கிரிக்கெட் சாதனை: ரவிச்சந்திரன் அஸ்வின்
|
|
|
|
இந்தியாவை நாடி வந்து, இந்தியரோடு இந்தியராக வாழ்ந்து அதன் ஆன்மீக எழுச்சிக்கும், உயர்விற்கும் உழைத்த மேலோர் பலர். அவர்களுள் குறிப்பிடத்தகுந்தவர் 'மா' என்றும் 'மதர்' என்றும் போற்றப்படும் ஸ்ரீ அன்னை. ஸ்ரீ அன்னை, ஃபிரான்ஸில் 1878 பிப்ரவரி 21ம் தேதி பிறந்தார். இயற்பெயர் மிர்ரா. இளவயதிலேயே அறிவாற்றல் மிக்கவளாகவும், எளியோருக்கு இரங்குபவளாகவும், தைரியசாலியாகவும் விளங்கினாள் மிர்ரா. இயல்பிலேயே ஆன்மிக நாட்டம் கொண்டிருந்த அவளுக்கு தினந்தோறும் தியானத்தில் ஆழ்வதும், இறை ஒளியை தரிசிப்பதும் வழக்கமாக இருந்தது. தன் வயதொத்த குழந்தைகளுடன் விளையாடுவதை விடத் தனித்திருந்து தியானிப்பதையே அவள் விரும்பினாள். கனவில் பல இறையுருவங்கள், மகான்கள், யோகிகளின் காட்சிகளும் ஆசிகளும் அவளுக்குக் கிடைத்தன.
பள்ளிப்படிப்பை முடித்தாள் மிர்ரா. வளர, வளர மிர்ராவின் ஆன்மதாகம் பெருகியது. அதிகநேரம் தியானத்தில் இருந்தாள். பிறர் சொல்லாமலேயே அவர்கள் மனதில் நினைப்பதை அறியும் ஆற்றல் உட்படப் பல்வேறு சித்துக்களும் கைவந்தன. கனவில் தோன்றிய ஆன்மீகப் பெரியவர்கள் பல ஆன்மிக உண்மைகளைப் போதித்தனர். அவர்களுள் ஒளிவீசும் கண்களும், நீண்டதாடியும் கொண்ட ஒருவர் அடிக்கடி வந்தார். அவர், இந்திய தத்துவங்களையும், வேத உபநிஷத்துகளையும் அழகாக எடுத்துரைத்தார். ஆனால் அவர் யார், எங்கிருக்கிறார் என்கிற விவரங்களை மிர்ராவால் அறிய இயலவில்லை. ஆனால் அவர் பகவான் ஸ்ரீகிருஷ்ணரின் அம்சம் என்பதும், அவரால் இந்த உலகம் மிகப்பெரிய முன்னேற்றத்தை அடையப்போகிறது என்பதும் அவளுக்குத் தியானத்தில் தெரியவந்தன.
மிர்ராவுக்கு ஓவியத்தில் மிகுந்த ஆர்வம். தனது திறமையை வளர்த்துக்கொள்ளும் பொருட்டு ஓவியப்பள்ளியில் சேர்ந்தார். சக ஓவியரான ஹென்றி மோரிசெட் என்பவருடன் முகிழ்த்த காதல் திருமணத்தில் முடிந்தது. ஆண்ட்ரூ என்ற குழந்தையும் பிறந்தது. இல்லற வாழ்வில் இருந்தாலும் அவரது ஆன்மிகத்தேடல் நாளுக்குநாள் வளர்ந்த வண்ணம் இருந்தது. தன்னைப் போன்றே எண்ணங்கள் கொண்டவர்களை ஒருங்கிணைத்து ஓர் அமைப்பை உருவாக்கி அதன்மூலம் பல கருத்தரங்குகளை நடத்தினார். பத்திரிகைகளில் கட்டுரைகள் எழுதினார், பல அமைப்புகளில் சொற்பொழிவுகள் நிகழ்த்தினார். இந்நிலையில் அல்ஜீரியாவில் வசித்துவந்த சித்துவிளையாடல் நிபுணரான மாக்ஸ் தியோன் என்பவரைப் பற்றித் தெரியவந்தது. அவரை நாடிச்சென்று சித்துக்களை முழுமையாகக் கற்றுத் தேர்ந்தார். தனது உடலைக் கிடத்திவிட்டு வெளியேறுவது, உதவி வேண்டுபவர்களுக்குச் சூட்சும உடலில் சென்று உதவுவது என்பது உட்படப் பல்வேறு சித்துக்களை நிகழ்த்தினார். ஃபிரான்ஸுக்குத் திரும்பி 'காஸ்மிக்' என்ற தத்துவ ஆராய்ச்சி அமைப்பை ஏற்படுத்தி அதன்மூலம் ஆன்மிகப் பணிகளைச் செய்தார். இந்நிலையில் ஹென்றி மோரிசெட்டுடன் மணமுறிவு ஏற்பட்டது.
சில ஆண்டுகளுக்குப் பிறகு பால் ரிச்சர்ட் என்பவருடன் திருமணம் நிகழ்ந்தது. அப்போது புதுச்சேரிப் பகுதி ஃபிரெஞ்சு அரசாங்கத்தின் கட்டுப்பாட்டில் இருந்தது. அலுவலக வேலையாக ஒருமுறை பாண்டிச்சேரிக்குச் சென்ற ரிச்சர்ட், அங்கே வந்து தங்கியிருந்த ஸ்ரீ அரவிந்தரைச் சந்தித்தார். அந்த சந்திப்பைப் பற்றி ஃபிரான்ஸ் திரும்பியதும் மிர்ராவிடம் எடுத்துரைத்தார். மிர்ராவும் அவரைச் சென்று தரிசிக்க ஆவல் கொண்டாள். அதற்கான காலம் வரட்டும் எனக் காத்திருந்தாள். அதற்கு முன்னால் அவ்வப்போது கடிதம் மூலம் ஸ்ரீஅரவிந்தரைத் தொடர்பு கொண்டு தனது ஐயங்களைத் தீர்த்துக் கொண்டாள்.
பாண்டிச்சேரியில் தேர்தலில் போட்டியிடும் வாய்ப்பு ரிச்சர்டுக்குக் கிடைத்தது. அவருடன் வேட்பாளரின் மனைவி என்ற முறையில் திருமதி. மிர்ராவும் புறப்பட்டார். புதுவையில் அவர்கள் 1914ம் ஆண்டு மார்ச் மாதம் 29ஆம் நாளன்று ஸ்ரீ அரவிந்தரைச் சந்தித்தனர். அந்தச் சந்திப்பு மிர்ராவின் வாழ்க்கையில் மிகப்பெரிய திருப்புமுனை ஆனது. சிறு வயதிலிருந்தே கனவில் வந்து ஆன்மிகத்தைப் போதித்த குருமகான் அரவிந்தர்தான் என்பதும், ஸ்ரீ கிருஷ்ணரின் அவதாரம் அவரே என்பதும் மிர்ராவுக்குப் புரிந்தது. ஸ்ரீ அரவிந்தரை முற்றிலுமாகச் சரணடைந்தார்.
சிலகாலம் அங்கே இருந்து ஆன்மிக விளக்கம் பெற்ற மிர்ரா, ஃபிரான்ஸ் திரும்பினார். சூழல் காரணமாகச் சிலகாலம் ஜப்பானில் வசிக்க நேர்ந்தது. அங்கிருந்தபடித் தனது ஆன்மிக அனுபவங்களுக்கு விளக்கம் கேட்டு ஸ்ரீ அரவிந்தருக்குக் கடிதங்கள் எழுதினார். அதேசமயம் நிரந்தரமாக இந்தியாவுக்குச் சென்று, தங்கி ஆன்மிகப் பணியாற்ற வேண்டும் என்ற நோக்கம் வலுப்பட்டது. சில ஆண்டுகளிலேயே அது நிறைவேறியது. 1920ம் ஆண்டு ஏப்ரல் 24ம் தேதி, நிரந்தரமாக இந்தியாவில் தங்கி, ஸ்ரீ அரவிந்தருடன் ஆன்மிகப்பணி ஆற்றும் நோக்கத்துடன் புதுவை மண்ணில் கால் பதித்தார் மிர்ரா. அவருடன் ரிச்சர்ட், மிர்ராவின் தோழி டோரதி ஆகியோரும் வந்தனர். ஸ்ரீ அரவிந்தரின் பணிக்கே முழுமையாகத் தம்மை ஒப்புக்கொடுக்க மனதிற்குள் சங்கல்பித்தபடி ஸ்ரீ அரவிந்தரை வணங்கினார். மிர்ரா என்ற மகாசக்தி ஸ்ரீ அரவிந்தரின் ஆன்ம ஜோதியில் அன்று முழுமையாகச் சரணடைந்தது. ஸ்ரீ அன்னையாகத் திருவுருமாற்றம் பெற்றது.
பால் ரிச்சர்ட் ஃபிரான்ஸ் திரும்பிச் சென்றார். மிர்ராவும் தத்தா என்று பெயர்மாற்றம் பெற்ற டோரதியும் ஸ்ரீ அரவிந்தரின் ஆன்மிகப் பணிகளுக்கு உறுதுணையாக இருந்தனர். யோகசாதனைப் பயிற்சிகளை மேற்கொண்டனர். மிர்ரா இல்ல நிர்வாகப் பொறுப்பை ஏற்றுக்கொண்டார். எங்கும் தூய்மையும், அமைதியும் நிலவின. நாளடைவில் மிர்ராவை மேடம் என்று அழைத்த அரவிந்தரின் நண்பர்கள், சாதகர்கள் 'சிஸ்டர்' என்றும் 'மா' என்றும் அழைக்கத் தலைப்பட்டனர். பின்னர் 'மதர்' என்றே அழைக்கலாகினர். ஸ்ரீ அரவிந்தரும் 'ஸ்ரீ அன்னை' என்றே மிர்ராவை அழைத்தார். அந்தப் பெயரே நிலைத்தது. |
|
|
அடியவர்களின் எண்ணிக்கை அதிகரிக்கவே வேறோர் இல்லத்திற்குக் குடிபெயர்ந்தனர். அதுவே நாளடைவில் 'ஸ்ரீ அரவிந்தர் ஆசிரமம்' ஆனது. அங்கு சென்றது முதல் ஸ்ரீ அரவிந்தர் தனிமையில் தீவிர யோகசாதனையில் ஈடுபட்டார். சாதகர்களைச் சந்திப்பது குறைந்தது, ஆசிரமப் பணிகளில் இருந்து முற்றிலுமாக ஒதுங்கிக் கொண்டார். மனிதப் பிரக்ஞைக்குள் தெய்வீகத்தைக் கொண்டுவருவதே அவரது தலையாய பணியாக இருந்தது. யாரேனும் ஆலோசனை கேட்டால், "நான் வேறு ஸ்ரீ அன்னை வேறு அல்ல. அவரிடமே கேட்டுக்கொள்ளுங்கள். அவர்தான் இனி எல்லாம்" என்று கூறி அனுப்பிவிடுவார். ஸ்ரீ அன்னை அயராத உழைப்பினால் ஆசிரமத்தை ஒரு முன்மாதிரி ஆசிரமமாக உருவாக்கினார்.
ஒருமுறை ஆசிரமத்தில் உள்ள சாதகர்களுக்கு ஒரு சந்தேகம்: அரவிந்தர் 'ஸ்ரீ அன்னை' என்ற நூலில் குறிப்பிட்டிருக்கும் தெய்வீக அன்னையும் தம்மோடு ஆசிரமத்தில் வசிக்கும் அன்னையும் ஒருவர்தானா? அரவிந்தரிடமே கேட்டனர். ஸ்ரீ அரவிந்தர் "சந்தேகமென்ன. அந்தப் பராசக்தியே இங்கே மானிட உருவில் சாதகர்களை வழி நடத்திச் செல்ல முன்வந்திருக்கிறாள். இதில் ஐயமே வேண்டாம்" என்று விடையளித்தார்.
ஸ்ரீ அரவிந்தர், 1950 டிசம்பர் 5ம் தேதி அதிகாலை மணி 1.26க்கு மகாசமாதி அடைந்தார். மகாயோகியான அவரது உடல் பலமணி நேரம் கடந்தும் கொஞ்சங்கூட வாடாமல், முகப்பொலிவு குறையாமல் இருந்தது. அவர் இறந்து நான்கு நாட்கள் கழித்து டிசம்பர் 9ம் நாள், கருங்காலி மரப்பெட்டியில் வைக்கப்பட்டு ஆசிரமத்திற்குள் இருந்த மரத்தடியில் நல்லடக்கம் செய்யப்பட்டது.
ஸ்ரீ அரவிந்தரின் மறைவுக்குப் பின் ஆசிரமம் பல்வேறு கட்டடங்களுடன் வளர்ச்சி அடைந்தது. ஆன்ம வளர்ச்சி தரும் பள்ளியை உருவாக்கிக் குழந்தைகளுக்குக் கல்வி போதித்தார் ஸ்ரீ அன்னை. நேர்மை, உண்மை, சத்தியம், தூய்மை இவற்றைக் கொண்டதாக வாழ்வு அமைய வேண்டும் என்பதை வலியுறுத்தினார். 'அச்சம் கொண்ட கண்களால் எதிர்காலத்தை பாராதே' என்றும் 'கொச்சையானவர்களின் சொற்கள் உன்னை பாதிக்காதிருக்கட்டும்' என்றும் அவர் போதித்தவை எண்ணற்றவை.
மக்கள் ஒன்றுபட்டுச் சகோதரர்களாக வாழவேண்டும் என்ற எண்ணத்தில் ஸ்ரீ அன்னை 'ஆரோவில்' நகருக்கு 1968 பிப்ரவரி 28 அன்று அடிக்கல் நாட்டினார். தாமரை மொக்குப்போல் கோளவடிவில், சலவைக் கல்லால் அமைந்த பெரிய தாழியுள், உலகின் பல்வேறு பாகங்களிலிருந்தும் எடுத்து வரப்பட்ட மண் இடப்பட்டு ஆரோவில் எனப்படும் 'ஸ்ரீ அரபிந்தோ வில்லே'ஜுக்கு அடிக்கல் நாட்டப்பட்டது. மாத்ரி மந்திர் என்பது ஆரோவில்லின் மையமாகும். இதனைச் சுற்றிக் குடியிருப்பும், தொழிற்கூடங்களும், பிற பகுதிகளும் அமைந்துள்ளன. ஸ்ரீ அரவிந்தரின் அவதார நோக்கம் நிறைவேற ஆரோவில் ஒரு தூண்டுதலாய் அமையும் என்ற எண்ணத்திலேயே ஸ்ரீ அன்னையால் நிர்மாணிக்கப்பட்டது.
ஸ்ரீ அன்னை, 1973 நவம்பர் 17ம் நாள் இரவு 7.25 மணிக்கு மகாசமாதி அடைந்தார். 20ம் தேதி, காலை 8.00 மணிக்கு, சர்வீஸ் மரத்தின் கீழே, ஸ்ரீ அரவிந்தரின் சமாதியருகில் ஸ்ரீ அன்னையின் உடலும் நல்லடக்கம் செய்யப்பட்டது.
ஸ்ரீ அன்னை மறைந்தபோதும் சூட்சும உடலில் இருந்து அனைவரையும் வழிநடத்திக் கொண்டிருக்கிறார். அவரது அறிவுரைகளும், மலர் வழிபாட்டு முறைகளும் என்றும் பின்பற்றத்தக்கவை. 'ஓம் ஸ்ரீ ஆனந்தமயி; ஓம் ஸ்ரீ சைதன்யமயி: ஓம் ஸ்ரீ சத்யமயி பரமே!' என்னும் திருமந்திரம் உலகெங்கிலும் ஒலித்து வருகிறது.
பா.சு. ரமணன்
ஸ்ரீ அன்னை கூறிய மலர் வழிபாட்டின் சிறப்பு ஸ்ரீ அன்னை, சுமார் எண்ணூறுக்கும் மேற்பட்ட மலர்களைப் பற்றி, அவற்றால் இறைவனை வழிபடுவதால் ஏற்படும் பலன்களைப்பற்றிச் சாதகர்களிடம் தெரிவித்திருக்கிறார். அவற்றில் சில இங்கே:
மலர் | பலன் | ரோஜா | குறை விலகும். தடை அகலும். வெற்றி தரும் | மல்லிகை | சோதனைகள் நீங்கும், இன்பம் பெருகும் | துளசி் | மனத்தூய்மை, பக்தி சிறக்கும் | சாமந்தி | வலிமை, புதுச்சக்தி. பகை விலகும் | செம்பருத்தி | தெய்வீக அன்பு | நித்திய கல்யாணி | முன்னேற்றம் | எருக்கம்பூ | வல்லமை, தைரியம், மனவுறுதி | செந்தாமரை | தெம்பு, வலிமை, புத்துணர்ச்சி, உயர்வு | வெண்தாமரை | தெய்வீக உணர்வு மேம்படும். மனமாசு அகலும் | காகிதப்பூ | பாதுகாப்பு | வாடாமல்லி | நோய் நீக்கம், ஆயுள் விருத்தி, ஆபத்து விலகும் | செவ்வரளி | தவறுகள் விலகி, ஒழுங்கு ஏற்படும் | மரிக்கொழுந்து | வெற்றி | பவழமல்லி | நியாயமான ஆசைகள் நிறைவேறும் | நந்தியாவட்டை | புத்துணர்ச்சி, மனத்தூய்மை |
|
|
|
More
கிரிக்கெட் சாதனை: ரவிச்சந்திரன் அஸ்வின்
|
|
|
|
|
|
|