இதுவும் கோவில்தான் வயசு கம்மிதான்!
|
|
|
|
"உங்களுக்கு எப்போதிலிருந்து கண் என்று சொல்லப்படும் அந்த உறுப்பில் வலி இருக்கிறது?" என்ற அந்த கண் மருத்துவருக்குக் கண் மட்டுமே சரியாக இருப்பதுபோல் பட்டது கயல்விழிக்கு. கருத்த முகம். அதில் அடர்ந்த புருவங்கள், கேசம். எரிகல் மழையால் சேதமுற்ற ஒரு கிரகத்தைப்போல் முகமெங்கும் சிறு சிறு பள்ளங்கள். அந்த முகம்! அந்த முகம்! ஐயோ... சட்டென எவருக்கும் புருவச்சுருக்கம் தரச்செய்யும் முகம். அந்த முகத்தில் எது, பார்ப்பவரை உடனே அசூயை கொள்ளச்செய்கிறது என்கிற கேள்வியைத் தனது ஆராய்ச்சி மனத்தில் தொடர்ந்து இயங்கவிடாமல் தடுத்தாள் கயல்விழி. அந்த முகத்தைப் பார்க்கப் பார்க்க அவளுக்குள் என்னவோ செய்தது. முடிந்தவரை அந்த முகத்தைப் பார்ப்பதை தவிர்த்தாள் கயல்விழி.
"ஒரு நான்கைந்து நாட்களாக" என்றாள்.
"சமீபமாக எங்கேனும் அடிபட்டதா உங்களுக்கு?"
"ஆமாம். நான்கைந்து நாட்களுக்கு முன்பு ஒருமுறை தூக்கத்தில் கட்டிலிலிருந்து தவறி விழுந்துவிட்டேன். அப்போது பின்மண்டையில் அடிபட்டது. அப்போதிருந்துதான் இப்படி இருக்கிறது."
"மூளைக்குச் செல்லும் சில நரம்புகள் பாதிக்கப்பட்டிருக்கின்றன. நவீன மருத்துவத்தில் சரி செய்துவிடலாம். சின்னதாக உங்கள் கண்களில் அறுவை சிகிச்சை செய்யவேண்டும். மிக எளிமையான அறுவை சிகிச்சைதான். மூன்றிலிருந்து ஆறுமணி நேரம் மயக்கத்தில் இருப்பீர்கள். அவ்வளவுதான். உங்கள் வழக்கமான வேலைகளை நீங்கள் எப்போதும் போல பார்க்கலாம்" என்றார் அவர்.
அதுவரை அவரை முடிந்தவரை பார்க்காமல் தவிர்த்தபோதிலும், பார்க்கக் கிடைத்த ஓரிரண்டு தவிர்க்க முடியாத தருணங்களில் கவனித்ததில் அவர் தனது ஆள்காட்டி விரலால் மூக்கின் நுனியில் அவ்வப்போது லேசாக தேய்ப்பதையும், பக்கவாட்டு நெற்றியில் ஒருதுளி வியர்வை வழிவதையும் கவனித்துக்கொண்டாள்.
அவரிடமிருந்து மீண்டும் தனது பார்வையை வலுக்கட்டாயமாக விலக்கிக்கொண்டே "சரி" என்றாள். "நீங்கள் இப்போது மேஜையைப் பார்த்துதானே பேசுகிறீர்கள்?" என்று அவரது குரல் மட்டும் கேட்டது.
"ஆமாம்" என்றாள் அவள்.
இப்போது மேஜை மீதிருந்த காகிதத்தில் ஒரு கை பேனா பிடித்து எதையோ கிறுக்கியது. அந்த கைகளும் கறுப்பாகத்தான் இருந்தன. தடித்த தோலாகத்தான் இருக்க வேண்டும் என்று அவளுக்குத் தோன்றியது. "உங்கள் பெயர் என்ன?" என்றாள் கயல்விழி.
"என் பெயர் ........... . அது எதற்கு? நான் தற்காலிக மருத்துவர்தான். உங்களுக்கு மருத்துவம் பார்க்க இருப்பவர் வேறொருவர்" என்று வந்த பதிலில் அவள் உள்ளுக்குள் ஏதோவொரு நிம்மதி உணர்வு படர்ந்ததென்னவோ உண்மைதான்.
பக்கவாட்டில் திரும்பி ஜன்னல் வழியாக வெளியே பார்த்தாள். ஒரு ரோஜாச் செடியில் அழகான செவ்விதழ் ரோஜா பூத்திருப்பதைக் கண்டாள். அதையே பார்த்தபடி அமர்ந்திருந்தாள்.
*****
கயல்விழி கண்விழித்தபோது அந்த ஆஸ்பத்திரியின் வெண்மை நிறைந்த அறை ஒன்றில் வெண்ணிறத் திரையொன்று சூழ, பஞ்சுப்பொதிக்குள் குழந்தையெனக் கிடத்தப்பட்டிருப்பதைத்தான் முதலில் உணர்ந்தாள். கடந்த ஐந்து நாட்களாக எப்போது உறக்கம் கலைந்து எழுந்தாலும் வரும் தலைவலி இப்போது இருக்கவில்லை என்பதை உணர்ந்தாள். வெண் தலையணையிலிருந்து லேசாக முகத்தை உயர்த்தி அப்படியும் இப்படியுமாக அசைத்துப் பார்த்ததில்கூட அப்படி ஒரு தலைவலி மீள்வதாகத் தோன்றவில்லை.
"வணக்கம். என் பெயர் ரமணி. உங்கள் அழகான மீன்களுக்கு, மன்னிக்கவும் கண்களுக்கு வைத்தியம் பார்த்த மருத்துவர். எப்படி உணர்கிறீர்கள்?" என்ற குரல்கேட்டுத் திரும்ப, அவள் கண்கள் சட்டென விரிந்தன. அந்த முகத்தை இட்டு நிரப்பிக்கொள்ள ஆயிரம் கண்கள் தேவைப்படும் போலிருந்தது அவளுக்கு. ஆயிரம் கண்களில் இட்டு நிரப்பினாலும் போதாமல் இன்னுமோர் ஆயிரம் கண்கள் தேவைப்படுமென்று தோன்றியது. அங்கே சிவந்த முகத்தின் இதழோரம் ஓர் புன்னகை தவழ நின்றிருக்கும் ஆடவனை எங்கோ ஜென்மங்களைக் கடந்து பார்த்த உணர்வு மிஞ்சியது. "இப்போது தலைவலி இல்லை" என்றாள் கயல்.
"நிச்சயம் இருக்காது. இனிமேல் உங்களுக்கு எவ்வித தொந்தரவும் இருக்காது" என்றான் ரமணி.
அந்த ஆணழகனிடம் பேசிக்கொண்டிருக்கவே "தலைவலி இன்னும் இருக்கிறது" என்று சின்னதாய் ஒரு பொய் சொல்லியிருக்கலாமோ என்று தோன்றியது. செக்கச்செவேலென்ற வட்டமான திருத்தமான முகம். பொலிவான, பிரகாசமான முகம். அடர்த்தியான கருகருவென மீசை. தாடி மழித்த இடங்களில் பச்சைப்புல்லின் நிறம். தரையில் இறங்கி நின்றிருப்பின், அவனை அண்ணாந்துதான் பார்த்திருக்க வேண்டி இருந்திருக்குமென்று தோன்றியது. "இருந்தாலும் லேசாக ஒரு உறுத்தல் இருக்கிறது" என்றாள் வேண்டுமென்றே.
"அப்படியா? அது அப்படியிருக்க வாய்ப்பில்லை.. தொடர்ச்சியாக அப்படி இருக்கிறதா?"
"இல்லை. சற்று முன் வரை இருந்தது..இப்போது இல்லை.. மீண்டும் வருமோ என்று தோன்றுகிறது."
"சரி..அப்படியானால் நீங்கள் ஒன்றிரண்டு நாட்கள் பாருங்கள். அப்படியும் பிரச்சனை இருந்தால், மீண்டும் வாருங்கள். ஒருமுறை சோதித்துப் பார்த்துவிடலாம்."
அந்த அழகான முகத்தை மீண்டும் மீண்டும் காண இன்னும் எத்தனை முறை வேண்டுமானாலும் செயற்கையாய் உறுத்தல்களை உருவாக்கலாம் என்று தோன்றியது.
"ஆனால் நான் நகரத்தின் இந்தப் பக்கத்திற்கு அதிகம் வந்ததில்லை. என் வேலை நகரத்தின் மறுகோடியில்தான். இங்கே இத்தனை தூரம் வருவது சற்றுச் சிரமமாக இருக்கிறது. உங்களுக்குச் சிரமம் இல்லையென்றால், நீங்கள் நகரத்திற்குள் வருகையில் எனக்கு தெரிவிப்பீர்களா? நாம் நகரத்துக்குள்ளேயே கூட சந்திக்கலாம்." "அதுவும் சரிதான். நான் தினமும் காலை வேளைகளில் கடலோரமாக ஓட்டம் பழகுவேன். நீங்களும் சேர்ந்து கொள்ளுங்களேன்."
'உன் அகன்ற தோள்களுக்கும், திமிறும் இளமைக்குமான ரகசியம் அது ஒன்றுதானா?' என்று மனதுக்குள் நினைத்தபடியே "அட! இது ஒரு நல்ல யோசனை" என்றாள் கயல்.
அவர்களிருவரும் சினேகமாய் புன்னகைத்துக் கொள்வதாய் நடித்துக்கொண்டே எதிராளியின் புன்னகையில் ஈர்ப்பை தேடிக்கொண்டிருந்தார்கள்.
***** |
|
அடுத்த நாள் காலை ஐந்து மணிக்கெல்லாம் கடலோரம் மெல்லிய ஓட்டத்திற்கான ஆடைகளை அணிந்து ஆஜராகியிருந்தாள் கயல். ஆனால் ரமணி எங்கும் தென்படவில்லை. சற்றே ஏமாற்றமாக இருந்தது. ஒரு 15 நிமிடம் காத்திருந்தாள். பிற்பாடு, வாகன நெரிசலைக் காரணம் சொல்லி, ஒரு சின்ன ஓட்டம் ஓடிவந்து இன்னுமொரு 15 நிமிடங்களை கரைத்தாள். பின்னர் 'வேலை பளுவாக இருக்கலாம்' என்கிற காரணத்திற்காய் இன்னுமொரு 15 நிமிடம் கரைத்தாள்.
பிறகு அவனுடைய தாமதத்துக்கு நாம் ஏன் காரணம் சொல்லிக் கொண்டிருக்கிறோம் என்று தன்னைத்தானே கடிந்துகொண்டாள். 'நமக்கெல்லாம் அதிர்ஷ்டம் அவ்வளவுதான்' என்றெண்ணியபடி அவள் வீட்டுக்கு செல்லத் திரும்ப, "வணக்கம்" என்று சொல்லி புன்னகைத்தான் ரமணி.
"இதுதான் நேரத்துக்கு வரும் லட்சணமா?" என்றாள் பொய்க்கோபத்துடன்.
"ஏன்? அதற்கென்ன? சொன்ன நேரத்துக்குத்தான் வந்தேன்" என்றான் ரமணி இதழோரம் தொகுத்த அதே புன்சிரிப்புடன்.
"இல்லையே. ஐந்தரை மணியிலிருந்து காத்திருக்கிறேன் 15 நிமிடங்களாகக் காத்திருக்கிறேனே."
"பொய். நீங்கள் ஐந்திற்கே வந்துவிட்டீர்கள். நான்தான் பார்த்தேனே"
"அப்படியானால் இங்குதான் இருந்தீர்களா?"
"ஆமாம்"
அத்துணை எளிதாக அகப்பட்டுக்கொள்வோம் என்று அவள் நினைத்திருக்கவில்லை. ஆனால், பதிலுக்கு அவனைச் சற்றே ஏமாற்றிப் பார்க்கவேண்டிய கட்டாயக் கணக்கொன்று துவங்கிவிட்டதை மனதுக்குள்ளாக குறித்துக்கொண்டாள். இருவரும் ஓடத் துவங்கினார்கள். மிக மெதுவாக. அதிக நேரமெடுக்கும் என்று சொல்கிற அளவுக்கு மெதுவாக. "உங்களுக்கு இறை நம்பிக்கை இருக்கிறதா? எந்தக் கடவுளை மிகவும் பிடிக்கும்?" என்றான் ரமணி.
"பிள்ளையார். என்னவோ பிறந்ததிலிருந்தே பிள்ளையார் என்றால் எனக்கு அலாதிப் பிரியம்" என்றாள் கயல்.
"உடலை ஒரு தமிழ்ப்பட நாயகிபோல் வைத்திருக்கிறீர்கள். நீங்கள் எத்தனை நாட்களாக இப்படி ஓடுகிறீர்கள்?"
"துவக்கத்தில் இப்படி வீதிகளில் ஓடிக்கொண்டிருந்தேன். இப்போதெல்லாம் வீட்டிலேயே உபகரணங்கள் வைத்து ஓடிக்கொண்டிருக்கிறேன். இன்று நீங்கள் இருக்கும் தைரியத்தில்தான் வந்தேன். வீதிகளில் ஓடிக்கொண்டிருந்த போதெல்லாம் பெரும் தொல்லை. யாரேனும் காதல் கடிதம் நீட்டுவார்கள்."
"அதனால் என்ன தொல்லை?"
"அது எப்படி அறிமுகம் இல்லாதவர்களுடைய கடிதத்தை ஏற்பது?"
"ஆனால் நீங்கள் அறிமுகம் இல்லாதவர்களுடன் அறிமுகம் செய்து கொள்வதில்லையே. பிறகு எப்படி அவர்கள் தங்கள் காதலைத் தெரிவிக்க முடியும்? உங்கள் சமூக வளையில் அன்னியர்களுக்கு அனுமதி இல்லையே."
"அது சரிதானே"
"அது எப்படிச் சரியாகும்? உங்களையொத்த புத்திசாலி உங்கள் ஜாதிக்குள், உங்கள் மதத்திற்குள், நீங்கள் படிக்கும் கல்லூரிக்குள், நீங்கள் வேலை பார்க்கும் அலுவலகத்திற்குள் மட்டும்தான் இருக்க முடியுமா? உங்களுக்கென இறைவன் படைத்த ஆண், உங்களுடன் பொதுவான நட்புகளுடன், நீங்கள் வந்து செல்லும் இடங்களுக்கு வர முடிந்தவனாகத்தான் இருக்க முடியும் என்று நீங்களாக நினைத்துக் கொள்வதற்குப் பெயர்தான் கடவுள் நம்பிக்கையா? உங்கள் பிள்ளையார் எம்.பி.ஏ. படித்தவர் என்று அர்த்தப்படுத்துவது போலிருக்கிறது."
"பிள்ளையார். எம்.பி.ஏ.! நகைச்சுவையாக இருக்கிறது" என்று சொல்லிச் சிரித்தாள் கயல்.
அப்போதுவரை அந்த 45 நிமிடங்களைக் கடத்தப் பட்டகஷ்டத்தில் கிஞ்சித்தும் தேவைப்படாமல் அடுத்த ஒன்றரை மணி நேரத்தை அவர்கள் ஒன்றாக அந்த நெடிய கடலோர ஓடுதளத்தில் பேசிக்கொண்டபடியும், சிரித்துக்கொண்டபடியும், விவாதித்துக்கொண்டபடியும் கடத்தினார்கள். மறுநாளும் சந்திப்பதாய் உறுதிமொழி பரஸ்பரம் பகிர்ந்துகொண்ட பிறகே பிரிய வேண்டிய நிர்பந்தங்களுக்கிணங்கிப் பிரிந்தார்கள்.
*****
அன்று முழுவதும் இன்னதென்று வகை பிரித்தறிய முடியாத ஒரு குதூகலம் அவள் நெஞ்சோடு ஒட்டிக்கொண்டிருப்பதை உணரமுடிந்தது அவளுக்கு. மருத்துவமனையில் சிகிச்சை எடுத்து முழுமையாக 36 மணி நேரம் கடந்துவிட்டிருந்தது. எள்ளவிலும் பிரச்சனைகள் இருக்கவில்லை என்று அவள் கணித்திருந்த அலுவலக நேரத்தில் அவளது அறைக்கதவை யாரோ தட்ட, "வாருங்கள்" என்றாள்.
உள்ளே வந்தவனைப் பார்த்து திடுக்கிட்டாள் கயல்.
"ரமணி! நீங்க எங்க இங்க....?"
"ரமணியா? யார் அது? என்னை தெரியவில்லையா? நான்தான் கணக்காளன் குலோத்துங்கன்" என்றார் குலோத்துங்கன். கயல் தலையை ஒருமுறை சிலுப்பிக்கொண்டாள். இப்போது அவளுக்கு தெளிவாகத் தெரிந்தது. குலோத்துங்கன்தான். ஆனால் சற்றுமுன் கதவு திறந்து உள்ளே நுழைந்தவன் ரமணியாய்த் தெரிந்தது எப்படி? திரைப்படங்களில், தொலைக்காட்சிகளில் காதலில் விழுந்தவுடன் பார்ப்பவனெல்லாம் காதலனாகத் தெரிவதாக காட்டப்பட்ட போதெல்லாம் அதைச் சும்மா என்று நினைத்தது எத்தனை தவறென்று உணரக்கிடைத்த வாய்ப்பென அந்த நிகழ்வை அவள் கருதிக்கொண்டாள். குலோத்துங்கன் அறையை விட்டு வெளியேறும்வரை காத்திருந்துவிட்டு, வெளியேறியதும், பாத்ரூம் சென்று கண்ணாடியில் முகம் பார்த்துச் சிரித்துக்கொண்டாள். கன்னம் சிவந்திருந்தது.
அன்று மாலை நூலகம் சென்றபோதும், காய்கறிக்கடைக்குச் சென்றபோதும் ஆங்காங்கே யார் யாரோ ஒரு சில நொடிகளுக்கு ரமணி போலவே தோன்றினார்கள். தலை சிலுப்பி மீண்டும் பார்த்தபோது அவர்கள் கடந்து போய்விட்டிருந்தார்கள்.
தன்னுடைய வீட்டுக்கு வந்தபோது வாசலில் காவலாளி ரமணி போலவே தோற்றமளித்தான். சாயந்திரம் வீட்டுக்கு வந்து விற்ற விற்பனைப் பிரதிநிதிகூட ரமணி போலவே தோன்றினான் என்று அவனிடம் இரண்டொரு வார்த்தை அதிகம் பேசினாள். *****
அடுத்த நாள் காலையிலேயே எழுந்து பல் துலக்கி, முகம், கைகால் கழுவி கூந்தலை அள்ளி முடிந்து, ஓட்டத்திற்கான உடைகளை அணிந்துகொண்டு தன்னுடைய இயந்திரப் புரவியைக் கிளப்பி கடலோரம் ஐந்து மணிக்கு வந்து சேர்ந்துவிட்டிருந்தாள் கயல். அவனுக்காகக் காத்திருந்தாள். சற்றைக்கெல்லாம் தன்னுடைய காரிலிருந்து இறங்கி நடந்துவந்தான் ரமணி. முன்தினம் துவங்கிய கட்டாயக்கணக்கை நேர் செய்யவேண்டியது நினைவுக்கு வந்தது. வரட்டும் என்று கருதிக்கொண்டு, அவனுக்கு எதிர்த்திசை பார்த்து முதுகு காட்டி நின்றுகொள்ள, "வணக்கம் கயல்" என்ற அவனின் குரல் கேட்டு எதேச்சையாக திரும்புபவள் போல திரும்பினாள் கயல். ரமணியே தான்.
"யார் நீங்கள்? என் பெயர் எப்படி தெரியும் உங்களுக்கு?" என்றாள் கயல்.
ரமணியின் முகத்தில் சட்டென ஒரு பீதி படர்ந்ததை பார்த்து ரசித்தாள். ஆனால் அதோடு விட்டுவிடக்கூடாது என்று முடிவு செய்துகொண்டாள். "நீங்கள்.... இது.... நான்..." என்று ரமணி இழுப்பதை உள்ளுக்குள் ரசித்தாள்.
"சொல்லுங்கள். யார் நீங்கள்? உங்களுக்கு யார் வேண்டும்?" மீண்டும் கேட்டாள்.
சற்றே அதிர்ச்சியுடன், ரமணி தனது ஆள்காட்டி விரலால் மூக்கின் நுனியில் லேசாக தேய்த்த காட்சியும், பக்கவாட்டு நெற்றில் ஒரு துளி வியர்வை வழிந்த காட்சியும் அவளை அவளது நினைவடுக்குகளில் பரபரப்புடன் தேடச் செய்தது. அன்றொரு நாள் ரமணியின் மருத்துவமனைக்கு முதன்முறையாக சென்றபோது அங்கே அவளை முதலில் எதிர்கொண்ட அந்தக் கரிய நிற, மேடுபள்ள முகங்கொண்ட அந்த ஆணின் செய்கைகள்தான் அவைகள் என்பதை சிரமம் அதிகமின்றி அவள் கண்டுகொண்டாள்.
"ரமணிக்கு அவசரமாக ஒரு நோயாளியைப் பார்க்க வேண்டி இருந்ததாம். இன்று வரமுடியாது என்பதைச் சொல்லச் சொல்லி அனுப்பினார்" என்ற ரமணியைப் பார்த்து குழப்பமுற்றாள் கயல்.
ரமணியே வந்து ரமணியைப்பற்றி ஏன் சொல்லவேண்டும்? ஏதோவோர் நாடகம்போல் காட்சிகள் அரங்கேறிக் கொண்டிருந்ததைப் பார்க்க முடிந்தது. ஆனாலும் அது எங்கேதான் செல்கிறது, பார்க்கலாம் என்கிற எண்ணத்தில், "சரி. மிக்க நன்றி" என்றாள் கயல். ரமணி ஏதும் சொல்லாமல் தன் வழியே திரும்பி நடந்தது அதிர்ச்சியாக இருந்தது. ரமணியால் வர முடியவில்லை என்று ரமணியே வந்து சொன்னது நடந்திருக்கிறது? எப்படிச் சாத்தியம்? அப்படியானால் வந்தது ரமணி இல்லையா? அல்லது இதுவும் ஒரு விளையாட்டா? அவன் சற்றைக்கெல்லாம் திரும்ப வந்து 'கயல், நன்றாக ஏமார்ந்தாயா?' என்று சொல்லிச் சிரிப்பான் என்று எதிர்பார்த்தாள். ஆனால் அது நடக்கவில்லை.
அப்போதுவரை அலுவலகத்தில் குலோத்துங்கனின் வருகையில் ரமணியின் உருவம் தெரிந்ததும், சாலைகளிலும், நூலகத்திலும் ரமணியின் உருவம் தெரிந்ததும் தற்செயல் என்று எண்ணியது தவறோ என்று தோன்றியது. இது எல்லாவற்றையும் இணைக்கும் ஓர் இழை இருக்கலாமோ என்கிற எண்ணம் வந்தது.
தனக்கு மனநலம் சரியில்லையோ என்கிற எண்ணம் வந்தபோதுதான் தான் நிலைகுலைந்து கீழே விழுந்துகொண்டிருக்கிறோம் என்பதை உணர்ந்தாள் கயல்.
*****
அன்று காலை சுமார் பத்துமணி அளவில் வேறொரு மருத்துவமனையில் வேறொரு மருத்துவரின் எதிரில் அவள் அமர்ந்திருந்தாள். "நீங்கள் சமீபமாக ஏதேனும் மருத்துவ சிகிச்சை எடுத்துக்கொண்டீர்களா?" என்றார் மருத்துவர்.
"ஆமாம். சமீபமாகத் தலையில் அடிபட்டது. அதிலிருந்து காலையில் கண்விழிக்கையிலேயே தலைவலி. அதற்கென மருத்துவம் எடுத்துக்கொண்டேன்" என்றாள் கயல்.
"மூளைக்குச் செல்லும் நரம்பு ஒன்று சேதமாகியிருக்கிறது. நாம் தினந்தினம்நமது கண்களால் பார்க்கும் காட்சிகள் மூளைக்கு செல்லவில்லை என்றால் நமக்குப் பார்வை என்ற ஒன்றே இருந்தும் பலனில்லை. அந்த நரம்பு சேதமாகியிருக்கிறது. அது முழுமையாகச் செயல்படவில்லை. எத்தனை சதவீதம் செயல்படவில்லையோ அதற்கு மாற்றாக உங்கள் மூளைக்குள் ஒரு சிப் பொறுத்தப்பட்டிருக்கிறது. இப்போதுவரை உங்களைச் சோதித்ததில் இதைத்தான் கண்டுகொண்டோம்."
"அது உண்மைதான். அந்தச் சிகிச்சையின் போது எனக்கும் அதுதான் சொல்லப்பட்டது."
"ஆனால் அந்த சிப்புக்குள் ஏதேனும் குறைகள் இருந்தால்கூட இப்படி உங்களுக்கு நிகழ்ந்திருக்கலாம்."
"அதைச் சோதிக்க முடியுமா?"
"நீங்கள் மயக்கத்தில் இருந்தபோது அதையும் வெளியே எடுத்துச் சோதித்து விட்டோம். அதில் உங்கள் தலைவலிக்கான தீர்வோடு இன்னுமொன்றும் சேர்த்து வைக்கப்பட்டிருக்கிறது."
"அது என்ன?"
"ஒரு குறிப்பிட்ட உருவம் தெரிந்தால் அதை இன்னொரு உருவமாக மாற்றிக் காண்பிக்கும் ஒரு பகுதி அதில் கண்டெடுத்தோம்."
"அந்த உருவம் எது என பார்க்க முடியுமா?"
"உடனே பார்க்கலாம்" என்று சொல்லிவிட்டு அந்த மருத்துவர் தனக்கு பக்கவாட்டில் இருந்த பெரிய திரையின் பொத்தானை அழுத்த, அது இரண்டு உருவங்களைக் காட்டியது. ஒன்று அந்த கரிய, தடித்ததோல் உருவந்தான் எனக் கண்டுகொள்ள கயலுக்கு அதிகம் நேரமாகவில்லை. இரண்டாவது ரமணி.
"இவர்களை உங்களுக்கு தெரியுமா?"
"தெரியும். இருவருமே மருத்துவர்கள். இரண்டாமவர் எனது காதலர். பெயர் ரமணி"
"இந்த இருவருமே ஒன்றுதான். முதலாமவர்தான் உண்மையான நபர் என்று நான் சொல்லவில்லை. உங்கள் கண்ணிலிருந்து எடுக்கப்பட்ட சிப் சொல்கிறது."
"அப்படியானால், நூலகத்திலும், காய்கறிக்கடையிலும் ரமணியின் உருவம் தெரிந்ததே.. எனது அலுவலகக் கணக்காளர் ஒருவரிடம்கூட அதே உருவம் தெரிந்ததே. அது எப்படி?"
"பூமியில் இருக்கும் எல்லாப் பொருட்களும் நம் கண்ணுக்கு தெரிவது அதன்மீது பட்டுத் திரும்பும் ஒளியால்தான். ஒரு குறிப்பிட்ட உடலை மட்டும் உருவ மாற்றம் செய்ய மற்ற உடல்களிலிருந்து அந்த உடலை மட்டும் வேறுபடுத்திக் காட்டவேண்டி இருக்கிறது. அதற்கென அதிகமாக ஒளியைத் திருப்பும் இயல்பு கொண்ட சில திரவங்கள் இருக்கின்றன. அதனை நம் உடலில் நாம் தேய்த்துக்கொள்ளும்போது அது மற்ற உடல்களைக் காட்டிலும் அதிகமான ஒளியைத் திருப்பி விடுகிறது.. அந்த அதிகப்படியை கண்டுபிடித்து அதைமட்டும் வேறொரு உருவமாக மாற்றத்தான் அந்த சிப்பில் மென்பொருள் எழுதப்பட்டிருக்கிறது. உங்கள் கணக்காளர், விற்பனை பிரதிநிதி முதலானவர்கள் அன்று அப்படி அதிகப்படியான ஏதேனும் சருமப்பூச்சைப் பயன்படுத்தியிருக்கலாம்" என்ற மருத்துவரை இமைக்காமல் பார்த்தாள் கயல்.
கயலுக்கு எல்லாமும் நொடியில் புரிந்தது. தன்னிடம் நெருங்கிப் பழக, தனது அவலட்சண முகத்தை சிப் மூலமாக மறைத்து இரண்டு நாளாக ஏமாற்றியவன் அவன்தான் என்று. அந்த ரமணி, ஒரு சிவந்த மேனிக்காரன் அல்ல. அடர் மீசைக்காரன் அல்ல. மெலிந்ததோல் காரனல்ல. அகண்ட மார்புக்காரனல்ல. "உங்கள் தலைவலிக்கு இத்தனை சிக்கலான சிகிச்சை தேவையில்லை.. மருந்துகளாலேயே குணப்படுத்திவிட முடியும்" என்று சொல்லிக் கொண்டிருந்த மருத்துவரின் மீது எத்தனை முயன்றும் அவளால் தனது கவனத்தைக் குவிக்க முடியவில்லை.
*****
இரவெல்லாம் உறக்கம் வரவில்லை கயலுக்கு. ரமணியின் முயற்சிகளுக்கான தர்க்கம் புரிந்துவிட்டிருந்தது. மனதில் இடம்பிடிக்கத் தலைவலிக்கான சிகிச்சையை தனக்குச் சாதகமாய் அவன் பயன்படுத்திக் கொண்டதில் எதுவோ ஈர்த்தது. அதைப் போக்கிரித்தனம் என்பதா, புத்திசாலித்தனம் என்பதா, அறிவுஜீவித்தனம் என்பதா? எத்தனை ரிஸ்க்? சிக்கினால் மருத்துவத்துக்கான உரிமத்தை இழக்க வேண்டிவரும். இனி எப்போதும் மருத்துவம் செய்ய இயலாது. வருமானம் போகும். வாழ்க்கை போகும். கம்பி எண்ணக்கூட நேரலாம். அத்தனையிலும் ரிஸ்க். இதில் எத்தனை மடத்தனம் இருக்கிறதோ அத்தனைக்கு காதலும் இருக்கிறது என்பதை மறுக்கவே முடியாது.
ரமணியின் பக்க நியாயம் அவன் சொல்லாமலே புரிந்தது. காரணத்தோடுதான் அவன் பலதும் முந்தைய நாள் ஓட்டத்தில் அவளுடன் பகிர்ந்திருக்கிறான் என்பதைத் தாமதமாகப் புரிந்துகொண்டாள் கயல். 'நிறம் பிறப்பால் வருவது. சருமம் பிறப்பால் வருவது. கல்வி, புத்திசாலித்தனம், சமூக இடம் போன்றவற்றிலும் பிறப்பால் அமையும் சுற்றுப்புறத்தின் பங்கு மிக இருக்கிறது. ஒரு பெரிய மருத்துவமனையில் மிகப்பெரிய பெயர்பெற்ற கண் மருத்துவன் நான். அந்த உயரம் நவீன யுகத்தில் அடைவது அத்தனை எளிதல்ல. எல்லாமும் பொருந்தி வருகிறது. கடவுள் உனக்கெனப் படைத்த ஆண் நான்தான் என்பதை எப்படித் தவறென நீரூபிப்பாய்?' என்று அவனின் அசரீரி அவளிடம் கேட்பது போலிருந்தது.
யோசித்துப் பார்த்தால் அப்படியேதும் அவனுக்கெதிராய்ச் சொல்ல முடியாதுதான். நாம் யாரை நண்பர்களாகத் தேர்வு செய்கிறோம்? நாம் வசிக்கும் வீட்டுக்கு அருகில் உள்ளவர்களை என்றால், நம் நட்புகளை நமது பொருளாதாரமும், சாதியும், மதமும் அல்லவா தீர்மானிப்பதாக ஆகிவிடுகிறது? நாம் பயிலும் கல்லூரி என்றால், நமது ஏட்டுச் சுரைக்காய் கல்வி அல்லவா தீர்மானிப்பதாக ஆகிவிடுகிறது? நாம் வேலை பார்க்கும் அலுவலகம் என்றால் முதலாளித்துவம் என்றல்லவா அர்த்தமாகிறது? அப்படியானால் இறைவன் என்கிற மாபெரும் சக்தியின் ஆளுமையை இந்த மூன்றுக்குள் நாம் சுருக்கிவிட்டதாகத்தானே அர்த்தமாகிறது? ஆத்திகம் பேசிக்கொண்டே நாத்திகமாக நடந்துகொள்ள முடியுமா? கருமை நிறம், தடித்த தோல் மீதான ஒவ்வாமை ஏன்? தொடர்ந்து வெள்ளைத்தோலையும், மெல்லிய சருமத்தையும் பார்த்து பழகிவிட்டதால்தானோ? வெளியே கவிந்திருந்த இருளுக்குத் தன் மூளைக்குள்ளே வெளிச்சம் பாய்ச்சிக் கொண்டிருந்தாள் கயல். *****
மறுநாளும் தவறாமல் ஐந்து மணிக்கே அவள் கடலோரம் வந்துவிட்டிருந்தாள். ரமணி அவளை நோக்கி வந்தான். அதே கரிய உருவம். தடித்த தோல்கள். முகமெங்கும் மேடு பள்ளங்கள். கயல் ரமணியைப் பார்த்துச் சினேகமுடன் சிரித்தாள். அந்த சிப் ஏற்கனவே எடுக்கப்பட்டிருப்பது ரமணிக்குத் தெரிய வாய்ப்பில்லை. "அங்கும் இங்கும் ஒளிந்து நோட்டம் விடாமல் சரியான நேரத்துக்கு இன்று வந்துவிட்டீர்களே?" என்றாள்.
"ஒளிய வேண்டிய தேவை இன்று இல்லை" என்றான் ரமணி. இருவரும் ஓடத்துவங்கினார்கள். ஒருமணி நேரம் எதை எதையோ பேசியபடியே ஓடினார்கள். வழமைபோலச் சிரித்தார்கள். வழமைபோல விவாதித்தார்கள். ஓட்டம் முடிவுக்கு வந்த கட்டத்தில், "ரமணி, நான் உங்களுடன் ஓட்டம் பழகுவது இன்றுதான் கடைசிநாள் என நினைக்கிறேன்" என்றாள் கயல்.
"ஏன்? என்னாயிற்று?" என்றான் ரமணி.
"கடல்காற்று உடலுக்கு அந்நியமாகிவிட்டது போலிருக்கிறது. உடல் ஏற்றுக்கொள்ள மறுக்கிறது." "சரி. உங்கள் உடல் ஆரோக்கியத்தைப் பார்த்துக் கொள்ளுங்கள்."
"சரி.. அப்படியானால் நான் கிளம்பட்டுமா? நேரமாகிறது. இன்றைக்கு அலுவலகத்திற்கு சற்றுச் சீக்கிரம் செல்ல வேண்டும். சில கலந்தாய்வுகள் இருக்கின்றன."
"சரி. வந்தனம்."
இருவரும் தங்கள் வழியே பிரிந்தார்கள். சிப் வெளியே எடுக்கப்பட்டு விட்டதைச் சொல்லாமல், ரமணி உருவாக்கிய 'ஆணழகன்' பிம்பத்திலேயே அவனை விட்டு விலகிச்செல்வதாகக் காட்டிவிட்டதால் அவனால் மேற்கொண்டு தன்மீது 'நிறவேற்றுமை, குழு மனப்பான்மை ஆதரவு' என்கிற குற்றச்சாட்டை சுமத்த முடியாமலாக்கி, சூழலை புத்திசாலித்தனமாகக் கையாண்டுவிட்டதாக கயல் நினைத்துக்கொண்ட அதே வேளையில், அன்றைக்கு அதிகப்படியான ஒளியை வெளியிடும் பூச்சுகளை சருமத்தில் பூசாமல் வந்தும், கயல் தன்னை எப்போதும் போல நடத்தியதில் அவள் நடிக்கிறாள் என்பதை உணர்ந்தும் வெளிக்காட்டாமல், அவளை அவளது பொய்முகத்தோடே நிரந்தரமாகப் பிரிய முடிவு செய்திருந்தான் ரமணி.
பட்டம் பெற்ற பிள்ளையாரைவிட பட்டம் பெறாத பிள்ளையார் போதும் என்று எண்ணியபடியே தன் போக்கில் நடந்தான் ரமணி.
ராம்பிரசாத் |
|
|
More
இதுவும் கோவில்தான் வயசு கம்மிதான்!
|
|
|
|
|
|
|
|