிக்கிறது சிரமமா இருந்துச்சி. அம்மாவுக்கு அப்பப்ப உடம்புக்கு முடியாம போனதும் ஒரு பெரிய காரணம்.

ஊர்ல வேற பாக்கெட் பால் வாங்கற பழக்கம் அதிகமாயிடிச்சி. எங்க ஊரு ரெண்டு மூணு தொழிற்சாலைகள், கல்லூரிகள் எல்லாம் வந்து பெரிய ஊரு ஆனதால நகராட்சியா மாத்திட்டாங்க. அதனால வெளியில மாடுங்க கட்டக்கூடாது, குப்ப போடக்கூடாதுன்னு ரொம்ப கறாரா சொல்லிட்டாங்க. அதானால பெரியமாட்டையும் சேர்த்து இப்ப மூணு மாடுங்கதான். வீட்டுக்குப் பின்னாலயே வச்சிகிட்டு எப்படியோ சமாளிச்சோம்.

இப்படி இருக்கையில அண்ணன் அக்கா ரெண்டுபேருமே கல்லூரி படிக்க ஆகிற செலவுக்காகப் பணம் அனுப்ப அப்பாவுக்கு இன்னும் நிறயச் சம்பாதிக்கற கட்டாயம் வந்துச்சி. இன்னும் மாடு வாங்கலாம்னு சொன்னாரு

ஆனா அம்மா வீட்டுல மாடுகட்ட வசதி இல்ல, அக்கா இல்லாததால வீட்டு வேலை செய்யறது சிரமமா இருக்கு, இன்னும் மாடு வாங்கினா வேலை அதிகமாயிடும். என்னால முடியாதுன்னு சொல்லிட்டாங்க.

ஆனால் ஒருநாள் அம்மாவும் அப்பாவும் காரசாரமா பேசினது என் காதுல விழுந்திச்சி.

"அடிக்கடி வீட்டுல வேலை பார்க்கற பசங்க மாறிகிட்டே இருக்காங்க. திடீர்னு வேலைய விட்டுட்டு கட்டட வேலை, சரக்கு ஏத்துற வேலைக்கு கேரளாவுக்குனு போய்டறாங்க" என்று வாதத்தைத் தொடர்ந்தாள் அம்மா

"அதான் புதுசா ஆளுங்க வந்துடறாங்க இல்ல. இந்த நெல்லு வயலும் ஒரு போர் போட்டுட்டா இன்னொரு போகம் விளைய வைக்கலாம். அப்புறமா வருமானத்துக்குச் சிரமம் இருக்காது. பசங்களப் படிக்கவைக்க சுலபமா இருக்கும்" என்று அப்பா சொன்னார்

"நீங்க வேற ஆளப் பாத்து அவங்க வேலைபழக ஒருமாசம் கிட்ட ஆவுது. அதுவரையும் நம்ம எல்லாரும் லோல் படுறோம், கணேசன்தான் ரொம்ப பாவம், பள்ளிக்கொடம் போய்ட்டு, பால் வேலையெல்லாம் பாத்துட்டு அவன் படிக்கப்போனா, அசதில தூங்கிடறான். அவனும் நல்லாப் படிச்சாதான் அவன் அண்ணன்மாதிரி நல்ல கல்லூரிக்குப் போகலாம், இல்லியா? கணேசனும் பத்தாவது வந்துட்டான். அவன் படிச்சிகிட்டே எவ்வளவு வேலை பார்ப்பான்" அம்மா அடுக்கிக்கொண்டே போனாள்.

"ம். புரியுது.பன்னிரெண்டாவது படிக்க இன்னும் ரெண்டு வருஷம் இருக்கு. அதுக்குதான் இன்னும் ரெண்டு மாடாவது வாங்கலாம்" இன்னும் ஒரு மூணு நாலு வருசம் கொஞ்சம் சிரமம் பார்க்காம மாடுகளை வச்சிக்கிட்டா, நாம பசங்களப் படிக்கவைக்க ரொம்பக் கடன் வாங்கவேண்டாம்" என்று இழுத்தார் அப்பா.

"அதெல்லாம் முடியாது. புதுசா வாங்கன ஒரு காணிய வித்துப் படிக்க வைங்க. பசங்க படிச்சி வேலைக்குப் போனா திரும்ப வாங்கிடலாம்" அம்மாவும் தொடர்ந்து சொன்னாள்.

"நெலத்த எல்லாம் விக்க முடியாது. நம்ம நெலம் எல்லாம் ஒரே சரகமா இருக்கு, வேற ஆள உள்ளவிட்டா பிரச்சனதான் வரும். நான் சொன்னபடி இன்னும் ஒரு ரெண்டு மாடு வாங்கனா சரியா இருக்கும்" அப்பா ஒத்துக்கொள்ளவே இல்லை.

"மாடு வாங்க மட்டும் காசு இருக்கோ!" அம்மா தொடர்ந்தாள்.

"பெரியமாட்டுக்கு வயசு ரொம்ப ஆயிட்டதால இந்த வருச கரவலுக்கு பிறகு அதைச் சினை பிடிக்கக்கூடாது.அப்பறம் ரெண்டு மாடுதான் இருக்கும். ரெண்டு மாடு வாங்கியாகணும். அப்பதான் சரிவரும்.அதுங்கள வாங்குற காச ஒரு வருசம் பால் கறந்து வித்தால் மீட்டிடலாம்! அதுக்கப்பறம் எல்லாம் லாபம்தான்" அப்பா சொன்னார்.

"சரி. நீங்க விடப்போறதில்ல. ஒரு யோசன சொல்லுறேன். ஒரு மாடு மட்டும் வாங்குங்க. அப்பறம் அடுத்த ஒரு வருடமும் பெரியமாட்டுக்குச் சினை ஊசி போட்டுட்டு வந்தா, புதுசா ஒரு மாடு வாங்கற காசு மிச்சமாகும்" என்று யோசனை சொன்னாள் அம்மா.

"என்ன சொல்ற? அதுக்குத்தான் வயசாயிடிச்சி. இனிமே சினை ஊசி போடவேணாம், பிரசவம் அப்பக் கஷ்டப்படும்னு பேசிக்கினோமே" அப்பா கேட்டார்.

"பெரியமாட்டுக்கு ஒண்ணும் ஆகாது. நீங்க நான் சொன்னபடி செய்யுங்க! அப்பதான் பணம் சீக்கிரம் சேரும்" என்று முடிவாகச் சொன்னாள் அம்மா.

அதன் காரணமாக பெரியமாடு அடுத்த வருடமும் சினை பிடித்தது.

வழக்கம்போல அன்னைக்கும் புல்லுக்கட்டு எடுத்ததுக்கிட்டு மாட்டுக்கெல்லாம் போடும்போது பெரியமாடு ஒருமாதிரி பெருமூச்சு எடுத்துகிட்டு கண்ண பெருசா உருட்டியபடியே சுத்தி வந்தது. நான் அப்பதான் கவனிச்சன், அது கன்னு போட ஆரம்பிச்சதை.

அம்மாகிட்ட போயி, "பெரியமாடு கன்னு போடுது" என ஆர்வமும் கலவரமுமாய்ச் சொன்னேன்.

"ஓடிப்போய் மாட்டுக்குக் கஞ்சிகாச்ச கம்பு இருக்கா பாரு. நல்ல தெம்பா இருந்தாதான் உறுப்புக்கொடி போடும். வண்டி மாட்டுக்கு வாங்கன பருத்திக்கொட்ட இருந்தா ஊறப்போடு தம்பி" பரபரவென அம்மா சொன்னாள்.

"அப்பாவ வரச் சொல்லவா, அப்பா ரொம்ப பயந்தாரேம்மா" என்றேன்.

"ஆமாடா, ஒண்ணும் ஆகாம சுகப்பிரசவம் ஆகணும். வயிறு ரொம்ப பெருத்துருக்கு இந்தமுறைன்னு மாட்டுவைத்தியர் சொன்னதிலிருந்து அவரு புலம்பிகினே இருப்பாரு. அந்தச் செல்லியம்மன்தான் கூட இருக்கணும்" என்று கண்ணீர்விட்டு, கையெடுத்துக் கும்பிட்டவாறே சொன்னாள் அம்மா.

நேரம் கடந்தது. எங்க வீட்டு மகாலட்சுமிக்கு பிரசவத்துல சிக்கல்னு நினைச்சி எல்லாருக்குமே பொறி கலங்கியது. "எட்டுமணி நேரமா போராடிக்கிட்டு இருக்கே எங்க மகாலட்சுமி. மகமாயி கண்ணத் தொறந்து பாரும்மான்னு" அம்மா மீண்டும் ஓலமிட்டாள்

தொலைபேசில சேதி கேட்டு கால்நடை வைத்தியரை கூட்டிகிட்டு வரம்னு சொன்ன அப்பாவ இன்னும் காணோம் என நான் தவித்தேன்.

"அம்மா, நான் போயி வேப்பலைக் கொழுந்த பறிச்சிகிட்டு வந்து போடுறேன்! அப்படியே அதுக்குப் புடிச்ச வாய்க்கால் புல்லு கொஞ்சம் பறிச்சுகினு வரேன்" சொல்லிவிட்டு ஓடினேன்.

அதுக்குள்ள சேதி கேட்டு பக்கத்துத் தெருவிலிருந்து சித்தப்பா, பசங்க எல்லோரும் வந்துட்டாங்க. பெரியமாடு திணறிக் கொண்டிருந்தது. இப்ப அப்பாவும் வந்துட்டாங்கன்னு மனசுல ஒரு நிம்மதி.

மாட்டு வைத்தியர் வயத்துல கைவச்சி அழுத்திப் பாத்தார். கொஞ்சம் இப்படி அப்படி தட்டிப்பாத்தார். கொஞ்சம் விளக்கெண்ணை எடுத்துவரச் சொல்லித் தடவினார்.

நான் கொண்டுவந்த புல்லு, வேப்பலைக் கொழுந்து எல்லாத்துலேயும் கொஞ்சூண்டு கடிச்சிது. ஆனா சாப்பிடலை. அம்மா கொண்டுவந்த கம்பங்கஞ்சியக் கொஞ்சந்தான் குடிச்சது.

கொஞ்சம் கொஞ்சமாய் கன்றுக்குட்டி கால்கள் வெளியில் வந்தன. எல்லோர் முகத்திலும் கொஞ்சம் நம்பிக்கை வந்தது.

நேரம் ஓடிகொண்டிருந்தது.

"அப்புறம் உதட்டைப் பிதுக்கி ரொம்ப சிரமப்படுதே. உறுப்புக்கொடி சிக்கிக்கிச்சோ" என்றார் மருத்துவர்.

"என் லட்சுமிக்கு நானே இப்படி ஒரு கொடுமையைப் பண்ணிட்டேனே" என்று புலம்பிக் கண்ணீர் சிந்தினர் அப்பா.

"ஐயோ! என்ன சொல்றீங்க? நான்தான். பாவி. வயசான காலத்துல, இந்தக் கொடுமையை பண்ணிட்டேன் புண்ணியவதிக்கு. நம்ம வீட்டு மகாலட்சுமிக்கு" என அம்மா அரற்றினாள்.

பேசிக் கொண்டிருந்தபோதே "ம்ம்மா" என்று பெருங்குரலெடுத்து, கன்றைப் பிரசவித்த பெரியமாடு அப்படியே சாய்ந்து விழுந்தது. பெருமூச்சு விட்டு மலங்க மலங்க விழித்தது.

கன்றுக்குட்டி புள்ளிமான் போல அழகாக இருந்தது. எங்கள் வீட்டிலேயே இதுவரை பிறந்த எல்லாக் கன்றுகளையும் விட இது மிக அழகாக இருந்தது.

கொஞ்சநேரம் கன்றை நக்கிவிட்டு இறுதிமூச்சை விட்டது லட்சுமி. அன்று அம்மா அழுததுபோல இதுவரை அம்மா அழுது நான் பார்த்ததே இல்லை.

வழக்கமாக மாடு இறந்தால் கொண்டுசெல்ல வரும் மாசாணியிடம் சொல்லவேண்டாம் என்று சொன்ன அம்மா "நம்ம லட்சுமிய நம்ம நிலத்துல புதைச்சிடுங்க" என்று சொன்னாள்.

அப்பாவும் கண்ணீருடன் "இந்தப் பெரியமாடு நம்ம வீட்டுப் பெரியமனுஷி, லட்சுமி. அவ நிலத்துல இருந்து நம்ம நிலத்த வளம் குறையாம பார்த்துப்பா". என்று ஆமோதித்தார்.

பெரியமாடு போன கொஞ்சநாள் வரை அம்மா சரியாய்த் தூங்காமல் சாப்பிடாமல் இருந்தாள். அந்தக் கன்றை ஒரு குழந்தைபோல பார்த்துக்கிட்டாங்க. அடிக்கடி அழுதுகொண்டே உங்க அம்மாவை நான் பேராசைப்பட்டு கொன்னுட்டேன்னு சொல்லிகிட்டே இருப்பாங்க.

இல்லையினாலும் வயசான மாடு ஒருநாள் எப்படியும் செத்துருக்கும்னு மத்தவங்க சமாதானம் சொன்னாலும், அம்மா ஏற்றுக்கொள்ளவில்லை.

மற்ற மாடுகள் கத்தினால்கூட பெரியமாடு நினைப்பு வருவதாய்ச் சொல்லிப் புலம்பினாள்.

அம்மா எல்லாத்தயும் மறக்கணும்னா வீட்டுல இருக்குற மாடு, கன்றுகளை வித்துடுவோம்னு அப்பா ஒருநாள் தெரிஞ்சவர்கிட்ட வித்துட்டார்.

"பெரிய மாட்டோட எங்க வீட்டு கோகுலம் முடிஞ்சிபோச்சி" என்று கணேசன் வேதனையுடன் சொல்லிவிட்டு கண்ணைத் துடைத்தான். மஞ்சுளா அருகில் வந்து அவனை வாஞ்சையாகத் தொட்டவாறே "எனக்கே மனசு பாரமா இருக்கு" என்று சொன்னாள்.

சில நிமிடங்கள் அமைதியாய்க் கழிந்தன.

அப்போது அங்கே அருகில் வந்த மல்லி "அப்பா, நாம சொந்தவீடு வாங்கினவுடனே. ஓரு குட்டி மாடு வாங்கலாமா, இல்ல. பெரியமாடு வாங்கலாமா?" என்று மழலையில் கேட்டதும் "பெரியமாடு" என்று குரல் தழுதழுக்கச் சொன்னான். அதன் பொருள் புரிந்தவளாய் மஞ்சுளா வாஞ்சையுடன் கணேசனைப் பார்த்தாள்.

குறிஞ்சி. சுரேஷ் செல்வராஜ் பழனியாண்டி
More

இவர்களை நினைக்க!
Share: 




© Copyright 2020 Tamilonline