Thendral Audio Advertise About us
New User? | Forgot Password? | Email: Password: Login
Current Issue | Previous Issues | Author Index | Category Index | Organization Index | E-Magazine | Classifieds | Digital Downloads
By Category:
சின்னக்கதை | சமயம் | சினிமா சினிமா | இளந்தென்றல் | கதிரவனை கேளுங்கள் | ஹரிமொழி | நிகழ்வுகள் | மேலோர் வாழ்வில் | மேலும்
January 2017 Issue
தென்றல் பேசுகிறது | நேர்காணல் | அன்புள்ள சிநேகிதியே | சினிமா சினிமா | சின்னக்கதை | ஹரிமொழி | சாதனையாளர் | வாசகர் கடிதம் | சமயம்
கதிரவனை கேளுங்கள் | மாயாபஜார் | சிறுகதை | Events Calendar | பொது | நலம்வாழ | சிறப்புப்பார்வை | முன்னோடி | அனுபவம் | அஞ்சலி
எழுத்தாளர் | இளந்தென்றல் | நிகழ்வுகள்
Tamil Unicode / English Search
சிறுகதை
வளைகாப்பு
பால்கோவா
- இளங்கோ சிவந்தி|ஜனவரி 2017||(2 Comments)
Share:
"ஒண்ணு விழணும் ஒண்ணு விழணும்!" சரவணன் வேண்டிக்கொண்டான்!

"ஒண்ணு விழக்கூடாது! ஒண்ணு விழவே கூடாது" மணி வேண்டிக்கொண்டான்!

அவர்களுக்கு நடுவே பரமபத அட்டை படுத்துக் கிடந்தது. மணியின் காய் பாம்பின் வாய்க்கு முந்தைய கட்டத்தில் இருந்தது. 6 விழுந்தால் அவனுக்கு வெற்றி அதனால்தான் அந்த வேண்டுதல், நம்பிக்கையோடு அவன் தாயக் காய்களை உருட்ட, அவனுக்குத் தாயம் விழுந்தது. சரவணன் குதூகலத்தில் குதித்து மணியின் காயைப் பாம்பின் வாயில் வைத்துத் திணித்து "சொய்ங்ங்ங்ங்ங்.." என்று அந்தப் பாம்பின் உடல் வழியே நகர்த்தி அதன் வால்நுனியில் கொண்டுவந்து நிறுத்தினான்.

மணி, "அடச்சே!" என்று வெறுப்புடன் தலையில் அடித்துக்கொண்டான்.

அப்போது மணி, அவன் தம்பி சரவணனின் பெற்றோர் அங்கு பேசிக்கொண்டே வந்தனர். தாய் சிவகாமி, "நீங்க எதுக்குப் போறீங்க? அதுக்குத்தான் ராஜா வாத்தியார் இருக்காருல்ல? அவர போகச் சொல்லவேண்டியது தானே?" என்று கணவனுக்குயோசனை சொன்னாள்.

அப்பா சுந்தரம், "எத்தன வாட்டி சொல்றது அவரு ஊருக்குப் போயிருக்கார்னு? நான் போய்ட்டு ராத்திரி வந்திருவேன்." கொஞ்சம் கோபத்தோடு கூறினார்.

"அப்படியே எங்க அண்ணன் வீட்டுக்கும் போய் இந்தப் பணத்த குடுத்துரலாமில்ல?" சிவகாமி மீண்டும் யோசனை சொன்னாள்.

சுந்தரம், "எனக்கு நேரம் ஆச்சு. இதோ, இந்தப் பசங்க சும்மாதான இருக்கானுக, அவனுககிட்ட குடுத்து அனுப்பு" என்று சொல்லியபடியே புறப்பட்டுவிட்டார்.

பரமபத அட்டையை ஒரு நொடி பார்த்துவிட்டு, பரமபதம் அடைய வாய்ப்பே இல்லை என்று தெரிந்ததும் மணி, "நான் போறேம்மா" என்று எழுந்து அருகில் கிடந்த அவனுடைய வண்டியை (சைக்கிள் டயர்) எடுத்துக் கிளம்பத் தயாராகி நின்றான்.

அம்மா சிவகாமி, "டேய். இந்தா, மாமாவுக்கு நாப்பது ரூபா தரணும். இதப் போய் மாமாகிட்ட குடுத்துட்டு வா" என்று ஐம்பது ரூபாய் நோட்டை அவன் கையில் திணிக்க, அவன் ஐம்பது ரூபாய் நோட்டை ஒரு நொடி பார்த்துவிட்டு, சைக்கிள் டயரைச் சிறு குச்சி ஒன்றால் லாகவமாகத் தள்ளிச் சென்றான்.

பரமபத வாய்ப்பை இழந்த சரவணன், "டேய்.இருடா நானும் வரேன்" என்று இன்னொரு சைக்கிள் டயரை எடுத்துக்கொண்டு அவன் பின்னே விரட்டிச் சென்றான். பின்னோடு, அப்பா சுந்தரம் புல்லட்டை ஸ்டார்ட் செய்து கிளம்பினார்.

மணியும் சரவணனும் நேர்த்தியாக சைக்கிள் டயர்களை உருட்டிக்கொண்டு விரைவாகக் கடந்துசென்றார்கள். வழியில் ஒரு பெட்டிக் கடையைப் பார்த்தவுடன் சடாரென்று டயர்களை நிறுத்தி, இருவரும் கடையை நோட்டம் விட்டனர். கடைக்காரர் கனகவேல் வெளியிலிருந்த சோடா பாட்டில்களை எடுத்து உள்ளே அடுக்கிக் கொண்டிருந்தார். மணியும் சரவணனும் ஒருவருக்கொருவர் பார்த்துக்கொண்டனர். இருவர் முகத்திலும் ஒரு மெல்லிய புன்னகை பரவி மறைந்தது. கண்களால் ஓர் உடன்படிக்கை போட்டுக்கொண்டார்கள். உடனே டயர்களைத் தட்டி விரட்டிக்கொண்டு மாமா வீட்டுக்கான பயணத்தைத் தொடர்ந்தார்கள்.

வீட்டு வாசலில் வந்து நின்ற பொடியன்களைப் பார்த்து மாமா தன் கறாரான குரலில், "என்னடா, கொஞ்ச நாளா ரெண்டு பேரயும் ஆளக் காணும்?" என்று கேட்டார்.

வாசலில் டயரை நிறுத்திவிட்டு மணியும் சரவணனும் உள்ளே போயினர்.

மணி, "இல்ல மாமா, பரீட்சை இப்போதான் முடிஞ்சுது" என்றான்.

மாமா வாசலை எட்டிப் பார்த்து, "அம்மா வரல?" என்று கேட்டார்.

மணி, "இல்ல மாமா. அம்மா உங்களுக்கு நாப்பது ரூபா தரணுமாம். அதக் குடுத்திட்டு வரச்சொன்னாங்க" என்று சொல்லி ஐம்பதுரூபாய் நோட்டை எடுத்து மாமாவிடம் நீட்ட, மாமா, "இதுக்கு என்ன அவசரமாம்?" என்று அதை அவசரமாய் வாங்கித் தன் பாக்கெட்டில் பத்திரமாக வைத்து, ஒரு பத்து ரூபாயை எடுத்து, மூன்றுமுறை சுண்டிப் பார்த்து ஒரு நோட்டுதான் என்று உறுதிப்படுத்திக்கொண்டு அவர்களிடம் நீட்டினார்.

அதை வாங்கிக்கொண்டு மணி தன் பையில் வைத்துக்கொண்டான். "சரி மாமா, நாங்க வரோம்" என்று சொல்லிவிட்டு இருவரும் வாசலை நோக்கி ஓடினார்கள். அவர்கள் சென்ற வேகத்தில் மாமா சொன்ன, "டேய் இருங்கடா சாப்பிட்டுப் போங்க" என்ற வார்த்தைகள் அவர்களைச் சென்றடையவில்லை.

கடைக்காரன் கனகவேல், கதவுகளை ஒன்றொன்றாக அடுக்கிச் சாத்திக்கொண்டு இருந்தான். அவன் தன் பின்னே யாரோ வருவதை உணர்ந்து மெல்லத் திரும்பிப் பார்க்க, அங்கே மணியும் சரவணனும் டயர்களைக் கையில் பிடித்தபடி நின்றுகொண்டு இருந்தனர்.

கனகவேல், "கடையை மூடிட்டேன். நாளைக்கு வாங்க" என்று சொல்லி, கடைசிக்கதவையும் எடுத்துவைத்துப் பூட்டைத் தேடத் திரும்பியபோது பையன்கள் இருவரும் இன்னும் அங்கேயே நின்று கொண்டிருப்பதைப் பார்த்தான்.

மணி பையிலிருந்து பத்துரூபாய் நோட்டை எடுத்து நீட்டினான். பத்துரூபாய் நோட்டைப் பார்த்தான் கனகவேல், "பக்கத்து ஊரு கோயிலுக்குப் போகணும்னுதாம்டா அவசரப்பட்டேன். வேற ஒண்ணுமில்ல. என்ன வேணும் கண்ணுங்களா?" என்று கனிவு கரைபுரளக் கேட்டான்.

"ஒரு பாக்கெட் பால்கோவா குடுங்கண்ணே."

"உங்களுக்காகத்தான் திறக்கேன்" என்று கதவுகளை மறுபடியும் திறந்தான் கனகவேல். உள்ளேயிருந்து ஒரு பாக்கெட் எடுத்துவந்து மணியிடமிருந்த பத்துரூபாயை வாங்கிக்கொண்டு, அவனிடம் கொடுத்தான். பால்கோவாவைப் பெற்றுக்கொண்டு மணியும் சரவணனும் பறந்தனர்.

சைக்கிள் டயரை கழுத்தில் மாட்டிக்கொண்டு அந்தப் பொட்டலத்தோடு வந்த மணியும் சரவணனும் ஒரு மரத்தடியைத் தேடிச்சென்று அமர்ந்தார்கள். இருவரும் தங்களுக்குக் கிடைத்த தேவாமிர்தத்தைச் சண்டை சச்சரவு இல்லாமல் சமமாகப் பிரித்துச் சாப்பிட்டது இதுதான் முதல் முறை. பாசத்தோடு பால்கோவாவைச் சாப்பிட்டார்கள். அகத்தின் அழகு முகத்தில் தெரிவதுபோல் இனிப்பின் சுவை அவர்கள் இளிப்பில் தெரிந்தது. மலர்ச்சியுடன் ஒருவரை ஒருவர் பார்த்து, ரசித்துச் சாப்பிட்டார்கள். நிறையப் படித்தால் கேள்விகள் எழும் என்பார்கள். மணிக்கு நிறையத் தின்றால்தான் கேள்விகள் எழும். இப்போதும் எழுந்தது.

"வீட்டுக்குப் போனதும் பத்துரூபாயை எங்கனு அம்மா கேட்டா என்னடா பண்றது?"

தின்பதற்கு எது கிடைத்தாலும் எப்போதுமே யோசிக்காத சரவணன், "ஆமாண்டா! அதப்பத்தி நான் யோசிக்கவே இல்ல." என்றபடி கையில் ஒட்டியிருந்த பால்கோவா துகள்களைச் சுத்தமாக நக்கியபடி சுகாதாரக் கேட்டுக்கு வழி வகுத்துக்கொண்டிருந்தான்.

"கடையில வாங்கிச் சாப்பிட்டுட்டோம்னு சொன்னா என்ன?" மீண்டும் மணியிடம் இருந்து கேள்வி எழுந்தது.

"போடா! அப்பாவுக்குத் தெரிஞ்சா சத்தம் போடுவாருடா."

"பேசாம வர்ற வழியில ரூபா எங்கயோ கீழே விழுந்துட்டுன்னு சொல்லிரலாமா?" சரவணன் யோசிக்காமலே ஒரு யோசனை சொன்னான்.

மணிக்கு சரவணனின் யோசனை சரியாகப் படவில்லை. "போடா அப்படிச் சொன்னா நம்மளத் தெருவெல்லாம் கூட்டிட்டுப்போய் கெடக்கறவரைக்கும் தேடு, தேடுனு தேட வச்சிருவாங்க."

சரவணன் இப்போதுதான் யோசிக்க ஆரம்பித்தான். "ம்ம்ம். அப்போ என்னதாண்டா சொல்றது?"

மணி சொன்னான், "நம்மகிட்ட இருந்து பத்துரூபாய ஒருத்தன் புடிங்கிட்டு ஓடிட்டான்னு சொல்லிரலாமா?"
சரவணன், "அடப்பாவி பொய் எல்லாம் நான் சொல்லமாட்டேன்பா" என்றான்.

"ம்... சரி விடுடா. மாமா பத்துரூபா குடுத்ததா அம்மாகிட்ட நாம சொல்ல வேண்டாம்," முடிவாகக் கூறினான் மணி.

"மாமா சொல்லிட்டார்னா?" மீண்டும் சரவணன் சந்தேகத்தைக் கிளப்பினான்.

"போடா லூசு, மாமா ஒரு பெரிய மனுஷர்டா! நான் மிச்சம் பத்துரூபாய உன் பசங்ககிட்ட குடுத்தனுப்பியிருக்கேன்னு அல்பத்தனமா அம்மாகிட்ட சொல்லவா போறாரு? அதனால அதப்பத்தி அம்மா கேக்கமாட்டாங்க."

இந்த யோசனை இருவருக்கும் வசதியாக இருந்தது. இருவரும் வீட்டுக்குப் புறப்பட்டார்கள்.

இருவரும் ஒரே நேரத்தில் தங்களின் வலதுகாலை வீட்டுவாசலின் முதல் படியில் வைத்தார்கள். அம்மா தனது இயல்பான சாந்தமான முகத்துடன், "வாங்கடா" என்றாள். அம்மாவின் முகத்திலும் குரலிலும் இருந்த கனிவைக் கண்டு சரவணனுக்கும் மணிக்கும் தயக்கம் தளர்ந்தது. இரண்டாவது காலைத்தூக்கி இரண்டாம் படியில் வைத்தார்கள்.

"மாமா ஃபோன் பண்ணினார்" அம்மா அறிவித்தாள்.

எடுத்துவைத்த இரண்டாவது காலை, வைத்த வேகத்திலேயே பின்னுக்கு இழுத்துக்கொண்டார்கள்.

"என்னடா? அங்கேயே நின்னுட்டீங்க. கையக்காலக் கழுவிட்டுச் சாப்பிடுங்க."

பத்துரூபாயைப் பற்றிப் பேசாத அம்மாவின் சாப்பாட்டுக்கான அழைப்பு அவர்களுக்குள் இருந்த அச்சத்தை மீண்டும் அகற்றியது. இருவரும் கை கால்களைக் கழுவிவிட்டு, நிலைக்கண்ணாடியின் முன் நின்று ஒரே துண்டின் இருமுனைகளால் முகம் துடைத்துக்கொண்டிருந்தார்கள்.

"மாமா கொடுத்த பத்து ரூபாய எங்கடா வச்சிருக்கீங்க?" அடுத்த அறையிலிருந்து அம்மா கேட்டாள்.

கண்ணாடியின் முன் நின்றவர்கள் கண்ணாடியிலேயே தங்களைப் பார்த்துக்கொண்டார்கள். தம்மைத் தாமே பார்த்துப் பயந்தார்கள். இருவரிடம் இருந்தும் பதிலும் வரவில்லை; அவர்களும் வரவில்லை என்பதால் அம்மா அவர்கள் நிற்கும் அறைக்கு வந்தாள்.

"மாமா மிச்சம் பத்துரூபா கொடுத்தாராமே. எங்கடா பத்து ரூபா?" அம்மா அறிந்துகொள்வதற்காகத்தான் கேட்டாள். ஆனால் அண்ணன் தம்பி இருவரும் அரண்டு போனார்கள். இருண்டுபோன இருவரின் முகங்களையும் பார்த்த அம்மா வியப்போடு கேட்டாள், "என்னடா ஆச்சி.?"

"அது வந்து" இழுத்தான் மணி. இமைக்காது நின்றாள் அம்மா. முடித்தான் சரவணன், "அம்மா. அந்த 10 ரூபா நோட்ட இவங்கிட்ட இருந்து ஒருத்தன் திடீர்னு புடிங்கிட்டுப் போய்ட்டான்மா."

மணி சரவணின் காதருகில் முணுமுணுத்தான், "என்னடா பொசுக்குன்னு சொல்லிட்ட?"

அம்மா அதிர்ச்சியில், "அங்க என்னடா பேச்சு? சொல்லுங்கடா? யாரு புடிங்கிட்டுப் போனா? கத்தவேண்டியதுதானே? யாரும் இல்லயா பக்கத்தில?" கேள்விகளாகக் கேட்டாள்.

"யாரும் இல்லம்மா. திடீர்னு வந்து பக்கத்தில நின்னான். கைல வச்சிருந்த நோட்ட டக்குன்னு புடிங்கிட்டுப் போய்ட்டான்" தம்பி சொல்லிய பொய்யைப் பலப்படுத்தினான் அண்ணன்.

"அவன் எதில வந்தான்?" அம்மா கேட்டாள்.

"சைக்கிள் டயர்ல" மணி குழப்பத்தில் உளறினான்.

"என்னது? டயர்லியா?" இப்போது அம்மாவும் குழம்பினாள்.

சரவணன், "இ... இல்ல, சைக்கிள்ல" என்று மணியைப் பார்த்து முறைக்க, மணி "ஆமாமா, சைக்கிள்ல" என்றான்.

அம்மா வேகமாக உள்ளே சென்றாள்.

மணி, "அப்பாடா தப்பிச்சோம். நான்கூட ஏதோ நம்மள வெளியில கூட்டிட்டுப்போய் தேடு, தேடுனு தேட வச்சிடுவாங்களோன்னு பயந்திட்டேன்" என்றான் சரவணனைப் பார்த்து.

ஆனால் இருவர் முகங்களிலும் தோன்றிய நிம்மதி தொடரமுடியாமல் போனது.

அம்மா மாற்றிய புடவைத்தலைப்பை இடுப்பில் செருகிக்கொண்டு, சிறுவர்களின் கையைப் பிடித்துக்கொண்டு, "வாங்கடா. இப்போவே போய் அவனக் கண்டுபிடிப்போம். அவன் கையக்கால ஒடிக்கறேன்" என்று கத்தியவாறே, அவர்களை வேகமாய் இழுத்துக்கொண்டு வெளியே சென்றாள்.

வீதியில் சிவகாமி, மணியையும் சரவணனையும் விரைவாக இழுத்துக்கொண்டே வந்து, "எந்த ஏரியாடா? எப்படி இருப்பான் அவன்?" என்று கேட்டாள்.

சரவணன் "சுண்ணாம்புத் தெரு மா" என்று சும்மா சொல்லி வைத்தான்.

சிவகாமி, "ஒரு பெட்டிக்கடை இருக்குமே! அந்தத் தெருவா?" என்றாள்.

சரவணன் மணியைப் பார்த்து விழிக்க, மணி, "அங்க இல்லமா. அதுக்குப் பக்கத்துச் சந்துமா" என்று திருத்தி சரவணனைப் பார்த்து முறைத்தான்.

"எங்கம்மா இவளோ அவசரமா பசங்களக் கூட்டிட்டுப் போறிங்க?" பின்னாடி இருந்து ரத்தினத்தின் குரல் கேட்டது.

ரத்தினம் அந்த ஊர்ப் பெரியமனிதர்களில் ஒருவர். சிவகாமியின் கணவர் சுந்தரத்திற்கு நெருங்கிய தோழர். தெரிவு செய்யப்படாத ஊர்த்தலைவர்.

சிவகாமி, "இதோ இந்தப் பசங்ககிட்ட இருந்து ஒருத்தன் பத்துரூபா நோட்டப் புடிங்கிட்டுப் போயிருக்கான், பத்துரூபா போனாப் போகுது. ஆனா சின்னப் பசங்ககிட்ட இருந்து பணத்தப் புடிங்கிட்டுப் போனவன சும்மாவா விடுறது?" என்று முறையிட்டாள்.

"அடப்பாவி, நம்ம ஏரியாவுல எவன் அப்படி பண்ணது? டேய் எப்படிடா இருப்பான் அவன்?" விசாரித்தார் ரத்தினம்.

மணி, "மொட்டயா." என்றும், சரவணன், "தாடி வச்சி இருப்பான்" என்றும் ஒன்றாகக் கூறி ஒருவரை ஒருவர் பயத்தில் பார்த்துக்கொண்டனர்.

சிவகாமி, "மொட்டையா, தாடி வச்சி நம்ம ஏரியாவுல எவன்டா இருக்கான்?" என்று கேட்டு யோசிக்க ஆரம்பித்தாள்.

ரத்தினம், "தலய வழிச்சவன் தாடிய வழிக்காம விட்டிருக்கான்! அப்போ நம்ம ஏரியா ஆளா இருக்கமுடியாது." என்று காரண காரியங்களை அலசி ஆராய்வதுபோல் அவரும் யோசிக்க ஆரம்பித்தார்.

சிவகாமி, "நம்ம ஊருக்குள்ள எவனுக்கு அந்தத் தைரியம் வந்ததுன்னு தெரியல." என்று கூறி மேற்கொண்டு நடக்க, ரத்தினம், "நீங்க எங்க போறிங்க இப்போ..? இன்னும் அவன் அங்கேயேவா இருக்கப் போறான்? அப்போவே அங்க இருந்து பறந்திருப்பான்" என்று சிவகாமியைத் தடுத்து நிறுத்தினார். "இதோ நம்ம மாரியப்பன் வரான். அவன் கிட்ட கேப்போம்" என்று அந்தப்பக்கம் வந்த மாரியப்பனை நோக்கிக் கையைக் காட்ட, மாரியப்பன், "என்னண்ணே ஏதாவது பிரச்சனையா?" என்றபடி அருகில் வந்து நின்றான்.

சிவகாமியும் ரத்தினமும் நடந்தவைகளைக் கூற, மாரியப்பன், "எனக்கு என்னமோ அந்த வடக்குத்தெருப் பசங்கமேல தான் சந்தேகமா இருக்கு. அவனுங்கதான் இந்த வேல எல்லாம் பண்ணுவானுங்க. நம்ம சைக்கிள் கடைக்காரர் சண்முகம் அந்தத் தெருதான். வாங்க போய்க் கேப்போம்" என்று சொல்ல, எல்லோரும் நடந்தார்கள்.

சண்முகத்தைச் சந்தித்தார்கள்.

"மொட்ட அடிச்சி தாடிவச்சிட்டு எங்க தெருவுல யாரையும் நான் பார்க்கலயேண்ணே!" தாசண்ணன் பையன் கொஞ்சம் திருடுவான். ஆனா இப்போ அவன் துபாய்ல இருக்கான்" என்று சண்முகமும் யோசிக்க ஆரம்பித்தான். "வேணும்னா அங்க மொட்டயா இருக்கிற ரெண்டு மூணு பேர கூட்டிட்டு வரேன். இழுத்து வச்சி விசாரிங்க" என்று சொன்னான் சண்முகம்.

மாரியப்பன், "ஆமாண்ணே. இத இப்படியே விட்டா அப்புறம் அவன் அடுத்து எவன்கிட்ட இருந்து என்ன புடுங்குவான்னு நமக்குத் தெரியாது." என்றான்.

"சரி. நான் போய் செல்லத்துரைகிட்ட பேசி ஊர்க்கூட்டம் ஏற்பாடு பண்ணச் சொல்றேன். நீங்க போய் நம்ம ஏரியாவுல இருக்கற எல்லார்கிட்டயும் விஷயத்தச் சொல்லிக் கூட்டிட்டு வந்திடுங்க. அப்புறம் எவனுகள்லாம் மொட்ட அடிச்சு இருக்கானுங்களோ அவனுகளக் கூட்டிட்டு வந்திடுங்க" வெகுநாளாய் எந்த வழக்கும் இல்லாமல் இருந்த ரத்தினம் சுறுசுறுப்பானார்.

"அப்போ தாடி?" தானும் ஒரு அறிவாளிதான் என்று காட்டிக்கொள்ள இடையில் குறுக்கிட்டான் மாரியப்பன்.

"அது ஒட்டுத் தாடியாக்கூட இருக்கலாம்" மாரியப்பனை அடக்கினார் ரத்தினம்.

மற்ற எல்லோரும் பரபரவென்று இருக்க, சிவகாமி அருகில் மணியும் சரவணனும் பயத்தில் பரக்கப் பரக்கப் பார்த்தபடி நின்றுகொண்டிருந்தர்கள். தங்களைச் சம்பந்தப்படுத்தித் தங்கள் கண்கள் முன்னால் நடக்கும் அத்தனை காட்சிகளும் அவர்களுக்குள் நடுக்கத்தை உண்டாக்கின. சூழ்நிலை உண்டாக்கிய உறுத்தலிலிருந்து விடுபட நினைத்த மணி, அம்மாவைப் பார்த்து, "அம்மா பசிக்குது மா" என்றான்.

சரவணன் மெதுவாக மணியிடம் பற்களைக் கடித்தபடி, "இங்க இவளோ நடக்குது உனக்கு எப்படிடா பசிக்குது?" எனக் கேட்டான்.

மணி, "இருக்கிற பயத்தில இந்த இடத்தைவிட்டுப் போயிடணும்னு பசிக்குதுன்னு சொல்லிட்டேன். உனக்குப் பயம் இல்லன்னா இங்கேயே நில்லு" என்றான்.

சரவணனும் உடனே அம்மாவைப் பார்த்து, "எனக்கும் பசிக்குது மா" என்றான்.

சிவகாமி, "பாவம் பசங்க" என்று சொல்லி ரத்தினத்தைப் பார்த்து, "நீங்க விசாரிச்சிட்டு இருங்க. அதுக்குள்ள பசங்களுக்குச் சாப்பாடு குடுத்திட்டு வந்திடுறேன்" என்று சொல்லி இரு மகன்களையும் இழுத்துக்கொண்டு அங்கிருந்து அகன்றாள்.

மணியும் சரவணனும் திண்ணையில் உட்கார்ந்திருக்க, அம்மா சிவகாமி அவர்களுக்கு உணவு ஊட்டிக்கொண்டு இருந்தாள்.

"பாவம். பயந்து போய் இருக்கீங்க. அப்பா வந்ததும் உங்ககிட்ட இருந்து புடிங்கிட்டுப் போனவன உண்டு இல்லன்னு பண்ணிடலாம்" தன் புதல்வர்களுக்கு உற்சாகமளிக்க ஆதரவாகப் பேசினாள் சிவகாமி. பையன்களின் பயத்திற்குக் காரணமே அப்பாதான் என்பது அவன்களுக்குத்தான் தெரியும். சிறிதுநேரம் அமைதி நிலவியது. அந்த அமைதி மணிக்குப் பயமாய் இருந்தது.

பயத்தின் உச்சிக்குப் போன மணி அம்மா பக்கம் திரும்பி, "அம்மா, உருளைக்கிழங்கு வைம்மா" என்று ‘ஆ’ காட்ட அம்மா அவனுக்கு, "இந்தாடா என் கண்ணு" என்று ஒரு கை ஊட்டினாள்.

எந்த நிலையிலும் தான் தனிப்பட்டு நின்றுவிடக் கூடாது என்ற நிலையிலிருந்த சரவணனும், "எனக்கும்மா" என்றதும், அவனுக்கும் அம்மா உருளைக்கிழங்கை ஊட்டினாள்.

உருளைக்கிழங்கோடு கண்ணீரும் கலந்தே அவர்கள் வாய்களுக்குள் சென்றது.

ஊர்க்கூட்டம் சிறிதளவு சேர்ந்திருந்தது. அங்கே நாலு பேரைக் கட்டிவைத்து அடித்து விசாரித்துக்கொண்டு இருந்தனர். ஒரு நீளமான குச்சியை வைத்துக் கொண்டு அவர்களை மாரியப்பன் மாறி, மாறி மிரட்டிக்கொண்டு இருந்தான். அப்போது சிவகாமி, மணி, சரவணன் மூவரும் கூட்டத்திற்கு வந்து சேர்ந்தார்கள். "யாரு காசப் புடுங்கினீங்கனு சொல்லுங்க. இல்லன்னா நடக்கிறதே வேற" சந்தேகப்பட்டு அழைத்துவரப் பட்டவர்களின் கால்களில் படுமாறு ஓங்கி அடித்தான் மாரியப்பன். கடைசியில் நின்ற ஒருவன் காலில் மட்டும் அடி மிகவும் வேகமாய் விழுந்தது. கடைசியில் நின்றதால்தான் அவன் காலில் மட்டும் அடி மிகவும் வேகமாய் விழுந்தது. அதனால்தான், அடிபட்ட மற்ற மூவரும் அசையாது அமைதியாய் நிற்க அவன்மட்டும், "அய்யோ" என்று கீழே குனிந்து அடிபட்ட தன் காலைப் பிடித்துக்கொண்டு அலறினான். அப்பொழுதுதான் மணியும் சரவணனும் அலறியவனைப் பார்த்தார்கள்.

"டேய், அது பெட்டிக்கடைக்காரர்டா' மணி பதறினான்.

அந்த நேரத்தில் கயிறு தளர, கனகவேல், முட்டியைப் பிடித்து உட்கார்ந்து "யோவ். எதுக்குயா அடிக்கிறீங்க? என் குடும்பத்துல நல்லது நடக்கணும்னு, கோவில்ல போய் மொட்ட போட்டுட்டு இப்போதான் இந்தப் பக்கமா நான் வீட்டுக்குப் போயிட்டிருந்தேன். அதுக்குள்ள காரணமே சொல்லாம இழுத்து வந்து அடிக்கறிங்களே?" என்று அழுதான்.

"எதுக்குயா கத்துற? விசாரிக்கத்தானே செய்றோம்" பொறுப்பு உணர்ந்து சபையை நடத்துவதாக நினைத்த ரத்தினத்தின் பார்வை அங்குக் கூடியிருந்தவர்கள் மீது பெருமிதமாக வலம் வந்தது.

"நல்லா இருக்கு நீங்க விசாரிக்கற லட்சணம்" கனகவேல் கத்தினான்.

கனகவேலின் கத்தல் ரத்தினத்தின் முகப்பொலிவை மாற்றியது.

"மொதல்ல எந்தச் சின்னப் பையங்கக் கிட்ட இருந்து காச புடிங்கிட்டுப் போனாங்கன்னு சொல்லுங்க?" காலைத் தடவிக்கொண்டே கடுப்போடு கத்தினான் கனகவேல்.

ரத்தினம், "இதோ இவங்ககிட்ட இருந்துதான்." என்று மணி-சரவணனை நோக்கிக் கையைக் காட்ட, கனகவேல், "அடப்பாவிங்களா. இவங்ககிட்ட இருந்து எவ்வளவு புடிங்கிட்டு போனாங்களாம்?" என்று அந்த வலியிலும் கேலியோடு கேட்டான்.

மணியும் சரவணனும் பயந்துகொண்டு நிற்க, அவர்கள் கண்களில் நீர் சுரந்து பொங்குவதற்குத் தயாராக இருந்தது. அவர்களால் வாய் திறக்க முடியவில்லை.

சிவகாமி, "10 ரூபா..!" என்றாள்.

"உங்களுக்கெல்லாம் அறிவில்லை? சின்னப் பசங்க பேச்சைக் கேட்டு இவ்வளவு பேரு வேல வெட்டி இல்லாம போற வாரவன எல்லாம் கூப்பிட்டு கட்டிப் போட்டு அடிச்சி விசாரிச்சிட்டிருக்கீங்க? காலைலதான் அவனுங்க என் கடைக்கு வந்து 10 ரூபாய்க்கு பால்கோவா வாங்கிச் சாப்பிட்டானுக. தெரியுமா உங்களுக்கு? அது அந்த 10 ரூவாயான்னு கேளுங்க மொதல்ல" கனகவேல் ஆத்திரத்தில் பொரிந்தான்.

மணி, சரவணன் இருவர் கண்களும் அருவியாய்க் கொட்டின. "ஓ!" என்று ஒலமிட ஆரம்பித்தார்கள். பெற்றவள் உள்பட அங்கிருந்த மற்ற எல்லோரும் சிறு பையன்கள் விசயத்தில் சிறு பிள்ளைத்தனமாய் நடந்ததை நினைத்துச் சிலையாகி நின்றார்கள்.

வீட்டில் அம்மா சிவகாமி பிழைசெய்த உணர்வில் வெகுநேரம் யாரிடமும் பேசாமல் அமர்ந்திருந்தாள். மணியும் சரவணனும் திரும்பத் திரும்ப அம்மாவைப் பார்ப்பதும் வெளியே தெருவைப் பார்ப்பதுமாய் திகிலில் புதைந்திருந்தார்கள். அழுது அழுது அம்மா அமைதியானதால் இன்னும் அழமுடிந்த அவர்களுக்கு அழவே வழியில்லாமல் போயிற்று. மிகப்பெரும் தவறு ஒன்றைச் செய்துவிட்டோம் என்பதை உணரமுடியாத வயதென்ற போதிலும் ஏதோ ஒன்று அவர்களை உறுத்திக்கொண்டே இருந்தது. இப்போதே இப்படி! அப்பா வந்துவிட்டால்?

அப்பா வந்துவிட்டார்! வாசலில் வண்டியை நிறுத்திவிட்டு அப்பா உள்ளே வந்தார். உட்கார்ந்திருந்த அம்மா எழுவதற்கு முன்பே மணியும் சரவணனும் எழுந்தார்கள். இருவருக்கும் அழத்தொடங்க வேண்டும்போல் இருந்தது. அடக்கிக் கொண்டார்கள்.

"இவ்வளவு நேரமா?" இறுக்கமான சூழல் இல்லாமல் இருக்கக் கேட்டுவைத்தாள் அம்மா.

"வழியில் கடைக்காரர் கனகவேலைப் பார்த்தேன்."

இப்போது அடக்கமுடியாமல் அழத் தொடங்கினார்கள் மணியும் சரவணனும்,

"ஓ" என்று அழுகை மழை.

அம்மா சிவகாமி, மணியையும் சரவணனையும் தன் பக்கம் இழுத்துக்கொண்டாள்.

அப்பா ஒன்றும் பேசாமல் தன் கையிலிருந்த பைக்குள்ளிருந்து ஒரு பொட்டலத்தை வெளியே எடுத்து இருவரிடமும் நீட்டினார். அம்மா உள்பட மணியும் சரவணனும் அப்பா கையிலிருந்த பொட்டலத்தைப் பார்த்தார்கள்.

அப்பா கையில் பால்கோவா!

மணியும் சரவணனும் ஓடிவந்து, பால்கோவாவை அல்ல - அப்பாவைக் கட்டிப்பிடித்துக் கொண்டார்கள்.

இளங்கோ சிவந்தி,
மினியாபோலிஸ், மின்னசோட்டா
More

வளைகாப்பு
Share: 




© Copyright 2020 Tamilonline