செல்வி. ஜெ. ஜெயலலிதா கவிஞர் இன்குலாப் டாக்டர் வா.செ. குழந்தைசாமி
|
|
'சோ' ராமசாமி |
|
- |ஜனவரி 2017| |
|
|
|
|
நாடக, திரைப்பட நடிகர், இயக்குநர், பத்திரிகை ஆசிரியர், அரசியல் விமர்சகர் எனப் பல தளங்களில் பணியாற்றிய 'சோ' ராமசாமி (82) சென்னையில் காலமானார். இவர், அக்டோபர் 5, 1934 அன்று ஸ்ரீநிவாசன், ராஜம்மாள் தம்பதியினருக்கு மகனாகப் பிறந்தார். 1955ல் சென்னை சட்டக்கல்லுாரியில் படித்து முடித்த பின், சில ஆண்டுகாலம் வழக்குரைஞராகப் பணியாற்றினார். தனியார் நிறுவனம் ஒன்றிற்குச் சிலகாலம் சட்ட ஆலோசகராகவும் பணியாற்றினார். நாடக ஆர்வத்தால் சிறு சிறு நாடகங்களில் நடித்துக் கொண்டிருந்தார். அது திரைப்படங்களில் நடிக்கக் காரணமானது. பகீரதன் எழுதிய 'தேன்மொழியாள்' மேடைநாடகத்தில் இவர் 'சோ' என்னும் பாத்திரத்தில் நடித்தார். அனைவரையும் கவர்ந்த அந்தப் பாத்திரத்தின் பெயரே இவர் பெயராக நிலைத்துவிட்டது. 120க்கும் மேற்பட்ட படங்களில் இவர் நடித்துள்ளார்.
1970ம் ஆண்டு 'துக்ளக்' வார இதழைத் தொடங்கினார். சிறுகதைகளும், தொடர்கதைகளும் பத்திரிக்கைகளின் உயிர்நாடியாக இருந்த காலத்தில், அரசியல், சமூக விமர்சனத்தை முதுகெலும்பாகக் கொண்டிருந்தது 'துக்ளக்'. இதில் வெளியான இவரது கேள்வி-பதில்கள் மிகவும் புகழ்பெற்றவை. 1975ல் பிரதமர் இந்திரா அவசரநிலையை அறிவித்துப் பத்திரிக்கைத் தணிக்கை கொண்டு வந்தபோது அதை எதிர்க்கும் விதமாக 'துக்ளக்' அட்டை முழுவதும் கறுப்பு வண்ணத்தில் இருந்தது. மற்றோர் இதழில் மிகப்பழைய படமான 'சர்வாதிகாரி'யின் விமர்சனம் வெளிவந்தது. |
|
இவர் எழுதிய 'கூவம் நதிக்கரையிலே', 'எங்கே பிராமணன்?', 'வெறுக்கத்தக்கா பிராமணீயம்', 'யாருக்கும் வெட்கமில்லை' போன்ற தொடர்கள் மிகுந்த வரவேற்பைப் பெற்றன. 'மஹாபாரதம் பேசுகிறது' தொடர் மிகவும் புகழ்பெற்றதாகும். 'முகமது பின் துக்ளக்', 'சம்பவாமி யுகே யுகே', 'நேர்மை உறங்கும் நேரம்', 'இறைவன் இறந்துவிட்டானா', 'உண்மையே உன் விலை என்ன', 'மெட்ராஸ் பை நைட்' போன்ற அரசியல் நையாண்டி நாடகங்கள் பலராலும் பாரட்டப்பட்ட அதே சமயத்தில் மிகுந்த விமர்சனத்துக்கும் உள்ளானவை. திரைப்படங்களுக்குக் கதை, வசனம் எழுதி உள்ளார். தனது பத்திரிகைப் பணிகளுக்காக ஹால்டி காட் விருது, வீரகேசரி விருது, நசிகேதஸ் விருது போன்றவற்றைப் பெற்றவர்.
இவருக்கு மனைவியும் ஒரு மகனும் மகளும் உள்ளனர். சோ. ராமசாமிக்குத் தென்றலின் அஞ்சலி! |
|
|
More
செல்வி. ஜெ. ஜெயலலிதா கவிஞர் இன்குலாப் டாக்டர் வா.செ. குழந்தைசாமி
|
|
|
|
|
|
|