Thendral Audio Advertise About us
New User? | Forgot Password? | Email: Password: Login
Current Issue | Previous Issues | Author Index | Category Index | Organization Index | E-Magazine | Classifieds | Digital Downloads
By Category:
சின்னக்கதை | சமயம் | சினிமா சினிமா | இளந்தென்றல் | கதிரவனை கேளுங்கள் | ஹரிமொழி | நிகழ்வுகள் | மேலோர் வாழ்வில் | மேலும்
February 2017 Issue
தென்றல் பேசுகிறது | நேர்காணல் | அன்புள்ள சிநேகிதியே | சினிமா சினிமா | சின்னக்கதை | ஹரிமொழி | சாதனையாளர் | வாசகர் கடிதம் | சமயம்
கதிரவனை கேளுங்கள் | மாயாபஜார் | சிறுகதை | Events Calendar | பொது | நலம்வாழ | சிறப்புப்பார்வை | முன்னோட்டம் | அனுபவம் | கவிதைப்பந்தல்
எழுத்தாளர் | இளந்தென்றல் | நிகழ்வுகள்
Tamil Unicode / English Search
சிறுகதை
பிள்ளையார் தெரு முதல் வீடு
நினைவுகள் விற்பனைக்கல்ல
- வெங்கடேசன் சுந்தரேசன்|பிப்ரவரி 2017||(2 Comments)
Share:
ரயிலின் வேகம் குறைந்திருந்தது. வாசற்படி அருகில் நின்று எட்டிபார்த்தேன். காற்று முகத்தில் அறைந்து சட்டைக்குள் புகுந்து படபட என ஒலி எழுப்பியது. தொலைவில் 'சுவாமிமலை' என்ற பெயர்ப்பலகை விரைவாக எனை நோக்கி வந்துகொண்டிருந்தது. என் கைப்பையைத் தோளில் மாட்டிக்கொண்டேன். ரயில் நின்றது. நானும் ஒரு பெரியவரும் இறங்கினோம்.

சட்டென்று வெறுமையை விட்டுச் சென்றது ரயில். நான் மெயின் ரோடு நோக்கி நடந்தேன். பெரியவர் அங்கேயே நின்றுகொண்டிருந்தார். மெயின் ரோட்டிலிருந்து பேருந்து பிடித்து வீட்டுக்குச் சென்றுவிடலாம். மாமாவும், அத்தையும் காத்துக்கொண்டிருப்பார்கள்.

ஐந்து மாதங்களுக்கு முன் அம்மாவின் கருமாதிக்காக இங்கு வந்தேன். சீனிவாச அண்ணாதான் காத்திருந்து என்னை வீட்டுக்கு அழைத்துச் சென்றார். அம்மாவின் நினைவுகளிலிருந்து விலக முடியவில்லை. ஊரின் ஒவ்வோரிடமும் அம்மாவின் நினைவாக உருமாறி இருந்தது. பேருந்துக்குக் காத்திராமல், வீடுநோக்கி நடக்கலானேன். "பிள்ளையார் கோவில், இரண்டு ஆற்றுப்பாலம்" என்ற அம்மாவின் சுருக்கப்பட்ட தூரங்கள் நடந்துவிடலாம் என்ற எண்ணத்தைத் தந்தது. மழை வந்தாலும் வரலாம் என்று நினைத்துக்கொண்டே, தோள்பையைச் சரிசெய்து கொண்டு விரைவாக நடக்கலானேன். கரும்பு ஏற்றிவந்த லாரி ஒன்று புழுதி கிளப்பிக் கடந்து சென்றது. கிராமத்தில் மட்டுமே புழுதியையும் நுகரலாம். அத்தனையும் மண்வாசனை.

பிள்ளையார் கோவிலைக் கடந்து இருந்தேன். கொய்யாப்பழ பாட்டி உன்னிப்பாகப் பழங்களை அடுக்கிக் கொண்டிருந்தாள். அம்மாவும், நானும் பிள்ளையார் கோவிலுக்கு வரும்போது, பாட்டி கடையில்தான் செருப்பை விட்டுச் செல்வோம். திரும்பி வந்து அம்மா, பாட்டியுடன் ஏதோ பேசிக் கொண்டிருப்பாள். நான் பழங்கள் அடுக்கப்பட்ட நுணுக்கத்தை ஆராய்ந்து கொண்டிருப்பேன். பாட்டிக்கு அம்மா இறந்த செய்தி தெரியுமா என்று தெரியவில்லை. எனக்கும் சொல்ல விருப்பமில்லை. பாட்டியின் நிகழ்வுகளில் அம்மாவுடன் பகிர்ந்துகொள்ளும் செய்திகளும், அம்மாவின் வருகையின் எதிர்பார்ப்பும் இருக்கும், அதைக் கலைக்க எனக்கு விருப்பமில்லை. அம்மாவின் நினைவுகளிருந்து விலக முயற்சித்து வேறேதோ நினைவுகளுடன் இரண்டு ஆற்றுப்பாலத்தையும் கடந்து வீடருகே வந்திருந்தேன்.

மாமா திண்ணையில் அமர்திருந்தார். என்னைப் பார்த்ததும், எழுந்து வந்து "வாப்பா,குமார், நடந்தே வந்துட்டியா" என்றார்.

"ஆமா, மாமா, ஏதோ நடக்கணும்போல இருந்துச்சி" என்றேன்.

"இப்பதான், கல்யாணி போன் பண்ணி நீ வீடு வந்து சேர்ந்துட்டியானு, கேட்டுச்சி". நானும்,மாமாவும் வீட்டினுள் சென்றோம்.

"எங்க மாமா அத்தை?" என்றேன்.

"உள்ள இருக்கா. சாந்தி, இங்க பாரு குமார் வந்தாச்சு" என்று சொல்லிக்கொண்டே சமையலறைக்குச் சென்றார். நான தோள்பையை எடுத்து டேபிள்மேல் வைத்துவிட்டு உட்கார்ந்தேன்.

அத்தை, "வாப்பா" என்றபடி வந்தார்.

"தண்ணியும், காப்பியும் கொடு, களைப்பா இருக்கும்" என்றார் மாமா.

"தண்ணி மட்டும் கொடுங்க அத்தை, குளிச்சிட்டு காப்பி குடிக்கிறேன்" என்றேன்.

அத்தை வேகமாகச் சமையலறைக்கு சென்றாள். என் வருகை மாமாவுக்கும், அத்தைக்கும் மகிழ்ச்சியானதாக இருக்கும் என்று தோன்றியது. அவர்களின் செயல்களில் சற்றுப் பதட்டம் தெரிந்தது. மாமாவின் தொலைபேசி உரையாடல்களில் எப்பொழுதும் என் வருகை குறித்த அழைப்பும், வருத்தமும் இருக்கும். அலுவலக வேலை, அம்மா நினைவுகள் என்னைச் சென்னையிலேயே இருக்க வைத்தன. கல்யாணியையும், குழந்தையும் மட்டும் அவ்வப்பொழுது இங்கு அனுப்பி வைத்துவிடுவேன்.

"குமாரு,வேட்டி எடுத்து வரவா, மாத்திகிறியா" என்றார் மாமா.

"வேண்டாம் மாமா, நான் எடுத்து வந்திருக்கேன்" என்றேன்.

உள் அறைக்குச் சென்று வேட்டி கட்டிக்கொண்டேன். கல்யாணியும், என் குழந்தையும் புகைப்படத்தில் சிரித்துக் கொண்டிருந்தார்கள். நான் மெல்ல அவர்களைத் தொட்டுப்பார்த்தேன். "அது இப்பதான், கல்யாணி இங்க வந்திருந்தப்ப எடுத்தது. உங்க அத்தைதான் பேரனும், பொண்ணும் இருக்கறமாதிரி படம் வேணும்னு கேட்டு எடுத்தது" என்றார் மாமா.

நான் வெளியே வந்து தண்ணி குடித்துவிட்டு, முகம் கழுவக் கொல்லைப்புறம் செல்ல முற்பட்டேன். அப்பொழுதுதான் வீட்டில் கரண்ட் இல்லாதது தெரிந்தது. "மாமா, கரண்ட் இல்லையா?"

"ஆமாம்பா, மழை வரமாதிரி இருந்துச்சுல்ல. இவனுங்க கரண்ட நிப்பாட்டிடானுங்க."

"வாசல்ல தண்ணி வருமே, அங்கேயே முகம் கழுவிக்கலாம்" என்றாள் அத்தை.

"வேண்டாம்..வேண்டாம். கொல்லைக்கே போகட்டும். நிலா வெளிச்சம் இருக்கு. என்னா பயம், சின்னப் புள்ளையிலிருந்து பழகின இடம்தானே நம்ம வீடு குமாருக்கு" என்றார் மாமா.
நான் கொல்லைப்புறக் கதவின் நாதங்கியை விலக்கிச் சற்று குனிந்து சென்றேன். நிலா வெளிச்சத்தில் மரங்களும், செடிகளும் அசைவில்லாமல் இருந்தன. கிணற்றில் நீர் இறைக்க வாளியைச் செலுத்தினேன். தண்ணீர் இருக்கும் இடம் சரியாகத் தெரியவில்லை. வாளி நீரில் மோதும் சத்தம் கேட்கும் இடைவெளியில் மனசுக்குள் ஒர் எதிர்ப்பார்ப்பை ஏற்படுத்தியிருந்தது.

நீருடன், இருட்டையும் கலந்து இறைப்பது போல் இருந்தது. சட்டென தூரத்தில் உருவமற்ற நிழல்களின் கலவை உள்ளுக்குள் கிளர்ச்சியை எழச்செய்தது. நீர் இறைந்து முகத்தில் தெளித்தேன், நீரின் குளுமை சட்டென உடல் முழுவதும் பரவி, உடல் மயிர்களெல்லாம் உயிர் பெற்றதுபோல் சற்றே எழுந்து மடிந்தன. நான் துண்டால் முகம் துடைத்து நிமிர்ந்தபோது, மெல்லிய காற்றில் தூரத்தில் ஏதோ அலை அலையாய் அசைந்து கொண்டிருந்தது. கொடியில் காயும் துணிகளாக இருக்ககூடும். வாளியை ஓரமாக வைத்துவிட்டு, துண்டை எடுத்துக்கொண்டு நகர்ந்தபோது, கொல்லைப்புற மின்விளக்கு சட்டென எரிந்தது. மின்சாரம் வந்துவிட்டது போல என்று நினைத்துக் கொண்டேன். மின் விளக்கு ஒரு சிறிய பரப்பைத் தவிர மற்ற இடங்களைக் கருமையாக்கி, நிழல்களை ஏதோ ஓர் கோணத்தில் உருப்பெருக்கியிருந்தது. திரும்பி நடந்தபோது அனிச்சையாக, காற்றில் அசைந்தது என்னவென்று திரும்பிப் பார்த்தேன். கொடியில் காயப் போடப்பட்ட புடவைதான்.

உள்ளே சென்றதும் அத்தை காப்பி கொடுத்தாள். மாமா, பக்கத்து வீட்டு மாமாவின் பெண்ணுக்குக் கல்யாணம் நிச்சயம் செய்திருப்பதாகவும், அதற்குக் கல்யாணியை மட்டுமாவது அனுப்பி வைக்குமாறு கூறிக்கொண்டிருந்தார். நான் காப்பி பருகிக்கொண்டே கூடத்திற்கு வந்தேன். மாமா நான் உட்கார்வதற்கு நாற்காலியை இழுத்து என் அருகில் போட்டார்.

"செட்டியாரிடம் பேசிட்டீங்களா மாமா" என்றேன்.

"ம்...பேசிட்டேன் குமார். அவர் ரெடியாத்தான் இருக்கார். நாங்கதான் உன்கிட்ட பேசிப் பார்க்கலாம்னு இருந்தோம்" என்றபடி அத்தையைப் பார்த்தார் மாமா.

அத்தை, "சாப்பாடு ஆயிடுச்சி, சாப்பிட்டுப் பேசலாமே" என்றாள்.

நான் காப்பி டம்ளருடன், அங்கிருந்த கல்யாணி, என் குழந்தையின் புகைப்படத்தை மறுபடியும் பார்த்தேன். குழந்தை அம்மாவின் சாயலில் இருப்பதாகக் கூறிக்கொண்டே அத்தை சமையலறைக்குச் செல்வது புகைப்படத்தின் கண்ணாடியில் பிரதிபலித்தது.

மாமா வீட்டில் புகைப்படங்கள் காலவரிசையில் இருக்கும். மாமாவும், அம்மாவும் சிறுவயதில் எடுத்துக்கொண்டது, மாமா கல்யாண புகைப்படம், அம்மாவின் கல்யாண புகைப்படம், கல்யாணி குழந்தையாய் இருந்தபோது அத்தையும் மாமாவும் அவளைத் தூக்கி வைத்திருப்பது போல், பின் அம்மா, அப்பா, நான் என மற்றொரு புகைப்படம், கல்யாணியும், நானும் இருக்கும் எங்கள் கல்யாண புகைப்படம் என உறவுகளின் தொடர்ச்சியாக இருக்கும். அதில் அம்மாவின் ஒரு படம் எனக்கு ரொம்பப் பிடிக்கும். மிக இயல்பாக இருப்பாள். நான் எப்பொழுதும், அந்தப் படம் எடுக்கப்பட்ட நிகழ்வை திரும்பத் திரும்ப அம்மாவிடம் கேட்பேன். அது தனக்குக் கல்யாணம் நடப்பதற்குமுன் எடுத்ததாகவும், புகைப்படம் எடுக்கும் நோக்குடன் அன்று செல்லவில்லை என்றும், மாமாவின் வற்புறுத்தலுக்காக எடுத்ததாகவும் சொல்வாள்.

அம்மா எப்பொழுதும் இயல்பாக இருப்பதுபோலவே தோன்றும். அப்பாவின் மறைவுக்குப் பின்புதான் அவளின் முகத்தில் சற்றுக் கவலை இருந்தது. அப்பாவுக்குப் பின் அம்மா, மாமாவின் துணையோடு என்னை நன்றாகப் படிக்க வைத்தாள். படித்தபிறகு அவள் ஆசைப்படியே மாமா பெண் கல்யாணியை திருமணம் செய்து கொண்டேன். சென்னையில் வேலை கிடைத்த பிறகு நானும், கல்யாணியும் சென்னைக்குச் சென்றுவிட்டோம். மாமா வீடும், எங்கள் வீடும் எதிரெதிரே இருந்ததால், அம்மா தனியாக இருப்பதில் பிரச்சனை இருக்கவில்லை. அம்மாவைச் சென்னைக்கு வர வற்புறுத்தியபோது, வர மறுத்துவிட்டாள். அப்பாவின் நினைவுகளில் இருந்த அவளுக்கு அந்த வீட்டில் இருப்பது ஆறுதலாக இருக்கும் என்று நான் கட்டாயபடுத்தவில்லை.

திடீரென ஒருநாள் அம்மா மயக்கமுற்று நினைவிழந்தாள். இரண்டு நாளில் இறந்தும் போனாள். அதன்பின் அம்மா என் மெளனத்திலும், நினைவுகளிலும் நிறைந்திருந்தாள். அம்மாவின் மறைவுக்குப்பின் அவளுடனான நினைவுகள் உருப்பெருகிக்கொண்டே இருக்கின்றன.

"குமார், வா சாப்பிடலாம்" மாமா என் நினைவுகளிலிருந்து வெளியிழுத்தார். மாமா எனக்கு முன்னால் சாப்பிட்டு எழுந்து விட்டார். நான் மெதுவாக சாப்பிட்டு மாமாவுடன் திண்ணையில் அமர்ந்தேன்.

மாமா, "செட்டியாரிடம் வீடு விஷயத்தைச் சொல்லிட்டேன்பா. நாங்கதான் உங்கிட்ட மறுபடியும் பேசிப் பார்க்கலாம்னு இருந்தோம்" என்றார்.

"இல்ல மாமா, எல்லாம் யோசிச்சு பார்த்துட்டேன். அம்மா இறந்தபின்பு நீங்கதான் வீட்டைப் பார்த்துகிறிங்க, ஆனா எவ்வளவு நாள் உங்களால முடியும்? என்னாலையும் அடிக்கடி வரமுடியல. அதான் வீட்டை வித்திடலாம்னு முடிவு பண்ணி உங்ககிட்ட நல்ல ஆள் இருந்தா பார்க்கச் சொன்னேன்"

"இல்லப்பா, அப்பா அந்த வீட்டை ரொம்ப ஆசைப்பட்டு வாங்கினாரு. எல்லோரும் பக்கத்துல ஒண்ணா இருப்போம்னு ஆசைப்பட்டாரு, ஆனா அதை அவரால அனுபவிக்க முடியலை.அம்மாவும், அப்பாவும் இல்லைனாலும் அந்த வீடு இருக்கட்டும். நாங்க அந்த வீட்டை கவனிச்சுக்கறதுல கஷ்டப்படுறோம்னு நீ முடிவு எடுக்காதே. இங்க எங்களுக்கும் வேற யாரும் இல்ல. நீ, கல்யாணி, பேரன் எல்லாரும் இங்க வரும்போது, அங்க தங்கலாம். இல்ல, நீ விருப்பப்பட்டா மேல்வீட்டை மட்டும் வாடகைக்கு விடலாம். கீழே வேணா நாங்க பாத்துக்குறோம், என்ன சொல்ற?" என்றார்.

நான் மேலும் குழம்பினேன்.மாமா என்னையே பார்த்துக்கொண்டிருந்தார். மாமாவின் உடல்நிலை, என் அலுவலக வேலை, என் பையன் எதிர்காலம் என்பதை நினைவில் கொண்டுதான் அந்த வீட்டை விற்பதாக முடிவு பண்ணினேன். ஆனால், என் முடிவில், மாமா, அத்தை, கல்யாணி உட்பட வேறு யாருக்கும் அவ்வளவாக உடன்பாடு இல்லை. என்ன சொல்வதென்று தெரியாமல் மௌனமாக இருந்தேன்.

"சரிப்பா, நீ யோசி. உன் முடிவை காலையில சொல்லு. களைப்பா இருப்ப படுத்து தூங்கு" என்றார். நான் திண்ணைதில் சிறிது நேரம் உட்கார்ந்துவிட்டு உள்ளே சென்றேன்.

"அத்தை, வீட்டுச்சாவி எங்கே? நான் அங்க போய் படுத்துக்கிறேன்" என்றேன்.

"சரிப்பா, இந்தா சாவி, காலையிலேயே பெருக்கி வச்சுட்டேன். இரு குடிக்கிறதுக்கு தண்ணி கொஞ்சம் எடுத்துட்டு போப்பா" என்றாள் அத்தை.

தெருவைக்கடந்து, எதிர்வரிசையில் இருக்கும் என் வீட்டிற்குச் சென்றேன். கதவைத் திறந்து, மின்விளக்கைப் போட்டேன். வீடு அப்படியே இருந்தது. அத்தை வீட்டைத் தினமும் பெருக்கிச் சுத்தமாக வைத்திருந்தாள்.

அம்மா, அப்பா இருவர் படத்திலும் பூ வைக்கப்பட்டிருந்தது. நான் உள்ளறைக்குச் சென்று பாய், தலையணை எடுத்துவந்து விரித்தேன். மழை வரும் அறிகுறிகளுடன் காற்று வெளியில் அடித்துக்கொண்டிருந்தது. படுத்த சில நிமிடங்களில் உறங்கிப் போய்விட்டேன்.

சிறிது நேரத்துக்குப் பின் அப்பா சைக்கிளை உள்ளே நிறுத்தும் சத்தம் கேட்டது. அம்மா போய் உள்கதவைத் திறந்தாள்.

"ஏங்க, எங்கயாவது நின்னு வரக்கூடாது" என்றாள் அம்மா.

"மழை அதிகமாயிட்டே இருக்கு. சரி நனைஞ்சிட்டோம், வீட்டுக்கே போயிரலாம்னு வந்துட்டேன்" என்ற அப்பா, "தூங்கிட்டானா குமாரு?"

"ஆமா, அவன் சாயந்திரந்தான் வந்தான், அண்ணன் வீட்டில் சாப்பிட்டுப் படுத்துட்டான். களைப்பா இருந்திருக்கும்போல படுத்த உடனேயே தூங்கிட்டான்" என்றாள் அம்மா.

நான் மெதுவாகக் கண்திறந்து பார்த்தேன். அம்மா பூ கட்டிக்கொண்டிருந்தாள். அப்பா, மழையில் நனைந்த சைக்கிளைத் துடைத்துக்கொண்டிருந்தார். அம்மாவின் புடவை புதியதாக இருந்தது. புடவையிலும் அதே கலரில் பூ இருந்தது. அம்மாவுக்கு இந்தக் கலர் பிடிக்கும் என்று சொன்னது ஞாபகம் வந்தது. அம்மா மிக நீளமாகப் பூ தொடுத்துக்கொண்டிருந்தாள். பிறகு அதை இரு துண்டாக்கி, ஒன்றை அப்பா புகைப்படத்துக்கும், மற்றொன்றைத் தன் புகைப்படத்துக்கும் வைத்தாள். நான் ஒன்றும் புரியாமல் அம்மாவைப் பார்த்துக்கொண்டிருக்க, என்னை யாரோ தோள்பட்டையில் தட்டுகிறார்கள்.

"குமாரு..குமாரு.. என்னாச்சு?" நான் கண்ணைக் கசக்கியபடி படுக்கையிலிருந்து எழுந்து அமர்ந்தேன். விடிந்திருந்தது. மாமா எதிரில் நின்றுகொண்டிருந்தார்.

"என்ன ரொம்ப களைப்பா? நீ எப்பவும் சீக்கிரமா எழுந்துருப்பியே, என்ன ஆச்சுன்னு உங்க அத்தைதான் போய் பாருங்கன்னா, அதான் வந்தேன். நீ தூங்கணும்னா படுத்துக்கோ, நான் போய் காப்பி எடுத்து வரவா?" என்றார்.

"வேண்டாம் மாமா, நானே வரேன்" என்றேன். படுக்கையை எடுத்து உள் அறையில் வைத்துவிட்டு, வெளியில வரும்போது அம்மா, அப்பா புகைப்படத்தை ஒருமுறை பார்த்தேன். என்னைச் சுற்றி ஏதோ நடந்ததுபோல ஓர் உணர்வுமட்டும் இருந்தது.

மாமா வீட்டுக்குப் போய், கொல்லைப்புறம் சென்றேன். அத்தை கொடியில் நனைந்திருந்த புடவையை எடுத்துக் கொண்டிருந்தாள். சட்டென என் நினைவில் ஏதோ வந்து போனது. இந்தப் புடவையை இதற்குமுன் எங்கோ பார்த்ததுபோல் இருந்தது. இந்தக் கலர், புடவையிலிருந்த பூக்கள், ஆம், அம்மா இதைத்தான் கட்டியிருந்தாள்! எனக்கு இன்னதென்று தெரியாமல், நிகழ்வு மொத்தமும் என் நினைவுக்கு வராமல், ஏதோ சில பகுதிகள் மட்டும் மனதில் தோன்றி மறைந்தன. அம்மாவுடன் இருந்ததுபோன்ற உணர்வு மட்டும் இருந்தது.

அத்தை, "என்ன குமார்? என்னாச்சு?" என்றாள்.

"ஒண்ணுமில்லை அத்தை" என்றேன். "அத்தை, அந்தப் புடவை" என்றேன்.

அத்தை, "ஆமாப்பா, மழைல நனைஞ்சிடுச்சு. இது அம்மா கருமாதிக்கு அம்மாவுக்கு வைச்சு படையல் போட்டது. அதுக்கப்புறம் யாரும் இதக் கட்டாம உள்ளேயே இருந்துச்சி. கல்யாணி இங்க வந்தப்ப ஒருதடவை கட்டிகிட்டா. சரி துவச்சி எடுத்து வைக்கலாம்னு காயப்போட்டேன். நேத்திக்கு எடுக்காம அப்படியே மறந்து போயிட்டேன்" என்று சொல்லிக்கொண்டே வீட்டினுள் சென்றாள். போகும்போது, "அம்மாவுக்கு இந்தக் கலர் ரொம்ப பிடிக்கும்" என்றாள்.

எனக்கு ஏதோ ஒன்று தெளிவடைந்தது போல் இருந்தது. மாமாவிடம் வீட்டை விற்கவேண்டாம் என்று சொல்லிவிட்டு ஊருக்குப் புறப்படலானேன்.

வெங்கடேசன் சுந்தரேசன்,
ஒ'ஃபாலன், மிசௌரி
More

பிள்ளையார் தெரு முதல் வீடு
Share: 




© Copyright 2020 Tamilonline