NETS: பொங்கல்விழா விபா-சிகாகோ: பசித்த குழந்தைக்குச் சத்துணவு ஹூஸ்டன்: நிதி திரட்டும் நிகழ்ச்சி டொரான்டோ: முதல் தமிழர் மரபு மாநாடு 2017 அட்லாண்டா: பொங்கல் விழா சான் அன்டோனியோ: பொங்கல் விழா சிகாகோ: பொங்கல் விழா
|
|
STF: திருக்குறள் போட்டிகள் |
|
- தினகர்|மார்ச் 2017| |
|
|
|
|
ஜனவரி 28, 2017 அன்று சாஸ்தா தமிழ் அறக்கட்டளையின் சார்பில் பத்தாவது ஆண்டாகத் திருக்குறள் போட்டி, ஃப்ரிஸ்கோ டிம்பர் ரிட்ஜ் மான்டெசரி பள்ளி வளாகத்தில் நடைபெற்றது.
219 குழந்தைகளும் 41 பெரியவர்களும் பங்கேற்றனர். காலை 9 மணிக்குத் தொடங்கிய போட்டி, மதிய உணவு இடைவேளையைத் தாண்டி மாலை 5:30 மணிவரை நீடித்தது.
12ம் வகுப்பு படிக்கும் சீதா ராமசாமி 1330 குறட்பாக்களையும் 3 மணி 45 நிமிட நேரத்தில் சொல்லிச் சாதனை படைத்தார். குழந்தைகளுக்கென ஆரம்பிக்கப்பட்ட இந்தத் திருக்குறள் போட்டி பெரியவர்களிடமும் பெரிய விழிப்புணர்வை உருவாக்கிவிட்டது.
இந்த ஆண்டு குழந்தைகளுடன் பெற்றோர்களும் சேர்ந்து குடும்பம் குடும்பமாகத் திருக்குறள் கூறியது காணற்கரிய காட்சி. 73 வயது முதிய பெண்மணி ஒருவர் 20 குறட்பாக்களைச் சொன்னார்.
பெரியவர்கள் பிரிவில் 2014ம் ஆண்டு கீதா அருணாச்சலம் அமெரிக்காவிலேயே முதல் போட்டியாளராக 1330 குறட்பாக்களையும் கூறிச் சாதனை படைத்தார். கடந்த ஆண்டு முனைவர் சித்ரா டாலஸில் நடந்த போட்டியில் அனைத்துக் குறள்களையும் கூறினார். எல்லா வயதுப் பிரிவுகளிலும் கட்டுரைப் போட்டியும் நடைபெற்றது.
பிப்ரவரி 11ம் தேதி காலை 9 மணிக்கு டிம்பர் ரிட்ஜ் மான்டெசரி பள்ளி வளாகத்தில் திருக்குறள் பேச்சுப்போட்டி நடைபெற்றது. பொருட்காட்சிப் போட்டியும் அறிமுகப் படுத்தப்பட்டது. திருக்குறளை மையமாகக் கொண்டு அறிவியல் கண்காட்சிபோல இதனை வடிவமைத்திருந்தார்கள். அன்று மாலை 5 மணிக்கு, போட்டியில் வெற்றி பெற்றவர்களுக்கு ஃப்ரிஸ்கோ சென்டினியல் பள்ளி அரங்கத்தில் நடைபெற்ற ஆராதனை விழாவில் பரிசுகள் வழங்கப்பட்டன. ஒப்பித்த ஒவ்வொரு குறளுக்கும் ஒரு டாலர் வீதம் குழந்தைகளுக்கு பணப்பரிசும் வழங்கப்பட்டது. குறளிசைப் பாடலுக்கு நடனம், குறள் கருத்தில் ஓரங்க நாடகம் ஆகியவைகளும் இடம்பெற்றன.
விழாவுக்குச் சிறப்பு விருந்தினராகத் தமிழ்மரபு அறக்கட்டளையின் தலைவர் முனைவர் க. சுபாஷிணி பங்கேற்றுச் சிறப்புரை ஆற்றினார். மலேசியாவில் பிறந்து வளர்ந்து, ஆஸ்திரேலியா, ஜெர்மனியில் கல்லூரிக் கல்வி முடித்து, ஜெர்மனியில் கணினி வல்லுனராக இவர் பணியாற்றி வருகிறார். மலாய்மொழி புழங்கும் நாட்டில், எவ்வாறு தமிழ் கற்று, தமிழ்மரபு அறக்கட்டளை மூலம் ஆய்வுகள் நடத்தும் அளவுக்கு வந்துள்ளேன் என்று தான் கடந்துவந்த பாதையை விவரித்தார்.
விஜயகுமார் வரவேற்புரை ஆற்றினார். தேஜா மற்றும் மோனி தொகுத்து வழங்கினார்கள். வேலு ராமன் மற்றும் விசலாட்சி ராமன் நன்றியுரை கூறினார்கள். |
|
|
சிறப்புக் கருத்தரங்கம் திருக்குறள் போட்டியின் 10வது ஆண்டைக் கொண்டாடும் வகையில் பிப்ரவரி 11, சனிக்கிழமை காலை ஃப்ரிஸ்கோ டிம்பர் ரிட்ஜ் மான்டெசரி பள்ளி வளாகத்தில் திருக்குறள் சார்ந்த சிறப்புக் கருத்தரங்கம் ஒன்று ஏற்பாடு செய்யப்பட்டிருந்தது.
சான் ஃபிரான்சிஸ்கோவிலிருந்து நா. உதயபாஸ்கர் 'இறை' என்ற தலைப்பில் உறையாற்றினார். இன்றைய நடைமுறை வாழ்க்கையை அலசி ஆய்ந்து, அதற்குத் திருவள்ளுவர் காட்டிய வழிமுறைகளை சுட்டிக்காட்டினார்.
ஹூஸ்டனிலிருந்து வந்திருந்த வாராந்திர திருக்குறள் திறனாய்வுக் குழுவின் ஒருங்கிணைப்பாளர் கரு மலர்ச்செல்வன் 'காமத்துப்பால் ஒரு காதல் காவியம்' என்ற தலைப்பில் பேசினார். குடும்ப வாழ்க்கைக்குத் தேவையான அனைத்தையும் திருவள்ளுவர் அந்த அதிகாரங்களில் வழங்கியுள்ளதை விவரித்தார்.
முனைவர் க. சுபாஷிணி 'அயல்நாட்டில் திருக்குறள்' என்ற தலைப்பில் சொற்பொழிவு ஆற்றினார். முதன்முதலாக ஜெர்மானிய மொழியிலேயே திருக்குறள் பெயர்க்கப்பட்டது என்பது உள்ளிட்ட பல அரிய தகவல்களைத் தந்தார்.
இறுதியாக, பார்வையாளர்களுடன் கலந்துரையாடல், கேள்வி நேரம் ஆகியவை இடம்பெற்றன. கருத்தரங்கத்தைப் பழனிசாமி வரவேற்புரையுடன் தொடங்கி வைத்தார். சித்ரா மகேஷ் விருந்தினர் அறிமுகம் செய்து தொகுத்து வழங்கினார். ஜெய்சங்கர் நன்றியுரை கூறினார்.
கருத்தரங்க வீடியோ பதிவுசெய்து வெளியிடப்பட்டுள்ளது. பார்க்க:
தினகர், டாலஸ், டெக்சஸ் |
|
|
More
NETS: பொங்கல்விழா விபா-சிகாகோ: பசித்த குழந்தைக்குச் சத்துணவு ஹூஸ்டன்: நிதி திரட்டும் நிகழ்ச்சி டொரான்டோ: முதல் தமிழர் மரபு மாநாடு 2017 அட்லாண்டா: பொங்கல் விழா சான் அன்டோனியோ: பொங்கல் விழா சிகாகோ: பொங்கல் விழா
|
|
|
|
|
|
|