Thendral Audio Advertise About us
New User? | Forgot Password? | Email: Password: Login
Current Issue | Previous Issues | Author Index | Category Index | Organization Index | E-Magazine | Classifieds | Digital Downloads
By Category:
சின்னக்கதை | சமயம் | சினிமா சினிமா | இளந்தென்றல் | கதிரவனை கேளுங்கள் | ஹரிமொழி | நிகழ்வுகள் | மேலோர் வாழ்வில் | மேலும்
August 2017 Issue
தென்றல் பேசுகிறது | நேர்காணல் | அன்புள்ள சிநேகிதியே | சினிமா சினிமா | சின்னக்கதை | ஹரிமொழி | மேலோர் வாழ்வில் | சிறப்புப் பார்வை
கதிரவனை கேளுங்கள் | மாயாபஜார் | சிறுகதை | Events Calendar | கவிதைப்பந்தல் | அஞ்சலி | சமயம் | பொது | வாசகர் கடிதம்
எழுத்தாளர் | இளந்தென்றல் | நிகழ்வுகள்
Tamil Unicode / English Search
சிறப்புப் பார்வை
ஓர் ஆமையின் ஏக்கம்
- சற்குணா பாக்கியராஜ்|ஆகஸ்டு 2017||(1 Comment)
Share:
நீரிலிருந்து தலையைத் தூக்கிப் பார்த்தது அந்த நிறைசூல் ஆமை. இதுவொரு நல்ல இரவு. எத்தனை வருடங்களாக எதிர்பார்த்துக் கொண்டிருந்த இரவு. தான் பிறந்த மண்ணைத் தொடப்போகும் இரவு. இன்றைய தினத்தை விட்டால், மறுபடியும் என்று வரமுடியுமோ? கடல் அலைகள் மணற்பரப்பில் தாளமிடும் ஒசையைத் தவிர்த்து, எங்கும் அமைதி. மேகங்களற்ற வானில், வைரத் துணுக்குகளாக விண்மீன்கள்.

அந்த வளைந்த கழியின் நீர்பரப்பில் வெள்ளிக்கம்பிகளாக நிலவின் கதிர்கள். வேறு ஒளி இல்லை.

இன்னும் ஆலோசிக்க நேரமில்லை. மெதுவாக நீரிலிருந்து வெளியே வந்து, கழுத்தை இருபக்கமும் திருப்பி, சூழ்நிலையை ஆராய்ந்து பார்த்து, மேலும் செல்லத் தடங்கலில்லை என்ற உறுதியுடன், அடிமேல் அடி வைத்து, தூரத்து மணல்மேட்டை நோக்கி ஊர்ந்தது.

அடிவயிற்றில் பாரம் கனத்ததாலும், ஈரமணல் பரப்பில் துடுப்புகள் போலக் கால்கள் புதைந்ததாலும் வேகமாகச் செல்ல முடியவில்லை. பத்தடிக்கு ஒருமுறை நின்று, நீண்ட பெருமூச்சு எடுத்துக்கொண்டது. ஊர்ந்து ஊர்ந்து ஒருபடியாக மணல்மேட்டை அடைந்துவிட்டது. ஒரு வினாடியும் வீணாக்க முடியாத நிலை. மங்கலான நிலவொளியிலும், படர்ந்து கிடந்த அடும்புக்கொடிகளின் பசுமையான இலைகள், மான் குளம்புகள்போல்.



அந்த ஆமை துடுப்புகளால் மணலை இருபுறத்திலும் தோண்டி, கொடிகளை நீக்கி, பள்ளம் உருவாக்கி, உடம்பைப் புதைத்துக்கொண்டது (nesting pit). பின்பு, நிதானமாகப் பின்துடுப்புகளால் கரண்டிபோல் மணலைக் கோரி வெளியேற்றிக் குடுவைபோல் ஒரு குழியை ஏற்படுத்தி, அதில் முட்டைகளை இடத் துவங்கியது.

இன்னும் கொஞ்சம் நேரம் ஆகும், முட்டைகளை இட்டுமுடிக்க. ஒவ்வொரு முட்டை வெளிவரும்போதும் வேதனை. ஆமை கண்களை மூடிக்கொண்டது. ஐந்து ஆண்டுகளுக்கு முன்பு இதே மணல்மேட்டிலிருந்து, சிறு குஞ்சாக முட்டையிலிருந்து வெளிப்பட்டு, கடல்நீரை நோக்கி ஓடிச்சென்ற காட்சி கண்முன்னே விரிந்தது...

*****


ஏதோவொரு கூட்டுக்குள் அடைபட்ட உணர்வு. கை கால்களால் கூட்டை உடைக்கப் பார்த்து, முடியாமல், தன் கூர்மையான தாடையினால் முட்டையின் ஓட்டைக் குத்தி உடைத்துக்கொண்டு வெளியே வந்தபோது, மெல்லிய கீச்சுக்குரல்கள் வரவேற்றன. தன்னோடு பிறந்தவர்கள்! மணல்குழியை விட்டு வெளியேவர, சின்னஞ்சிறு துடுப்புகளால், ஒருவரை ஒருவர் மிதித்துத் தள்ளுவதும், மணலைத் தோண்டுவதுமாக ஒரே கலவரம். திருவிழாக் கூட்டம் போல.



எப்படியோ, ஒவ்வொன்றாக வெளியேறின. இதுதான் கடைசிக்குஞ்சு, குழியைவிட்டு மணல்மேட்டுக்கு வந்தால் அன்றைக்கும் பகல்போன்ற நிலவொளி! பொடிமணல் படர்ந்து கண்களைத் தாக்கியது. ஆமைக்குஞ்சு தன் சிறு முன்துடுப்புகளால் கண்களைத் துடைத்துக்கொண்டது. சற்றுத் தொலைவில், கொட்டிவிட்ட மூட்டையிலிருந்து சிதறி ஓடும் கருநீலப் பாசிமணிகள் போல் உடன்பிறந்த குஞ்சுகள் மணல்மேட்டிலிருந்து ஓடிக்கொண்டிருந்தன.

ஆமைக்குஞ்சுக்கு ஏதோ ஒன்றைக் காணவில்லை என்ற ஏக்கம். "அப்பா, அம்மா" என்று அழைத்தது. சுற்றுமுற்றும் யாருமில்லை. நெடுந்தொலைவில் புரியாத குரல்கள். பெற்றோரைத் தேட நேரமில்லை. அபாயம் நிரம்பிய சூழல் என்று உள்ளுணர்வு எச்சரித்தது. மேலும் நிற்க விரும்பாமல், மேட்டிலிருந்து குதித்து, மற்றக் குஞ்சுகளோடு சேர ஓடியது. ஏதோ ஒரு காந்தசக்தி இழுக்க எல்லா ஆமைக் குஞ்சுகளும் கடல் அலைகளை நோக்கி ஓடின. துரத்தி வந்த நாய்கள், காட்டுப் பூனைகள், நண்டுகளுக்குத் தப்பி, சின்னஞ்சிறு கால்கள் நீரைத் தொட்டபோது ஏற்பட்ட மகிழ்ச்சி இன்னும் நினைவில் இருக்கிறது.

புதிய உலகம்! மீன்குஞ்சுகள் வரவேற்றன. தானும் ஒரு மீன்குஞ்சுபோல் நீந்தி, நீந்தி...

*****
எங்கோ ஓர் ஆந்தையின் கூக்குரல். திடுக்கிட்டு விழித்துக் கொண்டது முட்டையிட்டு முடித்த ஆமை. அடிவயிற்றில் பாரம் குறைந்துவிட்டது. நூறு அழகிய முட்டைகள். பிங்பாங் பந்து அளவு. தந்தத்தில் கடைந்தெடுத்த தோற்றம். பார்த்து, ரசித்து அடைகாக்க முடியாது.

பின்துடுப்புகளால் வேகவேகமாக மணலைக் குவித்து முட்டைகளை மூடியது. குழி தோண்டிய அடையாளமே தெரியாதவாறு ஒதுக்கி வைத்திருந்த அடும்புக் கொடிகளை இழுத்து மணல்மேல் பரப்பியது. கதிரவன் தோன்றும் முன்பு கடலுக்குத் திரும்பிச் சென்றுவிட வேண்டும். முட்டைகள் பொரித்து குஞ்சுகள் வெளிவரக் குறைந்தது அறுபது, எழுபது நாட்களாகும்.

அதற்குள்தான் எத்தனை ஆபத்துகள்! பறவைகள், விலங்குகள். எல்லாவற்றுக்கும் மேலாக மனிதர்கள்தான் பெரிய எதிரிகள்! தனக்குத் துணைசெய்ய அந்த ஆண் ஆமை இல்லையே. அவனைச் சந்தித்து இன்பமாகப் பழகியதெல்லாம் சிலமணி நேரம்தான். "சந்தித்தோம், பிரிவோம்" என்றபடித் தலையையும், வாலையும், ஆட்டிவிட்டுப் போய்விட்டான். ஆண் ஆமைகளே இப்படித்தான், நீரைவிட்டு வெளியே தலைகாட்ட மாட்டார்கள்.

இந்த உண்மை தெரியாமலா அந்தத் தமிழ்ப்புலவர் இரண்டாயிரம் ஆண்டுகளுக்கு முன்பு ஆமையினத்தைப் பற்றிப் பாடினார்? அதுவும் ஒரு பெண்புலவர். அந்தப் பாடலின் ஒரு பகுதி நினைவில் நிழலாடியது.

அடும்பு கொடிசிதைய வாங்கி, கொடுங்கழிக்
குப்பை வெண்மணற் பக்கம் சேர்த்தி,
நிறைசூல் யாமை மறைத்து ஈன்று, புதைத்த
கோட்டு வட்டு உருவின் புலவு நாறு முட்டை
பார்ப்பு இடன் ஆகும் அளவை, பகுவாய்க்
கணவன் ஓம்பும் கானல்அம் சேர்ப்பன்"


குமுழிஞாழலார் நப்பசலையார்
அகநானூறு, 160:(3-8)

குமுழிஞாழலார் நப்பசலையார், அவ்வளவு கச்சிதமாகப் பெண் ஆமை மணல்மேட்டில் குழிதோண்டி முட்டையிட்டு, மறைத்து வைப்பதையும், முட்டையின் உருவம், நிறம், வாசனையை, நேரிலே கண்டு மனதிலே பதித்துக் கவிதையாக வடித்திருக்கிறார். ஒரு நிமிடம் ஆமைக்குக் கொஞ்சம் பெருமையாக இருந்தது. தங்களுடைய கடினமான உழைப்புக்கு மதிப்புக் கொடுத்திருக்கிறார். ஆனால் அடுத்த வரியை நினைத்தபோது கண் கலங்கியது, ஏன் "பகுவாய்க் கணவன், குஞ்சு வெளிவரும் அளவும் பாதுகாத்திருக்கும்" என்றார்?



பகுவாய் ஆமைகள் (snapping turtles), ஏரி, குளம் போன்ற நன்னீரிலும், உப்பங்கழிகள், காயல்களிலும் காணப்படும். ஆண், பெண் ஆமைகள் உருவத்தில் ஒன்றுபோல் இருக்கும். இவை தங்களை எதிரிகளிடமிருந்து பாதுகாத்துக்கொள்ள வாயைப் பெரிதாகத் திறந்து, "ஸ்ஸ்ஸ்" என்ற ஒலியை எழுப்புகின்றன. இதனால் இதனைப் பகுவாய் ஆமை என்கின்றனர். ஆனால் ஆண் ஆமைகள், நீரைவிட்டு ஒருபோதும் வெளிவருவதில்லையே, வெயில் காயும் தருணம் தவிர! பெண் ஆமைகள் இனம்பெருக்க, முட்டையிட மணல்பகுதியை நாடி, மெய்வருத்தம் பாராமல், அபாயங்களை எதிர்கொண்டு, நீரைவிட்டு நீண்ட தொலைவு சென்று திரும்புகின்றன. அடைகாத்து, குஞ்சுகளைப் பேணிக்காக்கும் பழக்கம் ஆண் ஆமைகளின் வரலாற்றிலேயே கிடையாதே!

ஒருவேளை, நப்பசலையார், தன் கவிதைக்கு மெருகூட்ட அவ்வாறு எழுதினாரோ? இந்த உண்மையை எப்படிப் பிறருக்குத் தெரியப் படுத்துவது என்று தோன்றிய சமயத்தில் பெண் ஆமை நீரை அடைந்துவிட்டது. மேலும் நினைக்க நேரம் இல்லை. என்றாவது ஒருநாள் உண்மை வெளிவரமலா போகும் என்ற ஏக்கத்தோடு நீருக்குள் அது நீந்தி மறைந்தது.

கட்டுரை: சற்குணா பாக்கியராஜ், சான்ட க்ளாரா, கலிஃபோர்னியா
படங்கள்: S.S. டேவிட்சன், கன்னியாகுமரி மாவட்டம்.
Share: 




© Copyright 2020 Tamilonline