மகாசக்தி ஸ்ரீ அன்னை
|
|
கிரிக்கெட் சாதனை: ரவிச்சந்திரன் அஸ்வின் |
|
- சிசுபாலன், சுனில் விஸ்வநாதன்|மார்ச் 2017| |
|
|
|
|
ஹைதராபாத். ராஜீவ்காந்தி இன்டர்நேஷனல் ஸ்டேடியம். இந்தியா - பங்களாதேஷ் இடையிலான இவ்வாண்டின் முதல் ஐந்துநாள் டெஸ்ட் போட்டி அது.
பார்வையாளர்கள் நடுவே எதிர்பார்ப்பு நிறைந்த மௌனம். காரணம், சற்று முன்தான் சஹிப் அல்ஹசனின் முக்கியமான விக்கெட்டைச் சாய்ந்திருந்தார் பந்துவீச்சாளர் அஸ்வின். பந்தைப் பாய்ந்து பிடித்தவர் யாதவ். அது அஸ்வினின் 249வது விக்கெட். மற்றுமொரு விக்கெட்டை அன்றைக்கு அவர் வீழ்த்துவாரா? ஒரு உலகசாதனை தங்கள் கண்முன் நடக்குமா? மறுமுனையில் அடித்து ஆடி 4, 6 என்று ரன்களைக் குவித்துக் கொண்டிருந்தார் முஷ்ஃபிகுர் ரஹீம். பந்துவீச்சு தொடர்ந்தது. ரன்கள் குவிந்தன.
மீண்டும் பௌல் செய்யவந்தார் அஸ்வின். அதை அடித்து ஆட ரஹீம் முற்பட, சஹா அதை லபக்கென்று பிடிக்க, அவுட் ஆனார் ரஹீம் (127 ரன்). நாற்பத்தைந்தே மேட்ச்களில் 250 டெஸ்ட் விக்கெட் என்ற புதிய உலகசாதனை படைத்தார் அஸ்வின். ஸ்டேடியம் உற்சாகத்தில் பொங்கித் தணிந்தது. அதற்கு முன்னர் ஆஸ்திரேலிய வீரர் டென்னிஸ் லில்லி 49 மேட்ச்களில் 250 விக்கெட் எடுத்ததே உலகசாதனையாக இருந்தது.
30 வயதாகும் அஸ்வின் சென்னையைச் சேர்ந்தவர். பி.டெக். பட்டதாரி. இந்திய அணியின் முக்கியமான சுழற்பந்து வீச்சாளர். 2011ம் ஆண்டு மேற்கிந்தியத் தீவுகளுக்கெதிரான போட்டியில் இந்திய அணியில் இடம்பெற்றார். இதுவரை 45 டெஸ்ட்களில் விளையாடியுள்ள அஸ்வின், விளையாட வந்து 5 ஆண்டு 98 நாட்களில் இந்தச் சாதனையை நிகழ்த்தியுள்ளது குறிப்பிடத்தக்கது. அதிவேகத்தில் 250 டெஸ்ட் விக்கெட்டுகளைச் சாய்த்த வீரர் என்ற உலகசாதனை தற்போது இவர் கையில். "குறைந்த டெஸ்ட்களில் 250 விக்கெட் கைப்பற்றியதை எனது சிறந்த சாதனைகளில் ஒன்றாக நினைக்கிறேன்" என்கிறார் அஸ்வின். சந்தேகமில்லை. |
|
|
2016ல் ஆஸ்திரேலியாவுக்கு எதிரான டெஸ்ட் போட்டியில் 3 விக்கெட்டுகளை வீழ்த்திய அஸ்வின், இந்தியாவில் நடந்த டெஸ்ட் போட்டிகளில் மொத்தமாக 64 விக்கெட்டுக்களைச் சரித்து, முன்னாள் கேப்டன் கபில்தேவின் 37 ஆண்டுகாலச் சாதனையை முறியடித்தார். 1979-80ல் இந்தியாவில் நடந்த 13 டெஸ்ட் போட்டிகளில் கபில்தேவ் 63 விக்கெட் வேட்டையே, ஒரு சீசனில் அதிக விக்கெட் வீழ்த்திய பௌலருக்கான சாதனையாக இருந்தது. அஸ்வின் அதையும் முறியடித்துள்ளார்.
இந்திய பௌலர்களில், அனில் கும்ப்ளே (619 விக்கெட்), கபில்தேவ் (434 விக்கெட்), ஹர்பஜன் சிங் (417 விக்கெட்), ஜஹீர்கான் (311 விக்கெட்), பிஷன்சிங் பேடி (266 விக்கெட்) ஆகியோர் 250 விக்கெட்டுகளுக்கு மேல் வீழ்த்தியுள்ளனர். அவ்வரிசையில் ஆறாவதாக இணைகிறார் அஸ்வின். ஒரே இன்னிங்ஸில் ஐந்து விக்கெட் வீழ்த்தி, ஒரு சதமும் எடுத்த மூன்றாவது இந்தியர், ஐந்து நாள் டெஸ்ட் போட்டிகளில் ஆறுமுறை தொடர்நாயகன் விருது பெற்றவர் என்பது உட்படப் பல சாதனைகளை முன்னர் நிகழ்த்தியிருக்கிறார். அர்ஜுனா விருது, ஐசிசி தொடர் ஆட்டக்காரர் விருது, சர். கேர்ஃபீல்டு சோபர்ஸ் விருது, பிசிசிஐயின் பாலி உம்ரிகர் விருது உட்படப் பல விருதுகளுக்கு இவர் சொந்தக்காரர்.
அஸ்வின் தனது மேனேஜரும், Gen-Next கிரிக்கெட் இன்ஸ்டிட்யூட்டின் COOவுமான சுதர்சன் மற்றும் குழுவினருடன் உலக டூரில் ஒரு பகுதியாக துபாய் போயிருக்கிறார். "கிரிக்கெட் விளையாடாத நாடுகளிலும் கிரிக்கெட்டின் வேரை விரிவடையச் செய்வதும், அங்குள்ள இளயோருக்குக் கிரிக்கெட் ஆட்டத்தின் ஆனந்தத்தைக் கண்டறியச் செய்வதும் இந்த உலகப் பயணத்தின் நோக்கமாகும். இதை எங்கள் தனித்துவமிக்க கோச்சிங் வழியே செய்வோம். துபாயை அடுத்து அமெரிக்கா, சிங்கப்பூர், மலேசியா ஆகிய நாடுகளுக்கும் செல்லவிருக்கிறோம்" என்றார் எம்மோடு பேசிய சுதர்சன்.
"பந்துவீச்சின் பிராட்மேன் அஸ்வின்" என்று மனமுவந்து பாராட்டியிருக்கிறார் முன்னாள் ஆஸ்திரேலியக் கேப்டன் ஸ்டீவ் வா. உலக அளவில் தமிழர் பெருமையை உயர்த்திக் கொண்டிருக்கும் ரவிச்சந்திரன் அஸ்வினை நாமும் வாழ்த்துவோம்.
சிசுபாலன் மற்றும் சுனில் விஸ்வநாதன் |
|
|
More
மகாசக்தி ஸ்ரீ அன்னை
|
|
|
|
|
|
|